செவ்வாய், 24 மே, 2016

27 நமிநந்தியடிகள் நாயனார் புராணம்

"அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்"

"சமணர்கள் எண்ணெய் தர மறுத்தமையால் குளத்து நீரைக்கொண்டே விளக்கு எரித்த மறையவர்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வன்மீகநாதர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ உமாமகேஸ்வரி

அவதாரத் தலம் : திருநெய்ப்பேர்

முக்தி தலம் : திருவாரூர்

குருபூஜை நாள் : வைகாசி - பூசம்

"நண்ணி இறைஞ்சி அன்பினால் நயப்பு உற்று எழுந்த காதலுடன்
அண்ணலாரைப் பணிந்து எழுவார் அடுத்த நிலைமைக் குறிப்பினால் 
பண்ணுந் தொண்டின் பாங்கு பல பயின்று பரவி விரவுவார் 
எண்ணில் தீபம் ஏற்றுவதற்கு எடுத்த கருத்தின் இசைந்து எழுவார்."

பாடல் விளக்கம்:
சென்று வணங்கி, அன்பு மீதூர்ந்த பத்திமையுடன் பெருமையுடைய இறைவரைத் தாழ்ந்து எழுவார், அடுத்து நிகழ இருக்கும் விளைவின் அறிகுறியாக மனத்தில் எழுந்த குறிப்பால் தாம் செய்து வரும் திருத்தொண்டின் பாங்கு பலவும் செய்து போற்றி அங்குத் தங்குவாராய், எண்ணற்ற விளக்குகளை ஏற்ற வேண்டும் என மனத்துள் ஏற்பட்ட கருத்திற்கு இயைய அதைச் செய்ய முற்படு வாராய்.

நமிநந்தியடிகள் நாயனார் புராணம்



ஏமப்பேறுர் என்னும் சிவத்தலம், சோழர்களுக்குச் சொந்தமாகிய பொன்னி நாட்டில் அமந்துள்ளது. இத்தலத்திலுள்ள அந்தணர்கள் வேள்விச் சாலையில் அருமையான பூஜை மேடை மீது வெண் மணலைப் பரப்பி இடை இடையே செந்தீயை வளர்த்து வேத பாராயணம் செய்வர். இத்தகைய சீரும் சிறப்பு மிக்குத் தலத்தில் சைவ நெறியில் ஒருமைப்பட்ட அந்தணர் குலத்தில் நமிநந்தியடிகள் நாயனார் தோன்றினார். 

இவர் எக்காலத்தும் எம்பெருமசன் திருவடிகளை இடையறாது வணங்கி வழிபட்டு வரும் பெரும் பேறு பெற்றிருந்தார். இவ்வன்பர் நாடோறும் அடுத்துள்ள திருவாரூர் சென்று புற்றிடங்கொண்ட பெருமானை வணங்கி வழிபட்டு வந்தார். திருவாரூர் திருக்கோயிலின் திருமதிலுக்கு அருகே அறநெறி என்று ஓர் தனிக்கோயில் உண்டு. அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு அறநெறியப்பர் என்று பெயர். 

நமிநந்தியடிகளார் அறநெறிச் சன்னதியை அடைந்து அறநெறியப்பரையும் அம்மையையும் பக்திப் பெருக்கோடு வழிபட்டு வந்தார். ஒரு நாள் மாலைப் பொழுது அடிகளார் அறநெறியப்பரைச் சேவிததுக் கொண்டிருந்தார். அங்கே விளக்கேற்றாமல் இருந்தால் எங்கும் இருள் படர்ந்திருந்துது. ஒரே ஒரு விளக்கு மட்டும் எண்ணை தீர்ந்து போகும் நிலையில் சற்று மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. ஆலயத்துள் விளக்கேற்றி வைக்க எண்ணினார்.

தொலைவிலுள்ள தமது ஊருக்குச் சென்று விளக்கு ஏற்ற நெய் வாங்கி வருவதற்குள் பொழுது நன்றாக இருண்டு விடும் என்பதை உணர்ந்தார் நாயனார். ஆலயத்தை அடுத்துள்ள ஒரு வீட்டிற்குள் சென்று அவ்வீட்டிலுள்ளோரிடம் விளக்கு ஏற்றுவதற்குக் கொஞ்சம் நெய் வேண்டும் என்று பணிவன்புடன் வேண்டினார். அந்நாளில் திருவாரூரில் சமணர்கள் சற்று அதிகமாகவே குடியேறியிருந்தார்கள் நமிநந்தியடிகள் விளக்கு ஏற்ற நெய் கேட்ட இல்லத்தில இருந்தவர்களே சமணர்கள் அச்சமணர்கள் அடிகளாரைப் பார்த்து எள்ளி நகையாடினார்கள். 

அவர்கள் அவரைப் பார்த்து, கையில் கனல் ஏந்தி ஆனந்தத் தாண்டவம் ஆடும் உங்கள் இறைவனுக்கு விளக்கு வேறு வேண்டுமா? கனல் ஒளி ஒன்றே போதுமே? வேண்டுமென்றால் குளத்து நீரைக் கொண்டு விளக்கெரியும் என்று எள்ளி நகையாடினர். சமணர்களின் இக்கேலி வார்த்தைகளைக் கேட்டு நமிநந்தியடிகள் நெஞ்சம் உருக ஆலயத்திற்கு வந்து இறைவடன பணிந்து, அறநெறியப்பரே! எந்தாயே! எம்பெருமானே! சமணர்களால் ஐயனுக்கு இழிமொழிகள் ஏற்பட்டுவிட்டதே! இவற்றை இச்செவிகள் கேடபதற்கு அடியேன் என்னன பாவம் செய்தேனோ? மாற்றி அருள, மார்க்கம் தான் யாது உளதோ? என்று இறைஞ்சினார். 

இறைவன் அருளியதைக் கேட்டு அடிகளார் ஆனநதப் பெருக்கோடு தேவாசிரிய மண்டபத்தை அடுத்து உம்ம சங்கு தீர்த்தம் என்னும் பெயருடைய திருக்குளத்தை நோக்கி ஓடினார். நீரை மொண்டு வந்தார். விளக்கில் நீரை ஊற்றித் திரியைத் தூண்டி விட்டார். ஐயனின் அருட்கருணையைத்தான் என்னென்பது! நீர் விட்டு ஏற்றிய விளக்கு நெய் விளக்கு ஒளியை விட பன்மடங்கு ஒளியோடு பிரகாசித்தது. ஆனந்தம் மேலிட அடியார் எல்லா விளக்குகளையும் இப்படியே குளத்து நீரை ஊற்றி ஏற்றினார். 

விளக்குகள் அனைத்தும் மங்களமாகப் பிரகாசித்தன. அடியார் எல்லையில்லா மகிழ்ச்சிப் பெருக்கோடு யாது செய்வதென்றறியாது பேரின்ப சுகம் பூண்டு திகைத்து நின்றார். காலப்போக்கில் சமணர்களின் அக்கிரமத்திற்கும் ஒரு முடிவு காலம் வந்தது. சமணம் அழிந்தது. சைவநெறி தழைத்தது. திருவெண்ணீற்றுப் பொன் ஒளி ஏமப்பேறுாரை வெள்ளியம்பலம் போல் விளங்கச் செய்தது. அப்பொழுது சோழ நாட்டை ஆண்டு வந்த மன்னர், அடியாரின் திருத்தொண்டினையும், பக்தியையும் கேள்விப்பட்டு கோயிலுக்கு நமிநந்தியடிகளையே தலைவராக்கினார். அத்தோடு கோயில் திருப்பணி நடைபெறுவதற்காக வேண்டி பொன்னும் பொருளும் கொடுத்து உதவினார். 

அடிகளார் எம்பெருமானுக்குப் பெருவிழாக்கள் பல நடத்தி பெருமிதம் பூண்டார். ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவை அடிகளார் முன் நின்று மிக்கச் சிறப்பாக நடத்தி வந்தார். இந்த சமயத்தில் ஏமப்பேறுாரை அடுத்துள்ள மணலி என்ற ஊரில் ஆண்டுக்கொடருமுறை, திருவாரூர் தியாகேசப் பெருமான் எழுந்தருளுவது வழக்கம். தியாகேசப் பெருமானுக்கு. மணலியில் பெருவிழா நடைபெறும். ஒருமுறை மணலியில் நடந்த தியாகேசர் விழாவிற்கு தொண்டர்களும், அன்பர்களும் ஜாதி, மத பேதமின்றி கலந்து கொண்டனர். 

நமிநந்தியடிகளும் இவ்விழாவில் கலநது கொண்டு பரமனின் அருளைப் பெற்றார். மாலையில் புற்றிடங் கொண்ட பெருமான் முன்போல திருவாரூக் கோயிலில் எழுந்தருளினார். அடிகளார் தியாகேசப் பெருமானை வணங்கிவிடடு, இரவென்றும் பாராமல், அங்கிருந்து புறப்பட்டு ஏமப்பேறுாரிலுள்ள தமது இல்லத்தை அடைந்தார். அந்தணர், வீட்டிற்கும் போக மனமில்லாமல் புறத்தே படுத்துவிட்டார். அப்பொழுது உள்ளிருந்து வந்த அம்மையார் கணவன் வெளியே படுத்து உறங்குவது கண்டு திகைத்தாள்; காரணத்தை வினவினாள். அந்தணர் அம்மையாரிடம், அம்மையே! திருவிழா விற்குச் சென்றிரு்ந்தேன். அங்கு சாதி மதபேதமின்றி எல்லாரும் கலந்து இருந்தமையால் தூய்மை கெட்டு விட்டது. இந்த நிலையில், மனைக்குள் எப்படி வரமுடியும்? தண்ணீரைச் சூடாக்கி எடுதது வா! குளித்து விட்டுப் பிறகு வருகிறேன் என்று விடை பகர்ந்தார். அதுகேட்டு அந்தணப் பெருமாட்டியும் தண்ணீர் காய வைப்பதற்காக உள்ளே சென்றார்கள். 

அதற்குள் அடிகளார் சோர்வின் காரணமாகத் திண்ணையில் சற்றுக் கண் அயர்ந்து உறங்கிவிட்டார். அப்பொழுது எம்பெருமான் அவரது கனவிலே பேரொளி பொங்க எழுந்தருளினார். அந்தணரே! திருவாரூரில் பிறந்தவர்கள் அனைவருமே எனது கணங்கள் தான்! அப்படியிருக்க உமக்கு மட்டும் ஏன் இப்படியொரு எண்ணம் எழுந்தது? இவ்வுண்மையை நாளை திருவரூர் வந்து காண்பீராக! என்று திருவாய் மலர்ந்து அருளினார். அந்தணர் கனவு கலைந்து எழுநதார். தம் தவற்றை உணர்ந்து இறைவனிடம் பிழை பொறுத்து அருளுமாறு வேண்டினார்! அம்மையார் குளிப்பதற்கு வருமாறு கணவனை அழைத்தாள். அடிகளார் கனவிலே எம்பெருமான் மொழிந்ததைச் சொன்னார். குளிக்காமலேயே வீட்டிற்குள் சென்று துயின்றார். 

மறுநாள் பொழுது புலர்ந்தும் அந்தணர் தூய நீராடி திருமேனியில் திருவெண்ணீறு பிரகாசிக்கத் திருவாரூருக்குப் புறப்பட்டார். அந்நகருக்குள் நுழையும்போதே நகரிலுள்ளோர் அனைவரும் சிவகண உருவத்ததில் பேரொளிப் பிழம்பாகத் திருவெண்ணீறு மேனியோடு திகழும் காட்சியைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி பூண்டார் நாயனார். நிலத்தில் வீழ்ந்து வணங்கினார். உடனே, அனைவருமே சிவசொரூபத் தோற்றப் பொலிவு மாறி, பழையபடியே திகழவும் கண்டார். அடிகளார் திருக்கேயிலில் சென்று எம்பெருமானே! அடியேன் செய்த பெரும் பிழையைப் பொறுத்தருளல் வேண்டும் என்று வேண்டினார். 

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அடிகளாருக்கு திருவாரூரை விட்டுக் செல்ல மனம் வரவில்லை. தியாகேசப் பெருமானின் திருவடிகமலங்களிலேயே காலத்தைக் கடத்த எண்ணினார். அடிகளார் மனைவியாருடன் ஏமப்பேறுாரை விடுத்துக் திருவாரூரையே தமது இருப்பிடமாகக் கொண்டார். தியாகேசப் பெருமானுக்கு திருத்தொண்டுகளைச் செய்து கொண்டு வாழ்ந்து வரலானார். இவ்வாறு திருவாரூரிலே வாழ்ந்து வந்த நமிநந்தி அடிகளார் இறுதியில் அரனாரின் திருவடி நீழலை அடைந்து பேரின்பம் பூண்டார்.

"இன்ன வகையால் திருப்பணிகள் எல்லா உலகும் தொழச்செய்து
நன்மை பெருகும் நமிநந்தி அடிகள் நயமார் திருவீதிச்
சென்னி மதியும் திருநதியும் அலைய வருவார் திருவாரூர்
மன்னர் பாத நீழல் மிகும் வளர்பொற் சோதி மன்னினார்."

பாடல் விளக்கம்:
இனைய பல நன்மைகளையெல்லாம் பெருகச் செய்து வந்த நமிநந்தியடிகள், எவ்வுலகும் தொழும் படியான திருப்பணிகள் பலவற்றையும் செய்து, சிவமணம் கமழும் திருவீதிகளை யுடைய திருவாரூரின் கண் எழுந்தருளியிருக்கும், தலையில் பிறையும் கங்கையும் சூடும் இறைவரான தியாகேசப்பெருமானின் திருவடி நிழலில் வளர்கின்ற அழகிய சோதியுள் நிலைபெறச் சேர்ந்தார். 

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக