ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

கந்தர் அலங்காரம் 91 - 100

ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்



பாடல் எண் : 91
கருமான் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு
வருமா குலவனைச் சேவல் கைக்கோளனை வானம் உய்யப்
பொருமா வினைச் செற்ற போர் வேலனைக் கன்னிப் பூகமுடன்
தருமா மருவு செங்கோடனை வாழ்த்துகை சால நன்றே.

பொருளுரை‬: 
கரிய திருமாலுக்கு திருமருகனாகவும் செம்மையான மான் போன்ற வள்ளியம்மையை களவு ஒழுக்கத்தால் திருமணம் புரிந்து கொண்டு வந்த வேட மூர்த்தியாகவும், சேவற்கொடியைத் திருக்கரத்தில் உடையவராகவும், விண்ணுலகத்தோர் பிழைக்குமாறு மாமரமாக உருவெடுத்து நின்ற சூரபன்மனை எதிர்த்து போரிட்டுச் சிதைத்தப் போரில்வல்ல வேலாயுதத்தையுடைய வீர மூர்த்தியாகவும் விளங்குவதோடு, இளமையான பாக்கு மரங்களும் மாமரங்களும் செழித்து வளர்ந்துள்ள திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியுள்ளவருமான திருச்செங்கோடனை திருமுருகப்பெருமானை வாயார வாழ்த்துதல் மிகவும் நல்லது.


பாடல் எண் : 92
தொண்டர் கண்டு அண்டி மொண்டு உண்டு இருக்கும் சுத்த ஞானமெனும்
தண்டையம் புண்டரிகம் தருவாய் சண்ட தண்ட வெஞ்சூர்
மண்டலம் கொண்டு பண்டு அண்டர் அண்டம் கொண்டு மண்டி மிண்டக்
கண்டு உருண்டு அண்டர் விண்டு ஓடாமல் வேல்தொட்ட காவலனே.

பொருளுரை‬: 
தேவரீரின் தொண்டர்கள் தம் ஞானக் கண்ணால் பார்த்து, முகந்து, பருகி இன்புற்று இருக்கின்ற தேனையொத்த மெய்ஞ்ஞானத்தைத் தரவல்லதாகிய தண்டை அணிந்த அழகிய தாமரை மலர் போன்ற தேவரீரின் திருவடிகளை அடியேனுக்கும் தந்தருள்வீராக! வேகத்தையுடையவனும் தண்டாயுதத்தைக் கொண்டவனுமாகிய வெய்ய சூரபன்மன் முற்காலத்தில் மண்ணுலகையும் தேவருலகையும் கைப்பற்றி நெருங்கியதைப் பார்த்த தேவர்கள் அச்சத்தினால் கீழே விழுந்து உருண்டு தமது உலகை விட்டு ஓடாதபடி வேலாயுதத்தை விடுத்து அருளிய இரட்சக மூர்த்தியே!.


பாடல் எண் : 93
மண்கமழ் உந்தித் திருமால் வலம்புரி ஓசை அந்த
விண்கமழ் சோலையும் வாவியும் கேட்டது வேல் எடுத்துத்
திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திரு அரையில்
கிண்கிணி ஓசை பதினாலு உலகமும் கேட்டதுவே.

பொருளுரை‬: 
மண்ணின் மணம் கமழ்கின்ற உந்தியை உடையவராகிய திருமாலின் வலம்புரிச் சங்கின் ஒலியானது அந்த விண்ணுலகில் நறுமணம் வீசும் பூங்காவிலும் தடாகத்திலும் கேட்டது. வேலாயுதத்தைத் திருக்கரத்தில் ஏந்தி திட்பமான மலைகள் பொடியாகி உதிருமாறு விளையாடுகின்ற பிள்ளையாகிய குமாரக் கடவுளின் அழகிய இடையில் விளங்கும் கிண்கிணியின் நாதமானது பதினான்கு உலகங்களிலும் கேட்டது. 


பாடல் எண் : 94
தெள்ளிய ஏனலில் கிள்ளையைக் கள்ளச் சிறுமி எனும்
வள்ளியை வேட்டவன் தாள் வேட்டிலை சிறுவள்ளை தள்ளித்
துள்ளிய கெண்டையைத் தொண்டையைத் தோதகச் சொல்லை நல்ல
வெள்ளிய நித்தில வித்தார மூரலை வேட்ட நெஞ்சே.

பொருளுரை‬: 
'ஓ' மனமே! தெளிவான தினைப்புனத்தில் உள்ள கிளியை ஒத்தவரும் உள்ளத்தைக் கவரும் இளங்குமரியுமான வள்ளியம்மையை விரும்பிய திருமுருகப்பெருமானின் திருவடிகளை நீ விரும்பவில்லை; ஆயினும் சிறிய வள்ளைக் கொடியைத் தள்ளிவிட்டு ஆற்றில் துள்ளித் திரிகின்ற கெண்டைமீன் போன்ற பெண்களின் கண்களையும், கோவைக் கனியொத்த சிவந்த இதழ்களையும், மயக்கும் வஞ்சக வார்த்தையையும், வெண்மையான முத்துப் போன்ற ஒளிவீசும் பற்களுடன் கூடிய புன்சிரிப்பையும் விரும்புகின்றாயே மனமே!.


பாடல் எண் : 95
யான் தான் எனும் சொல் இரண்டும் கெட்டாலன்றி யாவருக்கும்
தோன்றாது சத்தியம் தொல்லைப் பெருநிலம் சூகரமாய்க்
கீன்றான் மருகன் முருகன் கிருபாகரன் கேள்வியினால்
சான்றாரும் அற்ற தனிவெளிக்கே வந்து சந்திப்பதே.

பொருளுரை‬: 
'யான்', 'தான்' என்னும் இரண்டு சொற்களும் இல்லாமற்போனாலன்றி அத்துவித முக்தி எவருக்கும் தோன்றாது. இது உண்மை. பழமை பொருந்திய பெரிய பூமியை வராகமாய் உருவெடுத்து பிளந்தவராகிய திருமாலின் திருமருகரும் முருகவேளுமாகிய கருணைக்கு உரைவிடமாகிய கிருபாகரனது உபதேசக் கேள்வியினால் சாட்சி ஒருவரும் இல்லாத ஒப்பற்ற ஞானவெளியில் திருமுருகப்பெருமானின் திருவருளால் வந்து கூடுவது அத்துவித முக்தியாகும்.


பாடல் எண் : 96
தடக்கொற்ற வேள் மயிலே இடர்தீரத் தனிவிடில் நீ
வடக்கில் கிரிக்கு அப்புறத்து நின்தோகையின் வட்டம் இட்டுக்
கடலுக்கு அப்புறத்தும் கதிர்க்கு அப்புறத்தும் கனகசக்ரத்
திடர்க்கு அப்புறத்தும் திசைக்கு அப்புறத்தும் திரிகுவையே.

பொருளுரை‬: 
விசாலமான வெற்றியையுடைய திருமுருகப்பெருமானது மயிலே! உலகத்தின் துன்பம் தீரும் பொருட்டு உன்னை எம்பெருமான் தனியே செல்லவிடுவாராயின், வடதிசையில் உள்ள மகாமேருமலைக்கு அப்பாலும் உனது தோகையினால் சுழன்று பறந்து கடலுக்கு அப்பாலும் சூரியனுக்கு அப்பாலும் சக்ரவாளகிரிக்கு அப்பாலும் எட்டுத்திசைகளுக்கு அப்பாலும் நீ உலாவுவாய்!.


பாடல் எண் : 97
சேலில் திகழ் வயல் செங்கோடை வெற்பன் செழுங்கலபி
ஆலித்து அநந்தன் பணாமுடி தாக்க அதிர்ந்து அதிர்ந்து
காலில் கிடப்பன மாணிக்க ராசியும் காசினியைப்
பாலிக்கும் மாயனும் சக்ராயுதமும் பணிலமுமே.

பொருளுரை‬: 
கெண்டை மீன்கள் நிறைந்து விளங்குகின்ற வயல்களால் சூழப்பெற்ற திருச்செங்கோடு என்னும் திருமலையின்மீது எழுந்தருளியுள்ள திருமுருகப்பெருமானது செழுமையான மயிலானது இனிமையான ஒலியெழுப்பி, ஆதிசேடனுடைய பணா மகுடங்களைத் தாக்குதலால் மிகவும் ஒலியுண்டாகி அப்பணா மகுடங்களிலுள்ள நாகமணிகளின் குவியலும் ஆதிசேடன்மீது பள்ளிகொண்டு உலகைக் காத்தருள்கின்ற திருமாலும் அவர்தம் திருக்கரத்திலுள்ள திருவாழியும் திருச்சங்கும் மயிலின் திருவடிகளில் கிடப்பனவாயின!.


பாடல் எண் : 98
கதிதனை ஒன்றையும் காண்கின்றிலேன் கந்தவேல் முருகா
நதிதனை அன்ன பொய்வாழ்வில் அன்பாய் நரம்பால் பொதிந்த
பொதிதனையும் கொண்டு திண்டாடுமாறு எனைப் போதவிட்ட
விதிதனை நொந்து நொந்து இங்கே என்றன் மனம் வேகின்றதே.  

பொருளுரை‬: 
கந்தப்பெருமானே, வேலாயுதத்தையுடைய திருமுருகப்பெருமானே! முக்தி வீட்டை அடைவதற்குரிய நெறியொன்றையேனும் காண்கின்றேன் இல்லை. ஆற்றுநீர்ப் பெருக்குபோல நிலையற்ற பொய்யான உலக வாழ்க்கையில் பற்றுடையவனாகி, நரம்புகளால் கட்டப்பட்ட உடலாகிய மூட்டையைச் சுமந்துகொண்டு துன்புறுமாறு பிறக்கச் செய்த விதியினை நினைத்து உள்ளம் நொந்து நொந்து அடியேனின் மனம் வேதனைப்படுகின்றது.


பாடல் எண் : 99
காவிக் கமலக் கழலுடன் சேர்த்து என்னைக் காத்தருளாய்
தூவிக் குலமயில் வாகனனே துணை ஏதும் இன்றித்
தாவிப் படரக் கொழுகொம்பு இலாத தனிக்கொடிபோல்
பாவித் தனிமனம் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே.

பொருளுரை‬: 
தேவரீரின் சிவந்த தாமரை மலர் போன்றவையும் கழலுடன் கூடிவையுமான திருவடிகளுடன் அடியேனைச் சேர்த்துக் காப்பாற்றியருள்வீராக! இறகுகளுடன் கூடிய மேன்மையான மயிலை வாகனமாக உடையவரே! உதவி சிறிதும் இல்லாமல் தாவிப் படர்வதற்குக் கொழு கொம்பு இல்லாத தனித்த கொடியைப் போல பாவியாகிய அடியேனுடைய துணையற்ற மனமானது தளர்ந்து வாட்டமுற்றுத் துடிக்கின்றது. 


பாடல் எண் : 100
இடுதலைச் சற்றும் கருதேனைப் போதம் இலேனை அன்பால்
கெடுதலிலா தொண்டரில் கூட்டியவா கிரௌஞ்ச வெற்பை
அடுதலைச் சாத்தித்த வேலோன் பிறவியற இச்சிறை
விடுதலைப்பட்டது விட்டது பாச வினை விலங்கே. 

பொருளுரை‬: 
வறியவர்க்குத் தருவதைச் சிறிதும் எண்ணாதவனும் அறிவற்றவனுமாகிய அடியேனை அன்பால் தீமையற்றத் தொண்டர்களுடன் சேர்த்து அருளியவரே! கிரௌஞ்ச மலையை அழித்து முடித்த வேலாயுதக் கடவுளின் அருளால், அடியேனின் பிறவித் துன்பம் அற்றுப் போய் இந்த உடலாகிய சிறைவாசம் முடிவுற்று விடுதலையானேன்; பாசத்தாலும் வினையாலும் வந்த விலங்கும் விட்டு ஒழிந்தது. 


தொடரும் பாடல்களும் விளக்கமும் அடுத்த பதிவில்..........!


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக