வியாழன், 11 ஆகஸ்ட், 2016

கந்தர் அனுபூதி 01 - 10

ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதி 



முருகன் மீது தீராத பக்தி கொண்ட அருணகிரிநாதர் அவர் மீது அருளிச்செய்த பதிகம் கந்தர் அனுபூதி ஆகும். சித்தாந்தக் கருத்துகள் நிறைந்த இந்நூல் 51 விருத்தப்பாக்களால் ஆன சிறந்த பாராயண நூலாகும். பிள்ளையாரின் வணக்கத்துடன் "நெஞ்சக் கனகல்லும்" எனப் இப்பாடல் தொடங்குகிறது. இப்பாடல் முருகப் பெருமானைப் பற்றியும், வாழ்வை உவந்து நிற்கும் மக்களைப் பற்றியும், திருவருள் தோய்வும் பக்குவமும் பெறாத உயிரினங்களைப் பற்றியும் பாடும் பாடலாக அமைகின்றது. 

அனுபூதி என்னும் சொல்லினை அனு + பூதி என்று பிரிக்கலாம். "அனு" என்பது அனுபவம். "பூதி" என்பது புத்தி. இது (அறிவு). அறிவின் பூரிப்பு. அனுபவ அறிவின் பூரிப்பே அனுபூதி. இந்த நூல் முருகன் தனக்குக் குருவாய் வரவேணும் என வேண்டிக்கொள்ளும் பாடலோடு முடிகிறது. ஈதல் இந்த நூலில் வலியுறுத்தப்படுகிறது. பாசத் தளையில் கலங்கிய நிலை, மனம் அமைதி பெற்றுத் தவத்தில் ஒன்றிய நிலை, முருகன் திருவருள் பெற்ற ஞானநிலை, உபதேச நிலை என்னும் நான்கு பிரிவுகளில் பாடல்கள் அமைந்துள்ளன.

அருணகிரிநாதர் வாழ்க்கை வரலாறு பல திருப்புமுனைகளைக் கொண்டது. இவரது பாடல்களில் மிகுந்த கவிதை இன்பங்கள் நிறைய உண்டு. அதில் ஒன்று "முத்தைத் திரு பத்தித் திருநகை" எனத் தொடங்கும் பாடல், அருமையான பொருள் கொண்ட தமிழ்ப் பாடல். அவர் இயற்றிய திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம் ஆகியவை அவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்று. இவர் தமிழ்க் கடவுள் முருகனின் சீரிய பக்தர். இலங்கைத் தலங்களான யாழ்ப்பாணம், கதிர்காமம், திருகோணமலை, கந்தவனம் ஆகிய தலங்களைப் பற்றிப் பாடியுள்ளார்.


அருணகிரிநாதர், இளம்வயதில் மது, மாது என்று மனம் விட்டார் என்றும், நாத்திகனாக இருந்தார் என்றும் கூறுவர். ஆனால் பின்னாளில் இல்லறத்தை நல்லறமாக நடத்தியவர். உடல் நலமின்மையைத் தாங்க முடியாத அவர், திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் உள்ள கோபுரம் ஒன்றின் உச்சியில் இருந்து குதித்துத் தற்கொலைக்கு முயன்றபோது, முருகப் பெருமான் இவரைத் தம் திருக்கரங்களால் தாங்கி, உயிரைக் காத்தார் என்கிறது தலபுராணம். மேலும் சக்தி அளித்த வேலால் அருணகிரியார் நாவில் எழுதப் பிறந்தது கவிதைப் பிரவாகம். இவருக்கு முருகனின் தலங்களான வயலூர், விராலிமலை, சிதம்பரம், திருச்செந்தூர் ஆகிய தலங்களில் முருகன் காட்சி அளித்ததாகப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். இவரது வேண்டுகோளுக்கு இணங்கக் கம்பத்தில் அதாவது தூணில் முருகப் பெருமான் காட்சி அளித்ததாக ஐதீகம். அம்முருகப் பெருமான் கம்பத்து இளையனார் என்ற சிறப்பு பெயர் கொண்டு இன்றும் அத்தூணில் சிலாரூபமாகக் காட்சி அளிக்கிறார்.

கிளி உருவம் கொண்ட அருணகிரியார் விண்ணுலகம் சென்று அமிருத மலரான கற்பக மலர் கொய்து முருகனுக்கு அர்ச்சித்தார் என்பர். அவர் கிளி உருவமாக இருந்தபோதுதான், முருகனின் சிலாரூபத்தில் தோளில் அமர்ந்து கந்தர் அனுபூதி பாடியதாகச் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை மெய்ப்பிப்பது போலக் கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் பரம் குன்றம் ஏறி நின்று திருக்குமரா… என்கிறது கந்தரனுபூதிப் பாடல் வரிகள்.

|| --- --- --- விநாயகர் காப்பு --- --- --- ||



நெஞ்சம் கனகல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம்பணிவாம்.

பொருளுரை‬: 
"சரணம்" என்று தம்மை வந்தடைந்தவர்களுக்கு அருள்புரியும் ஆறுமுகக் கடவுளின் அணிகலனாகக் கல்போன்ற நெஞ்சமும் இளகி உருகுமாறு செம்மையான இலக்கியத் தமிழ்ச் சொற்களால் தொடுக்கப்பெற்ற கந்தரநுபூதி என்னும் கவிமாலையானது சிறப்பாக அமையும் பொருட்டு ஐந்து கரங்களையுடைய திருவிநாயகப்பெருமானின் திருவடிகளைப் பணிந்து வணங்குகின்றேன்.


பாடல் எண் : 01
ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே.

பொருளுரை‬: 
ஆடிவரும் குதிரையைப் போன்ற மயில் வாகனமே! வேலாயுதமே! அழகான சேவலே! என்று துதிசெய்து திருப்பாடல்களைப் பாடுவதையே அடியேனின் வாழ்நாட்பணியாக இருக்கும்படி அருள்புரிவீராக! "கஜமுகாசுரன்" எனப்படும் ஓர் அசுரன் பெரியதொரு யானையின் முகத்தையுடையவனாகத் தோன்றி விண்ணோர்களைப் பகைவர்களாகக் கருதி அவர்களைத் தேடிச்சென்றபோது, போர்க்களத்தில் அவனைக் கொன்றழித்த திருவிநாயகப்பெருமானின் சோதரனாகிய கந்தப்பெருமானே!.


பாடல் எண் : 02
உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுரபூபதியே.

பொருளுரை‬: 
திருமுருகப்பெருமானே! விண்ணோர்களின் மன்னரே! உள்ளக் களிப்பும் கலக்கமின்மையும் அற்று, பல்வகை யோக மார்க்க வழிகள் சம்பந்தமான பேச்சுக்களில் ஈடுபட்டு மகிழ்ச்சியைத் தருபவர் தேவரீர் ஒருவரே அன்றோ! எல்லாவிதமான பந்தங்களும், "யான்", "எனது" எனப்படும் ஆணவ மலங்கள் அழிந்து தொலைவதற்குரிய மேலான ஆன்மிக உபதேசங்களை அடியேனுக்கு உபதேசித்தருள்வீராக!.


பாடல் எண் : 03
வானோ புனல்பார் கனல் மாருதமோ
ஞானோ தயமோ நவில் நான்மறையோ
யானோ மனமோ எனையாண்ட இடம்
தானோ பொருளாவது சண்முகனே.

பொருளுரை‬: 
ஆறுமுகக் கடவுளே! "பரம்பொருள்" என்பது யாது? ஆகாயமோ? நீரோ? பூமியோ? நெருப்போ? காற்றோ? ஞானத்தினால் அறியக்கூடிய பொருளோ? ஓதப்படுகின்ற நான்கு வேதங்களோ? "நான்" என்று சொல்லப்படுகின்ற சீவனோ? மனமோ? "நீயே நான் - நானே நீ" என்று கூறி அடியேனை ஆட்கொண்ட தேவரீரோ?.


பாடல் எண் : 04
வளைபட்ட கைம் மாதொடு மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ தகுமோ
கிளைபட்டு எழு சூர் உரமும் கிரியும்
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.

பொருளுரை‬: 
வளையல் அணிந்த கைகளையுடைய மனைவியொடு மக்கள் என்று சொல்லப்படும் குடும்ப பந்தத்தில் அகப்பட்டு அடியேன் அழிந்துபோவது நியாயமாகுமோ? அசுரர்களாகிய தன் சுற்றத்தினர் சூழ போரிடுவதற்கு எழுந்த சூரபன்மனின் மார்பையும் அவன் தன் சுற்றத்தினருடன் ஒளிந்திருந்த கிரவுஞ்ச மலையையும் தொளைத்துக்கொண்டு ஊடுருவிச் செல்லும்படியாக விடுவித்த வேலாயுதத்தையுடைய கந்தப்பெருமானே!.


பாடல் எண் : 05
மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகமாறு மொழிந்து மொழிந்திலனே
அகமாடை மடந்தையர் என்று அயரும்
சக மாயையுள் நின்று தயங்குவதே.

பொருளுரை‬: 
இவ்வுலக வாழ்க்கையைச் சார்ந்த பொய்யான காட்சிகளாலும் நம்பிக்கைகளாலுமான பெரிய மாயையை நீக்கவல்ல கடவுளான திருமுருகப்பெருமான் தன் ஆறு திருமுகங்களாலும் பல வழிகளில் உபதேசித்து அருளிய தத்துவங்களை, அந்தோ மீண்டும் நினைவுகூர்ந்து சொல்லாமற் போய்விட்டேனே! "வீடு, துணிமணி, மாதர்கள்" ஆகியவற்றால் இறுதியில் பெரும் வருத்தத்தைத் தரும் பொய்யான இவ்வுலக மாயையில் அகப்பட்டுக் கொண்டு அதை உண்மை என்று நம்பி அடியேன் இன்னும் தயங்கிக்கொண்டிருக்கின்றேனே!.


பாடல் எண் : 06
திணியான மனோசிலை மீது உனதுதாள்
அணியார் அரவிந்தம் அரும்புமதோ
பணியா என வள்ளிபதம் பணியும்
தணியா அதிமோக தயாபரனே.

பொருளுரை‬: 
அடியேனின் கடினமான கல்போன்ற மனத்தின்மீது தேவரீரின் திருவடிகளாகிய அழகு நிறைந்த தாமரைப் பூக்கள் மலரக்கூடுமோ? வள்ளியம்மையாரின் திருவடிகள் மீது குறையாத மிக்க காதல் கொண்ட கருணாகரனே! அடியேன் செய்யவேண்டிய பணிகள் எவை என்று கூறுவீரோ?.


பாடல் எண் : 07
கெடுவாய் மனனே கதிகேள் கரவாது
இடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.

பொருளுரை‬: 
அழிந்துபோகின்ற மனமே! நீ முக்திபெறும் வழியைக் கூறுகின்றேன், கேட்பாயாக! உன்னிடம் உள்ளதை மறைக்காமல் பிறருக்குத் தானமாகக் கொடுப்பாயாக! கூர்மையான வேலினைத் தாங்கிய இறைவன் திருமுருகப்பெருமானின் திருவடிகளை நினைந்து தியானம் செய்துவருவாயாக! நீண்டகாலமாகத் தொடர்ந்துவருகின்ற பிறவித் துன்பமாகிய வேதனையைத் தூளாக்கும் பொருட்டு அந்தத் துன்பத்தின் காரணமாகிய பற்றினைச் சுட்டெரிப்பாயாக! வினைகள் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டிருப்பாயாக!.


பாடல் எண் : 08
அமரும் பதிகேள் அகமாம் எனும் இப்
பிமரம் கெட மெய்ப்பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே.

பொருளுரை‬: 
குமாரப்பெருமானே! அடியேன் விரும்பி வாழும் ஊர், மனைவி மக்கள் முதலிய உறவினர்கள், "நான்" என்று சொல்லப்படுகின்ற ஆன்மா ஆகியவை பற்றிய அடியேனின் மயக்கம் கெடுமாறு உண்மைப் பொருளைப் போதித்தவரே! என்றென்றும் குமரனாகவும் இமய மலையரசனின் குமாரி பார்வதிதேவியின் மைந்தனாகவும் இருந்துகொண்டு, போர்க்களத்தில் போரிடும் சூரபன்மன் முதலிய அசுரர்களை அழித்த பெருமானே!.


பாடல் எண் : 09
மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டூசல் படும் பரிசு என்று ஒழிவேன்
தட்டூடற வேல் சயிலத்து எறியும்
நிட்டூர நிராகுல நிர்ப்பயனே.

பொருளுரை‬: 
தேன்சொரியும் நறுமண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கூந்தலையுடைய பெண்களின் மோகவலையில் சிக்கிக்கொண்டு உள்ளம் தடுமாற்றம் அடையும் துன்பத்திலிருந்து அடியேன் எப்போது நீங்குவேன்? தடைகள் எதுவுமின்றி கிரவுஞ்ச மலையை ஊடுருவிச் செல்லும்படி வேற்படையை எறிந்த வலிமையுடையவரும், துன்பமும் பயமும் அற்றவருமான திருமுருகப்பெருமானே!.


பாடல் எண் : 10
கார் மாமிசை காலன் வரின் கலபத்து
ஏர் மாமிசை வந்து எதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே.

பொருளுரை‬: 
கரிய எருமைக்கடாவின்மீது அடியேனின் உயிரைக் கவர்ந்து செல்லவேண்டி யமன் வரும்பொழுது அழகிய தோகைகளையுடைய மயிலின்மீது ஏறி அடியேன் முன்வந்து காப்பாற்றியருள்வீராக! மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட மார்பினையுடையவரே! "வலாரி" எனப்படும் இந்திரனின் விண்ணுலகத்திற்குப் விரோதியாகிய சூரபன்மன் ஒளிந்திருந்த மாமரம் அழிந்துபோகுமாறு வேலாயுதத்தை வீசிய திருமுருகப்பெருமானே!.


தொடரும் பாடல்களும் விளக்கமும் அடுத்த பதிவில்..........!


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக