ஞாயிறு, 1 மே, 2016

‪மழை வேண்டல் திருப்பதிகம்‬ 01 திருக்கச்சியேகம்பம்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ ஏகாம்பரநாதர், ஸ்ரீ தழுவக்குழைந்த நாதர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ ஏலவார்குழலி, ஸ்ரீ காமாட்சியம்மை

திருமுறை : முதல் திருமுறை 133 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

"வெப்பதின் தாக்கம் குறையவும், வறட்சி நீங்கவும் மழை வேண்டி இறைவனிடம் பிராத்திப்போம்...!"

"வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க"

நாட்டில் மழை வளம் குறைந்து வறட்சி காணப்படும் போது. மேகராகக் குறிஞ்சி ராகத்தைப் பாடினால் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. அதிலும் ஞானக்குழந்தை திருஞானசம்பந்தர் இயற்றிய இந்தப் பாடலைத் தினமும் பாடி வருவோம். மழை வளம் பெருக, மண் வளம் செழிக்க இது உதவும். மொத்தத்தில் ஞானசம்பந்த சுவாமிகள் இந்த ராகத்தில் ஏழு பாடல்களைப் பாடியிருக்கிறார். அவை திருவையாறு, கழுமலம்(சீர்காழி), திருவீழிமிழலை, திருமுதுகுன்றம், திருப்பறியலூர், திருக்கச்சியேகம்பம் ஆகிய தலங்களில் பாடப்பட்டவை. மனித யத்தனத்தால் முடியாத காரியத்தை தெய்வ அனுக்கிரகம் தான் செய்து தரவேண்டும். தெய்வத்தை நம்புவோம். இந்தத் தேவாரப் பாடலை தினமும் பாடி வருவோம். கருணை பிறக்கும்.


பாடல் எண் : 01
வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின் விரிநூல் ஒருபால் பொருந்தக்
கந்தமல்கு குழலியோடும் கடிபொழில் கச்சி தன்னுள்
அந்தமில் குணத்தார் அவர் போற்ற அணங்கினொடு ஆடல் புரி
எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த இடர் கெடுமே.

பாடல் விளக்கம்‬:
அனலிடை நன்றாக வெந்த வெண்மையான திருநீற்றைப் பூசியுள்ள மார்பின்கண் விரிந்த பூணூல் ஒருபால் விளங்கித் தோன்ற, மணங்கமழும் கூந்தலினையுடைய உமையம்மையோடும், விளங்கும் பொழில்களால் சூழப்பட்ட கச்சி என்னும் தலத்துள் எல்லையற்ற குணங்களையுடைய அடியவர்கள் போற்ற நடனம் செய்யும் எந்தையாகிய சிவபெருமான் எழுந்தருளிய ஏகம்பம் என்னும் திருக்கோயிலைத் தொழுது போற்ற நம் இடர் கெடும்.


பாடல் எண் : 02
வரம் திகழும் அவுணர் மாநகர் மூன்றுடன் மாய்ந்து அவியச்
சரம் துரந்து எரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேய இடம்
குருந்தம் மல்லிகை கோங்கு மாதவி நல்ல குரா மரவம்
திருந்து பைம்பொழில் கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே.

பாடல் விளக்கம்‬:
வரம் பெற்ற அவுணர்களின் பெருநகராக விளங்கிய முப்புரங்களும் ஒருசேர மாய்ந்து கெடுமாறு கணை எய்து எரித்தழித்த, தாழ்ந்து தொங்கும் சடைகளையுடைய சங்கரன் எழுந்தருளிய இடமாகிய, குருந்தம், மல்லிகை, கோங்கு, மாதவி, நல்ல குரா, கடம்ப மரம் ஆகியனவற்றால் சிறந்து விளங்கும் பசுமையான பொழில் சூழ்ந்த கச்சிமாநகரிலுள்ள திருஏகம்பத்தை அடைந்து தொழ நம் இடர் கெடும்.


பாடல் எண் : 03
வண்ண வெண்பொடிப் பூசும் மார்பின் வரி அரவம் புனைந்து
பெண் அமர்ந்து எரி ஆடல் பேணிய பிஞ்ஞகன் மேய இடம்
விண்ணமர் நெடுமாடம் ஓங்கி விளங்கிய கச்சி தன்னுள்
திண்ணமாம் பொழில் சூழ்ந்த ஏகம்பம் சேர இடர் கெடுமே.

பாடல் விளக்கம்‬:
வெண்மை நிறம் அமைந்த திருநீறு பூசிய மார்பின்கண் உடலில் வரிகளையுடைய பாம்பை அணிந்து, உமையம்மையை விரும்பியேற்று, சுடுகாட்டில் எரியாடல் புரியும் தலைக்கோலம் உடையவனாகிய சிவபிரான் மேவிய இடமாகிய விண்ணளாவிய நீண்ட மாட வீடுகள் ஓங்கி விளங்குவதும், என்றும் நிலை பெற்ற பொழில்களால் சூழப்பட்டதுமாகிய கச்சிமாநகரில் உள்ளதுமாகிய திருஏகம்பத்தைச் சென்று வணங்க நம் இடர் கெடும்.


பாடல் எண் : 04
தோலும் நூலும் துதைந்த வரை மார்பில் சுடலை வெண்ணீறு அணிந்து
காலன்மாள் உறக் காலால் காய்ந்த கடவுள் கருதும் இடம்
மாலை வெண்மதி தோயும் மாமதில் கச்சி மாநகருள்
ஏலம் நாறிய சோலை சூழ் ஏகம்பம் சேர இடர் கெடுமே.

பாடல் விளக்கம்‬:
மான்தோலும் பூணூலும் பொருந்திய மலை போன்ற மார்பின்கண் சுடலையில் எடுத்த வெண்மையான திருநீற்றை அணிந்து மார்க்கண்டேயர்க்காகக் காலன் மாயும்படி காலால் அவனை உதைத்தருளிய கடவுளாகிய சிவபிரான் விரும்புமிடமாகிய, மாலைக் காலத்தில் தோன்றும் வெண்மையான மதி தோயுமாறு உயர்ந்த பெரிய மதில்களை உடைய பெரிய காஞ்சிபுர நகரில் மணம் வீசும் சோலைகளால் சூழப்பட்ட ஏகம்பம் என்னும் திருக்கோயிலை ஏத்த நம் இடர் கெடும்.


பாடல் எண் : 05
தோடணி மலர்க்கொன்றை சேர்சடைத் தூமதியம் புனைந்து
பாடல் நான்மறையாகப் பலகணப் பேய்கள் அவை சூழ
வாடல் வெண் தலை ஓடு அனலேந்தி மகிழ்ந்து உடன் ஆடல் புரி 
சேடர் சேர் கலிக்கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே.

பாடல் விளக்கம்‬:
அழகிய இதழ்களோடு கூடிய கொன்றை மலர் மாலை சூடிய சடையின்மேல் தூய பிறை மதியை அணிந்து நான்மறைகளைப் பாடல்களாகக் கொண்டு பேய்க் கணங்கள் பலசூழப், புலால் வற்றிய வெண்தலையோட்டையும், அனலையும் கையிலேந்தி மகிழ்வோடு உமையம்மையுடன் ஆடல் புரிகின்ற பெரியோனாகிய சிவபிரான் எழுந்தருளிய ஆரவாரமுடைய கச்சியில் விளங்கும் திருஏகம்பத்தை நினைக்க நம் இடர் கெடும்.


பாடல் எண் : 06
சாகம் பொன்வரையாகத் தானவர் மும்மதில் சாயவெய்து
ஆகம் பெண்ணொரு பாகமாக அரவொடு நூலணிந்து
மாகம் தோய் மணிமாட மாமதில் கச்சி மாநகருள்
ஏகம்பத்து உறை ஈசன் சேவடி ஏத்த இடர் கெடுமே.

பாடல் விளக்கம்‬:
மேருமலையை வில்லாகக் கொண்டு அசுரர்களின் முப்புரங்களை அழியுமாறு கணைதொடுத்துத் தன் திருமேனியில் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மார்பில் பாம்பையும், முப்புரிநூலையும் அணிந்து விண்ணளாவிய அழகிய மாடங்களையும், பெரிய மதிலையும் உடைய கச்சி மாநகரில் விளங்கும் திருஏகம்பத்தில் உறையும் ஈசன் திருவடிகளை ஏத்த நம் இடர் கெடும்.


பாடல் எண் : 07
இப்பதிகத்தில் உள்ள 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.


பாடல் எண் : 08
வாணிலா மதிபுல்கு செஞ்சடை வாளரவம் அணிந்து
நாண் இடத்தினில் வாழ்க்கை பேணி நகுதலையில் பலி தேர்ந்து 
தேணிலா அரக்கன் தன் நீள்முடி பத்தும் இறுத்தவன் ஊர்
சேணுலாம் பொழில் கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே.

பாடல் விளக்கம்‬:
ஒளி விளங்கும் பிறைமதி பொருந்திய செஞ்சடையில் ஒளி பொருந்திய பாம்பினை அணிந்து இடப்பாகத்தே நாணோடு கூடியவளாகிய இல்வாழ்க்கைக்குரிய உமையம்மையை விரும்பியேற்றுச் சிரிக்கும் தலையோட்டில் பலியேற்று, மன உறுதி படைத்தவனாகிய இராவணனின் நீண்ட முடிகள் பத்தையும் நெரித்தவனாகிய சிவபிரானது, வானளாவிய பொழில்களையுடைய கச்சிமா நகரிலுள்ள திருஏகம்பத்தை அடைந்து தொழ நம் இடர் கெடும்.


பாடல் எண் : 09
பிரமனும் திருமாலும் கைதொழப் பேரழலாய பெம்மான்
அரவம் சேர்சடை அந்தணன் அணங்கினொடு அமரும் இடம்
கரவில்வண் கையினார்கள் வாழ் கலிக் கச்சி மாநகருள்
மரவம் சூழ் பொழில் ஏகம்பம் தொழ வில்வினை மாய்ந்து அறுமே.

பாடல் விளக்கம்‬:
பிரமனும், திருமாலும் தம் கைகளால் தொழுது வணங்கப் பெரிய அனலுருவாகி நின்ற பெருமானும், பாம்பணிந்த சடையையுடைய அந்தணனும் ஆகிய சிவபிரான் தன் தேவியோடு அமரும் இடமாகிய, வஞ்சகம் இல்லாத வள்ளன்மை பொருந்திய கையினை உடையவர்கள் வாழ்கின்ற ஆரவாரமுடைய கச்சி மாநகரில் குங்கும மரங்கள் பொருந்திய சோலைகளால் சூழப்பட்டு விளங்கும் திருஏகம்பத்தைத் தொழ நம் வல்வினைகள் மாய்ந்து கெடும்.


பாடல் எண் : 10
குண்டு பட்டு அமண ஆயவரொடும் கூறைதம் மெய்போர்க்கும்
மிண்டர் கட்டிய கட்டுரை அவை கொண்டு விரும்பேன்மின்
விண்டவர் புரமூன்றும் வெங்கணை ஒன்றினால் அவியக்
கண்டவன் கலிக் கச்சி ஏகம்பம் காண இடர் கெடுமே.

பாடல் விளக்கம்‬:
பருமையான உடலோடு ஆடையின்றித் திரியும் சமணர்களோடு ஆடையைத் தம் உடலில் போர்த்து வலியவராய்த் திரியும் புத்தர்களும் புனைந்து கூறும் உரைகளைப் பொருளுரையாகக் கருதி விரும்பாதீர்கள். பகைவர்களாகிய அவுணர்களின் மூன்று புரங்களையும் கொடிய கணை ஒன்றை எய்து எரித்தழித்தவனாகிய சிவபிரான் எழுந்தருளிய கச்சியின்கண் உள்ள திருஏகம்பத்தைச் சென்று காண நம் இடர் கெடும்.


பாடல் எண் : 11
ஏரினார் பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பம் மேயவனைக்
காரினார் மணி மாடம் ஓங்கு கழுமல நன்னகருள்
பாரினார் தமிழ் ஞானசம்பந்தன் பரவிய பத்தும் வல்லார்
சீரினார் புகழ் ஓங்கி விண்ணவரோடும் சேர்பவரே.

பாடல் விளக்கம்‬:
அழகு நிறைந்த பொழில்கள் சூழ்ந்த கச்சியேகம்பத்துள் விளங்கும் இறைவனை மேகங்கள் தவழும் அழகிய மாடங்கள் ஓங்கும் கழுமல நன்னகருள் தோன்றிய தமிழ்வல்ல ஞானசம்பந்தன் பரவிப் போற்றிய பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர் இவ்வுலகின்கண் சிறந்த புகழால் ஓங்கி விளங்கிப் பின் விண்ணவர்களோடும் சேர்ந்து வாழும் நிலையைப் பெறுவர்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக