வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

கந்தர் அலங்காரம் 11 - 20

ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்



பாடல் எண் : 11
குசை நெகிழா வெற்றி வேலோன் அவுணர் குடர் குழம்பக்
கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின் கொத்து
அசைபடு கால்பட்டு அசைந்தது மேரு அடியிட எண்
திசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர்பட்டதே.

பொருளுரை‬: 
கடிவாளமானது தளராது பிடித்தவாறு வெற்றியை உடைய வேலினை ஏந்திய திருமுருகப்பெருமான், அசுரர்களின் குடல்கள் கலங்குமாறு, சவுக்கினால் அடித்து விரட்டபட்ட குதிரையின் வேகத்திலும் மிக்க வேகத்தைக் கொண்ட மயில் வாகனத்தின் தோகையின் தொகுதி அசைதலினால் உண்டாகின்ற காற்று பட்டு மகாமேரு மலை அசைவுபட்டது. அந்த மயில் அடி எடுத்துவைக்க எட்டுத்திசைகளிலும் உள்ள மலைகள் துகள்பட்டு அழிந்தன. அந்தத் துகளினால் கடலானது மேடாகிவிட்டது. 


பாடல் எண் : 12
படைபட்ட வேலவன்பால் வந்த வாகைப் பதாகை என்னும்
தடைபட்ட சேவல் சிறகடிக்கொள்ளச் சலதி கிழிந்து
உடைபட்டது அண்ட கடாகம் உதிர்ந்தது உடுபடலம்
இடைப்பட்ட குன்றமும் மாமேரு வெற்பும் இடிபட்டவே.

பொருளுரை‬: 
வேலாயுதத்தைத் தாங்கியுள்ள திருமுருகப்பெருமான்பால் வந்து அருள்வயப்பட்டு வலிமை அடங்கிய சேவலானது வெற்றியைத் தெரிவிக்கும் கொடியில் ஒரு சின்னமாக இடம்பெற்றது. அந்தச் சேவலானது தன் சிறகை அடித்துக் கொண்டபோது கடலானது கிழிபட்டு உடைந்து போயிற்று; அண்டத்தின் முகடுகள் இடிந்து உதிர்ந்தன; நட்சத்திரக் கூட்டங்கள் தடுமாற்றம் அடைந்தன. ஏனைய மலைகளும் மகாமேரு மலையும் தூள்பட்டு இடிந்துவிட்டன. 


பாடல் எண் : 13
ஒருவரைப் பங்கில் உடையாள் குமாரனுடை மணிசேர்
திருவரைக் கிண்கிணி ஓசைபடத் திடுக்கிட்டு அரக்கர்
வெருவரத் திக்குச் செவிடுபட்டு எட்டு வெற்பும் கனகப்
பருவரைக் குன்றும் அதிர்ந்தன தேவர் பயம் கெட்டதே.

பொருளுரை‬: 
தனிப்பெருந்தலைவராகிய சிவபெருமானைத் தமது வலப்பக்கத்தில் உடையவராகிய உமாதேவியாரது திருப்புதல்வராகிய திருமுருகப்பெருமானின் உடைக்குமேல் கட்டும் மணிகள் பொருந்திய அழகிய இடையில் விளங்குகின்ற கிண்கிணியின் ஒலிபட்ட மாத்திரத்தில் அசுரர்கள் துணுக்குற்று அஞ்சி நடுங்கவும், எட்டுத்திசையில் உள்ளவர்களும் செவிடாகவும், குலமலைகள் எட்டும் பெரிய பொன்மலையாகிய மேருமலையும் அடிபெயர்ந்து அதிர்ந்துபோயின. தேவர்களுக்கு அசுரர்களால் ஏற்பட்ட பயமும் அழிந்துவிட்டது.


பாடல் எண் : 14
குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில் கொட்படைந்த
இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய் இருநான்கு வெற்பும்
அப்பாதியாய் விழ மேரும் குலுங்க விண்ணாரும் உய்யச்
சப்பாணி கொட்டிய கை ஆறு இரண்டு உடைச் சண்முகனே. 

பொருளுரை‬: 
மண்ணுலக மாய வாழ்க்கை இதுவே நிலைபெறுடையது என்று களித்துக் கூத்தாடும் ஐம்புலன்களினால் சுழற்சியுற்ற இத்தகைய பாசத்தோடு கூடிய மனத்தையுடைய அடியேனை திருவருள் நெறி காட்டி உய்யும்படிச் செய்வீராக; எட்டு குலமலைகளும் சரிபாதிகளாய்ப் பிளந்து விழவும் மேருமலையும் நிலைகுலைந்து குலுங்கவும் தேவர்கள் சிறை நீங்கி பிழைக்கவும் சப்பாணி கொட்டிய பன்னிரண்டு திருக்கரங்களையுடைய ஆறுமுகப்பெருமானே.


பாடல் எண் : 15
தாவடி ஓட்டு மயிலும் தேவர் தலையிலும் என்
பாவடி ஏட்டிலும் பட்டது அன்றோ படி மாவலிபால்
மூவடி கேட்டு அன்று மூதண்டம் கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன் தன் சிற்றடியே. 

பொருளுரை‬: 
பிரயாணத்திற்கென்று செலுத்துகின்ற மயில் வாகனத்தின் மீதும் தேவர்களின் தலையின் மீதும் தேவரீரின் திருவருள் துணைகொண்டு அடியேன் பாடிய பாடல்களின் அடிகளையுடைய ஏட்டின் மீதும் பட்டது அன்றோ, மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி பூமியை யாசித்துப் பெரிய அண்ட கூடத்தின் உச்சியில் முட்டும்படி சிவந்த திருவடியை நீட்டி அளந்த பெருமையை உடைய திருமாலின் மருகராகிய திருமுருகப்பெருமானது சிறிய திருவடி?.


பாடல் எண் : 16
தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்றும்
இடுங்கோள் இருந்தபடி இருங்கோள் எழு பாரும் உய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றம் திறக்கத் தொளைக்க வைவேல்
விடுங் கோன் அருள் வந்து தானே உமக்கு வெளிப்படுமே.

பொருளுரை‬: 
மனத்தை ஐம்புலன்களின் வழியே செல்ல விடாமல் தடைசெய்யுங்கள்; கோபத்தை அறவே விட்டுவிடுங்கள்; எப்போதும் ஏழைகளுக்குத் தானம் கொடுத்துக் கொண்டிருங்கள்; இருந்தபடியே அசைவற்றுப் பேசாமல் இருங்கள். இவ்வாறு செய்வீர்களானால் ஏழு உலகங்களும் பிழைக்குமாறு கொடிய கோபத்துடன் கூடிய சூரபன்மனுடன் கிரௌஞ்ச மலையையும் பிளந்து துகள்பட்டு அழியும்படி கூர்மையான வேலினை விடுத்து அருளிய தனிப் பெருந்தலைவராகிய திருமுருகப்பெருமானது திருவருளானது தானாகவே வந்து வெளிப்பட்டு உங்களை ஆட்கொள்ளும். 


பாடல் எண் : 17
வேத ஆகம சித்ர வேலாயுதன் வெட்சி பூத்த தண்டைப்
பாத அரவிந்தம் அரணாக அல்லும் பகலும் இல்லாச்
சூதானது அற்ற வெளிக்கே ஒளித்துச் சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே தெரியாத ஒரு பூதருக்குமே.

பொருளுரை‬: 
வேதங்களும் ஆகமங்களும் துதிக்கின்ற அழகிய வேற்படையையுடைய திருமுருகப்பெருமானின் வெட்சி மலரால் ஆகிய மாலை மலர்ந்துள்ளதும் தண்டை என்னும் அணிகலனை உடையதுமாகிய செந்தாமரை மலர் போன்ற திருவடிகளைக் காவலாகக்கொண்டு, வேறு ஒருவருக்கும் தெரியாத நல்ல நெறியாகிய, இரவும்-பகலும், மறத்தலும்-நினைத்தலும் வஞ்சகமும் அற்ற பரவெளியில் மறைந்து பேசாது சும்மா இருக்கும் அநுபூதி நிலையில் நிலைத்து நிற்கும் பொருட்டு இனியாவது வருவாயாக மனமே.


பாடல் எண் : 18
வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கு என்றும்
நொய்யின் பிளவு அளவேனும் பகிர்மின்கள் நுங்கட்கு இங்ஙன்
வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல்
கையில் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே.

பொருளுரை‬: 
கூர்மையான ஒளிவீசும் அழகான வேலையுடைய திருமுருகப்பெருமானைத் துதித்து ஏழைகளுக்கு எப்போதும் நொய்யில் பாதி அளவாவாயினும் பங்கிட்டுக் கொடுங்கள். உங்களுக்கு இவ்விடத்து வெய்யிலுக்கு ஒதுங்கி நிற்க உதவாத இந்த உடலின் பயனற்ற நிழலைப் போல மரண காலத்தில் ஆன்மா புறப்பட்டுச் செல்லும் இறுதி வழிக்கு உங்கள் கையிலுள்ள பொருளும் துணை செய்யமாட்டாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். 


பாடல் எண் : 19
சொன்ன கிரௌஞ்சகிரி ஊடுருவ தொளைத்த வைவேல்
மன்ன கடம்பின் மலர்மாலை மார்ப மௌனத்தை உற்று
நின்னை உணர்ந்து உணர்ந்து எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண்டு
என்னை மறந்து இருந்தேன் இறந்தேவிட்டது இவ்வுடம்பே. 

பொருளுரை‬: 
பொன்னிறமான கிரௌஞ்ச மலையை ஊடுருவித் தொளைசெய்த கூர்மையான வேலினைத் தாங்கிய மன்னரே, கடம்ப மரத்தில் மலர்கின்ற நறுமண மலர் மாலையைச் சூடிக்கொண்டுள்ள திருமார்பினை உடையவரே, ஞானத்திற்கெல்லாம் எல்லையாக விளங்கும் மௌன நிலையை அடைந்து தேவரீரை மெய்யறிவால் அறிந்து அறிந்து, எல்லா கரணங்களும் முக்குணங்களும் நீங்கப்பெற்ற நிர்க்குண நிலையை அடைந்து ஜீவனாகிய அடியேனையும் மறந்து உம்மை நினைந்து நிலைத்து இருந்தேன்; இந்த உடம்பு முற்றிலும் அழிந்தே போய்விட்டது.


பாடல் எண் : 20
கோழிக் கொடியன் அடிபணியாமல் குவலயத்தே
வாழக் கருதும் மதியிலிகாள் உங்கள் வல்வினைநோய்
ஊழின் பெருவலி உண்ண ஒட்டாது உங்கள் அத்தம் எல்லாம்
ஆழப் புதைத்து வைத்தால் வருமோ நும் அடிப் பிறகே.

பொருளுரை‬: 
சேவலைக் கொடியாக உடைய திருமுருகப்பெருமானது திருவடிகளை வணங்காமல் இவ்வுலகில் வாழ்வதற்கு நினைக்கின்ற அறிவில்லாதவர்களே! உங்களுடைய வலிய தீவினையால் உண்டாகும் நோயாகிய ஊழினது பெரிய வலிமையானது செல்வத்தை அனுபவிக்க விடுவதில்லை. உங்களுடைய செல்வம் முழுவதையும் மண்ணில் ஆழமான குழியில் புதைத்து வைத்தீர்களாயினும் உங்கள் உயிர் உடலை விட்டு நீங்கும்போது அந்தச் செல்வம் உங்கள் காலடியைப் பின்தொடர்ந்து வருமோ?.


தொடரும் பாடல்களும் விளக்கமும் அடுத்த பதிவில்..........!


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக