செவ்வாய், 2 மே, 2017

திருஆலவாய் திருமுறை திருப்பதிகம் 06

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சுந்தரேஸ்வரர், ஸ்ரீ சொக்கநாதர், ஸ்ரீ சோமசுந்தரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மீனாட்சி, ஸ்ரீ அங்கயற்கண்ணி

திருமுறை : மூன்றாம் திருமுறை 52 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
வீடலால வாயிலாய் விழுமியார்கள் நின்கழல்
பாடலால வாயிலாய் பரவ நின்ற பண்பனே
காடலால வாயிலாய் கபாலி நீள் கடிம்மதில்
கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே.

பொருளுரை:
வீடுபேற்றிலன்றி வேறொன்றில் விருப்பம் இல்லாதவராய் மெய்ஞ்ஞானிகள் உம் திருவடிகளைப் போற்றிப்பாட, அவர்தம் வாக்கினிடமாக விளங்குபவரே! அவர்கள் துதித்துப் போற்றுகின்ற பண்புகள் பலவற்றை உடையவரே! சுடுகாட்டைத் தவிர வேறோர் இடத்தை விரும்பி நில்லாதவரே! கபாலி என்னும் பெயரையுடையவராய், மதில் சூழப்பெற்ற நான்மாடக்கூடல் என்னும் திருஆலவாயில் எழுந்தருளியுள்ள பெருமானாரே! நீர் மதுரையம்பதியில் குலாவி விளையாடுவது எம்மால் அறியும் அறியுந்தரத்ததன்று.


பாடல் எண் : 02
பட்டிசைந்த அல்குலாள் பாவையாள் ஒர்பாகமா
ஒட்டிசைந்த அன்றியும் உச்சியாள் ஒருத்தியாக்
கொட்டிசைந்த ஆடலாய் கூடல் ஆலவாயிலாய்
எட்டிசைந்த மூர்த்தியாய் இருந்தவாறு இது என்னையே.

பொருளுரை:
பட்டாடை அணிந்த திருமேனியுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகப் பிரியாவண்ணம் கொண்டதோடு, சடைமுடியின் உச்சியில் கங்கா தேவியையும் தாங்கியவரே! கொட்டு என்னும் பறை முழங்க ஆடுபவரே! கூடல் ஆலவாயில் வீற்றிருந்து அருள்பவரே! அட்டமூர்த்தியாய் விளங்கும் சிவபெருமானே! உம் அருள்தன்மை எம்மால் எடுத்தியம்ப வல்லதோ.


பாடல் எண் : 03
குற்றம் நீ குணங்கள் நீ கூடல் ஆலவாயிலாய்
சுற்றம் நீ பிரானும் நீ தொடர்ந்திலங்கு சோதி நீ
கற்ற நூல் கருத்தும் நீ அருத்தம் இன்பம் என்று இவை
முற்றும் நீ புகந்து முன் உரைப்பது என் முகம்மனே.

பொருளுரை:
திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே! நீரே உயிர்க்குள் உயிராய் ஒன்றி உடனிருந்து இயக்குகிறீர். ஆதலால் எனது குற்றமும் நீரே, குணமும் நீரே, என் சுற்றமும் தலைவரும் நீரே. என்னுள்ளிருக்கும் அறியாமையாகிய இருளை நீக்கி அறிவொளி தொடர்ந்தொளிரச் செய்யும் சோதி நீரே. பொதுவும், சிறப்புமாகிய வேத, ஆகம நூல்களில் கருத்தும் நீரே. நூல்களில் உட்பொருளை அடியேன் நனிவிளங்கச் செய்பவரும், அவ்விளக்கத்தால் இன்பம் அடையச் செய்பவரும் நீரே. உம் திருமுன் அடியேன் இவ்வாறு உம்மைப் புகழ்வது உண்மையேயன்றி வெறும் புகழ்ச்சியன்று.


பாடல் எண் : 04
முதிரும் நீர்ச் சடைமுடி முதல்வ நீ முழங்கழல்
அதிர வீசி ஆடுவாய் அழகன் நீ புயங்கன் நீ
மதுரன் நீ மணாளன் நீ மதுரை ஆலவாயிலாய்
சதுரன் நீ சதுர்முகன் கபாலம் ஏந்து சம்புவே.

பொருளுரை:
மதுரை என வழங்கும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவனே! தூயகங்கையைச் சடைமுடியில் தாங்கிய முதல்வன் நீ. சப்தத்துடன் எரியும் நெருப்பிடையே நின்று நிலமதிர ஆடுபவன் நீ. அழகன் நீ. பாம்பை ஆபரணமாக அணிந்தவன் நீ. வரம்பில் இன்பம் உடையவன் நீ. மணவாளன் நீ. மதுரை எனப்படும் ஆலவாயில் வீற்றிருந்தருளுபவன் நீ. சாமர்த்தியமுடையவன் நீ. பிரமகபாலமேந்திப் பலியேற்றுத் திரியும் சிவபிரான் நீ.


பாடல் எண் : 05
கோலமாய நீண்மதிற் கூடல் ஆலவாயிலாய்
பாலனாய தொண்டு செய்து பண்டும் இன்றும் உன்னையே
நீலமாய கண்டனே நின்னை அன்றி நித்தலும்
சீலமாய சிந்தையில் தேர்வது இல்லை தேவரே.

பொருளுரை:
அழகிய நீண்ட மதில்களையுடைய கூடலில் விளங்கும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் பெருமானே! மார்க்கண்டேயர், சண்டேசுரர் போன்ற பாலர்கள் சிவபூசை செய்து பண்டைக் காலத்தும், இக்காலத்தும் வழிபட விளங்கும் நீலகண்டனே. தேவர்கள் உன்னையன்றிப் பிற தெய்வங்களைத் தமது தூயசிந்தையில் கொள்ளாதவராய் வாழ்கின்றனர்.


பாடல் எண் : 06
பொன் தயங்கு இலங்கு ஒளி நலம் குளிர்ந்த புன்சடை
பின் தயங்க ஆடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலீ
கொன்றையம் முடியினாய் கூடல் ஆலவாயிலாய்
நின்றயங்கி ஆடலே நினைப்பதே நியமமே.

பொருளுரை:
பொன்போல் ஒளிரும் அழகிய சடைமுடி பின்னால் தாழ்ந்து அசைய நடனம் ஆடுபவரே! தலைக்கோலம் உடையவரே! பிறப்பற்றவரே! கொன்றைமாலை சூடிய முடி உடையவரே! நான்மாடக் கூடலில் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே! உம் ஒளிமயமான திருநடனத்தை நினைத்து இன்புற்றிருப்பதே உயிர்கள் உய்தி பெறுதற்குரிய நியமம் ஆகும்.


பாடல் எண் : 07
ஆதி அந்தம் ஆயினாய் ஆலவாயில் அண்ணலே
சோதி அந்தம் ஆயினாய் சோதியுள்ளொர் சோதியாய்
கீதம் வந்த வாய்மையால் கிளர் தருக்கினார்க்கு அல்லால்
ஓதி வந்த வாய்மையால் உணர்ந்து உரைக்கல் ஆகுமே.

பொருளுரை:
உலகத் தோற்றத்திற்கும், ஒடுக்கத்திற்கும் நிமித்த காரணராய் விளங்கும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே! பேரொளிப் பிழம்பாக விளங்குபவரே! பெருஞ்சோதிக்குள் சோதியாய் ஒளிர்பவர்நீர். உபதேச வழியாகச் சிவஞானம் பெற்ற பக்குவமுடைய ஆன்மாக்களுக்கு அல்லாமல் ஏனைய அபரஞானமாகிய கல்வி அறிவுடையோர்க்கு உம் அருட்பண்பை உணர்தற்கும், உரைப்பதற்கும் இயலுமோ?.


பாடல் எண் : 08
கறையிலங்கு கண்டனே கருத்திலாக் கருங்கடல்
துறையிலங்கை மன்னனைத் தோளடர ஊன்றினாய்
மறையிலங்கு பாடலாய் மதுரை ஆலவாயிலாய்
நிறையிலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே.

பொருளுரை:
விடக்கறை விளங்கும் கழுத்தை உடையவரே! கரிய கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னனின் தோள்கள் நொறுங்கும்படி திருக்கயிலைமலையில் காற்பெருவிரலை ஊன்றியவரே! வேதங்களிலுள்ள பாடல்களால் போற்றப்படுபவரே! மதுரையிலுள்ள திருஆலவாயில் வீற்றிருந்தருளுபவரே! மனத்தை ஒரு வழியே நிறுத்தி உம்மை நினைப்பதே உய்தற்குரிய நியமமாகும்.


பாடல் எண் : 09
தாவணவ் விடையினாய் தலைமையாக நாள்தொறும்
கோவணவ் உடையினாய் கூடல் ஆலவாயிலாய்
தீவணம் மலர்மிசைத் திசைமுகனும் மாலும் நின்
தூவணம் அளக்கிலார் துளக்கம் எய்துவார்களே.

பொருளுரை:
தாவிச் செல்லும் இடபத்தை வாகனமாக உடையவரே! தலைமை உடையவராய் நாடொறும் கோவண ஆடையோடு கூடல் ஆலவாயில் வீற்றிருந்து அருள் செய்பவரே! நெருப்புப் போன்று செந்நிறமான தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும், உம் முழுமுதல் தன்மையை அறியாதவர்களாய்க் கலக்கம் உற்றார்கள்.


பாடல் எண் : 10
தேற்றமில் வினைத்தொழில் தேரரும் சமணரும்
போற்றிசைத்து நின்கழல் புகழ்ந்து புண்ணியங்கொளார்
கூற்று உதைத்த தாளினாய் கூடல் ஆலவாயிலாய்
நாற்றிசைக்கு மூர்த்தியாகி நின்றது என்ன நன்மையே.

பொருளுரை:
தெளிவில்லாத செயல்களைச் செய்யும் புத்தரும், சமணரும் உம் திருவடிகளைப் போற்றிப் புகழ்ந்து புண்ணியங்களைத் தேடிக்கொள்ளாதவராயினர். காலனை மார்க்கண்டேயர்க்காக உதைத்த திருவடிகளை உடையவரே! கூடல் ஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே! உலகனைத்திற்கும் தலைவராக விளங்கி உயிர்கட்கு எல்லா நன்மையும் தருபவர் நீவிர் அல்லிரோ.


பாடல் எண் : 11
போயநீர் வளங்கொளும் பொருபுனல் புகலியான்
பாயகேள்வி ஞானசம்பந்தன் நல்ல பண்பினால்
ஆயசொல்லின் மாலைகொண்டு ஆலவாயில் அண்ணலைத்
தீயதீர எண்ணுவார்கள் சிந்தையாவர் தேவரே.

பொருளுரை:
நீர்வளம் தரும், ஒலிக்கின்ற ஆறு பாய்கின்ற சீகாழியில் அவதரித்த பரந்த கேள்வி ஞானமுடைய ஞானசம்பந்தன் இறைவனுடைய நற்பண்புகளைப் போற்றி அருளிய இச்சொல் மாலையை ஓதித் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இச்சிவபெருமானை வழிபடுபவர்கள் தீமைகள் நீங்கப்பெற்று நற்சிந்தையுடைய தேவர்களாவர்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

1 கருத்து: