புதன், 11 மே, 2016

நலம் தரும் திருப்பதிகம் 02 திருஆலவாய்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சொக்கலிங்கப்பெருமான், ஸ்ரீ சோம சுந்தரேஸ்வரர் 

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அங்கயற்கண்ணி, ஸ்ரீ மீனாட்சிதேவி 

திருமுறை : மூன்றாம் திருமுறை 108 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


கடன் தொல்லைகளிலிருந்து நீங்கி நிம்மதியாக வாழவும், பிறரிடத்து ஏதும் கடன் பெறாமலே வாழவும் பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம்.

பாடல் எண் : 01
வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி அமணொடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திருவுள்ளமே
பாதி மாது உடனாய பரமனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

உமாதேவியைத் தன் உடம்பில் ஒரு பாதியாக வைத்துள்ள பரமனே! தென் ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே! வேதத்தையும், வேள்வியையும், பழித்துத் திரியும் பயனற்றவர்களாகிய சமணர்களையும், புத்தர்களையும் வாதில் வென்றழிக்க உம்மை வேண்டுகின்றேன். உமது திருவுள்ளம் யாது? உலகனைத்தும் உமது புகழே மிக வேண்டும். திருவருள் புரிவீராக!.


பாடல் எண் : 02
வைதிகத்தின் வழி ஒழுகாத அக்
கைதவம் உடைக்கார் அமண் தேரரை
எய்தி வாது செயத் திருவுள்ளமே
மை திகழ்தரு மாமணி கண்டனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

கருநீலமணி போன்ற கண்டத்தையுடைய சிவபெருமானே! வேதநெறிகளைப் பின்பற்றி ஒழுகாத வஞ்சனையையுடைய கரிய சமணர்களையும், புத்தர்களையும் கூட்டி வாது செய்து வெல்ல விரும்புகின்றேன். உமது திருவுள்ளம் யாது? தென் ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் முதல்வரே! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும். திருவருள் புரிவீராக!.


பாடல் எண் : 03
மறை வழக்கம் இலாத மா பாவிகள்
பறி தலைக் கையர் பாய் உடுப்பார்களை
முறிய வாது செயத் திருவுள்ளமே
மறியுலாம் கையில் மா மழுவாளனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

மான் கன்றையும், மழுவையும் கைகளில் ஏந்தியுள்ள சிவபெருமானே! வேத நெறிப்படி ஒழுகாத கொடிய பாவிகளாகிய, கையினால் முடி பறிக்கப்பட்ட தலையோடு பாயை உடுத்தித் திரியும் சமணர்கள் தோல்வியுறும்படி அவர்களோடு வாது செய்ய உமது திருவுளம் யாது? தென் ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் முதல்வரே! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும். திருவருள் புரிவீராக!.


பாடல் எண் : 04
அறுத்த அங்கம் ஆறு ஆயின நீர்மையைக்
கறுத்து வாழ் அமண் கையர்கள் தம்மொடும்
செறுத்து வாது செயத் திருவுள்ளமே
முறித்த வாள் மதிக்கண்ணி முதல்வனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

ஒளிபொருந்திய பிறைச்சந்திரனை அணிந்த முதல்வனே! வரையறுக்கப்பட்ட வேதத்தின் ஆறு அங்கம் வகுக்கும் கொள்கைகளை வெறுக்கும் சமணர்களாகிய கீழோர்களைத் தடுத்து அவர்களோடு அடியேன் வாது செய்ய உமது திருவுள்ளம் யாது? தென் ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே! உலகனைத்தும் உம் புகழே மிகவேண்டும். திருவருள் புரிவீராக!.


பாடல் எண் : 05
அந்தணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாது செயத் திருவுள்ளமே
வெந்த நீறு அது அணியும் விகிர்தனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

நெருப்பில் வெந்த திருவெண்ணீற்றினை அணியும் வேறுபட்ட இயல்புகளையுடைய சிவபெருமானே! அந்தணர்கள் செய்யும் அரிய வேதக்கிரியைகளை நினைத்துப் பார்க்காத சமணர்களின் வலிமைகள் சிதறும்படி அடியேன் வாது செய்ய உமது திருவுள்ளம் யாது? அழகிய திருஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதி மூர்த்தியே! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும். திருவருள் புரிவீராக!.


பாடல் எண் : 06
வேட்டு வேள்வி செயும் பொருளை விளி
மூட்டு சிந்தை முருட்டு அமண் குண்டரை
ஓட்டி வாது செயத் திருவுள்ளமே
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

காட்டில் வாழும் யானையின் தோலை உரித்துப் போர்த்த என் உள்ளங் கவர்ந்த கள்வரே! அந்தணர்கள் விரும்பிச் செய்கின்ற வேள்விச் செயல்களை இகழ்ந்து பேசும் வன்னெஞ்சினராகிய அமண் குண்டர்களை அடியேன் வாது செய்து விரட்ட உமது திருவுள்ளம் யாது? அழகிய ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதி மூர்த்தியே! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும். திருவருள் புரிவீராக!.


பாடல் எண் : 07
அழலது ஓம்பும் அருமறையோர் திறம்
விழலது என்னும் அருகர் திறத்திறம்
கழல் வாது செயத் திருவுள்ளமே
தழல் இலங்கு திருவுருச் சைவனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

நெருப்புப் போன்று விளங்கும் சிவந்த திருமேனியுடைய சிவபெருமானே! அழலோம்பி அருமறையாளர்கள் செய்யும் காரியங்களைப் பயனற்றவை என்று கூறும் சமணர்களின் பலவகைத் திறமைகளும் விலக வாது செய்ய எண்ணுகின்றேன். உமது திருவுள்ளம் யாது? அழகிய ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டுகின்றேன். திருவருள் புரிவீராக!.


பாடல் எண் : 08
நீற்று மேனியர் ஆயினர் மேலுற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி வாது செயத் திருவுள்ளமே
ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

சிறந்த வாள் வீரனான இராவணனுக்கு மிக்க அருள் புரிந்தவரே! திருநீறு பூசியவர் மேல் பட்டு வீசும் காற்றடிக்கும் இடத்திலும் நில்லாத வன்கண்மை பொருந்திய உள்ளமுடைய சமணர்களின் பிழையைத் தெளிவித்து வாது செய்ய, உமது திருவுள்ளம் யாது? அழகிய ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும். திருவருள் புரிவீராக!.


பாடல் எண் : 09
நீல மேனி அமணர் திறத்து நின்
சீலம் வாது செயத் திருவுள்ளமே
மாலும் நான்முகனும் காண்பரியதோர்
கோலம் மேனிய தாகிய குன்றமே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

திருமாலும், பிரமனும் காணுதற்கரியவராய், அழகிய திருமேனியோடு நெருப்பு மலையாய் ஓங்கி நின்ற சிவபெருமானே! கரிய உடலையுடைய சமணர்களோடு உமது உயர்வினை வெளிப்படுத்தும் வண்ணம் வாது செய்ய உமது திருவுள்ளம் யாது? அழகிய ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும். திருவருள் புரிவீராக!.


பாடல் எண் : 10
அன்று முப்புரம் செற்ற அழக நின்
துன்று பொன்கழல் பேணா அருகரைத்
தென்ற வாது செயத் திருவுள்ளமே
கன்று சாக்கியர் காணாத் தலைவனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

சினந்து பேசும் இயல்புடைய சமண, புத்தர்களால் காண இயலாத தலைவரே! முன்னொரு காலத்தில் முப்புரங்களை எரித்த அழகரே! உம்முடைய பொன்போன்ற திருவடிகளைப் போற்றாத சமணர்கள் தோற்றோட வாதம் செய்ய, உமது திருவுள்ளம் யாது? அழகிய ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும். திருவருள் புரிவீராக!.


பாடல் எண் : 11
கூடல் ஆலவாய்க்கோனை விடைகொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட
மாடக் காழிச் சம்பந்தன் மதித்த இப்
பாடல் வல்லவர் பாக்கிய வாளரே.

நான்கு மாடங்கள் கூடும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரை வணங்கி, உண்ணா நோன்புகளால் வாடிய உடலை உடைய சமணர்களோடு வாது செய்து அவர்களைத் தோல்வியுறும்படி செய்ய இறைவரது இசைவும், அருளும் பெற்ற, மாடங்களையுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர்கள் பாக்கியவான்களாவர்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக