புதன், 4 மே, 2016

மழை வேண்டல் திருப்பதிகம்‬ 07 திருப்பராய்த்துறை

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பராய்த்துறைநாதர் ஸ்ரீ தாருகவனேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பசும்பொன்நாயகி, ஸ்ரீ ஹேமவர்ணாம்பிகை

திருமுறை : முதல் திருமுறை 135 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

"வெப்பதின் தாக்கம் குறையவும், வறட்சி நீங்கவும் மழை வேண்டி இறைவனிடம் பிராத்திப்போம்...!"

"வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க"

நாட்டில் மழை வளம் குறைந்து வறட்சி காணப்படும் போது. மேகராகக் குறிஞ்சி ராகத்தைப் பாடினால் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. அதிலும் ஞானக்குழந்தை திருஞானசம்பந்தர் இயற்றிய இந்தப் பாடலைத் தினமும் பாடி வருவோம். மழை வளம் பெருக, மண் வளம் செழிக்க இது உதவும். மொத்தத்தில் ஞானசம்பந்த சுவாமிகள் இந்த ராகத்தில் ஏழு பாடல்களைப் பாடியிருக்கிறார். அவை திருவையாறு, கழுமலம்(சீர்காழி), திருவீழிமிழலை, திருமுதுகுன்றம், திருப்பறியலூர், திருக்கச்சியேகம்பம் ஆகிய தலங்களில் பாடப்பட்டவை. மனித யத்தனத்தால் முடியாத காரியத்தை தெய்வ அனுக்கிரகம் தான் செய்து தரவேண்டும். தெய்வத்தை நம்புவோம். இந்தத் தேவாரப் பாடலை தினமும் பாடி வருவோம். கருணை பிறக்கும்.


பாடல் எண் : 01
நீறு சேர்வதொர் மேனியர் நேரிழை
கூறு சேர்வதொர் கோலமாய்ப்
பாறு சேர்தலைக் கையர் பராய்த்துறை
ஆறு சேர்சடை அண்ணலே.

திருப்பராய்த்துறையில், கங்கையை அணிந்த சடையினராய் விளங்கும் இறைவர், திருநீறு அணிந்த திருமேனியை உடையவர். அணிகலன்கள் பல புனைந்த உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட கோலத்தினர். பருந்துகள் தொடரத்தக்கதாய்ப் புலால் நாற்றம் கூடிய பிரமனது தலையோட்டைக் கையில் கொண்டவர்.


பாடல் எண் : 02
கந்த மாமலர்க் கொன்றை கமழ்சடை
வந்த பூம்புனல் வைத்தவர்
பைந்தண் மாதவி சூழ்ந்த பராய்த்துறை
அந்தமில்ல அடிகளே.

பசுமையான குளிர்ந்த குருக்கத்திக் கொடிகள் சூழ்ந்த திருப்பராய்த்துறையில் விளங்கும் அழிவற்றவராகிய இறைவர், மணங்கமழும் சிறந்த மலர்களும், கொன்றையும் மணக்கும் சடைமுடியின்மேல் பெருக்கெடுத்து வந்த கங்கை நதியை வைத்துள்ளவர்.


பாடல் எண் : 03
வேதர் வேதம் எல்லாம் முறையால் விரித்து
ஓத நின்ற ஒருவனார்
பாதி பெண்ணுரு ஆவர் பராய்த்துறை
ஆதியாய அடிகளே.

திருப்பராய்த்துறையில் எல்லா உலகங்களுக்கும் ஆதியாக விளங்குபவராய் எழுந்தருளியுள்ள இறைவர், வேதங்களை அருளிச்செய்தவர். எல்லா வேதங்களையும் முறையாக விரித்துப் பொருள் விளக்கம் அருளிய ஒப்பற்றவர். தம் திருமேனியில் பாதிப்பெண்ணுருவாக விளங்குபவர்.


பாடல் எண் : 04
தோலும் தம் அரை ஆடை சுடர்விடு 
நூலும் தாம் அணி மார்பினர்
பாலும் நெய் பயின்றாடு பராய்த்துறை
ஆல நீழல் அடிகளே.

திருப்பராய்த்துறையில் ஆலநீழலில் எழுந்தருளிப் பால், நெய் முதலியவற்றை விரும்பி ஆடும் இறைவர், புலித்தோலைத் தம் இடையிலே ஆடையாக உடுத்தவர். ஒளி பொருந்திய பூணூல் அணிந்த மார்பினை உடையவர்.


பாடல் எண் : 05
விரவி நீறுமெய் பூசுவர் மேனிமேல்
இரவில் நின்று எரியாடுவர்
பரவினார் அவர் வேதம் பராய்த்துறை
அரவம் ஆர்த்த அடிகளே.

திருப்பராய்த்துறையில் பாம்பை இடையில் கட்டியவராய் விளங்கும் பரமர், திருநீற்றைத் தம் மேனிமேல் விரவப் பூசியவர். நள்ளிரவில் சுடுகாட்டுள் நின்று எரி ஆடுபவர். வேதங்களால் பரவப் பெற்றவர்.


பாடல் எண் : 06
மறையும் ஓதுவர் மான்மறிக் கையினர்
கறைகொள் கண்டம் உடையவர்
பறையும் சங்கும் ஒலிசெய் பராய்த்துறை
அறைய நின்ற அடிகளே.

பறை, சங்கு முதலியன முழங்கும் திருவிழாக்கள் நிகழும் திருப்பராய்த்துறையில் எல்லோரும் புகழ்ந்து போற்ற எழுந்தருளிய இறைவர், வேதங்களை ஓதுபவர். மான் கன்றைக் கையின்கண் உடையவர், விடக்கறை கொண்ட கண்டத்தையுடையவர்.


பாடல் எண் : 07
விடையும் ஏறுவர் வெண்பொடிப் பூசுவர்
சடையில் கங்கை தரித்தவர்
படைகொள் வெண்மழுவாளர் பராய்த்துறை
அடைய நின்ற அடிகளே.

திருப்பராய்த்துறையிற் பொருந்தி விளங்கும் இறைவர், விடையேற்றினை ஊர்ந்து வருபவர். வெண்மையான திருநீற்றைப் பூசுபவர். சடையின்மேல் கங்கையைத் தரித்தவர். வெண்மையான மழுவைப் படைக்கருவியாகக் கொண்டவர்.


பாடல் எண் : 08
தருக்கின் மிக்க தசக்கிரிவன் தனை
நெருக்கினார் விரல் ஒன்றினால்
பருக்கினார் அவர் போலும் பராய்த்துறை
அருக்கன் தன்னை அடிகளே.

திருப்பராய்த்துறையில் எழுந்தருளிய இறைவர், வலிமைமிக்க பத்துத் தலைகளை உடைய இராவணனைத் தம் கால் விரல் ஒன்றினால் நெரித்தவர். தக்கன் வேள்வியில் கதிரவனின் பற்களைத் தகர்த்தவர்.


பாடல் எண் : 09
நாற்ற மாமலரானொடு மாலுமாய்த்
தோற்றமும் அறியாதவர்
பாற்றினார் வினையான பராய்த்துறை
ஆற்றல் மிக்க அடிகளே.

திருப்பராய்த்துறையில் ஆற்றல் மிக்கவராய் விளங்கும் அடிகள், மணம் பொருந்திய தாமரை மலரில் விளங்கும் பிரமன், திருமால் ஆகியோரால் அடிமுடி அறியப்பெறாத தோற்றத்தினை உடையவர். தம்மை வழிபடுபவர்களின் வினைகளைப் போக்குபவர்.


பாடல் எண் : 10
திருவிலிச் சிலதேர் அமண் ஆதர்கள்
உருவிலா உரை கொள்ளேலும்
பருவிலால் எயில் எய்து பராய்த்துறை
மருவினான் தனை வாழ்த்துமே.

புண்ணியமில்லாத சிலராகிய புத்தர்களும், சமணர்களாகிய, கீழ்மக்களும், கூறும் பொருளற்ற அறவுரைகளைக் கேளாதீர். பெரிய மேருமலையாகிய வில்லால் முப்புரங்களை எய்தழித்து உலகைக் காத்துத் திருப்பராய்த்துறையில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வாழ்த்துவீர்களாக.


பாடல் எண் : 11
செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறைச்
செல்வர் மேல் சிதையாதன
செல்வன் ஞானசம்பந்தன் செந்தமிழ்
செல்வமாம் இவை செப்பவே.

பொருட் செல்வங்களால் நிறைந்து விளங்கும் சிவஞானச் செல்வர்கள் வாழும் திருப்பராய்த்துறையில் எழுந்தருளிய, வீடுபேறாகிய செல்வத்தையுடைய, இறைவன் மீது, அருட்செல்வனாக விளங்கும் ஞானசம்பந்தன் அருளிய, அழிவற்ற இச்செந்தமிழ்ப் பாடல்களை ஓதினால், ஓதின அவர்கட்கு எல்லாச் செல்வங்களும் உண்டாகும்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- மழை வேண்டல் திருப்பதிகங்கள் முற்றிற்று --- || 


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக