வியாழன், 26 மே, 2016

49 காரி நாயனார் புராணம்

"காரிக்கு அடியேன்."

“காரிக் கோவை என்னும் நூலை இயற்றி அதன் ஊதியத்தைக் கொண்டு தமிழ்ப் பணி புரிந்தவர்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அபிராமியம்மை

அவதாரத் தலம் : திருக்கடவூர்

முக்தி தலம் : திருக்கடவூர்

குருபூஜை நாள் : மாசி - பூராடம்

"மறையாளர் திருக்கடவூர் வந்து உதித்து வண் தமிழின்
துறையான பயன் தெரிந்து சொல் விளங்கிப் பொருள் மறையக்
குறையாத தமிழ்க் கோவை தம் பெயரால் குலவும் வகை
முறையாலே தொகுத்து அமைத்து மூவேந்தர் பால் பயில்வார்."

பாடல் விளக்கம்:
மறையவர் மிக்கு வாழ்கின்ற திருக்கடவூரில் வந்து தோன்றி, வளம் பலவும் நிறைந்த தமிழின் இனிய துறைகளின் பயனைத் தெரிந்து, சொல் விளங்க அதன் உட்கிடையான பொருளானது மறைந்து நிற்குமாறு, குறைவற்ற தமிழ்க் கோவையைத் தம் பெயரால் விளங்குமாறு முறைப்படத் தொகுத்து இயற்றித் தமிழ் கூறும் நல்லுலகத்தவரான மூவேந்தரிடத்தும் பழகிய நட்பினராய்,

காரி நாயனார் புராணம்



திருக்கடவூர் என்னும் மறையோர்கள் வாழ்கின்ற வளமிகுந்த இப்பகுதியிலே காரி நாயனார் என்னும் செந்நாப்புலவர் அவதரித்தார். புலமைமிக்க இச்சிவனடியார் தமிழை நன்கு ஆராய்ந்து அறிந்து கவிபாடும் திறத்தினைப் பெற்றிருந்தார். இவர் சிந்தையிலே சங்கரர் இருக்க, நாவிலே சரஸ்வதி இருந்தாள். திருவெண்ணீற்றின் பெருமையை உணர்ந்து திருசடை அண்ணலையும், அவர் தம் அடியார்களையும் பேணி வந்தார். 

ஆலயங்களுக்கு ஆண்டு தோறும் திருப்பணிகள் பல செய்தார். ஒருமுறை காரி நாயனார், சொல் விளங்கப் பெருமான் மறைந்து நிற்கும் வண்ணம் தமது பெயரால் காரிக்கோவை என்னும் தமிழ் நூல் ஒன்றினை ஆக்கினார். மூவேந்தர்களுடைய உயர்ந்த நட்பினைப் பெற்றார். அவர்கட்கு, அந்நூலின் தெள்ளிய உரையை நயம்படக் கூறினார். இவருடைய தமிழ்ப் புலமையை எண்ணி வியப்படைந்த மூவேந்தர்களும் பொன்னும் பொருளும் பரிசாகக் கொடுத்து சிறப்பித்தனர். 

பொற் குவியலோடு, திருக்கடவூர் திரும்பிய நாயனார், சிவன் கோயில்களைப் புதுப்பித்தார். சிவன் கோயில்கள் பல கட்டி கும்பாபிஷேகம் நடத்தினார். சிவனடியார்களுக்கு அன்போடு அமுதளித்து பெரு நிதிகளை அள்ளி அள்ளிக் கொடுத்து அகமகிழ்ந்தார். தமிழறிவால் நூல்கள் பல இயற்றி பெரும் பொருள் பெற்று அப்பொருளை எல்லாம் சிவாலயத்துக்கும், சிவனடியார்களுக்குமே வழங்கி பேரின்பம் பூண்டார். 

இவ்வாறு கங்கை வேணியரின் கழலினைச் சிந்தையிலிருத்திய தொண்டர் திருக்கடவூரில் கோயில் கொண்டுள்ள அமிர்தகடேசுவரரையும், அபிராம வல்லியையும், பாமாலையாம் பூமாலையால் அல்லும் பகலும் சேவித்தார். எம்பெருமான் தொண்டர்க்குப் பேரருள் பாலித்தார். தமது புகழ் உடம்போடு கயிலைமலை சேர்ந்து பேரின்பம் கண்டார் காரி நாயனார்.

"வேரியார் மலர்க்கொன்றை வேணியார் அடிபேணும்
காரியார் கழல் வணங்கி அவர் அளித்த கருணையினால்
வாரியார் மதயானை வழுதியர் தம் மதிமரபில்
சீரியார் நெடுமாறர் திருத்தொண்டு செப்புவாம்."

பாடல் விளக்கம்:
தேன் பொருந்திய மலர்க்கொன்றையை அணிந்த சடையையுடைய இறைவரின் திருவடியைப் பேணும் காரி நாயனாரின் அடிகளை வணங்கிக் கடல் போல் நிறைந்து வழியும் மதம் பொருந்திய யானைப் படையையுடைய பாண்டியர்களுக்குரிய சந்திர மரபில் தோன்றிய "நின்றசீர் நெடுமாற நாயனாரின்" திருத்தொண்டினைக் கூறுவாம்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக