வெள்ளி, 27 மே, 2016

62 முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்

"முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ திருமூலட்டானேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சிவகாமியம்மை

அவதாரத் தலம் : தில்லை

முக்தி தலம் : தில்லை

குருபூஜை நாள் : பங்குனி கடைசி நாள்

"எப்போதும் இனியபிரான் இன்னருளால் அதிகரித்து
மெய்ப்போத நெறிவந்த விதிமுறைமை வழுவாமே
அப்போதைகு அப்போதும் ஆர்வமிகும் அன்பினராய்
முப்போதும் அர்ச்சிப்பார் முதற்சைவராம் முனிவர்."

பாடல் விளக்கம்:
எஞ்ஞான்றும் உயிர்களுக்கும் இனியவரான சிவபெருமானின் இனிய திருவருளால் பெருகி, உண்மையான சிவாகம ஞான நெறியில் நின்று, தவறாமல் அவ்வக் காலத்தோறும் ஆசை மிகும் அன்புடையவராகி, முக்காலத்தும் இறைவழிபாடாற்றி வருபவர்கள் ஆதிசைவரான முனிவர்கள் ஆவர்.

முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்



சைவ சமயத்தின் அடிப்படை நூல்கள் எம்பெருமானால் அருளிச் செய்யப் பெற்ற இருபத்தி எட்டு ஆகமங்கள் ஆகும். கோயில்களில் இவ்வாகம வழியே நித்திய நைமித்திக வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்! இத்தகைய, ஆகம முறைப்படி வழிபாடு புரிதற்குரிய பெரும் பேற்றை பெற்றவர்கள் ஆதி சைவர்கள். முப்போதும் முக்கண்ணர் திருவடியைப் பூசிக்கும் இனியவர். 

திருமஞ்சனம் செய்து பூ மலரைக் கொட்டிக் குவித்துப் போற்றும் ஆதி சைவர்களே இறைவனின் திருமேனியினைத் தீண்டும் உரிமையையும் பெற்று உய்பவர்கள் ஆவார்கள். வழி வழியாக வேதாகமங்களை ஓதுபவர்கள். இச்சைவ அந்தண குலத்தார் திருக்கோயில்களில் சிவலிங்க பூசை புரியும் பெருமையைப் புகழ்ந்துரைப்பது என்பது அரியதாகும். இவர்களுடைய பெருமையும் புகழும் போற்றுதற்குரிய அருட்செயலாகும்.

"நாரணற்கும் நான்முகற்கும் அறிய ஒண்ண
நாதனை எம்பெருமானை ஞானமான
ஆரணத்தின் உள்பொருள்கள் அனைத்தும் ஆகும்
அண்ணலை எண்ணிய காலம் மூன்றும் அன்பின்
காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர் தங்கள
கமலமலர்க் கழல் வணங்கிக் கசிந்து சிந்தைப்
பூரணத்தால் முழுநீறு பூசி வாழும
புனிதர்செயல் அறிந்தவா புகலலுற்றேன்."

பாடல் விளக்கம்:
திருமாலும் நான்முகனும் அறிய இயலாத இறைவனை, எம்பெருமானை, ஞானவயத்ததாய ஆகமங்களின் உட்கிடைப் பொருளாக விளங்கும் பெருமையுடைய பிரானை, மூன்று காலங்களிலும் அன்பு காரணமாக வழிபட்டுவரும், சிவமறையோரின் தாமரை போன்ற திருவடிகளை வணங்கி, உள்ளம் கசிந்த நிறைவுடைமையால், முழுதும் திருநீற்றைப் பூசி வாழும் தூயவரின் செயலை அறிந்வாறு சொல்லப் புகுவாம். 

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக