வெள்ளி, 27 மே, 2016

70 சடைய நாயனார் புராணம்

"அரனடியே அடைந்திட்ட சடையனுக்கு அடியேன்."

"சுந்தரரின் தந்தையார்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பக்தனேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மனோன்மணி

அவதாரத் தலம் : திருநாவலூர்

முக்தி தலம் : திருநாவலூர்

குருபூஜை நாள் : மார்கழி - திருவாதிரை

"தம்பிரானைத் தோழமை கொண்டு அருளித் தமது தடம்புயஞ்சேர்
கொம்பனார் பால் ஒரு தூது செல்ல ஏவிக் கொண்டருளும்
எம்பிரானைச் சேரமான் பெருமாள் இணையில் துணைவராம்
நம்பி ஆரூரைப் பயந்தார் ஞாலம் எல்லாம் குடிவாழ."

பாடல் விளக்கம்:
தம் தலைவரான சிவபெருமானையே தமக்குத் தோழராகக் கொண்டு, அப்பெருமானையே, தம்பெரிய தோள்களைத் தழுவும் பூங்கொம்பர் போன்ற பரவையாரிடத்துத் தூதாகச் செல்லுமாறு அனுப்பிய எம்பெருமானை, சேரமான் பெருமாள் நாயனாரின் ஒப்பற்ற துணைவரான நம்பியாரூரரை, உலகத்தில் எல்லா உயிர்களும் வாழ்வடையும் பொருட்டுப் பெற்ற பேறுடையவர், சடையனார் ஆவர்.

சடைய நாயனார் புராணம்



சைவ வளமும், செல்வமும் கொழிக்கும் திருநாவலூர் நகரில் ஆதிசைவர் மரபில் சடையனார் என்னும் சிவத்தொண்டர் பிறந்தார். இவரது மனைவியார் பெயர் இசைஞானியார். தமிழுலகம் செய்த தவப்பயனாக சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவரது மகனாகப் பிறந்தார். தமது மகனை நரசிங்க முனையார் தம்மோடு அழைத்துப் போக எண்ணிய போது இவர் மன்னரது அன்பிற்குக் கட்டுப்பட்டு குழந்தையை மறுமொழி பேசாது அனுப்பி வைத்த பெருமையயைப் பெற்றவர். 

சுந்தரமூர்த்தி சுவாமிகள், தாம் பாடியருளிய திருத்தொண்டத் தொகையில் பல இடங்களில் தம் பெற்றோர்களைப் பற்றிச் சிறப்பித்துக் கூறியுள்ளார். திருதொண்டத் தொகை பாடி உலகையெல்லாம் உய்வித்த தெய்வ புதல்வனை ஈன்ற சடைய நாயனாரும், இசைஞானியாரும் இறைவன் திருவடி நீழலை அடைந்து இன்புற்றனர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக