சனி, 26 மார்ச், 2016

துயர் தீர்க்கும் திருப்பதிகம் - பொது

திருமுறை : ஐந்தாம் திருமுறை 90 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

"எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் இந்த பதிகப்பாடலை படியுங்கள் துன்பங்கள் அனைத்தும் விலகி போகும்." பெருந்தீ கொழுந்து விட்டு எரியும் நீற்றரையின் உள்ளே அடைத்த போது பாடி அருளிய திருப்பதிகம். திருநாவுக்கரசு சுவாமிகள் பாடி அருளிய சிறப்புப் பொருந்திய இத்தேவாரப் பதிகங்களை அனுதினமும் பாராயணம் செய்வதால், பெரும் துன்பங்களில் இருந்தும் எளிதில் விடுபெறலாம் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.


தங்களுக்கு குருவாக இருந்த தருமசேனர், மீளவும் சைவ சமயம் சார்ந்ததையும், தங்களால் தீர்க்க முடியாத கடுமையான சூலை நோய் சிவபிரான் அருளால் தீர்க்கப் பட்டதையும், அவருக்கு திருநாவுக்கரசர் என்ற நாமம் சிவபிரான் அளித்ததையும், அவருக்கு மக்கள் அளித்த வரவேற்பினையும் அறிந்த சமண குருமார்கள், நடந்ததை உள்ளவாறு பல்லவ மன்னன் அறிந்தால் தங்களது செல்வாக்கு குறையும் என்பதை உணர்ந்தனர். எனவே மன்னனிடம் நடந்ததை திரித்துச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தனர். 

தனது தமக்கையார் பின்பற்றும் சைவ சமயத்தைச் சாரவேண்டும் என்பதற்காக தருமசேனர், சூலை நோய் வந்தது போல் நடித்து அனைவரையும் ஏமாற்றியதாகவும், சைவ சமயம் சார்ந்ததன் பின்னர் சமண மதத்தை இழிவாக பேசுவதாகவும் மன்னனிடம் முறையிட்ட குருமார்கள், அவரை அழைத்து மன்னன் விசாரணை செய்யவேண்டும் என்று கோரினார்கள். மன்னனும் தனது மந்திரியையும் காவலர்களையும் திருநாவுக்கரசரை விசாரணை செய்ய அழைத்து வர அனுப்பினான்.

திருவதிகை சென்ற அமைச்சர் திருநாவுக்கரசரை சந்தித்த போது, அவர் "நாமார்க்கும் குடியல்லோம்" என்று முழங்கினார். தான் துறவி என்பதால் எந்த அரசரின் ஆணையும் தன்னைக் கட்டுபடுத்தாது என்றும், தான் எவருக்கும் குடிமகன் அல்ல என்பதையும் தெரிவித்த திருநாவுக்கரசர் முதலில் மன்னனைக் காண மறுத்தார். அவரை அழைத்துச் செல்லாவிடின் தங்களுக்கு ஆபத்து நேரிடும் என்று அவரிடம் தெரிவித்த அமைச்சர், தங்களது உயிரினைக் காப்பாற்றும் பொருட்டு நாவுக்கரசு பெருமானை தங்களுடன் வருமாறு வேண்டவே, தன்னால் மற்றவர்களுக்குத் துன்பம் ஏற்படக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன், தனக்கு ஏற்படும் வினைகளுக்கு சிவபெருமான் துணையாக இருப்பார் என்ற நம்பிக்கையுடன் நாவுக்கரசர் அவர்களுடன் மன்னனை சந்திக்கச் சென்றார். 

இதனிடையில் சமண குருமார்கள் நாவுக்கரசரை நீற்றறையில் (சுண்ணாம்புக் காளவாய்) இடுவதே அவர் செய்த குற்றத்திற்கு உரிய தண்டனை என்று மன்னனிடம் கூறவே, மன்னனும் அந்த தண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டான். நீற்றறையின் உள்ளே அடிகளாரை இருத்தி, வெளியே தாளிட்டு காவலுக்கு ஆட்களையும் மன்னன் நியமித்தான். நாயனார் ஈசன் அடியவருக்கு துன்பங்களும் வருமோ என்ற நம்பிக்கையில், நீற்றறையின் உள்ளே அமர்ந்தபடியே இந்தப் பதிகத்தை பாடினார்.

பாடல் எண் : 01
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.

பாடல் விளக்கம்‬:
எனது தந்தையாகிய இறைவனின் திருவடி நீழல் செவிக்கு மிகவும் இனிமையான வீணையின் குற்றமற்ற நாதம் போலவும், மாலை நேரத்தில் ஒளி வீசி உடலுக்கும் கண்ணுக்கும் குளிர்ச்சி தரும் நிலவொளி போலவும், நாசிக்கு புத்துணர்ச்சி தரும் தென்றல் காற்றினைப் போலவும், உடலுக்கு மிதமான வெப்பம் தரும் இளவேனில் காலம் போன்றும், வண்டுகள் மொய்க்கும் மலர்கள் கொண்ட குளத்தின் குளிர்ந்த நீரினைப் போல் வாய்க்கு இனிமையாகவும் இருக்கின்றது.


பாடல் எண் : 02
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே.

பாடல் விளக்கம்‬:
நமச்சிவாய மந்திரமே நான் அறிந்த கல்வியாகும். நமச்சிவாய மந்திரமே அந்த கல்வியால் நான் பெற்ற ஞானமுமாகும். நமச்சிவாய மந்திரம் தான் நான் அறிந்த வித்தையாகும். நமச்சிவாய மந்திரத்தை எனது நா இடைவிடாது சொல்லும். இந்த நமச்சிவாய மந்திரம் தான் வீடுபேற்றை அடையும் வழியாகும்.


பாடல் எண் : 03
ஆளாகார் ஆளானாரை அடைந்து உய்யார்
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளாத சுரையோ தொழும்பர் செவி
வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே.

பாடல் விளக்கம்‬:
சிவபிரானின் அடியாராக இல்லாதவர்கள், சிவபிரானின் அடியார்களை அணுகி அவர்களிடமிருந்து உய்யும் வழியினை அறிந்து கொண்டு அந்த வழியில் செல்ல மாட்டார்கள்; அவர்கள் சிவபிரானுக்கு மீளா அடிமையாக இருந்து மெய்ப்பொருளை உணர மாட்டார்கள்: அவர்களது செவிகள் உட்குழி இல்லாத காரணத்தால் அவர்கள் சிவபிரானின் நாமத்தை கேட்டிலர் போலும்; அவர்களின் வாழ்க்கை .எந்த பயனையும் அடையாமல் வீணாக கழிகின்றது.


பாடல் எண் : 04
நடலை வாழ்வு கொண்டு என் செய்தீர் நாணிலீர்
சுடலை சேர்வது சொல் பிரமாணமே
கடலின் நஞ்சு அமுது உண்டவன் கைவிட்டால்
உடலினார் கிடந்தூர் முனி பண்டமே.

பாடல் விளக்கம்‬:
நாணம் இல்லாதவர்களே, துன்பம் தரும் இந்த வாழ்க்கையில் நீங்கள் சாதித்தது என்ன. இறப்பு தவிர்க்க முடியாதது என்பது சான்றோர் வாக்கு. பாற்கடலில் பொங்கி வந்த விடத்தை உண்டு, உலகினை பாதுகாத்த சிவபிரான் கைவிட்டால், நமது உடல் அனைவரும் பழிக்கத் தக்க பொருளாக, இழிந்த பொருளாக மாறிவிடும். உயிரற்ற உடல் அனைவராலும் வெறுக்கத் தக்கது என்பதால், சிவபிரான் அருளால் இனி வரும் பிறவியையும் அதனால் நிகழப்போகும் இறப்பையும் தடுத்து பேரின்பம் அடைய நாம் முயற்சி செய்யவேண்டும்.


பாடல் எண் : 05
பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக்கே இரை தேடி அலமந்து
காக்கைக்கே இரையாகிக் கழிவரே.

பாடல் விளக்கம்‬:
சிவபிரானின் பொன்னார் திருவடிகளை தங்களது கைகளால் பூக்கள் தூவி வழிபாடு செய்யாதவர்களும், தங்களது நாவினால் சிவபிரானது திருமாமத்தைச் சொல்லாதவர்களும், தங்களது வாழ்க்கையை தங்களது உடலினை வளர்ப்பதற்காக உணவினைத் தேடி அலைந்து வீணாகக் கழித்து இறுதியில் தங்களது உடலினை காக்கைக்கும் கழுகினுக்கும் உணவாக அளிப்பதைத் தவிர பயனான காரியம் ஏதும் செய்வதில்லை.


பாடல் எண் : 06
குறிகளும் அடையாளமும் கோயிலும்
நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்             
பொறியீலீர் மனம் என்கொல் புகாததே.

பாடல் விளக்கம்‬:
சிவபிரானின் திருவுருவங்கள், அவனை அடையாளம் காட்டும் சின்னங்கள் (நந்தி வாகனம், நந்திக்கொடி, அணியும் திருநீறு, உருத்திராக்கம் ஆகியவை), அவனை வழிபடுவதற்கு உரிய சைவநெறி, அவனது நேர்மைக் குணம் ஆகியவற்றை நாம் அறிந்து கொள்ளுமாறு வேதங்கள் ஆயிரம் முறைகள் கூறியிருந்தாலும், உங்களது மனத்தில் அந்த உண்மைகள் ஏன் புகுவதில்லை. நீங்கள் அவற்றினை உணரக்கூடிய பொறிகள் ஏதும் இல்லாமல் இருப்பதேன்.


பாடல் எண் : 07
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா வினையேன் நெடுங்காலமே.

பாடல் விளக்கம்‬:
தன்னை வாழ்த்துவதற்காக வாயினையும், தன்னை நினைப்பதற்காக நெஞ்சத்தினையும், வணங்கி வழிபட தலையையும் தந்த தலைவனான சிவபிரானை, நல்ல நறுமணம் மிக்க சிறந்த மலர்கள் கொண்டு வழிபடாமல், வீணாக எனது வாழ்நாளில் பெரும்பகுதியை கழித்து விட்டேனே.


பாடல் எண் : 08
எழுது பாவை நல்லார் திறம் விட்டு நான்
தொழுது போற்றி நின்றேனையும் சூழ்ந்து கொண்டு
உழுத சால் வழியே உழுவான் பொருட்டு
இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே.

பாடல் விளக்கம்‬:
சித்திரப்பாவைகள் போன்ற அழகான பெண்களின் தொடர்பினை விட்டு விட்டு, இறைவனைத் தொழுது போற்றி நிற்கும் என்னை, எனது இழிந்த மனது மறுபடியும் மறுபடியும் உலகச் சிற்றின்பங்களில் ஆழ்த்துகின்றதே, நான் என் செய்வேன்.


பாடல் எண் : 09
நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார் சடை புண்ணியன்
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு
நக்கு நிற்பர் அவர் தம்மை நாணியே.

பாடல் விளக்கம்‬:
உள்ளம் நெகிழ்ந்து சிவபிரானை வழிபடுவார் மனதினில் புகுந்து உறையும் பொன் போன்ற சடையினை உடைய சிவபிரான், பொய்ம்மையாளர் செய்யும் வழிபாட்டினை உணர்ந்து அவர்களின் மடமையை நினைத்து அவர்களை நாணி அவர்களை நோக்கி ஏளன நகையுடன் சிரித்து நிற்பான்.


பாடல் எண் : 10
விறகில் தீயினன் பாலில் படுநெய் போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவுக் கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே.

பாடல் விளக்கம்‬:
சிவபிரான் அரணிக் கட்டையில் தீ போலவும், பாலினில் நெய் போலவும், சாணை பிடிக்கப்படாத மாணிக்கக் கல்லில் பிரகாசம் போலவும் நமது கண்களுக்கு புலப்படாமல் நிற்கின்றான். ஆனால் நமக்கும் அவனுக்கும் இடையே இருக்கும் ஆண்டவன் பக்தன் என்ற உறவாகிய மத்தினை நட்டு உணர்வு என்னும் கயிற்றினால் அந்த மத்தினை இறுக்கமாக கட்டி கடைந்தால் இறைவன் நமது முன்னே வந்து தோன்றுவான்.

ஏழு நாட்கள் சென்ற பின்னர் சமணர்களை அழைத்த மன்னவன், நீற்றறையைத் திறந்து பார்க்குமாறு உரைத்தான், சிவானந்தப் பெருக்கினால் திளைத்து பதிகம் பாடிக் கொண்டு இருந்த நாவுக்கரசு அடிகள், நீற்றறையில் இருந்தாலும் தனது உடலுக்கு எந்த குறையுமின்றி, மகிழ்ச்சியுடன் இருந்ததைக் கண்ட சமணர்கள், என்ன அதிசயம் என்று முதலில் வியப்படைந்து கூறினார்கள். பின்னர் தங்களது எதிரியான நாவுக்கரசர் இறவாது பிழைத்து இருந்தது அவர் சமண சமயத்தைத் சார்ந்து இருந்தபோது கற்ற மந்திர சாதகமாகும் என்று தங்களை சமாதானம் செய்து கொண்டு, அடுத்து என்ன செய்யலாம் என்பதை ஆராயத் தொடங்கினார்கள்.

கடம்பூர் கரக்கோயிலான் தன் கடன் அடியேனையும் தாங்குதல், என் கடன் பணி செய்து கிடப்பதே என்று பின்னாளில் பாடியதற்கு ஏற்ப. சிவபிரான் பேரில் அசையாத நம்பிக்கை கொண்டு, இறைவனது பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நாவுக்கரசரின் வாழ்க்கையில் இறைவன் நிகழ்த்திய இரண்டாவது அதிசயம். முதல் அதிசயம் சூலை நோயிலிருந்து மீட்டது.

இந்தப் பதிகத்தின் பல பாடல்களில் அப்பர் பிரான், சிவபிரானை வழிபடாதவர்களை சாடியும் இழித்தும் கூறுவதை நாம் உணரலாம். சமணர்களின் வஞ்சனையால் நீற்றறையில் இடப்பட்டார் என்பதால் அவர்கள் மீது அவருக்கு ஏற்பட்ட கோபம் மிகவும் இயற்கையே.. எனவே அத்தகைய குறிப்புகள் மிகவும் அதிகமாக காணப்படுகின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. 

பின்னர் தனக்கு ஏற்பட்ட சோதனைகளை எதிர்கொண்ட போது இத்தகைய குறிப்புகள் (சுண்ண வெண் சந்தனச் சாந்தும், சொற்றுணை வேதியன் என்று தொடங்கும் பதிகங்கள்) காணப்படுவதில்லை என்பதும் நாம் அறியத் தக்கது. சிவபிரான் தன்னை எப்படியும் மீட்பார் என்ற நம்பிக்கை மேலும் வளர்ந்ததால், சமணர்கள் மீது அவருக்கு கோபம் ஏற்படவில்லை போலும். தனக்கு வரும் துன்பங்களையும் இன்பங்களையும் ஒரு சேர நோக்கும் கண்ணோட்டம் கொண்டவராக அவர் திகழ்வதை நாம் உணரலாம்.

நன்றி : திரு என். வெங்கடேஸ்வரன் ஐயா அவர்களுக்கு


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

வெள்ளி, 25 மார்ச், 2016

சுகப்பிரசவம் அளிக்கும் திருப்பதிகம் - திருச்சிராப்பள்ளி

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ தாயுமானவர், ஸ்ரீ மாத்ருபூதேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மட்டுவார் குழலியம்மை, ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை

திருமுறை : முதலாம் திருமுறை 98 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி, மட்டுவார் குழலம்மை மீது சம்பந்தர் பாடிய தேவாரப் பாடலை தினமும் பக்தியுடன் படித்து வந்தால் வீடு கட்டும் பணி சிறப்பாக நிறைவேறி விரைவில் கிரகப்பிரவேசம் செய்யும் யோகம் உண்டாகும். தாயாரின் உடல் நிலை சீர் பெறவும், பெண்களுக்கு சுகப்பிரசவம் நடக்கவும், உறவினர், நண்பர்களால் நன்மை ஏற்பட இந்த பதிகத்தை ஓதுவது நல்லது. 

இரத்தினாவதி என்ற பெண்ணிற்கு அவள் தாய் வடிவில் வந்து இறைவனே சுகப் பிரசவம் செய்வித்து அருளிய தலம் இதுவாகும். இத்தலத்தில் வசித்து வந்த இரத்தினாவதி என்ற பெண் ஒரு சிவபக்தை. அவளின் பிரசவ காலத்தில் அவளுக்கு உதவி செய்ய அவள் தாயார் வெளியூரில் இருந்து வந்த போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. காவிரி நதியின் அக்கரையில் இருந்த இரத்தினாவதியின் தாயாரால் இக்கரை வ்ரமுடியவில்லை. இங்கு இரத்தினாவதிக்கு பிரசவ நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. தனது பக்தையின் துயரம் கண்டு இறைவன் அவளது தாய் உருவில் வந்து இரத்தினாவதிக்கு சுகப்பிரசவம் ஆக அருள் செய்தார். இதனாலேயே இறைவன் தாயுமானசுவாமி என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளார்.


பாடல் எண் : 01
நன்று உடையானைத் தீயது இலானை நரைவெள் ஏறு
ஒன்று உடையானை உமையொரு பாகம் உடையானைச்
சென்று அடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்று உடையானைக் கூற என் உள்ளம் குளிருமே.

பாடல் விளக்கம்‬:
நன்மைகளையே தனக்கு உடைமையாகக் கொண்டவனை, தீயது ஒன்றேனும் இல்லாதவனை, மிக வெண்மையான ஆனேற்றைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டவனை, பார்வதியை ஒரு பாகமாக உடையவனை, அவனது அருளாலன்றிச் சென்றடைய முடியாத வீடுபேறாகிய செல்வத்தை உடையவனை, சிராப்பள்ளிக் குன்றில் எழுந்தருளியுள்ளவனைப் போற்ற என் உள்ளம் குளிரும்.


பாடல் எண் : 02
கைம் மகவேந்திக் கடுவனொடு ஊடிக் கழை பாய்வான்
செம்முகமந்தி கருவரை ஏறும் சிராப்பள்ளி
வெம்முக வேழத்து ஈர் உரி போர்த்த விகிர்தா நீ
பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழியன்றே.

பாடல் விளக்கம்‬:
சிவந்த முகம் உடைய பெண் குரங்கு தனது ஆண் குரங்கோடு ஊடல் கொண்டு மூங்கில் புதரில் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளுதற்காகத் தனது குட்டியையும் ஏந்திக் கொண்டு கரியமலை மீது ஏறும் சிராப்பள்ளியில் எழுந்தருளியவனும் கொடிய முகத்தோடு கூடிய யானையின் தோலைப் போர்த்துள்ள விகிர்தனும் ஆகிய நீ படத்தோடு கூடிய முகத்தினை உடைய நாகப்பாம்பை அதன் பகைப் பொருளாகிய பிறைமதியுடன் முடிமிசை அணிந்திருத்தல் பழி தரும் செயல் அன்றோ?.


பாடல் எண் : 03
மந்தம் முழவம் மழலை ததும்ப வரை நீழல்
செந்தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளிச்
சந்தம் மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
எம்தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே.

பாடல் விளக்கம்‬:
மந்த சுருதியினை உடைய முழவு மழலை போல ஒலி செய்ய, மலை அடிவாரத்தில் செவ்விய தண்ணிய தோட்டங்களையும் சுனைகளையும் கொண்டுள்ள சிராப்பள்ளியில் எழுந்தருளிய அழகிய மலர்களைச் சடைமேற் சூடியவரும், விடையேற்றை ஊர்ந்து வருபவரும் ஆகிய எம் தலைவராகிய செல்வரை வணங்கும் அடியார்களுக்கு அல்லல் இல்லை.


பாடல் எண் : 04
துறை மல்கு சாரல் சுனை மல்கு நீலத்திடை வைகிச்
சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளிக்
கறை மல்கு கண்டன் கனலெரியாடும் கடவுள் எம்
பிறை மல்கு சென்னி உடையவன் எங்கள் பெருமானே.

பாடல் விளக்கம்‬:
பலவாகிய வழிகளைக் கொண்டுள்ள மலையடிவாரத்தில் விளங்கும் சுனைகளில் நெருங்கிப் பூத்த நீலமலர்களில் தங்கிச் சிறகுகளை உடைய வண்டுகளும் தும்பியும் இசைபாடும் சிராப்பள்ளியில் எங்கள் பெருமானாகிய சிவபிரான் கறைபொருந்திய கண்டத்தை உடையவனாய்க் கனலும் எரியைக் கையில் ஏந்தி ஆடும் எம் கடவுளாய்ப் பிறை பொருந்திய சென்னியை உடையவனாய் விளங்கியருள்கின்றான்.


பாடல் எண் : 05
கொலை வரையாத கொள்கையர் தங்கள் மதில் மூன்றும்
சிலை வரையாகச் செற்றனரேனும் சிராப்பள்ளித்
தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள்
நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறமாமே.

பாடல் விளக்கம்‬:
கொல்லும் தொழிலைக் கைவிடாத கொள்கையினராகிய அவுணர்கள் மும்மதில்களையும் மேரு மலையை வில்லாகக் கொண்டு அழித்தவராயினும் சிராப்பள்ளியின் தலைவராகிய அப்பெருமானாரைத் தலைவரல்லர் என்று நாள் தோறும் கூறிவரும் புறச் சமயிகளே! நிலவுலகில் நீலம் உண்ட துகிலின் நிறத்தை, வெண்மை நிறமாக மாற்றல் இயலாதது போல நீவிர் கொண்ட கொள்கையையும் மாற்றுதல் இயலுவதொன்றோ?.


பாடல் எண் : 06
வெய்ய தண்சாரல் விரிநிற வேங்கைத் தண்போது
செய்ய பொன்சேரும் சிராப்பள்ளிமேய செல்வனார்
தையல் ஒர்பாகம் மகிழ்வர் நஞ்சு உண்பர் தலையோட்டில்
ஐயமும் கொள்வர் ஆரிவர் செய்கை அறிவாரே.

பாடல் விளக்கம்‬:
எல்லோராலும் விரும்பத்தக்க குளிர்ந்த மலைச்சாரலில் விரிந்த தண்ணிய பொன்னிறமான வேங்கை மலர்கள் சிவந்த பொன்போன்ற நிறத்தனவாய் உதிரும் சிராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும் செல்வராகிய சிவபிரான் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்வர். நஞ்சினை உண்பர். தலையோட்டில் பலி ஏற்பர். வேறுபட்ட இவர்தம் செயல்களின் உண்மையை யார் அறியவல்லார்.


பாடல் எண் : 07
வேயுயர் சாரல் கருவிரல் ஊகம் விளையாடும்
சேயுயர் கோயில் சிராப்பள்ளிமேய செல்வனார்
பேயுயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
தீ உகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று ஆகாதே.

பாடல் விளக்கம்‬:
கரிய விரல்களை உடைய கருங்குரங்குகள் விளையாடும் மூங்கில் மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள சாரலை உடைய சிராப்பள்ளியில் நெடிதாக உயர்ந்துள்ள கோயிலில் மேவிய செல்வராகிய பெருமானார், பேய்கள் உயர்த்திப் பிடித்த கொள்ளிகளைக் கைவிளக்காகக் கொண்டு, சுடுகாட்டில் எரியும் தீயில் மகிழ்ந்து நடனம் ஆடும் திருக்குறிப்பு யாதோ? அஃது அவரை அடைய விரும்பும் மகளிர்க்குப் புலனாகாததாக உள்ளதே.


பாடல் எண் : 08
மலை மல்கு தோளன் வலிகெட ஊன்றி மலரோன் தன்
தலை கலனாகப் பலி திரிந்து உண்பர் பழியோரார்
சொலவல வேதம் சொலவல கீதம் சொல்லுங்கால்
சிலவல போலும் சிராப்பள்ளிச் சேடர் செய்கையே.

பாடல் விளக்கம்‬:
மலைபோன்ற திண்மை நிரம்பிய தோள்களை உடைய இராவணனின் வலிமை கெடுமாறு ஊன்றி அழித்துத் தாமரை மலர் மேல் உறைபவனாகிய பிரமனது தலையோட்டை உண் கலனாகக் கொண்டு திரிந்து அவ்வோட்டில் பலியேற்று உண்ணுவதால் தமக்குப் பழி வருமே என்று நினையாதவராய், இசையோடு ஓதத் தக்க வேதங்களையும் கீதங்களையும் அன்பர்கள் ஓதுமிடத்துச் சில பிழைபட்டன என்றாலும் அவற்றையும் ஏற்று மகிழ்பவர் சிராப்பள்ளி மேவிய பெருமைக்குரிய சிவனார். இவர்தம் செய்கைகளின் உட்பொருள் யாதோ?.


பாடல் எண் : 09
அரப்பள்ளியானும் மலர் உறைவானும் அறியாமைக்
கரப்புள்ளி நாடிக் கண்டிலரேனும் கல் சூழ்ந்த
சிரப்பள்ளிமேய வார்சடைச் செல்வர் மனைதோறும்
இரப்பு உள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே.

பாடல் விளக்கம்‬:
பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமாலும், தாமரை மலர்மேல் உறையும் பிரமனும் அறியாதவாறு அடிமுடி கரந்து உயர்ந்து நின்றதை அவர்கள் தேடிக் கண்டிலர் என்ற பெருமை உமக்கு உளதாயினும் மலையகத்துள்ள சிராப்பள்ளியில் எழுந்தருளிய நீண்ட சடையினை உடைய செல்வராகிய சிவபிரானே, நீர் வீடுகள் தோறும் சென்று இரப்பதைக் கருதுகின்றீர். அயலவர் கண்டால் இதனை இகழாரோ?.


பாடல் எண் : 10
நாணாதுடை நீத்தோர்களும் கஞ்சி நாட்காலை
ஊணாப் பகல் உண்டு ஓதுவோர்கள் உரைக்கும் சொல்
பேணாது உறுசீர் பெறுதும் என்பீர் எம்பெருமானார்
சேணார் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே.

பாடல் விளக்கம்‬:
நாணாது உடையின்றித் திரியும் திகம்பர சமணரும், காலையிலும் நண்பகலிலும் கஞ்சியை மட்டும் உணவாக உண்டு வாழும் புத்தரும் கூறும் பழிப்புரைகளைக் கருதாது நாம் சிறப்படைய வேண்டுமென்று விரும்பும் நீர், எம்பெருமான் உறையும் வானளாவிய கோயிலை உடைய சிராப்பள்ளியைச் சென்று அடைவீர்களாக.


பாடல் எண் : 11
தேனயம் பாடும் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த
கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன்
ஞானசம்பந்தன் நலம்மிகு பாடல் இவைவல்லார்
வான சம்பந்தத்தவரொடும் மன்னி வாழ்வாரே.

பாடல் விளக்கம்‬:
தேனுண்ணும் வண்டுகள் இனிய இசைபாடும் சிராப்பள்ளியில் விளங்கும் இறைவனை, அலைகளிற் பொருந்திவந்த சங்குகள் சோலைகளில் ஏறி உலாவும் கடலை அடுத்துள்ள கழுமல ஊரில் கவுணியர் கோத்திரத்தில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிப் போற்றிய, நன்மைகள் மிக்க இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் வானுலகிற் சம்பந்தமுடையவராகத் தேவர்களோடு நிலைபெற்று வாழ்வர்.


குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

வியாழன், 24 மார்ச், 2016

வினை தீர்க்கும் திருப்பதிகம் - திருமாகறல்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ திருமாகறலீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ திரிபுவன நாயகி

திருமுறை : மூன்றாம் திருமுறை 72 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

எலும்பு சம்பந்தமான நோய்கள் நீக்கும் திருப்பதிகம் 

இப்பதிகம் வினை தீர்க்கும் பதிகம் என்று போற்றப்படுகிறது. திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் போற்றி அருளிய இப்பதிகத்தை உணர்ந்து ஓதவல்லவர்களின் தொல்வினைகள் நீங்கும் என்று சம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார்.



சேலம் சுப்பராயப் பிள்ளை என்பவர் தம் உடலில் இடுப்பின் கீழ் செயலற்றுப் போக எல்லாவித மருத்துவமும் செய்து பலனின்றிப்போக, திருமுறையில் கயிறுசார்த்திப் பார்த்து, இத்தலப்பதிகம் வர, இங்கு வந்து தங்கி, நாடொறும் இறைவனை வழிபட்டுத் தலப்பதிகத்தைப் பாராயணம் செய்து சிலகாலம் வாழ்ந்து இப்பெருமானருளால் உடல் பூரணகுணம் பெற்றுத் திரும்பினார். இந்நிகழ்ச்சி அண்மைக் காலத்தில் நிகழ்ந்ததாகும். இப்பகுதியில் உள்ள சமய அன்பர்கள் அனைவரும் இதை அறிவர்.

பாடல் எண் : 01
விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம்
மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடுபொழில் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்
செங்கண் விடையண்ணல் அடிசேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே.

பாடல் விளக்கம்‬:
நன்றாக இஞ்சி விளையும் வயலில் பணிசெய்யும் பள்ளத்தியர்களின் பாடலும், ஆடலுமாகிய ஓசை விளங்க, மேகத்தைத் தொடும்படி நீண்ட கொடிகளும், உயர்ந்த மாடமாளிகைகளும், அடர்ந்த சோலைகளும் கொண்ட திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் சிவபெருமான். நறுமணம் கமழும் கொன்றை மலரும், கங்கையும், பிறைச்சந்திரனும் அணிந்த சிவந்த சடையை உடையவனும், சிவந்த கண்களையுடைய திருமாலாகிய இடபத்தை உடையவனுமான அப்பெருமானின் திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்களின் தீவினைகள் உடனே தீரும்.


பாடல் எண் : 02
கலையினொலி மங்கையர்கள் பாடலொலி ஆடல் கவின் எய்தியழகார்
மலையின்நிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறலுளான்
இலையின்மலி வேல்நுனைய சூலம்வலன் ஏந்தியெரி புன்சடையினுள்
அலைகொள் புனலேந்து பெருமானடியை யேத்தவினை அகலுமிகவே.

பாடல் விளக்கம்‬:
வேதாகமக் கலைகளைக் கற்பவர்களின் ஒலியும், பெண்களின் பாடல், ஆடல் ஒலிகளும் சேர்ந்து இனிமை தர, அழகிய மலையை ஒத்த உயர்ந்த மாட மாளிகைகளில் நீண்ட கொடிகள் அசைய செல்வ வளமிக்க திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். இலைபோன்ற அமைப்புடைய வேலையும், கூர்மையான நுனியுடைய சூலத்தையும், வலக்கையிலே ஏந்தி, நெருப்புப் போன்ற சிவந்த புன்சடையில் அலைகளையுடைய கங்கையைத் தாங்கிய அச்சிவபெருமானின் திருவடிகளைப் போற்ற வினை முற்றிலும் நீங்கும்.


பாடல் எண் : 03
காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர்
மாலைவழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறலுளான்
தோலையுடை பேணியதன் மேலொர் சுடர் நாகமசையா அழகிதாப்
பாலையன நீறுபுனைவான் அடியையேத்த வினை பறையும் உடனே.

பாடல் விளக்கம்‬:
துந்துபி, சங்கு, குழல், யாழ், முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க, காலையும் மாலையும் வழிபாடு செய்து முனிவர்கள் போற்றி வணங்க மகிழ்வுடன் சிவபெருமான் திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் தோலாடையை விரும்பி அணிந்து, அதன்மேல் ஒளிவிடும் நாகத்தைக் கச்சாகக் கட்டி, அழகுறப் பால்போன்ற திருவெண்ணீற்றைப் பூசி விளங்குகின்றான். அவனுடைய திருவடிகளைப் போற்றி வணங்க, உடனே வினையாவும் நீங்கும்.


பாடல் எண் : 04
இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தியெழில் மெய்யுளுடனே
மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனலாடி மகிழ் மாகறலுளான்
கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையினான் அடியையே
நுங்கள் வினை தீரமிக ஏத்தி வழிபாடு நுகரா எழுமினே.

பாடல் விளக்கம்‬:
ஒளிர்கின்ற முத்து, பொன், மணி இவற்றை ஆபரணங்களாக அணியப்பெற்ற பெண்கள் தங்கள் துணைவர்களுடன் நீராடி மகிழ்கின்ற திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் நறுமணம் கமழும் கொன்றையையும், குளிர்ந்த சந்திரனையும் சிவந்த சடையில் அணிந்துள்ளான். அவனுடைய திருவடிகளை உங்கள் வினைதீர மிகவும் போற்றி வழிபட எழுவீர்களாக.


பாடல் எண் : 05
துஞ்சுநறு நீலம் இருள்னீங்க ஒளிதோன்று மதுவார் கழனிவாய்
மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கள் நடமாட மலி மாகறலுளான்
வஞ்சமத யானையுரி போர்த்து மகிழ்வான் ஓர்மழுவாளன் வளரும்
நஞ்சமிருள் கண்டமுடை நாதன் அடியாரை நலியா வினைகளே.

பாடல் விளக்கம்‬:
நறுமணம் கமழும் நீலோற்பல மலர்கள் இருட்டில் இருட்டாய் இருந்து, இருள் நீங்கி விடிந்ததும் நிறம் விளங்கித் தோன்றுகின்றன. நிறையப் பூக்கும் அம்மலர்கள் தேனை வயல்களில் சொரிகின்றன. அருகிலுள்ள, மேகங்கள் படிந்துள்ள பூஞ்சோலைகளில் மயில்கள் நடனமாடுகின்றன. இத்தகைய சிறப்புடைய திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் வஞ்சமுடைய மதயானையின் தோலை உரித்துப் போர்த்து மகிழ்கின்றான். ஒப்பற்ற மழுப்படையை உடையவன். நஞ்சையுண்டு மிக இருண்ட கழுத்தையுடையவன். அத்தலைவனான சிவபெருமானின் அடியார்களை வினைகள் துன்புறுத்தா.


பாடல் எண் : 06
மன்னும் மறையோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகையால் இனிது இறைஞ்சி இமையோரில் எழு மாகறலுளான்
மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவே
உன்னுமவர் தொல்வினைகள் ஒல்க உயர் வானுலகம் ஏறல் எளிதே.

பாடல் விளக்கம்‬:
என்றும் நிலைத்திருக்கும் வேதங்களை நன்கு கற்ற அந்தணர்களும், பலவிதத் தவக்கோலங்கள் தாங்கிய முனிவர்களும் கூடி இறைவனை இனிது இறைஞ்சும் தன்மையில் தேவர்களை ஒத்து விளங்குகின்ற திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் மின்னல்போல் ஒளிரும் விரிந்த செஞ்சடையின்மேல் மலர்களையும், கங்கையையும், பிறைச் சந்திரனையும் அணிந்துள்ளான். அப்பெருமானை நினைந்து வழிபடுபவர்களின் தொல்வினைகள் நீங்க, உயர் வானுலகை அவர்கள் எளிதில் அடைவர். 


பாடல் எண் : 07
வெய்யவினை நெறிகள்செல வந்தணையும் மேல்வினைகள் வீட்டல் உறுவீர்
மைகொள்விரி கானல்மது வார்கழனி மாகறலுளான் எழிலதார்
கையகரி கால்வரையின் மேலதுரி தோலுடைய மேனியழகார்
ஐயனடி சேர்பவரை அஞ்சி அடையா வினைகள் அகலும் மிகவே.

பாடல் விளக்கம்‬:
கொடிய வினைகள் தாம் வந்த வழியே செல்லவும், இனி இப்பிறவியில் மேலும் ஈட்டுதற்குரிய ஆகாமிய வினைகளை ஒழிக்க வல்லவர்களே! மேகங்கள் தவழும் ஆற்றங்கரைச் சோலைகளிலுள்ள பூக்களிலிருந்து தேன் ஒழுகும் வயல்களையுடைய திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் யானையின் தோலை உரித்துப் போர்த்த அழகிய திருமேனியுடையவன். யாவர்க்கும் தலைவனான அப்பெருமானின் திருவடிகளை நினைந்து வழிபடுபவர்களை வினையானது அடைய அஞ்சி அகன்று ஓடும்.


பாடல் எண் : 08
தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையே
மாசுபடு செய்கைமிக மாதவர்கள் ஓதிமலி மாகறலுளான்
பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகார்
பூசுபொடி ஈசனென ஏத்தவினை நிற்றலில போகும் உடனே.

பாடல் விளக்கம்‬:
பொன்மயமான மாடங்களின் உச்சியில் கட்டப்பட்டுள்ள வெண்துகிலாலான கொடிகள் கருநிற மேகத்தைத் தொடுகின்ற மாசுபடு செய்கை தவிர வேறு குற்றமில்லாத, பெரிய தவத்தார்கள், வேதங்கள் ஓத விளங்கும் திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் பாசுபத கோலத்தை விரும்பி, வரிகளையுடைய விடமுடைய பாம்பைக் கச்சாக அணிந்த அழகுடையவன். திருவெண்ணீற்றைப் பூசியவன். அவனைப் போற்றி வழிபட வினையாவும் நில்லாது உடனே விலகிச் செல்லும்.


பாடல் எண் : 09
தூயவிரி தாமரைகள் நெய்தல்கழு நீர்குவளை தோன்ற மதுவுண்
பாயவரி வண்டுபல பண்முரலும் ஓசைபயில் மாகறலுளான்
சாயவிரல் ஊன்றிய இராவணன தன்மைகெட நின்றபெருமான்
ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினையாயினவும் அகல்வது எளிதே.

பாடல் விளக்கம்‬:
தூய்மையான தாமரை, நெய்தல், கழுநீர், குவளை போன்ற மலர்கள் விரிய, அவற்றிலிருந்து தேனைப் பருகும் வரிகளையுடைய வண்டுகள் பண்ணிசையோடு பாடுதலால் ஏற்படும் ஓசை மிகுந்த திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அவன் தன் காற்பெருவிரலை ஊன்றி இராவணனின் வலிமை கெடுமாறு செய்தவன். அப்பெருமானின் புகழைப் போற்றி வணங்கும் அடியவர்களின் வினை எளிதில் நீங்கும்.


பாடல் எண் : 10
காலின் நல பைங்கழல்கள் நீள்முடியின் மேலுணர்வு காமுறவினார்
மாலும் மலரானும் அறியாமை எரியாகி உயர் மாகறலுளான்
நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய்
ஆலும் விடையூர்தி உடையடிகள் அடியாரை அடையா வினைகளே.

பாடல் விளக்கம்‬:
பைம்பொன்னாலாகிய வீரக்கழல்களை அணிந்த திருவடிகளையும், நீண்ட சடைமுடியையும் காணவேண்டும் என்ற விருப்பமுடன் முயன்ற திருமாலும், பிரமனும் அறியாவண்ணம் நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்ற சிவபெருமான் திருமாகறலில் வீற்றிருந்தருளுகின்றான். உடம்பில் நாலிடத்து நெருப்பைக் கொண்டும், தோலுரித்து மாணிக்கத்தைக் கக்கும் பாம்பணிந்தும், அசைந்து நடக்கின்ற இடபத்தை வாகனமாகக் கொண்டுள்ள சிவபெருமானின் அடியார்களை வினைகள் அடையா.


பாடல் எண் : 11
கடைகொள் நெடுமாடமிக ஓங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்
அடையும் வகையால் பரவி அரனையடி கூடு சம்பந்தன் உரையால்
மடைகொள் புனலோடு வயல் கூடுபொழில் மாகறலுளான் அடியையே
உடையதமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஒல்கும் உடனே.

பாடல் விளக்கம்‬:
வாயில்களையுடைய மிக உயர்ந்த நீண்ட மாடங்களும், நறுமணம் கமழும் வீதிகளும் உடைய சீகாழியில் வாழ்பவர்கட்குத் தலைவனான திருஞானசம்பந்தன், சிவபெருமானைச் சேர்தற்குரிய நெறிமுறைகளால் துதித்து, மடைகளில் தேங்கிய தண்ணீர் ஓடிப் பாய்கின்ற வயல்களும், நெருங்கிய சோலைகளுமாக நீர்வளமும், நிலவளமுமிக்க திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் போற்றி அருளிய இத்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் உணர்ந்து ஓதவல்லவர்களின் தொல்வினைகள் நீங்கும்.


குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

செவ்வாய், 22 மார்ச், 2016

திருமுருகனின் 108 போற்றி


தனலாபம், பூமிலாபம், எதிரிகளிடம் வெற்றி, ரோஹ நிவாரணம், செவ்வாய் தோஷ நிவர்த்தி திருமணம் போன்றவைகளுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் ஆறுமுகத்துடன் உள்ள முருகனை வள்ளி தெய்வானையுடன் மனதில் உருவகித்து இந்த போற்றியை பாராயணம் செய்ய வாழ்வில் வளம் பெறலாம்.

01 ஓம் அரனார் மகனே போற்றி
02 ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி
03 ஓம் அழகு பாலகனே போற்றி
04 ஓம் அபயமளிப்பவனே போற்றி
05 ஓம் ஆறுமுகனே போற்றி

06 ஓம் ஆதரிப்பவனே போற்றி
07 ஓம் ஆண்டியப்பனே போற்றி
08 ஓம் ஆதி மூலமானவனே போற்றி
09 ஓம் ஆவினன் குடியானே போற்றி
10 ஓம் இன்பம் தருபவனே போற்றி

11 ஓம் இளையவனே போற்றி
12 ஓம் இடும்பனை வென்றவனே போற்றி
13 ஓம் இடர் தீர்ப்பவனே போற்றி
14 ஓம் ஈசன் மைந்தனே போற்றி
15 ஓம் ஈராறு கண்ணனே போற்றி

16 ஓம் ஏழைப் பங்காளா போற்றி
17 ஓம் உமையாள் மகனே போற்றி
18 ஓம் உலக நாயகனே போற்றி
19 ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
20 ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி

21 ஓம் ஒப்பிலாதவனே போற்றி
22 ஓம் ஓங்காரப் பொருளே போற்றி
23 ஓம் ஓதுவார்க்கு இனியனே போற்றி
24 ஓம் ஒளவைக்கு அருளினாய் போற்றி
25 ஓம் கருணாகரனே போற்றி

26 ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
27 ஓம் கலியுக வரதா போற்றி
28 ஓம் கற்பகத் தருவே போற்றி
29 ஓம் கதிர் வேலவனே போற்றி
30 ஓம் கந்தப் பெருமானே போற்றி

31 ஓம் கந்தா கடம்பா போற்றி
32 ஓம் கவசப் பிரியனே போற்றி
33 ஓம் கார்த்திகை பாலகனே போற்றி
34 ஓம் கணபதி தம்பியே போற்றி
35 ஓம் கிரி ராஜனே போற்றி

36 ஓம் கிருபா நிதியே போற்றி
37 ஓம் கீர்த்தி மிக்கவனே போற்றி
38 ஓம் குகப் பெருமானே போற்றி
39 ஓம் குமர மூர்த்தியே போற்றி
40 ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி

41 ஓம் குறத்தி நாயகனே போற்றி
42 ஓம் குமர குருபரனே போற்றி
43 ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
44 ஓம் சஷ்டி நாயகனே போற்றி
45 ஓம் சரவணபவனே போற்றி

46 ஓம் சங்கடம் தீர்ப்பாய் போற்றி
47 ஓம் சர்வேஸ்வரனே போற்றி
48 ஓம் சிக்கல் சிங்காரா போற்றி
49 ஓம் சிவனார் பாலகனே போற்றி
50 ஓம் சுப்பிரமணியனே போற்றி

51 ஓம் சுரபூபதியே போற்றி
52 ஓம் சுந்தர ரூபனே போற்றி
53 ஓம் சுகுமாரனே போற்றி
54 ஓம் சுவாமி நாதனே போற்றி
55 ஓம் சூர சம்ஹாரா போற்றி

56 ஓம் செந்தூர் வேலா போற்றி
57 ஓம் சேனாதிபதியே போற்றி
58 ஓம் சேவல் கொடியானே போற்றி
59 ஓம் சொற்பதம் கடந்தாய் போற்றி
60 ஓம் சோலையப்பனே போற்றி

61 ஓம் ஞான பண்டிதா போற்றி
62 ஓம் ஞாலம் காப்பாய் போற்றி
63 ஓம் ஞானம் அருள்வாய் போற்றி
64 ஓம் ஞான தண்டபாணி போற்றி
65 ஓம் தணிகாசல மூர்த்தியே போற்றி

66 ஓம் தயாபரனே போற்றி
67 ஓம் தமிழ்த் தெய்வமே போற்றி
68 ஓம் தகப்பன் சுவாமியே போற்றி
69 ஓம் திருமுருகனே போற்றி
70 ஓம் தினைப்புனம் புகுந்தாய் போற்றி

71 ஓம் திருவருள் சுரப்பாய் போற்றி
72 ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
73 ஓம் தீவினை போக்குவாய் போற்றி
74 ஓம் துணைவனே போற்றி
75 ஓம் தென்பரங்குன்ற நாதா போற்றி

76 ஓம் தெய்வானை நாயகா போற்றி
77 ஓம் தெவிட்டாத இன்பமே போற்றி
78 ஓம் தேவாதி தேவனே போற்றி
79 ஓம் தேவாசேனாபதியே போற்றி
80 ஓம் தேவனே போற்றி

81 ஓம் தேயனே போற்றி
82 ஓம் நாதனே போற்றி
83 ஓம் நிமலனே போற்றி
84 ஓம் நீறணிந்தவனே போற்றி
85 ஓம் பிரணவமே போற்றி

86 ஓம் பரப்பிரம்மமே போற்றி
87 ஓம் பழநியாண்டவனே போற்றி
88 ஓம் பாலகுமாரனே போற்றி
89 ஓம் பன்னிரு கையனே போற்றி
90 ஓம் பகை ஒழிப்பவனே போற்றி

91 ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி
92 ஓம் புவனம் காப்பவனே போற்றி
93 ஓம் போகர் நாதனே போற்றி
94 ஓம் மறை நாயகனே போற்றி
95 ஓம் மயில் வாகனனே போற்றி

96 ஓம் மருத மலையானே போற்றி
97 ஓம் மகா சேனனே போற்றி 
98 ஓம் மால் மருகனே போற்றி
99 ஓம் முருகப் பெருமானே போற்றி
100 ஓம் யோக வாழ்வே போற்றி 

101 ஓம் வயலூரானே போற்றி
102 ஓம் வள்ளி நாயகனே போற்றி
103 ஓம் விராலி மலையானே போற்றி
104 ஓம் வினை தீர்ப்பவனே போற்றி

105 ஓம் வேலாயுத மூர்த்தியே போற்றி
106 ஓம் வேத வித்தகனே போற்றி
107 ஓம் வையாபுரி நாதா போற்றி
108 ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி போற்றி.!

முருகா, ஸ்கந்தா, சண்முகா இன்னல்கள் நீக்கி உன்னை சரணடைவோருக்கு எல்லா நலமும் வளமும் தந்தருள்வாய் ஆறுபடையப்பா....! குமரா...! 


ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||