திங்கள், 17 ஜூலை, 2017

குற்றம் பொறுத்த கொற்றவன்

அடியார்களின் பிழைகள், குற்றங்களைப் பொறுத்து, அவர்களின் பாவங்களைப் போக்கி கருணை காட்டும் ஈசன் குடிகொண்டுள்ள எண்ணற்ற தலங்களுள் ஒன்றுதான் சு.ஆடுதுறை கிராமத்திலுள்ள அபராத ரட்சகர் என்னும் குற்றம் பொறுத்த சிவன் கோவில்.


ரிஷி பட்டம் இழந்த முனிவர்கள்: சிவபெருமானின் அனுமதியின்றி தக்கன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்ட சப்த ரிஷிகளுக்கும் சாபம் ஏற்பட்டு ரிஷி பட்டத்தை இழந்தனர். சாபம் நீங்கி மீண்டும் ரிஷி பட்டத்தைப் பெற முனைந்த அகத்தியர், வசிஷ்டர், பரத்வாஜர், பராசரர், கௌதமர், காசியபர், கௌசிகர் ஆகியோர், ‘"நீவா" என்னும் வெள்ளாற்றங்கரையில் ஏழு இடங்களில் லிங்கப் பிரதிஷ்டை செய்து வணங்கினர். இவற்றுள் நான்காவது தலம் தான் சு.ஆடுதுறை கோவில்.
.
இத்திருத்தலத்தில் ஒருமுறை சுவேத கேது என்ற முனிவர் சிவனைக் குறித்து தவத்தில் ஈடுபடத்தொடங்கினார். ஆனால், முனிவரின் மனம் தவத்தில் ஒன்றாமல் குரங்குபோல் அலைபாய்ந்தது. இதுபற்றி தம் தந்தை உத்தாலக முனிவரிடம் கேட்டார். அதற்கு அவர், "மகனே! நீ தீர்த்த யாத்திரை மேற்கொண்டபோது தாகத்தில் தவித்த உன்னை திலோத்தமை தாகம் தணித்தது மட்டுமின்றி, மாயா வனத்துக்குள் அழைத்துச்சென்று மோகவலையில் வீழ்த்திவிட்டாள். பிரதோஷ காலமான அப்போது பிருகு, மரீசி, அத்திரி, புலஸ்தியர், புலகர், கிரது, வசிஷ்டர் ஆகிய முனிவர்கள் அங்கு சிவபூஜையில் ஈடுபட்டிருந்தனர். இதையறியாத நீயும் பேரின்பத்தை நினையாமல், சிற்றின்பத்தில் ஈடுபட்டிருந்தாய். ஆகவே, இப்பிறவியில் மனம் அலைபாய்கிறது. உன் பாவச் செயல்களால் மரத்துக்கு மரம் தாவும் குரங்குபோல அலைபாயும் உன் மனம் ஒருநிலைப்பட ‘"நீவா" நதியில் நீராடி நீலகண்டனிடம் மன்னிப்புக்கேள்!'' என்றார்.

குரங்காய்த் திரிந்த திலோத்தமை: தன்நிலை கண்டு வருந்திய சுவேத முனிவர், தனது இந்த நிலைக்குக் காரணமான திலோத்தமையை ‘"குரங்காய் அலைந்து திரிவாய்" என்று சபித்தார். பின்னர் ‘"நீவா" நதிக்குச் சென்று நீராடினார். அங்கு லிலிங்கப் பிரதிஷ்டை செய்து மனமுருகி வழிபட்டார். அப்போது, “உம்மை மன்னித்தோம்; மனம் வருந்த வேண்டாம்!'' என்று ஒலித்த ஈசனின் அசரீரி கேட்டு மனம் தெளிவடைந்தார். அதேசமயம் முனிவர் தனக்கிட்ட சாபம் குறித்து நாரதர் மூலம் அறிந்த திலோத்தமை தேவகுருவிடம் சென்று சாபம் நீங்க வழிகேட்டாள். தேவகுருவோ, “உன்னை சபித்த முனிவரிடமே சென்று விமோசனம் கேள்'' என்றார். 

சுவேத முனிவரிடம் சென்று மன்னிப்புக்கேட்ட திலோத்தமை சாபம் நீங்கச் செய்யுமாறு வேண்டினாள். அதற்கு முனிவரோ, “உனக்கிட்ட சாபம் பொய்க்காது. நீ தேவ அம்சத்துடன் பூலோகத்தில் நீலன் என்ற பெயரில் வானரமாய் பிறப்பாய். அப்போது மதுவனத்தில் அலைந்து திரியும்போது, குற்றம் பொறுத்த ஈசனைக் கண்டு வழிபடு. சாப விமோச்சனம் பெறுவாய்!'' என்று தெரிவித்தார்.

முனிவரின் சாபம் பலித்தது. பூமியில் குரங்காய்ப் பிறந்தாள் திலோத்தமை. "நீவா" நதியில் நீராடி ஈசனை வழிபட்டு சாபத்தை நீக்கும்படி மனமுருகினாள். அப்போது ஈசன், “இன்னும் சிறிதுகாலம் குரங்காய் வாழ்ந்து வா. இப்போது பூமியில், தேவர்கள் வானர வடிவில் கிஷ்கிந்தையில் ராம கைங்கர்யத்துக்காகத் தோன்றியுள்ளனர். அவர்களுடன் சென்று ராமபிரானுக்கு சேவை செய்! சீதாப்பிராட்டியை மீட்பதற்கு இலங்கைக்குச் செல்ல வானரப்படைகள் சேதுபாலம் கட்டுவதற்கு உதவி செய். சாபம் நீங்கி சுய உருவம் பெறுவாய்!'' என்று அசரீரியாகச் சொன்னார். அதன்படி சேதுபாலம் அமைக்கும் பணியில் வானரப் படைகளுடன் ஈடுபட்டாள் திலோத்தமை.

இந்தப் புராணச் சம்பவத்தின் அடிப்படையில் அமைந்ததுதான் பெரம்பலுர் அருகேயுள்ள சு.ஆடுதுறை அபராத ரட்சகர் கோவில். சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோவில் கல் திருப்பணி ரீதியாக சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. கி.பி. 1070 முதல் கி.பி. 1118 வரை விக்கிரம சோழன் ஆட்சிக்காலத்தில் தொடங்கி, பராக்கிரம பாண்டியன், பரகேசரி வர்மன், விஜய நகர மன்னன் வீரபுக்ராயர் உள்பட பல மன்னர்கள் இக்கோவிலுக்கு பல கிராமங்களை தானமாக வழங்கியுள்ளனர். நிர்வாக வசதிக்காக சோழர்கள் ஆட்சிக் காலத்தில் நாட்டை வளநாடு, கூற்றம், பற்று, ஊர் எனப் பிரித்திருந்தனர். இவற்றுள் கூற்றம் என்ற நாட்டுப்பிரிவில் ஆடுதுறை அமைந்துள்ளது.

மதுவனம்: இலங்கை சென்ற அனுமன் சீதா தேவியைக் கண்டு திரும்பியதும், அந்த நற்செய்தியைக் கேட்ட வானரங்கள் அந்த சந்தோஷத்தைக் கொண்டாட இங்கிருந்த மதுவனத்தில நுழைந்து ஆடி மகிழ்ந்து, குடித்துக் கும்மாளமிட்டனராம். இதனால் தான் "ஆடுதுறை" எனப்பெயர் பெற்றதாகவும் கூறுவர். ராம காரியம் முடிந்ததும் திலோத்தமையான நீலன், அனுமன், சுக்ரீவன், அங்கதன், சுவிசேஷன் ஆகிய வானரங்கள் இங்கு வந்து நீராடி இறைவனை வழிபட்டு வினை நீங்கப் பெற்றனர். வானரங்களின் வினையைத் தீர்த்ததால் இவ்வூர் "வானர தீர்த்த புரம்" எனவும் அழைக்கப்படுகிறது.

ஏழுநிலை கோபுரம் கொண்டு மிகப்பெரியதாக விளங்கும் இக்கோவிலில் தினமும் நான்கு காலப் பூஜை மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இவ்வாலய இறைவன் அபராத ரட்சகர், குற்றம் பொறுத்தவர், குற்றம் பொறுத்தருளிய நாட்டனர், குரங்காடுதுறை மகாதேவர், அபராத ரட்சகாமேஷ்வரர் ஆகிய பெயர்களாலும்; இறைவி ஏலவார் குழலிலியம்மை, எழில்வார் குழலிலியம்மை, சுகந்த கூந்தலாம்பிகை ஆகிய பெயர்களாலும் அழைக்கப் பெறுகிறாள். கோபுரங்களிலும் மண்டபத் தூண்களிலும் வானரச் சிற்பங்கள் அதிகளவில் உள்ளன. மேலும் இவ்வூரில் அதிக எண்ணிக்கையில் குரங்குகள் வாழ்ந்து வருகின்றன.

பிரார்த்தனை பலன்: திருமணத்தடை நீங்க, மகப்பேறு கிட்ட, நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வர பக்தர்கள் இங்கு வழிபட்டுவருகின்றனர். "மறந்துபோன திதியை மகத்தில் கொடு" என்பார்கள். அதற்கேற்ப இங்குள்ள "நீவா" நதிக்கரையில் மாசி மகத்தன்று பித்ருக்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது சிறந்த பலனைத் தரும் என்பதும் ஐதீகம்.

அமைவிடம்: சென்னை  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொழுதூர் அருகேயுள்ள டோல்கேட்டிலிருந்து கிழக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவிலும், திருச்சி  விழுப்புரம் ரயில் பாதையில் பெண்ணாடம் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே 16 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது. வலிலி பூஜை செய்து வழிபட்ட சிவாலயம் அமைந்துள்ள வாலிலிகண்டபுரமும் இவ்வூருக்கு மேற்கே உள்ளது.

நன்றி : எஸ்.பி.சேகர்(ஓம்)


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

ஆன்மிக மணம் கமழும் ஆடி மாதம்

தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது. பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியை விட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.


வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இதுவே தேவர்களின் பகல் காலமாகும். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும். நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள் தான். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.

மழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல் நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர். வேம்பும் எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்தமானவை. கூழும் விருப்பமானதே. இவை உடல் நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவை. இவற்றையே இம்மாதத்தில் அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்குத் தருகிறார்கள்.

ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்கள் ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், ஆடிப் பண்டிகைகளாகும். ஆடியின் சிறப்பு அளவில்லாதது; அனைத்து நலன்களையும் வழங்குவது!

ஆடி மாத முதல் நாள் புதுமணத் தம்பதிகளுக்கு ஆடிச் சீர் செய்து மாப்பிள்ளை பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அங்கு விருந்து வைத்து, மாப்பிள்ளைக்கு ஆடிப் பால் என்ற தேங்காய்ப் பாலை வெள்ளி டம்ளரில் கொடுத்து அவரை  மட்டும் அனுப்பி விட்டு, பெண்ணைத் தாய் வீட்டிலேயே ஆடி முழுதும் தங்க வைத்துக் கொள்வார்கள். ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும்; தாய்க்கும் குழந்தைக்கும் வெயில் காலம் கஷ்டத்தைத் தரும் என்பதால் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். (ஆடி வரை கருத்தரிக்காத புதுமணப் பெண்ணுக் குத்தான் இவை). இதை இன்னமும் பின்பற்று கின்றனர். இதனால் “ஆடிப் பால் சாப்பிடாத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி" என்பார்கள்.

திருக்குற்றாலத்தில் ஆடி மாதம் மிகவும் விசேஷமாகும். சுற்றுலா செல்ல ஏற்ற மாதம் இது. “ஆனி முற்சாரல் ஆடி அடைசாரல்" என்பார்கள். குற்றால அருவி நீரில் மூலிகைச் சத்துகள் கலந்து வருவதால் அது மக்களுக்கு அதிக நன்மை தரும். அதனால் குற்றால அருவி நீராடல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

திருச்சியருகேயுள்ள திருநெடுங்கள நாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுதும் சூரிய ஒளி மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடைபெறும். இது ஒரு சிறப்பு என்றால், இவ்வாலய இரு விமானங்கள் காசி ஆலய விமானம் போல அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு ஆகும்.

ஆடி மாதப் பழமொழிகள் பல “ஆடிப் பட்டம் தேடி விதை", “ஆடியில் காற்றடித் தால் ஐப்பசியில் மழை வரும்", “ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்’, “ஆடிச் செவ்வாய் தேடிக் குளி அரைத்த மஞ்சள் பூசிக் குளி", “ஆடிக் கூழ் அமிர்தமாகும்."

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் கிழமைகள் சிறப்பு வாய்ந்தவையாகும். இந்நாட்களில் பெண்கள் தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஆடிச் செவ்வாய் அவ்வையாருக்குச் செய்யும் விரத பூஜையாகும். ஔவை நோன்பு கடைப்பிடிப்பதால் கன்னிப் பெண்களுக்குத் திருமணமும் சுமங்கலிகளின் கணவர்களுக்கு நீண்ட ஆயுளும் குழந்தை வரமும் கிடைக்கும். ஆடி வெள்ளியில்தான் வரலட்சுமி விரதம் வரும். சில வருடங்களில் இது ஆவணியிலும்  அமைந்துவிடும்

சக்தி பீடங்களில் ஒன்றான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு ஆடி வெள்ளியில் ஸ்ரீ வித்யா பூஜை வைதீக முறைப்படி நடத்துகின்றனர். இவ்வம்மன் காதுகளில் உள்ள தாடங்கங்களில் ஸ்ரீ சக்கரம் உள்ளது. ஆடி வெள்ளியன்று, இவ்வம்மன் மாணவியாக இருக்க, ஈசன் குருவாக இருந்து உபதேசம் செய்தார். எனவே பள்ளிப் பிள்ளைகள் இங்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர்.

திருவானைக்காவலில் ஆடி வெள்ளியன்று அம்பாள் காலையில் லட்சுமி தேவியாகவும், உச்சிக்கால வேளையில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருவாள். ஆடி வளர்பிறை துவாதசியில் துளசி பூஜை செய்வதால் பல நற்பலன்களைப் பெறலாம். துளசி மாடம் முன் கோலமிட்டு, மாடத்திற்குப் பொட்டிட்டு, துளசிக்கு மாலையிட்டுப் பூஜிக்க வேண்டும். குளித்தபின் தான் துளசிக்கு நீரூற்ற வேண்டும்.

ஆடித் தபசு விழா திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பெரிய திருவிழாக்களில் ஒன்று. அம்பிகை ஈசனை விஷ்ணுவுடன் காட்சி தருமாறு வேண்டினாள். அதற்கு ஈசன் பொதிகைமலை புன்னை வனத்தில் தவம் புரியக் கூறினார். அம்மையும் ஊசி முனையில் நின்று தவமியற்ற, இறைவன் ஆடிப் பௌர்ணமி உத்திராட நட்சத்திரத்தில் பார்வதியின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் மால் ஒரு பாகனாக காட்சியளித்தார். ஆடி மாதம் இங்கு நடைபெறும் 12 நாள் திருவிழாவில் 11ஆம் நாள் திருவிழாதான் ஆடித் தபசு.

ஆடிப் பௌர்ணமி அன்று தான் திருச்சி அருகேயுள்ள உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலய பஞ்சவர்ண லிங்கம் உதங்க முனிவருக்கு ஐவண்ணங்களைக் காட்டியருளியது. அதனால் இவருக்கு ஐவண்ணநாதர் எனப் பெயர். காலை முதல் மாலை வரை இந்த லிங்கம் ஐந்து வண்ணங்களில் காட்சியளிக்கும்.

ஆடிப் பௌர்ணமி அன்று தான் ஹயக்ரீவ அவதாரம் ஏற்பட்டது. இவர் கல்விக்குரிய கடவுள். இவர் வழிபாடு தொன்மையானது. திருமால் உடலிலிருந்து மது கைடபர் என்பவர் வியர்வையில் தோன்றினர். இந்த அசுரர்கள் பிரம்மனிடமிருந்து வேதங்களை அபகரித்து குதிரை முகத்துடன் பாதாளத்தில் ஒளித்து வைத்தனர். வேதங்களை இழந்த பிரம்மா திருமாலிடம் முறையிட, திருமால் குதிரை முகம் கொண்டு அவர்களிடம் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார்.

போரிட்டதால் பரிமுகக் கடவுளின் உக்ரம் தணியவில்லை. அதனால் திருமகள் மடியில் அமர, அவர் உக்ரம் தணிந்து லட்சுமி ஹயக்ரீவரானார். இவரின் திருவுருவை புதுவை முத்தியால்பேட்டை ஆலயத்திலும் கடலூர் அருகே திருவஹீந்திரபுரத்திலும் காணலாம். படிக்கும் மாணவர்கள் புத்தகம், பேனா வைத்து வணங்குகின்றனர். ஆடியின் சிறப்பு அளவில்லாதது; அனைத்து நலன்களையும் வழங்குவது!

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

யோகினி ஏகாதசி (ஆடி மாதம் கிருஷ்ண‌ பட்சம்)

ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன.


ஆஷாட(ஆடி) மாதம் கிருஷ்ண‌ பட்சத்தில்(தேய்பிறையில்) வரும் ஏகாதசி திதியை யோகினி ஏகாதசியாக கொண்டாடுவர். யோகினி ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம். 

மஹாராஜா யுதிஷ்டிரர் கிருஷ்ண பரமாத்மாவை வணங்கி, ‍"பரம்பொருளே, ஜேஷ்ட (ஆனி) மாதம் சுக்ல பக்ஷத்தில் வரும் நிர்ஜலா ஏகாதசியின் அபார மகிமையைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆடி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் சுத்த ஏகாதசியைப் பற்றிய விவரம் அறிய விரும்புகிறேன். ஆகையால், மது என்னும் பெயர் கொண்ட அரக்கனை அழித்ததால் மதுசூதனன் என்னும் திருநாமம் பெற்ற கிருஷ்ணா, தயைகூர்ந்து விவரமாக சொல்லவும்" என்று கூறினார்.

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா யுதிஷ்டிரரை நோக்கி "ஹே மஹாராஜா உபவாசம் இருக்கக்கூடிய நாட்களிலேயே மிகச்சிறப்பான நாள் ஏகாதசி திருநாள். அந்த ஏகாதசி நாட்களில் மிகவும் சிறப்பானது ஆஷாட மாதத்தின் கிருஷ்ண பட்சத்தில் வரும் சுத்த ஏகாதசி. இதை யோகினி ஏகாதசி என்றும் அழைப்பர். இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பதன் பலனாக அவரவரது பாவத்தின் பிரதிபலன்கள் அழிந்து மேலான முக்தியை பெறுவர்.

அரசர்களில் மேலானவனே, இந்த ஏகாதசியானது, இந்த உலகில் அழியும் பொருட்களின் மீது பற்று கொண்டு மாயை என்னும் உலகாயத சமுத்திரத்தின் பாதாளத்தில் மூழ்கி கிடக்கும் மனிதர்களை மீட்டு, ஆன்மீகம் (பக்தி) என்னும் கரையின்பால் கொண்டு சேர்க்கும் நன்னாளாகும். மூவுலகிலும், உபவாசம் இருக்கக்கூடிய விரத நாட்களில் இந்நாளே முதன்மையானதாகும். புராணத்திலிருந்து உனக்கு ஒரு உண்மைக் கதையை சொல்லுகிறேன் கேள். என்று கூறி, சொல்லலுற்றார்.

"தேவர்களின் செல்வத்தைக் காத்து வருப‌வரும், அளகாபுரி பட்டணத்தை ஆண்டு வருபவரும் ராஜா குபேரர், சிவபெருமானிடம் ஆழ்ந்த ஈடுபாடும், பக்தியும் பூண்டவர். அவர் ஹேமமாலி என்னும் யக்ஷனைத் தன்னுடைய தோட்டத்தைக் கவனித்து கொள்ளும் பணியில் அமர்த்தினார். ஹேமமாலி மயக்கும் பெரிய கண்களையுடைய தன்னுடைய மனைவி ஸ்வரூபவதீ மீது தீரா காம வசப்பட்ட காதல் மயக்கத்தில் இருந்தான். 

ஹேமமாலி, அன்றாடம் குபேரனின் பூஜைக்காக, மானஸசரோவர் ஏரிக்குச் சென்று ஏரியைச் சுற்றிலும் மலர்ந்துள்ள மலர்களை பறித்து வந்து சேர்ப்பிக்க வேண்டும். குபேரன் அம்மலர்களைக் கொண்டு நித்தமும் சிவபூஜை செய்வது வழக்கம். ஒரு நாள், வழக்கத்திற்கு மாறாக ஹேமமாலி மலர்களை பறித்து முடித்தவுடன் குபேரனது அரண்மனைக்குச் செல்லாமல், நேராக தன்னுடைய மனைவியைக் காணச் சென்றுவிட்டான். மனைவியின் மீதான காதலில், பூஜைக்கு மலர்களை சேர்ப்பிக்கும் பணியை மறந்தே போனான்.

ராஜனே கேள்! இங்கு ஹேமமாலி தன்னுடைய இல்லாளுடன் இல்லற சுகத்தில் மோகித்து தன்னை மறந்து கிடக்க, அங்கு குபேரன் ஹேமமாலியின் வருகைக்காக வெகு நேரம் காத்திருந்து விட்டு, பின் சிவபூஜையில் தடங்கல் ஏற்படுவதை பொறுக்காமல் கோபம் கொண்டு, த‌ன் காவலாளியிடம் "நீ சென்று ஏன் இந்த கெட்ட உள்ளம் கொண்ட ஹேமமாலி இன்னும் தினசரி பூஜை மலர்களைக் கொண்டு வரவில்லை என்று அறிந்து வா" என்று பணித்தான். காவலாளியும் சென்று உண்மை நிலவரத்தை அறிந்து வந்து அரசர் குபேரனிடம், "எங்களுக்கு பிரியமான பிரபுவே, ஹேமமாலி இல்லற சுகத்தில் தன்னை மறந்து கிடக்கிறான்" என்று மொழிந்தான். 

அதைக்கேட்ட குபேரன் மிகவும் சினம் கொண்டு "உடனே மதியீன ஹேமமாலியை அழைத்து வந்து தன் முன்னால் நிறுத்தும் படி" கட்டளையிட்டான். தன‌க்கிட்ட பணியைச் செய்ய மறந்த தவறை உணர்ந்ததோடு அல்லாமல், காம வசப்பட்டு மனைவியுடன் காதலில் ஈடுபட்டதும் வெளியில் தெரிந்ததால், ஹேமமாலி குபேரன் முன் மிகவும் பயத்துடனும், நடுக்கத்துடனும் நின்று முதலில் தன்னுடைய வணக்கங்களைத் தெரிவித்தான். 

கோபத்தால் கண்கள் சிவக்க, ஆவேசத்தால் உதடுகள் துடிக்க, மிகுந்த கோபத்துடன் குபேரன் ஹேமமாலியை நோக்கி "பாபி, மஹா பாதகம் புரிந்தவனே, நீசனே, காமாந்தகாரகா(காமி), பக்தியின் மேன்மையை உணராதவனே, தேவர்களுக்கு குற்றம் விளைவிக்கும் நடமாடும் அவமானச் சின்னமே, தேவர்களுக்கெல்லாம் தேவரான சிவபெருமானின் பூஜைக்கு பங்கம் விளைவித்த நீ உன் மனைவியைப் பிரிந்து, வெண்குஷ்ட ரோகத்துடன் மிருத்யுலோகத்தில் பிறந்து அல்லல்பட்டு அவதிப்படுவாய். நீ செய்த பாவச்செயலுக்கு அதுவே சரியான தண்டனையும் ஆகும்" என்று சபித்தான்.

சாபத்தின் விளைவாக ஹேமமாலி அள‌காபுரியை விட்டு உடலெங்கும் வெண்குஷ்ட ரோகம் பீடிக்க அவமானத்துடன் பூவுலகில் வீழ்ந்தான். உண்பதற்கும், குடிப்பதற்கு எதுவும் கிடைக்காத அடர்ந்த பயத்தைக் கொடுக்கும் வனாந்தரத்தில் கண் விழித்தான். நெடு நாட்கள் இப்படியே துன்பத்தில் சென்றன. இரவுப் பொழுதிலும் வலியால் உறக்கம் வராமல் அல்லலுற்றான். கோடையின் கடுமையான உஷ்ணத்திலும், பனியின் கடுமையான குளிரிலும் தாங்கவொண்ணா இன்னலுற்றான். இத்தனை துன்பம் அனுபவித்தாலும், சிவபெருமானின் மீதான பக்தி குறையாமல் இடைவிடாது தொழுது வந்தான். அதனால் அவனது புத்தி தடுமாறாமல், செய்யும் காரியத்தில் நிலைத்து இருந்தது. செய்த பாப கர்மத்தினால் விளைந்த சாபத்தின் காரணமாக இன்னலுற்றாலும், சிவபெருமானிடம் கொண்ட பக்தியால், தன் முந்தைய பிறவியை பற்றிய நினைவு மாறாமல் இருந்தது. 

இப்படியே பல நாட்கள் அங்குமிங்கும் அலைந்து திரிந்து மலை, வனாந்தரம், சமவெளி ஆகியவற்றை கடந்து, ஹேமமாலி பிரம்மாண்டமாகப் பரவி நிற்கும் இமாலய பர்வதத்தை அடைந்தான். அங்கு அதிர்ஷ்டவசமாய் அவனுடைய சிவபக்தியின் பலனாக, மஹாதபஸ்வியான ரிஷி மார்க்கண்டேயரின் ஆசிரமத்தைக் கண்டான். ரிஷி மார்க்கண்டேயரை பிரம்மாவின் பிரதிபிம்பம் என்றே கூறுவர். அவரது ஆசிரமமானது பிரம்மசபை போன்று அழகுற விளங்கியது. 

ஆசிரமத்தில் ரிஷி மார்க்கண்டேயர் த‌ன் ஆசனத்தில் மிகவும் பொலிவுடனும், தேஜஸூடனும் மற்றுமொரு பிரம்ம தேவன் போல் அமர்ந்திருக்க, ஹேமமாலி பாவம் செய்த குற்ற உணர்ச்சியால் வெட்கப்பட்டு தூரத்தில் நின்றுகொண்டு, ரிஷிக்கு தன்னுடைய பணிவான வணக்கத்தையும், வந்தனத்தையும் செலுத்தினான். பிறர் நலனில் அக்கறை கொண்டு, அவர் துயர் துடைக்கும் மனிதாபிமானம் மிக்க ரிஷி மார்க்கண்டேயர், குஷ்டரோகியாக தோற்றத்தில் இருக்கும் ஹேமமாலியைக் கண்டார். அவனை அருகில் அழைத்து "நீ என்ன பாவம் செய்து, இத்தகைய கொடிய துன்பத்தை அடைந்தாய்" என்று வினவினார்.

இதைக் கேட்டவுடன் ஹேமமாலி, வேதனையுடனும் வெட்கத்துடனும் பதிலளித்தான். "முனி ஸ்ரேஷ்டரே நான் குபேரபுரியை ஆட்சி செய்யும் யக்ஷ ராஜன் குபேரனின் பணியாள். என் பெயர் ஹேமமாலி. என் எஜமான் குபேரனின் அன்றாட சிவபூஜைக்காக மானசரோவர் ஏரிக்கரையிலிருந்து பூஜைக்கான மலர்களை தினமும் பறித்து வந்து சேர்ப்பது எனக்கு இட்ட பணியாகும். ஒரு நாள் காமம் தலைக்கேற எனக்கிட்ட பணியை மறந்து மனைவியுடன் சல்லாபத்தில் ஈடுபட்டு தாமதமாக மலர்களை கொண்டு சேர்ப்பித்தேன். தாமதத்தின் காரணத்தை அறிந்த என் எஜமானன் குபேரன், மிகுந்த சினத்துடன் சிவபூஜைக்கு பங்கம் விளைவித்த என்னை சபித்தார். 

அவரது சாபத்தின் விளைவால் நான் இந்தத் தோற்றத்தில் தங்கள் முன் நிற்கிறேன். சாபத்தின் விளைவால் என் வேலை, வீடு, மனைவி அனைத்தையும் இழந்து மீளும் வழி தெரியாது அலைந்து கொண்டிருக்கிறேன். ஏதோ என் முன் ஜென்ம நல்வினைப் பயன் காரணமாக தவசிரேஷ்டரான தங்களைக் காணும் பேறு பெற்றேன். தங்களை கண்டதும் நல்வழி பிறக்கும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பக்தர்களின் துயர் தாளாது கருணையுடன் அவர்களது துயரை துடைக்கும் பக்தவத்சலா, மற்றவர்களின் நலத்தையே குறிக்கோளாக மனதில் கொண்ட புண்ணியசீலரே, தயைகூர்ந்து நான் இந்த சாபத்திலிருந்து மீளும் வழியை அருளி உதவுங்கள்! என்று வேண்டி நின்றான்.

கருணை மிகுந்த மார்க்கண்டேயர் இதைக் கேட்டவுடன் "ஹேமமாலி வருத்தப்படாதே, நீ மறைக்காமல் உண்மை உரைத்ததால், உனக்கு மிகுந்த நல்பலனை அளிக்கும் ஏகாதசி விரத நாளை பற்றி கூறுகிறேன் கேள். நீ ஆஷாட மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியன்று அதன் விதிமுறைப்படி உபவாசம் இருந்து விரதத்தை கடைபிடித்தால் பகவான் மஹாவிஷ்ணுவின் அருளுக்குப் பாத்திரமாகி உன்னுடைய சாபத்திலிருந்து விடுபடலாம்"  என்றார். 

இதைக் கேட்டதும் நன்றி உணர்ச்சியுடன் ரிஷி மார்க்கண்டேயரின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்து நன்றியையும், வணக்கத்தை மீண்டும் மீண்டும் சமர்ப்பித்தான் ஹேமமாலி. ரிஷி, தன்னை நமஸ்கரிக்கும் ஹேமமாலியை கைதூக்கி எழுப்பி, அவனுக்கு அருளாசி வழங்கி அனுப்பினார். ஹேமமாலி விவரிக்க இயலாத ஆனந்தம் ததும்ப ஆசிரமத்திலிருந்து வெளியேறினான். 

ரிஷி மார்க்கண்டேயர் சொல்லியபடி ஹேமமாலியும் ஆஷாட மாத கிருஷ்ணபட்ச ஏகாதசி விரதத்தை அதற்குரிய வழிமுறைகளின்படி கடைபிடித்தான். அதன் பலனாக சாபம் விலகி, தன் அழகான யக்ஷ தோற்றத்தைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், இழந்த அனைத்தையும் மீண்டும் பெற்று வீடு திரும்பி, தன் மனைவியுடன் சந்தோஷமாக வாழலானான். 

தர்மத்தை தவறாது கடைபிடிக்கும் யுதிஷ்டிரா, யோகினி ஏகாதசி விரதத்தின் மஹிமையும், அதன் சுப பலன்களையும் பற்றி அறிந்து கொண்டாய். யோகினி ஏகாதசி விரத உபவாசம், எண்பத்தெட்டு ஆயிரம் பிராமணர்களுக்கு போஜனம் செய்வித்த புண்ணியத்தை வழங்கும் சக்தி பெற்றது. எவரொருவர் இப்புண்ணிய நாளில் விதிமுறைப்படி விஷ்ணு பூஜை செய்து, உபவாச விரதத்தைக் கடைபிடிக்கிறாரோ, அவர் ஏகாதசி தேவியின் அருளால் தங்களுடைய பாபங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று புண்ணிய பக்திமான் ஆவார். மஹாராஜனே நீ கேட்டபடி ஆஷாட மாத கிருஷ்ணபட்ச ஏகாதசியின் புண்ணிய மஹிமையை விவரித்துள்ளேன்" என்று முடித்தார்

கதையின் சாரம்: எடுத்த பணியை சிரத்தையுடனும் கவனத்துடனும் செய்ய வேண்டும். பூஜை முதலான தெய்வ காரியங்களில், சோம்பேறித்தனத்தையும் அக்கறையின்மையும் விட்டுவிட்டு, மனதில் எப்பொழுதும் கட்டுப்பாட்டுடன் சதாசர்வ காலமும் ஈஸ்வர சிந்தனையுடன் இருக்கவேண்டும். கலியுகத்தில் கர்ம வினையினால் ஏற்படும் வெண்குஷ்டம் போன்ற கொடிய  ரோகங்களிலிருந்து விடுபட, யோகினி ஏகாதசி அன்று பக்தி சிரத்தையுடன் பகவானின் நாமகரத்துடன் உபவாசம் இருந்து விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

நன்றி : Kshetra Yaatra


|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||

|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||


சனி, 15 ஜூலை, 2017

திருபுவனம் ஸ்ரீ சரபேஸ்வரர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருபுவனம் என்னும் கிராமத்தில் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் என்ற பெயரில் சரபேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இந்த திருத்தலத்தில் இவரை வணங்கினால் தலைவிதியை மாற்றும் வல்லமை படைத்தவராகவும், மனவியாதிகள் மற்றும் தீராத துன்பங்கள் தர முயலும் கொடிய தரித்திரங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு வேறு பல கோயில்கள் இருந்தாலும் ஸ்ரீகம்பஹரேஸ்வரர் ஆலயம் தான் மிகப் பிரசித்தி பெற்ற ஓன்றாகும். 13-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னன் குலோத்துங்கனால் இக்கோயிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.


அவருக்கு பிறகு வந்த சேர, சோழ, பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் அப்பணியைத் தொடர்ந்து கட்டி முடித்தனர். சோழர்களால் புதுப்பிக்கப்பட்ட கடைசிக் கோயில் இதுவென வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். இக்கோயிலின் முன்பகுதியானது 120 அடி உயரமுள்ள ஓரு ரதத்தினை ஓத்துள்ளது. ரதத்தின் சுவர்கள் மற்றும் கோயில்கள் சுவர்களில் இராமாயணத்தில் வரும் காட்சிகள் ஒவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. பிரம்மாண்டமான வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ள கோயிலின் அழகையும், கற்களில் செய்யப்பட்டுள்ள வேலைபாடுகளையும், ஒவியங்களின் வனப்பையும் பக்தர்கள் கண்டுகளித்து பரவசமடைகின்றனர்.

ஸ்ரீ சரபேஸ்வரரின் தோற்றம்: இரணியன் என்ற அசுரன் பரம்பொருளை நோக்கி சாகாவரம் வேண்டி தவம் செய்து ஈசனிடம் இருந்து தேவர், மனிதர், விலங்குகள் முதலியவற்றாலும் பகலிலோ அல்லது இரவிலோ, வீட்டின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ, எவ்வித ஆயுதங்களாலோ தமக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற அரிய வரத்தினை கேட்டான். எதிர்காலத்தில் நடப்பன எல்லாவற்றையும் அறிந்த பரம்பொருள், இரணியனுக்கு அவன் வேண்டிய வரத்தினை அளித்தார். இதனால், தன்னை எதிர்ப்பதற்கு யாரும் இல்லை என்ற கர்வத்தில் தானே கடவுள். இதனால் தன்னை மட்டுமே அனைவரும் கடவுளாக வணங்கவேண்டும் எனக்கூறி கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்தான்.

இரண்யகசிபுக்கும் (இரணியன்) கயாதுக்கும் மகனாகப் பிறந்தான் பிரகலாதன். அதாவது அவனது மனைவி கர்ப்பம் தரித்த நாள் முதல் நாரத மாமுனி, தாயின் கர்ப்பத்தில் இருந்த குழந்தை பிரகலாதனுக்கு போதித்த ஹரி ஸ்ரீமன் நாராயணன் நாமத்தைக் கேட்டு பிறந்தான். எந்நேரமும் நாராயணன் நாமம் சொல்லி வளர்ந்தான். இதனைக் கண்ட இரணியன் கடும் கோபம் கொண்டான். எவ்வளவு சொல்லியும் தன் நாமம் சொல்லாத பிரகலாதனை, மகன் என்றும் பாராமல் பல வழிகளில் அழித்திட முயன்றான்.

பரந்தாமனின் அருளால் அனைத்திலிருந்தும் தப்பிய பிரகலாதனை நோக்கி எங்கே உன் கடவுள்? எனக் கேட்க, பிரகலாதனோ என் கடவுள், தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் எனக் கூறினான். கோபம் கொண்ட இரணியன் அருகில் இருந்த தூணை தன் கதை கொண்டு தாக்க அதிலிருந்து நரசிம்ம உருக்கொண்டு வெளிப்பட்டார் பரந்தாமன். இரணியனது வரத்தின்படியே, மனிதனாகவோ, தேவராகவோ, விலங்காகவோ இல்லாது அனைத்தும் கலந்த கலவையாய் நரசிம்மமாய் வந்து, இரவோ பகலோ இல்லாத அந்தி நேரத்தில் எவ்வித ஆயுதங்களும் இன்றி தன் நகத்தினால், வீட்டுக்கு உள்ளேயும் இல்லாது, வெளியேயும் இல்லாது  வாசற்படியில் வைத்து அவனை வதம் செய்தார்.

இரணியனின் குருதியைக் குடித்தால் மதி மயங்கி ஆக்ரோஷமானார் நரசிம்மர். இதனால் தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் அனைவருக்கும் பயம் வந்தது. மனைவியாக இருந்தாலும் லட்சுமிக்கும் நரசிம்மர்மேல் பயம் வந்தது. எங்கே தன்னையும் கொன்று விடுவாரோ என பயந்து தேவர்களுடன் எல்லாம் வல்ல ஈசனின் திருவடிகளில் சமர்ப்பணமானார்கள். கருணைக் கடலான ஈசனுக்கு கோபம் வந்தது. இதனால் எட்டுக் கால்களும், நான்கு கைகளும், இரண்டு இறக்கைகளும், கூர்மையான நகங்கள், பற்கள், யாளி முகம் கொண்ட சரபேஸ்வரராக மாறினார். பாதி உருவம் அகோர பறவையாகவும், மீதி உருவம் அகோர மிருகமாகவும் இருந்தது. மாமிச வெறியுடன் கூடிய ஆக்ரோஷத்துடன் சுற்றித்திரிந்த நரசிம்மர் முன் தோன்றினார்.

மிக பயங்கரமான எல்லா மிருகங்களும் இணைந்த உருவம் திடீரென தன் முன் தோன்றியவுடன் நரசிம்மர், தன்னை அழிக்க ஓரு சக்தி வந்திருப்பதாக எண்ணினார். சரபேஸ்வரரோ ஒங்கி “ஹா” என சத்தம் எழுப்பியவுடன் அண்டங்கள் அதிர்ந்தன. மேலோகங்கள் ஆடின, நரசிம்மருக்கு கோபம் போய் பயம் வந்தது. அந்தப் பயத்தினால் சரபேஸ்வரரின் நாராயணனாகி, லட்சுமியுடன் சேர்ந்து ஈசனை வணங்கினார். இவ்வாறு பரம்பொருள் ஈசன் பிரகலாதன் மற்றும் தேவர்களது நடுக்கத்தினை தீர்த்ததால் நடுக்கம் தீர்த்த பெருமான் என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.

விதியை மாற்றும் ஸ்ரீ சரபேஸ்வரர்: ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபட உகந்த நேரம் ராகு காலமாகும். ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுவர்களின் எதிரிகள் அழிக்கப்படுவார்கள். அவர்களின் நோய்கள் நீங்கும். செயல்களில் வெற்றி பெறுவார்கள். எத்தகைய விதியையும் மாற்றும் வல்லமை சரபேசுவரருக்கு உண்டு.

இந்த கலியுகத்தில் மனிதன் தன்னுடைய அபரிதமான அறிவியல் வளர்ச்சியால் ஏற்படுத்திக் கொடுக்கும் எல்லாவிதமான ஆபத்துகளில் இருந்தும் தப்புவதற்கு சரணடைய வேண்டிய ஓரே தெய்வம் ஸ்ரீ சரபேஸ்வரர். இவரை வேதங்கள் அழிக்கும் கடவுளான அக்கினி தத்துவத்துக்கு உரியவராகக் குறிப்பிட்டாலும் நமக்குக் கண்ணுக்குப் புலப்படாத எதிரிகளையும் அழித்து நம்முடைய தன்பங்களை தீர்த்து, தன்னிடம் சரணடைந்தவர்களுக்கு நல்வாழ்வை அமைத்துக் கொடுக்கும் தெய்வம் சரபேஸ்வரர்.

இயற்கையின் சீற்றங்களான நிலநடுக்கம், இடி, புயல், மழை, சூறாவளி, ஆழிப் பேரழிவு, தீவிபத்து, விஷக்கடிகள், மருத்துவத்தால் கைவிடப்பட்ட மாறாத உடல் உபாதைகள் மற்றும் மனவியாதிகள் என்று தீராத துன்பம் தர முயலும் கொடிய தரித்திரங்களும் சரபரை வழிபடும் பக்தனைத் தாக்காமல் விட்டு ஒடிவிடும்.

இப்படி விதியையே புரட்டிப்போட்டு நல்லதை செய்யும் சக்தி சரபேஸ்வரருக்கு மட்டுமே உண்டு. எதிரிகள் குலநாசம், பில்லி,சூனிய ஓழிப்பு, மரண பயம் அகலுதல், நீடித்த ஆயுள், எந்த வியாதியும் நெருங்காத சூழ்நிலை என்று பாதுகாப்பு வளையங்களாக சரபேஸ்வரர் வழிபாடு திகழ்கிறது. மேலும் இவரை “நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி” என்றும் குறிப்பிடுகின்றனர். தற்சமயம் காணப்படும் சரபர் மூர்த்தங்கள் யாவும் பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை எனவும், பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம், திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள கோயில்களில் சரபேஸ்வரரின் சிற்பங்கள் காணப்படுகிறது.

தீராத கடன் தொல்லைகள் தீர, பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றிலிருந்து விடுபட, வழக்குகளில் வெற்றி பெற, கும்பகோணத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில், மயிலாடுதுறை வழித்தடத்தில் அமைந்துள்ள "திருபுவனம்" சென்று அங்கு தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் "சரபேஸ்வரரை" வழிபடலாம். பறவை, விலங்கு, மனிதம் என மூன்று வடிவங்களை கொண்ட சரபர் சிவன், காளி, துர்க்கை மற்றும் விஷ்ணு என நான்கு கடவுளரின் ஒருமித்த ரூபம். வேண்டுவோரின் சங்கடங்கள் தீர்ப்பவர். துயர் துடைப்பவர். சூலினி, பிரத்தியங்கரா என இரு தேவியருடன் காட்சி தரும் சரபரை 11 விளக்கு, 11 சுற்று, 11 வாரம் என தரிசனம் செய்ய வழிபடுபவரது சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். ஞாயிற்று கிழமைகளின் ராகு காலவேளை சரபர் வழிபாட்டிற்கு மிகச்சிறந்த நேரம்.


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||