வெள்ளி, 25 மார்ச், 2016

சுகப்பிரசவம் அளிக்கும் திருப்பதிகம் - திருச்சிராப்பள்ளி

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ தாயுமானவர், ஸ்ரீ மாத்ருபூதேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மட்டுவார் குழலியம்மை, ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை

திருமுறை : முதலாம் திருமுறை 98 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி, மட்டுவார் குழலம்மை மீது சம்பந்தர் பாடிய தேவாரப் பாடலை தினமும் பக்தியுடன் படித்து வந்தால் வீடு கட்டும் பணி சிறப்பாக நிறைவேறி விரைவில் கிரகப்பிரவேசம் செய்யும் யோகம் உண்டாகும். தாயாரின் உடல் நிலை சீர் பெறவும், பெண்களுக்கு சுகப்பிரசவம் நடக்கவும், உறவினர், நண்பர்களால் நன்மை ஏற்பட இந்த பதிகத்தை ஓதுவது நல்லது. 

இரத்தினாவதி என்ற பெண்ணிற்கு அவள் தாய் வடிவில் வந்து இறைவனே சுகப் பிரசவம் செய்வித்து அருளிய தலம் இதுவாகும். இத்தலத்தில் வசித்து வந்த இரத்தினாவதி என்ற பெண் ஒரு சிவபக்தை. அவளின் பிரசவ காலத்தில் அவளுக்கு உதவி செய்ய அவள் தாயார் வெளியூரில் இருந்து வந்த போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. காவிரி நதியின் அக்கரையில் இருந்த இரத்தினாவதியின் தாயாரால் இக்கரை வ்ரமுடியவில்லை. இங்கு இரத்தினாவதிக்கு பிரசவ நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. தனது பக்தையின் துயரம் கண்டு இறைவன் அவளது தாய் உருவில் வந்து இரத்தினாவதிக்கு சுகப்பிரசவம் ஆக அருள் செய்தார். இதனாலேயே இறைவன் தாயுமானசுவாமி என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளார்.


பாடல் எண் : 01
நன்று உடையானைத் தீயது இலானை நரைவெள் ஏறு
ஒன்று உடையானை உமையொரு பாகம் உடையானைச்
சென்று அடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்று உடையானைக் கூற என் உள்ளம் குளிருமே.

பாடல் விளக்கம்‬:
நன்மைகளையே தனக்கு உடைமையாகக் கொண்டவனை, தீயது ஒன்றேனும் இல்லாதவனை, மிக வெண்மையான ஆனேற்றைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டவனை, பார்வதியை ஒரு பாகமாக உடையவனை, அவனது அருளாலன்றிச் சென்றடைய முடியாத வீடுபேறாகிய செல்வத்தை உடையவனை, சிராப்பள்ளிக் குன்றில் எழுந்தருளியுள்ளவனைப் போற்ற என் உள்ளம் குளிரும்.


பாடல் எண் : 02
கைம் மகவேந்திக் கடுவனொடு ஊடிக் கழை பாய்வான்
செம்முகமந்தி கருவரை ஏறும் சிராப்பள்ளி
வெம்முக வேழத்து ஈர் உரி போர்த்த விகிர்தா நீ
பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழியன்றே.

பாடல் விளக்கம்‬:
சிவந்த முகம் உடைய பெண் குரங்கு தனது ஆண் குரங்கோடு ஊடல் கொண்டு மூங்கில் புதரில் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளுதற்காகத் தனது குட்டியையும் ஏந்திக் கொண்டு கரியமலை மீது ஏறும் சிராப்பள்ளியில் எழுந்தருளியவனும் கொடிய முகத்தோடு கூடிய யானையின் தோலைப் போர்த்துள்ள விகிர்தனும் ஆகிய நீ படத்தோடு கூடிய முகத்தினை உடைய நாகப்பாம்பை அதன் பகைப் பொருளாகிய பிறைமதியுடன் முடிமிசை அணிந்திருத்தல் பழி தரும் செயல் அன்றோ?.


பாடல் எண் : 03
மந்தம் முழவம் மழலை ததும்ப வரை நீழல்
செந்தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளிச்
சந்தம் மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
எம்தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே.

பாடல் விளக்கம்‬:
மந்த சுருதியினை உடைய முழவு மழலை போல ஒலி செய்ய, மலை அடிவாரத்தில் செவ்விய தண்ணிய தோட்டங்களையும் சுனைகளையும் கொண்டுள்ள சிராப்பள்ளியில் எழுந்தருளிய அழகிய மலர்களைச் சடைமேற் சூடியவரும், விடையேற்றை ஊர்ந்து வருபவரும் ஆகிய எம் தலைவராகிய செல்வரை வணங்கும் அடியார்களுக்கு அல்லல் இல்லை.


பாடல் எண் : 04
துறை மல்கு சாரல் சுனை மல்கு நீலத்திடை வைகிச்
சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளிக்
கறை மல்கு கண்டன் கனலெரியாடும் கடவுள் எம்
பிறை மல்கு சென்னி உடையவன் எங்கள் பெருமானே.

பாடல் விளக்கம்‬:
பலவாகிய வழிகளைக் கொண்டுள்ள மலையடிவாரத்தில் விளங்கும் சுனைகளில் நெருங்கிப் பூத்த நீலமலர்களில் தங்கிச் சிறகுகளை உடைய வண்டுகளும் தும்பியும் இசைபாடும் சிராப்பள்ளியில் எங்கள் பெருமானாகிய சிவபிரான் கறைபொருந்திய கண்டத்தை உடையவனாய்க் கனலும் எரியைக் கையில் ஏந்தி ஆடும் எம் கடவுளாய்ப் பிறை பொருந்திய சென்னியை உடையவனாய் விளங்கியருள்கின்றான்.


பாடல் எண் : 05
கொலை வரையாத கொள்கையர் தங்கள் மதில் மூன்றும்
சிலை வரையாகச் செற்றனரேனும் சிராப்பள்ளித்
தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள்
நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறமாமே.

பாடல் விளக்கம்‬:
கொல்லும் தொழிலைக் கைவிடாத கொள்கையினராகிய அவுணர்கள் மும்மதில்களையும் மேரு மலையை வில்லாகக் கொண்டு அழித்தவராயினும் சிராப்பள்ளியின் தலைவராகிய அப்பெருமானாரைத் தலைவரல்லர் என்று நாள் தோறும் கூறிவரும் புறச் சமயிகளே! நிலவுலகில் நீலம் உண்ட துகிலின் நிறத்தை, வெண்மை நிறமாக மாற்றல் இயலாதது போல நீவிர் கொண்ட கொள்கையையும் மாற்றுதல் இயலுவதொன்றோ?.


பாடல் எண் : 06
வெய்ய தண்சாரல் விரிநிற வேங்கைத் தண்போது
செய்ய பொன்சேரும் சிராப்பள்ளிமேய செல்வனார்
தையல் ஒர்பாகம் மகிழ்வர் நஞ்சு உண்பர் தலையோட்டில்
ஐயமும் கொள்வர் ஆரிவர் செய்கை அறிவாரே.

பாடல் விளக்கம்‬:
எல்லோராலும் விரும்பத்தக்க குளிர்ந்த மலைச்சாரலில் விரிந்த தண்ணிய பொன்னிறமான வேங்கை மலர்கள் சிவந்த பொன்போன்ற நிறத்தனவாய் உதிரும் சிராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும் செல்வராகிய சிவபிரான் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்வர். நஞ்சினை உண்பர். தலையோட்டில் பலி ஏற்பர். வேறுபட்ட இவர்தம் செயல்களின் உண்மையை யார் அறியவல்லார்.


பாடல் எண் : 07
வேயுயர் சாரல் கருவிரல் ஊகம் விளையாடும்
சேயுயர் கோயில் சிராப்பள்ளிமேய செல்வனார்
பேயுயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
தீ உகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று ஆகாதே.

பாடல் விளக்கம்‬:
கரிய விரல்களை உடைய கருங்குரங்குகள் விளையாடும் மூங்கில் மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள சாரலை உடைய சிராப்பள்ளியில் நெடிதாக உயர்ந்துள்ள கோயிலில் மேவிய செல்வராகிய பெருமானார், பேய்கள் உயர்த்திப் பிடித்த கொள்ளிகளைக் கைவிளக்காகக் கொண்டு, சுடுகாட்டில் எரியும் தீயில் மகிழ்ந்து நடனம் ஆடும் திருக்குறிப்பு யாதோ? அஃது அவரை அடைய விரும்பும் மகளிர்க்குப் புலனாகாததாக உள்ளதே.


பாடல் எண் : 08
மலை மல்கு தோளன் வலிகெட ஊன்றி மலரோன் தன்
தலை கலனாகப் பலி திரிந்து உண்பர் பழியோரார்
சொலவல வேதம் சொலவல கீதம் சொல்லுங்கால்
சிலவல போலும் சிராப்பள்ளிச் சேடர் செய்கையே.

பாடல் விளக்கம்‬:
மலைபோன்ற திண்மை நிரம்பிய தோள்களை உடைய இராவணனின் வலிமை கெடுமாறு ஊன்றி அழித்துத் தாமரை மலர் மேல் உறைபவனாகிய பிரமனது தலையோட்டை உண் கலனாகக் கொண்டு திரிந்து அவ்வோட்டில் பலியேற்று உண்ணுவதால் தமக்குப் பழி வருமே என்று நினையாதவராய், இசையோடு ஓதத் தக்க வேதங்களையும் கீதங்களையும் அன்பர்கள் ஓதுமிடத்துச் சில பிழைபட்டன என்றாலும் அவற்றையும் ஏற்று மகிழ்பவர் சிராப்பள்ளி மேவிய பெருமைக்குரிய சிவனார். இவர்தம் செய்கைகளின் உட்பொருள் யாதோ?.


பாடல் எண் : 09
அரப்பள்ளியானும் மலர் உறைவானும் அறியாமைக்
கரப்புள்ளி நாடிக் கண்டிலரேனும் கல் சூழ்ந்த
சிரப்பள்ளிமேய வார்சடைச் செல்வர் மனைதோறும்
இரப்பு உள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே.

பாடல் விளக்கம்‬:
பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமாலும், தாமரை மலர்மேல் உறையும் பிரமனும் அறியாதவாறு அடிமுடி கரந்து உயர்ந்து நின்றதை அவர்கள் தேடிக் கண்டிலர் என்ற பெருமை உமக்கு உளதாயினும் மலையகத்துள்ள சிராப்பள்ளியில் எழுந்தருளிய நீண்ட சடையினை உடைய செல்வராகிய சிவபிரானே, நீர் வீடுகள் தோறும் சென்று இரப்பதைக் கருதுகின்றீர். அயலவர் கண்டால் இதனை இகழாரோ?.


பாடல் எண் : 10
நாணாதுடை நீத்தோர்களும் கஞ்சி நாட்காலை
ஊணாப் பகல் உண்டு ஓதுவோர்கள் உரைக்கும் சொல்
பேணாது உறுசீர் பெறுதும் என்பீர் எம்பெருமானார்
சேணார் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே.

பாடல் விளக்கம்‬:
நாணாது உடையின்றித் திரியும் திகம்பர சமணரும், காலையிலும் நண்பகலிலும் கஞ்சியை மட்டும் உணவாக உண்டு வாழும் புத்தரும் கூறும் பழிப்புரைகளைக் கருதாது நாம் சிறப்படைய வேண்டுமென்று விரும்பும் நீர், எம்பெருமான் உறையும் வானளாவிய கோயிலை உடைய சிராப்பள்ளியைச் சென்று அடைவீர்களாக.


பாடல் எண் : 11
தேனயம் பாடும் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த
கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன்
ஞானசம்பந்தன் நலம்மிகு பாடல் இவைவல்லார்
வான சம்பந்தத்தவரொடும் மன்னி வாழ்வாரே.

பாடல் விளக்கம்‬:
தேனுண்ணும் வண்டுகள் இனிய இசைபாடும் சிராப்பள்ளியில் விளங்கும் இறைவனை, அலைகளிற் பொருந்திவந்த சங்குகள் சோலைகளில் ஏறி உலாவும் கடலை அடுத்துள்ள கழுமல ஊரில் கவுணியர் கோத்திரத்தில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிப் போற்றிய, நன்மைகள் மிக்க இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் வானுலகிற் சம்பந்தமுடையவராகத் தேவர்களோடு நிலைபெற்று வாழ்வர்.


குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக