சனி, 6 ஆகஸ்ட், 2016

கந்தர் அலங்காரம் 21 - 30

ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்



பாடல் எண் : 21
மரண ப்ரமாதம் நமக்குக் இல்லையாம் என்றும் வாய்த்த துணை
கிரணக்கலாபியும் வேலும் உண்டே கிண்கிணி முகுள
சரண ப்ரதாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா
ஆபரண கிருபாகர ஞானாகர சுர பாஸ்கரனே.

பொருளுரை‬: 
இறப்பு என்னும் அபாயம் தேவரீரின் அடியார்களாகிய எங்களுக்கு இல்லை. காரணம் எந்நாளும் வாய்த்த துணையாக ஒளிபடைத்த மயிலும் வேலும் எங்களுக்கு உள்ளன. கிண்கிணிகள் ஒலிக்கும்படியான திருவடிகளையுடைய வீரரே! இந்திரனின் துணைவியான சசிதேவியின் மங்கல நாணினைக் காப்பாற்றியருளியவரே! கருணைக்கு உறைவிடமானவரே! அறிவுவடிவினரே! தேவசூரியனே!.


பாடல் எண் : 22
மொய் தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதாரையும் அங்கு வாழவைப்போன் வெய்ய வாரணம் போல்
கைதான் இருபது உடையான் தலை பத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.

பொருளுரை‬: 
வண்டுகள் மொய்க்கும் பூமாலைகளைச் சூடியுள்ள கூந்தலையுடைய வள்ளியம்மையை மணம் செய்துகொண்டவரும், இயல், இசை, நாடகம் எனப்படும் மூன்று வகையான செந்தமிழால் வசை சொல்லியவரையும் அவ்விடத்திலேயே இன்பவாழ்வில் இனிது திளைக்குமாறு அருள்புரிபவரும், கொடிய மதயானை போன்றவனும் இருபது கரங்களையும் உடைய இராவணனது பத்துத் தலைகளும் வெட்டுண்டு வீழ கணையைவிட்டு அருளிய இராமபிரானாக அவதரித்த திருமாலின் திருமருகரும், உமாதேவியார் பெற்றருளிய சரவணபவருமாகிய திருமுருகப்பெருமானே.


பாடல் எண் : 23
தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே
வை வைத்த வேற்படை வானவனே மறவேன் உனை நான்
ஐவர்க்கு இடம்பெற கால் இரண்டு ஓட்டி அதில் இரண்டு
கை வைத்த வீடு குலையும் முன்னே வந்து காத்தருளே.

பொருளுரை‬: 
தெய்வீகம் பொருந்தியதும் அழகானதுமான மலையாகிய திருச்செங்கோட்டில் வதியும் செழுமையைத் தரும் சோதியே! கூர்மையான வேலை ஆயுதமாகக் கொண்ட தெய்வமே! உனை அடியேன் மறவேன். ஐம்புலன்களுக்கு இடமாகும்படி இரண்டு கால்களை நிறுத்தி அங்கு இரண்டு கைகளை அமைத்துள்ள இல்லம் போன்ற இந்த உடம்பு அழிவதற்கு முன்னரே தேவரீர் அடியேனுக்கு முன் தோன்றிக் காப்பாற்றியருள்வீராக!. 


பாடல் எண் : 24
கின்னம் குறித்து அடியேன் செவி நீ அன்று கேட்கச்சொன்ன
குன்னம் குறிச்சி வெளியாக்கிவிட்டது கோடுகுழல்
சின்னம் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை
முன்னம் குறிச்சியில் சென்று கல்யாணம் முயன்றவனே.

பொருளுரை‬: 
அடியேனின் துன்பத்தைத் தேவரீர் நீக்கும் பொருட்டு அடியேனின் காதில் கேட்குமாறு அந்த நாளில் உபதேசித்து அருளிய இரகசியம் மெய்ஞ்ஞான மலைமீதுள்ள திருஅருளூரில் அடியேனைச் சுத்த ஞானவெளியாக்கித் தன்வயமாக்கிக் கொண்டது. முற்காலத்தில் ஊதுகொம்பு, புல்லாங்குழல், உடுக்கை, போன்ற திருச்சின்னங்கள் ஒலிக்க குறிஞ்சி நிலத்துக்கு உரியவர்களாகிய வேடர்களின் "குறிச்சி" எனப்படும் ஊருக்குச் சென்று அவர்தம் திருப்புதல்வியாகிய வள்ளியம்மையாரைத் திருமணம் செய்துகொள்ள முயன்றவரே.


பாடல் எண் : 25
தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கி உன்னைத்
திண்டாட வெட்டி விழவிடுவேன் செந்தில் வேலனுக்குத்
தொண்டாகிய என் அவிரோத ஞானச்சுடர் வடிவாள்
கண்டாயடா அந்தகா வந்துபார் சற்று என் கைக்கு எட்டவே.

பொருளுரை‬: 
அந்தகா (இயமனே)! உன்னுடைய கதாயுதமும் முத்தலைச் சூலமும் உன் கையிலிருந்து பொடிபட்டுச் சிந்த உன்னை மோதி வலியழிந்து வருந்துமாறு துண்டித்து உன்னை வீழ்த்துவேன். திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள வேற்படையுடைய திருமுருகப்பெருமானுக்கு அடிமையாகிய அடியேனுடைய விரோதமில்லாத ஞானமாகிய ஒளிபொருந்தியதும் கூர்மையானதுமாகிய வாளாயுதத்தைப் பார்த்தாயடா? எனது கைக்கு எட்டுகின்ற அளவில் சிறிது நீ வந்து பாராய்!.


பாடல் எண் : 26
நீலச் சிகண்டியில் ஏறும் பிரான் எந்த நேரத்திலும்
கோலக் குறத்தியுடன் வருவான் குருநாதன் சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்து அறிவார் சிவயோகிகளே
காலத்தை வென்று இருப்பார் மரிப்பார் வெறும் கர்மிகளே.

பொருளுரை‬: 
நீலநிற மயில் வாகனத்தின் மீது ஏறுகின்ற திருமுருகப்பெருமான் எந்த நேரத்திலும் அழகுமிக்க வள்ளியம்மையாருடன் அருள்புரிவதற்கு வருவார். மேலும் அடியேனின் குருமூர்த்தியாகிய எம்பெருமான் உபதேசித்த மெய்ப்பொருளின் தன்மையை மெல்ல தேர்ந்து தெளிந்து புரிந்துகொள்பவர்களாகிய சிவயோகிகள் மாத்திரமே கால தத்துவத்தை வென்று அதனைக் கடந்து காலாதீதராக இருப்பார்கள். வெறும் கர்மயோகிகளோ காலத்துக்கு உட்பட்டு மாய்ந்துபோவர்.


பாடல் எண் : 27
ஓலையும் தூதரும் கண்டு திண்டாடல் ஒழித்து எனக்குக்
காலையும் மாலையும் முன்னிற்குமே கந்தவேள் மருங்கில்
சேலையும் கட்டிய சீராவும் கையில் சிவந்த செச்சை
மாலையும் சேவல் பதாகையும் தோகையும் வாகையுமே.

பொருளுரை‬: 
திருமுருகப்பெருமானின் பக்தனாகிய அடியேன் இயமனின் ஓலையையும் அவனது தூதரையும் கண்டு கலங்குவதே இல்லை காரணம், கந்தவேளாகிய திருமுருகப்பெருமான் தம் பீதாம்பரத்தின் மீது கட்டும் கச்சை, அதில் செருகிய சிறிய கூரிய உடைவாள், தோளில் அணிந்த சிவந்த நிறமுடைய வெட்சி மலர்மாலை, சேவற்கொடி, மயில் வாகனம் வெற்றி மாலைகள் ஆகியவற்றோடு எனக்கென்று காலையிலும் மாலையிலும் அடியேன்முன் காட்சியளித்து அருள்புரிகின்றார். 


பாடல் எண் : 28
வேலே விளங்கும் கையான் செய்ய தாளினில் வீழ்ந்து இறைஞ்சி
மாலே கொள இங்ஙன் காண்பது அல்லால் மனம் வாக்குச் 
செயலாலே அடைதற்கு அரிதாய் அரு உருவாகி ஒன்று
போலே இருக்கும் பொருளை எவ்வாறு புகல்வதுவே.

பொருளுரை‬: 
வேலாயுதமே விளங்கும் திருகரத்தையுடைய திருமுருகப்பெருமானின் சிவந்த திருவடியில் விழுந்து அன்புடன் வணங்குவதே அப்பரம்பொருளை இவ்வுலகத்தில் காண்பதற்குரிய ஒரே வழியாகும். மனம், வாக்கு, செயல் என்ற முக்கரணங்களால் பெறுதற்கு அரியதாகி அருவமும் உருவமும் ஆகி எப்போதும் மாறுபாடின்றி ஒரு தன்மையாகவே திகழும் பரம்பொருளை வேறு எவ்வாறு எடுத்துச்சொல்வது?.


பாடல் எண் : 29
கடத்தில் குறத்தி பிரான் அருளால் கலங்காத சித்தம்
திடத்தின் புணையென யான் கடந்தேன் சித்ரமாதர் அல்குல்
படத்தில் கழுத்தில் பழுத்த செவ்வாயில் பணையில் உந்தித்
தடத்தில் தனத்தில் கிடக்கும் வெங் காம சமுத்திரமே.

பொருளுரை‬: 
குறிஞ்சி நிலத்தில் வாழ்கின்ற குறத்தி வள்ளி அம்மையாரின் கணவராகிய திருமுருகப்பெருமானின் அருளால், கலக்கமடையாத உள்ளத்தின் உறுதியைத் தெப்பமாகக்கொண்டு அடியேன், அழகிய பெண்களின் நிதம்பத்திலும் கழுத்திலும் சிவந்த அதரங்களிலும் மூங்கில் போன்ற தோள்களிலும் நாபியாகிய தடாகத்திலும் கொங்கைகளிலும் கிடக்கின்ற வெப்பமாகிய காமம் என்னும் கடலைத் தாண்டிக் கரையேறினேன். 


பாடல் எண் : 30
பால் என்பது மொழி பஞ்சு என்பது பதம் பாவையர் கண்
சேல் என்பதாகத் திரிகின்ற நீ செந்திலோன் திருக்கை
வேல் என்கிலை கொற்ற மயூரம் என்கிலை வெட்சித் தண்டைக்
கால் என்கிலை மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே.

பொருளுரை‬: 
பாலை ஒத்தது பெண்களின் சொல், பஞ்சை ஒத்தது பாதம், கண்கள் கெண்டை மீனை ஒத்தவை என்று எண்ணி மயங்கித் திரிகின்ற மனமாகிய நீ, திருச்செந்தூர்த் திருமுருகப்பெருமானின் திருக்கையில் விளங்கும் வேலாயுதமே என்று சொல்கின்றாயில்லை; வெற்றிபொருந்திய மயில் என்றும் சொல்கின்றாயில்லை; வெட்சி மலரையும் தண்டையையும் அணிந்த திருவடிகள் என்கின்றாயில்லை. ஆதலால் நீ முத்திப் பேற்றை அடைவது எங்ஙனமோ?.


தொடரும் பாடல்களும் விளக்கமும் அடுத்த பதிவில்..........!


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக