சனி, 28 மே, 2016

72 சுந்தரமூர்த்தி நாயனார் புராணம்

"வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி."

"சடையனார், இசை ஞானியார் ஆகியோரின் மைந்தர், சிவபெருமானின் தோழர், தேவாரம் பாடிச் செந்தமிழ் வளர்த்த ஆதி சைவர்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பக்தஜனேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மனோன்மணி

அவதாரத் தலம் : திருநாவலூர்

முக்தி தலம் : திருஅஞ்சைக்களம்

குருபூஜை நாள் : ஆடி - சுவாதி

"கொத்தார் மலர்க் குழலாளொரு கூறாயடி யவர்பான்
மெய்த்தாயினு மினியானையவ் வியனாவலர் பெருமான்
பித்தாபிறை சூடீயெனப் பெரிதாந்திருப் பதிகம்
இத்தாரணி முதலாமுல கெல்லாமுய வெடுத்தார்."

பாடல் விளக்கம்:
கொத்தாக மலர்ந்த மலர்களை அணிந்த கூந்தலை உடைய உமையம்மையாரை ஒரு மருங்கில் கொண்டவரும், அடியவரிடத்து மெய்யன்புடைய தாயினும் இனியவருமான சிவபெருமானை, இடமகன்ற திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைமை பெற்று விளங்குபவராகிய அந்நம்பியாரூரர், "பித்தா பிறைசூடி" என்னும் முதற்குறிப்புடைய பெருமை பொருந்திய திருப்பதிகத்தை, இந்நிலவுலகம் முதலாக எவ்வுலகத்தில் உள்ளாரும் உயரியபேறான வீட்டின்பத்தைப் பெறும் பொருட்டுப் பாடத் தொடங்கினார்.

சுந்தரமூர்த்தி நாயனார் புராணம்



திருக்கயிலையில் சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டராக விளங்கியவர். ஆலால சுந்தரர். ஒரு சமயம் நந்தவனத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்த பார்வதி தேவியின் சேடிகள் இருவர் மீது இவர் பார்வை சென்றது. இதனைக் கவனித்த இறைவன் பூவுலகில் நீ சென்று இம்மாதர்கள்பால் இன்பம் துய்த்துப் பின் மீள்வாய் என்று ஆணையிட்டார். 

சுந்தரர் மனம் மிக வருந்தி உலக மாயையிலிருந்து என்னை மீட்டு ஆள வேண்டும் என்று விண்ணப்பித்தார். பூவுலகில் திருநாவலூர் என்னும் தலத்தில் சடையனார் என்பவருக்கும் இசைஞானியார் என்பவருக்கும் திருமகனாக அவதாரம் செய்தார். நம்பி ஆரூரர் என்னும் பெயருடன் வளர்ந்து மணப்பருவம் அடைகிறார். புத்தூர் என்னும் ஊரில் வாழ்ந்த சடங்கவி சிவாசாரியாரின் மகளை மணமுடிக்க ஏற்பாடுகள் நடைபெருகின்றன. 

அச்சமயத்தில் இறைவன் முதியவர் வேடத்தில் திருமணத்திற்கு வருகிறார். தன்னிடம் இருந்த ஓலை ஒன்றினைக் காட்டி நம்பி ஆரூரன் எனக்கு அடிமை என்று கூறுகிறார். இந்த வழக்கு திருவெண்ணை நல்லூரிலே வேதியர் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கின் தீர்ப்பு முதியவருக்குச் சாதகமாக அமைந்தது. வழக்கின் போது முதியவரை ஆரூரர் பித்தா என்று அழைத்தார். 

வந்தவர் இறைவன் என்று அறிந்த ஆரூரர் இறைவன் விரும்பியபடி பித்தா என்ற சொல்லை முதற்சொல்லாகக் கொண்டு பதிகம் பாடுகிறார். திருவாரூரில் பரவை நாச்சியாரை மணக்கிறார். பின்பு திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மணக்கிறார். சங்கிலிக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறியதால் கண் பார்வை இழக்கிறார். இடக்கண் பார்வையைக் காஞ்சிபுரத்திலும் வலக்கண் பார்வையைத் திருவாரூரிலும் பெறுகிறார். அவிநாசி என்னும் தலத்தில் முதலை உண்ட பாலகனை பதிகம் பாடி மீட்கிறார். திருஅஞ்சைக்களம் என்னும் தலத்தில் வெள்ளை யானை மீது அமர்ந்து திருக்கயிலை செல்கிறார்.

"ஊழிதொறு ஊழி முற்றும் உயர் பொன் நொடித்தான் மலையைச் 
சூழிசையின் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன 
ஏழிசையின் தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும், 
ஆழி கடலரையா அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே."

பாடல் விளக்கம்:
ஆழ்ந்ததாகிய கடலுக்கு அரசனே! உலகம் அழியுங்காலந்தோறும் உயர்வதும், பொன்வண்ணமாயதும் ஆகிய திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வனை, திருநாவலூரில் தோன்றியவனாகிய யான், இசை நூலிற் சொல்லப்பட்ட, ஏழாகிய இசையினையுடைய, இனிய தமிழால், மிக்க புகழையுடையனவாகவும், கரும்பின் சுவை போலும் சுவையினையுடையனவாகவும் அப்பெருமானோடு ஒன்றுபட்டுப் பாடிய இப்பத்துப் பாடல்களையும், திருவஞ்சைக்களத்தில் வீற்றிருந்தருளும் பெருமானுக்கு, நீ அறிவித்தல் வேண்டும்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக