வியாழன், 26 மே, 2016

55 செருத்துணை நாயனார் புராணம்

"மன்னவனாஞ் செருத்துணை தன் அடியார்க்கும் அடியேன்." 

"கழற்சிங்கரின் மனைவி பூமண்டலத்திலிருந்த மலரை முகர்ந்து பார்த்ததால் அவ்வம்மையாரின் மூக்கையறுத்த வேளாளர்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மூலநாதர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி 

அவதாரத் தலம் : கீழைத் தஞ்சாவூர்

முக்தி தலம் : கீழைத் தஞ்சாவூர்

குருபூஜை நாள் : ஆவணி - பூசம்

"கடிது முட்டி மற்றவள் தன் கருமென் கூந்தல் பிடித்து ஈர்த்துப்
படியில் வீழ்த்தி மணிமூக்கைப் பற்றிப் பரமர் செய்ய சடை
முடியில் ஏறும் திருப்பூம் மண்டபத்து மலர் மோந்திடும் மூக்கைத்
தடிவன் என்று கருவியினால் அரிந்தார் தலைமைத் தனித்தொண்டர்."

பாடல் விளக்கம்:
உலகில் ஆட்சி செய்யும் பல்லவ மன்னரான கழற்சிங்கர் என்னும் கோச்சிங்கரின் பட்டத்து அரசியான பெருந்தேவி, அங்குள்ள மலர் மண்டபத்தின் அருகில் கிடந்த ஒரு மலரை எடுத்து மோந்து விட்டதற்காக, உள்ளம் பொறுக்க மாட்டாது, சிவனெறியில் நின்று வழுவாது தொண்டு செய்து வரும் தொண்டராதலால், விளங்கும் ஒளிபொருந்திய கூரிய வாயையுடைய வாளினை எடுத்து விரைவாக வந்து சேர்ந்து,

கடிது பற்றி விரைவிற் சேர்ந்து மற்று அவளது கரிய மெல்லிய கூந்தலைப் பிடித்து இழுத்து நிலத்தில் வீழ்த்தி அழகிய மூக்கினைப் பிடித்து; பரமர் என்று - இறைவரது சிவந்த சடை முடியின் மேல் அணியும் திருப்பூமண்ட பத்துள் மலரினை எடுத்து மோந்த அபராதம் செய்த மூக்கைத் தண்டிப்பேன் என்று; கருவியினால்....தனித்தொண்டர் - கருவியினாலே தலைமை பூண்ட ஒப்பற்ற தொண்டர் அரிந்தனர்.

செருத்துணை நாயனார் புராணம்



அறம் வழுவாத நெறியினைக் கொண்ட பழங்குடி பெருமக்கள் வாழும் சீரும், செல்வமும் ஒருங்கே அமையப் பெற்றது தஞ்சாவூர். இத்தலத்தில் வீரமிகும் வேளாண் மரபில் செருத்துணை நாயனார் என்னும் சிவத்தொண்டர் வாழ்ந்து வந்தார். இவரது தூய வெண்ணீற்று உள்ளத்தில் எழுகின்ற உணர்வுகளை எல்லாம் எம்பெருமான் பாதகமலங்களின் மீது செலுத்தினார். 

ஆராக்காதலுடன் சிவனடியார்களுக்கு அரும்பணியாற்றி வந்தார். அடியார்களைக் காப்பதில் பணிவோடு மிக்கத் துணிவையும் பெற்றிருந்தார். அடியார்களுக்கு யாராகிலும் அறிந்தோ அறியாமலோ அபச்சாரம் ஏதாகிலும் செய்தால் உடனே அவர்களைக் கண்டிப்பார்; இல்லாவிடில் தண்டிப்பார். ஆலயத்துள் நடைபெறும் இறைவழிபாடு எவ்வித இடையூறுமின்றி நடைபெற அரும் பாடுபட்டார். அடியார்களின் நலனுக்காகத் தம் உடல்பொருள் ஆவி மூன்றையும் தியாகம் செய்யவும் துணிந்த நெஞ்சுரம் படைத்தவர். இச்சிவனடியார் திருவாரூர்த்த தியாகேசப் பெருமானுக்கு இடையறாது எத்தனையோ வழிகளில் அருந்தொண்டாற்றி வந்தார்.

ஒருமுறை ஆலயத்து மண்டபத்தில் அமர்ந்து செருத்துணை நாயனார், பகவானுக்காக பூ தொடுத்துக் கொண்டிருந்த தருணத்தில் எதிர்பாராமல் ஒரு சம்பவம் நடந்தது. ஆலய வழிபாட்டிற்காக வந்திருந்த பல்லவப் பேரரசன் காடவர்கோன் கழற்சிங்கனுடைய பட்டத்து ராணி மண்டபத்தருகே கிடந்த பூவை எடுத்து முகர்ந்து பார்த்தாள். அம்மண்டபத்தருகே அமர்ந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்த செருத்துணை நாயனார் அரசியாரின் செயலைக் கவனித்துச் சினங்கொண்டார். 

அரசியாயிற்றே என்று கூடப் பார்க்காமல் அரனாரின் அர்ச்சனைக்குரிய மலர்களை முகர்ந்து பார்த்த குற்றத்திற்காக பட்டத்துப் பெருந்தேவியாரின் கார்குழலைப் பற்றி இழுத்துக் கீழே தள்ளினார். வாளால் மூக்கை சீவிவிட்டார். அங்கு வந்த அரசரிடம் அஞ்சாமல் நடந்தவற்றைப் பற்றி உரைத்து தமது செயலின் திறத்தினை விளக்கினார். ஆண்டவன் மீது அடியார் காட்டும் பக்தியைக் கண்டு அரசன் தலைவணங்கினான். ஆண்டவர் அடியார்களின் பக்திக்குத் தலைவணங்கி, அரசர்க்கும், அரசிக்கும், அடியார்க்கும் அருள் செய்தார். இவ்வாறு வால்மீகி நாதரின் தூய திருவடிகளுக்கு இடையறாது திருத்தொண்டுகள் பல புரிந்து வந்த செருத்துணை நாயனார் எம்பெருமானின் திருவடி நீழலில் ஒன்றினார்.

"செங்கண் விடையார் திருமுன்றில் விழுந்த திருப்பள்ளித் தாமம்
அங்கண் எடுத்து மோந்ததற்கு அரசன் உரிமைப் பெருந்தேவி
துங்க மணி மூக்கரிந்த செருத்துணையார் தூய கழல் இறைஞ்சி
எங்கும் நிகழ்ந்த புகழ்த்துணையார் உரிமை அடிமை எடுத்து உரைப்பாம்."

பாடல் விளக்கம்:
சிவந்த கண்களையுடைய ஆனேற்றூர்தியையுடைய இறைவரின் திருமுற்றத்தில் விழுந்த பள்ளித் தாமத்துக்குரிய மலரை எடுத்து மோந்ததற்காக, மன்னரின் பட்டத்துக்குரிய பெருந்தேவியாரின் பெருமையுடைய அழகிய மூக்கை அரிந்த செருத்துனையாரின் தூய திருவடிகளை வணங்கி, யாண்டும் விளங்கும் புகழையுடைய புகழ்த்துணையாரின் உரிமையான அடிமைத் திறத்தின் இயல்பை இனி இயம்புவாம்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக