சனி, 6 மே, 2017

திருஆலவாய் திருமுறை திருப்பதிகம் 09

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சுந்தரேஸ்வரர், ஸ்ரீ சொக்கநாதர், ஸ்ரீ சோமசுந்தரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மீனாட்சி, ஸ்ரீ அங்கயற்கண்ணி

திருமுறை : மூன்றாம் திருமுறை 120 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாள்தொறும் பரவ
பொங்கழல் உருவன் பூதநாயகன் நால்வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே.

பொருளுரை:
மங்கையர்க்கரசியார் சோழ மன்னரின் புதல்வி. கைகளில் வரிகளையுடைய வளையல்களை அணிந்தவர். பெண்மைக்குரிய மடம் என்னும் பண்புக்குரிய பெருமையுடையவர். தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளுக்கு ஒப்பானவர். பாண்டிய மன்னனின் பட்டத்தரசி. சிவத்தொண்டு செய்து நாள்தோறும் சிவபெருமானைப் போற்றி வழிபடும் தன்மையுடையவர். அச்சிவபெருமான் ஓங்கி எரியும் நெருப்புப் போன்று சிவந்த வண்ணமுடைய தூய உருவினர். உயிர்கட்கெல்லாம் தலைவர். நான்கு வேதங்களையும், அவற்றின் பொருள்களையும் அருளிச் செய்தவர். அப்பெருமான் அங்கயற் கண்ணி உடனாக வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவேயாகும்.


பாடல் எண் : 02
வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளை நீறணியும்
கொற்றவன் தனக்கு மந்திரியாய குலச்சிறை குலாவி நின்று ஏத்தும்
ஒற்றை வெள்விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை ஒழிந்திட்டு
அற்றவர்க்கு அற்ற சிவன் உறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.

பொருளுரை:
பற்றற்ற உள்ளத்தோடு, சிவனடியார்களைக் காணும்போது கீழே விழுந்து அவர் திருவடிகளை வணங்கும் பக்தியுடையவரும், திருவெண்ணீறு திருஞானசம்பந்தரால் பூசப்பெறும் புண்ணியப் பேறுடையவனாகிய பாண்டிய மன்னனுக்கு அமைச்சருமாகிய குலச்சிறை நாயனார் மகிழ்வோடு வணங்கித் துதிக்கும் சிவபெருமான் ஒப்பற்ற வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவர். தேவர்களின் தலைவர். உலகியல்புகளை வெறுத்து அகப்பற்று, புறப்பற்று ஆகியவற்றைக் கைவிட்டுத் தம்மையே கருதும் அன்பர்க்கு அன்பராய் விளங்குபவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவேயாகும். 


பாடல் எண் : 03
செந்துவர் வாயாள் சேலன கண்ணாள் சிவன் திருநீற்றினை வளர்க்கும்
பந்தணை விரலாள் பாண்டிமா தேவி பணிசெயப் பாரிட நிலவும்
சந்தமார் தரளம் பாம்பு நீர் மத்தம் தண் எருக்கம் மலர் வன்னி
அந்தி வான்மதி சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே.

பொருளுரை:
மங்கையர்க்கரசியார் சிவந்த பவளம் போன்ற வாயையுடையவர். சேல் மீன் போன்ற கண்களை உடையவர். சிவபெருமானது திருநீற்றின் பெருமையை வளர்ப்பவர். விரல் நுனி பந்து போன்று திரட்சியுடைய பாண்டிமா தேவியார் சிவத்தொண்டு செய்ய, உலகில் சிறந்த நகராக விளங்குவதும், அழகிய முத்துக்கள், பாம்பு, கங்கை, ஊமத்தை, குளிர்ச்சி பொருந்திய எருக்க மலர், வன்னி மலர், மாலை நேரத்தில் தோன்றும் பிறைச்சந்திரன் இவற்றை சடைமுடியில் அணிந்துள்ள தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளுவதும் ஆகிய திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவேயாகும்.


பாடல் எண் : 04
கணங்களாய் வரினும் தமியராய் வரினும் அடியவர் தங்களைக் கண்டால்
குணங்கொடு பணியும் குலச்சிறை குலாவும் கோபுரம் சூழ் மணிக்கோயில்
மணங்கமழ் கொன்றை வாளரா மதியம் வன்னி வண் கூவிள மாலை
அணங்கு வீற்றிருந்த சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே.

பொருளுரை:
சிவனடியார்கள் கூட்டமாக வந்தாலும், தனியராக வந்தாலும், அவர்களைக் காணும்போது அவர்களின் குணச்சிறப்புக்களைக் கூறி, வழிபடும் தன்மையுடைய குலச்சிறையார் வழிபாடு செய்யும், கோபுரங்கள் சூழ்ந்த அழகிய கோயிலைக் கொண்டதும், மணம் கமழும் கொன்றை, பாம்பு, சந்திரன், வன்னி, வில்வம், கங்கை இவை விளங்கும் சடைமுடியுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுவதும் ஆகிய திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவேயாகும்.


பாடல் எண் : 05
செய்ய தாமரைமேல் அன்னமே அனைய சேயிழை திருநுதற் செல்வி
பையரவு அல்குல் பாண்டிமா தேவி நாள்தொறும் பணிந்து இனிது ஏத்த
வெய்யவேற் சூலம் பாசம் அங்குசம் மான் விரிகதிர் மழுவுடன் தரித்த
ஐயனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே. 

பொருளுரை:
சிவந்த தாமரைமலர் மேல் வீற்றிருக்கும் இலக்குமி போன்று அழகுடையவரும், சிறந்த ஆபரணங்களை அணிந்துள்ள வரும், அழகிய நெற்றியையும், பாம்பின் படம் போன்ற அல்குலையும் உடையவருமான பாண்டிமா தேவியாராகிய மங்கையர்க்கரசியார் நாள்தோறும் மனமகிழ்வோடு வழிபாடு செய்து போற்ற, வேல், சூலம், பாசம், அங்குசம், மான், மழு ஆகியவற்றைத் தாங்கியுள்ள சிவபெருமான் உமாதேவியோடு இன்புற்று வீற்றிருந்தருளுகின்ற திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவேயாகும்.


பாடல் எண் : 06
நலமிலராக நலமது உண்டாக நாடவர் நாடு அறிகின்ற
குலமிலராகக் குலமது உண்டாக தவம் பணி குலச்சிறை பரவும்
கலைமலி கரத்தன் மூவிலை வேலன் கரியுரி மூடிய கண்டன்
அலைமலி புனல்சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே.

பொருளுரை:
நல்ல குணங்களை உடையவராயினும், அவை இல்லாதவராயினும், எந்த நாட்டவராயினும், நாடறிந்த உயர்குடியிற் பிறந்தவராயினும், பிறவாதாராயினும் அடியவர்களைக் காணும்போது அவர்களை வணங்கி வழிபடுதலையே தவமாகக் கொண்டவர் குலச்சிறையார். அத்தகைய குலச்சிறையார் வழிபடுகின்ற, மான் ஏந்திய கையினரும், மூவிலைச் சூலத்தவரும், வேலரும், யானைத் தோலைப் போர்த்த நீலகண்டரும், கங்கையைத் தாங்கிய சடை முடியை உடையவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவேயாகும்.


பாடல் எண் : 07
முத்தின் தாழ்வடமும் சந்தனக் குழம்பும் நீறுந்தன் மார்பினின் முயங்கப்
பத்தியார்கின்ற பாண்டிமா தேவி பாங்கொடு பணிசெய நின்ற
சுத்தமார் பளிங்கின் பெருமலையுடனே சுடர் மரகதம் அடுத்தாற்போல்
அத்தனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.

பொருளுரை:
முத்து மாலையும், சந்தனக் குழம்பும், திருநீறும் தம் மார்பில் விளங்கப் பக்தியோடு பாண்டிமா தேவியாரான மங்கையர்க்கரசியார் வழிபடுகின்ற, தூய பளிங்குமலை போன்ற சிவபெருமானும், சுடர்விடு மரகதக்கொடி போன்ற உமாதேவியும் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவேயாகும்.


பாடல் எண் : 08
நாவணங்கு இயல்பாம் அஞ்செழுத்தோதி நல்லராய் நல் இயல்பு ஆகும்
கோவணம் பூதி சாதனம் கண்டால் தொழுது எழு குலச்சிறை போற்ற
ஏவணங்கு இயல்பாம் இராவணன் திண்தோள் இருபதும் நெரிதர ஊன்றி
ஆவணம் கொண்ட சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே.

பொருளுரை:
நாவிற்கு அழகு செய்யும் இயல்பினதாகிய திருவைந்தெழுத்தை ஓதி, நல்லவராய், நல்லியல்புகளை அளிக்கும் கோவணம், விபூதி, உருத்திராக்கம் முதலிய சிவ சின்னங்கள் அணிந்தவர்களைக் கண்டால் வணங்கி மகிழ்பவர் குலச்சிறை நாயனார். அவர் வழிபாடு செய்கின்ற, பகைவரது அம்புகள் பணிந்து அப்பாற் செல்லும் பெருவலிமை படைத்த இராவணனின் இருபது தோள்களும் நெரியுமாறு தம் திருப்பாதவிரலை ஊன்றிப் பின் அவனைச் சிவ பக்தனாகும்படி செய்தருளிய சடைமுடியுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே.


பாடல் எண் : 09
மண்ணெலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச் சோழன் தன் மகளாம்
பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி பாங்கினால் பணி செய்து பரவ
விண்ணுளார் இருவர் கீழொடு மேலும் அளப்பரிதாம் வகை நின்ற
அண்ணலார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.

பொருளுரை:
உலகம் முழுவதும் தனது செங்கோல் ஆட்சி நிகழ் மன்னனாய் விளங்கிய மணிமுடிச் சோழனின் மகளார், மங்கையர்க்கரசியார். பண்ணிசை போன்ற மொழியுடையவர். பாண்டிய மன்னனின் பட்டத்தரசியார். அத்தேவியார் அன்போடு வழிபாடு செய்து போற்றுகின்ற, விண்ணிலுள்ள திருமாலும், பிரமனும் கீழும் மேலுமாய்ச் சென்று இறைவனின் அடிமுடி தேட முயன்று காண முடியாவண்ணம் அனற்பிழம்பாய் நின்ற சிவபெருமான் உமாதேவியோடு மகிழ்ந்து வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே.


பாடல் எண் : 10
தொண்டராய் உள்ளார் திசை திசைதொறும் தொழுது தன் குணத்தினைக் குலாவக்
கண்டு நாள்தோறும் இன்புறுகின்ற குலச்சிறை கருதி நின்று ஏத்த
குண்டராய் உள்ளார் சாக்கியர் தங்கள் குறியின் கண் நெறி இடை வாரா
அண்ட நாயகன் தான் அமர்ந்து வீற்றிருந்த ஆலவாய் ஆவதும் இதுவே.

பொருளுரை:
சிவத்தொண்டர்கள் எல்லாத் திசைகளிலும் சிவபெருமானைத் தொழுது, அவர் அருட்குணத்தைப் போற்றி, அருட்செயல்களை மகிழ்ந்து கூறக்கேட்டு இன்புறும் தன்மையுடையவர் குலச்சிறையார். அவர் பக்தியுடன் வழிபடுகின்ற, புத்த, சமணத்தைப் பின்பற்றுபவர் கொள்ளும் குறியின்கண் அடங்காத நெறியுடைய, இவ்வண்டத்துக்கெல்லாம் நாயகனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருத்தலம் இதுவேயாகும்.


பாடல் எண் : 11
பன்னலம் புணரும் பாண்டிமா தேவி குலச்சிறை எனும் இவர் பணியும்
அந்நலம் பெறுசீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கவை போற்றி
கன்னலம் பெரிய காழியுள் ஞானசம்பந்தன் செந்தமிழ் இவை கொண்டு
இன்னலம் பாட வல்லவர் இமையோர் ஏத்த வீற்றிருப்பவர், இனிதே.

பொருளுரை:
பலவகைச் செல்வ நலன்களும் வாய்க்கப் பெற்ற பாண்டிமா தேவியாராகிய மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையார் என்னும் மந்திரியாரும் வழிபட்டுப் போற்ற அவ்விருவர் பணிகளையும் ஏற்றருளும் சிறப்புடைய திருஆலவாய் இறைவன் திருவடிகளைப் போற்றி, கருப்பங் கழனிகளையுடைய சீகாழிப் பதியில் அவதரித்த ஞானசம்பந்தர் அருளிய செந்தமிழ்ப் பாமாலையாகிய இத்திருப்பதிகத்தை இன்னிசையோடு ஓதவல்லவர்கள் தேவர்கள் வணங்கச் சிவலோகத்தில் வீற்றிருப்பர்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக