ஞாயிறு, 26 மார்ச், 2017

வசந்த நவராத்திரி


வசந்த நவராத்திரி நல்பக்தியையும், அந்த நல்பக்தியால் நல்வாழ்வையும் அளிக்கக் கூடியது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமி வரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியன தான்.

நவராத்திரி பூஜை என்பது ஒன்பது நாட்கள் இரவில் செய்யக்கூடிய பூஜையாகும் பொதுவாக நவரத்திரி பூஜை வருடத்திற்கு நான்கு முறை கொண்டாடப்பட வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

சிவனை வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாளும், அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழா தான்.

பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாக்த சாஸ்திரங்கள். அந்த பன்னிரண்டிலும் மிக முக்கியமானவை நான்கு நவராத்திரிகள்.

ஆனி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வாராஹி நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. 

புரட்டாசி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. 

தை மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் சியாமளா நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. 

பங்குனி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வசந்த நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

தேவி வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் முறையாகும். தேவி வழிபாட்டின் பண்டிகைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாக்கள் தான். குளிர்கால (புரட்டாசி மாதம்) ஆரம்பமும் கோடைகால (பங்குனி மாதம்) ஆரம்பமும் எமனின் இரு தாடைகளாக விளங்குவதாக அக்கினி புராணம் கூறுகிறது. அந்த இரு தாடைகளிலும் படாமல், அந்த இரு மாதங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, நீண்ட நல்வாழ்வு வாழ அருளக் கூடியவள் அம்பிகை மட்டுமே. புரட்டாசி மாதம், குளிர் காலத்தின் ஆரம்பம். பங்குனி மாதம், கோடையின் துவக்கம். இந்த இரு காலங்களுக்குள் அமையும் நவராத்திரிகளை அனுசரித்தால் நன்மை பயக்கும். 

பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாக்த சாஸ்திரங்கள். அந்த பன்னிரண்டிலும் மிக முக்கியமானவை நான்கு. பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி (27.03.2017 அன்று ஆரம்பம்) ஆடி மாதத்தில், ஆஷாட நவராத்திரி; புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரி; தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. சக்தி வழிபாடு செய்யும் ஸ்ரீ வித்யா உபாசகர்கள் இந்த நான்கு நவராத்திரிகளையும் கொண்டாடுவது வழக்கம். வருடத்தை ஆறு ருதுக்களாக ஆன்றோர்கள் பிரித்துள்ளார்கள். ஒரு ருதுவுக்கு இரண்டு மாதங்கள். அந்த ருதுக்களில் “ரிதூநாம் குஸுமாகர” என்று ஸ்ரீ கிருஷ்ண பகவானால் சொல்லப்படுவது வஸந்த ருது.

பருவங்களில் சிறந்ததாகச் சொல்லப்படுவது வஸந்த ருது. இந்த வஸந்த ருதுவே வசந்த காலம். அதாவது, வாழ்வில் வசந்தம் தொடங்கக் கூடிய காலம். வயல்களில் அறுவடை முடிந்து, வளம் பொங்கக் கூடிய காலம். மக்களின் மனதில் ஆனந்தம் குடிகொள்ளும் காலம். வசந்த நவராத்திரி, பங்குனி மாத அமாவாசை முதல் தொடங்கப்படும். மறுநாள், தெலுங்கு வருடப் பிறப்பாகிய யுகாதிப் பண்டிகை அமையும்.

இந்த நவராத்திரி ஸ்ரீ ராம நவமியுடன் முடியும் (நவராத்திரி நிர்ணயம் எனும் புத்தகத்தில், வசந்த நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடினால் உலகம் க்ஷேமம் அடையும் என்றும் ஒரு பட்சம் அதாவது, 15 நாட்கள் (அமாவாசை முதல் பௌர்ணமி வரை) கொண்டாடினால் வேண்டும் வரங்கள் கிட்டும் என்றும் ஒரு மண்டலம், அதாவது, பங்குனி அமாவாசை முதல் சித்ரா பௌர்ணமி வரை 45 நாட்கள் கொண்டாடுவது சகல கார்யங்களிலும் வெற்றியைத் தரும் என்றும் கூறுகின்றது.)

பொதுவாக வட இந்தியாவிலும் தென் இந்தியாவில் சில கோயில்களிலும் மட்டுமே கொண்டாடப்படுகிறது இந்த வசந்த நவராத்திரி. வசந்த நவராத்திரி யோகம் எனும் பக்தி நிலையை தரக் கூடியது. மேரு எனும் ஸ்ரீ சக்ரம் அமைந்திருக்கும் ஆலயங்களில் வசந்த நவராத்திரி பொதுவாகக் கொண்டாடப்படும். ஒன்பது தினங்களிலும் காலை வேளையில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பெறும்.

ஒன்பது தினங்களிலும் அம்பிகை ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். மாலை வேளையில் அம்பிகைக்கு உகந்த, சாக்தத்தின் மிக உயர்நிலை பூஜையான ஸ்ரீ நவாவரண பூஜையும் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனையும் கன்யா பூஜையும் ஸுவாஸினி பூஜையும் நடைபெறும். வசந்த நவராத்திரி வழிபாட்டால், பெண் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள்.

கன்னியர்கள் திருமணம் நிறைவேறப் பெறுவார்கள். சுமங்கலிகள் மாங்கல்ய பலம் பெறுவார்கள். வசந்த நவராத்திரியை அனுஷ்டிக்கிறவர்களுக்கு கடன் தொல்லைகள் தீர்வதோடு, கணவன்-மனைவி உறவு பலப்படும்; அன்யோன்யம் உண்டாகும். அக்கினி புராணத்தில் ஒரு வருடத்தில் 4 நவராத்திரிகளையும் கொண்டாட முடியாதவர்கள் சாரதா நவராத்திரி மற்றும் வசந்த நவராத்திரியையாவது விரதம் அனுஷ்டித்து கொண்டாடுவது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆகவே பங்குனி மாதம் அனுஷ்டிக்கப்படும் வசந்த நவராத்திரியை சக்தி வழிபாடாகச் செய்து சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். புரட்டாசி நவராத்திரி மாதிரி கோலாகலமாகக் கொண்டாடாவிட்டாலும், அவரவர் இல்லத்தில் எளிய முறையில் கொண்டாடலாம். அருகில் உள்ள அம்மன் கோயில்களுக்கு சென்றும் வசந்த நவராத்திரி விழாவில் பங்கேற்கலாம்.

வசந்த நவராத்திரி நாட்களில் வீட்டுக்கு வரும் பெண்களை சக்திகளாக நினைத்து கௌரவிக்க வேண்டும். அவர்களுக்கு தாம்பூலம், மஞ்சள், கண்ணாடி, சீப்பு, குங்குமச் சிமிழ், தேங்காய், பழம், புத்தகங்கள், ரவிக்கைத் துணி கொடுத்து அனுப்ப வேண்டும். நவராத்திரி 9 நாட்களும் 9 கன்னியரை சக்தியாக பூஜிப்பது குடும்பத்துக்கு நல்லது.

அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே வசந்த நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாடலாவது பாட வேண்டும். முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. வசந்த நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும். வசந்த நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

வசந்த நவராத்திரி தொடர்பான சுலோகம், மந்திரம் தெரியவில்லையா? கவலைப் படாதீர்கள். “ஓம் ஸ்ரீ லலிதா தேவ்யை நமஹ” என்பதை 108 தடவை சொன்னால் போதும், உரிய பலன் கிடைக்கும். சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும் வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டா லும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் வசந்த நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.

தர்மபுரி கல்யாண காமாட்சி ஆலயத்தில் வசந்த நவராத்திரி விரதத்தை ஸ்ரீ ராமன் கடைப்பிடித்த பிறகு தான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது. தேவியை இந்த வசந்த நவராத்திரி நாட்களில் கட்கமாலா துதி, லலிதா த்ரிசதி, லலிதா ஸஹஸ்ரநாமம், ஸௌந்தர்ய லஹரி, ஆச்ரேய அஷ்டோத்திரம் போன்ற துதிகளால் அர்ச்சித்து வளங்கள் பெறலாம்.

வாழ்வில் வசந்தம் வீசச் செய்யக்கூடிய வசந்த நவராத்திரி காலத்தில் அம்பிகையை வழிபட்டு, அம்பிகையின் பரிபூரண அருளைப் பெறுவோம்.

நன்றி : பரத்குமார்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

வியாழன், 23 மார்ச், 2017

விஜயா ஏகாதசி

பங்குனி மாதம் கிருஷ்ண பட்சத்தில் (தேய்பிறை) வரும் ஏகாதசி திதியை விஜயா ஏகாதசியாக ‌கொண்டாடுவர். விஜயா ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்.


ஏகாதசி விரத மஹாத்மிய கதைகள் அர்ஜூனனின் மனதிற்கு அளவில்லாத ஆனந்தம் அளித்தாலும், திருப்தி அடையாமல், ஜெயா ஏகாதசி விரத மஹிமையை  கேட்டு முடித்தவுடன், ஸ்ரீ கிருஷ்ணரிடம் "ஹே மதுசூதனா! தாங்கள் கிருபை புரிந்து பால்குண (பங்குனி) மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயர், விரதம் அனுஷ்டிக்கும் விதி, இவற்றைப் பற்றி விஸ்தாரமாக கூற வேண்டுகிறேன்" என்றான். 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் "ஹே பார்த்தா! பங்குனி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி, விஜயா ஏகாதசி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. இவ்விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பிரபாவத்தால் அனைத்திலும் வெற்றி கிட்டுகிறது. மிகவும் மேன்மை வாய்ந்த இவ்விரத மஹாத்மிய கதையைக் கேட்பதாலும், படிப்பதாலும் அனைத்து பாபங்களும் அழியப் பெறுகின்றன.

ஒரு சமயம் தேவரிஷி நாரதர், ஜகத்தைப் படைப்பவரான தன் தந்தை பிரம்ம தேவரிடம் "தந்தையே! தாங்கள் எனக்கு பங்குனி மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் விஜயா ஏகாதசியின் விரத விதானத்தை கூறி அருள வேண்டும்." என்றார். 

பிரம்மதேவர் பதிலளிக்கையில் "மகனே நாரதா! விஜயா ஏகாதசி விரதமானது முற்பிறவி மற்றும் இப்பிறவி இரண்டின் பாபத்தையும் அழிக்க வல்லது. இவ்விரதம் அனுஷ்டிக்கும் விதியை இதுவரை நான் யாருக்கும் சொன்னதில்லை. நீ கேட்ட கேள்வியின் பதில், இவ்வுலக ஜீவராசிகள் அனைத்திற்கும் பயன் அளிக்கும் என்பதால் கூறுகிறேன். இவ்விரதத்தின் பலனானது, அனுஷ்டிப்பவர் அனைவருக்கும் அனைத்திலும் வெற்றியை அளிக்கக்கூடியது. ஆகையால் நான் விவரித்து கூறப்போகும் இவ்விரத மஹாத்மியத்தை கவனத்துடன் கேள்." என்றார்.

திரேதா யுகத்தில், புருஷோத்தமனான ஸ்ரீ இராமச்சந்திரமூர்த்தி, தனது பதினான்கு வருட வனவாசத்தின் போது பஞ்சவடியில், மனைவி சீதா மற்றும் தமையன் லக்ஷ்மணனுடன் வசித்து வந்தார். அக்கால கட்டத்தில், மஹா பாபியான இலங்கை வேந்தன் இராவணன், அன்னை சீதா தேவியை அபகரித்துச் சென்றான். சீதையின் நிலையை அறியாது, இழந்த சோகத்தால் துக்கம் பீடிக்க, கவலையுடன் அன்னையை தேடி அலைந்தனர். வனத்தில் அங்கு மிங்கும் அலைந்து திரிந்து, கடைசியில் மரண வேதனையில் துடித்துக் கொண்டிருந்த ஜடாயுவை கண்டு, அவரருகில் சென்றனர்.  
ஜடாயு, அன்னை சீதையை இராவணன் கவர்ந்து சென்ற விபரத்தை பகவான் ஸ்ரீ ராமனிடம் கூறி விட்டு, அண்ணலின் மடியில் தனது உயிரை நீத்து, ஸ்வர்க்கலோகம் அடைந்தார். சீதை இருக்கும் இடம் அறிந்து, ஸ்ரீ ராமரும் லக்ஷ்மணனும், அன்னையைத் தேடும் பயணத்தைத் தொடர்ந்தனர். 

சிறிது தூரம் சென்றதும், சுக்ரீவன் இருப்பிடத்தை அடைந்தனர். ராமபக்த ஹனுமான் முலம் சுக்ரீவனுடன் தோழமை பூண்டு, வானர ராஜன் வாலியை வதம் செய்தார் ஸ்ரீ ராமர். ஸ்ரீ ஹனுமான், கடலைக் கடந்து, லங்கா நகருக்குச் சென்று, அன்னை சீதையைக் கண்டு அண்ணல் ஸ்ரீ ராமர், சுக்ரீவன் இருவரின் தோழமைப் பற்றி விவரித்து உரைத்தார். 

லங்கையிலிருந்து திரும்பி வந்து ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் அசோக வனத்தில் அன்னை சீதையின் நிலையைப் பற்றி விவரமாக கூறினார். அன்னையின் நிலை அறிந்ததுடம், அன்னையை மீட்பதற்காக, வானர ராஜன் சுக்ரீவனின் அனுமதியுடன் வானரர் மற்றும் கரடிகளின் சேனையுடன் இலங்கையை நோக்கி புறப்பட்டனர் ஸ்ரீ ராம லக்ஷ்மணர்கள். பயணம் இறுதியில் தென்கோடி சமுத்திரத்தின் கரையில் வந்து நின்றது. 

முதலை, மீன் ஆகிய ஜீவராசிகள் அடங்கிய பரந்து விரிந்த சமுத்திரத்தைப் பார்த்த ஸ்ரீ ராமர், லக்ஷ்மணனிடம் "ஹே லக்ஷ்மணா, அனேக நீர் வாழ் ஜீவராசிகள் அடங்கிய பிரம்மாண்டமான இச்சமுத்திரத்தை எங்ங‌னம் கடப்பது?" என்று வியந்து நின்றார்.

அதற்கு லக்ஷ்மணன் மதிப்பிற்குரிய சகோதரா! தாங்களே புருஷோத்தமனான ஆதிபுருஷன் ஆவீர். தாங்கள் அனைத்தும் அறிவீர். இங்கிருந்து அரை யோஜ‌னை தூரத்தில் குமாரி தீபம் என்னும் இடத்தில் வக்தால்ப்ய ரிஷியின் ஆசிரமம் இருக்கிறது. அவர் அனேக பிரம்ம ஜனனங்களை கண்டவர். தாங்கள் அவரிடத்தில் சென்று நம் வெற்றிக்கான உபாயத்தை கேட்பது உசிதம்." என்றான்.

லக்ஷ்மணனின் வார்த்தைகளைக் கேட்ட ஸ்ரீ ராமர் அதன்படி வக்தால்ப்ய ரிஷியின் ஆசிரமத்திற்குச் சென்று முனிவரைக் கண்டு தனது பணிவான வணக்கத்தைச் சமர்ப்பித்து அவர் முன் அமர்ந்தார். மனிதனாக‌ அவதாரம் எடுத்துள்ள புருஷோத்தமனான ஸ்ரீ ராமரை அறிந்து கொண்ட வக்தால்ப்ய முனிவர், ஸ்ரீ ராமரிடம் "ஹே ஸ்ரீ ராம்! எக்காரியத்திற்காக இங்கு நீ எழுந்தருளியுள்ளாய்." என்று வினவினார்.

அதற்கு ஸ்ரீ ராமர்" மஹரிஷி! நான் என்னுடைய படைகளுடன் சமுத்திரத்தின் கரையில் முகாமிட்டுள்ளேன். என் மனைவி சீதையை இலங்கை வேந்தனான இராவணன் கவர்ந்து சென்று அசோக வனத்தில் சிறை வைத்துள்ளான். ஆகவே என் மனைவி சீதையை மீட்பதற்காகவும், அரக்கர்களை யுத்தத்தில் வெல்லவும் பிரம்மாண்டமான இச்சமுத்திரத்தைக் கடந்து இலங்கை செல்ல வேண்டியது மிகவும் அவசியம். இதற்கான உபாயத்தை வேண்டி தங்களிடம் வந்துள்ளேன். தாங்கள் தயவு கூர்ந்து பிரம்மாண்டமான இச்சமுத்திரத்தைக் கடப்பதற்கான உபாயத்தைக் கூறி அருள வேண்டும்." என்றார்.

வக்தால்ப்ய ரிஷி ஸ்ரீ ராமரிடம் "ராமா! தங்களுக்கு மேலான ஒரு விரதத்தைப் பற்றி கூறுகிறேன். கேளுங்கள். இதை அனுஷ்டிப்பதால் தங்களுக்கு வெற்றி மீது வெற்றி வந்து சேரும்." என்றார். இதைக் கேட்டு உற்சாகமடைந்த ஸ்ரீ ராமர் "முனிவரே அப்படி ஒரு மகத்தான விரதம் எது? அதன் பெயர் என்ன? அதை அனுஷ்டிப்பதால் எடுத்த காரியம் யாவிலும் வெற்றி கிட்டுமா?" என்று வினவினார்.

அதற்கு வக்தால்ப்ய முனிவர் "ஹே மரியாதைக்குரிய புருஷோத்தமா, பங்குனி மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் விஜயா ஏகாதசி விரதத்தை விரத விதானப்படி அனுஷ்டிப்பதால் தாங்கள் நிச்சயமாக சமுத்திரத்தைக் கடந்து செல்வது மட்டுமின்றி யுத்தத்திலும் தங்களுக்கு வெற்றி கிட்டும். ராமா, இவ்விரதத்திற்காக முந்தைய நாளான தசமியன்று தங்கம், வெள்ளி, தாமிரம், அல்லது மண்ணால் ஒரு கலசம் செய்து அதில் நீர் நிரப்பி அதில் மாவிலையுடன் சேர்த்து ஐந்து வகை இலைகளை வைத்து ஒரு மரப்பலகையின் மீது ஸ்தாபிதம் செய்யவும். 

ஏழு வகை தானியங்கள் கலந்த கலவையை மேடு போல் செய்து அதன் மேல் கலசத்தை வைக்கவும். கலசத்தை மூடி அதன் மேல் பார்லியை நிரப்பி அதில் ஸ்ரீமன் நாராயணனின் தங்க விக்ரஹத்தை ஸ்தாபிதம் செய்யவும். ஏகாதசி அன்று காலையில் ஸ்நானம் முதலிய நித்ய கர்மாக்களை முடித்துக் கொண்டு ஸ்ரீமன் நாராயணருக்கு தூபம், தீபம், நைவேத்யம், தேங்காய், பழம், தாம்பூல சமர்ப்பணத்துடன் பூஜை செய்ய வேண்டும். அன்று நாள் முழுவதும் கலசத்தின் முன் அமர்ந்து தியானம் செய்வதுடன், இரவிலும் அதே போல் அமர்ந்து கண் விழித்தல் வேண்டும். மறுநாள் துவாதசியன்று நதி அல்லது குளக்கரையில் ஸ்நானம் முதலியவற்றை முடித்துக் கொண்டு அக்கலசத்தை பிராம்மணருக்கு தானமாக அளிக்க வேண்டும். ராம, தாங்கள் இவ் விஜயா ஏகாதசி விரதத்தை, தங்கள் படைகளின் சேனாபதியுடன் ஒன்று சேர்ந்து கடைப்பிடித்தால் கட்டாயம் தங்களுக்கு வெற்றி கிட்டும்." என்றார்.

முனிவரின் ஆக்ஞைப்படி, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி தனது படைகளுடன் விதிப்பூர்வமாக விஜயா ஏகாதசி விரதத்தை மேற்கொண்டார். இவ்விரதத்தின் பலனால் அவருக்கு அரக்கர்களுடனான யுத்தத்தில் வெற்றி கிட்டியது.  இவ்வாறு கூறிய பிரம்ம தேவர், நாரதரிடம், "மகனே, இவ்விரத நாளன்று, எவர் ஒருவர் இவ்விரத மஹாத்மியத்தை கேட்கிறாரோ அல்லது படிக்கிறாரோ, அவருக்கு வாஜ்பேய யக்ஞம் செய்த பலன் கிட்டுகிறது" என்றார்.

இதைக் கூறிய ஸ்ரீ கிருஷ்ணர் "ஹே ராஜன்! எவர் ஒருவர் இவ்விரதத்தை விதி பூர்வமாக அனுஷ்டிக்கிறாரோ, அவருக்கு இவ்வுலகில் மட்டுமல்லாது மேலுலகிலும் வெற்றி நிச்சயம்' என்று அருளினார். 

பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் ரூபம் எவ்விதமானாலும் சரி, அவரை பூஜிப்பதால், சர்வ மனோகாம்யங்களும் பூர்த்தி அடையும். ஸ்ரீ ராமர், தான் விஷ்ணுவின் அவதாரம் என்று அறிந்து இருந்தாலும், தான் எடுத்துள்ள மானுட அவதாரத்தில் சகலருக்கும் நன்மார்க்கத்தை காட்டுவதற்காக, விஷ்ணுவை ஆராதிக்கும் ஏகாதசி விரதத்தை, ஒரு சாதாரண மனிதராக மேற்கொண்டார். வாழ்க்கையில் அனைத்துத் துறைகளிலும் வெற்றியை அடைய விரும்புவோர், இவ்விரதத்தை கடைப்பிடித்தால், அதன் விளைவாகக் கிட்டும் அளவில்லா பலனை அடைவதற்கான நற்பேற்றினைப் பெறுவர். விஜயா ஏகாதசி விரதம், மனித வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வெற்றியை அளிக்கக் கூடிய வல்லமை வாய்ந்தது.

நன்றி : Kshetra Yaatra


|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||

|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||

வியாழன், 16 மார்ச், 2017

மாசி மகம்


மாசி மாதம் என்றதும் நம் நினைவுக்கு வருவது மக நட்சத்திரம் தான். இந்த மாசி மக நட்சத்திரத்தன்று புனித நீர்நிலையில் நீராடினால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கும். உயர்ந்தவன் - தாழ்ந்தவன், ஏழை - பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரும் நீராடலாம். திருமணமானவர்கள் தங்கள் மனைவியுடன் நீராட வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

புனித நீர்நிலைகளில் மக நீராடலுக்கு மிகவும் புகழ்பெற்றது கும்பகோணம் மகாமகக் குளம். இத்திருக்குளத்தில் இருபது புனித தீர்த்த தேவதைகளின் தீர்த்த கிணறுகள் உள்ளன. அவை அனைத்திலும் மாசிமக நட்சத்திரத்தன்று, உடலுக்கு வலிமையும் புனிதத்தையும் தரக்கூடிய அற்புதமான காந்த சக்தி இயற்கையாகவே தோன்றுவதாக ஞான நூல்கள் கூறுகின்றன. மேலும், புண்ணிய நதிகள் அனைத்தும் அங்கு எழுந்தருள்வதாக ஐதீகம்.

மக நட்சத்திரத்தன்று மகாமகக் குளத்தில் நீராடி, குளத்தை மூன்று முறை வலம் வந்தால் கயிலாயத்தை வலம் வந்த பலன் கிட்டும். அன்று, இக்குளக்கரையில் வேதவிற்பன்னர் உதவியுடன் மறைந்த முன்னோர்களுக்கு பிதுர்பூஜை செய்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி கிட்டும். இதனால், குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும்.

மக நட்சத்திரத்தன்று இங்கு தீர்த்தவாரி நடைபெறும். குடந்தைத் திருத்தலத்தில் அருள்புரியும் எல்லா சிவாலயங்களிலிருந்தும் சுவாமியின் உற்சவத் திருமேனிகள் ஊர்வலமாக மகாமகக் குளத்திற்கு வருகை தந்து, சுபஓரையில் வழிபாட்டுடன் தீர்த்தவாரி காண்பார்கள். இதேபோல் அங்குள்ள பெருமாள் கோவில்களில் எழுந்தருளியுள்ள தெய்வத் திருமேனிகளும் சக்கரப் படித்துறைக்கு வந்துசேர, தீர்த்தவாரி மிகச்சிறப்பாக நடைபெறும். அந்த சுபவேளையில் பக்தர் பெருமக்கள் தீர்த்த வாரியில் கலந்துகொண்டு நீராடி புனிதம் பெறுவார்கள்.

கும்பகோணம் மகா மகக் குளக்கரைக்கு புனித நீராட வர இயலாதவர்கள், தங்கள் ஊருக்கு அருகில் ஓடும் புனித நதி, குளங்களில் நீராடலாம். அதற்கும் வசதி இல்லாதவர்கள் தங்கள் இல்லத்தில் வடக்கு திசை நோக்கி நின்று குளித்தாலும் புனிதம் கிட்டும் என்று கூறப்படுகிறது. மாசி மகத்தன்று சில நிகழ்வுகள் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக் குறுக்கை வீரட்டானேஸ்வரத்தில் மாசி மகத்தன்று காம தகனவிழா நடைபெறும். சிவபெருமான் ஆழ்ந்த தியானத்திலிருக்கும்போது, தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமான் மீது மலரம்பு எய்தான் மன்மதன். கோபம் கொண்ட அவரின் நெற்றிக் கண்ணிலிருந்து புறப்பட்ட தீப்பொறிகள் மன்மதனை எரித்து சாம்பலாக்கியது. பிறகு அவன் மனைவி ரதிதேவியின் வேண்டுதலால், மீண்டும் மன்மதன் அவள் கண்களுக்கு மட்டும் தெரியும் படி சிவபெருமான் அருளினார். இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் விழாவாக காம தகனவிழா மாசி மகத்தன்று நடைபெறும்.

இரண்யன் என்ற அசுரன் பூமாதேவியைக் கடத்திச் சென்று பாதாள லோகத்தில் ஒளித்து வைத்தான். இதனை அறிந்த மகாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று அந்த அசுரனை வதம் செய்து, பூமாதேவியை வெளிக்கொணர்ந்தது மாசி மக நட்சத்திரத் திருநாளில் தான் என்று விஷ்ணு புராணம் கூறும்.

கன்னிப் பெண்ணான குந்திதேவி, சூரிய பகவானை நேரில் வரவழைக்கும் மந்திரத்தை உச்சரித்ததால், சூரிய பகவான் அவள்முன் தோன்றினார். அதன் விளைவால் குந்திதேவி குழந்தை பெற்றாள். பழிச்சொல்லுக்கு அஞ்சி அந்தக் குழந்தையை (கர்ணன்) ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டாள். அந்தப் பாவம் அவளை வாட்டியது. அதற்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டி, உரோமச முனிவரைச் சந்தித்தாள். 

அவர், "மாசி மக நட்சத்திரத்தன்று ஏழு கடல்களில் ஒரே சமயத்தில் நீராடினால் உன் பாவம் நீங்கும்" என்று சொன்னார். "அது எப்படி ஒரே நாளில் ஏழு கடல்களில் நீராட முடியும்?' என்று பலத்த யோசனையில் ஆழ்ந்த குந்திதேவி, வழி காட்டியருளுமாறு இறைவனை இறைஞ்சினாள். அப்போது, "திருநல்லூர்  கோவிலுக்குப் பின்புறம் ஒரு தீர்த்தம் உள்ளது. அதை ஏழு கடலாக நினைத்து மாசி மகத்தன்று நீராடு வாயாக" என்று அசரீரி ஒலித்தது. குந்திதேவியும் அப்படியே செய்து தன் பாவத்திலிருந்து விடு பட்டாள். அவள் நீராடிய தீர்த்தம் சப்த சாகர தீர்த்தம் என்று அழைக்கப் படுகிறது.

தட்சன், சிவபெருமானை நோக்கி பல வருடங்கள் கடுமையாக தவம் மேற்கொண்டான். அதன் பலனால் சிவபெருமான் அவன் முன் தோன்றி, "வேண்டும் வரம் என்ன?' என்று கேட்க, "உமையவள் எனக்கு மகளாகக் கிடைக்க வேண்டும். நான் உமையவளை வளர்க்க வேண்டும். அதன்பின் தக்க பருவத்தில் தாங்கள் மணம் புரிய வேண்டும்" என்று வரம் கேட்டான். இறைவனும் அவன் கேட்டபடி அருளினார். அந்த வரத்தின் படி உமையவள் காளிந்தி நதியில் ஒரு தாமரைப் பூவில் வலம்புரிச்சங்கு வடிவாய் மாசி மக நட்சத்திரத்தன்று தோன்றினாள். அன்றைய தினம் தட்சன் தன் மனைவியுடன் அந்த நதியில் நீராட வந்தபோது, தாமரை மலரில் தோன்றிய வலம்புரிச்சங்கு குழந்தையாக மாறியது. அந்தப் பெண் குழந்தையைக் கண்டெடுத்து வளர்த்தான் தட்சன்.

மாசி மகத்தன்றுதான் சுவாமிமலை திருத்தலத்தில், தன் மகன் முருகனிடம் சிவபெருமான் உபதேசம் பெற்றார் என்று சிவபுராணம் கூறுகிறது. அதனால் புதிதாகக் கல்வி கற்பவர்கள் எந்தக் கல்வியாக இருந்தாலும் அன்று தகுந்த ஆசிரியரிடம் கற்றால் சிறந்து விளங்கலாம் என்பர். வல்லாள மகாராஜனுக்கு இறைவனே மகனாக எழுந்தருளினார் என்பதால், ஒவ்வொரு வருடமும் திருவண்ணாமலையார் மாசி மக நட்சத்திரத்தில் பள்ளிகொண்டாப்பட்டு என்னும் ஊருக்கு எழுந்தருளி, அந்த மன்னனுக்காக நீத்தார் கடனுக்குரிய வழிபாட்டினை நடத்திவரும் விழா திருவண்ணாமலையில் நடைபெறுகிறது.

ஒருமுறை வருண பகவானுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டபோது, அவர் கடலில் கட்டிப்போடப்பட்டிருந்தார். வருண பகவானது செயல்பாடுகளின்றி அனைவரும் துன்புற்றனர். எனவே, வருணனை விடுவிக்கும்படி தேவர்கள் சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தனர். அவரும் விடுவித்தார். அன்றைய தினம் மாசிமக நாள். தோஷம் நீங்கப்பெற்ற வருணன் சிவபெருமானை நோக்கி, "மாசி மக நன்னாளில் தீர்த்தமாடி வழிபடுகிறவர்கள் தங்கள் பாவங்கள் நீங்கப்பெற்று நற்பலனைப் பெற அருளவேண்டும்" என கேட்டுக்கொண்டார். சிவபெருமான் அவ்வாறே வரமருளினார்.

பல பெருமைகளைக் கொண்ட மாசி மக நட்சத்திரத்தன்று புனித நீர்நிலையில் நீராடி, விரதம் மேற்கொண்டு இறைவனை வழிபடுவோருக்கு புனிதம் கிட்டுவதுடன், பல பேறுகளும் பெற்று வளமுடனும் நலமுடனும் வாழ்வர்.


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

ஐம்பூத மூர்த்திகள்


இவ்வுலகிலுள்ள அனைத்தும் பஞ்சபூதங்களால் உருவானவை. பூதம் என்றால் மிகப்பெரியது என்று பொருள். பஞ்சபூதங்களில் இறைவன் நிறைந்து விளங்குகிறான் என்பதை மாணிக்கவாசகர்,

"பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி!'

என்கிறார். அதாவது, "ஆகாயத்தில் சப்தம் என்ற ஒரு குணமாகவும்; காற்றில் சப்தம், ஸ்பரிசம் என்ற இரண்டு குணங்களாகவும்; தீயில் சப்தம், ஸ்பரிசம், ஸ்வரூபம் என்ற மூன்று குணங்களாகவும்; நீரில் சப்தம், ஸ்பரிசம், ஸ்வரூபம், ரசம் என்ற நான்கு குணங்களாகவும்; நிலத்தில் சப்தம், ஸ்பரிசம், ஸ்வரூபம், ரசம், நாற்றம் என்ற ஐந்து குணங்களாகவும் திகழ்பவனைப் போற்றுவோம்" எனக் குறிப்பிடுகிறார்.

சிவபெருமான் ஐம்பெரும் பூதங்களாகக் காட்சி கொடுத்தருளிய தலங்கள் பஞ்சபூதத் தலங்களாக விளங்குகின்றன. காமாட்சியம்மனுக்கு இறைவன் காட்சி கொடுத்த காஞ்சிபுரம் பிருத்வி தலம் (மண் தலம்) எனப்படுகிறது. (திருவாரூரும் பிருத்வி தலமாகக் கருதப்படுகிறது.) சர்வேஸ்வரன் தண்ணீராக எழுந்தருளி அகிலாண்ட நாயகிக்கும், யானை, சிலந்தி ஆகியவற்றுக்கும் அருள்புரிந்த அப்பு (நீர்) தலம் திருவானைக்கா. 

அனைத்துலகிலும் ஒளிவீசும் பரம்பொருள் நெருப்புக்கம்பமாக நின்று பிரம்மா, விஷ்ணுவுக்குக் காட்சி தந்த தேயு (நெருப்பு) தலம் திருவண்ணாமலை. அனைத்து ஜீவராசிகளுக்கும் அருள்புரியும் ஈசன், எல்லா உயிர்களும் சுவாசிக்கின்ற காற்றாக எழுந்தருளி சிலந்தி, பாம்பு, யானை ஆகியவற்றுக்கு முக்தியளித்த காளஹஸ்தி வாயு தலம். அனைத்தையும் தன்னுள் கொண்டுள்ள இறைவன் வானமாக விளங்கி பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் திருக்காட்சி தந்த ஆகாயத்தலம் சிதம்பரம்.

பிருத்வி லிங்கம், அப்பு லிங்கம், தேயு லிங்கம், வாயு லிங்கம், ஆகாச லிங்கம் ஆகிய பஞ்ச லிங்கங்களும் சிவபெருமானின் ஐந்தொழில்களைக் குறிக்கின்றன. புல், செடி, கொடி, மரங்கள் போன்ற ஜீவராசிகளை உற்பத்தி செய்யும் பிருத்வி லிங்கம் படைத்தலையும்; அனைத்துப் பொருட்களின் அழுக்கை நீக்கி, தூய்மைப்படுத்தி, உயிரினங்களின் தாகத்தைப் போக்கி வாழவைக்கும் தண்ணீராக உள்ள அப்புலிங்கம் காத்தலையும்; யாராலும் நெருங்க முடியாததும், எங்கும் பரவிச் சென்று எல்லாவற்றையும் தன்னுள் ஒடுக்கிக்கொள்வதுமான நெருப்பாகவுள்ள தேயு லிங்கம் அழித்தலையும்; கண்களுக்குப் புலனாகாமல் எல்லா இடங்களிலும், உள்ளும் புறமும் உலவி உயிர்கள் அனைத்திற்கும் வாழ்வளிக்கும் காற்றாக உள்ள வாயு லிங்கம் மறைத்தலையும்; யாராலும் தீண்ட முடியாமல் இருப்பதும், அண்ட சராசரங்கள் அனைத்தும் சுழன்று இயங்குவதற்கு இடம் தந்து எல்லாவற்றையும் தன்னுள் கொண்டதுமான வானமாகவுள்ள ஆகாய லிங்கம் பக்குவ மடைந்த ஆன்மாக்களுக்கு முக்தி கொடுத்து தன்னுள் ஏற்றுக்கொள்ளும் அருளல் தொழிலையும் குறிக்கிறது.

பஞ்சலிங்கத் தலங்களாக விளங்கும் காஞ்சி, திருவானைக்கா, திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம் ஆகியவற்றின் சிறப்புக்களை இனி காண்போம்.

காஞ்சி சக்தி பீடங்களுள் ஒன்று. கச்சி என்றால் ஆமை. தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்த போது, ஆமையாக அவதாரம் செய்த திருமால் பின்னர் சிவனை வழிபட்டு மீண்டும் விஷ்ணு வடிவத்தையும், வைகுந்த வாழ்வையும் இத்தலத்தில் பெற்றதால் இத்தலம் திருக்கச்சி எனப்பட்டது. நான்கு திசைகளிலும் நான்கு மறைகளைப் போன்று நான்கு பகுதியாக வளர்ந்துள்ள ஒற்றை மாமரத்தடியில், மண்ணால் லிங்கம் செய்து ஆகம விதிப்படி பூஜித்த காமாட்சியம்மனுக்கு மாமரத்தில் சிவபெருமான் காட்சிதந்த தலம் இது.

சிவபெருமான் தண்ணீராக எழுந்தருளியுள்ள தலம் திருவானைக்கா. "கா" என்றால் பூஞ்சோலை. நாவல் மரத்துக்கு ஜம்பு விருட்சம் என்று பெயர். பூஞ்சோலையில் நாவல் மர நிழலில் வெளிப்பட்டிருந்த சுயம்புலிங்கப் பரம்பொருளை யானையும் சிலந்தியும் வழிபட்ட தலம் இது. ஈசன் ஜம்பு விருட்சத்தின் அடியில் எழுந்தருளியதால் இத்தலம் ஜம்புகேஸ்வரம் எனப்பட்டது. இத்திருத்தலத்தில் வழிபட்டால் ஆன்மா தூய்மையடைந்து பிறவி நீங்கி முக்தி பெறும். லிங்கப் பரம்பொருளிலிருந்து எப்போதும் நீர் ஊறிக்கொண்டிருக்கும் எனப்படுகிறது.

அக்னித் தலமான திருவண்ணாமலை, நினைத்தால் முக்தி தரும் தலம். பிரம்மாவும் விஷ்ணுவும் தாமே பரம்பொருள் என்று வாதிட்டபோது அவர்களது அஞ்ஞானத்தைப் போக்குவதற்காக ஈசன் பேரொளிப் பிழம்பாக, ஜோதிலிங்கமாக வெளிப்பட்டார். ஆணவ இருள் நீங்கி ஜோதியை அவர்கள் தொழுதபோது, ஈசன் திருவடிகளும் திருமுடியும் மறைந்திருக்குமாறு லிங்கோத்பவ மூர்த்தியாக காட்சி தந்தருளிய தலம். எல்லாவற்றையும் சுத்திகரிக்கும் நெருப்பாக இறைவன் நின்று ஒளிவீசும் தலமிது.

சிலந்தி, பாம்பு, யானை ஆகிய மூன்றும் வாயு லிங்கப் பரம்பொருளை வழிபட்டு முக்தி பெற்ற தலம் திருக்காளத்தி. சிவபெருமான் காற்றாக எழுந்தருளி உலக உயிர்களை வாழவைக்கும் திருத்தலம் இது. இங்கு லிங்கப் பரம்பொருளிலிருந்து காற்று வீசிக்கொண்டிருக்கும். கர்ப்பக்கிரகத்தில் எரியும் தீபம் சதாசர்வ காலமும் காற்றால் மோதப்பட்டதுபோல் அசைந்து கொண்டே இருப்பதிலிருந்து இதை அறிந்துகொள்ளலாம்.

எங்கும், எல்லாமாக வியாபித்திருக்கும் பரம்பொருள் அம்பரமாக (ஆகாயமாக) எழுந்தருளியிருக்கும் தலம் சிதம்பரம். சிதம்பரம் நடராஜர் சந்நிதியில் ஸ்ரீ நடராஜ மூர்த்தியின் வலப்பக்கத்தில் ஆகாய லிங்கம் மந்திர ரூபமாக, எந்திர சக்கரத்தில் அமைந்துள்ளது. அந்த இடத்தில் தங்கத்தாலான வில்வ மாலைகள் திரையிடப்பட்டு காட்சி தருகின்றன. இங்கு ஈசன் அரூபமாக பக்தர்களுக்குக் காட்சிதருகிறார். இதனை ஸ்ரீரகசியம் அல்லது சிதம்பர ரகசியம் என்பார்கள்.

இத்தலத்தில் அருவமாக ஸ்ரீரகசியமும், உருவமாக ஸ்ரீநடராஜர் - சிவகாமிசுந்தரி அம்மையும், அருவுருவமாக ஸ்ரீசந்திர மௌலீஸ்வரரும் (படிகலிங்கம்) காட்சியருள்கிறார்கள். பஞ்சபூதலிங்கங்கள் எழுந்தருளியுள்ள தலங்களில் இறைவனை பக்தியுடன் வழிபடுகின்றவர்களை இயற்கைச் சீற்றங்களாகிய பூகம்பம், வெள்ளம், நெருப்பு, புயல், இடி, மழை போன்றவற்றால் துன்பம் நேராமல் இறைவன் காத்தருள்கிறார்.

நன்றி பிரணவி (ஓம் ஆன்மிக இதழ்)


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

வியாழன், 9 மார்ச், 2017

வில்வாஷ்டகம்


த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரம் ச த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்...

த்ரிசாகைஃ வில்வபத்ரைச் ச அர்ச்சித்ரைஃ கோமளை ஸுபைஃ
தவபூஜாம் கரிஷ்யாமி ஏக வில்வம் சிவார்ப்பணம்...

கோடி கன்யா மஹாதானம் திலபர்வத கோடயஃ
காஞ்சனம் ஷைலதானேன ஏக வில்வம் சிவார்ப்பணம்...

காசிக்ஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்சனம்
ப்ரயாகே மாதவம் த்ரூஷ்ட்வா ஏக வில்வம் சிவார்ப்பணம்...

இந்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஷ்வராஃ
நிக்தம் ஹௌஷ்யாமி தேவே ஏக வில்வம் சிவார்ப்பணம்...

ராமலிங்க ப்ரதிஷ்டா ச வைவாஹிக க்ருதம் ததா
தடாகானிச ஸந்தானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்...

அகண்ட வில்வபத்ரம் ச ஆயுதம் சிவபூஜனம்
க்ருதம் நாம ஸஹஸ்ரேண ஏக வில்வம் சிவார்ப்பணம்...

உமயா ஸஹதேவேச நந்தி வாஹனமேவ ச
பஸ்மலேபன ஸர்வாங்கம் ஏக வில்வம் சிவார்ப்பணம்...

ஸாளக்ராமேஷு விப்ராணாம் தடாகம் தச கூபயோ:
யக்ஞகோடி ஸஹஸ்ரஸ்ச ஏக வில்வம் சிவார்ப்பணம்...

தந்திகோடி ஸஹஸ்ரேஷு அஸ்வமேத சதக்ரதௌ
கோடிகன்யா மஹாதானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்...

வில்வாணாம் தர்சனம் புண்யம் ஸ்பர்சனம் பாபனாசனம்
அகோர பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்...

ஸஹஸ்ரவேத பாடேஷு ப்ரஹ்மஸ்தாபன முச்யதே
அனேகவ்ரத கோடீனாம் ஏக வில்வம் சிவார்ப்பணம்...

அன்னதான ஸஹஸ்ரேஷு ஸஹஸ்ரோப நயனம் ததா
அனேக ஜன்மபாபானி ஏக வில்வம் சிவார்ப்பணம்...

பில்வாஷ்டகம் இதம் புண்யம் ய: படேத் சிவ ஸன்னிதௌ
சிவலோகம் அவாப்னோதி ஏக வில்வம் சிவார்ப்பணம்...


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

புதன், 8 மார்ச், 2017

நற்குணம் தரும் ஜயா ஏகாதசி

மாசி மாத சுக்ல பட்சத்தில் இந்த ஏகாதசி வரும். தேவேந்திரனின் சாபத்திற்கு ஆளான மால்யவான் எனும் மன்னனும் அவன் மனைவி புஷ்பவந்தி எனும் தேவ கன்னிகையும் பூமியில் பேய் உருக்கொண்டு அலைந்து அரச மரத்தடியில் பசியால் வருந்தி, அன்றைய ஏகாதசி இரவில் கண் விழித்திருந்த காரணத்தால் சாப விமோசனம் பெற்ற தினம். இந்த விரதத்தால் பேய்களுக்கே நற்கதி கிட்டும் எனில், மானிடருக்கு கிடைக்கும் பேரருளைப் பற்றி சொல்லவா வேண்டும்?.


இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்துரைக்கிறார். அதனை நாமும் காண்போம். யுதிஷ்டிரா! இந்த விரதத்தை முறையோடு அனுஷ்டித்தால் அகால மரணத்தால் பூத, பிரேத, பிசாச ரூபம் பெற்ற ஆத்மாக்கள் அனைத்தும் அந்நிலையிலிருந்து விடுபட்டு நன்னிலை எய்துவர். மேலும் இந்த விரதமானது நம்மை பிறப்பு – இறப்பு சுழற்சியிலிருந்து விடுவிக்கும். இதனை மிகவும் சிரத்தையுடனும், பக்தியுடனும், விதிப்பூர்வமாக கடைபிடிக்க வேண்டும்.

இந்த நன்னாளின் மகத்துவத்தைப் பற்றி எடுத்துரைக்கிறேன். கவனமாகக் கேள் !! என்று கூறத் தொடங்கினார். ஒருசமயம் தேவலோகத்தில் இந்திரனின் நந்தவனத்தில் அனைத்து தேவர்களும் உல்லாசமாக இருந்தனர். புஷ்பதண்டன் என்னும் கந்தர்வன் தலைமையில் இனிமையான கானம் ஒலித்துக் கொண்டிருந்தது. அதற்கேற்ப கந்தர்வ கன்னிகளும் அங்கே அழகாக நடனமாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கே அமராவதியின் ஆஸ்தான பாடகனான கந்தர்வன் சித்திரசேனன் அவனது மனைவி மாலினி மற்றும் அவர்களுடைய அழகான மகன் மால்யவான் உடன் அங்கே வந்தார். அப்போது அங்கே நாட்டியமாடிக் கொண்டிருந்த புஷ்பவதி என்னும் கந்தர்வ கன்னி மால்யவானின் அழகைக் கண்டு மயங்கினாள்.

அவளது நடன அசைவுகளால் அவனை கவர முயற்சி செய்தாள். அதைக் கண்ட மால்யவானும் அவளது அழகில் மயங்கி அவளை ரசித்தான். அதனால் அவனும் அங்கே பாடிக் கொண்டே அவளுடன் நடனமாடத் தொடங்கினான். ஆயினும் பிறரை மகிழ்விக்கும் பொருட்டு ஆடிக் கொண்டிருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்ட மயக்கத்தினால் காம வயப்பட்டு சுருதியையும், தாளத்தையும் மறந்தனர். இதனால் சங்கீதத்தின் லயம் கெட, கானத்தின் ஆனந்தம் கெட்டது. இது தேவேந்திரனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

அதனால் அவர் அவர்கள் இருவரையும் சபித்தார். நீங்கள் இருவரும் சங்கீதத்தின் புனிதத்தை மதிக்காமல் அவமானம் செய்தது அன்னை சரஸ்வதியை அவமதித்து போலாகும். மேலும் கற்றறிந்தோர் நிறைந்த சபைதனில் அடக்கம், பணிவு, நாணம் இன்றி செயல்பட்டதால் நீங்கள் இருவரும் தேவலோகம் விடுத்து பூலோகத்தில் சபிக்கப்பட்ட பிசாச ரூபம் கொண்டு வாழ்வை கழிக்கக் கடவது என்று சாபம் இட்டார்.

தேவேந்திரனின் கடுமையான சாபத்தினால் அவர்கள் இருவரும் அனைத்தையும் மறந்து பிசாச வடிவம் கொண்டு பூலோகத்தில் ஹிமாலய பர்வதத்தின் அடியில் வீழ்ந்து அங்கேயே வேதனை அடைய தொடங்கினர். என்ன தான் குகையில் வசித்தாலும் அங்கே இருந்த கடும் பனியினால் உடல் நடுக்கம் கொண்டு பற்கள் கிடுகிடுத்தன. மற்றும் ரோமங்கள் சிலிர்த்துக்கொண்டு, உடல் விறைத்துக் கொண்டு மிகவும் துன்பத்தை அனுபவித்து வந்தனர். இப்படியொரு வாழ்க்கை வாழ்வதை விட நரகவேதனையே மேலானது என்றெண்ணி ஒருவருக்கொருவர் அழுது கொண்டிருந்தனர்.

தெய்வாதீனமாக அவர்கள் அங்கே வந்த சில காலத்திலேயே மகிமை வாய்ந்த ஜயா ஏகாதசி நன்னாள் தோன்றியது. அன்று இருவரும் குளிரினால் மிகுந்த வேதனை அடைந்து அன்று உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் பட்டினியாகக் கிடந்தனர். அவர்களை அறியாமலேயே அவர்கள் ஜயா ஏகாதசி விரதத்தினை அனுஷ்டித்தனர்.

குளிர் தாங்க முடியாமலும், பசி மயக்கத்தினாலும் அவர்களிருவரும் ஒரு அரசமரத்தடியில் அமர்ந்தனர். அன்றைய இரவை மிகவும் கஷ்டத்துடன் கழித்தனர். இவ்வாறாக தேவேந்திரனின் கடுமையான சாபத்தினால் துன்பப்பட்ட போதும், அறியாமல் அவர்கள் அனுஷ்டித்த ஜயா ஏகாதசி விரதத்தால் அவர்கள் இறைவன் ஸ்ரீ ஹரியின் அருளுக்குப் பாத்திரமானார்கள்.

மறுநாள் துவாதசி உதித்த வேளையில், இறைவன் அருளால் இருவரும் பிசாச ரூபம் நீங்கி அழகிய கந்தர்வ உடலைப் பெற்றனர். மேலும் அவர்கள் இருவரும் தேவலோகத்தை நோக்கிப் பயணிக்கையில் தேவகணங்களும், கந்தர்வர்களும் மலர்மாரி பொழிந்து அவர்களை வாழ்த்தினர். இருவரும் விரைவில் தேவலோகத்தை அடைந்து இந்திரனை வணங்கி நின்றனர்.

அதுகண்ட தேவேந்திரன், எனது கடுமையான சாபத்திலிருந்து நீங்கள் இருவரும் அப்படி என்ன புண்ணிய காரியம் செய்து இவ்வளவு விரைவாக முக்தி அடைந்தீர்கள் என்று ஆச்சரியத்துடன் வினவினான். அதற்கு மால்யவான், “ஹே தேவேந்திரா !! எம்பெருமான் இறைவன் ஸ்ரீ ஹரி மகாவிஷ்ணுவின் அருளால் மற்றும் ஜயா ஏகாதசி விரத புண்ணியத்தினாலும் தான் நாங்கள் எங்கள் பிசாச வடிவம் நீங்கி நன்னிலையை அடைந்தோம்” என்றான்.

அதனைக் கேட்ட இந்திரன், “ஹே மால்யவான்!! ஜயா ஏகாதசி விரதமிருந்து நீங்கள் இறைவன் ஸ்ரீ ஹரியை மகிழ்வித்து பாவங்கள் நீங்கி பவித்ரமடைந்தீர்கள். எனவே நீங்கள் இருவரும் இப்போது என்னுடைய வணக்கத்துக்கும், மரியாதைக்கும் உரியவர் ஆகிவிட்டீர்கள். ஏனெனில், எவரொருவர் ஈசனையும், நாராயணனையும் வழிபடுகிறார்களோ அவர்கள் தேவர்களின் வணக்கத்துக்கு உரியவர் ஆகிறார்கள் என்று கூறி, அவர்களை தேவலோகத்தில் உல்லாசமாக இருக்கும்படி கூறுகிறான்.

இவ்வாறு ஜயா ஏகாதசியின் மகத்துவத்தைக் கூறி முடித்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர், “ஓ யுதிஷ்டிரா!! எவரொருவர் ஜயா ஏகாதசி விரதத்தை விதிபூர்வமாகக் கடைபிடிக்கிறாரோ, அவர் பூத, பிரேத, பிசாச உடல் மற்றும் தொல்லைகளிலிருந்து முக்தி பெறுவதோடு மட்டுமின்றி, அவர் அனைத்து பாவங்களில் இருந்து விடுபடுவதோடு, அவர் அனைத்து தானம், தவம், யாகம் ஆகியவற்றை செய்த பலனை அடைகிறார் என்று கூறினார்.

அதோடு விதிபூர்வமாக ஜயா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அனைத்து புனித நதிகளில் நீராடிய பலனையும், 1000 ஆண்டு காலம் சுவர்கத்தில் வசிக்கும் பேற்றினைப் பெறுவார்கள். மேலும் எவரொருவர், இந்நாளில் இந்த விரதத்தின் மகிமையை விவரிக்கும் இந்தக் கதையினை கேட்கிறாரோ அல்லது படிக்கிறாரோ அல்லது சொல்கிறாரோ அவர் சாம வேதம் உச்சரித்து செய்யப்படும் அக்னிஸ்தோம யாகம் செய்த பலனை அடைவார் என ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் கூறி முடித்தார்.

நன்றி : Chamarthi Srinivas Sharma (Chennai) ஐயா அவர்களுக்கு


|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||

|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||