ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

கந்தர் அலங்காரம் 81 - 90

ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்



பாடல் எண் : 81
தாரா கணம் எனும் தாய்மார் அறுவர் தரும் முலைப்பால்
ஆராது உமை முலைப்பால் உண்ட பாலன் அரையில் கட்டும்
சீராவும் கையில் சிறுவாளும் வேலும் என் சிந்தையவே
வாராது அகல் அந்தகா வந்தபோது உயிர் வாங்குவனே.

பொருளுரை‬: 
நட்சத்திரக் கூட்டம் என்கின்ற செவிலித் தாய்கள் ஆறு பேரும் தந்த முலைப் பாலையுண்டது போதாமல் உமாதேவியாரின் திருமுலைப் பாலையும் உண்டருளிய பாலகனாகிய திருமுருகப்பெருமானின் திருவரையில் கட்டிக் கொள்ளும் உடைவாளும், திருக்கரத்தில் ஏந்தியுள்ள சிறுவாளும் வேலாயுதமும் அடியேனின் சிந்தையில் குடி கொண்டிருக்கின்றன; ஆதலால், இயமனே, என்னிடம் வாராது நீங்கிப் போவாயாக; மீறி வந்தால் உன் உயிரை வாங்கிவிடுவேன்.


பாடல் எண் : 82
தகட்டில் சிவந்த கடம்பையும் நெஞ்சையும் தாளிணைக்கே
புகட்டிப் பணியப் பணித்து அருளாய் புண்டரீகன் அண்ட
முகட்டைப் பிளந்து வளர்ந்து இந்திரலோகத்தை முட்ட வெட்டிப்
பகட்டில் பொருதிட்ட நிட்டூர சூர பயங்கரனே.

பொருளுரை‬: 
இலைகளோடு கூடிய சிவந்த நிறமுள்ள கடப்ப மலர்களாலான மாலையையும் அடியேனின் மனத்தையும் தேவரீருடைய இரு திருவடிகளிலேயே சேர்த்து வைத்து வணங்குமாறு அடியேனுக்குக் கட்டளையிட்டு அருள்வீராக! தாமரை மலர் மீது வீற்றிருக்கும் பிரம்ம தேவனது உலகத்தின் வாயிலைப் பிளந்து அதுவரை ஓங்கி நின்ற அமராவதியாகிய இந்திரலோகத்தை முட்டும்படி எட்டிச்சென்று ஆண் யானைபோல் போர்புரிந்த கொடூரமான குணமுடைய சூரபன்மனுக்கு பயங்கரமானவரே. 


பாடல் எண் : 83
தேங்கிய அண்டத்து இமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே
பூங்கழல் கட்டும் பெருமாள் கலாபப் புரவிமிசை
தாங்கி நடப்ப முறிந்தது சூரன் தளம் தனிவேல்
வாங்கி அனுப்பிடக் குன்றங்கள் எட்டும் வழிவிட்டவே.

பொருளுரை‬: 
தேவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கும் பொருட்டு, தனது சிறிய திருவடிகளுக்கே அழகான வீரக் கழலை அணிந்து கொண்ட திருமுருகப்பெருமான், குதிரையையொத்த தோகையையுடைய மயிலின் மீது ஏறி நடந்ததும் சூரபன்மனின் சேனை முறிபட்டது; ஒப்பற்ற வேலாயுதத்தை எடுத்து ஏவிய உடனே குலமலைகள் எட்டும் விலகி வழிவிட்டன.


பாடல் எண் : 84
மைவரும் கண்டத்தர் மைந்த கந்தா என்று வாழ்த்தும் இந்தக்
கைவரும் தொண்டு அன்றி மற்று அறியேன் கற்ற கல்வியும் போய்ப்
பைவரும் கேளும் பதியும் கதறப் பழகி நிற்கும்
ஐவரும் கைவிட்டு மெய்விடும் போது உன் அடைக்கலமே. 

பொருளுரை‬: 
ஆலகால விடத்தை உண்டதனால் கரிய நீல நிறமாகிய கழுத்தை உடைய சிவபெருமானது திருமைந்தராகிய "கந்தப்பெருமானே" என்று துதித்து வாழ்த்துகின்ற இந்தப் பழக்கத்திற்கு வந்த தொண்டினை அல்லாமல் வேறு ஒன்றையும் அறிந்தேனில்லை. அடியேன் கற்ற கல்வியும் நீங்கி, துன்பமுறும் சுற்றத்தினரும் ஊராரும் ஓலமிட்டு அழ, அடியேன் நன்றாகப் பழகியுள்ள ஐம்பொறிகளும் என்னைக் கைவிட்டுச் செல்ல, அடியேன் உயிரும் உடலை விட்டுப் போகும் காலத்து தேவரீரின் அடைக்கலமே ஆவேன். 


பாடல் எண் : 85
காட்டில் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின்
வீட்டில் புகுதன் மிக எளிதே விழி நாசிவைத்து
மூட்டிக் கபால மூலாதார நேரண்ட மூச்சை உள்ளே
ஓட்டிப் பிடித்து எங்கும் ஒடாமல் சாதிக்கும் யோகிகளே.

பொருளுரை‬: 
காட்டில் வாழும் குறவர் மடந்தையாகிய வள்ளியம்மையாரின் தலைவராகிய திருமுருகப்பெருமானின் திருவடிகளின் மீது உள்ளத்தைச் செலுத்தினால் முக்தி உலகிற்கு செல்லுதல் மிகவும் எளிதான செயலாகும், அவ்வாறு செய்யாமல் கண் பார்வையை மூக்கின் நுனியில் வைத்து, கபாலத்திற்கும் மூலாதாரத்திற்கும் நேரே பொருந்துமாறு சுவாசத்தை இழுத்து அப்பிராணவாயு வேறு எங்கும் போய் விடாமல் பிடித்து வைக்கும் சாதனையைப் புரியும் யோகிகளே.


பாடல் எண் : 86
வேலாயுதன் சங்கு சக்கராயுதன் விரிஞ்சன் அறியாச்
சூலாயுதன் தந்த கந்தச்சுவாமி சுடர்க்குடுமிக்
காலயுதக் கொடியோன் அருளாய கவசம் உண்டு என்
பாலயுதம் வருமோ யமனோடு பகைக்கினுமே.

பொருளுரை‬: 
வேலாயுதத்தை உடைய கந்தப்பெருமான், சங்கையும் சக்கராயுத்தையும் ஆயுதமாகக் கொண்டுள்ள திருமாலும் பிரம்ம தேவனும் அறிந்து கொள்ள முடியாத திரிசூலத்தை உடைய சிவபெருமான் பெற்றருளிய திருமைந்தர் ஆவார். ஒளிவீசும் உச்சிக் கொண்டையையும் ஆயுதமாகப் பயன்படுகின்ற காலையும் உடைய சேவலைக் கொடியாகக்கொண்ட கந்தப்பெருமானது திருவருளாகிய கவசம் அடியேனின் உடலில் இருக்கின்றது. ஆதலால் இயமனோடு பகைத்தாலும் என்னிடத்தில் அவனுடைய ஆயுதம் வருமோ.


பாடல் எண் : 87
குமரா சரணம் சரணம் என்று அண்டர் குழாம் துதிக்கும்
அமராவதியில் பெருமாள் திருமுகம் ஆறுங் கண்ட
தமராகி வைகும் தனியான ஞான தபோதனர்க்கு இங்கு
எமராசன் விட்ட கடையேடு வந்து இனி என் செயுமே.

பொருளுரை‬: 
குமரப்பெருமானே! தேவரீரின் திருவடிகளில் சரணம், சரணம் அடைக்கலம் என்று கூறியவாறு தேவர் குழுக்கள் துதிசெய்கின்ற அமராவதி என்னும் தேவருலகில் எழுந்தருளியுள்ள திருமுருகப்பெருமானின் மேன்மை பொருந்திய திருமுகங்கள் ஆறையும் தரிசித்துப் பக்தித் தமராகி இனிது வாழ்கின்ற ஒப்பற்ற ஞானம் வாய்க்கப்பெற்ற தவச் செல்வர்களுக்கு இயமன் எழுதியனுப்பும் இறுதிக் கால ஓலையானது இங்கு வந்து அவர்களை இனிமேல் என்ன செய்ய முடியும்.


பாடல் எண் : 88
வணங்கித் துதிக்க அறியா மனிதருடன் இணங்கிக்
குணங்கெட்ட துட்டனை ஈடேற்றுவாய் கொடியும் கழுகும்
பிணங்கத் துணங்கை அலகை கொண்டாடப் பிசிதர்தம் வாய்
நிணங்கக்க விக்கிரம வேலாயுதம் தொட்ட நிர்மலனே.

பொருளுரை‬: 
தேவரீரின் திருவடிகளைப் பணிந்து திருப்புகழைப் பாடிப் பரவுவதற்கு அறியாத மனிதர்களோடு சேர்ந்து நற்குணம் அற்றுப் போன தீயவனாகிய அடியேனைக் கடைத் தேறச்செய்து அருள்புரிவீராக! போர்க்களத்தில் காக்கைகளும் கழுகுகளும் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்ளவும் பேய்கள் துணங்கைக் கூத்தினை மகிழ்ந்து ஆடவும், அரக்கர்கள் தம் வாயிலிருந்து கொழுப்பினை உமிழவும் வீரம் பொருந்திய வேலாயுதத்தை அவர்கள் மீது விடுத்து அருளிய நிர்மலனே.


பாடல் எண் : 89
பங்கேருகன் எனைப் பட்டு ஓலையில் இட பண்டுதளை
தங்காலில் இட்டது அறிந்திலனோ தனிவேல் எடுத்துப்
பொங்கோதம் வாய்விடப் பொன்னம் சிலம்பு புலம்ப வரும்
எங்கோன் அறியின் இனி நான்முகனுக்கு இரு விலங்கே.

பொருளுரை‬: 
தாமரை மலரில் வாழும் பிரம்ம தேவன் அடியேனைத் தனது விதியேட்டில் எழுத முற்காலத்தில் தமது காலில் விலங்கு பூட்டியதை அறியானோ? ஒப்பற்ற வேலாயுதத்தை எடுத்துப் பொங்கும்படியான கடலானது வாய் விட்டு அலறவும் பொன்னுருவான கிரௌஞ்சமலை கதறவும் வருகின்ற எமது இறைவனாகிய திருமுருகப்பெருமான் அறிவாராயின் இனிமேல் நான்கு முகங்களுடைய பிரம்ம தேவனுக்கு இரண்டு விலங்குகள் பூட்டப்படும்.


பாடல் எண் : 90
மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில்
சேலார் வயல் பொழில் செங்கோடனைச் சென்று கண்டு தொழ
நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே.

பொருளுரை‬: 
திருமாலின் திருமருகரை, கனகசபையில் திருநடனம்புரியும் சிவபெருமானின் திருப்புதல்வரை, தேவர்களுக்கும் உயர்வான தேவ தேவரை உண்மை அறிவின் வடிவாகிய முழுமுதற்கடவுளை, இவ்வுலகில் கெண்டை மீன்கள் நிறைந்த வயல்களும் சோலைகளும் சூழ்ந்த திருச்செங்கோட்டில் எழுந்தருளியிருக்கும் திருமுருகப்பெருமானை அவருடைய திருக்கோயிலுக்குச் சென்று கண்குளிரக் கண்டு வணங்கும் பொருட்டு அந்தப் பிரம்ம தேவன் அடியேனுக்கு நாலாயிரம் கண்களைப் படைக்கவில்லையே.

தொடரும் பாடல்களும் விளக்கமும் அடுத்த பதிவில்..........!


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக