சனி, 6 ஆகஸ்ட், 2016

கந்தர் அலங்காரம் 31 - 40

ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்



பாடல் எண் : 31
பொக்கக் குடிலில் புகுதா வகை புண்டரீகத்தினும்
செக்கச் சிவந்த கழல் வீடு தந்தருள் சிந்து வெந்து
கொக்குத் தறிபட்டு எறிபட்டு உதிரம் குமுகுமு எனக்
கக்கக் கிரியுருவக் கதிர்வேல் தொட்ட காவலனே.

பொருளுரை‬: 
பொய்யான இந்த உடல் என்னும் குடிசையில் இனி அடியேன் புகாதபடி, செந்தாமரை மலரினினும் மிகவும் சிவந்த தேவரீரது திருவடியாகிய வீட்டை முத்திப்பேற்றை அடியேனுக்குத் தந்தருள்வீராக! கடலானது வெதும்பி மாமர வடிவாகி நின்ற சூரபன்மன் இரு பிளவாக முறிந்து எறியப்பட்டு குமுகுமுவென இரத்தத்தை உமிழவும் கிரௌஞ்ச மலையை ஊடுருவிச் செல்லவும் ஒளியுடைய வேலாயுதத்தை செலுத்திய காவலனே. 


பாடல் எண் : 32
கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்புடன் கிரி ஊடுருவத்
தொளைத்துப் புறப்பட்ட வேல் கந்தனே துறந்தோர் உளத்தை
வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு
இளைத்துத் தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே.

பொருளுரை‬: 
கிளைகளோடு புறப்பட்டு வந்த சூரபன்மனின் மார்புடனே கிரௌஞ்ச மலையையும் ஊடுருவித் தொளைத்துக்கொண்டு வெளிப்பட்ட வேலாயுதத்தை உடைய கந்தப்பெருமானே! துறவிகளின் மனத்தை வளைத்துப் பற்றிக்கொண்டு அவர்கள் துடிதுடிக்குமாறு வதைசெய்யும் கண்களையுடைய பெண்களுக்கு மெலிந்து தவிக்கின்ற அடியேனை எப்பொழுது வந்து காத்தருள்வீரோ?. 


பாடல் எண் : 33
முடியாப் பிறவிக் கடலில் புகார் முழுதும் கெடுக்கும்
மிடியால் படியில் விதனப்படார் வெற்றிவேல் பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலம் அடங்கப்
பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவரே.

பொருளுரை‬: 
தாண்ட முடியாத பிறவிப் பெருங்கடலில் மூழ்கமாட்டார்கள்; எல்லா நலன்களையும் கெடுக்கும் வறுமைப் பிணியால் வேதனைப்படமாட்டார்கள்; வெற்றி பொருந்திய வேலாயுதத்தைத் தாங்கியவரும், தம் திருவடிகளை வணங்குகின்ற அடியவர்களுக்கு நன்மையைத் தருகின்ற பெருமாளும், அவுணர் கூட்டம் அழியும்படி தூளாகச்செய்த பெருமாளுமாக விளங்கும் திருமுருகப்பெருமானின் திருநாமத்தை ஓதுபவர்கள்.


பாடல் எண் : 34
பொட்டாக வெற்பைப் பொருத கந்தா தப்பிப் போனது ஒன்றற்கு
எட்டாத ஞானகலை தருவாய் இருங் காம விடாய்ப்
பட்டார் உயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்கும்
கட்டாரி வேல்விழியார் வலைக்கே மனம் கட்டுண்டதே. 

பொருளுரை‬: 
நுழைவழியாகுமாறு கிரௌஞ்ச மலையுடன் போரிட்ட கந்தக் கடவுளே, அடியேனை விட்டுத் தப்பிப் போனதாகிய அன்பன்றி வேறு ஒன்றிற்கும் எட்டாத மெய்யறிவு வித்தையை தந்தருள்வீராக! பெரிய காமமாகிய தாகம் கொண்டவருடைய உயிரை முறுக்கி எடுத்துக் குடித்துத் தமது பசியைத் தணித்துக் கொள்ளும் வாளாயுதத்தையும் வேலாயுதத்தையும் ஒத்த கண்களையுடைய பெண்களின் வலையினில் அடியேனின் மனம் அகப்பட்டுக் கொண்டு கட்டுப்பட்டுவிட்டதே. 


பாடல் எண் : 35
பத்தித் துறை இழிந்து ஆனந்தவாரி படிவதினால்
புத்தித் தரங்கம் தெளிவது என்றோ பொங்கு வெங்குருதி
மெத்திக் குதிகொள்ள வெஞ்சூரனை விட்ட சுட்டியிலே
குத்தித் தரம் கொண்டு அமராவதி கொண்ட கொற்றவனே.

பொருளுரை‬: 
பக்தியாகிய அன்பு வழியில் இறங்கி இன்பமாகிய கடலில் மூழ்குவதினால் அடியேனின் புத்தியில் அலை போன்ற அசைவுகள் தெளிவடைவது எக்காலமோ? அலைகள் போன்று பொங்கிப் பெருகும் வெப்பமான அசுரர் இரத்தம் ஆனந்தக் கூத்தாடுமாறு வெய்ய சூரபன்மனின் கிரௌஞ்ச மலைமீது ஏவிய வேலாயுதம் குத்திய மேன்மையினால் தேவர் உலகை மீட்டுக் கொண்ட மன்னர் திருமுருகப்பெருமானே. 


பாடல் எண் : 36
சுழித்தோடும் ஆற்றில் பெருக்கானது செல்வம் துன்பம் இன்பம்
கழித்தோடுகின்றது எக்காலம் நெஞ்சே கரிக்கோட்டு முத்தைக்
கொழித்தோடு காவிரிச் செங்கோடன் என்கிலை குன்றம் எட்டும்
கிழித்தோடு வேல் என்கிலை எங்ஙனே முத்தி கிட்டுவதே.

பொருளுரை‬: 
'ஓ' நெஞ்சே! சுழித்து ஓடுகின்ற ஆற்றின் வெள்ளத்திற்கு நிகராகும் செல்வத்தினால் உண்டாகும் துன்பங்களையும் இன்பங்களையும் அறவே நீக்கிப் பற்றற்று விரைந்து செல்வது எந்தக் காலமோ? "யானையின் தந்தத்தில் உண்டாகிய முத்துக்களைக் கொழித்துக் கொண்டு ஓடுகின்ற காவிரி நதியால் சூழப்பட்டுள்ள திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ளவரே" என்று துதிக்கவில்லை "எட்டு குலமலைகளைப் பிளந்து போகத்தக்க வேலாயுதமே" என்று நீ துதிக்கவில்லை. இவ்வாறு இருக்க உனக்கு முத்தி கிடைப்பது எவ்வாறு?. 


பாடல் எண் : 37
கண்டு உண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக் கள்ளை
மொண்டு உண்டு அயர்கினும் வேல் மறவேன் முதுகூளித் திரள்
டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டு டுண்டு
டிண்டிண் டெனக் கொட்டி ஆட வெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே.

பொருளுரை‬: 
கற்கண்டைப் போன்ற சொற்களையுடையவரும் மென்மையானவருமான பெண்களின் காமப் புணர்ச்சியாகிய மதுவினை நிரம்பவும் மொண்டு குடித்து அவ்வெறியால் அறிவு மயங்கினாலும் தேவரீரின் வேலாயுதத்தை அடியேன் மறவேன். முதிர்ந்த பேய்க் கூட்டங்கள் "டுண்டுண் டுடுடுடு" என்னும் ஒலியை உண்டாக்கிக் கொண்டு பறையடித்துக்கொண்டு கூத்தாடுமாறு வெய்ய சூரபன்மனைக் கொன்று அருளிய சேவகனே.


பாடல் எண் : 38
நாள் என் செயும் வினைதான் என் செயும் எனை நாடி வந்த
கோள் என் செயும் கொடும் கூற்று என் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

பொருளுரை‬: 
நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்? அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்? கொடிய இயமனால் தான் என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடம்ப மலர் மாலையும் அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே. 


பாடல் எண் : 39
உதித்தாங்கு உழல்வதும் சாவதும் தீர்த்து எனை உன்னில் ஒன்றா
விதித்தாண்டு அருள்தரும் காலம் உண்டோ வெற்பு நட்டுரக
பதித்தாம்பு வாங்கி நின்று அம்பரம் பம்பரம் பட்டுழல
மதித்தான் திருமருகா மயில் ஏறிய மாணிக்கமே. 

பொருளுரை‬: 
பிறந்து பிறந்த இடங்களில் உழல்வதையும் இறப்பதையும் நீக்கி அடியேனைத் தேவரீரிடத்தில் இரண்டறக் கலக்குமாறு நியமித்து ஆட்கொண்டு அருள்புரியும் ஒருகாலமும் உண்டோ? மந்தரமலையை பாற்கடலில் மத்தாக நட்டு பாம்புகளுக்கு அரசாகிய வாசுகி என்னும் வடக்கயிற்றால் வளைத்து நின்று பம்பரம் போல் சுழலுமாறு பாற்கடலைக் கடைந்தவராகிய திருமாலின் திருமருகரே, மயில் வாகனத்தில் எழுந்தருளிய மாணிக்கமே!.


பாடல் எண் : 40
சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேங்கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே.

பொருளுரை‬: 
சேல் என்னும் மீன்கள் குதித்துத் திரிவதனால் திருச்செந்தூரில் உள்ள வயல்கள் அழிந்துபோயின; மலர்க்கொடி போன்ற பெண்களின் மனமானது சோலையிலுள்ள இனிமையான கடப்ப மலர்மாலையை விரும்பியதால் அழிந்துபோயிற்று. பெருமைதங்கிய மயில் வாகனத்தையுடைய திருமுருகப்பெருமானது வேலாயுதம் பட்டதால் கடலும் சூரபன்மனும் கிரௌஞ்சமலையும் அழிந்துபோயின. இவ்வுலகில் கந்தவேளின் திருவடிகள் அடியேனின் தலைமீது பட்டதால் பிரம்மதேவனால் எழுதப்பட்டிருந்த 'விதி' என்னும் கையெழுத்தும் அழிந்துபோயிற்று. 


தொடரும் பாடல்களும் விளக்கமும் அடுத்த பதிவில்..........!


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக