சனி, 6 ஆகஸ்ட், 2016

கந்தர் அலங்காரம் 41 - 50

ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்



பாடல் எண் : 41
பாலே அனைய மொழியார்தம் இன்பத்தைப் பற்றி என்றும்
மாலே கொண்டு உய்யும் வகை அறியேன் மலர்த்தாள் தருவாய்
காலே மிகவுண்டு காலே இலாத கணபணத்தின்
மேலே துயில்கொள்ளும் மாலோன் மருக செவ் வேலவனே.

பொருளுரை‬:
பாலைப் போன்ற இனிமையான மொழி பேசும் பெண்கள் தரும் சுகத்தை விரும்பி எப்பொழுதும் மயக்கம் கொண்டவனாகி அதைவிட்டுப் பிழைத்துப் போகும் வழியை அறிந்திலேன். ஆதலால் தேவரீரின் செந்தாமரை மலர் போன்ற திருவடிகளைத் தந்தருள்வீராக, காற்றையே மிகுதியாக உண்டு கால்களே இல்லாத கூட்டமாகிய பாம்பின் படத்தையுடைய ஆதிசேஷன் மீது அறிதுயில் செய்யும் திருமாலுக்கு மருகரே, சிவந்த வேலாயுதத்தை உடையவரே!. 


பாடல் எண் : 42
நிணம் காட்டும் கொட்டிலை விட்டு ஒரு வீடு எய்தி நிற்க நிற்கும்
குணம் காட்டி ஆண்ட குருதேசிகனங் குறச் சிறுமான்
பணம் காட்டு அல்குற்கு உருகும் குமரன் பதாம் புயத்தை
வணங்காத் தலை வந்து இது எங்கே எனக்கு இங்ஙன் வாய்த்ததுவே.

பொருளுரை‬:
கொழுப்புடன் கூடிய தசைகள் மிகுதியாகத் தோன்றுகின்ற தொழுவமாகிய உடலை விட்டு அகன்று ஒப்பற்ற முக்தியை அடைந்து நிலைபெற்று இருத்தற்குரிய வழியைக் காட்டியருளி அடியேனை ஆட்கொண்ட குருநாதரும், குறவர் குலத்தில் தோன்றிய அழகிய இளமான் போன்ற வள்ளியம்மையின் பொருட்டு உள்ளம் உருகுகின்றவருமான திருமுருகப்பெருமானின் தாமரை மலர் போன்ற திருப்பாதங்களைப் பணியாத தலையானது எவ்விதமாக வந்து அடியேனுக்குக் கிடைத்தது?.


பாடல் எண் : 43
கவியால் கடல் அடைத்தோன் மருகோனைக் கணபணக் கட்
செவியால் பணியணி கோமான் மகனைத் திறல் அரக்கர்
புவியார்ப் எழத் தொட்ட போர்வேல் முருகனைப் போற்றி அன்பால்
குவியாக் கரங்கள் வந்து எங்கே எனக்கு இங்ஙன் கூடியவே. 

பொருளுரை‬:
வானர வீரர்களைக்கொண்டு கடலில் அணைகட்டி அமைந்த இராமபிரானாக அவதரித்த திருமாலின் திருமருகராகிய திருமுருகப் பெருமானைக் கூட்டமான படங்களைத் தலைகளாகக் கொண்ட பாம்பை அணிகலனாக அணிந்துள்ள சிவபெருமானின் திருமைந்தரை, வலியுடைய அரக்கர்கள் வாழும் உலகங்கள் எல்லாம் அச்சத்தால் கதறுதலால் பெரிய ஒலியுண்டாக ஏவிய போர்த்தொழிலில் வல்ல வேலாயுதத்தையுடைய திருமுருகப்பெருமானை அன்போடு வணங்கிக் கும்பிடாத கைகள் அடியேனுக்கு எவ்விதம் இங்கு வந்து சேர்ந்தன?.


பாடல் எண் : 44
தோலால் சுவர் வைத்து நாலாறு காலில் சுமத்தி இரு
காலால் எழுப்பி வளைமுதுகு ஓட்டி கைநாற்றி நரம்
பால் ஆர்க்கையிட்டு தசைகொண்டு மேய்ந்த அகம் பிரிந்தால்
வேலால் கிரி தொளைத்தோன் இருதாளன்றி வேறில்லையே. 

பொருளுரை‬:
தோலினால் சுவரெழுப்பி பத்து வகை வாயுக்களால் தாங்க வைத்து இரண்டு கால்களாகிய தூண்மீது நிற்கச்செய்து வளைந்த முதுகெலும்பை அமைத்து இரு கரங்களாகிய கைகளைத் தொங்கவிட்டு நரம்புகளால் கட்டித் தசையால் மூடிச்செய்த இந்த உடம்பாகிய வீட்டை விட்டு உயிர் பிரியும்போது வேலால் கிரௌஞ்ச மலையைத் தொளைத்தருளிய திருமுருகப்பெருமானின் இரு திருவடிகளைத்தவிர வேறு புகலிடம் இல்லை.


பாடல் எண் : 45
ஒரு பூதரும் அறியாத் தனி வீட்டில் உரை உணர்வு அற்று
இரு பூத வீட்டில் இராமல் என்றான் இருகோட்டு ஒருகைப்
பொரு பூதரம் உரித்து ஏகாசம் இட்ட புராந்தகற்குக்
குரு பூத வேலவன் நிட்டூர சூர குலாந்தகனே. 

பொருளுரை‬:
"பஞ்ச பூதங்களாளாகிய உடல் என்னும் வீட்டில் வசிக்காமல் பூதவுடலையுடைய வேறு ஒருவரும் அறியாத ஒப்பற்ற மௌன வளாகமாகிய வீட்டில் சொல்லும் நினைவும் அற்று இருப்பாயாக" என்று உபதேசித்து அருளிய திருமுருகப்பெருமான், இரண்டு கொம்புகளையும் ஒரு துதிக்கையையும் உடைய போர் செய்யும் மலையையொத்த யானையின் தோலை உரித்து உத்தரியமாக அணிந்துகொண்டவரும் திரிபுரத்தை எரித்தவருமான சிவபெருமானுக்கு குருவானவரும் வேலையுடையவரும் அநியாயம் செய்த சூரபன்மனின் குலத்தை அழித்தவருமாக விளங்குகின்றார்.


பாடல் எண் : 46
நீயான ஞான விநோதம் தனையென்று நீ அருள்வாய்
சேயான வேல் கந்தனே செந்திலாய் சித்ர மாதர் அல்குல்
தோயா உருகிப் பருகிப் பெருகித் துவளும் இந்த
மாயா விநோத மனோ துக்கமானது மாய்வதற்கே.

பொருளுரை‬:
தெய்வக் குழந்தை வடிவில் வேற்படையுடன் திருச்செந்தூரில் எழுந்தருளியிருக்கும் கந்தப்பெருமானே, அழகிய பெண்களின் உடலைப் பற்றிய எண்ணத்தில் மூழ்கி அவர்களை நினைந்து உள்ளம் உருகி அதனால் காமம் மேலிட்டு வாடுகின்ற இந்த மாயையாகிய விளையாட்டினால் உண்டாகிய மனத்துன்பமானது அழியும் பொருட்டு தேவரீருடன் அடியேன் இரண்டறக் கலந்து பதிஞானப் பேரானந்த நிலையை அடையும் நற்பேற்றினை அடியேனுக்கு எப்போது தந்தருள்வீர். 


பாடல் எண் : 47
பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித்து இருக்கும் அமுது கண்டேன் செயல் மாண்டு அடங்கப்
புத்திக் கமலத்து உருகிப் பெருகிப் புவனம் எற்றித்
தத்திக் கரைபுரளும் பரமானந்த சாகரத்தே. 

பொருளுரை‬:
திருமுருகப்பெருமானின் வரிசையான அழகிய திருமுகங்கள் ஆறோடு பன்னிரண்டு தோள்களுமான இனிய அமுதத்தை அடியேன் கண்டேன். ஜீவனுடைய செயல்கள் கெட்டு ஒடுங்கியபோது அறிவாகிய தாமரை மலரில் கரைந்து பெருக்கெடுத்து எல்லா உலகங்களையும் கடந்து அவற்றின் கரைமீது புரளுகின்ற மேலான இன்பக் கடலில் திருமுருகப்பெருமானின் வரிசையான அழகிய திருமுகங்கள் ஆறோடு பன்னிரண்டு தோள்களுமான இனிய அமுதத்தைக் கண்டேன்.


பாடல் எண் : 48
புத்தியை வாங்கி நின் பாதாம் புயத்தில் புகட்டி அன்பாய்
முத்தியை வாங்க அறிகின்றிலேன் முது சூர் நடுங்கச்
சத்தியை வாங்கத் தரமோ குவடு தவிடுபடக்
குத்திய காங்கேயனே வினையேனுக்கு என் குறித்தனையே.

பொருளுரை‬:
தீய வழிகளில் சென்று அல்லற்படும் அடியேனின் புத்தியை அவ்வாறு செல்லா வண்ணம் தடுத்து தேவரீரின் திருவடித் தாமரை மலர்களில் அன்புடன் செலுத்தி வீடுபேற்றைப் பெற்று உய்வதற்கு அடியேன் அறியவில்லை. நீண்டகாலம் கொடூரமான செயல்கள் புரிந்த வயதான சூரபன்மன் நடுங்கும்படி சக்திவேலினை விடுவதற்கு அடியேனால் முடியுமா? கிரௌஞ்சமலை பொடிபடும்படி வேலாயுதத்தால் குத்திய கங்கையின் மைந்தரே, வினையின் விளைவை உடையவனாகிய அடியேன் யாது செய்யவேண்டும் என எண்ணியுள்ளீர்?.  


பாடல் எண் : 49
சூரில் கிரியில் கதிர்வேல் எறிந்தவன் தொண்டர்குழாம்
சாரின் கதியன்றி வேறிலை காண் தண்டு தாவடி போய்த்
தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வம் எல்லாம்
நீரில் பொறியென்று அறியாத பாவி நெடுநெஞ்சமே.

பொருளுரை‬:
'ஓ' மனமே! சூரபன்மன் மீதும் கிரௌஞ்சமலை மீதும் ஒளிவீசும் வேலை விடுத்து அருளிய திருமுருகப்பெருமானின் அடியார்களது திருக்கூட்டத்தை அடைவதைவிட சிறந்த கதி வேறு ஒன்றும் எங்கும் இல்லை என்பதைக் காண்பாயாக. படைகளுடன் பிரயாணம் செய்து, தேரின் மீதும் யானையின் மீதும் குதிரையின் மீதும் ஏறி உலாவுகின்ற அரசர்களுடைய செல்வம் முழுவதும் நீரின்மீது எழுதிய எழுத்துக்கு ஒப்பாகும் என்று நீ உணரவில்லையே, நீண்டகாலப் பாவியாகிய மனமே!. 


பாடல் எண் : 50
படிக்கும் திருப்புகழ் போற்றுவன் கூற்றுவன் பாசத்தினால்
பிடிக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் பெரும் பாம்பில் நின்று
நடிக்கும் பிரான் மருகா கொடுஞ் சூரன் நடுங்க வெற்பை
இடிக்கும் கலாபத் தனிமயில் ஏறும் இராவுத்தனே.

பொருளுரை‬:
தேவரீரின் திருப்புகழை எப்பொழுதும் போற்றி ஓதுபவன் அடியேன். எனவே இயமன் வந்து பாசக் கயிற்றை வீசி அடியேனின் உயிரைப் பிடிக்கும் வேளையில் எழுந்தருளிவந்து, "அஞ்சாதே" என்று கூறி அடியேனை ஆட்கொள்வாயாக. காளிங்கன் என்னும் பெரிய பாம்பின் படத்தின் மீது நின்று கூத்தாடும் திருமாலின் திருமருகரே! கொடிய சூரபன்மன் நடுங்குமாறு கிரௌஞ்ச மலையைத் தன் பெரிய தோகையால் இடித்த தனியொரு மயிலின் மீது ஏறிவரும் சேவகரே!.


தொடரும் பாடல்களும் விளக்கமும் அடுத்த பதிவில்..........!


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக