திங்கள், 22 மே, 2017

ஆழித்தேர் வித்தகன்

சைவ சமய ஆலயங்களில் பெரிய ஆலயமாகவும், பஞ்சபூத தலங்களில் பூமிக்குரியதாகவும், சமயக்குரவர்கள் நால்வரால் தொடங்கி வாழையடி வாழையாக வந்த சைவத் திருக்கூட்ட மரபினர் அனைவரும் போற்றி, பாடல் பெற்ற தலமாக விளங்குவது திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயிலாகும்.


''ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே!..'' என்று - திருநாவுக்கரசு சுவாமிகள் திருஆரூரில் பெருமானைக் கண்ட விதம் பற்றித் தன் திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார். 

ஆழித்தேரில் எழுந்தருளும் ஈசன் எல்லாருக்கும் நலமும் வளமும் பொழிந்து காத்தருள்வாராக!..

திருவாரூர் தேரழகென்பது புகழ் பெற்றது. மிகப்பெரிய அழகியத்தேரும், கோயிலும் குளமும் கொண்டத் திருத்தலமாக விளங்கும் தியாகராஜர் கோயிலுக்குரிய தலையாய சிறப்புகளுள் ஒன்று ஆழித்தேர் விழா. வீதிவிடங்கனாம் தியாகராஜர் திருவீதிகளில் தேர்மேல் எழுந்தருளும் திருவிழாவே அப்பெருவிழாவாகும்.


உலக பிரசித்திப் பெற்ற பிரமாண்டமான ஆழித்தேரில் கண்ணப்பநாயனார், அமர்நீதியார், இயற்பகையார், ஏனாதிநாயனார், காரைக்கால் அம்மையார் போன்ற 63 நாயன்மார்களின் புராண சிற்பங்களும், பெரியபுராணம் மற்றும் சிவனின் திருவிளையாடல்களை விளக்கும் சிவபுராண காட்சிகள் மரத்தில் புடைப்பு சிற்பங்களாக தேரின் 3 நிலை கொண்ட அடிப்பாகத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பது தேரின் பேரழகு.

திருவாரூர் நகரில் நடைபெறும் விழாக்களில் தொன்மையும், பெருமையும் வாய்ந்த விழா என்றால் அது ஆழித்தேரோட்ட விழாவே. ஐந்தடுக்கு கட்டுமானங்களை கொண்ட தோ் பீடத்தில் 96 அடி உயரத்தில் அலங்காரம் செய்யப்பட்டு சுமார் 350 டன் எடையில் தோ் கம்பீரமாக அசைந்து வருவதை பார்க்க நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தா்கள் வருவார்கள்.

பாடல் எண் : 01
சூலப் படையானைச் சூழாக வீழருவிக்
கோலத்தோள் குங்குமஞ்சேர் குன்றெட்டு உடையானை
பாலொத்த மென்மொழியாள் பங்கனைப் பாங்காய
ஆலத்தின் கீழானை நான் கண்டது ஆரூரே.

சூலப்படை உடையவனாய், குங்குமம் பூசிய அழகிய தோள்களாகிய, அருவிகள் விழும் எட்டு மலைகளை உடையவனாய், பால்போன்ற இனிய சொற்களை உடைய பார்வதி பாகனாய், தனக்குத் துணையான ஆலமரத்தின் கீழ் இருந்து அறம் உரைத்த பெருமானை நான் ஆரூரில் கண்டேன்.


பாடல் எண் : 02
பக்கமே பாரிடங்கள் சூழப் படுதலையில்
புக்கவூர்ப் பிச்சை ஏற்று உண்டு பொலிவுடைத்தாய்க்
கொக்கு இறகின் தூவல் கொடியெடுத்த கோவணத்தோடு
அக்கணிந்த அம்மானை நான் கண்டது ஆரூரே.

இருபுறமும் பூதங்கள் சூழத்தாம் சென்ற ஊர்களில் மண்டையோட்டில் பிச்சை ஏற்று உண்டு, நல்ல விளக்கம் பொருந்து வனவாகக் கொக்கிறகின் தொகுதி, ஒழுங்காக அமைக்கப்பட்ட கோவணம், சங்குமணி இவற்றை அணிந்த தலைவனை அடியேன் கண்டவிடம் ஆரூராகும்.


பாடல் எண் : 03
சேய உலகமும் செல்சார்வும் ஆனானை
மாயப்போர் வல்லானை மாலைதாழ் மார்பானை
வேயொத்த தோளியர்தம் மென்முலைமேல் தண்சாந்தின்
ஆயத்து இடையானை நான் கண்டது ஆரூரே.

சேய்மையதாகிய வீட்டுலகமாகியபேறும் அதனை அடைவதற்குரிய வழியாகிய ஆறும் ஆகின்றவனாய், அழிக்கின்ற போரில் வல்லவனாய், மாலை தொங்கும் மார்பினனாய், தம் மென்முலைமேல் குளிர்ந்த சந்தனம் பூசிய, மூங்கிலை ஒத்த தோள்களை உடைய, தன்னை வழிபடும் மகளிர் கூட்டத்திடையே இருக்கும் பெருமானை நான் கண்ட இடம் ஆரூர் ஆகும்.


பாடல் எண் : 04
ஏறேற்ற மாவேறி எண்கணமும் பின்படர
மாறேற்றார் வல்லரணம் சீறி மயானத்தின்
நீறேற்ற மேனியனாய் நீள்சடைமேல் நீர்ததும்ப
ஆறேற்ற அந்தணனை நான் கண்டது ஆரூரே.

வாகனமாக ஏறுதற்குரியவற்றில் மேம்பட்டதான காளையை இவர்ந்து எண்வகை அடியவர் கூட்டங்களும் தன்னைப் பின் தொடர வருவானாய், பகைவராய் எதிர்த்தாருடைய வலிய மதில்களைக் கோபித்தவனாய், சுடுகாட்டுச் சாம்பல் பூசிய மேனியனாய், நீண்ட சடைமுடியின் மீது நீர் நிறைந்து அலை எறியுமாறு கங்கையை ஏற்ற சடையனாய் உள்ள பெருமானை நான் தரிசித்த இடம் ஆரூராகும்.


பாடல் எண் : 05
தாங்கோல வெள்ளெலும்பு பூண்டு தம் ஏறு ஏறி
பாங்கான ஊர்க்கு எல்லாம் செல்லும் பரமனார்
தேங்காவி நாறும் திருவாரூர்த் தொன்னகரில்
பூங்கோயிலுள் மகிழ்ந்து போகாது இருந்தாரே.

அழகாக வெண்ணிற எலும்புகளைச் சூடித் தம் காளை மீது இவர்ந்து, பக்கலிலுள்ள ஊர்களுக்கெல்லாம் செல்லும் மேம்பட்டவராய் இனிய குவளை மலர்கள் மணம் வீசும் திருவாரூர் ஆகிய பழைய ஊரில் உள்ள பூங்கோயில் என்ற பெயரை உடைய கோயிலை உகந்து கொண்டு அதனை ஒரு பொழுதும் நீங்காமல் எம்பெருமான் இருந்துள்ளார்.


பாடல் எண் : 06
எம்பட்டம் பட்டம் உடையானை ஏர் மதியின்
நும்பட்டம் சேர்ந்த நுதலானை அந்திவாய்ச்
செம்பட்டு உடுத்துச் சிறுமான் உரியாடை
அம்பட்டு அசைத்தானை நான் கண்டது ஆரூரே.

எமது பட்டத்தைத் தனது பட்டமாகக் கொண்டு இருப்பவனாய், அழகான பிறையாகிய குறுகலான பட்டம் சேர்ந்த நெற்றியனாய், மாலை நேர வானம் போன்ற சிவந்த பட்டினை உடுத்து, சிறிய மான் தோல் ஆடையாகிய அழகிய பட்டினையும் கட்டிய பெருமானை அடியேன் தரிசித்த இடம் ஆரூராகும்.


பாடல் எண் : 07
போழொத்த வெண்மதியம் சூடிப் பொலிந்திலங்கு
வேழத்து உரி போர்த்தான் வெள்வளையாள் தான்வெருவ
ஊழித்தீ அன்னானை ஒங்கு ஒலிமாப் பூண்டதோர்
ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே.

மதியத்தின் பிளவாக இரு முனைகளும் ஒத்த வெண்பிறையைச் சூடி, வெள்ளிய வளையல்களை அணிந்த பார்வதி அஞ்சுமாறு யானைத் தோலைப் போர்த்தவனாய், அடியவர்களின் பகைவருக்கு ஊழித்தீ போன்ற கொடியவனாய், கடலாற் சூழப்பட்ட உலகையே ஒலிமிக்க வேதகங்களாகிய குதிரைகள் பூண்ட தேராகக் கொண்ட சாதுரியனான பெருமானை அடியேன் தரிசித்த தலம் ஆரூராகும். ஆழித்தேர் - திருவாரூர்த் தேரின் பெயர்.


பாடல் எண் : 08
வஞ்சனையாரார் பாடும் சாராத மைந்தனைத்
துஞ்சிருளில் ஆடல் உகந்தானை தன்தொண்டர்
நெஞ்சிருள் கூரும் பொழுது நிலாப் பாரித்து
தஞ்சுடராய் நின்றானை நான் கண்டது ஆரூரே.

வஞ்சனையுடையவர் யார் மாட்டும் அணுகாத திறமையுடையவனாய், எல்லோரும் உறங்கும் இருள் நேரத்தில் கூத்தாடுதலை விரும்பியவனாய், தன் அடியவர்களுடைய உள்ளத்தில் துயரமாகிய இருள் மிகும்போது ஞானமாகிய ஒளியைப் பரப்பி அழகிய ஞானப் பிரகாசனாய் நின்ற பெருமானை அடியேன் தரிசித்த இடம் ஆரூராகும்.


பாடல் எண் : 09
காரமுது கொன்றை கடிநாறு தண்ணென்ன
நீரமுது கோதையோடு ஆடிய நீள்மார்பன்
பேரமுதம் உண்டார்கள் உய்யப் பெருங்கடல் நஞ்சு
ஆரமுதா உண்டானை நான் கண்டது ஆரூரே.

நன்கு முதிர்ந்த கொன்றை மரத்தில் பூக்கும் பூவின் நறுமணம் கமழும் குளிர்ந்த நீர் மயமான கங்கையைப் பார்வதியோடு மகிழ்ந்த, நீண்ட மார்பினனாய், பெரிய அமுதத்தை உண்டார்களாய்த் தேவர்கள் உயிர் பிழைப்பதற்காகப் பெரிய கடலின் விடத்தை அமுதமாக உண்ட பெருமானை அடியேன் தரிசித்த இடம் ஆரூராகும்.


பாடல் எண் : 10
தாள் தழுவு கையன் தாமரைப் பூஞ்சேவடியன்
கோடலா வேடத்தன் கொண்டதோர் வீணையினான்
ஆடரவக் கிண்கிணிக்கால் அன்னான் ஓர் சேடனை
ஆடும் தீக்கூத்தனை நான் கண்டது ஆரூரே.

முழந்தாள் அளவும் நீண்ட கைகளை உடையவனாய், தாமரைப் பூப்போன்ற சிவந்த திருவடிகளை உடையவனாய், பிறரால் கொள்ள முடியாத வேடத்தினனாய், வீணையைக் கையில் கொண்டவனாய், அசைகின்றவாய் ஒலிக்கின்ற கிண்கிணிகளை அணிந்த திருவடிகளை உடைய அத்தகைய மேம்பட்டவனாய்த் தீயில் கூத்தாடும் பெருமானை அடியேன் தரிசித்த தலம் ஆரூராகும்.


பாடல் எண் : 11
மஞ்சாடு குன்றடர ஊன்றி மணி விரலால்
துஞ்சாப் போர் வாளரக்கன் தோள் நெரியக் கண் குருதிச்
செஞ்சாந்து அணிவித்து தன் மார்பில் பால் வெண்ணீற்று
அம்சாந்து அணிந்தானை நான் கண்டது ஆரூரே.

மேகங்கள் அசைந்து செல்லும் கயிலை மலையை இராவணன் பெயர்க்க முற்பட அழகிய கால் விரலால் அழுத்தி, உறங்காது, போர் செய்யும் திறமையை உடைய கொடிய அவ்வரக்கனுடைய தோள்கள் நெரிய அவன் கண்களிலிருந்து புறப்பட்ட இரத்தமாகிய சிவந்த கலவையை அவனை அணியுமாறு செய்து, தன் மார்பிலே பால்போன்ற வெண்ணீற்றுப் பூச்சினை அணிந்த பெருமானை அடியேன் தரிசித்த திருத்தலம் திருவாரூரேயாம்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

திங்கள், 8 மே, 2017

சித்ரா பெளர்ணமி

"திதி பார்த்து வழிபட்டால் விதி மாறும்" என்பார்கள். விதியை வெல்லும் ஆற்றல் யோகமான திதிகளில் செய்யும் வழிபாட்டிற்கு உண்டு. அந்த வகையில் திதிகளில் அமாவாசை திதியும், பவுர்ணமி திதியும் மிக முக்கியமான திதிகளாகும். ஒன்று நிலவு நிறைந்த நாள், மற்றொன்று நிலவு மறைந்த நாள். அன்றைய தினம் கடல் அருகில் நீங்கள் சென்று பார்த்தால் கடல் நீர் மேல் நோக்கி அதிகமாக எழுவதைப் பார்க்கலாம். அலை எழும் அன்றைய தினம் நாம் விரதம், வழிபாடுகளை மேற்கொண்டால் அலைபாயும் உள்ளங்களுக்கு அமைதி கிடைக்கும். 


ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா பவுர்ணமிக்கு உண்டு. அனைத்து மாதங்களிலும் பவுர்ணமியில் முழுநிலவு அழகாகப் பிரகாசித்தாலும் அதில் உள்ள களங்கங்கள் மிக மெலிதாகக் காணக்கிடைக்கும் ஆனால் சித்ரா பவுர்ணமி அன்று நிலவு தனது கிரணங்களை பூரணமாகப் பொழிந்து. கொஞ்சம் கூட களங்கமே காணப்படாமல் காட்சி அளிக்கும் அதனால் தான் சித்ரா பவுர்ணமி சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதோடு தமிழ்ப் புத்தாண்டில் முதன் முதலாக வரும் முழுநிலவு நாள் என்பதாலும் இதற்குச் சிறப்பு சேர்கிறது.

சித்திரையின் வருகை வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கிறது. குளிர்க்காலம் முழுமையாக முடிந்து இதமான இளம் வெயில் தொடங்கும். மாம் பூக்கள் மலர்ந்து எங்கும் மணம் பரப்பும் அதோடு வேப்பம் பூக்களும் பூத்திருக்கும். இது வாழ்வில் இனிமையும் கசப்பும் இணைந்தே காணப்படும். என்ற தத்துவத்தை விளக்குவதாக உள்ளது. அதனால் தான் சித்திரை முதல் தேதி அன்று அறுசுவையும் சேர்த்த உணவை சமைத்து உண்டார்கள் நம் முன்னோர்கள். இனிமைக்கு வெல்லம், புளிப்புக்கு மாங்காய் அல்லது புளி, கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு வாழைப்பூ அல்லது நெல்லிக்காய் கரிப்புக்கு உப்பு எரிவு எனப்படும் காரத்துக்கு மிளகு என சமைத்தார்கள். நம்முன்னோர் சொல்லி வைத்த இந்த உணவு முறை சரிவிகித உணவு என உலகின் மற்ற நாட்டினர் பலராலும் போற்றப்படுகிறது. இளவேனில் காலத்தில் தொற்றிடக்கூடிய வெம்மை நோயில் இருந்து வேப்பம்பூவும் நெல்லிக்காயும் நம்மைப் பாதுகாக்கும் மிளகு உடலில் உள்ள விஷப் பொருட்களை வெளியேற்றும் அதனால்தான் அறுசுவை உணவு எனச் சிறப்பித்து அந்த நாளில் செய்யச் சொன்னார்கள்.

சித்திரையும் சித்திர குப்தரும்: சித்திரை மாதப் பவுர்ணமி சித்திர குப்தருக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. அன்றுதான் அவரது அவதார தினம். மனிதர்களின் பாவ புண்ணியக் கணக்குகளை மிகத் துல்லியமாக எழுதும் பணியை வெகு சிறப்பாகச் செய்து வருபவர் சித்திர குப்தர். 

சித்திர குப்தரின் பிறப்பு: ஒரு முறை அனைத்துதிக்குப் பாலர்களும் கைலாயத்திற்குச் சென்று ஈசனையும் உமையம்மையையும் வணங்கினார்கள். அனைவரது முகமும் மகிழ்ச்சியால் மலர்ந்திருந்தது. ஆனால் யமனின் முகம் மட்டும் சற்றே வாட்டமாக இருந்தது. காரணம் கேட்டார் மாதொரு பாகன். இறைவா பூமியில் மக்கள் மிக அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் நானோ ஒருவன் அனைவரது பிறப்பு இறப்புக் கணக்குகளையும் அவர்களது பாவ புண்ணிய கணக்குகளையும் என் ஒருவனால் சமாளிக்க முடியவில்லை. எனக்குத் துணையாக கணக்கு வழக்குகளை மிகக் கவனமாகப் பாதுகாத்து எழுதி வைக்கும் நம்பிக்கையான உதவியாளன் ஒருவன் கிடைத்தால் என் பாரம் குறையும் என்று வேவண்டுகோள் வைத்தான் காலன்.

சிவனும், உன் கோரிக்கை நியாயமானதுதான். உரிய நேரம் வரும் போது உனக்கு அந்த உதவியாளன் கிடைப்பான்! என்று அருளினார் அகமகிழ்ந்த யமன் தன் உலகம் சென்றான். பிரம்ம தேவர் குழம்பிப் போனார். ஏனெனில், உதவியாளனைப் படைக்கும் பொறுப்பை அவரிடம் விட்டு விட்டார்  ஈசன் சிந்தித்தார் பிரம்மா, சூரியன் ஒருவனால் தான் இத்தகைய ஒருவனைப் பெற முடியும் என்ற முடிவுக்கு வந்தார். பிரம்ம தேவர் சூரியன் மனதில் ஆசையைத் தோற்றுவித்தார். அதனால் அவன் மனதில் காதல் உண்டானது. வானவில்லை அழகான பெண்ணாக மாற்றி, நீளாதேவி என்று பெயரிட்டு, அவளைத் திருமணம் செய்துகொண்டார் சூரிய பகவான் அவர்களுக்கு சித்திரா பவுர்ணமியன்று பிறந்தவர் தான் சித்திரகுப்தர்.

இன்னொரு புராண வரலாற்றின்படி, கைலாயத்தில் அழகான தங்கத் தகட்டில் சித்திரம் ஒன்றை வரைந்தாள், பார்வதி, சிவபெருமான், அதற்கு உயிர் கொடுத்தார். சித்திரத்திலிருந்து தோன்றியதால் சித்திர குப்தர் எனப்பட்டார். சித்திர புத்திரன் எனவும் சொல்வார்கள்.

சித்திர குப்தரின் சிறப்புகள்: சித்திர குப்தருக்கு உரிய வயது வந்தவுடன் கல்வி கற்பித்தார் சூரிய பகவான். கல்வி, கணிதம், இலக்கணம் என அனைத்திலும் சிறந்து விளங்கினார். அவர். தந்தையின் யோசனைப்படி ஈசனை நோக்கித் தவமிருந்தார். சிவபெருமான் அவரது தவத்திற்கு மெச்சி நேநரில் தோன்றி, இனி நீ நினைத்தது அனைத்தும் நடக்கும். என்று வரமளித்தார். அதை சோதித்துப் பார்க்க படைப்புத் தொழிலில் இறங்கினார் சித்திர குப்தர். கவலைக்கு உள்ளன பிரம்மா, சூரியனை அழைத்து விஷயத்தைக் கூறினார். உடனே சூரியன், மகனை அழைத்தார். மகனே! படைப்புத்தொழில் பிரம்மனுக்கு உரியது என்று மகேஸ்வரனால் முன்பே ஏற்படுத்தப்பட்டுவிட்டது. அதனால் அதில் நீ தலையிடக்கூடாது. நீ பிறந்ததே யமனின் உதவியாளனாக இருந்து, மக்களின் பாவ புண்ணியக் கணக்குகளை கவனித்துக் கொள்ளத்தான். எனவே நீ அங்கு சென்று உயிர்களின் கணக்குகளை யமனுக்கு எடுத்துக் கூறு! அவர் அதற்குத் தகுந்தபடி தண்டனை அளிப்பார். என்று சொல்லி ஆசிர்வதித்தார். அதோடு என்றும் தீரவே தீராத கணக்கு எழுதும் புத்தகத்தையும் அளித்தார்.

அதைச் சிரமேற்கொண்ட சித்திர குப்தர். யமலோகம் சென்று விவரங்களைக் கூறினார். தன் நம்பிக்கைக்குரிய உதவியாளன் கிடைத்து விட்டான் என்று உடனே சம்மதித்தார் யமதர்ம ராஜன். இறையனார்க்கு நன்றியும் தெரிவித்தார். அன்று முதல் இன்று வரை மக்களின் மனதில் ஒளிந்திருக்கும் எண்ணங்களையும் அவர்கள் செய்யும் நல்வினை, தீவினைகளையும் சாரணர்கள் என்ற ஒற்றர்களின் உதவியால் கண்டறிந்து எழுதி வருகிறார் அவர். அனைத்தையும் மிக மிக ரகசியமாகப் பாதுகாப்பதால் சித்திர குப்தர் என்ற பெயர் ஏற்பட்டது. குப்தர் என்றால் ரகசியம் காப்பவர் என்று பொருள். இவர் வலக்காலை ஊன்றி இடக்காலை மடித்து சுகாசன நிலையில் வீற்றிருப்பார். வலது கையில் எழுத்தாணியும் இடக்கையில் சுவடியும் இருக்கும்  மயன் மகள் பிரபாவதி மனுவின் மகள் நீலாவதி, விஸ்வ கர்மாவின் மகள் கர்ணிகி ஆகியோர் இவரது மனைவியர் அக்கிர சந்தானி என்பது இவரது கணக்குப் புத்தகத்தின் பெயர்.

சித்திர புத்திர நயினார் நோன்புக் கதை: பண்டைத் தமிழகத்தில் சித்திர புத்திர நயினார் நோன்பு மிகப் பிரபலமான ஒன்று அன்று விரதமிருந்து கோயில் சென்று அங்கே கூட்டமாகவோ, தனியாவோ அமர்ந்து இவரது கதையைப் படிப்பார்கள். அவ்வாறு செய்தால் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களின் பலன் குறையும் உடல் நலம் சீராக இருக்கும். புண்ணியம் கூடும். வாழ்வில் செல்வம் செழிக்கும் என்பது ஐதிகம்.

இந்த நோன்பு தோன்ற காரணமாகவும் ஒரு புராணக் கதை உண்டு. பல காலம் முன்பாக முக்திபுரி என்ற ஊரில் கலாவதி என்ற இளம்பெண் வாழ்ந்து வந்தாள். ஒரு நாள் அவள் தன் தோழியரோடு வனத்தின் அழகைக்  காணச் சென்றாள். காட்டின் நடுவில் ஒரு சிறுகோயில் இருந்தது. அங்கு சில தேவகன்னியர் பூஜை செய்து கொண்டிருந்தனர். அதில் ஒருத்தி சித்திரகுப்த நயினாரின் கதையைப் படித்துக் கொண்டிருந்தாள். அதிசயமும் ஆச்சரியமும் அடைந்த கலாவதி வெளியில் காத்து நின்றாள். பூஜை முடிந்ததும் தேவகன்னியர் வந்தனர். அவர்களில் ஒருத்தி கலாவதியைப் பார்த்துவிட்டு அவள் அருகில் வந்தாள்.

தேவி! நீங்கள் அனைவரும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? தேவகன்னியர்களான நீங்கள் யாரை வழிபட்டீர்கள்? என்று பணிவாகக் கேட்டாள். அதற்கு அக்கன்னி, பெண்ணே! இன்று சித்ரா பவுர்ணமி. சித்திர குப்தனின் நாளான இன்று அவரது அவதாரக் கதையைப் படித்து விரதம் இருந்து பூஜிப்பவர்களுக்கு வாழ்வில் செல்வம் செழித்தோங்கும்; நல்ல கணவன், நல்ல குழந்தை என அரிய வாழ்க்கைக் கிடைக்கும். ஆண்கள் இதைச் செய்தால் எண்ணிய காரியங்களில் வெற்றியும், இனிமையான இல்லறமும் வாய்க்கும் என்றாள்.

உடனே கலாவதி அந்த பூஜை முறையை எங்களுக்கும் கற்றுத் தந்தருள வேண்டும் என்று வேண்டினாள். அந்த தேவகன்னியும் அவ்வாறே செய்தாள். அது முதல் கலாவதி சித்திர புத்திர நயினார் நோன்பைக் கடைப்பிடித்தாள். அதன் பலனாக ஆகமபுரியின் அரசன் வீரசேனனின் மனைவியாகும் பலனைப் பெற்றாள். சித்திரகுப்த நயினார் நோன்பு கடைப்பிடித்ததால் தான் தனக்கு செல்வச் செழிப்பும், புகழும் மிக்க வாழ்வு கிடைத்தது எனக் கருதி அந்த நோன்பை தரணியெங்கும் பரப்பினாள் கலாவதி. 

இந்த வருடம் சித்திரா பவுர்ணமி மே மாதம் 10-ஆம் தேதி வருகிறது. அன்று சித்திரகுப்தரின் படத்திற்கு முன் பேனா, காகிதம் முதலியவற்றை வைத்து மலர்களால் பூஜித்து வணங்கலாம். பானகம், நீர் மோர் போன்றவற்றை நிவேதனமாகப்  படைத்து அருந்தலாம். மோரிலும் பசும் பாலில் எடுத்த மோர் கூடாது. மற்றொரு புராணத்தின்படி சித்திரகுப்தர் பசுவின் வயிற்றில் இருந்து அவதரித்தவர் என்பதால் சித்ரா பவுர்ணமி அன்று எந்த வகையிலும் பசும் பால், பசுந்தயிர், பசுவெண்ணெய், பசுநெய் என்று எந்தப் பொருளையும் பூஜைக்கு எடுக்கவோ, உண்ணவோ கூடாது. 

அதேபோல அன்றைய தினம் உப்பையும் தவிர்ப்பது அவசியம். சித்திர குப்தரின் கதையையும், கலாவதி அந்த நோன்பை அனுசரித்துப் பயன் பெற்ற கதையையும் வீட்டில் உள்ள பெரியவர்கள் வாசிக்க மற்றவர்கள் கேட்க வேண்டும். சைவ உணவே உட்கொண்டு விரதத்தைக் கடைப்பிடித்தால் சித்திர குப்தரின் அருள் பூரணமாகக் கிட்டும் சீரான உடல் நலமும் செல்வச் செழிப்பும், நிறைந்த புகழ் மிக்க வாழ்வை சித்திர குப்தர் நிச்சயம் தந்தருள்வார். தென்னிந்தியாவில் மொத்தம் 11 இடங்களில் சித்திர குப்தருக்கு சன்னிதி இருந்தாலும் காஞ்சி புரத்தில் மட்டுமே தனியான கோயில் உள்ளது.

பூஜையின் பலன்: சித்ரகுப்த என்பது மறைந்துள்ள படம் எனப்படும். இந்த பூமியில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் நமக்கு மேலான சக்தி ஒன்று (நமக்கு தெரியாமலேயே நமது தோளில் சித்ரகுப்தர்களாக அமர்ந்து) இடைவிடாமல் கண்காணிக்கிறது. இந்த எண்ணத்தை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்வதே சித்ரா பவுர்ணமி பூஜையின் மானசீக பலன் ஆகும்.

இந்த நாளில் சித்ரகுப்தனின் அருள் பெற வேண்டியும், விஷேச பூஜைகளுடன் சிவபெருமானை வழிபடும் நாளாகவும் சித்ரா பவுர்ணமி சிறப்பு பெறுகிறது.

சித்ர குப்தனுக்குரிய வழிபாட்டுப் பாடல்

பாவ புண்ணயம் பதிந்து வைக்கின்ற
தேவ தேவனே! சித்ர குப்தனே!
ஆவல் கொண்டே அகத்தினில் நினைத்துப் 
பூவைச் சூட்டிப் போற்றுகின்றேன் நான்!
எனது பாவத்தின் எண்ணிக்கை குறையவும்
தனது புண்ணியம் தழைத்து ஓங்கவும்
இன்று முதல் நீ இனியதோர் பாதையை
அமைத்துக் கொடுத்தே அருளினைக் காட்டுக!
உணவும் உடையும் உறைவிட மனைத்தும்
தினமும் கிடைக்க திருவருள் கூட்டுக!

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

திருஆலவாய் திருமுறை திருப்பதிகம் 11

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சுந்தரேஸ்வரர், ஸ்ரீ சொக்கநாதர், ஸ்ரீ சோமசுந்தரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மீனாட்சி, ஸ்ரீ அங்கயற்கண்ணி

திருமுறை : ஆறாம் திருமுறை 19 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி
முதிரும் சடைமுடிமேல் முகிழ்வெண் திங்கள் 
வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்
வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத் 
துளைத்தானை சுடு சரத்தால் துவள நீறா 
தூமுத்த வெண்முறுவல் உமையோடு ஆடித் 
திளைத்தானை தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொருளுரை:
எல்லாப் பொருள்களின் தோற்றத்திற்கும் தான் முன்னே நிற்பவனாய், செறிந்த சடைமுடிமேல் பிறையை வளைவாகச் சூடியவனாய், அசுரர்களுடைய மும்மதில்களையும் மேருமலையை வில்லாகவும் வாசுகி என்ற பாம்பினை நாணாகவும் கொண்டு கொடிய அம்பினாலே அழிந்து சாம்பலாகும்படி அழித்தவனாய், தூய முத்துப் போன்ற பற்களை உடைய உமாதேவியோடு விளையாடி மகிழ்ந்தவனாய் அழகிய மதுரை மாநகரத்து ஆலவாய் ஆகிய திருக்கோயிலில் உகந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய திருவடிகளையே தியானிக்கும் வாய்ப்பினை யான் பெற்றுள்ளேனே என்று தாம் பெற்ற பேற்றின் அருமையை உணர்ந்து கூறியவாறாம்.


பாடல் எண் : 02
விண்ணுலகின் மேலார்கள் மேலான் தன்னை
மேலாடு புரமூன்றும் பொடி செய்தானை
பண்ணிலவு பைம்பொழில் சூழ் பழனத்தானைப்
பசும் பொன்னின் நிறத்தானை பால் நீற்றானை
உண்ணிலவு சடைக்கற்றைக் கங்கையாளைக் 
கரந்து உமையோடு உடனாகி இருந்தான் தன்னை
தெண்ணிலவு தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொருளுரை:
தேவருலகிலுள்ள மேலாருக்கும் மேலாயவனாய், வானத்தில் உலவிய முப்புரங்களையும் அழித்தவனாய், வண்டுகளின் பண்ணோசை நிலைபெற்ற பசிய பொழில்களை உடைய பழன நகரில் உள்ளானாய், பசும் பொன்நிறத்தனாய், வெண்ணீறு அணிந்தவனாய், சடைக்கற்றைக்குள் அடங்கிய கங்கையை உடையவனாய், உமையோடு வெளிப்படையாக உடனாகியும் அவளைத் தன் உருவில் மறைத்தும் இருப்பவனாய்த் தெளிந்த ஞானம் உடையார் பலரும் தங்கியிருக்கும் தென் கூடல் ஆலவாயில் உள்ள சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.


பாடல் எண் : 03
நீர்த்திரளை நீள்சடைமேல் நிறைவித்தானை
நிலமருவி நீரோடக் கண்டான் தன்னைப்
பாற்றிரளைப் பயின்றாட வல்லான் தன்னைப்
பகைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தான் தன்னைக்
காற்றிரளாய் மேகத்தினுள்ளே நின்று 
கடுங்குரலாய் இடிப்பானை கண்ணோர் நெற்றித் 
தீத்திரளைத் தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொருளுரை:
கங்கையை நீண்ட சடையில் தங்கச் செய்தவனாய், பின் பகீரதன் பொருட்டாக அதன் ஒரு பகுதியை நிலத்தின்கண் பெருகி ஓடவிட்டவனாய், பால், தயிர், நெய் என்பவற்றின் அபிடேகத்தைப் பலகாலும் உடையவனாய், பகை கொண்டு வந்த கொடிய கூற்றுவனைத் தண்டித்தவனாய், காற்றின் திரட்சியாய் மேகத்தின் உள்ளே இருந்து கொடிய இடியாக ஓசை எழுப்புபவனாய், நெற்றியின் கண் தீத்திரட்சி போன்ற கண்ணை உடையவனாய் உள்ள தென்கூடல் திருவாலவாய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.


பாடல் எண் : 04
வானமிது எல்லாம் உடையான் தன்னை
வரியரவக் கச்சானை வன்பேய் சூழக் 
கானமதில் நடமாட வல்லான் தன்னைக் 
கடைக்கண்ணால் மங்கையையும் நோக்கா என்மேல் 
ஊனமது எல்லாம் ஒழித்தான் தன்னை
உணர்வாகி அடியேனது உள்ளே நின்ற 
தேன்முதைத் தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொருளுரை:
வான் உலகினையும் நிலவுலகினையும் தன் உடைமையாக உடையவனாய்ப் பாம்பினைக் கச்சாக அணிந்தவனாய் வலிய பேய்கள் சூழச்சுடுகாட்டில் கூத்தாட வல்லவனாய், தன் கடைக்கண்களால் உமாதேவியை நோக்கி அவள் பரிந்துரைத்த குறிப்பினையும் பெற்று என்பால் உள்ள குறைகளை எல்லாம் நீக்கினவனாய், அடியேன் உள்ளத்துள்ளே ஞானவடிவினனாய் நின்று தேன் போலவும் அமுது போலவும் இனியனாய் உள்ள தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.


பாடல் எண் : 05
ஊரானை உலகேழாய் நின்றான் தன்னை
ஒற்றை வெண் பிறையானை உமையோடு என்றும் 
பேரானை பிறர்க்கு என்றும் அரியான் தன்னை
பிணக்காட்டில் நடமாடல் பேயோடு என்றும் 
ஆரானை அமரர்களுக்கு அமுது ஈந்தானை
அருமறையால் நான்முகனும் மாலும் போற்றும் 
சீரானை தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொருளுரை:
கயிலை மலையை இருப்பிடமாக உடையவனாய், ஏழுலகமும் பரந்து இருப்பவனாய், ஒற்றைப்பிறையை அணிந்தவனாய், உமாதேவியை விடுத்து என்றும் நீங்காதவனாய், அடியார் அல்லாதார் நினைத்தற்கு அரியனாய், பேயோடு எந்நாளும் சுடுகாட்டில் கூத்தாடுதலில் தெவிட்டாதவனாய், தான் விடத்தை உண்டு அமரர்களுக்கு அமுதம் ஈந்தவனாய், வேதமந்திரங்களைக் கூறிப் பிரமனும் திருமாலும் துதிக்கும் புகழுடையவனாய் உள்ள தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.


பாடல் எண் : 06
மூவனை மூர்த்தியை மூவா மேனி 
உடையானை மூவுலகும் தானே எங்கும் 
பாவனை பாவம் அறுப்பான் தன்னைப் 
படியெழுதல் ஆகாத மங்கையோடும் 
மேவனை விண்ணோர் நடுங்கக் கண்டு
விரிகடலின் நஞ்சுண்டு அமுதம் ஈந்த 
தேவனை தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொருளுரை:
யாவரினும் முற்பட்டவனாய், அடியார்கள் விரும்பிய வடிவில் காட்சி வழங்குபவனாய், என்றும் மூத்தலில்லாத திருமேனியை உடையவனாய், தானே மூவுலகம் முழுதும் பரவியிருப்பவனாய், அடியவர்களின் தீவினையைப் போக்குபவனாய், ஓவியத்து எழுதவொண்ணா அழகிய உமையோடு விரும்பி யிருப்பவனாய், தேவர்கள் நடுங்குதலைக் கண்டு கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அமுதத்தை ஈந்த தேவனாய் உள்ள தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.


பாடல் எண் : 07
துறந்தார்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைத்
துன்பம் துடைத்தாள வல்லான் தன்னை
இறந்தார்கள் என்பே அணிந்தான் தன்னை
எல்லி நடமாட வல்லான் தன்னை
மறந்தார் மதில் மூன்றும் மாய்த்தான் தன்னை
மற்றொரு பற்றில்லா அடியேற்கு என்றும் 
சிறந்தானை தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொருளுரை:
பற்றறுத்த சான்றோருக்குப் பற்றுக்கோடாகும் வழியாய் இருப்பவனாய், அடியார்களுடைய துன்பத்தைப் போக்கி அவர்களை ஆட்கொள்ள வல்லவனாய், இறந்தவர்களுடைய எலும்பையே அணிந்தவனாய், இரவில் கூத்தாட வல்லவனாய்த் தன்னை மறந்த அசுரர்களின் மும்மதில்களையும் அழித்தவனாய், வேறுபற்றில்லாத அடியார்களுக்கு என்றும் மேம்பட்டு அருளுபவனாய் உள்ள தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.


பாடல் எண் : 08
வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானை கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்
தூயானை தூவெள்ளை ஏற்றான் தன்னைச்
சுடர்த் திங்கள் சடையானை தொடர்ந்து நின்ற என் 
தாயானை தவமாய தன்மையானைத் 
தலையாய தேவாதி தேவர்க்கு என்றும் 
சேயானைத் தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொருளுரை:
அடியார்களுடைய வாயுள்ளும் மனத்துள்ளும் மனத்தில் தோன்றும் எண்ணத்துள்ளும் தங்கி, அவர்களுடைய விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுபவனாய், மாசற்றவனாய், கலப்பற்ற வெள்ளை நிறக் காளையை உடையவனாய், பிறையைச் சடையில் சூடியவனாய், தொடர்ந்து எனக்குத் தாய்போல உதவுபவனாய்த் தவத்தின் பயனாக உள்ளவனாய், மேம்பட்ட தேவர்கள் தலைவராய திருமால் பிரமன் இந்திரன் முதலியவர்களுக்கு என்றும் சேய்மையிலுள்ளவனாய் இருக்கும் தென் கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.


பாடல் எண் : 09
பகைச்சுடராய்ப் பாவம் அறுப்பான் தன்னைப்
பழியிலியாய் நஞ்சுண்டு அமுது ஈந்தானை
வகைச்சுடராய் வல்லசுரர் புரம் அட்டானை
வளைவிலியா எல்லார்க்கும் அருள் செய்வானை
மிகைச்சுடரை விண்ணவர்கள் மேல் அப்பாலை
மேலாய தேவாதி தேவர்க்கு என்றும் 
திகைச்சுடரைத் தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொருளுரை:
தீவினையாகிய இருளைப் போக்கும் ஞானச் சுடராய், அடியார்களின் பாவங்களைப் போக்குபவனாய்ப் பழி ஏதும் இல்லாதவனாய் நஞ்சினை உண்டு தேவர்க்கு அமுதம் ஈந்தவனாய்க் கிளைத்தெழுந்த தீயாகி அசுரருடைய மும்மதில்களையும் அழித்தவனாய், நடுவுநிலை தவறாதவனாய் எல்லா உயிர்களுக்கும் அருள் செய்பவனாய், மேலான ஒளிவடிவினனாய், விண்ணவர்களுக்கு மேலும் உயர்வுதரும் அப்பக்தியாய் உள்ளவனாய், மேம்பட்ட தேவர்களுக்கும் ஒளிகாட்டும் கலங்கரை விளக்காக உள்ள தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.


பாடல் எண் : 10
மலையானை மாமேரு மன்னினானை 
வளர்புன் சடையானை வானோர் தங்கள் 
தலையானை என் தலையின் உச்சி என்றும்
தாபித்து இருந்தானை தானே எங்கும் 
துலையாக ஒருவரையும் இல்லாதானைத்
தோன்றாதார் மதில் மூன்றும் துவள எய்த 
சிலையானை தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொருளுரை:
கயிலை மலையை உடையவனாய், மேரு மலையில் தங்கியிருப்பவனாய், வளர்ந்த செஞ்சடையினனாய், வானோருள் மேம்பட்டவனாய், என் தலையின் உச்சியில் என்றும் நிலைபெற்றிருப்பவனாய், எங்கும் தனக்கு நிகராவார் இல்லாதவனாய்த் தன்னை அணுகாது பகையைப்பூண்ட அசுரர் மதில்கள் மூன்றும் அழியுமாறு பயன்படுத்திய வில்லை உடையவனாய் இருக்கும் தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.


பாடல் எண் : 11
தூர்த்தனைத் தோள் முடிபத்து இறுத்தான் தன்னைத்
தொன்னரம்பின் இன்னிசை கேட்டு அருள் செய்தானைப் 
பார்த்தனைப் பணி கண்டு பரிந்தான் தன்னைப் 
பரிந்தவற்குப் பாசுபதம் ஈந்தான் தன்னை 
ஆத்தனை அடியேனுக்கு அன்பன் தன்னை 
அளவிலாப் பல்லூழி கண்டு நின்ற 
தீர்த்தனைத் தென்கூடல் திருஆலவாய்ச் 
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொருளுரை:
பிறன் மனைவியை விரும்பிய இராவணனுடைய தோள்களையும் பத்துத் தலைகளையும் நசுக்கியவனாய், பின் அவன் எழுப்பிய வீணை இசைகேட்டு அருள் செய்தவனாய் அருச்சுனனுடைய தொண்டினைக் கண்டு அவனுக்கு இரங்கிப் பாசுபதாத்திரம் ஈந்தவனாய், நம்பத்தகுந்தவனாய், அடியேன் மாட்டு அன்பு உடையவனாய், அளவற்ற பல ஊழிக்காலங்களையும் கண்டும் தன் நிலைபேற்றில் மாறுபடாது இருக்கும் பரிசுத்தனாகிய தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருஆலவாய் தேவாரப் பதிகங்கள் முற்றிற்று --- ||

|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

ஞாயிறு, 7 மே, 2017

திருஆலவாய் திருமுறை திருப்பதிகம் 10

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சுந்தரேஸ்வரர், ஸ்ரீ சொக்கநாதர், ஸ்ரீ சோமசுந்தரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மீனாட்சி, ஸ்ரீ அங்கயற்கண்ணி

திருமுறை : நான்காம் திருமுறை 62 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
வேதியா வேதகீதா விண்ணவர் அண்ணா என்று என்று
ஓதியே மலர்கள் தூவி ஒடுங்கி நின் கழல்கள் காண
பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியஞ் சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.

பொருளுரை:
மறைமுதல்வனே! மறைகளைப் பாடுகின்றவனே! தேவர்கள் தலைவனே! பார்வதிபாகனே! பரவிய சடையிற் பிறையைச் சூடும் ஆதிப்பெருமானே! திருஆலவாயிலுள்ள அப்பனே! உன்திரு நாமங்களைப் பலகாலும் ஓதி மலர்கள் தூவி ஒருவழிப்பட்ட மனத்தோடு உன்திருவடிகளை அடியேன் காணுமாறு அருள் செய்வாயாக.


பாடல் எண் : 02
நம்பனே நான்முகத்தாய் நாதனே ஞான மூர்த்தீ
என்பொனே ஈசா என்று என்று ஏத்தி நான் ஏசற்று என்றும்
பின்பினே திரிந்து நாயேன் பேர்த்து இனிப் பிறவா வண்ணம்
அன்பனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.

பொருளுரை:
எல்லோராலும் விரும்பப்படுபவனே! நான்கு முகங்களை உடையவனே! தலைவனே! ஞான வடிவினனே! என் பொன் போன்றவனே! எல்லோரையும் ஆள்பவனே! அன்பனே! ஆலவாயில் அப்பனே! உன்னைப் பலகாலும் துதித்து அடியேன் மனத்திரிபுகளை நீக்கி, பொறிபுலன்களின் வழியே சென்று பிறவாத வண்ணம் நாயேனுக்கு அருள் செய்வாயாக.


பாடல் எண் : 03
ஒரு மருந்தாகி உள்ளாய் உம்பரோடு உலகுக்கு எல்லாம்
பெரு மருந்தாகி நின்றாய் பேர் அமுதின் சுவையாய்க்
கரு மருந்தாகி உள்ளாய் ஆளும் வல்வினைகள் தீர்க்கும்
அரு மருந்து ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.

பொருளுரை:
ஒப்பற்ற தேவாமிருதமாய் உள்ளவனே! தேவர்களுக்கும் மக்களுக்கும் தலையான மருந்தாக உள்ளவனே! சிறந்த அமுதின் சுவையாய்ப் பிறவிப் பிணி தீர்க்கும் மருந்தாகி உள்ளவனே! எங்கள் வலிய வினைகளைப் போக்கி எங்களை அடிமை கொள்ளும் அருமருந்தாய் ஆலவாயில் உறையும் தலைவனே! அருள் செய்வாயாக.


பாடல் எண் : 04
செய்யநின் கமல பாதம் சேருமா தேவர் தேவே
மையணி கண்டத்தானே மான் மறி மழுவொன்று ஏந்தும்
சைவனே சால ஞானம் கற்று அறிவிலாத நாயேன்
ஐயனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.

பொருளுரை:
தேவர் தேவனே! நீலகண்டனே! மான் மறியையும் மழுப்படையையும் ஏந்தியுள்ளவனாய சைவ சமயக்கடவுளே! ஞானத்தை முறையாகக் கற்றறியும் வாய்ப்பு இல்லாத அடியேனுடைய தலைவனே! ஆலவாயில் உறையும் அப்பனே! உன்னுடைய சிவந்த தாமரை போன்ற பாதங்களை அடியேன் சேரும்படி மிகவும் அருள் செய்வாயாக.


பாடல் எண் : 05
வெண் தலை கையிலேந்தி மிகவுமூர் பலி கொண்டு என்றும்
உண்டதும் இல்லை சொல்லில் உண்டது நஞ்சு தன்னைப்
பண்டுனை நினைய மாட்டாப் பளகனேன் உளமதார
அண்டனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.

பொருளுரை:
உலகத் தலைவனே! ஆலவாய் அப்பனே! வெள்ளிய மண்டையோட்டைக் கையில் ஏந்தி மிகவும் ஊர்களில் பிச்சையெடுத்தும் அப்பிச்சை உணவை உண்ணாது விடம் ஒன்றையே உண்டவன் என்று சொல்லப்படும் உன்னை அடியேன் வாழ்வின் முற்பகுதியில் விருப்புற்று நினைக்காத குற்றத்தினேன். அத்தகைய அடியேனுடைய உள்ளம் நிறையும்படி அருள் செய்வாயாக.


பாடல் எண் : 06
எஞ்சலில் புகலிது என்று என்று ஏத்தி நான் ஏசற்று என்றும்
வஞ்சகம் ஒன்றும் இன்றி மலரடி காணும் வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருட் பதமே நாயேற்கு
அஞ்சல் என்று ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.

பொருளுரை:
விடத்தைக் கழுத்தில் அடக்கிய, சிவம் என்ற சொற் பொருளானவனே! ஆலவாயில் அப்பனே! என்றும் அழிவில்லாத அடைக்கலமாகும் இடம் என்று புகழ்ந்து நான் மகிழ்ந்து என்றும் வஞ்சனையின்றி உன் மலர் போன்ற திருவடிகளைத் தரிசிக்கும் வண்ணம் நாயேனுக்கு அஞ்சாதே என்று அருள் செய்வாயாக.


பாடல் எண் : 07
வழுவிலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன் உன்
செழுமலர்ப் பாதம் காணத் தெண்திரை நஞ்சம் உண்ட
குழகனே கோலவில்லீ கூத்தனே மாத்தாயுள்ள
அழகனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.

பொருளுரை:
தெள்ளிய அலையில் தோன்றிய விடத்தை உண்ட இளையோனே! அழகிய வில்லை ஏந்தியவனே! கூத்தனே! மாற்றுயர்ந்த தங்கம் போன்றுள்ள அழகனே! ஆலவாயில் பெருமானே! குறைபாடில்லாமல் உன்னை வாழ்த்தி வழிபடும் அடியவனாகிய யான் உன்னுடைய செழித்த மலர்போன்ற திருவடிகளைத் தரிசிக்குமாறு அருள் செய்வாயாக.


பாடல் எண் : 08
நறுமலர் நீரும் கொண்டு நாள்தொறும் ஏத்தி வாழ்த்திச்
செறிவன சித்தம் வைத்துத் திருவடி சேரும் வண்ணம்
மறிகடல் வண்ணன் பாகா மாமறை அங்கம் ஆறும்
அறிவனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.

பொருளுரை:
கடல் நிறத்தவனான திருமாலை உடலின் ஒரு பாகமாக உடையவனே! மேம்பட்ட வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அறிபவனே! ஆலவாயில் அப்பனே! நறியமலர்களையும் தீர்த்தங்களையும் கொண்டு நாள்தோறும் புகழ்ந்து வாழ்த்தித் திருவடிகளைச் செறிதற்குரிய வழிகளை உள்ளத்துக் கொண்டு உன் திருவடிகளை அடியேன் சேரும் வண்ணம் அருள் செய்வாயாக.


பாடல் எண் : 09
நலந்திகழ் வாயில் நூலால் சருகு இலைப் பந்தர் செய்த
சிலந்தியை அரசது ஆள அருளினாய் என்று திண்ணம்
கலந்துடன் வந்து நின் தாள் கருதி நான் காண்பதாக
அலந்தனன் ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.

பொருளுரை:
நன்மைகள் விளங்குதற்குக் காரணமான தன் வாயினால் நூற்கப்பட்ட நூலினாலே சருகான இலைகள் விழுந்து தங்கி நிழல் தரும் பந்தலாக அமைத்த சிலந்தியை மறுபிறப்பில் அரசாளும் மன்னனாகப் பிறக்குமாறு அருள்செய்தாய் என்று உள்ளத்திலே உட்கொண்டு வந்து உன் திருவடிகளைக் காணவருந்தும் அடியேன் காணுமாறு ஆலவாயில் அப்பனாகிய நீ அருள் செய்வாயாக.


பாடல் எண் : 10
பொடிக்கொடு பூசி பொல்லாக் குரம்பையில் புந்தி ஒன்றிப்
பிடித்து நின் தாள்கள் என்றும் பிதற்றி நான் இருக்க மாட்டேன்
எடுப்பன் என்று இலங்கைக் கோன் வந்து எடுத்தலும் இருபது தோள்
அடர்த்தனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.

பொருளுரை:
திருநீற்றைப் பூசி அழகில்லாத இந்த உடலிலே மனம் ஒரு வழிப்பட்டு உன் திருவடிகளைப் பற்றி என்றும் அவற்றின் பெருமையை அடைவுகேடாகப் பேசிய வண்ணம் காலம் போக்க இயலாதேனாய் உள்ளேன். கயிலையைப் பெயர்ப்பேன் என்று கருதி இராவணன் வந்து அம்மலையை எடுக்க முயன்ற அளவில் அவனுடைய இருபது தோள்களையும் வருத்திய ஆலவாயில் பெருமானே! அடியேனுக்கு அருள் செய்வாயாக.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||