வியாழன், 18 ஆகஸ்ட், 2016

திருமணத் தடை நீக்கும் திருமணஞ்சேரி

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ உத்வாக நாதசுவாமி, ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ கோகிலாம்பாள், ஸ்ரீ யாழின் மென்மொழியம்மை

திருமுறை : இரண்டாம் திருமுறை 016 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


திருமணம் கைகூடாது தடைபட்டு நிற்பவர்கள் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கோகிலாம்பாள் சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரர் சுவாமிக்கு மாலை சாற்றி வழிபாடு செய்தால் விரைவில் திருமணம் இனிதே கைகூடும். மேலும் இராகு தோஷ நிவர்த்திக்கும் இத்தலம் மிக சிறப்புடையதாகும். இராகு தோஷத்தினால் பீடிக்கப்பட்டு, புத்திர பாக்கியம் கிட்டாத தம்பதியர் இத்தலத்திலுள்ள சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி இங்கு கோவில் கொண்டுள்ள இராகு பகவானுக்கு பால் அபிஷேகமும், பால் பொங்கல் நிவேதனமும் செய்து சாப்பிட்டு வந்தால் தனது இராகு தோஷம் நீங்கப் பெற்று புத்திரப் பேறு பெறுவர் என்பது அனுபவ உண்மையாகும்.

பாடல் எண் : 01
அயிலாரும் அம்பு அதனால் புரம் மூன்றெய்து
குயிலாரும் மென்மொழியாள் ஒருகூறாகி 
மயிலாரும் மல்கிய சோலை மணஞ்சேரிப் 
பயில்வானைப் பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே.

பொருளுரை:
கூரிய அம்பினால் முப்புரங்களையும் எய்து அழித்து, குயில் போலும் இனிய மென்மையான மொழிபேசும் உமையம்மையை ஒரு கூற்றில் உடையவனாகி, மயில்கள் வாழும் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் எழுந்தருளிய இறைவனைப் பற்றி நின்றார்க்குப் பாவம் இல்லை.


பாடல் எண் : 02
விதியானை விண்ணவர் தாம் தொழுது ஏத்திய 
நெதியானை நீள்சடைமேல் நிகழ்வித்த வான் 
மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப் 
பதியானை பாடவல்லார் வினை பாறுமே.

பொருளுரை:
நீதி நெறிகளின் வடிவினன். தேவர்கள் வணங்கித் தமது நிதியாகக் கொள்பவன். நீண்ட சடைமீது வானத்து மதியைச் சூடியவன். வளமான பொழில்கள் சூழ்ந்த திருமணஞ்சேரியைத் தனது பதியாகக் கொண்டவன். அவனைப் பாடவல்லார் வினைகள் அழியும்.


பாடல் எண் : 03
எய்ப்பானார்க்கு இன்புறு தேன் அளித்து ஊறிய 
இப்பாலாய் எனையும் ஆள உரியானை
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி 
மெய்ப்பானை மேவி நின்றார் வினை வீடுமே.

பொருளுரை:
வறுமையால் இளைத்தவர்க்குப் பெருகிய இன்பம் தரும் தேன் அளித்து இவ்வுலகத்துள்ளோனாய் அருள்புரிபவன். என்னையும் ஆட்கொண்டருளும் உரிமையன். செல்வங்களாக உள்ள மாடவீடுகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் உண்மைப்பொருளாய் விளங்குபவன். அவனை மேவி வழிபடுவார் வினைகள் நீங்கும்.


பாடல் எண் : 04
விடையானை மேலுலகு ஏழும் இப்பாரெலாம் 
உடையானை ஊழிதோறு ஊழியுளதாய 
படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி 
அடைவானை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே.

பொருளுரை:
விடை ஊர்தியன். மேலே உள்ள ஏழு உலகங்களையும் இம்மண்ணுலகையும் தன் உடைமையாகக் கொண்டவன். பல்லூழிக் காலங்களாய் விளங்கும் படைகளை உடையவன். அடியவர் பண்ணிசைபாடி வழிபடும் திருமணஞ்சேரியை அடைந்து வாழ்பவன். அவனை அடையவல்லார்க்கு அல்லல் இல்லை.


பாடல் எண் : 05
எறியார் பூங்கொன்றையினோடும் இளமத்தம் 
வெறியாரும் செஞ்சடையார மிலைந்தானை
மறியாரும் கையுடையானை மணஞ்சேரிச் 
செறிவானை செப்ப வல்லார்க்கு இடர் சேராவே.

பொருளுரை:
ஒளிபொருந்திய கொன்றைமலர்களோடு புதிய ஊமத்தம் மலர்களை மணம் கமழும் தன் செஞ்சடை மீது பொருந்தச் சூடியவன். மான் கன்றை ஏந்திய கையினன். திருமணஞ்சேரியில் செறிந்து உறைபவன். அவனைப் புகழ்ந்து போற்ற வல்லவர்களை இடர்கள் அடையா.


பாடல் எண் : 06
மொழியானை முன்னொரு நான்மறை ஆறு அங்கம் 
பழியாமைப் பண்ணிசையான பகர்வானை
வழியானை வானவர் ஏத்தும் மணஞ்சேரி 
இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும் இன்பமே.

பொருளுரை:
முற்காலத்தே நான்மறைகளையும், ஆறு அங்கங்களையும் அருளியவன். அவற்றைப் பண்ணிசையோடு பிறர் பழியாதவாறு பகர்பவன். வேதாகம விதிகளைப் பின்பற்றி, வானவர்கள் வந்து துதிக்குமாறு திருமணஞ்சேரியில் விளங்குபவன். அத்தலத்தை இகழாமல் போற்ற வல்லவர்க்கு இன்பம் உளதாம்.


பாடல் எண் : 07
எண்ணானை எண்ணமர் சீர் இமையோர்கட்குக் 
கண்ணானை கண்ணொரு மூன்றும் உடையானை
மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப் 
பெண்ணானை பேச நின்றார் பெரியோர்களே.

பொருளுரை:
யாவராலும் மனத்தால் எண்ணி அறியப்படாதவன். தம் உள்ளத்தே வைத்துப் போற்றும் புகழ்மிக்க சிவஞானிகட்குக் கண் போன்றவன். மூன்று கண்கள் உடையவன். அட்டமூர்த்தங்களில் மண் வடிவானவன். சிறந்த வயல்களால் சூழப்பட்ட திருமணஞ்சேரியில் உமையம்மையோடு கூடியவனாய் விளங்கும் அவ்விறைவன் புகழைப்பேசுவோர் பெரியோர் ஆவர்.


பாடல் எண் : 08
எடுத்தானை எழில் முடி எட்டும் இரண்டுந்தோள்
கெடுத்தானைக் கேடிலாச் செம்மை உடையானை
மடுத்தார வண்டிசை பாடும் மணஞ்சேரி 
பிடித்தாரப் பேண வல்லார் பெரியோர்களே.

பொருளுரை:
கயிலை மலையைப் பெயர்த்து எடுத்த இராவணனின் அழகிய பத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் அடர்த்தவன். மாறுபாடற்ற செம்மை நிலையை உடையவன். வண்டுகள் தேனை மடுத்து உண்ணுதற்கு இசைபாடிச் சூழும் திருமணஞ்சேரியில் உறையும் அவ்விறைவன் திருவடிகளைப் பற்றுக்கோடாகக் கொள்வார் பெரியார்கள்.


பாடல் எண் : 09
சொல்லானைத் தோற்றம் கண்டானும் நெடுமாலும்
கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்க
வல்லார் நன்மாதவர் ஏத்தும் மணஞ்சேரி 
எல்லாமாம் எம்பெருமான் கழல் ஏத்துமே.

பொருளுரை:
வேதாகமங்களைச் சொல்லியவன். உலகைப் படைக்கும் நான்முகன் திருமால் ஆகியோர்களாற் கற்றுணரப்படாத பெருமையன். தாம் அறிந்தவற்றைச் சொல்லித் தொழுது உயர்வுறும் அன்பர்களும் பெரிய தவத்தினை உடையவர்களும் தொழுது வணங்கும் திருமணஞ்சேரியில் உலகப் பொருள்கள் எல்லாமாக வீற்றிருக்கும் அப்பெருமான் திருவடிகளை ஏத்துவோம்.


பாடல் எண் : 10
சற்றேயும் தாம் அறிவில் சமண் சாக்கியர் 
சொற்றேயும் வண்ணமொர் செம்மை உடையானை
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி 
பற்றாக வாழ்பவர் மேல் வினை பற்றாவே.

பொருளுரை:
சிறிதேனும் தாமாக அறியும் அறிவு இல்லாத சமண புத்தர்களின் உரைகள் பொருளற்றனவாய் ஒழியும் வண்ணம் ஒப்பற்ற செம்பொருளாய் விளங்கும் சிவபெருமானை வற்றாத நீர் நிலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரியை அடைந்து வழிபட்டு அவனையே பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்பவர்களை வினைகள் பற்றா.


பாடல் எண் : 11
கண்ணாரும் காழியர்கோன் கருத்தார்வித்த
தண்ணார் சீர் ஞானசம்பந்தன் தமிழ் மாலை
மண்ணாரும் மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
பண்ணாரப் பாடவல்லார்க்கு இல்லை பாவமே.

பொருளுரை:
கண்களுக்கு விருந்தாய் அமையும் சீகாழிப்பதியில் விளங்கும் சிவபிரானின் திருவுள்ளத்தை நிறைவித்த இனிய புகழ்பொருந்திய ஞானசம்பந்தன் பாடிய இத்தமிழ்மாலையை, வளம் நிறைந்த மண்சேர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருமணஞ்சேரியை அடைந்து பண் பொருந்தப்பாடிப் போற்றுவார்க்குப் பாவம் இல்லை.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

1 கருத்து: