புதன், 17 ஆகஸ்ட், 2016

கண்ணுதலோன் கண் அளித்தான் - திருக்கச்சியேகம்பம்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ ஏகாம்பரநாதர், ஸ்ரீ தழுவக்குழைந்த நாதர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ ஏலவார்குழலி, ஸ்ரீ காமாட்சியம்மை

திருமுறை : ஏழாம் திருமுறை 061 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்

கண்களில்(இடக்கண்) உள்ள கோளாறு நீங்குவதற்கும் பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும் ஓதவேண்டிய திருப்பதிகம்.


வன்தொண்டராம் சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மகிழ மரத்தடியில் "உன்னைப் பிரியேன்" என்று சத்தியம் செய்து கொடுத்து திருமணம் செய்து கொண்டார். சிவபெருமானை சாட்சியாக வைத்து திருமணம் செய்து கொண்டு பின் திருவாரூர் செல்வதற்காக சங்கிலி நாச்சியாரைப் பிரிந்து திருவொற்றியூரில் இருந்து சத்தியத்தை மீறி புறப்பட்டதால் சுந்தரர் தனது இரு கண் பார்வையும் இழந்தார். அப்படி பார்வை இழந்த கண்களில் இடக்கண் பார்வையை சுந்தரர் காஞ்சீபுரம் தலத்தில் பதிகம் பாடி பெற்றார். பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "காணக் கண் அடியேன் பெற்றவாறே" என்று உள்ளம் உருகிப் பாடியுள்ளார். நல்ல தமிழ்ப் பாடலாகிய இக்கதிகத்திலுள்ள 10 பாடலகளையும் பாட வல்லவர் நன்னெறியால் பெறும் உலகத்தைத் திண்ணமாக அடைவர் என்றும் குறிப்பிடுகிறார்.

ஒருமுறை பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடிவிட்டார். இதன் காரணமாக எல்லா உலகங்களும் இருளில் மூழ்கின. உடனே சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து இருள் அகற்றினார். அம்பிகை விளையாட்டாக கண்களை மூடினாலும் அதனால் எல்லா ஜீவராசிகளுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்காக பூவுலகிற்குச் சென்று பிராயச்சித்தமாக தன்னை நோக்கி தவம் இயற்றுமாறு அம்பிகையைப் பணித்தார். அம்பிகையும் இந்த பூவுலகிற்கு வந்து புனித தலமான இந்த காஞ்சீபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கிப் பூஜித்து வந்தார். அம்பிகை பார்வதியின் தவப் பெருமையை உலகிற்கு உணர்த்த சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படி செய்தார். 

வெள்ளத்தில் மணல் லிங்கம் அடித்துச் செல்லாதபடி அம்பிகை லிங்கத்தை தழுவி கட்டிக்கொண்டார். அவ்வாறு உமையம்மை தழுவிய போது இறைவன் தன் திருமேனியில் அம்பிகையின் வளைத் தழும்பும் முலைச் சுவடும் ஏற்றுத் தழுவக் குழைந்தார். இவ்வாறு இறைவி இறைவனை வழிபட்ட இந்த வரலாறு திருக் குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்திலும், காஞ்சிப் புராணத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் இறைவனுக்குத் தழுவக் குழைந்த நாதர் என்றும் பெயர். இவ்வாறு அம்பிகை இறைவனைக் கட்டி தழுவிக் கொண்டதை சுந்தரர் தனது பதிகத்தில் (71வது பதிகம் - 10வது பாடல்) அழகாக குறிப்பிடுகிறார்.

பாடல் எண் : 01
ஆலந்தான் உகந்து அமுது செய்தானை 
ஆதியை அமரர் தொழுது ஏத்தும் 
சீலந்தான் பெரிதும் உடையானைச் 
சிந்திப்பார் அவர் சிந்தை உளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை 
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற 
கால காலனைக் கம்பன் எம்மானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பொருளுரை:
நஞ்சினைத் தான் விரும்பி உண்டு, அமுதத்தைத் தேவர்களுக்கு உரியதாக்கியவனும், யாவர்க்கும் முதல்வனும், தேவர்கள் வணங்கித் துதிக்கின்ற பெருமையை மிக உடையவனும், தன்னை நினைப்பவரது நினைவில் விளங்குபவனும், மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலையுடையவளாகிய "உமை" என்னும் நங்கை தான் எந்நாளும் துதித்து வழிபடுதலைப் பெற்றமைக்கு முதல்வனும், காலகாலனும் ஆகிய திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு வியப்பு!.


பாடல் எண் : 02
உற்றவர்க்கு உதவும் பெருமானை 
ஊர்வது ஒன்று உடையான் உம்பர் கோனைப்
பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னைப் 
பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை
அற்றமில் புகழாள் உமை நங்கை 
ஆதரித்து வழிபடப் பெற்ற 
கற்றை வார்சடைக் கம்பன் எம்மானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே

பொருளுரை:
தன்னைப் புகலிடமாக அடைந்தவர்க்கு நலம் செய்கின்ற பெருமானும், ஊர்தி எருதாகிய ஒன்றை உடையவனும், தேவர்கட்குத் தலைவனும், தன்னை விடாது பற்றினவர்க்கு, பெரிய பற்றுக் கோடாய் நிற்பவனும், தன்னை நினைப்பவரது மனத்தில் பரவி நின்று, அதனைத் தன் இடமாகக் கொண்டவனும் ஆகிய அழிவில்லாத புகழையுடையவளாகிய "உமை" என்னும் நங்கை விரும்பி வழிபடப் பெற்ற, கற்றையான நீண்ட சடையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு வியப்பு!.


பாடல் எண் : 03
திரியும் முப்புரம் தீப்பிழம்பாகச்
செங்கண் மால்விடைமேல் திகழ்வானைக் 
கரியின் ஈருரி போர்த்து உகந்தானைக் 
காமனைக் கனலா விழித்தானை
வரிகொள் வெள்வளையாள் உமை நங்கை 
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற 
பெரிய கம்பனை எங்கள் பிரானை 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பொருளுரை:
வானத்தில் திரிகின்ற முப்புரங்கள் தீப்பிழம்பாய் எரிந்தொழியுமாறு செய்து, அக்காலை சிவந்த கண்களையுடைய திருமாலாகிய விடையின்மேல் விளங்கியவனும், யானையின் உரித்த தோலை விரும்பிப் போர்த்தவனும், மன்மதனைத் தீயாய் எரியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்தவனும், வரிகளைக் கொண்ட வெள்ளிய வளைகளை அணிந்தவளாகிய "உமை" என்னும் நங்கை அணுகி நின்று, துதித்து வழிபடப் பெற்ற பெரியோனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள பெருமானைக் காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு வியப்பு!.


பாடல் எண் : 04
குண்டலம் திகழ் காதுடையானைக் 
கூற்று உதைத்த கொடுந்தொழிலானை
வண்டலம் பும்மலர்க் கொன்றையினானை 
வாளராமதி சேர் சடையானைக்
கெண்டையந் தடங்கண் உமை நங்கை 
கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற 
கண்டம் நஞ்சுடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பொருளுரை:
குண்டலம் விளங்குகின்ற காதினையுடையவனும், கூற்றுவனை உதைத்துக் கொன்ற கொடுமையான தொழிலை உடையவனும், வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனும், கொலைத் தொழிலையுடைய பாம்பு பிறையைச் சேர்ந்து வாழும் சடையை உடையவனும் ஆகிய, கெண்டைமீன் போலும் பெரிய கண்களையுடைய "உமை" என்னும் நங்கை அணுகி நின்று, துதித்து வழிபடப் பெற்ற, கண்டத்தில் நஞ்சினையுடைய திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு வியப்பு!.


பாடல் எண் : 05
வெல்லும் வெண்மழு ஒன்று உடையானை 
வேலை நஞ்சு உண்ட வித்தகன் தன்னை
அல்லல் தீர்த்து அருள்செய்ய வல்லானை 
அருமறை அவை அங்கம் வல்லானை
எல்லையில் புகழாள் உமை நங்கை 
என்று ஏத்தி வழிபடப் பெற்ற 
நல்ல கம்பனை எங்கள் பிரானை 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பொருளுரை:
யாவரையும் வெல்லும் தன்மையுடைய, வெள்ளிய மழு ஒன்றை உடையவனும், கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட சதுரப்பாடுடையவனும், அடியார்களுக்குத் துன்பங்களைப் போக்கி அருள்செய்ய வல்லவனும், அரிய வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் செய்ய வல்லவனும் ஆகிய, அளவற்ற புகழை உடையவளாகிய "உமை" என்னும் நங்கை எந்நாளும் துதித்து வழி படப்பெற்ற, நன்மையையுடைய திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு வியப்பு!.


பாடல் எண் : 06
திங்கள் தங்கிய சடை உடையானைத் 
தேவ தேவனைச் செழுங்கடல் வளரும் 
சங்க வெண்குழைக் காது உடையானைச் 
சாம வேதம் பெரிது உகப்பானை
மங்கை நங்கை மலைமகள் 
கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற 
கங்கையாளனைக் கம்பன் எம்மானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பொருளுரை:
பிறை தங்கியுள்ள சடையையுடையவனும், தேவர்க்குத் தேவனும், வளவிய கடலில் வளர்கின்ற சங்கினால் இயன்ற, வெள்ளிய குழையை அணிந்த காதினையுடையவனும், சாம வேதத்தை மிக விரும்புபவனும் ஆகிய, என்றும் மங்கைப் பருவம் உடைய நங்கையாகிய மலைமகள் தவத்தாற் கண்டு அணுகி, துதித்து வழிபடப்பெற்ற, கங்கையை அணிந்த, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு, வியப்பு!.


பாடல் எண் : 07
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை 
வேதம் தான் விரித்து ஓத வல்லானை 
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை 
நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை 
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற 
கண்ணு மூன்றுடைக் கம்பன் எம்மானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பொருளுரை:
தேவர்கள் தொழுது துதிக்க இருப்பவனும், வேதங்களை விரித்துச் செய்ய வல்லவனும், தன்னை அடைந்தவர்கட்கு எந்நாளும் நலத்தையே செய்பவனும், நாள்தோறும் நாம் விரும்புகின்ற தலைவனும் ஆகிய, எண்ணில்லாத பழையவான புகழை உடையவளாகிய "உமை" என்னும் நங்கை எந்நாளும் துதித்து வழிபடப் பெற்ற, கண்களும் மூன்று உடைய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு, அடியேன் கண் பெற்றவாறு, வியப்பு!.


பாடல் எண் : 08
சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள் 
சிந்தையில் திகழும் சிவன் தன்னைப்
பந்தித்த வினைப்பற்று அறுப்பானைப் 
பாலொடு ஆனஞ்சும் ஆட்டு உகந்தானை
அந்தமில் புகழாள் உமை நங்கை 
ஆதரித்து வழிபடப் பெற்ற 
கந்த வார்சடைக் கம்பன் எம்மானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பொருளுரை:
நாள்தோறும் தன்னையே சிந்தித்து, துயிலெழுங் காலத்துத் தன்னையே நினைத்து எழுவார்களது உள்ளத்தில் விளங்குகின்ற மங்கலப் பொருளானவனும், உயிர்களைப் பிணித்துள்ள வினைத் தொடக்கை அறுப்பவனும், பால் முதலிய ஆனஞ்சும் ஆடுதலை விரும்பியவனும் ஆகிய, முடிவில்லாத புகழையுடையவளாகிய "உமை" என்னும் நங்கை விரும்பி வழிபடப்பெற்ற, கொன்றை முதலிய பூக்களின் மணத்தையுடைய, நீண்ட சடையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு, வியப்பு!.


பாடல் எண் : 09
வரங்கள் பெற்று உழல் வாளரக்கர் தம் 
வாலிய புரமூன்று எரித்தானை
நிரம்பிய தக்கன் தன்பெரு வேள்வி 
நிரந்தரம் செய்த நிர்க்கண்டகனைப்
பரந்த தொல்புகழாள் உமை நங்கை 
பரவி ஏத்தி வழிபடப் பெற்ற 
கரங்கள் எட்டுடைக் கம்பன் எம்மானை 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பொருளுரை:
தவத்தின் பயனாகிய வரங்களைப் பெற்றமையால், வானத்தில் உலாவும் ஆற்றலைப் பெற்ற கொடிய அசுரர்களது வலிய அரண்கள் மூன்றினை எரித்தவனும், தேவர் எல்லாரும் நிரம்பிய தக்கனது பெருவேள்வியை அழித்த வன்கண்மையுடையவனும் ஆகிய பரவிய, பழைய புகழையுடையவளாகிய "உமை" என்னும் நங்கை முன்னிலையாகவும், படர்க்கையாகவும் துதித்து வழிபடப் பெற்ற, எட்டுக் கைகளையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு, வியப்பு!.


பாடல் எண் : 10
எள்கல் இன்றி இமையவர் கோனை 
ஈசனை வழிபாடு செய்வாள் போல் 
உள்ளத்து உள்கி உகந்து உமை நங்கை 
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளம் காட்டி வெருட்டிட அஞ்சி 
வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட 
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பொருளுரை:
தேவர் பெருமானாகிய சிவபெருமானை, அவனது ஒரு கூறாகிய உமாதேவி தானே தான் வழிபடவேண்டுவது இல்லை என்று இகழ்தல் செய்யாது வழிபட விரும்பி, ஏனை வழிபாடு செய்வாருள் ஒருத்தி போலவே நின்று, முன்னர் உள்ளத்துள்ளே நினைந்து செய்யும் வழிபாட்டினை முடித்து, பின்பு, புறத்தே வழிபடச் சென்று, அவ்வழிபாட்டில் தலைப்பட்டு நின்ற முறைமையைக் கண்டு, தான் அவ்விடத்துக் கம்பையாற்றின்கண் பெருவெள்ளத்தைத் தோற்றுவித்து வெருட்ட, வஞ்சிக்கொடி போல்பவளாகிய அவள் அஞ்சி ஓடித் தன்னைத் தழுவிக்கொள்ள, அதன்பின் அவள்முன் வெளிப்பட்டு நின்ற கள்வனாகிய, திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு, வியப்பு!.


பாடல் எண் : 11
பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானைப் 
பெரிய எம்பெருமான் என்று எப்போதும் 
கற்றவர் பரவப்படுவானைக் 
காணக் கண் அடியேன் பெற்றது என்று 
கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானைக் 
குளிர் பொழில் திருநாவல் ஆரூரன் 
நற்றமிழ்வை ஈரைந்தும் வல்லார் 
நன்நெறி உலகு எய்துவர் தாமே.

பொருளுரை:
குளிர்ந்த சோலைகளையுடைய திருநாவலூரனாகிய நம்பியாரூரன், ஆனேற்றை விரும்பி ஏற வல்லவனும், மெய்ந் நூல்களைக் கற்றவர்கள் "இவன் எம் பெரிய பெருமான்" என்று எப்போதும் மறவாது துதிக்கப்படுபவனும், யாவர்க்கும் தலைவனும், கூத்தாடுதலை உடையவனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன், கண் பெற்றவாறு வியப்பு என்று சொல்லிப் பாடிய நல்ல தமிழ்ப் பாடலாகிய இவை பத்தினையும் பாட வல்லவர். நன்னெறியாற் பெறும் உலகத்தைத் திண்ணமாக அடைவர்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக