திங்கள், 7 ஆகஸ்ட், 2017

கோமதியம்மனை ஆராதிக்கும் ஆடித் தபசு

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ளது சங்கர நாராயணர் திருக்கோவில். சைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்பதற்காக, அரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக இறைவன், "சங்கர நாராயணராக" தோன்றிய அற்புதமான திருத்தலம் இதுவாகும்.

இந்த ஆலயத்தின் தல விருட்சமாக புன்னை மரம் உள்ளது. ஒன்பது நிலை கொண்ட ராஜகோபுரம் மூலவர் சங்கரலிங்கத்தையும், அம்பாள் கோமதி அம்மனையும் காண நம்மை அழைக்கிறது. இத்தல கால பைரவரை அஷ்டமி நாட்களில் சந்தனக் காப்பிட்டு வழிபாடு செய்தால், முன்ஜென்ம வினைகளும், நாம் செய்த தவறுகளால் உண்டான தோஷங்களும், பாவங்களும் விலகும்.


இந்த ஆலயத்தில் சுவாமி, அம்பாள் சன்னிதிகளுக்கு இடையே சங்கரநாராயணர் சன்னிதி அமைந்துள்ளது. மூலவர் சன்னிதி பிரகாரத்தில் புற்று வடிவில் அமைந்த வன்மீகநாதர் சன்னிதி இருக்கிறது. நாகதோஷம் அகல இப்புற்றில் மஞ்சள் பூசி, இங்குள்ள பஞ்ச நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்து வேண்டிக்கொள்ளலாம். இவ்வாறு வழிபட நாக தோஷங்கள் அகலும். 

பெரும்பாலும் சிவாலயங்களில் லிங்கோத்பவர், மகாவிஷ்ணு, அர்த்த நாரீஸ்வரர் ஆகிய மூவரில் ஒருவர் தான் கருவறை பின்புறம் இருப்பார். ஆனால் இங்குள்ள ஈசன் கருவறை சுற்றுச் சுவரின் பின்புறத்தில் யோக நரசிம்மர் அருள்பாலிக்கிறார். இந்த யோக நரசிம்மருக்கு செவ்வாய்க்கிழமை பிரதோஷ நேரத்தில் நெய்தீபம் ஏற்றி, பானகம் படைத்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும். ஆலயத்தில் சிவபெருமானின் எதிரில் அழகிய வேலைப்பாட்டுடன் அமைந்த, ருத்ராட்சப் பந்தலின் கீழ் நந்தி பகவான் அமர்ந்துள்ளார்.

சங்கரநாராயணர் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியன்று உத்திராட நட்சத்திரத்தில் ஆடித்தபசு விழா வெகு விமரிசையாக நடைபெறும். "தபசு" என்றால் "தவம்" என்று பெயர்.

தற்போது அமைந்திருக்கும் கோமதி அம்பாள் சன்னிதி முன்பு, நடு மண்டபத்தில் நாகச்சுனை ஒன்று இருக்கிறது. இந்த நாகச்சுனை இருக்கும் இடத்தில் அந்த காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு நாகர்கள் வசித்து வந்தனர். இதில் சங்கன் என்னும் நாகர் சங்கரனாகிய சிவபெருமான் மீதும், பதுமன் என்னும் நாகர் பாற்கடலில் பள்ளி கொண்டருளும் பரந்தாமன் மகாவிஷ்ணு மீதும் அதீத பக்தி கொண்டிருந்தார்கள்.

இருவரும் சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்று தங்களுக்குள் வாதம் செய்து கொண்டனர். அது பற்றி அறிந்து கொள்வதற்காக பார்வதிதேவியிடம் சென்று முறையிட்டனர். அம்பாள் சிவபெருமானை வேண்ட, ஈசன் அம்பாளை பொதிகை மலை பகுதியில் புன்னை வனத்தில் தவம் செய்யும்படி கூறினார். அதன்படி அம்பாள் தற்போது சங்கரநாராயணர் கோவில் அமைந்திருக்கும் இடத்திற்கு வந்து தவம் செய்தார். அப்போது ஈசன் சங்கரநாராயணராக வந்து அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். அன்றைய தினம் ஆடித்தபசு ஆகும்.

அரியும் அரனும் ஒருங்கே இணைந்து ஓருருவில் காட்சி கொடுத்தனர். இந்தக் காட்சியை அம்பாளின் அருளால் சங்கனும், பதுமனும் தரிசித்து நற்பேறு பெற்றனர். சங்கர நாராயணரின் சிவனுக்குரிய வலது பாகத்தில் தலையில் கங்கை, பிறை நிலா, அக்னி, ஜடாமுடியுடன் கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் போன்றவற்றுடன், திருவாசியில் நாகவடிவில் சங்கன் குடைபிடிக்கிறான். அதே போல் மகாவிஷ்ணுவுக்குரிய இடது பாகத்தில் நவமணி கிரீடம், கையில் சங்கு, மார்பில் துளசி மற்றும் லட்சுமி மாலைகள் இவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான்.

இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சங்கரநாராயணர் சன்னிதியில் காலை நடைபெறும் பூஜையில் துளசி தீர்த்தம் தருகிறார்கள். பகல், மாலை மற்றும் இரவு நேரப் பூஜைகளில் திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சங்கர நாராயணருக்கு வில்வமும், துளசியும் சாத்தப்படுகிறது.

இங்கு சங்கர நாராயணருக்கு அபிஷேகம் கிடையாது. ஸ்படிக லிங்கமாக வெள்ளிப் பேழையில் உள்ள சந்திர மவுலீஸ்வரருக்குத் தான் அபிஷேகம் நடைபெறுகிறது. இத்தல உற்சவருக்கே சிவராத்திரி மற்றும் ஏகாதசி நாட்களில் அபிஷேகங்கள் நடைபெறும். ஆடித்தபசு நாளில், இந்த உற்சவரே அம்பாளுக்கு சங்கர நாராயணராக எழுந்தருளி காட்சி தருகிறார். ஆலய வடக்குப் பிரகாரத்தில் சொர்க்கவாசல் உள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறக்கப்படும்.

கோமதி அம்பாள் சன்னிதியின் முன் மண்டபத்தில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்பாளுக்கு திங்கட்கிழமைகளில் மலர் பாவாடை, வெள்ளிக்கிழமைகளில் தங்கப் பாவாடை அணிவித்து அலங்காரம் செய்விக்கிறார்கள். அம்பாளுக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத் தடை, புத்திரதோஷம், நாகதோஷம் முதலியவை அகலும் என்று கூறப்படுகிறது. அம்பாள் சன்னிதி முன்புள்ள ஸ்ரீசக்கரம், "ஆக்ஞா சக்கரம்" என்று அழைக்கப்படுகிறது. அதில் உட்கார்ந்து அம்மனை வேண்டி தியானித்தால் சகலமும் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம். கூடவே நிலையான மன அமைதியும் பெறலாம்.

ஆடித்தபசு விழா இத்தலத்தில் 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். ஆடித்தபசு அன்று காலையில் தங்கச் சப்பரத்தில் கோமதி அம்மன் எழுந்தருளி தபசு மண்டபம் வந்தருள்வாள். மாலை 4 மணிக்கு ஈசன் சங்கர நாராயணராக வெள்ளி ரிஷப வாகனத்தில், தெற்கு ரத வீதியில் உள்ள காட்சி மண்டப பந்தலுக்கு வருகை தருவார். தொடர்ந்து அம்பாளும் காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்வாள். 

அங்கு அம்பாள் தனது வலது காலை உயர்த்தி, இடது காலால் நின்றவாறு தலையில் குடம் வைத்து அதை இரு கைகளால் பிடித்தபடி தபசுக் காட்சி அருள்வாள். மாலை 6 மணிக்கு ஈசன் சங்கர நாராயணராக அம்பாளுக்கு காட்சி தருவார். அப்போது பக்தர்கள், தங்கள் வயலில் விளைந்த பொருட்களான நெல், பருத்தி, கம்பு, சோளம், பூ, மிளகாய் போன்றவற்றை "சூறை  விடுதல்" என்ற பெயரில் அம்பாள் மீது வீசியெறிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

பின்பு அம்மன் மீண்டும் தவக்கோலம் பூணுகிறாள். எதற்காக மீண்டும் தவம்?. அம்பாளின் அண்ணன் மகாவிஷ்ணு, சிவபெருமானின் ஒரு பாதியில் வீற்றிருந்து சங்கர நாராயணராக உள்ளார். ஈசனின் ஒரு பாதியில் அண்ணன் இருப்பதால் ஈசனை எவ்வாறு மணப்பது?. எனவேதான் அம்மன் மீண்டும் ஈசனை வேண்டி சங்கரலிங்கமாக காட்சி அருள வேண்டுகிறாள். 

இரவு 11.30 மணிக்கு சுவாமி கோவிலில் இருந்து வெள்ளி யானை வாகனத்தில் புறப்பட்டு காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்கிறார். சரியாக இரவு 12 மணிக்கு ஈசன், கோமதி அம்மனுக்கு சங்கரலிங்கமாகக் காட்சி கொடுக்கிறார். பின் அம்பாள் ஈசனுக்கு திருமண மாலை மாற்றி மணந்து கொள்கிறார். பின்னர், சுவாமி – அம்பாள் ஊஞ்சல் சேவை நடைபெறும். திருநெல்வேலியில் இருந்து வடமேற்கே 48 கிலோமீட்டர் தூரத்தில் சங்கரன்கோவில் அமைந்துள்ளது.

தொகுப்பு : ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக