சனி, 6 ஆகஸ்ட், 2016

கந்தர் அலங்காரம் 61 - 70

ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்



பாடல் எண் : 61
வரையற்று அவுணர் சிரமற்று வாரிதி வற்றச் செற்ற
புரையற்ற வேலவன் போதித்தவா பஞ்சபூதமும் அற்று
உரையற்று உணர்வு அற்று உடலற்று உயிரற்று உபாயமற்றுக்
கரையற்று இருளற்று எனதற்று இருக்கும் அக்காட்சியதே.

பொருளுரை‬: 
கிரௌஞ்சமலை பிளந்து ஒழியவும், அவுணர்கள் தலையற்று உருளவும், கடல் வற்றவும் அழித்தருளிய குற்றமற்ற ஞானசக்தியை உடையவரான திருமுருகப்பெருமான் அடியேனுக்கு உபதேசித்து அருளிய காட்சியாவது, மண், நீர், தீ, காற்று, வெளி ஆகிய ஐந்து பூதங்களும் நீங்கி, சொல்லற்று, உணர்வும் நீங்கி, உடலும் அறவே இல்லாமல் அழிந்து, உயிரின் தன்மையும் நீங்கி, சாதனங்களும் நீங்கி, கரையற்று, ஆணவ இருளும் தேய்ந்து, "எனது" என்னும் புறப்பற்றும் அகன்று, சமாதி நிலையில் இருக்கும் அருட்காட்சியாகும்!. 


பாடல் எண் : 62
ஆலுக்கு அணிகலம் வெண்தலை மாலை அகிலம் உண்ட
மாலுக்கு அணிகலம் தண்ணந் துழாய் மயிலேறும் ஐயன்
காலுக்கு அணிகலம் வானோர் முடியும் கடம்பும் கையில்
வேலுக்கு அணிகலம் வேலையும் சூரனும் மேருவுமே.

பொருளுரை‬: 
சிவபெருமானுக்கு அணிகலனாக விளங்குவது வெண்மையான கபால மாலையாகும்; திருமாலுக்கு அணிகலனாக விளங்குவது குளிர்ந்த அழகிய துளசி மாலையாகும்; மயில் வாகனத்தின் மீது ஏறி வருகின்ற திருமுருகப்பெருமானின் திருவடிகளுக்கு அணிகலன்களாக விளங்குவன தேவர்களின் மணிமுடிகளும் அவர்கள் சூட்டும் கடப்ப மலர் மாலைகளுமாகும்; திருமுருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள வேலாயுதத்திற்கு அணிகலன்களாக விளங்குவன கடலும், சூரபன்மனும் மகாமேரு மலையுமாகும். 


பாடல் எண் : 63
பாதித் திருவுருப் பச்சென்றவர்க்குத் தன் பாவனையைப்
போதித்த நாதனைப் போர்வேலனைச் சென்று போற்றி உய்யச்
சோதித்த மெய்யன்பு பொய்யோ அழுது தொழுது உருகிச்
சாதித்த புத்தி வந்து எங்கே எனக்கு இங்ஙன் சந்தித்ததே.

பொருளுரை‬: 
தமது திருமேனியின் இடப்பாகத்தில் உமாதேவியார் உள்ளதால் அந்தப் பகுதி பச்சை நிறமாகக் காட்சியளிக்கும் சிவபெருமானுக்குப் பிரணவ மந்திரத்தை உபதேசித்தவரும் வேலாயுதத்தை உடையவருமான திருமுருகப்பெருமானை அவர் சந்நிதியை அடைந்து போற்றி வணங்கி உய்வு பெறவேண்டி சோதிக்கப் பெற்ற அடியேனின் உண்மையான அன்பு பொய்யாகுமோ? அழுது, தொழுது, உள்ளம் உருகி உறுதி செய்த அறிவானது இவ்விடத்தில் அடியேனுக்கு எவ்வாறு வந்தது?. 


பாடல் எண் : 64
பட்டிக் கடாவில் வரும் அந்தகா உனைப் பாரறிய
வெட்டிப் புறங்கண்டு அலாது விடேன் வெய்ய சூரனைப்போய்
முட்டிப் பொருத செவ்வேல் பெருமாள் திருமுன்பு நின்றேன்
கட்டிப் புறப்படடா சத்தி வாள் என்றன் கையதுவே.

பொருளுரை‬: 
திருட்டுத்தனமுடைய எருமைக் கடாவின் மீது வருகின்ற இயமனே! உலகம் முழுதும் அறியும்படி உன்னைத் துண்டம் செய்து புறம்கொடுத்து ஓடுமாறு செய்வதல்லாமல் விடமாட்டேன். வெப்பத்தையொத்த கொடியவனான சூரபன்மனைத் தாக்கிப் போர் செய்த சிவந்த வேலாயுதத்தையுடைய திருமுருகப்பெருமானது சந்நிதியில் நின்றேன். உன்னுடைய ஆயுதங்கள் எல்லாவற்றையும் கட்டிக் கொண்டு நீ வெளிப்படடா. சக்தியாகிய வாள் எனது கையில் உள்ளது!. 


பாடல் எண் : 65
வெட்டும் கடா மிசைத் தோன்றும் வெங்கூற்றன் விடும் கயிற்றால்
கட்டும் பொழுது விடுவிக்க வேண்டும் கராசலங்கள்
எட்டும் குலகிரி எட்டும் விட்டு ஓட எட்டாத வெளி
மட்டும் புதைய விரிக்கும் கலாப மயூரத்தனே.

பொருளுரை‬: 
வெட்டுகின்ற எருமைக் கடாவின் மீது வருகின்ற வெம்மையாகிய இயமன் வீசுகின்ற பாசக் கயிற்றினால் அடியேனைக் கட்டிப்பிடிக்கும்போது தேவரீர் தோன்றி விடுவித்து காப்பாற்றியருளவேண்டும். கைகளையுடைய மலைபோன்ற திக்கு யானைகள் எட்டும் குலமலைகள் எட்டும் தத்தம் இடம் விட்டு விலகும்படி கண்களுக்கு எட்டாத ஆகாய வெளி வரைக்கும் மறையும்படி விரிக்கின்ற தோகையையுடைய மயிலை வாகனமாக உடையவரே!.


பாடல் எண் : 66
நீர்க் குமிழிக்கு நிகர் என்பர் யாக்கை நில்லாது செல்வம்
பார்க்கும் இடத்து அந்த மின்போலும் என்பர் பசித்து வந்தே
ஏற்கும் அவர்க்கு இட என்னின் எங்கேனும் எழுந்திருப்பார்
வேல் குமரற்கு அன்பிலாதவர் ஞானம் மிகவும் நன்றே.

பொருளுரை‬: 
"இந்த உடலானது நீரின் மீது தோன்றி மறையும் குமிழிக்கு ஒப்பாகும்" என்றும், "பொருட்செல்வம் என்றென்றும் நிலைபெற்றிராது; ஆராய்ந்து பார்க்கும்போது அப்பொருட்செல்வம் மின்னலைப் போன்றது" என்றும் கூறுவார்கள் அறிஞர்கள். மிகவும் பசியால் வாடி வந்து, "அன்னமிடுங்கள்" என்று யாசிப்பவர்களுக்கு ஏதாவது கொடுங்கள் என்று சொன்னால் எங்காவது போய்விடலாம் என்று எழுந்து போய்விடுவார்கள் சிலர். வேலாயுதத்தையுடைய திருமுருகப்பெருமான்பால் பக்தி இல்லாத அத்தகைய மனிதர்களது போலி "ஞானம்" மிகவும் நன்றாக இருக்கின்றது!.


பாடல் எண் : 67
பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்று நின் சிற்றடியைக்
குறுகிப் பணிந்து பெறக் கற்றிலேன் மத கும்பம் கம்பத்
தறுகண் சிறுகண் சங்கிராம சயில சரசவல்லி
இறுகத் தழுவும் கடகாசல பன்னிரு புயனே.

பொருளுரை‬: 
பெறுவதற்கு மிகவும் அருமையான இந்த மானிடப் பிறவியைப் பெற்றும் தேவரீரது சிறிய திருவடிகளை அடைந்து தொழுது முக்தியைப் பெறுவதற்கு கற்றேன் இல்லை. மதநீர் ஒழுகுவதும் கும்பஸ் தலத்தை உடையதும் அசைந்துகொண்டே இருக்கும் தன்மையுடையதும் அஞ்சாமையையும் சிறிய கண்களையும் உடையதுமான யானையை வாகனமாகக் கொண்டு விளங்கும் போர்வீரரே, மலையில் பிறந்து வளர்ந்தவரும் விளையாடல் புரிபவரும் கொடிபோன்றவருமாகிய வள்ளியம்மையாரின் மார்பினை இறுகத் தழுவும், வீரக் கடகங்களை அணிந்துள்ளனவும் மலைபோல் விளங்குவதுமாகிய பன்னிரண்டு புயங்களை உடையவரே!.


பாடல் எண் : 68
சாடும் சமரத் தனிவேல் முருகன் சரணத்திலே
ஓடும் கருத்தை இருத்தவல்லார்க்கு யுகம் போய்ச் சகம் போய்ப்
பாடும் கவுரி பவுரி கொண்டாடப் பசுபதி நின்று
ஆடும் பொழுது பரமாய் இருக்கும் அதீதத்திலே.

பொருளுரை‬: 
அறநெறிக்கு மாறுபட்டவர்களையும் தீய வினைகளையும் போர்செய்து அழிக்கவல்லதாகிய ஒப்பற்ற வேலாயுதத்தை உடைய திருமுருகப்பெருமானின் திருவடிகளில், பல்வேறு வழிகளில் ஓடித்திரியும் மனத்தை நிலைபெறச் செய்யும் ஆற்றல் உள்ளவரின் மனமானது, அனைத்து யுகங்களும் எல்லா உலகமும் முடிவுக்கு வரும் தறுவாயிலும், பாடல்வல்ல உமாதேவியார் மெச்சிப் புகழ, பசுபதியாகிய சிவபெருமான் ஆடல்வல்லான் நடராஜராக ஆனந்தத் தாண்டவத்தை நிகழ்த்தும் இறுதிக் காலத்திலும் கூட அழியாமல் மேன்மைபெற்று விளங்கும்.


பாடல் எண் : 69
தந்தைக்கு முன்னம் தனி ஞானவாள் ஒன்று சாதித்து அருள்
கந்தச்சுவாமி எனைத் தேற்றிய பின்னர்க் காலன் வெம்பி
வந்து இப்பொழுது என்னை என்செய்யலாம் சக்திவாள் ஒன்றினால்
சிந்தத் துணிப்பன் தணிப்பருங் கோப திரிசூலத்தையே.

பொருளுரை‬: 
முன்னாளில் தந்தையாகிய சிவபெருமானுக்கு ஒப்பற்ற மெய்ஞ்ஞானமாகிய வாளாயுதம் ஒன்றைக் கொடுத்து உபதேசித்து அருள் புரிந்த கந்தச்சுவாமிக் கடவுள் அந்த உபதேசத்தால் அடியேனையும் தெளிவித்த பிறகு, இயமன் சினங்கொண்டு இவ்வேளையில் என்னை என்ன செய்யமுடியும் என்று எண்ணி வருவானாயின் திருமுருகப்பெருமான் கொடுத்தருளிய சக்திவேல் ஒன்றைக் கொண்டே எளிதில் தணிக்க முடியாத கோபத்தையுடைய இயமனது முத்தலைச் சூலம் சிதறும்படி அதனை வெட்டி எறிவேன்.


பாடல் எண் : 70
விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.

பொருளுரை‬: 
நமது கண்களுக்குத் துணையாவது திருமுருகப்பெருமானது புனிதமானவையும் மென்மையானவையுமான செந்தாமரை மலர் போன்ற திருவடிகளேயாகும். உண்மையில் ஒருசிறிதும் குறையாத சொல்லுக்குத் துணையாவது "முருகா" என்று கூறும் அப்பரமபதியின் திருநாமங்களேயாகும். முன்பு செய்த பழியைத் தருகின்ற பாவத்தை அகற்றுவதற்குத் துணையாவது திருமுருகப்பெருமானின் பன்னிரண்டு புயங்களுமேயாகும். அஞ்சுந்தன்மையுடைய தனிமையான வழிக்குத் துணையாவது திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள கந்தப்பெருமானுடைய கூர்மையான வேலாயுதமும் மயிலுமேயாகும்.


தொடரும் பாடல்களும் விளக்கமும் அடுத்த பதிவில்..........!


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக