திங்கள், 17 ஜூலை, 2017

குற்றம் பொறுத்த கொற்றவன்

அடியார்களின் பிழைகள், குற்றங்களைப் பொறுத்து, அவர்களின் பாவங்களைப் போக்கி கருணை காட்டும் ஈசன் குடிகொண்டுள்ள எண்ணற்ற தலங்களுள் ஒன்றுதான் சு.ஆடுதுறை கிராமத்திலுள்ள அபராத ரட்சகர் என்னும் குற்றம் பொறுத்த சிவன் கோவில்.


ரிஷி பட்டம் இழந்த முனிவர்கள்: சிவபெருமானின் அனுமதியின்றி தக்கன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்ட சப்த ரிஷிகளுக்கும் சாபம் ஏற்பட்டு ரிஷி பட்டத்தை இழந்தனர். சாபம் நீங்கி மீண்டும் ரிஷி பட்டத்தைப் பெற முனைந்த அகத்தியர், வசிஷ்டர், பரத்வாஜர், பராசரர், கௌதமர், காசியபர், கௌசிகர் ஆகியோர், ‘"நீவா" என்னும் வெள்ளாற்றங்கரையில் ஏழு இடங்களில் லிங்கப் பிரதிஷ்டை செய்து வணங்கினர். இவற்றுள் நான்காவது தலம் தான் சு.ஆடுதுறை கோவில்.
.
இத்திருத்தலத்தில் ஒருமுறை சுவேத கேது என்ற முனிவர் சிவனைக் குறித்து தவத்தில் ஈடுபடத்தொடங்கினார். ஆனால், முனிவரின் மனம் தவத்தில் ஒன்றாமல் குரங்குபோல் அலைபாய்ந்தது. இதுபற்றி தம் தந்தை உத்தாலக முனிவரிடம் கேட்டார். அதற்கு அவர், "மகனே! நீ தீர்த்த யாத்திரை மேற்கொண்டபோது தாகத்தில் தவித்த உன்னை திலோத்தமை தாகம் தணித்தது மட்டுமின்றி, மாயா வனத்துக்குள் அழைத்துச்சென்று மோகவலையில் வீழ்த்திவிட்டாள். பிரதோஷ காலமான அப்போது பிருகு, மரீசி, அத்திரி, புலஸ்தியர், புலகர், கிரது, வசிஷ்டர் ஆகிய முனிவர்கள் அங்கு சிவபூஜையில் ஈடுபட்டிருந்தனர். இதையறியாத நீயும் பேரின்பத்தை நினையாமல், சிற்றின்பத்தில் ஈடுபட்டிருந்தாய். ஆகவே, இப்பிறவியில் மனம் அலைபாய்கிறது. உன் பாவச் செயல்களால் மரத்துக்கு மரம் தாவும் குரங்குபோல அலைபாயும் உன் மனம் ஒருநிலைப்பட ‘"நீவா" நதியில் நீராடி நீலகண்டனிடம் மன்னிப்புக்கேள்!'' என்றார்.

குரங்காய்த் திரிந்த திலோத்தமை: தன்நிலை கண்டு வருந்திய சுவேத முனிவர், தனது இந்த நிலைக்குக் காரணமான திலோத்தமையை ‘"குரங்காய் அலைந்து திரிவாய்" என்று சபித்தார். பின்னர் ‘"நீவா" நதிக்குச் சென்று நீராடினார். அங்கு லிலிங்கப் பிரதிஷ்டை செய்து மனமுருகி வழிபட்டார். அப்போது, “உம்மை மன்னித்தோம்; மனம் வருந்த வேண்டாம்!'' என்று ஒலித்த ஈசனின் அசரீரி கேட்டு மனம் தெளிவடைந்தார். அதேசமயம் முனிவர் தனக்கிட்ட சாபம் குறித்து நாரதர் மூலம் அறிந்த திலோத்தமை தேவகுருவிடம் சென்று சாபம் நீங்க வழிகேட்டாள். தேவகுருவோ, “உன்னை சபித்த முனிவரிடமே சென்று விமோசனம் கேள்'' என்றார். 

சுவேத முனிவரிடம் சென்று மன்னிப்புக்கேட்ட திலோத்தமை சாபம் நீங்கச் செய்யுமாறு வேண்டினாள். அதற்கு முனிவரோ, “உனக்கிட்ட சாபம் பொய்க்காது. நீ தேவ அம்சத்துடன் பூலோகத்தில் நீலன் என்ற பெயரில் வானரமாய் பிறப்பாய். அப்போது மதுவனத்தில் அலைந்து திரியும்போது, குற்றம் பொறுத்த ஈசனைக் கண்டு வழிபடு. சாப விமோச்சனம் பெறுவாய்!'' என்று தெரிவித்தார்.

முனிவரின் சாபம் பலித்தது. பூமியில் குரங்காய்ப் பிறந்தாள் திலோத்தமை. "நீவா" நதியில் நீராடி ஈசனை வழிபட்டு சாபத்தை நீக்கும்படி மனமுருகினாள். அப்போது ஈசன், “இன்னும் சிறிதுகாலம் குரங்காய் வாழ்ந்து வா. இப்போது பூமியில், தேவர்கள் வானர வடிவில் கிஷ்கிந்தையில் ராம கைங்கர்யத்துக்காகத் தோன்றியுள்ளனர். அவர்களுடன் சென்று ராமபிரானுக்கு சேவை செய்! சீதாப்பிராட்டியை மீட்பதற்கு இலங்கைக்குச் செல்ல வானரப்படைகள் சேதுபாலம் கட்டுவதற்கு உதவி செய். சாபம் நீங்கி சுய உருவம் பெறுவாய்!'' என்று அசரீரியாகச் சொன்னார். அதன்படி சேதுபாலம் அமைக்கும் பணியில் வானரப் படைகளுடன் ஈடுபட்டாள் திலோத்தமை.

இந்தப் புராணச் சம்பவத்தின் அடிப்படையில் அமைந்ததுதான் பெரம்பலுர் அருகேயுள்ள சு.ஆடுதுறை அபராத ரட்சகர் கோவில். சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோவில் கல் திருப்பணி ரீதியாக சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. கி.பி. 1070 முதல் கி.பி. 1118 வரை விக்கிரம சோழன் ஆட்சிக்காலத்தில் தொடங்கி, பராக்கிரம பாண்டியன், பரகேசரி வர்மன், விஜய நகர மன்னன் வீரபுக்ராயர் உள்பட பல மன்னர்கள் இக்கோவிலுக்கு பல கிராமங்களை தானமாக வழங்கியுள்ளனர். நிர்வாக வசதிக்காக சோழர்கள் ஆட்சிக் காலத்தில் நாட்டை வளநாடு, கூற்றம், பற்று, ஊர் எனப் பிரித்திருந்தனர். இவற்றுள் கூற்றம் என்ற நாட்டுப்பிரிவில் ஆடுதுறை அமைந்துள்ளது.

மதுவனம்: இலங்கை சென்ற அனுமன் சீதா தேவியைக் கண்டு திரும்பியதும், அந்த நற்செய்தியைக் கேட்ட வானரங்கள் அந்த சந்தோஷத்தைக் கொண்டாட இங்கிருந்த மதுவனத்தில நுழைந்து ஆடி மகிழ்ந்து, குடித்துக் கும்மாளமிட்டனராம். இதனால் தான் "ஆடுதுறை" எனப்பெயர் பெற்றதாகவும் கூறுவர். ராம காரியம் முடிந்ததும் திலோத்தமையான நீலன், அனுமன், சுக்ரீவன், அங்கதன், சுவிசேஷன் ஆகிய வானரங்கள் இங்கு வந்து நீராடி இறைவனை வழிபட்டு வினை நீங்கப் பெற்றனர். வானரங்களின் வினையைத் தீர்த்ததால் இவ்வூர் "வானர தீர்த்த புரம்" எனவும் அழைக்கப்படுகிறது.

ஏழுநிலை கோபுரம் கொண்டு மிகப்பெரியதாக விளங்கும் இக்கோவிலில் தினமும் நான்கு காலப் பூஜை மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இவ்வாலய இறைவன் அபராத ரட்சகர், குற்றம் பொறுத்தவர், குற்றம் பொறுத்தருளிய நாட்டனர், குரங்காடுதுறை மகாதேவர், அபராத ரட்சகாமேஷ்வரர் ஆகிய பெயர்களாலும்; இறைவி ஏலவார் குழலிலியம்மை, எழில்வார் குழலிலியம்மை, சுகந்த கூந்தலாம்பிகை ஆகிய பெயர்களாலும் அழைக்கப் பெறுகிறாள். கோபுரங்களிலும் மண்டபத் தூண்களிலும் வானரச் சிற்பங்கள் அதிகளவில் உள்ளன. மேலும் இவ்வூரில் அதிக எண்ணிக்கையில் குரங்குகள் வாழ்ந்து வருகின்றன.

பிரார்த்தனை பலன்: திருமணத்தடை நீங்க, மகப்பேறு கிட்ட, நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வர பக்தர்கள் இங்கு வழிபட்டுவருகின்றனர். "மறந்துபோன திதியை மகத்தில் கொடு" என்பார்கள். அதற்கேற்ப இங்குள்ள "நீவா" நதிக்கரையில் மாசி மகத்தன்று பித்ருக்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது சிறந்த பலனைத் தரும் என்பதும் ஐதீகம்.

அமைவிடம்: சென்னை  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொழுதூர் அருகேயுள்ள டோல்கேட்டிலிருந்து கிழக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவிலும், திருச்சி  விழுப்புரம் ரயில் பாதையில் பெண்ணாடம் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே 16 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது. வலிலி பூஜை செய்து வழிபட்ட சிவாலயம் அமைந்துள்ள வாலிலிகண்டபுரமும் இவ்வூருக்கு மேற்கே உள்ளது.

நன்றி : எஸ்.பி.சேகர்(ஓம்)


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக