சனி, 13 ஆகஸ்ட், 2016

கந்தர் அனுபூதி 21 - 30

ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதி



பாடல் எண் : 21
கருதா மறவா நெறிகாண எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா முருகா மயில் வாகனனே
விரதா சுர சூர விபாடணனே.

பொருளுரை‬: 
நினைவும் மறதியும் அற்ற ஆன்மிக நிலையைக் கண்டுகொள்ள அடியேனுக்குத் தேவரீரின் தாமரை மலர்களையொத்த இரு திருவடிகளை அருள்வதற்கென்று மனம் இரங்குவீராக! கேட்ட வரங்களை அளிக்கும் மூர்த்தியே! திருமுருகப்பெருமானே! மயில் வாகனக் கடவுளே! அருவருப்புக்குரிய அசுரனாகிய சூரபன்மனைத் தேவரீரின் வேலாயுதத்தால் பிளந்தவரே!.


பாடல் எண் : 22
காளைக் குமரேசன் எனக்கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி மேருவையே.

பொருளுரை‬: 
காளைப் பருவத்துக் குமாரமூர்த்தி என்று தியானித்து தேவரீரின் திருவடிகளைப் பணிபும் படியான தவப்பேற்றை அடியேன் அடைந்தது வியப்பானதொன்றே! தென்னம் பாளையைப் போன்ற நீண்ட கூந்தலை உடைய வள்ளியம்மையாரின் திருப்பாதங்களைப் போற்றும் தேவரீர், விண்ணோர்களுக்குத் தலைவராய் மேருமலை ஒத்த பெருமை உடையவராகத் திகழ்கின்றீர்!.


பாடல் எண் : 23
அடியைக் குறியாது அறியாமையினான்
மிடியக் கெடவோ முறையோ முறையோ
வடி விக்ரம வேல்மகிபா குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே.

பொருளுரை‬: 
தேவரீரின் திருவடிகளைத் குறித்துத் தியானிக்காமல் அடியேன் அறிவின்மையால் முழுதும் அழிந்துபடலாமோ? இது முறையோ? கூர்மையும் ஆற்றலும் உடைய வேலாயுதத்தை ஏந்தியவாறு உலகை ஆளும் மாமன்னரே, மின்னலையும் கொடியையும் ஒத்த குறவர் குல நங்கையாகிய வள்ளியம்மையாரைச் சேர்ந்த குணக்குன்று போன்றவரே!.


பாடல் எண் : 24
கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர்வேல் புரந்தர பூபதியே.

பொருளுரை‬: 
கூரிய வேல் போன்ற கண்களையுடைய மாதர்களின் கொங்கையிலே சேரும் விருப்பத்தை உடைய அடியேனின் மனம் தேவரீரின் திருவருள் கிடைக்கவேண்டும் என்று எண்ணும் நற்பேற்றினைப் பெறுமோ? மாமரமாகவும் கிரவுஞ்ச மலையாகவும் உருவெடுத்திருந்த அசுரன் சூரபன்மனை அழிப்பதற்கென்று அவற்றை வேரொடு தொளைத்து அழித்த பெரும் போர் செய்யவல்ல வேலாயுத்தை ஏந்தியவாறு உலகத்தைக் காக்கும் கடவுளே!.


பாடல் எண் : 25
மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ அடியேன் அலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதும்
செய்யோய் மயிலேறிய சேவகனே.

பொருளுரை‬: 
உண்மை வாழ்வென்று எண்ணி கொடிய வினைக்கு ஈடான இந்த வாழ்வில் களித்து மகிழ்ந்து, ஐயோ, அடியேன் அலைதல் முறையோ? தேவரீரின் திருக்கரங்கள் மட்டுமன்றி, கையில் ஏந்தும் வேலாயுதம், வீரக்கழல்கள் அணியப்பெற்ற திருவடிகள் ஆகியவை எல்லாம் செந்நிறமாய் அமைந்து, மயில் வாகனத்தின் மீது ஏறிய மாவீரரே!.


பாடல் எண் : 26
ஆதாரம் இலேன் அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்று நினைந்திலையே
வேதாகம ஞான விநோத மநோ
தீதா சுரலோக சிகாமணியே.

பொருளுரை‬: 
விண்ணுகத்தின் நாயகமணியே, ஒருதுணையும் இல்லாத அடியேன் தேவரீரின் திருவருளைப் பெறுமாறு சிறிதளவேனும் தேவரீர் எண்ணவில்லையே! வேதங்களாலும் ஆகமங்களாலும் போற்றப்படுபவரே! வேத முதல்வரே! வேதங்களைத் தொகுத்தவரே! ஆகமங்களை வகுத்தவரே! ஞான விநோத மூர்த்தியே! மனத்துக்கு எட்டாதவரே!.


பாடல் எண் : 27
மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கிதுவோ
பொன்னே மணியே பொருளே அருளே
மன்னே மயிலேறிய வானவனே.

பொருளுரை‬: 
மின்னலைப் போலத் தோன்றி உடனே மறையும் நிலையற்ற வாழ்வை விரும்பியவனாகிய அடியேன் இவ்வாறு இருப்பதற்குக் காரணம் அடியேனின் வினைப்பயன் தானோ? பொன்னே! மணியே! செல்வமே! முக்தியாகிய அருட்பேற்றினை அளிப்பவரே! உலகை ஆளும் மாமன்னரே! மயில் வாகனத்தில் ஏறிவரும் முழுமுதற் கடவுளே!.


பாடல் எண் : 28
ஆனா அமுதே அயில்வேல் அரசே
ஞானாகரனே நவிலத் தகுமோ
யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே.

பொருளுரை‬: 
இனிய அமுதமே! கூரிய வேலாயுதத்தை ஏந்திய மாமன்னரே! ஞானத்தின் இருப்பிடமே! "யான்" என்னும் ஆணவமுடைய அடியேனை தேவரீர் ஆட்கொண்டு அருளி எல்லாம் தானாகி நிலைத்திருக்கும் மேலான நிலையை இத்தன்மையது என்று விளக்கிக் கூறமுடியுமோ?.


பாடல் எண் : 29
இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லே புரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே.

பொருளுரை‬: 
இல்வாழ்க்கை என்னும் மாய வாழ்வில் அடியேனைச் சிக்கவைத்துள்ள தேவரீர் கொடியவனாகிய அடியேனது அறியாமையைப் பொறுத்து மன்னித்தருளவில்லையே! மற்போர் செய்வதற்குரிய பன்னிரண்டு தோள்களிலும் அடியேனின் சொற்களாலாகிய பாடல்களையே மாலைகளாக அணிந்துகொள்ளும் ஒளிவீசும் வேலாயுதரே!.


பாடல் எண் : 30
செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று
ஒவ்வாதது என உணர்வித்தது தான்
அவ்வாறு அறிவார் அறிகின்றதலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.

பொருளுரை‬: 
சிவந்த வானத்தின் உருவில் விளங்கும் வேலாயுதப் பெருமான் அன்று அடியேனுக்கு உபதேசித்தருளிய ஒப்பற்ற ஞான உபதேசத்தை ஒருவர் அறிந்து அனுபவிக்க முடியுமே தவிர, எங்ஙனம் மற்றொருவருக்குச் சொல்ல இயலும்?.


தொடரும் பாடல்களும் விளக்கமும் அடுத்த பதிவில்..........!


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக