ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

வறுமை நீங்கி வளமுடன் வாழ மஹா கணேசாஷ்டகம்


கடினமாக உழைத்தும், ஒழுக்கத்துடன் இருந்தும், கடவுளின் மீது பக்தியுடன் இருந்தும் நமக்குக் கஷ்டங்கள் தீராதிருக்கும். இவ்வாறு பிரச்சனைகளுடன் தொடர்ந்து வாழ்ந்து வருபவர்கள், நிம்மதியான வாழ்வு பெற கீழ்க்கண்ட ஸ்லோகங்களை, நாள்தோறும் விநாயகருக்கு முறைப்படி பூஜைகள் செய்து பாராயணம் செய்து வந்தால் நற்பலன்கள் கிட்டும். விநாயகரை வழிபடும் போது மோதகம், அவல்பொரி, அப்பம், அதிரசம், விளாம்பழம் போன்றவற்றை நிவேதனமாக வைத்து அருகம்புல்லைக் கொண்டு அர்ச்சனை செய்து இச்சுலோகங்களைப் பாராயணம் செய்தால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.


ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம்
லம்போதரம் விசாலாக்ஷம் வந்தே அஹம் கணநாயகம்

மௌஞ்சி கிருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோப வீதினம்
பாலேந்து விலஸன் மௌலிம் வந்தே அஹம் கணநாயகம்

அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி பரிபாலிதம்
பக்த ப்ரியம் மதோன்மத்தம் வந்தே அஹம் கணநாயகம்

சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம்
சித்ரரூபதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்

கஜவக்த்ரம் ஸுரச்ரேஷ்டம் கர்ணசாமர பூஷீதம்
பாசாங்குச தரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்

மூஷிகோத்தம ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே
யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே அஹம் கணநாயகம்

யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை ஸதா
ஸ்தூயமானம் மஹபத்மானம் வந்தே அஹம் கணநாயகம்

ஸர்வவிக்ன ஹரம் தேவம் ஸர்வவிக்ன விவர்ஜிதம்
ஸர்வஸித்திப் ப்ரதாதாரம் வந்தே அஹம் கணநாயகம்

கணாஷ்டகம் இதம் புண்யம் பக்திதோ: ய: படேந்நர
விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரோம் ஸகச்சதி.

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

திருவாதிரை தரிசன பாராயணம்

மார்கழி திருவாதிரையன்றும், ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நட்சத்திரங்களிலும் நடராஜப் பெருமானை வணங்குவதற்குரிய பிரார்த்தனை சித்சபேச தசகம் என்ற நூலில் இருந்து தரப்பட்டுள்ளது. பக்தியோடு இதை பாராயணம் செய்பவர்கள் எல்லாவித நன்மைகளையும், யோகபலனும் பெறுவார்கள்.


01. பிரகாசம் பொருந்திய சித்சபையின் தலைவரும், தில்லைவாசிகளாலும், வேதபண்டிதர்களாலும் வணங்கப்படும் திருப்பாதங்களைக் கொண்ட நடேசப்பெருமானை நான் துதிக்கிறேன்.

02. ஒரு பாதத்தை மேலே தூக்கி நின்று ஆடுபவரும், காலனைச் சம்ஹாரம் செய்த காலகாலனும், வணங்கும் அன்பர்களைக் காக்க சூலம் தாங்கி நிற்பவரும், மனக்கவலைகளைப் போக்கி அருள்செய்பவரும், கருணையே வடிவானவரும், கபாலம் ஏந்தி நிற்பவருமான சிதம்பரப் பெருமானைப் போற்றுகிறேன்.

03. நெற்றியில் ஒளிவீசும் கண்களைக் கொண்டவரும், வியாக்ரபாதர், பதஞ்சலி போன்ற மகரிஷிகளால் வில்வம் போன்ற பூஜாதிரவியங்களால் அர்ச்சிக்கப்படுபவரும், ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளைத் தோழனாகக் கொண்டவரும், புலித்தோலினைத் தன் ஆடையாக உடுத்தவரும், பவானியான சிவகாமி அன்னையைத் தன் மனைவியாகப் பெற்றவரும் ஆகிய சிற்றம்பல நடராஜப் பெருமானை வணங்கி மகிழ்கிறேன்.
                  
04. கண்ணிலிருந்து புறப்பட்ட தீக்கணையால் மன்மதனைத் தகனம் செய்தவரும், ஊன்றிய திருவடியில் அபஸ்மாரனை அழுத்தி நிற்பவரும், கழுத்தில் சர்ப்பங்களை மாலையாகப் அணிந்தவரும், வேதங்களின் சொரூபமாகத் திகழ்பவரும், ஆசையே இல்லாதவரும், ஒளிவீசும் ஜடாமுடியைத் தாங்கி நிற்பவருமான தில்லை நடராஜப்பெருமானுக்கு தலை வணங்குகிறேன்.

05. திருவாதிரை நன்னாளில் அபிஷேகம் காண்பவரும், அழகிய உருவம் கொண்டவரும், சந்தனம், திரவிய அபிஷேகத்தால் மனம் மகிழ்பவரும், மனக்கவலையைத் தீர்க்கும் மகாபிரதோஷ புண்ணிய வேளையில் பூஜிக்கப்படுபவரும், பிரம்மா, விஷ்ணு, நந்திகேசர், நாரதர், இந்திரன் மற்றும் தேவர்களுடன் நர்த்தனம் புரிபவருமான சபாபதியைப் போற்றுகிறேன்.

06. எந்த இறைவனை வணங்கினால் பரிசுத்தமான மனத்தைப் பெறுகிறோமோ, விபூதி, ருத்ராட்சம் அணிந்து எந்தப் பெருமானை வணங்கினால் பரிசுத்தம் அடைகிறோமோ, மாணிக்கவாசகர் போன்ற சிறந்த பக்தர்கள் எல்லாம் யாரைப் போற்றித் துதித்தார்களோ, அந்த தில்லை அம்பலவாணரை வழிபடுகிறேன்.
                
07. எந்தச் சன்னதியை முன்ஜென்மத்தில் செய்த புண்ணிய வினைகளால் தரிசிக்க இயலுமோ, எந்த இறைவனிடம் சர்க்கரைப் பொங்கல் போன்ற நிவேதனங்களை பரப்பி வழிபட்டால் கோரிய பலன் நிறைவேறுமோ, எந்த மூர்த்தியை துறவிகளும், ஞானிகளும் நித்தமும் தியானித்து மகிழ்கிறார்களோ அந்த சிற்றம்பலப் பெருமானை சேவிக்கிறேன்.

08. சிறந்த திருவாக்கினைக் கொண்டவரும், பக்தர்களின் பாவங்களை போக்கி அருள்பவரும், யாகங்களைக் காப்பவரும், வேதங்களை உபதேசித்தவரும், பர்வதராஜ குமாரியான உமையவளிடம் விளையாடி மகிழ்பவரும், சிதம்பர ரகசியமாகத் திகழ்பவருமான கனகசபாபதி பெருமானைச் சரணடைகிறேன்.

09. பூதங்களின் தலைவனான நடராஜ மூர்த்தியே! நீரே என் வாழ்வில் உண்டாகும் இன்னல்களைப் போக்கி அருள்செய்ய வேண்டும். சாதுக்களுக்கும், நல்லவர்களுக்கும் உண்டாகும் மனபயத்தை நீயே போக்கி துணை நிற்க வேண்டும். சபேசனே! உமது திருவடிகளை அடைக்கலம் புகுந்து நிற்கிறேன்.
                 
10. பிறவிப்பயனை அருள்செய்பவரும், மோட்சத்தை தந்தருள்பவரும், நம் வாழ்வில் இன்பங்களைச் சேர்ப்பவரும், தலையில் புண்ணிய மிக்க கங்கையினை தாங்கி நிற்பவருமான நடராஜப் பெருமானை போற்றுகின்றேன்.

மார்கழி மாத திருவாதிரை நாளில் தொடங்கி ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நாளில் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். அதிகாலையில் சிவாலயம் சென்று நடராஜரை தரிசனம் செய்ய வேண்டும். விரதநாளில் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் படிக்க வேண்டும். சுவாமிக்கு களி, தயிர்ச்சாதம், சுண்டல் நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

காமிகா ஏகாதசி (ஆவணி மாதம் கிருஷ்ண பட்சம்)

ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன.

சிராவண மாதம் கிருஷ்ண‌ பட்சத்தில்(தேய்பிறை) வரும் ஏகாதசி திதியை காமிகா ஏகாதசியாக கொண்டாடுவர். காமிகா ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம்.


மஹான்களைப் போன்று புண்ணியசீலரான யுதிஷ்டிர மஹாராஜா ஸ்ரீ கிருஷ்ணரிடம் "மேலான பரம்பொருளே! ஆஷாட மாத சுக்ல பட்சத்தில் வரும் புண்ணிய திதியான தேவசயனி ஏகாதசியைப் பற்றியும், அந்நாளில் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பதால் கிட்டும் ஒப்பற்ற பலன்களை பற்றியும் அறிந்து கொண்டேன். இப்பொழுது சிராவண மாதத்தின் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியைப்பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஆகையால் கோவிந்தா, என் மீது கருணை கொண்டு, அந்த ஏகாதசியின் பெருமைகளை விரிவாக சொல்லுங்கள். முதன்மையான தெய்வமே, வாசுதேவா! எனது பணிவான நமஸ்காரங்களை தங்களது திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்" என்று கூறினார்.

ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கு பதிலளிக்கையில் "தர்மத்தை எந்நிலையிலும் விடாது காக்கும் யுதிஷ்டிரா, ஒருவனது பாபங்களை எல்லாம் அழித்து சுப விளைவுகளை ஏற்படுத்தும் ஏகாதசி உபவாசத்தின் மகிமையை சொல்கிறேன். கவனமாக கேள்." என்று கூறிவிட்டு பின்வருமாறு கூறலாயினார்.

"ஒரு முறை நாரத ரிஷியும் பிரம்மாவிடம் இந்த ஏகாதசியின் மஹாத்மியத்தை பற்றி எடுத்துச்சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். நாரதர் தனது தந்தையான பிரம்மாவை நோக்கி, "தண்ணீரில் பிறக்கும் தாமரை மலரின் மீது, அரசன் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதை போல் காட்சி அளிப்பவரே, அனைத்து உயிர்களையும் படைக்கும் வல்லமை பெற்றவரே" மைந்தனான எனக்கு சிராவண மாதத்தின் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் பெயர் என்ன,  அப்புண்ணிய தினத்தன்று வழிபட வேண்டிய கடவுளைப் பற்றியும், கடைப்பிடிக்க வேண்டிய விரத வழிமுறைகளையும், விரதத்தை மேற்கொள்ளுவதால் கிட்டும் நற்பலன்களையும் விரிவாக எடுத்துச் சொல்லுங்கள் என்று வேண்டிக் கொண்டார்.

பிரம்மா அதற்கு பதிலளிக்கையில், என் அருமை மகனே, நாரதா! இவ்வுலகத்தின் நலனுக்காக நீ தெரிந்து கொள்ள விரும்பிய அனைத்தை பற்றியும் உனக்கு விரிவாக எடுத்துச் சொல்லுகிறேன். கவனமாக கேள். சிராவண மாதத்தில் வரும் கிருஷ்ண பட்ச ஏகாதசி காமிகா ஏகாதசி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. மிகவும் புண்ணியமானது. காமிகா ஏகாதசியின் மஹத்துவம் சொல்லில் அடங்காதது. இவ்ஏகாதசியின் மஹாத்மியத்தை வெறும் காதால் கேட்பவர்களே, அஸ்வமேதயாகம் நடத்திய பலனை பெறுவர் என்றால் இதன் பெருமையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகிய நான்கு திவ்ய ஆயுதங்களையும் தன் நான்கு திருக்கரங்களில் ஏந்தி கதாதாரன் என்னும் திருநாமத்தாலும், ஸ்ரீ தரன், ஸ்ரீ ஹரி, ஸ்ரீ விஷ்ணு, மாதவன், மதுசூதனன் என்னும் மற்ற திருநாமங்களாலும் போற்றப்படும் மஹாவிஷ்ணுவை வணங்குவோருக்கும், அவரது பாதாரவிந்தங்களே சரணாகதி என்று தியானிப்போருக்கும் நிச்சயமாக பெரும் நற்பலன்கள் கிட்டும். 

காமிகா ஏகாதசியன்று மஹாவிஷ்ணுவிற்கு செய்யப்படும் பூஜை, ஆராதனை ஆகியவை ஒருவருக்கு, புண்ணிய க்ஷேத்ரமான காசியின் கங்கையில் நீராடுதல், நைமிசாரண்ய வனத்தில் நீராடி வழிபடுதல் அல்லது புவியில் என்னை மூலவராக கொண்ட புஷ்கர திருத்தலத்தில் நீராடி வழிபடுதல் ஆகியவற்றினால் கிடைக்கக்கூடிய அருளாசிகளை விட பன்மடங்கு மேலான புண்ணியத்தையும், அருளையும் பெற்றுத் தரக்கூடியது.

பனி சூழ் இமாலயத்தில் அமைந்துள்ள கேதார்நாத் சென்று, பிரபு கேதாரநாதரின் தரிசனம் அல்லது சூரிய கிரகணத்தின் போது குருக்ஷேத்ரத்தில் புண்ணிய நீராடுதல் அல்லது பூமியைத் தானமாக அளிப்பதால் கிட்டும் புண்ணிய பலன், அல்லது பூஜைக்குரிய விஷ்ணு மூர்த்திகளாக கருதப்படும் சாளிக்கிரமங்களை தன்னகத்தே கொண்ட தெய்வீக நதியான கண்டகீ நதியில் நீராடுதல், அல்ல‌து சிம்மராசியில் குரு பகவான் கோட்சாரம் செய்யும் காலம், சோமவார பூர்ணிமா தினத்தன்று கோதாவரி நதியில் நீராடுதல், இவை அனைத்தையும் செய்வதால் கிட்டும் நற்பலனை விட சிராவண மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் காமிகா ஏகாதசி விரதத்தை அதற்குரிய வழிமுறைப்படி மேற்கொள்ளுவதுடன், அன்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை ஆராதனையுடன் வழிபடுவது மிக அதிக நற்பலன்களை அருளும்.

காமிகா ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பதால் கிடைக்கும் நற்பலனானது, பால் சுரக்கும் பசுவை கன்றுடனும், தீவனங்களுடனும் தானமாக அளிப்பதால் கிடைக்கும் நற்பலனுக்கு சமமானது. சுபமான காமிகா ஏகாதசி தினத்தன்று ஸ்ரீ தரன் என்னும் திருநாமத்தைக் கொண்ட மஹாவிஷ்ணுவை வணங்குபவரின் பக்தியை தேவர்களும், கந்தர்வர்களும், நாகர்களும், பந்நாகர்களும் மெச்சுவர்.

கடந்த பிறவியின் பாபங்களைக் கண்டு அஞ்சுபவரும், இப்பிறவியில் பாபங்களை விளைவிக்கும் ஆதாயகரமான வாழ்க்கையில் மூழ்கி இருப்பவரும், தங்களால் இயன்ற அளவிற்கு இந்த காமிகா ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து தம் பாபங்களிலிருந்து விடுதலை பெறலாம். காமிகா ஏகாதசி தினமானது அனைத்து தினங்களையும் விட மிகவும் பவித்ரமான நாளாகும். ஆகையால் அன்று விரதம் மேற்கொள்ளுதல் அனைத்து பாபங்களையும் அழிக்கும் சக்தி கொண்டதாக உள்ளது.

நாரதா! ஸ்ரீ ஹரியே இந்த ஏகாதசி தினத்தைப் பற்றி கூறும் போது "காமிகா ஏகாதசியன்று விரதத்துடன் உபவாசம் இருப்பதால் கிட்டும் புண்ணியம், பக்தி இலக்கியங்கள் அனைத்தையும் படிப்பதால் கிட்டும் புண்ணியத்தை விட பன்மடங்கு மேலானது" என்று அருளியுள்ளார். காமிகா ஏகாதசியன்று விரத வழிமுறைகளின் படி உபவாசம் இருந்து, இரவில் கண் விழித்து ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் மகிமையை விளக்கும் புராணங்களை பாராயணம் செய்பவர் யமதர்மராஜனின் கோபத்துக்கு ஒரு போதும் ஆளாக மாட்டார்.

பவித்ரமான காமிகா ஏகாதசி தினத்தன்று உபவாசத்துடன் விரதத்தை கடைப்பிடிப்பவர் தன் பிறப்பு இறப்பு என்னும் மாயசக்ரத்திலிருந்து விடுபட்டு மறுபிறப்பில்லா நிலையை அடைவர் என்பது நிச்சயம். கடந்த காலத்திலும், நிறைய தவசிகளும், யோகிகளும் இந்த காமிகா ஏகாதசி தினத்தன்று விரதம் மேற்கொண்டு மிக உயர்ந்த ஆன்மீக நிலையினை அடைந்துள்ளனர். ஆகவே, அவர்கள் காட்டிய நல்ல வழியை பின்பற்றி நாமும் அன்று உபவாசம் இருந்து விரதம் அனுஷ்டிப்பது மிக நல்லது.

அன்று ஸ்ரீ ஹரியை துளசி தளங்களுடன் (இலைகளால்) வணங்குவோர் த‌ம் பாபத்தின் விளைவுகளிலிருந்து விடுபடுவர். மேலும் எப்படி தாமரை இலையானது தண்ணீரில் இருந்தாலும் தண்ணீருடன் தொடர்பு இல்லாமல் இருக்கிறதோ, அதே போல் அவர்க‌ள் பாபங்கள் தீண்டாமல் வாழ்வார். ஸ்ரீ ஹரிக்கு அன்று பவித்ரமான ஒரு துளசி தளத்தை (இலையை) சமர்ப்பித்து பூஜிப்பவர் அடையும் புண்ணியமானது, ஒருவர் இருநூறு கிராம் தங்கம் மற்றும் எண்ணூறு கிராம் வெள்ளியை தானம் செய்வதால் அடையும் புண்ணியத்திற்கு சமமானது.

முத்து, பவளம், மாணிக்கம், புஷ்பராகம், வைரம், வைடூரியம், கோமேதகம் போன்ற விலை மதிப்பில்லாத கற்களினால் செய்யப்படும் பூஜையை விட, பவித்ரமான துளசி இலைகளால் செய்யப்படும் பூஜையானது பகவான் மஹாவிஷ்ணுவிற்கு மிகுந்த ப்ரீதியை அளிக்கிறது. புதிதாக தோன்றிய மலர்களுடன் (மஞ்சரி மொட்டுகள்) கூடிய துளசியை பகவான் கேசவனுக்கு சமர்ப்பிப்பவர் இப்பிறவி மட்டுமல்லாது, தன் முந்தைய  பிறவியின் பாபங்களும் நீங்கப் பெறுவர்.

மேலும், காமிகா ஏகாதசியன்று துளசி தேவியை தரிசனம் செய்பவர் தம் பாபங்கள் அழியப் பெறுவர். அன்று துளசி தேவி இருப்பிடமான துளசி செடியை தொட்டு வணங்குதல், பிரார்த்தனை செய்தல் ஆகியவை ஒருவருடைய நோய் நொடிகளிலிருந்து அவருக்கு நிவர்த்தி அளிக்கும். அன்று, துளசி செடிக்கு நீர் ஊற்றுபவர் எக்காலத்திலும் யமதர்ம ராஜனைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. அன்று துளசி செடியின் சிறிய நாற்றினை நடுபவர் அல்லது மாற்று நாற்று (பதியன்) செய்பவர், தம் வாழ்நாள் முடிவில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்தை அடைவர். தினமும் துளசி தேவியை பூஜித்து ஆராதித்தால் நமது பக்தியின் சேவையினால் மோட்சப் பிராப்தியை அடையலாம்.

துளசி தேவிக்கு தினம் அணையாமல் எரியும் நெய் விளக்கேற்றி பூஜிப்பவரின் புண்ணியக் கணக்கை யமதர்ம ராஜனின் சித்ர குப்தனாலும் கணக்கிட இயலாது. பவித்ரமான இந்த காமிகா ஏகாதசி தினமானது பகவானுக்கு மிகவும் பிரியமான நாளாகும். ஆகையால் அன்று முன்னோர்கள் அனைவரும் நெய் விளக்கேற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு ஸ்வர்க்கத்தை அடைந்து அமிர்தத்தை அருந்தும் பாக்கியம் பெற்றனர். அன்று எவரொருவர் நெய் அல்லது எள் எண்ணையினால் (நல்லெண்ணை) விளக்கேற்றி ஸ்ரீ கிருஷ்ணரை பூஜித்து ஆராதிக்கிறாரோ, அவர் தன் பாபங்களிலிருந்து விடுதலை பெற்று, முடிவில் சூரியனின் வாசஸ்தலமான சூரியமண்டலத்தை பத்து மில்லியன் விளக்குகளின் பிரகாசத்திற்கு சமமான பிரகாசமான உடலுடன் அடைவர்.

இந்த ஏகாதசியானது மிகவும் பவித்ரமானது மட்டுமல்லாமல் மிகவும் சக்தி பெற்ற நாளும் ஆகும். இந்நாளில் உபவாசம் இருக்க் இயலாதோர், இங்கு குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினாலே, தங்கள் முன்னோர்களுடன் ஸ்வர்க்கம் அடைவர், "இவ்வாறு பிரம்ம தேவர் கூறினார்". இதைக் கூறிய‌ ஸ்ரீ கிருஷ்ணர் யுதிஷ்டிரரிடம் "யுதிஷ்டிரா, மஹாராஜனே, பாவங்களை நீக்கி, எண்ணில்லாத பலன்களை வழங்கும் காமிகா ஏகாதசியின் பெருமைகளை, பிரஜாபதி பிரம்மா தனது புதல்வன் நாரதருக்கு உரைத்ததை அப்படியே நான் உனக்கு உரைத்துள்ளேன்..

இப்புனித காமிகா ஏகாதசி விரதமானது பிராமணனை கொன்றதால் உண்டான பாவம் (பிரம்மஹத்தி), கருவில் வளரும் குழந்தையை அழித்த பாவம் போன்ற கொடிய பாவங்களிலிருந்து நிவர்த்தி அளிக்கும் பேறு பெற்றது. இவ்விரதம் அதிக புண்ணியத்தை அளிக்க வல்லது. எனவே, இவ்விரதத்தைக் கடைபிடிப்போர் பக்தி யோகத்தில் சிறந்து விளங்குவர்.

அப்பாவிகளை கொல்வதால் உண்டாகும் பாவங்கள் அதாவது பிரம்மஹத்தி தோஷம், சிசு ஹத்தி தோஷம், பக்திமான் மற்றும் களங்கமில்லாத பெண்ணைக் கொன்ற பாவங்களின் விளைவுகளிலிருந்து காமிகா ஏகாதசியின் மஹாத்மியத்தை கேட்பதால் நிவர்த்தி பெறலாம். ஆனால் இதைக் கொண்டு ஒருவர் முதலில் கொலைப் பாதகம் புரிந்து விட்டு பின்னர் காமிகா ஏகாதசியின் மஹாத்மியத்தை கேட்பதால் நிவர்த்தி பெறலாம் என்று நினைக்கக் கூடாது. அது தவறானது. அறிந்தே கொலை பாதகம் போன்ற கொடிய பாவங்களைப் புரிவதற்கு எந்த் சாஸ்திரத்திலும் மன்னிப்பே கிடையாது என்பதை ஞாபகத்தில் இருத்தவும். என்றார்.

எவரொருவர் பவித்ரமான இந்த காமிகா ஏகாதசியின் பெருமையை விவரிக்கும் மஹாத்மியத்தை பக்தியுடனும், சிரத்தையுடனும, நம்பிக்கையுடனும் கேட்கிறாரோ, அவர் தன் பாபங்களிலிருந்து விடுபட்டு மஹாவிஷ்ணுவின் வாசஸ்தலமான விஷ்ணுலோகம் எனப்படும் வைகுந்தத்தை அடைவர். ப்ரம்ஹ வைவர்த்த புராணம், சிராவண மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி அதாவது காமிகா ஏகாதசி என்று அழைக்கப்படும் ஏகாதசியின் மஹிமையை விவரிக்கும் படலம் முடிவுற்றது.

நன்றி : Kshetra Yaatra

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||

|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||

ஆண்டு முழுவதும் வரும் ஒவ்வொரு ஏகாதசி விரதங்கள்

ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும், வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும்.


01 சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி, "காமதா ஏகாதசி" என்றும் தேய்பிறையில் வரும் ஏகாதசி "பாப மோகினி ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரு ஏகாதசியிலும் விரதம் இருப்பவர்களுக்கு, அவர்கள் விரும்பிய அனைத்து பேறுகளும் கிடைக்கப் பெறும்.

02 வைகாசி மாத வளர்பிறை தினத்தில் வரும் ஏகாதசி "மோகினி ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசி "வருதித் ஏகாதசி" என்றும் கூறப்படுகிறது. இந்த ஏகாதசி காலங்களில் விரதம் இருப்பவர்கள் அனைவரும், இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசனம் செய்து வந்ததற்கான பலனை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.
        
03 ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி "நிர்ஜலா ஏகாதசி" என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி "அபார ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசிகளில் தங்கள் விரதத்தை மேற்கொள்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.

04 ஆடி மாதத்து வளர்பிறை ஏகாதசி "சயனி ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசி "யோகினி ஏகாதசி" என்றும் பெயர் பெற்றுள்ளது. இந்த ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கியதற்கு நிகரான பலன்கள் கிடைக்கப்பெறும்.

05 ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியானது "புத்ரஜா ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசியானது "காமிகா ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி தினங்களில் விரதம் இருந்தால் மக்கட்பேறு கிடைக்கப்பெறுவார்கள்.
        
06 புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி "பத்மநாபா ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசி "அஜா ஏகாதசி" என்றும் பெயர் பெற்றது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை வளரும்.

07 ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி "பாபாங்குசா ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசி "இந்திரா ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசியில் விரதம் இருப்பதால், வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பிணி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.

08 கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி "பிரபோதின ஏகாதசி" எனப்படும். இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் இருபத்தியோரு தானம் செய்ததற்கான பலனும், தேய்பிறை ஏகாதசியான "ரமா ஏகாதசி" தினத்தில் இறைவனுக்கு பழங்களை கொண்டு நைவேத்தியம் செய்தால் மங்கள வாழ்வு கிடைக்கும்.
        
09 மார்கழி மாத ஏகாதசி "வைகுண்ட ஏகாதசி" என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இம்மாதம் மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு பெறுகிறது. இந்த மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி "உத்பத்தி ஏகாதசி" எனப்படுகிறது.

10 தை மாத வளர்பிறை ஏகாதசி "புத்ரதா ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசி "சுபலா ஏகாதசி" என்றும் பெயர் பெறும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம், ஒளிமயமான வாழ்வு அமையும்.

11 மாசி மாத வளர்பிறை ஏகாதசி "ஜெயா ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசி "ஷட்திலா ஏகாதசி" என்றும் அழைக்கப்படும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருப்பவர்கள், மூதாதையர்களின் முக்திக்கான வழியை பெறுவார்கள்.
        
12 பங்குனி மாத தேய்பிறை ஏகாதசி "விஜயா ஏகாதசி" எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கு முறையில் கலசத்தில் வைத்து மஹாவிஷ்ணுவை பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறுவீர். வளர்பிறை ஏகாதசி "ஆமல கிஏகாதசி" எனப்படும். இன்று விரதம் இருப்பவர்களுக்கு ஆயிரம் பசுதானம் செய்த பலன் கிடைக்கும்.

"ஆண்டில் கூடுதலாக வரும் ஏகாதசி "கமலா ஏகாதசி" எனப்படும். அன்று மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பு.

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||

|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||

புதன், 16 ஆகஸ்ட், 2017

ஒருத்தி மகனாய்ப் பிறந்து... ஒருத்தி மகனாய் வளர்ந்த... உள்ளங்கவர் கள்வன்

ஆவணி மாதம், ரோகிணி நட்சத்திரம் கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில், இரவு 12.00 மணியளவில், மதுரா சிறைச்சாலையில், வசுதேவர் - தேவகி தம்பதியருக்கு எட்டாவது குழந்தையாக கண்ணன் அவதரித்தான். அவதாரம் என்ற வடமொழிச் சொல்லுக்கு கீழே இறங்கி வருதல் எனப் பொருள். இப்படி மகாவிஷ்ணு நீதியை நிலை நாட்டும் பொருட்டும், கம்சனை வதம் செய்யும் பொருட்டும் இப்பூவுலகில் அவதரித்தார்.


கண்ணன் அவதரித்த ஆவணி அஷ்டமி நன்னாளைத்தான் கோகுலாஷ்டமியாக இமயம் முதல் குமரி வரை அனைவரும் கொண்டாடுகின்றனர். கண்ணன் பிறந்தது மதுரா என்ற வடமதுரை; கண்ணன் வளர்ந்தது ஆயர்பாடியான கோகுலம். இவ்விரு தலங்களும் யமுனையின் எதிரெதிர் கரையில் அமைந்துள்ளன. ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஆனவன் கிருஷ்ணன்.

துவாபர யுகத்தில் இராமயண காலத்தில் உருவான ஊர் மதுரா. இங்கு யது வம்ச போஜகுலத்தில், உக்ரசேன மன்னனின் மகனாக கம்சன் பிறந்தான். இவன் தன் தந்தையையே சிறை வைத்து, அரசை தானே ஆண்டு வந்த கொடியவன். இவனுக்கு கம்சை, தேவகி என்ற இரு தங்கைகள். தேவகி மீது கம்சன் மிகுந்த பாசம் வைத்திருந்தான்.

வசுதேவருக்கு தேவகியை மணம் முடித்து இருவரையும் தன் தேரில் ஏற்றிக் கொண்டு தானே ஓட்டி வந்தான் கம்சன். அப்போது வானில் அசரீரி, "கம்சா! தேவகியின் எட்டாவது மகன் உன்னைக் கொல்வான்'' என்றது. ஆத்திரமடைந்த கம்சன் தேவகியைக் கொல்ல முயல, அவனை வசுதேவர் தடுத்தார். "கம்சா! தேவகியின் எட்டாவது மகன் தானே உன்னைக் கொல்வான்? நாங்கள் எங்களுக்குப் பிறக்கும் எல்லா குழந்தைகளையும் உன்னிடம் தந்துவிடுகிறோம் தேவகியை விட்டுவிடு'' என்று மன்றாடினார். அதை ஏற்றுக்கொண்ட கம்சன் இருவரையும் மதுரா சிறையில் அடைத்தான்.

வசுதேவர் - தேவகி தம்பதியருக்குப் பிறந்த குழந்தைகளை இரக்கமின்றிக் கொன்று தீர்த்தான் கம்சன். இவ்வாறு ஆறு குழந்தைகள் கொல்லப் பட்ட நிலையில், தேவகி ஏழாவது முறை கருவுற்றாள். கரு ஏழு மாதங்கள் வளர்ந்திருந்த நிலையில், அது மாயையின் உதவியால் கோகுலத்திலிருந்த வசுதேவரின் முதல் மனைவி ரோகிணியின் வயிற்றுக்கு மாற்றப்பட்டது. அந்தக் குழந்தையே பலராமன். (கரு கலைந்துவிட்டதாக கம்சனிடம் கூறிவிட்டனர்).

அடுத்து எட்டாவது முறையாக சூலுற்ற தேவகி, அஷ்டமி திதியில் நள்ளிரவு 12.00 மணிக்கு கண்ணனை ஈன்றெடுத்தாள். அந்த நேரத்தில் மாயையின் பிடியில் சிக்கி மதுராவிலிருந்த அனைவருமே உறங்கிக் கொண்டிருந்தனர். வசுதேவர், தேவகி, சந்திரன் ஆகிய மூவர் மட்டுமே விழித்திருந்தனர்.

மகாவிஷ்ணு உணர்த்தியபடி, வசுதேவர் குழந்தையை ஒரு கூடையில் வைத்துக்கொண்டு யமுனைக் கரைக்குச் சென்றார். அப்போது மழை பொழிய, ஆதிசேஷன் குடைபிடித்தபடி அவர்கள் பின் சென்றது. யமுனை நதி இரண்டாகப் பிளந்து வழிவிட, வசுதேவர் அக்கரையிலிருந்து ஆயர்பாடியான கோகுலம் சேர்ந்தார். அங்கே நந்தகோபரின் மனைவி யசோதையின் அருகே குழந்தையை வைத்துவிட்டு, யசோதைக்குப் பிறந்திருந்த பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு சிறைச்சாலை வந்து சேர்ந்தார்.

அப்பொழுது மாயை விலக, அனைவரும் கண் விழித்தனர். குழந்தையின் அழுகுரல் கேட்டு, செய்தி கம்சனுக்குத் தெரிவிக்கப்பட்டது. தன்னை அழிப்பதற்காகப் பிறந்திருக்கும் குழந்தை இதுதானே என்று ஆக்ரோஷமாகப் புறப்பட்டு வந்த கம்சன், பெண் குழந்தையென்றும் பாராமல் அதைக் கொல்ல முயல, அவன் பிடியிலிருந்து விலகி அந்தரத்தில் நின்று சிரித்த குழந்தை "கம்சா! உன்னைக் கொல்லப் பிறந்தவன் கோகுலத்தில் வளர்கிறான்'' என்று கூறி மறைந்துவிட்டது. அது காளி தேவி.


பெருங்கோபம் கொண்ட கம்சன் தன் அசுரப் படைகளை அழைத்து, எந்த வடிவிலாவது சென்று கண்ணனைக் கொன்றுவிடுமாறு கட்டளையிட்டான். வண்டிச் சக்கரமாக வந்த சகடாசுரன், கடத்த வந்த தீப்திகன், பாலூட்ட வந்த பூதகி, கொக்காக வந்த பகன், பாம்பாக வந்த ஆகா சுரன், கழுதையாக வந்த தேனுஜன், இடையர்களாக வந்த பிரம் பலன் - வியோமன், காளையாக வந்த அரிஷ்டன், குதிரையாக வந்த கேசி என பலரும் வஞ்சகமாக கண்ணனைக் கொல்ல வந்தனர். அத்தனை பேரையும் குழந்தைக் கண்ணன் விளையாட்டாகக் கொன்றான். காளிங்கனை மட்டும் அடக்கி மன்னித்துவிட்டான்.

கண்ணனுக்கு இப்படி பல இடையூறுகள் வருவதைக் கண்ட ஆயர்பாடியினர் ஐந்து வயதான கண்ணனை அழைத்துக்கொண்டு பசுக் கூட்டங்களுடன் பிருந்தாவனம் சென்று விட்டனர். எவ்வளவு முயன்றும் கண்ணனைக் கொல்ல முடியவில்லையே என்று ஆத்திரமுற்ற கம்சன், வேறொரு உபாயம் செய்தான். அதன்படி கண்ணனை தன் அரண்மனைக்கே வரவழைத்தான். அரண்மனை வாயிலில் ஒரு யானையிடம் இரும்பு உலக்கையைக் கொடுத்து, அதைக் கொண்டு கண்ணனைக் கொல்ல ஏற்பாடு செய்திருந்தான். ஆனால் பலராமனும் கண்ணனும் அந்த யானையையே கொன்று விட்டனர்.

பிறகு சானுகன், கூடன், சலன், முஷ்டிகன், தோகலன் என்னும் மல்யுத்த வீரர்கள் ஐவரை அனுப்பினான் கம்சன். அவர்களையும் கொன்றான் கண்ணன். இதைக் கண்டு பெருஞ்சினங்கொண்ட கம்சன் தன் படை வீரர்களை நோக்கி, "இந்த இரு பயல்களையும் உடனே கொல்லுங்கள். அத்துடன் சிறையிலுள்ள வசுதேவன், தேவகி, உக்கிரசேனன் என எல்லாரையும் கொல்லுங்கள்!'' என்று கர்ஜித்தான். அதைக்கேட்ட கண்ணன் சிம்மாசனத்திலிருந்த கம்சனை இழுத்து தரையில் கிடத்தி, அவன் மீது ஏறி அமர்ந்து, தன் கைகளால் கம்சனின் மார்பில் குத்தியே கொன்றான்.

அதன் பின்னர் கம்சனின் தந்தையும் கண்ணனின் தாத்தாவுமான உக்கிரசேனர் அரியணை ஏறினார். பலராமனுக்கும் கண்ணனுக்கும் உபநயனம் செய்வித்து, சாந்திபணி என்ற குருவிடம் குருகுலக் கல்விக்கு அனுப்பி வைத்தார் உக்கிரசேனர். அங்கு 64 கலைகளையும் கற்ற அவர்கள், குருவின் மகனை மீட்டு குரு காணிக்கையாகச் செலுத்திப் பெருமை கொண்டனர்.

பின்னர் பூமிபாரம் தீர்க்க பாரதப்போர், உலக மக்கள் நற்கதி பெற கீதோபதேசம் என பல அருஞ்செயல்கள் புரிந்த கண்ணன் துவாரகையில் அரசு புரிந்து வந்தார். இறுதியில் தன் அவதார காலம் முடிவுறும் தருணம் நெருங்கிவிட்டதை உணர்ந்து, ஒரு மரத்தடியில் சென்று கால் நீட்டிப் படுத்தார். அப்போது வேடன் ஒருவன் மறைந் திருந்து எய்த அம்பின் விஷ நுனி கண்ணனின் காலில் பாய்ந்தது; கண்ணன் உயிர் பிரிந்தது. வைகுண்டம் சேர்ந்தார் பரமாத்மா.

கண்ணன் மனைவிகள்: ருக்மணி, சத்யபாமா, காளிந்தி, ஜாம்பவதி, விக்ரந்தை, சத்யவதி, பத்தரை, லட்சுமணை என பட்டத்தரசிகள் எட்டு பேர். இவர்களன்றி பதினாயிரம் இளவரசிகள். ஒவ்வொருவருக்கும் பத்துப் பிள்ளைகள்.

கண்ணனின் பல பிள்ளைகளில் 18 பேர் கீர்த்தி பெற்றவர்கள். பிரத்யும்னன், அனிருத்ரன், தீப்திமான், பானு, ப்ருஹத்பானு, சாம்பன், விருகன், அருணன், புஷ்கரன், வேதபாஸு, ஸ்ருததேவன், சுனந்தனன், இந்திரபாஸு, விருமன், கவி, நிகரோதனன், சித்திரபானு, மது என்பவர்களே இவர்கள்.

கண்ணனின் காலம் கண்ணனின் பூலோக சஞ்சாரம் 125 வருடங்கள் என ஞானானந்த சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளார். கி.மு. 3102 பிப்ரவரி 18-ல் 125 வருடம், 7 மாதம், 6 நாட்கள், பிற்பகல் 2 மணி, 27 நிமிடம், 30 வினாடியில் கிருஷ்ணாவதாரம் முடிந்தது என்கிறார்.

நன்றி : ஆர்.இராமதாஸ்

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||

|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||

இன்பத்தை வழங்கும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி

"என் திருவடிகளைச் சரணடைந்த உன் பாவங்களை நீக்கி, மோக்ஷ கதி அடைய, நான் அருள்புரிகிறேன்!'' பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் கீதையில் இப்படிக் கூறினார். அந்தத் திருவடிகளுக்குத்தான் எத்தகைய மகிமை! கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் நிகழ்த்திய அற்புதங்கள் தான் எத்தனை?. 

தன் சகோதரி தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையால் தனக்கு அழிவு ஏற்படும் என்பதை அசரீரி வாக்கால் தெரிந்துகொண்ட கம்ஸன், தேவகியையும் அவள் கணவர் வசுதேவரையும் மதுராநகர் சிறையில் அடைத்தான். பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் சங்கல்பத்தால் தான் கிருஷ்ணாவதாரம் நிகழ்கிறது என்பதை அவன் அறியவில்லை. விஷ்ணுவே தேவகி - வசுதேவர் தம்பதியின் எட்டாவது குழந்தையாகப் பிறக்கிறார்.


பொதுவாக உலகில் பெற்றோர் தான் பிறந்த குழந்தை எதைச் சாப்பிட வேண்டும், எப்படி வளர வேண்டும் என்பதைத் தீர்மானிப்பார்கள். ஸ்ரீ கிருஷ்ணன் ஓர் அதிசயக் குழந்தை! பிறந்த உடனேயே, பெற்றோர் என்ன செய்யவேண்டும் என்று கட்டளை இடுகிறார். தன்னைச் சிறையிலிருந்து எடுத்துச்சென்று கோகுலத்தில் விட்டுவிட்டு, அங்கு யசோதை - நந்தகோபருக்குப் பிறந்த பெண் குழந்தையை எடுத்து வருமாறு கட்டளையிடுகிறார். அவரது மாயா சக்தியால் சிறைக்காவலர்கள் மயங்கி விழுந்தனர். பூட்டுகள் திறந்துகொண்டன. சிறைக் கதவுகள் தாமே திறந்து, வசுதேவர் கிருஷ்ணனுடன் வெளியேறியதும் தாமாகவே மூடிக்கொண்டன.

ஸ்ரீ கிருஷ்ணன் கூறியபடி, அவரை துணியில் சுற்றி, கூடை ஒன்றில் வைத்து, தலையில் சுமந்து கோகுலம் நோக்கிச் சென்றார் வசுதேவர். திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. வசுதேவர் யமுனை நதியைக் கடந்துதான் அக்கரையிலுள்ள கோகுலம் அடைய முடியும். அடைமழையால் யமுனையில் வெள்ளம் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது. எந்தத் தடையையும் கண்டு அஞ்சாமல் வசுதேவர் யமுனையில் காலெடுத்து வைத்தார். அப்போது ஐந்து தலை நாகம் ஒன்று படமெடுத்து, கூடைக்கு மேல் குடையாகி வசுதேவரைப் பின்தொடர்ந்தது. யமுனையாற்றில் வசுதேவர் நடக்க ஆரம்பித்ததும், ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயர ஆரம்பித்தது. "கட்டளையிட்ட கடவுள் காப்பாற்றுவான்" என்ற நம்பிக்கையில் வசுதேவர் ஆற்றைக் கடந்து கொண்டிருந்தார். திடீரென நீர்மட்டம் குறைய ஆரம்பித்தது. மழையின் வேகமும் குறைந்தது. யமுனை இரண்டாகப் பிரிந்து, வசுதேவர் நடந்துசெல்ல வழிவிட்டது.

அனைவருக்கும் தெரிந்த புராண வரலாறு தான் இது. இதில் பலருக்குத் தெரியாத கதை எது என்று இனி பார்ப்போம்... ஆவணி மாதத்தில் அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. பொதுவாக இந்த மாதத்தில், பாரதத்தின் வடக்குப் பகுதியில் பெருமழை பெய்யும் பருவநிலை கிடையாது. வசுதேவர் குழந்தைக் கிருஷ்ணனைச் சுமந்து சென்ற போது, ஏன் இந்த மழை பெய்ய வேண்டும்? யமுனையில் ஏன் வெள்ளம் வர வேண்டும்? வசுதேவருக்கு ஏன் இந்தச் சோதனை ஏற்பட வேண்டும்?

இதற்கெல்லாம் ஓர் அற்புதமான காரணம் இருந்தது. ரூபகோஸ்வாமி எழுதிய "பிருந்தாவன கீதை" எனும் நூலில் இதற்கான விளக்கங்களை அறிய முடிகிறது. ஒருமுறை, கந்தர்வன் ஒருவன், ஒரு முனிவரின் சாபத்தால் காளிங்கன் என்ற பெயருடைய ஐந்து தலை நாகமாக மாறினான். ஸ்ரீமகா விஷ்ணுவின் புனிதப் பாதங்கள் அவன் சிரசில் படும்போது அவன் சாபம் நீங்கும் என்று முனிவர் கூறியிருந்தார். பகவான் விஷ்ணுவின் அவதாரத்துக்காகக் காத்திருந்தான் காளிங்கன்.

பகவான் விஷ்ணுவின் மற்றொரு பக்தை யமுனை. இவள் சூரிய பகவானின் புத்திரி. கங்கா தேவியைப் போல விஷ்ணு பாதத்தைத் தொட்டுச் சரணடைய வேண்டுமெனக் கடும் தவம் புரிந்தாள். விஷ்ணு அவள் முன் தோன்றி, தனது கிருஷ்ணாவதார காலத்தில் அவள் விருப்பம் நிறைவேறுமென வாக்களித்தார். அன்று முதல், யமுனையாக ஓடிக்கொண்டிருக்கும் சூரிய புத்திரியும், கிருஷ்ணாவதாரம் எப்போது நிகழுமென எதிர்பார்த்துக் காத்திருந்தாள். யமுனையின் தவத்துக்குப் பலன் தரவே, ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்ததும் அதிசயமாக மழை பெய்து, யமுனையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

கூடையில் குழந்தை கிருஷ்ணனைச் சுமந்துகொண்டு வசுதேவர் யமுனைக் கரைக்கு வந்ததுமே, இரண்டு பக்தர்கள் அவர் திருவடி தங்கள் மீது படாதா என ஏங்கினர். ஒருவன் காளிங்கன் எனும் நாகம்; மற்றவள் யமுனை. ஆனால், காளிங்கன் சாபம் பெறுவதற்கு முன்பே தவத்தைத் தொடங்கிய யமுனைக்கே முதலில் அருள்தர நினைத்தார் பகவான். ஆற்றில் வசுதேவர் இறங்கி நடந்து செல்கையில், கூடையிலுள்ள கிருஷ்ணனின் பாதங்கள் மேல் நோக்கி உயர்ந்திருந்தால் காளிங்கன் சாப விமோசனம் பெற்றிருப்பான். ஆனால், கிருஷ்ணன் வேறுவிதமாக லீலை புரிந்தார்.

யமுனையில் இறங்கி நடந்த வசுதேவரின் வைராக்கியத்தை முதலில் தெரிந்துகொள்ள விரும்பினார். கடும் மழையாலும், வெள்ளத்தாலும் யமுனையில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருந்தது. இடுப்புவரை இருந்த வெள்ளநீர் கழுத்து வரை வந்தபோதும் கூட, கவலைப்படாமல் தன் கடமையைச் செய்து கொண்டிருந்த வசுதேவரின் சிரத்தா பக்தியை எண்ணி வியந்தார் ஸ்ரீ கிருஷ்ணன். நீர்மட்டம் வசுதேவரின் மூக்கைத் தொடும் நிலை வந்தபோது, கண்ணன் கருணை பொழிந்தார். தன் கால்களைக் கூடைக்கு வெளியே போட்டார். அவர் பாதங்கள் யமுனையைத் தொட்டன.

இதன் மூலம் யமுனையின் தவம் நிறைவேறியது. தனக்குக் கருணை புரிந்த கிருஷ்ணனின் சங்கல்பம் நிறைவேற யமுனை தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டாள். அதனாலேயே நீர்மட்டம் குறைந்தது. அவள் இரண்டாகப் பிரிந்து, வசுதேவர் செல்ல வழியமைத்துத் தந்தாள். காளிங்கன் ஏமாற்றம் அடைந்தாலும், நம்பிக்கையைக் கைவிடவில்லை. பிருந்தாவனத்தில் இருந்த பொய்கையில் வாழ ஆரம்பித்தான். அவன் விடும் மூச்சுக் காற்றாலும், கக்கும் விஷத்தாலும் மாசடைந்தது பொய்கை. அதனால், "காளிங்கன் பொய்கை" என அதை அழைத்து, அதன் அருகில் செல்லாமல் ஒதுங்கி இருந்தனர் மக்கள். ஆனால், ஸ்ரீ கிருஷ்ணன் காளிங்கனை மறக்கவில்லை. ஒருநாள் கோபாலர்களுடன் மாடு மேய்க்கச் சென்ற அவர், யார் தடுத்தும் கேளாமல் அந்தப் பொய்கையில் குதித்தார். காளிங்கன் தன் படத்தைத் தூக்கி, கிருஷ்ணனை தாங்கிக் கொண்டான். ஸ்ரீ கிருஷ்ணன் அதன் மீது நர்த்தனம் செய்தார். காளிங்கன் சாபம் நீங்கியது.


"எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்" என்று சொல்வார்கள். இது மனிதர்களுக்கு! ஆனால், இறைவன் மனித வடிவில் அவதாரம் செய்யும் போது, அவர் பாதங்களே பிரதானம். ராமாவதாரத்தில் கங்கைக்கரை வேடன் குஹன் ராமனின் திருவடிகளுக்குப் பூஜை செய்கின்றான். தனக்குத் தன் தாய் கைகேயி வாங்கித் தந்த நாட்டை வேண்டாமெனக் கூறி ராமன் திருவடிகளின் அம்சமான அவனது பாதுகைகளையே பதினான்கு வருடம் பூஜிக்கிறான் பரதன்.

அதுபோல, கிருஷ்ணாவதாரத்திலும் கிருஷ்ணனின் பாதங்களின் பெருமை பல இடங்களில் புகழப்படுகிறது. கிருஷ்ண ஜயந்தி அன்று வீடுகளில் கிருஷ்ணனின் பாதத்தை மாக்கோலமாகப் போட்டு, கிருஷ்ணனை வழிபடும் பழக்கம் தொன்றுதொட்டு நம் நாட்டில் இருந்துவருகிறது. இதுவும் பகவானின் பாத மகிமையைப் போற்றுவதற்காக அமைந்த ஒரு வழிபாட்டு முறைதான். இப்படி, இறைவன் திருவடியின் மகிமை எத்தனையோ புராண இதிகாசங்களில் கூறப்பட்டிருந்தாலும், திருவள்ளுவப் பெருமானின் கீழ்க்காணும் திருக்குறளில் உள்ள ஆழமான கருத்தை வேறெங்கும் காணமுடியாது.

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு."

"பற்றை" அதாவது, ஆசாபாசங்களை உதறுவதற்கு, பற்றேதும் இல்லாத பரம்பொருளான இறைவனின் திருப்பாதங்களைப் பிடித்துக் கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் அந்தப் பிடியை விட்டுவிடாதீர்கள் என்பது இதன் பொருள். நாமெல்லாம் துன்பம் வரும்போது இறைவனை வேண்டுவது வழக்கம். அந்தத் துன்பம் நீங்கிய பின், அதனை மறந்து விடுவதும் இயல்பு. இந்த முறையை மாற்றி, எப்போதும் இறைவனின் திருவடியையே பற்றி நம்பிக்கையோடு வாழுங்கள் என்பதே வள்ளுவர் காட்டும் வழி.

நன்றி : ஆர்.இராமதாஸ்

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||

|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

ஸ்ரீ விநாயகர் காரிய சித்தி மாலை

காசிப முனிவர் வடமொழியில் இயற்றி, கச்சியப்பரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட விநாயகர் காரிய சித்தி மாலை, ஓர் ஒப்பற்ற மந்திரம். எந்தப் பணியை  ஆரம்பித்தாலும் விநாயகரைத் தொழுதுவிட்டே ஆரம்பிப்பது ஆன்மிகர்களின் வழக்கம். எந்த விஷயத்தையும் எழுதுமுன் குட்டியாக ஒரு பிள்ளையார் சுழி போட்டு விட்டு எழுதத் தொடங்குவதும் பலருக்கு வழக்கம். 


விக்னமில்லாமல் முடிய வேண்டிய எந்த வேலைக்கும் விக்னேஸ்வரரின் அருள் கட்டாயம் வேண்டும். அன்றன்றைய கடமைகள் என்றில்லாமல், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி பொங்கவும் எதிர்ப்படும் பிரச்னைகளை எளிதாகக் கையாளவும் முறையாகத்  திட்டமிடவும் அனைவரிடமும் அன்பு செலுத்தவும் அனைவரது அன்பும் நம் மீது பரவவும் சுமுகமான வாழ்வை சந்தோஷமாக மேற்கொள்ளவும் இந்த விநாயகர் காரிய சித்தி மாலையை தினமும் ஜபிப்பது அவசியம் என்று வலியுறுத்துகிறார் காசிப முனிவர். இந்த வழிபாடு முற்றிலும் தமிழிலேயே அமைந்தது. எளிமையானது. நேரடியானது. நாமே பொருள் புரிந்து கொள்ளக்கூடியது.  

பாடல் எண் : 01
பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.

பொருளுரை:
எல்லாவிதமான பற்றுகளையும் அறுத்தும், நற்குணங்களின் உற்பத்தியிடமாகவும் இவ்வுலகையே உண்டாக்கியும், காத்தும் மறைத்தும் லீலைகள் செய்பவனும் வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் அறுபத்து நான்கு கலைகளுக்கும் தலைவனாக இருக்கும் முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானை அன்புடன் தொழுவோம்.


பாடல் எண் : 02
உலக முழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன்அவ்
உலகிற் பிறக்கும் விவகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.

பொருளுரை: 
எல்லா உலகங்களையும் நீக்கமற ஒருவனாய் நின்று காப்பவர், உலகில் நிகழும் மாற்றங்கட்கு அப்பால் ஆனவர். மேலாம் ஒளியானவர். உலக உயிர்களின் வினைப் பயனைக் களைபவர், அவரே பெருந்தெய்வம் கணபதி ஆவார். அப்பெருந்தெய்வத்தின் திருவடிகளை மகிழ்வோடு சரண் அடைவோம்.


பாடல் எண் : 03
இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் அடைகின்றோம்.

பொருளுரை: 
நம் துன்பங்கள் முழுவதும் யார் திருவருளால் தீயில் விழுந்த பஞ்சு போல் பொசுங்குமோ, உலக உயிர்களை யார் அமரர் உலகில் சேர்ப்பிப்பாரோ, எக்கடவுள் திருவருளால் நாம் செய்த பாபங்கள் தொலையுமோ அந்த நீண்ட தந்தங்களையுடைய கணபதியின் பொன்னார் திருவடிகளைச் சரண் அடைவோம்.


பாடல் எண் : 04
மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

பொருளுரை:
எல்லா மூர்த்தங்களுக்கும் மூல மூர்த்தமாக இருப்பவரும், எல்லா ஊர்களிலும் எழுந்தருளி இருப்பவரும், கங்கை முதலான எல்லா நதிகளிலும் நிறைந்திருப்பவரும், எல்லாவற்றையும் அறிந்தும் ஏதும் அறியாதார் போல் இருப்பவரும், எல்லா உயிர்களுக்கும் நாளும் நலம் புரிபவரும், அறியாமையை அகற்றி நல்லறிவைத் தருபவரும் ஆகிய கணபதிப் பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து நாம் சரண் அடைவோம்.


பாடல் எண் : 05
செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யி இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.

பொருளுரை: 
செயல்களாகவும், செய்யப்படும் பொருள்களாகவும் இருப்பவர். எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர். நாம் செய்யும் வினைப் பயனாக இருப்பவர். அவ்வினைப் பயன்களில் இருந்தும் நம்மை விடுப்பவர். அவரே முழுமுதற் கடவுள் கணபதி ஆவார். அந்த் மெய்யான தெய்வதை நாம் சரண் அடைவோம்.


பாடல் எண் : 06
வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

பொருளுரை:
வேதங்களுக்கு எல்லம் தலைவனாக இருப்பவனும், யாவராலும் அறிந்து கொள்ளுதற்கு அரிய மேலானவனாக இருப்பவனும், வேதத்தின் முடிவாக இருந்து நடம் புரியும் குற்றமற்றவனும், வெட்ட வெளியில் எழும் ஒங்காரத்தின் ஒலி வடிவாக இருப்பவனும், தன்வயத்தனாதல்; தூய உடம்பினன் ஆதல்; இயற்கை உணர்வினன் ஆதல்; முற்றும் உணர்தல்; இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல்; பொருள் உடைமை; முடிவில் ஆற்றல் உடைமை; வரம்பில் இன்பம் உடைமை, இவற்றை முறையே வட நூலார் சுதந்தரத்துவம் விசுத்த தேகம்; நிரன்மயான்மா; சர்வஞ்த்வம்; அநாதிபேதம்; அநுபத சக்தி; அநந்த சக்தி; திருப்தி ஆகிய எட்டுக் குணங்களைக் கொண்டவனும், ஆன முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானின் திருவடிகளைச் சரண் அடைவோம்.


பாடல் எண் : 07
மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.

பொருளுரை: 
மண்ணில் ஐந்து வகையாக (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) இருப்பவரும், ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர், கடல் நீர் என நான்காக இருப்பவரும், வேள்வித்தீ, சூரியன், சந்திரன் எனத் தீயில் மூன்றாக இருப்பவரும், காற்றில் புயற் காற்றாக இருப்பவரும், எங்கும் ஒன்றாய் இருக்கும் வான் வெளியாய் இருப்பவருமாகிய விநாயகப் பெருமானின் திருவடிகளை அன்புடன் சரண் அடைவோம்.


பாடல் எண் : 08
பாச அறிவில் பசு அறிவில் பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசு அறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசு அறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.

பொருளுரை: 
எந்தப் பந்தமும் அற்றவன்; பசுவாகிய ஆன்மாவும், பதியாகிய இறைவனும் அவனே! அறிவினால் அவனை அறியமுடியாது. அவன் பந்தமே இல்லாதவன். ஆனால் எல்லா உயிர்களையும் பந்தப்படுத்துபவன். அவன் மேலானவன். அறிவுடையவன். அத்தகைய கணபதியை நாம் சரண் அடைவோம். பசு பதி இரண்டுமே இறைவன். பசு பதியோடு ஒடுங்குவதே அழியா இன்ப நிலையாகும். இதையே துரியம், துரியாதீதம் என்று சைவ சித்தாந்தம் கூறும்.


பாடல் எண் : 09 (நூற்பயன்)
இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்திகளில் தோத்திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம் பெறும்எண் தினம் உச்சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும்.

பொருளுரை:
இத்தோத்திரப் பாடல்களை மூன்று நாட்கள் சந்தியா நேரத்தில் யார் பாராயணம் செய்கின்றார்களோ அவர்கள் செய்யும் நற்காரியங்களில் வெற்றி பெறுவார்கள். தொடர்ந்து எட்டு நாட்கள் படித்தால் மனம் மகிழும் படியான நலம் பெறுவார்கள். சதுர்த்தியன்று நற்சிந்தையுடன் எட்டுத் தடவவைகள் பாராயணம் செய்தால் அணிமா, கரிமா, இலஹிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசிதை, வசீதை போன்ற (எட்டு) அட்டமாசித்துளையும் பெறுவார்கள்.


பாடல் எண் : 10 (நூற்பயன்)
திங்கள் இரண்டு தினந்தோறும் திகழஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத்தொரு முறைமை
பொங்கும் உழுவலால் கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச் செப்பினர் மறைந்தார்

பொருளுரை: 
தொடர்ந்து இரு மாதங்கள் நாள்தோறும் முறையாகப் பாராயணம் செய்தால் அரசர்களும் வசியம் ஆவார்கள். தினமும் இருபத்தோரு முறைகள் பாராயணம் செய்தால் குழந்தைச் செல்வம், கல்விச் செல்வம் நலம் போன்ற சகல செவங்களும் வந்துசேரும்.

உரை எழுதியவர் : திருப்பனந்தாள் புலவர் அய்யா க துரியானந்தம் அவர்கள்..

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

திதி நித்யா தேவிகள்

ஒரு மாதத்தில் வளர்பிறைத் திதிகள் (சுக்ல பட்சத் திதிகள்) மற்றும் தேய்பிறைத் திதிகள் (கிருஷ்ண பட்ச திதிகள்) என்று அமாவாசை, பௌர்ணமி சேர்த்து பதினாறு திதிகள் இருக்கின்றன. இந்தப் பதினாறு திதிகளுக்கும் பதினைந்து அதிதேவதைகள் இருக்கின்றன. 

லலிதா பரமேஸ்வரியை ஸ்ரீ சக்ர ரூபத்தில் வழிபடும் முறை "ஸ்ரீ வித்யை" எனப் போற்றப்படுகிறது. அதில் பிந்துஸ்தானம் எனப்படும் இடத்தில் தேவி காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருள்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றியுள்ள முக்கோணத்தைச் சுற்றி பக்கத்திற்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர்.


இந்த ஸ்ரீ வித்யாவின் ப்ரதம தேவதையான "பராபட்டாரிகா" என வேதங்கள் போற்றும் மஹா நித்யாவானவள், ஸ்ரீ சக்ரத்தில் பிந்துஸ்தானத்தில் வீற்றிருக்கின்றாள். அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக தேவியைச் சுற்றி கொலுவீற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அம்பிகையின் அங்க தேவதைகள்.

ஒரு மாதம் கிருஷ்ண பக்ஷம் (பௌர்ணமியுடன் 15 நாட்கள்), சுக்ல பக்ஷம் (அமாவாசையுடன் 15 நாட்கள்) என இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பக்ஷமும் பதினைந்து நாட்கள் உடையதாகக் கொள்ளப்படுகிறது. மகா நித்யாவின் கலைகளில் தோன்றிய பதினைந்து திதி நித்யாக்களும் ஒவ்வொரு பக்ஷத்திற்கும் ஒரு நாள் ஆக மாதத்தில் இரு நாட்கள் இப்பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்கின்றனர்.

தெய்வங்களை கோகுலாஷ்டமி, ராமநவமி போன்ற திதிகளிலும், நீத்தார் கடன்களை அமாவாசை அல்லது அவர்கள் உலகை நீத்த திதிகளிலும் நாம் வழிபட்டு வருகிறோம். ஆனால், அதே நாளில் இந்தத் திதிக்குரிய தேவதைகளை வழிபட மறந்து விடுகிறோம். இதனாலேயே நாம் உரிய பலன்களை பெற முடிவதில்லை என்றும் சொல்லலாம். அன்றன்றைய திதிகளை பரிபாலனம் செய்யும் மூல தேவிகளை நாம் மறவாமல் வழிபட்டால் நம்மை வறுமை அணுகாது, அனைத்து சங்கடங்களிலிருந்தும் விடுதலையாவோம், இகபர சுகங்களை நிச்சயமாகப் பெறுவோம்.

கால ரூபிணியாய் விளங்கும் நித்யா தேவிகளை அந்தந்த குறிப்பிட்ட திதிகளிலே வணங்கி பூஜித்தால் மிகச் சிறந்த நலன்களை அந்த உபாசனை தரும். பிரதமை முதல் பௌர்ணமி வரை அப்பிரதட்சணமாகவும், திரும்பவும் அடுத்த பிரதமை முதல் அமாவாசை வரை பிரதட்சணமாகவும் பூஜிக்க வேண்டும். இந்த பதினைந்து தேவிகளுக்கும் நம் அன்றாடப் பணிகளில் ஒரு பணியும், அப்பணி நன்கு நடைபெற ஒரு மந்திரமும், யந்திரமும் நியமிக்கப்பட்டுள்ளன.


ஆதிசங்கரரால் பிரசித்தமான "சுபாகம தந்த்ர பஞ்சகம்" என்ற நூலில் இவர்களின் உபாசனை பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளது. "தந்த்ர ராஜ தந்த்ரம்" என்ற நூலிலும் இவர்களின் தியான ஸ்லோகங்கள், யந்திரங்களின் விளக்கங்கள், உபாசனை புரியும் முறை ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன. சர்வம் சக்தி மயம். "எங்கெங்கு காணினும் சக்தியடா" என்பதை மெய்ப்பிக்கும் வகையில் திருவருள் பாலிக்கும் இந்த அன்னையர்களின் தோற்றம், வழிபடும் நாட்கள், பலன்கள் என்னென்ன?.

01 ஸ்ரீ காமேஸ்வரி நித்யா
"காம" எனில் விரும்பிய ரூபத்தை எடுக்கக் கூடியவள் என்று பொருள். இவள் கோடி சூர்ய பிரகாசமாக ஜொலிக்கும் தேக காந்தி உடையவள். மாணிக்க மகுடம் தரித்து, பொன்னாலான மரகத மாலை, ஒட்டியாணம் போன்ற விலை மதிப்பில்லா அணிகலன்களை அணிந்துள்ளாள். முக்கண்கள், ஆறு திருக்கரங்கள் கொண்டவள். தன் திருக்கரங்களில் கரும்பு வில், மலரம்புகள், பாசக்கயிறு, அங்குசம், அமிர்த பாத்திரம் மற்றும் வரத முத்திரை தரித்து உள்ளாள். பிறை சூடிய திருமுடியைக் கொண்ட இந்த அம்பிகையின் புன்சிரிப்பும், கருணை பொழிந்திடும் கண்களும், கேட்கும் வரங்களை வாரி வழங்கவல்லவை.


மந்திரம்
"ஓம் காமேஸ்வர்யை வித்மஹே 
நித்யக்லின்னாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்."

வழிபட வேண்டிய திதிகள்: வளர்பிறை பிரதமை திதிக்கும், தேய்பிறை அமாவாசை திதிக்கும் அதிதேவதை ஸ்ரீ காமேஸ்வரி நித்யா (சுக்ல பட்ச பிரதமை, அமாவாசை.)

பலன்கள்: குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும்.


02 ஸ்ரீ பகமாலினி நித்யா
இந்த நித்யா தேவியின் மந்திரத்திலும், இவளின் பரிவார தேவதைகளின் மந்திரங்களிலும் "பக" எனும் சப்தம் அடிக்கடி விடுவதால், இவள் பகமாலினி என்று அழைக்கப்படுகிறாள். பகம் என்ற சொல்லுக்கு பரிபூர்ணமான ஐஸ்வர்யம், தர்மம், தேஜஸ், ஞானம், வைராக்யம், வீர்யம், முக்தி என்றெல்லாம் பொருளுண்டு. இவற்றுடன் அம்பிகை கூடியிருப்பதால் பகமாலினி ஆனாள். பகத்தோடு கூடிய சகல பொருட்களும் இவளுடைய அம்சம் ஆதலால் தேவிக்கு பகவதி எனும் பெயரும் உண்டு. சிவந்த நிறமுள்ளவள். சிவப்புக் கற்களால் ஆன நகைகளை அணிவதில் மகிழ்பவள். அழகு பொலியும் திருமுகத்தினள். சதா தவழும் புன்முறுவலுடன் திகழ்கிறாள். முக்கண்களுடனும் இடது கரங்களில் அல்லி மலர், பாசக்கயிறு, கரும்பு வில் ஏந்தியும் வலது கரங்களில் தாமரை, அங்குசம், புஷ்ப பாணங்களை தரித்தும் தோற்றம் தருகிறாள். 


மந்திரம்
"ஓம் பகமாலின்யை வித்மஹே
ஸர்வ வஸங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்."

வழிபட வேண்டிய திதிகள்: வளர்பிறை த்விதியை திதிக்கும், தேய்பிறை சதுர்த்தசி திதிக்கும் அதிதேவதை ஸ்ரீ பகமாலினி நித்யா (சுக்ல பட்ச த்விதியை, கிருஷ்ண பட்ச சதுர்த்தசி.)

பலன்கள்: வாழ்வில் வெற்றிகளைக் குவிக்கலாம். கர்ப்பத்திலுள்ள சிசு பாதுகாக்கப்பட்டு, சுகப்பிரசவம் ஏற்படும்.


03 ஸ்ரீ நித்யக்லின்னா நித்யா
நித்யக்லின்னா என்றால் கருணை மிகுந்தவள் என்று பொருள். இவளின் இதயம் என்றும் கருணையிலேயே ஊறிப்போனதாம்! இவளின் மகிமையைப் பற்றி கருட புராணத்தில் "நித்யக்லின்னா மதோவக்ஷயே த்ரிபுரம் புக்தி முக்திதாம்" எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அம்பிகையைத் துதிப்போர் மூவுலகிலும் புக்தி சக்தியோடு வாழ்வர் என்று பொருள். சிவந்த நிறம், சிவந்த கரங்கள், புன்முறுவல் சிந்தும் திருமுக மண்டலம், முக்கண்கள், நெற்றியில் அரும்பும் வியர்வைத் துளிகளுடனும், திருமுடியில் பிறைச்சந்திரனுடனும் அருள்பாலிக்கும் இந்த தேவிக்கு "மதாலஸா" என்ற பெயரும் உண்டு. தன் நான்கு கரங்களிலும், பாசம், அங்குசம், பான பாத்திரம், அபய முத்திரை தரித்தவள். அணிகலன்கள் அன்னையை அலங்கரிக்கின்றன.


மந்திரம்
"ஓம் நித்யக்லின்னாயை வித்மஹே
நித்ய மதத்ரவாய தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்."

வழிபட வேண்டிய திதிகள்: வளர்பிறை த்ருதியை திதிக்கும், தேய்பிறை திரயோதசி திதிக்கும் அதிதேவதை ஸ்ரீ நித்யக்லின்னா நித்யா (சுக்ல பட்ச த்ருதியை, கிருஷ்ண பட்ச திரயோதசி.)

பலன்கள்: குடும்ப ஒற்றுமை ஓங்கும். வீண் தகராறுகள் எதுவும் வராது.


04 ஸ்ரீ பேருண்டா நித்யா
அனைத்து அண்டங்களிலும் நிறைந்துள்ள தேவி அகிலத்துக்கே ஆதிகாரணியாகத் துலங்குபவள். அநேக கோடி அண்டங்களைப் படைத்தவள். அவற்றை உருவாக்கியதால் இந்த அன்னைக்கு "அநேக கோடி ப்ரமாண்ட ஜனனீ" என்றும் ஓர் திருநாமம் உண்டு. உருக்கி வார்த்த தங்கம் போன்ற மேனியில் பட்டாடைகளையும், குண்டலங்கள், பொன் ஆரங்கள், முத்துமாலை, ஒட்டியாணம், மோதிரங்களைத் தரித்து, நிகரற்ற அழகுவல்லியாகத் திகழும் இவள் முக்கண்கள் தரித்தவள். புன்முறுவல் பூத்து தரிசிப்போரைப் பூரிக்க வைக்கிறார். தன்கர கமலங்களிலும் பக்தர்களின் பாதக மலங்களை அழிக்க பாசம், அங்குசம், கத்தி, கோதண்டம், கவசம், வஜ்ராயுதம் தரித்துள்ளாள். தேவியின் திருவடித் தாமரையைத் தாமரை மலர் தாங்குகிறது.


மந்திரம்
"ஓம் பேருண்டாயை வித்மஹே 
விஷஹராயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்."

வழிபட வேண்டிய திதிகள்: வளர்பிறை சதுர்த்தி திதிக்கும், தேய்பிறை துவாதசி திதிக்கும் அதிதேவதை ஸ்ரீ பேருண்டா நித்யா (சுக்ல பட்ச சதுர்த்தி, கிருஷ்ண பட்ச துவாதசி)

பலன்கள்: விஷ ஆபத்துகளிலிருந்து மீளலாம்.


05 ஸ்ரீ வஹ்நி வாஸினி நித்யா
அக்னி மண்டலத்தில் உறைவதால் வஹ்னி வாஸினி. அக்னி மண்டலம் நம் உடலின் மூலாதாரத்தில் உள்ளது. அங்கு குண்டலினி வடிவாய் அம்பிகை துலங்குகிறாள். வஹ்னி என்ற பதம் மூன்று என்ற எண்ணிக்கையையும் குறிக்கும். தேவி லலிதையின் பஞ்சதசாக்ஷரி என்னும் மகா மந்திரத்தின் வாக்பவ, காமராஜ, சக்தி கூடங்களும் மூன்றே ஆகும். அழகே உருவாய் அருளே வடிவாய்த் திகழும் இவள் மஞ்சள் நிற பீதாம்பரம் அணிவதில் விருப்பமுள்ளவள். சுற்றிச் சுழலும் மயக்கும் விழிகளையுடையவள். தன் திருக்கரங்களில் தாமரை, சங்கு, கரும்பு வில், அல்லிப்பூ, கொம்பு, மலரம்புகள், மாதுளம் பழம், அம்ருத கலசம் எனத் தரித்திருக்கின்றாள். 


மந்திரம்
"ஓம் வஹ்னி வாஸின்யை வித்மஹே 
ஸித்திப்ரதாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்."

வழிபட வேண்டிய திதிகள்: வளர்பிறை பஞ்சமி திதிக்கும், தேய்பிறை ஏகாதசி திதிக்கும் அதிதேவதை ஸ்ரீ வஹ்நி வாஸினி நித்யா (சுக்ல பட்ச பஞ்சமி, கிருஷ்ண பட்ச ஏகாதசி)

பலன்கள்: நோய் தீரும். தேக காந்தியோடு, உலக இன்பங்களை பூரணமாக அனுபவிக்க இயலும்.


06 ஸ்ரீ மஹா வஜ்ரேஸ்வரி நித்யா
இந்த நித்யா ஜாலாமந்திரி பீடத்தின் அதிதேவதை. லலிதாதேவி உறையும் ஸ்ரீ நகரத்தின் பன்னிரண்டாம் மதில் சுற்று வஜ்ரமணியால் ஆனதென்றும் அதற்கருகில் வஜ்ரமயமான நதியொன்று உள்ளதென்றும் அதற்கெல்லாம் அதிதேவதை வஜ்ரேஸ்வரி எனவும் துர்வாஸ மகரிஷி தன் லலிதாஸ்தவரத்னத்தில் குறிப்பிட்டுள்ளார். இத்தேவி வஜ்ரம் என்ற ஆயுத ரூபமாகவும் உள்ளாள். தங்கப் படகில் தன் பக்தரைக் காக்க வருபவள். நான்கு கரங்கள் கொண்ட இந்த அன்னை செந்நிற பூக்களால் ஆன மாலைகளை அணிந்துள்ளாள். வைடூரியம் பதித்த கிரீடமும், கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மாதுளம் கனி தரித்து, கனிவான பார்வையுடன் தம் பக்தர்களைக் காக்கிறாள். அன்பர்களின் பிறவிப்பிணி தீர்க்கும் மருந்தாகி, அவர்தம் உடலும், உள்ளமும் தூய்மை பெறச் செய்யும் அதியற்புத சக்தி. கரங்களில் கங்கணங்கள் குலுங்க பொல்லாத முன் வினைகளுக்கு அஞ்சேல் என அபயமளிப்பவள்.


மந்திரம்
"ஓம் மஹா வஜ்ரேஸ்வர்யை வித்மஹே
வஜ்ர நித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்."

வழிபட வேண்டிய திதிகள்: வளர்பிறை சஷ்டி திதிக்கும், தேய்பிறை தசமி திதிக்கும் அதிதேவதை மகா ஸ்ரீ வஜ்ரேஸ்வரி நித்யா (சுக்ல பட்ச சஷ்டி, கிருஷ்ண பட்ச தசமி)

பலன்கள்: அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுதலை.


07 ஸ்ரீ சிவதூதி நித்யா
இந்த நித்யா தேவி சிவனைத் தூதனாகக் கொண்டவள். சும்ப, நிசும்பருடன் அம்பிகை யுத்தம் தொடங்குமுன் அவர்களிடம் சிவபெருமானை தூது அனுப்பிய விவரம் தேவி மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. புஷ்கரம் என்ற க்ஷேத்திரத்திலுள்ள அம்பிகைக்கு "சிவதூதி" என்று பெயர். எட்டுத் திருக்கரங்கள், மூன்று கண்கள் கொண்ட இந்த அம்பிகையின் திருமுகம் கோடைக்காலத்து சூர்ய ஒளிபோல் மின்னுகிறது. நவரத்னங்கள் இழைத்த மகுடமும் பட்டாடையும் இவளது அழகுக்கு அழகு செய்கின்றன. தன் திருக்கரங்களில் கேடயம், அரிவாள், ஷாஷகா எனும் கோப்பை, பாசம், அங்குசம், கட்கம், கதை, தாமரை ஏந்தி அழகுடன் மிளிர்கிறாள். எல்லாவிதமான மங்களங்களையும் அன்பர்களுக்கு அளிப்பவள்.


மந்திரம்
"ஓம் சிவதூத்யை வித்மஹே 
சிவங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்."

வழிபட வேண்டிய திதிகள்:  வளர்பிறை சப்தமி திதிக்கும், தேய்பிறை நவமி திதிக்கும் அதிதேவதை ஸ்ரீ சிவதூதி நித்யா (சுக்ல பட்ச சப்தமி, கிருஷ்ண பட்ச நவமி.)

பலன்கள்: நமக்கு எதிரான அநீதியும் அதர்மமும் அழியும். நியாயமான கோரிக்கை எதுவும் எளிதில் நிறைவேறும். எந்த ஆபத்தும் நெருங்காது.


08 ஸ்ரீ த்வரிதா நித்யா
இந்த நித்யா தேவிக்கு தோதலா தேவி என்ற பெயரும் உண்டு. பக்தர்களுக்கு சீக்கிரமாய் அருள்பாலிப்பதால் "த்வரிதா" என்று வணங்கப்படுகிறாள். தழைகளை ஆடையாக அணிந்தவள். எட்டு நாகங்களை தேவி தன் உடலில் சூடியுள்ளாள். கருநீல நிறமான இவள் முக்கண்களுடனும் நான்கு கரங்களோடும் புன்முறுவல் பூத்த திருமுக மண்டலத்துடன் பொலிகிறாள். சலங்கை, இடைமேகலை, ரத்னாபரணங்களுடன், மயில்பீலிகளைச் சூடிக்கொண்டு அலங்கார தரிசனமளிக்கிறாள். தேவியின் வரத அபய ஹஸ்தங்கள் பக்தர்களைக் காக்கக் காத்திருக்கின்றன. இத்தேவியைத் துணை கொள்வார்க்கு அணிமாதி ஸித்திகளும் ஞானமும் கைகூடும். 


மந்திரம்
"ஓம் த்வரிதாயை வித்மஹே 
மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்."

வழிபட வேண்டிய திதிகள்: வளர்பிறை அஷ்டமி திதிக்கும், தேய்பிறை அஷ்டமி திதிக்கும் அதிதேவதை ஸ்ரீ த்வரிதா நித்யா (சுக்ல பட்ச அஷ்டமி, கிருஷ்ண பட்ச அஷ்டமி)

பலன்கள்: எல்லா பயங்களும் போகும். கலைகளில் தேர்ச்சி பெற முடியும். பூரண ஆயுள் கிட்டும்.


09 ஸ்ரீ குலஸுந்தரி நித்யா
குலஸுந்தரி என்பது குண்டலினி சக்தியையே குறிக்கும். நம் சரீரமே குலம். அதை இயக்குபவள் இவள். பன்னிரண்டு திருக்கரங்கள், தாமரை மலரையொத்த ஆறு திருமுகங்கள், ஒவ்வொரு முகத்திலும் முக்கண்கள் கொண்டு தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பவள். திருமேனி முழுவதும் திருவாபரணங்கள்  துலங்க, கரங்களில் ஜபமாலை, தாமரை, கமண்டலம், கோப்பை, மாதுளம்பழம், புத்தகம், தாமரை, எழுத்தாணி, ஜபமாலை, சங்கு, வரத முத்திரை கொண்டு தரிசனம் அளிக்கிறாள். தேவர்களும் கந்தர்வர்களும் கின்னரர்களும் இவளைச் சுற்றியிருந்து அவள் புகழ் பாடிய வண்ணம் உள்ளனர். யட்சர்களும் அசுரர்களும்கூட இந்த அன்னையின் அருளை வேண்டி  நிற்கின்றனர்.


மந்திரம்
"ஓம் குலஸுந்தர்யை வித்மஹே 
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்."

வழிபட வேண்டிய திதிகள்: வளர்பிறை நவமி திதிக்கும், தேய்பிறை சப்தமி திதிக்கும் அதிதேவதை ஸ்ரீ குலஸுந்தரி நித்யா (சுக்ல பட்ச நவமி, கிருஷ்ண பட்ச சப்தமி)

பலன்கள்: இந்த தேவியின் அபூர்வ அருளால் இவளை பூஜிப்பவர்கள் சர்வ ஞானமும் அடைவர். செல்வ வளமும், சொத்துக்கள் சேர்க்கையும் கிட்டும்.


10 ஸ்ரீ நித்யா நித்யா
அழிவில்லாதவள். கால நித்யா ரூபமானவள். சர்வாத்மிகா என்ற திருநாமம் கொண்ட இத்தேவி பொருட்களை இயக்கும் சக்தியாய்த் திகழ்கிறாள். எங்கும் நிறைந்தவள். டாகினி போன்ற தேவதைகளின் அதிதேவதையாய்த் திகழும் அம்பிகையான இவள், உதயத்து சூரிய நிறம் கொண்டு பிரகாசிப்பவள். மந்தகாசமான திருமுகத்தையுடையவள். பிரகாசமான மகுடம் தரித்து தன் திருக்கரங்களில் பாசம், அங்குசம், புஸ்தகம், ஜபமாலை, புஷ்பபாணம், கரும்புவில், வாள், கேடயம், கபாலம், சூலம் ஏந்தி அபயவரதம் தரித்தவள். கணக்கில்லாத சக்திகள் அவளை ஓர் முழுமையான வட்டவடிவில் சூழ்ந்துள்ளன. சௌந்தர்ய ரூபவதியான இவள் அன்பர்களின் மனதிற்கு இனியவள். மங்களங்கள் தருபவள். நீலகண்டனின் இதயத்தில் வாழும் பச்சைப் பசுங்கிளி. 


மந்திரம்
"ஓம் நித்யா பைரவ்யை வித்மஹே 
நித்யா நித்யாயை தீமஹி
தன்னோ யோகிநி ப்ரசோதயாத்."

வழிபட வேண்டிய திதிகள்: வளர்பிறை தசமி திதிக்கும், தேய்பிறை சஷ்டி திதிக்கும் அதிதேவதை ஸ்ரீ நித்யா நித்யா (சுக்ல பட்ச தசமி, கிருஷ்ண பட்ச சஷ்டி).

பலன்கள்: அனைத்துத் தொல்லைகளும் தானே விலகும். தடைகள் தவிடு பொடியாகும். தோஷங்கள் தொலையும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் இஷ்டமுடன் வந்தடையும். தீர்க்கமான உடல் நலமும், அஷ்டமா சித்திகளும் கிட்டும்.


11 ஸ்ரீ நீலபதாகா நித்யா
நீல நிற வடிவான இந்த நித்யா தேவி, ஐந்து திருமுகங்களும் ஒவ்வொரு முகத்திலும் முக்கண்களும் கொண்டவள். இவள் பத்து திருக்கரங்களிலும் பாசம், அங்குசம், வஜ்ராயுதம், கொடி, வாள், கேடயம், அம்பு, வில் ஏந்தி அபய வரதம் தரித்தவள். சிகப்புப் பட்டாடை அணிந்து, முத்தாபரணங்களாலும் ஆங்காங்கே ரத்னங்கள் இழைத்த அணிகலன்களாலும் அலங்கரித்துக் கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்துள்ளாள். இவளின் சாயலைப் போன்றே பல்வேறு சக்திகள் அவளைச் சூழ்ந்துள்ளனர். நல்லோர்களைக் காத்து, தீயோர்களை அழிக்கும் பேரரசி இவள். பரமனின் வாழ்க்கைத் துணையாக விளங்கும் இவள் திருவருட் பார்வையினால் ஒரு நொடிப்போதில் மேன்மை கைகூடும்.


மந்திரம்
"ஓம் நீலபதாகாயை வித்மஹே 
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்."

வழிபட வேண்டிய திதிகள்: வளர்பிறை ஏகாதசி திதிக்கும். தேய்பிறை பஞ்சமி திதிக்கும் அதிதேவதை ஸ்ரீ நீலபதாகா நித்யா (சுக்ல பட்ச ஏகாதசி, கிருஷ்ண பட்ச பஞ்சமி)

பலன்கள்: எடுத்த காரியங்களில் வெற்றி, தேர்வுகளில் முதன்மை.


12 ஸ்ரீ விஜயா நித்யா
இந்த அன்னை அதிகாலை சூரியனைப் போல ஜொலிப்பவள். ஐந்து முகங்கள், பட்டாடை அணிந்து கண்களைக் கவரும் ஒளி பொருந்திய மகுடமும் நெற்றியில் பிறை நிலவு சூடியும் தோற்றமளிப்பவள். பலவகையான அணிகலன்களும் அழகுக்கு அழகு செய்கின்றன. திருக்கரங்களில் சங்கு, சக்ரம், பாசம், அங்குசம், வாள், கேடயம், வில், அம்பு, மாதுளம் கனி, அல்லி மலரை ஏந்தி வலது காலை மடித்து இடது காலைத் தொங்கவிட்டு, பாதத்தைத் தாமரை மலரில் இருத்திய தோற்றத்துடன் பொலிகிறாள். சுகாசனத்தில் அமர்ந்துள்ள இந்த அம்பிகையை போரில் வெற்றி பெற தியானம் செய்வது வழக்கம். புலியின் மீது அமர்ந்துள்ள எண்ணற்ற சக்திகள் இவளைச் சுற்றிலும் எப்போதும் இருப்பர். ஆணவம் கொண்டவர்களை அடக்கும் ஆதிசக்தியின் அம்சமாக இத்தாய் விளங்குகிறாள். 


மந்திரம்
"ஓம் விஜயா தேவ்யை வித்மஹே 
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்."

வழிபட வேண்டிய திதிகள்: வளர்பிறை துவாதசி திதிக்கும், தேய்பிறை சதுர்த்தி திதிக்கும் அதிதேவதை ஸ்ரீ விஜயா நித்யா (சுக்ல பட்ச துவாதசி, கிருஷ்ண பட்ச சதுர்த்தி.)

பலன்கள்: எந்த வகை வழக்குகளிலும் வெற்றி. கலைகளில் தேர்ச்சி.


13 ஸ்ரீ ஸர்வமங்களா நித்யா
இந்த தேவி பொன்னிற மேனியில் நவரத்னங்களும் இழைக்கப்பட்ட வைடூர்ய மகுடம் துலங்கப் பொலிகிறாள். இந்த நித்யா தேவியின் கடைக்கண் பார்வை அனவரதமும், அன்பரைக் காக்கின்றது. தன் நான்கு கரங்களிலும் மாதுளம் பழம், தங்கப் பாத்திரம் ஏந்தி அபய, வரத முத்திரை தரித்துள்ளாள். சிவப்புப் பட்டுடுத்தி ஸர்வாலங்கார பூஷிதையாய் தோற்றம் அளிக்கிறாள். இந்த நித்யா தேவியைச் சுற்றிலும் எழுபத்திரண்டு சக்திகள் காவலாய் உள்ளதாய் புராணங்கள் பகர்கின்றன. 


மந்திரம்
"ஓம் ஸர்வமங்களாயை வித்மஹே 
சந்த்ராத்மிகாயை திமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்."

வழிபட வேண்டிய திதிகள்: வளர்பிறை திரயோதசி திதிக்கும், தேய்பிறை த்ருதியை திதிக்கும் அதிதேவதை ஸ்ரீ ஸர்வமங்களா நித்யா (சுக்ல பட்ச திரயோதசி, கிருஷ்ண பட்ச த்ரிதியை.)

பலன்கள்: பயணங்களில் விபத்து ஏதுமின்றி பாதுகாப்பு கிட்டும். அனைத்துவித மங்களங்களும் வந்து சேரும்.


14 ஸ்ரீ ஜ்வாலா மாலினி நித்யா
இந்த நித்யா தேவி நெருப்பு ஜ்வாலை ரூபமாய் இருப்பவள். பண்டாசுரனுடன் லலிதா தேவி நடத்திய யுத்தத்தில் நூறு யோஜனை நீளமும் முப்பது யோஜனை அகலமும் முப்பது யோஜனை உயரமும் கொண்ட நெருப்புக் கோட்டையைப் படைத்தவள். அக்னியையே மாலையாகக் கொண்டவள். இந்த அம்பிகையின் வித்யை அறுபது அட்சரங்களைக் கொண்டது. வைடூர்ய மகுடம் அணிந்து அக்னி ஜ்வாலையைப் போல் சிவந்து காட்சியளிக்கும் இத்தேவிக்கு ஆறுமுகமும் பன்னிரு கரங்களும் உள்ளன. கரங்களில் அங்குசம், கத்தி, வில், நெருப்பு, கதை, பாசம், கேடயம், தாமரை, சூலம், அம்பு, அபயம், வரதம் தாங்கியுள்ளாள். பல்வேறு அணிகலன்களைச் சூடிய இவளது ஒவ்வொரு திருமுகத்திலும் புன்முறுவலும் முக்கண்களும் உள்ளன. இவளை தேவரும் முனிவரும் சதா சூழ்ந்துள்ளனர்.


மந்திரம்
"ஓம் ஜ்வாலாமாலின்யை வித்மஹே 
மஹாஜ்வாலாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்."

வழிபட வேண்டிய திதிகள்: வளர்பிறை சதுர்த்தசி திதிக்கும், தேய்பிறை த்விதியை திதிக்கும் அதிதேவதை ஸ்ரீ ஜ்வாலா மாலினி நித்யா (சுக்ல பட்ச சதுர்த்தசி, கிருஷ்ண பட்ச த்விதியை)

பலன்கள்: எந்தத் துன்பமும் தீயிலிட்ட பஞ்சுபோல் ஆகும். பகைவர்கள் அழிவர்.


15 ஸ்ரீ சித்ரா நித்யா
திதி நித்யா தேவிகளில் பதினைந்தாம் நித்யா தேவியான சித்ரா பளபளவென மின்னும் கிரணங்களை வீசிடும் திருமேனியள். பல்வேறு ரத்னங்கள் பதித்த மகுடத்தில் பிறைமதி சூடியவள். வெண்பட்டாடை உடுத்தி, பல்வகையான ஆபரணங்களை மேனி முழுதும் அணிந்து அழகே வடிவாய்த் திகழ்கின்றாள். பாசம், அங்குசம், அபயம், வரதம் தரித்த நான்கு திருக்கரங்கள் கொண்ட இவள், பக்தர்களின் பயத்தை நாசம் செய்பவள். சர்வானந்தமயி. என்றும் நிலையானவள். கனவிலும், நினைவிலும் அடியவர்கள் இதயத்தில் வீற்றிருப்பவள். உதிக்கின்ற சூரியனைப்போல் ஞானஒளி வீசி அறியாமை இருளை விரட்டுபவள். அண்டங்கள் அனைத்திலும் மகிமை வெளிப்படத் திகழ்பவள். தனிப்பெரும் பரம்பொருள். 


மந்திரம்
"ஓம் விசித்ராயை வித்மஹே 
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவிப்ரசோதயாத்."

வழிபட வேண்டிய திதிகள்: வளர்பிறை பவுர்ணமி திதிக்கும், தேய்பிறை பிரதமை திதிக்கும் அதிதேவதை ஸ்ரீ சித்ரா நித்யா (பௌர்ணமி, கிருஷ்ண பட்ச பிரதமை)

பலன்கள்: திடீர் அதிர்ஷ்டமும், பெரும் செல்வமும் சேரும்.

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||