ஞாயிறு, 8 மே, 2016

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்


"வறுமை விலக்கி எல்லா வளங்களையும் பெருக்கும் கனகதாரா ஸ்தோத்திரம்."

ஸ்ரீ ஆதிசங்கரர் பிட்சைக்குப் போகும் போது ஒரு ஏழைப் பெண்மணியின் வீட்டின் முன் நின்று பிட்சை கேட்டார். வறுமை தாண்டவமாடிக்கொண்டிருந்தது அந்த வீட்டில். அப்படியிருந்தும், அடுத்த நாள் துவாதசி பாரணைக்காக வைத்திருந்த ஒரு வாடிய நெல்லிக்காய் மட்டுமே உணவுப் பொருளாக இருந்தது! பிட்சை கேட்கும் பிள்ளைக்கு இதைத் தவிர கொடுக்க ஏதுமில்லையே என்று பெரிதும் மனம் குமைந்தாள் வீட்டுக்காரப் பெண்மணி. ஆனாலும், மனம் குறுகி அந்த தெய்வக் குழந்தைக்கு அந்த நெல்லிக்காயை பிட்சையிட்டாள். அடுத்த வேளை உணவுக்கு எந்தப் பொருளும் இல்லாத வறுமையிலும், தன்னிடமிருந்த ஒரே ஒரு நெல்லிக்காயைத் தந்த அந்தப் பெண்மணியின் தாய்மைக் கனிவைக் கண்டு பெரிதும் நெகிழ்ந்தார் ஆதிசங்கரர்.


மகாலட்சுமியிடம் அப்பெண்ணுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருளுமாறு உள்ளம் உருகப் பிரார்த்தித்தார். அதைக் கேட்ட திருமகள், ‘‘இப்பெண்மணி, அவளது முந்தைய ஜென்மத்தில் குசேலரின் மனைவியாக வாழ்ந்தவள். கஷ்டங்கள் அனைத்தும் கண்ணன் அருளால் நீங்கி குபேர வாழ்க்கையை மேற்கொண்டபோது, தன் பழைய ஏழ்மைச் சம்பவங்களை மறந்து செல்வச் செருக்கால் ஒருவருக்கும் உதவி செய்யாமல் இருந்தாள். அந்தப் பாவமே இன்று அவளை தாத்ரியமாக வாட்டுகிறது’’ என்றாள்.

‘‘அம்மா! எது எப்படியிருந்தாலும் நாளை பாரணைக்கு வைத்திருந்த ஒரே ஒரு வாடல் நெல்லிக்கனியைக்கூட எனக்கு பிட்சையிட்டதால் அவளது அனைத்துப் பூர்வ ஜன்மப் பாவங்களும் நீங்கி விட்டன. தங்கள் கடைக்கண் பார்வை இந்தப் பெண்மணி மீது விழவேண்டும்’’ என்று கூறி கனகதாரா ஸ்தோத்திரத்தால் திருமகளைத் துதித்தார். அதனால் மனமிரங்கிய திருமகள் அந்த பெண்மணியின் இல்லத்தில் தங்க நெல்லிக்கனிகளாகப் பொழிய வைத்தாள். இந்தக் கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடுவோர் அனைவருக்கும் தன் நல்லருள் கிடைக்கும் என உருதி மொழிந்தார். 


நாம் இந்த ஸ்தோத்திரத்தை தினமும் ஒவ்வொன்றாக 108 முறை சொல்லி, ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை மனமுருக வேண்டினால். நம் வாழ்வு வறுமையில்லாமல் வளமான வசதிகளுடனும். எல்லாவித ஐஸ்வர்யங்களுடனும் சுபிட்சமாக இருக்கும் என்பது உறுதி.

அங்கம் ஹரே புனகபூஷன மாச்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகலாபரணம் தமாலம்
அங்கீக்ரு தாகில விபூதி ரபாங்கலீலா
மாங்கல்ய தாஸ்து மம மங்கல தேவதாயா 1

மகாவிஷ்ணுவின் திருமேனி நீலமேக வண்ணம் கொண்டது. அதாவது, மேகம்போல கருத்திருக்கும். ஆனால், தனக்கு நேர் எதிரான, பொன் போன்று தகதகக்கும் திருமேனி கொண்ட மகாலட்சுமி, தனக்கு மனையாளாக அமைந்திருக்கிறாளே என்ற பெருமகிழ்ச்சியில் அவர் உடலே சிலிர்க்கும். அந்த சிலிர்ப்பில் உண்டான ரோமாஞ்சனம் எப்படி இருக்கிறது? சிறு சிறு மலர் மொட்டுகள் போலிருக்கிறது! மகாவிஷ்ணுவின் இந்த மகிழ்ச்சியை மகாலட்சுமி தன் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டே இருக்கிறாள். 

அந்த விழிகள் பொன்வண்டுகள் போன்றிருக்கின்றன. தமால விருட்சம் என்ற தேவலோக மரத்தின் மீது அரும்பியிருக்கும் மலர்மொட்டுகளிலிருந்து தேனை உண்ண அவற்றைச் சுற்றிச் சுற்றிப் பறந்துவரும் பொன்வண்டுகள் போன்ற கண்கள் ஸ்ரீதேவியினுடையது. எப்படி பொன்வண்டுக்கு மொட்டிலுள்ள தேன் மட்டுமே தோன்றுகிறதோ, அதேபோல தன் பக்தனின் நற்குணங்களை மட்டுமே மகாலட்சுமி கவனிக்கிறாள். அவனுடைய தோஷங்களை அவள் பொருட்படுத்துவதில்லை. மகாவிஷ்ணு தமால விருட்சம் போன்றவர். 

எப்படி ஒரு பிரமாண்டமான மரம் எல்லா ஜீவராசிகளுக்கும் நிழல் கொடுத்து அவர்களுடைய களைப்பைப் போக்கிப் புத்துணர்வு பெற வைக்கிறதோ அது போன்ற கருணை கொண்டவர் மகாவிஷ்ணு. இத்தகைய மகாவிஷ்ணுவின் ரோமாஞ்சனத்தைத் தன் கடைக்கண்ணால் நோக்கும் மங்கள தேவதையான மகாலட்சுமியின் அந்த கடாட்சம் எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கவல்லது. அந்த லட்சுமி கடாட்சம் எனக்கு எல்லா நலன்களையும், சௌகர்யங்களையும் வழங்கட்டும். 

(லட்சுமி கடாட்சத்துக்கு இந்த கனகதாரா ஸ்தோத்திரமே பிரதான உபாயமாகும். அதிலும் இந்த முதல் ஸ்லோகம் மிகவும் அந்தரங்கமான உபாயம் என்றும் சொல்லப்படுகிறது).


முக்தா முஹீர்விதததீ வதனே முராரே
ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி கதாகதானி
மாலா த்ருசோர் மது கரீவ மஹோத்பலே யா
ஸாமே ச்ரியம் திசது ஸாகர ஸம்பவாயா

பெரியதாக, நறுமணமிக்கதாக உள்ள நீலோத்பல மலரின் தேனை சுவைப்பதற்காக வண்டுகள் அணிவகுத்து வருவதும் பிறகு ரஸம் அருந்தித் திரும்புவதுமாக இருப்பதுபோல மகாலட்சுமியின் விழிகள் தன் நாயகனின் மலரனைய முகத்தின் மீது பார்வையாய் அமர்வதும், பிறகு வெட்கம் காரணமாக மீள்வதுமாக இருக்கின்றன. அதாவது, பக்தனின் மேன்மையான குணத்தால் ஈர்க்கப்பட்டு அவனுக்கு தன் பார்வையால் அனுக்ரகம் புரிய வரும் மகாலட்சுமி, அவனது குறைகளைப் பார்க்காமல் தன் பார்வையைத் திருப்பிக்கொண்டுவிடுவாள். இந்தகைய பெருந்தன்மையுள்ள மகாலட்சுமி அனைத்து ஐஸ்வர்யங்களையும் எனக்கு வழங்க வேண்டும். 


ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்
ஆனந்த கந்தம் அநிமேஷம் அனங்கதந்த்ரம்
ஆகேகர ஸ்தித கனீனிக பக்ஷ்ம நேத்ரம்
பூத்யை பவேன்மம பூஜங்க சயாங்கனாயா 3

பேரழகு மிக்க இந்த மகாலட்சுமியைத் தன் மனையாளாக அடைந்த ஆனந்தத்தினால் அவளையே இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் மகாவிஷ்ணு. இதனால் அவர் பேரானந்தத்தை அடைகிறார். ஆனால், மகாலட்சுமியின் கண்களோ கருவிழிகளாலும் இமைகளாலும் அலங்கரிக்கப்பட்டு தீர்க்கமாக விளங்குகின்றன. இப்படி மகாவிஷ்ணுவிற்கே பேரானந்தத்தை அளிக்கும் லட்சுமி கடாட்சமானது எனக்கும் எல்லா வளங்களையும் அருளட்டும். 


பாஹ்வந்தரே மதுஜித ஸ்ரிதகௌஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி
காமப்ரதா பகவதோபி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா 4

மகாவிஷ்ணுவின் மார்பில் கௌஸ்துப மாலை துலங்குகிறது. அதனை மிகுந்த வாஞ்சையுடனும் மதிப்புடனும் மகாலட்சுமி நோக்குகிறாள். உத்தம பத்தினியான அவளுடைய கருமை மிகுந்த விழிகள் நீல மணிபோல பிரகாசிக்கின்றன. அவளுடைய கடாட்சத்தாலேயே மகாவிஷ்ணுவும் எல்லா மேன்மைகளையும் பெற்றவராகிறார். அத்தகைய மகிமைமிக்க லட்சுமி கடாட்சம் எனக்கும் எல்லா மங்களங்களையும் அருள்வதாக. 


காலாம்புதாளி லலிதோரஸி கைடபாரே
தாராதரே ஸ்புரதியா தடிதங்கனேவ
மாதுஸ்ஸமஸ்த ஜகதாம் மஹனீய மூர்த்தி
பத்ராணி மேதிஸது பார்கவநந்தனாயா 5

நீருண்டு, கருத்து, வானில் நிறைந்திருக்கும் மேகத்தினூடே மின்னல் கொடியாக மின்னுவதுபோல நாராயணனுடைய திருமார்பை ஸ்ரீ தேவி ஆலிங்கனம் செய்கிறாள். பார்க்கவ மகரிஷியின் மகளான அவள் எல்லா உலகங்களுக்குத் தாயாகவும் விளங்குபவள். அவளுடைய பேரழகை யாரால் வர்ணிக்க முடியும்! அந்த சௌந்தர்யதேவி எனக்கு மங்களங்களைக் கொடுக்கட்டும். 


ப்ராப்தம் பதம் ப்ரதமத கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்ய பாஜி மதுமாதுனி மன்மதேன
மய்யாபதேத்ததிஹ மந்தரம் ஈக்ஷணார்த்தம்
மந்தாலஸம் சமகரால கன்யகாயா 6

எந்தப் பார்வையின் பெருமையால் மங்களங்களுக்கு இருப்பிடமானவரும், மது என்ற அரக்கனை ஒழித்தவருமான மகாவிஷ்ணுவிடம் முதன் முதலாக மன்மதனுக்கு இடம் கிடைத்ததோ, அந்த சமுத்திர குமாரியான மகாலட்சுமியின் குளுமை மிக்க கடைக்கண் பார்வை என்மேல் கொஞ்சம் பட்டு எனக்கு எல்லா நலன்களையும் அருளட்டும்.


விஸ்வாம ரேந்த்ரபத விப்ரமதானதக்ஷம்
ஆனந்த ஹேதுரதிகம் முரவித்விஷோபி
ஈஷந்நிஷீதது மயிக்ஷணம் ஈக்ஷணார்த்தம்
இந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா 7

மகாலட்சுமியின் கடைக்கண் பார்வையில் சிறிதளவாவது பெற்றவன், ஒரு சக்கரவர்த்தி போன்று, இந்திரன் போன்று அகண்ட ஐஸ்வர்யத்தோடு கூடியவனாகத் திகழ்வான். இந்தப் பார்வை, முரனை வென்ற திருமாலுக்கும் ஆனந்தப் பெருக்கை உண்டாக்கக்கூடியது. நீலோத்பல மலரின் உள் மென்மை போன்ற மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை ஒரு க்ஷண நேரமாவது என் மேல் விழட்டும்.


இஷ்டா விஸிஷ்ட மதயோபி யயா தயார்த்ர
திருஷ்ட்யாத்ரி விஷ்டபபதம் ஸுலபம் லபந்தே
திருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோதர தீப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா 8

அச்வமேதம் முதலிய யாகங்களினால்கூட சுத்தமாகாத மனதை உடையவர்களையும் தன் கருணைப் பார்வையால் தூய்மையாக்குபவள் மகாலட்சுமி. அந்தப் பார்வையால் அத்தகையவர்களும் சொர்க்கப் பதவி அடைவார்கள்! நன்கு விரிந்த தாமரை மலரின் நடுப்பாகம் போன்ற தன்மையான, மென்மையான அந்த கனிவுப் பார்வை, என் மனதைத் திருத்தி, சித்தியை அருளட்டும். 


தத்யாத் தயானுபவனோ த்ரவிணாம் புதாராம்
அஸ்மிந்நகிஞ்சன விஹங்கஸிஸௌ விஷண்ணே
துஷ்கர்ம தர்மமபனீய சிராய தூரம்
நாராயண ப்ரணயினீ நயனாம் புவாஹ 9

கருணையாகிற அனுகூலக் காற்றுடன் மகாலட்சுமியினுடைய கண்களாகிற நீருண்ட மேகம், கொடிய வறுமையால் துன்பப்படும் இந்த ஏழைக்கும் கருணை காட்டட்டும். மழைத் துளிக்காக ஏங்கி நிற்கும் சாதகப் பறவை போல என்னிடமும் தோன்றும் பாவ கர்மமாகிய தாபத்தை என்னிடமிருந்து விலக்கி, மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை, பொருள் மழையைப் பொழியட்டும். 


கீர்தேவதேதி கருடத்வஜ ஸூந்தரீதி
ஸாகம்பரீதி ஸஸிஸேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதி ப்ரளய கேளிஷு ஸம்ஸ்திதாயை
தஸ்யை நமஸ்த்ரி புவனைக குரோஸ்தருண்யை 10

சரஸ்வதி தேவி என்றும், கருட வாகனனாகிய மகாவிஷ்ணுவின் மனைவி என்றும் சாகம்பரியாகிற பூமிதேவி என்றும் பார்வதி என்றும் போற்றித் துதிக்கப்படுகிற மகாலட்சுமியே, ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற மூன்று பெரும்பணிகளை விளையாட்டாக செய்து பிரபஞ்சத்தையே பரிபாலிக்கிறவளே, மூவுலகிற்கும் குருவான நாராயணனுடைய பத்தினியே, நமஸ்காரம். என் ஏழ்மையைத் தொலைத்து ஐஸ்வர்யம் பெருக அருள்வாயாக. 


ஸ்ருத்யை நமோஸ்து ஸுபகர்ம பலப்ரஸூத்யை
ரத்யை நமோஸ்துரமணீய குணார்ணவாயை
ஸக்த்யை நமோஸ்து ஸதபத்ர நிகேதனாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை 11

நல்ல கர்மாவின் பலத்தைக் கொடுக்கின்ற வேத ரூபிணியே நமஸ்காரம். அழகிய குணங்களுக்கு இருப்பிடமான ரதிதேவியே, நமஸ்காரம். தாமரையில் அமர்ந்த சக்தி ரூபிணியே, நமஸ்காரம். புருஷோத்தமனுடைய மனைவியான புஷ்டி தேவியே நமஸ்காரம். 


நமோஸ்து நாளீக நிபானனாயை
நமோஸ்து துக்தோததி ஜன்மபூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை 12

தாமரை போன்று மலர்ந்து சிரிக்கும் முகம் கொண்ட தேவியே நமஸ்காரம். பாற்கடலில் பிறந்த தேவியே நமஸ்காரம். தாபத்தை நிவர்த்தி செய்யும் சந்திரன், மரணமிலாப் பெருவாழ்வளிக்கும் அமிர்தம் இவற்றோடு தோன்றிய தேவியே, நமஸ்காரம். ஸ்ரீமந் நாராயணனுக்கு மிகவும் பிரியமான தேவியே நமஸ்காரம்.


நமோஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
நமோஸ்து பூமண்டல நாயிகாயை
நமோஸ்து தேவாதி தயாபராயை
நமோஸ்து ஸார்ங்காயுத வல்லபாயை 13

தங்கத் தாமரையை ஆசனமாகக் கொண்ட தேவியே நமஸ்காரம். பூமண்டலத்திற்குத் தலைவியே நமஸ்காரம். தேவர்களுக்குக் கருணை காட்டும் தேவியே நமஸ்காரம். சார்ங்கபாணியான மகாவிஷ்ணுவின் இதய தேவியே நமஸ்காரம். 


நமோஸ்து தேவ்யை ப்ருகு நந்தனாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை
நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதர வல்லபாயை 14

பிருகு ரிஷியின் புத்திரியான தேவியே நமஸ்காரம். மகாவிஷ்ணுவின் மார்பில் உறையும் தேவியே நமஸ்காரம். தாமரையை இருப்பிடமாகக் கொண்ட லட்சுமியே நமஸ்காரம். தாமோதர மூர்த்தியான மகாவிஷ்ணுவின் பிரியத்துக்குப் பாத்திரமான தேவியே நமஸ்காரம்.


நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவனப்ரஸூத்யை
நமோஸ்து தேவாதி பிரார்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜ வல்லபாயை 15

ஜோதி மயமானவளே, தாமரை போன்ற கண்களை உடையவளே, தேவி, நமஸ்காரம். ஐஸ்வர்ய ஸ்வரூபிணியே, உலகங்களைப் படைத்தவளே, தேவி, நமஸ்காரம். தேவர் முதலின அனைவராலும் பூஜிக்கப்படும் தேவியே, நமஸ்காரம். நந்தகுமாரனான கோபாலனின் பிரிய நாயகியே நமஸ்காரம்.


ஸம்பத் கராணி ஸகலேந்த்ரிய நந்தனானி
ஸாம்ராஜ்யதான விபவானி ஸரோருஹாக்ஷி
த்வத்வந்தனானி துரிதா ஹரணோத்யதானி
மாமேவ மாதரநிஸம் கலயந்து மான்யே 16

தாமரை போன்ற கண்களை உடையவளே, எல்லோராலும் பூஜிக்கப்படுகின்றவளே, தாயே, நமஸ்காரம். உன்னை நமஸ்கரித்தால் என் எல்லாவித பாவங்களும் தொலைந்து நான் பரிசுத்தவானாகிறேன். உனக்கு நான் சமர்ப்பிக்கும் நமஸ்காரம், சகல சம்பத்துகளையும் கொடுக்கிறது; எல்லா இந்திரியங்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுக்கிறது; மாபெரும் சாம்ராஜ்ய பொக்கிஷத்தை அருள்கிறது. என் நமஸ்காரங்கள் என்றென்றும் உனக்கே உரித்தாகும். 


யத்கடாக்ஷ ஸமுபாஸனாவிதி:
ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத
ஸந்தனோதி வசனாங்க மானஸை: 
த்வாம் முராரிஹ்ருத யேச்வரீம்பஜே 17

தேவி, உந்தன் கடைக்கண் கடாட்சம் உன்னை உபாசனை, செய்யும் அனைவருக்கும் எல்லா சம்பத்துகளையும் ஏராளமாக அள்ளிக் கொடுக்கும். முராரியான மகாவிஷ்ணுவின் ஹ்ருதய நாயகியான உன்னை வாக்கு, காயம், மனம் எல்லாவற்றாலும் துதிக்கிறேன். 


ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே
தவளதமாம் ஸுககந்தமால்ய ஸோபே
பகவதி ஹரிவல்லபே மனோக்ஞே
த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம் 18

தாமரையை இருப்பிடமாக உடையவளே, தாமரையைக் கைகளில் ஏந்தியவளே, பிரகாசிக்கும் வெண்மை வஸ்திரம், சந்தனம், மாலை இவற்றால் ஒளிர்பவளே, மகிமை வாய்ந்தவளே, மகாவிஷ்ணுவின் ப்ரிய நாயகியே, மனதை ரமிக்கச்செய்பவளே, மூவுலகத்திற்கும் ஐஸ்வர்யத்தைக் கொடுப்பவளே, எனக்கும் கருணை செய்வாய் அம்மா!.


திக்கஸ்திபி கனககும்ப முகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹினீ விமலசாரு ஜலாப்லுதாங்கீம்
ப்ராதர் நமாமி ஜகதாம் ஜனனீமசேஷ
லோகாதி நாதக்ரு ஹிணீம் அம்ருதாப்தி புத்ரீம் 19

எல்லா திசைகளிலிருந்தும் தங்கக் குடங்களில் நிரம்பிய கங்கையின் பரிசுத்தமான நீரினால் திருமஞ்சனம் செய்யப்பட்டவளே, உலகங்களுக்கெல்லாம் தாயே, எல்லா உலகத்திற்கும் நாயகனான மகாவிஷ்ணுவின் பத்தினியே, பாற்கடலின் புத்திரியே, உன்னைக் காலைப் பொழுதில் நமஸ்கரிக்கிறேன்.


கமலே கமலாக்ஷ வல்லபேத்வம்
கருணாபூர தரங்கிதைரபாங்கை
அவலோகய மாமநிஞ் சனானாம்
ப்ரதமம் பாத்ர மக்ருத்ரிமம் தயாயா 20

தாமரை போன்ற கண்களை உடைய மகாவிஷ்ணுவின் இதயத்துக்கு நெருக்கமானவளே, மகாலட்சுமியே, கருணை வெள்ளத்தில் அலைமோதும் உன் கடைக்கண் பார்வையால், வறுமை பிடித்தாட்கொண்டிருக்கும் என்னையும், உன் கருணைக்கு உண்மையான பாத்திரவானாக என்னை ஆக்குவாயாக.


ஸ்துவந்தியே ஸ்துதிபிரமீன் பிரன்வஹம்
த்ரயீமயீம் த்ரிபுவன மாதரம் ரமாம்
குணாதிகா குரிதர பாக்ய பாகினோ
பவந்தி தே புவி புத பாவிதாஸயா 21

மூன்று வேதங்களின் ஸ்வரூபிணியாகத் திகழ்பவளே, மூவுலகிற்கும் தாயுமான மகாலட்மியே, இந்த ஸ்தோத்திரங்களினால் தினமும் உன்னை யார் துதிக்கிறார்களோ, அவர்கள் மிகச் சிறந்த குணம்பெற்றவர்களாகவும், குறையாத செல்வம் உள்ள செல்வந்தர்களாகவும், உலக வாழ்வில் எல்லா ஐஸ்வர்யர்களையும் அடைத்து பூரண நலத்துடன் வாழ்ந்து விளங்குவார்கள்.


|| ----------- ஓம் மஹாலக்ஷ்மியை நமஹ ----------- ||

1 கருத்து: