செவ்வாய், 15 நவம்பர், 2016

கவலைகள் தீர்க்கும் கார்த்திகை மாதம்

கார்த்திகை மாதம் முதல் தேதி (16-11-2016) புதன்கிழமை முடவன் முழுக்கு. ஐப்பசி மாதம் முழுவதும் ஒரு நாள் கூட ஸ்ரீ ரங்கம் காவேரியில் நீராட முடியாதவர்கள் இன்று அவசியம் காவேரியில் நீராட வேண்டும். இதனால் துலா ஸ்நானம் செய்த புண்ணிய பலன் கிடைக்கும்.


கார்த்திகை மாதத்தில் எந்த வகையான புண்ணிய காரியம் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. 'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என்று கூறிய பகவான் கிருஷ்ணர், கார்த்திகை மாதம் முழுவதும் எல்லா நீர் நிலைகளிலும் வாசம் செய்கிறார். அதே போல் ஈசனும் தீப ஜோதியாக தோன்றிய மாதம் இது என்பதால் கார்த்திகையின் சிறப்பு மிகவும் உயர்ந்ததாக இருக்கிறது.

கார்த்திகை மாத திங்கட்கிழமையன்று உபவாசம் இருந்து சிவபெருமானைப் பூஜிப்பதை சோமவார விரதம் என்பர். இது அளவற்ற புண்ணியத்தைக் கொடுக்கும். அன்று இறைவனுக்குச் செய்யும் அபிஷேகம், அர்ச்சனைக்கு விசேஷ பலன் உண்டு. 

கார்த்திகை மாதம் என்றவுடன் கார்த்திகை தீபத் திருநாளும், கடுங்குளிரிலும் அதிகாலையிலேயே குளித்து, நெற்றியில் சந்தனத்துடன் சரணம் சொல்லி விரதம் இருக்கும் ஐயப்ப பக்தர்களின் பக்தி சிரத்தையும் நம் நினைவிற்கு வரும். பஞ்சபூத க்ஷேத்திரங்களில் அக்னி ஸ்தலம் ஆகிய திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருநாள் அன்று சிவபெருமானின் ஜோதி ஸ்வரூபத்தினைக் காணும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒருமித்த குரலில் பக்திப் பரவசத்தோடு "அரோகரா" என்று ஆர்ப்பரிக்கும் சத்தம் ஆகாயத்தைத் தொடும். 


கார்த்திகை மாதம் முழுவதும் பெரிய ஆலயங்கள் மட்டுமல்லாது, சிறு கோயில்களும் விளக்கொளியில் மின்னும். ஆன்மிக அதிர்வலைகளால் நம் அகத்தினில் உள்ள அழுக்கினை அகற்றி நெஞ்சத்திற்கு நெகிழ்ச்சியைத் தரும் கார்த்திகை மாதத்தின் தனிச்சிறப்பினைக் காண்போமா..! ஜோதிட சாஸ்திர ரீதியாக ஆராய்ந்தால், கார்த்திகை நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தில் பௌர்ணமி தோன்றும் மாதத்தை கார்த்திகை மாதம் என்றழைக்கிறோம். இவ்வாறே சித்திரை, வைகாசி என தமிழ் மாதங்கள் அனைத்தும் பௌர்ணமி நிலவு தோன்றும் நாளில் சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரத்தின் பெயரில் அமைந்திருப்பதை நாம் காணலாம். சந்திரனுக்கு "திங்கள்" என்ற பெயரும் உண்டு. 

எனவே தான் திங்கள் என்றால் மாதம் என்றும் பொருள் கூறுவர் நம் தமிழறிஞர்கள். மற்ற மாதங்களில் உண்டாகும் பௌர்ணமி நாட்களை விட கார்த்திகை மாதப் பௌர்ணமிக்கு ஏன் இத்தனை மகத்துவம்? ஜோதிடத்தில் சந்திரனை மனோகாரகன் என்றழைப்பர். நாம் பிறக்கும் நாளன்று சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரமே நமது ஜென்ம நட்சத்திரமாகவும், சந்திரன் அமர்ந்திருக்கும் ராசியே நமது ஜென்ம ராசியாகவும் அமைகிறது. மனிதனின் மனநிலைக்கும், சந்திரனுக்கும் முழுமையான தொடர்பு உண்டு. 

எனவே தான் சந்திராஷ்டம நாட்களில் நம் மனம் சஞ்சலப்படுவதை நாம் கண்கூடாகக் காணலாம். இப்படி நம் மனதோடு முழுமையான தொடர்பினைக் கொண்ட சந்திரன் ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும் முழுமையாக வளர்ந்து நின்றாலும், 100 சதவீத பலத்துடன் இருப்பது கார்த்திகை மாதப் பௌர்ணமியில் மட்டுமே. அதாவது, ரிஷப ராசியில் உச்ச பலத்துடன் முழு நிலவாக பௌர்ணமிச் சந்திரன் சஞ்சரிப்பது கார்த்திகை மாதத்தில் மட்டுமே வரக்கூடிய நிகழ்வாகும். மனோகாரகன் சந்திரன் முழுமையாக பலம் பெற்று ஒளி வீசும் அந்த நாள் நம் மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. குறிப்பாக நம் உள்ளத்தில் இருட்டினைப் போக்கி ஒளியினைப் பாய்ச்சுகிறது. இதன் அறிகுறியாக நம் இல்லங்களில் வரிசையாக விளக்கேற்றி கொண்டாடுகிறோம்.

ஜோதிடத்தில் சந்திரனை தாயாகவும், சூரியனைத் தந்தையாகவும் உருவகப்படுத்துவார்கள். சந்திரன் ஆகிய தாய், சூரியனின் நட்சத்திரம் ஆகிய கிருத்திகையில், உச்ச பலத்தோடு முழுநிலவு ஆக ஒளி வீசும் காலம் இந்த கார்த்திகை மாதம். அதாவது, அம்மை-அப்பனின் இணைவாக, அர்த்தநாரீஸ்வர வடிவாக சிவபெருமான் அருள்புரியும் காலம் இது என்பதால் உலகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் கார்த்திகை மாதம் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. பல்வேறு காரணங்களால் கணவரை விட்டுப் பிரிந்து வாழும் பெண்கள் கார்த்திகை மாதத்தில் அருகில் உள்ள சிவாலயத்தில் விளக்கேற்றி வழிபட்டு வர விரைவில் கருத்து வேறுபாடு நீங்கி கணவரோடு இணைந்து வாழ்வர்.

கார்த்திகை மாதத்தின் பெயரோடு தொடர்புடைய கார்த்திகைப் பெண்களைப் பற்றியும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். காமதகனத்தின் போது சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட நெருப்புக் கணைகளில் இருந்து தோன்றிய குழந்தைகளை வளர்க்கும் பணியினை மேற்கொண்டவர்கள் இந்த கார்த்திகைப் பெண்கள். நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களின் ஸ்தீரீ ஸ்வரூபமே இவர்கள் என்றும், இவர்களோடு பார்வதி அன்னை தனது அம்சமாக ஒரு சக்தி தேவியையும் இணைத்து, அக்குழந்தைகளை வளர்க்க ஆறு பெண்களை நியமித்தார். 

கிருத்திகை நட்சத்திரத்திற்கு உரிய மந்திரத்தில் இவர்களின் பெயர்களை வரிசையாகக் காணமுடியும். அதோடு, அக்னி எனப்படும் நெருப்பினை கிருத்திகைக்கு உரிய தேவதையாக வேதம் சொல்கிறது, நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட நெருப்புக் கணைகளில் இருந்து தோன்றிய குழந்தைகளை வளர்த்ததால் இவர்கள் கார்த்திகைப் பெண்கள் என்று அழைக்கப்பட்டனர். அந்த ஆறு குழந்தைகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஷண்முகன் எனப்படும் ஆறுமுகனாகக் காட்சியளித்த நாளே இந்த கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திர நாள் ஆகும். இதனாலேயே முருகப்பெருமான் கார்த்திகேயன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். 

விநாயகருக்கு சதுர்த்தி போல, முருகனுக்கு கிருத்திகை உகந்தது என்பது நாம் அறிந்ததே. பிரதி மாதம் வருகின்ற கிருத்திகை, முருகனுக்கு உகந்த நாள் என்றாலும் கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை நாள் ஆறுமுகன் அவதரித்த  நாளாக அமைவதால் தனிச்சிறப்பு வாய்ந்ததுதானே! எனவே தான் கார்த்திகை தீபமானது முருகப்பெருமானின் திருத்தலங்களிலும் ஏற்றப்படுகிறது. பஞ்சாங்கத்தில் ஒரு வருடத்தினை ஆறு காலங்களாகப் (ருதுக்களாக) பிரித்திருப்பார்கள். இந்த ஆறு ருதுக்களில், ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதத்தினைக் கொண்ட "ஷரத் ருது" என்பது மிகவும் விசேஷமாக வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 


"சதம் ஜீவேம ஷரதோ வர்த்தமான" என்று ரிக் வேதமும், "சதம் ஜீவேம ஷரத: ஸவீரா" என்று யஜுர் வேதமும் ஆசீர்வதிக்கின்றன. திருமணத்தில் மங்கல நாண் அணிவிக்கும்போது சொல்லப்படும் "மாங்கல்யம் தந்துநானேன.." என்ற மந்திரம் கூட "த்வம் ஜீவ ஷரத:சதம்" என்று தான் முடியும். அதாவது, நாம் இருவரும் ஒன்றாக இணைந்து சிறப்பு வாய்ந்த நூறு ஷரத் ருதுக்களை சந்திக்க வேண்டும் என்று மணமகன் மணமகளிடம் சொல்வது போல் அமைந்துள்ளது இந்த மந்திரம். அம்பாளை ஆராதிக்கும்போது "ஷரத் சந்த்ர சந்திரிகாயை நம" என்று சொல்லி அர்ச்சனை செய்வார்கள்.

வேதம் போற்றும் இந்த "ஷரத் ருது" காலத்தில் முதலில் வரும் ஐப்பசி மாதத்தில் சூரியன் நீச பலத்துடன் சஞ்சரிப்பார். கார்த்திகை மாதம் முதல் நாள் அன்று சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயருவார். அதாவது, அதுவரை துலாம் ராசியில் தனது பலத்தினை முழுமையாக இழந்து நீசம் என்ற நிலையில் சஞ்சரித்து வந்த சூரியன், தான் முழுமையாக வலிமை பெற தனது பயணத்தைத் துவக்கும் காலமே கார்த்திகை மாதம். கார்த்திகை மாதம் முதல் தேதி அன்று பஞ்சாங்கத்திலும், காலண்டரிலும் முடவன் முழுக்கு என்று குறித்திருப்பார்கள். 

ஐப்பசி மாதத்தில் துலா ஸ்நானம் செய்து இறைவனை தரிசிக்க விரும்பிய கால் ஊனமுற்ற ஒரு பக்தர் தான் வசிக்கும் ஊரிலிருந்து மிகவும் சிரமப்பட்டு நடந்தும் ஊர்ந்தும் வந்து காவிரி புண்ணிய நதியில் ஸ்நானம் செய்து சிரத்தையுடன் வணங்கினான். ஆனால், அவன் அவ்வாறு வணங்கிய நாள், துலாம் மாதம் முடிந்த மறுநாள்! அப்போதும் அவனது பக்தியை மெச்சி அவனுக்கு ரிஷப வாகனத்தில் இறைவன் அம்பிகையோடு இணைந்து தரிசனம் தந்தன். அந்த நாளே இந்த கார்த்திகை மாதத்தின் முதல் நாள்.

நம் உடம்பில் உள்ள நாடி, நரம்புகள் எல்லாம் கார்த்திகை மாதத்தில் தான் சீராக இயங்கும் என்று சொல்வார்கள். இந்த காலத்தில் தியானத்தில் ஈடுபடுவோர்க்கு நிச்சயம் ஞானம் சித்தியாகும் என்பது அனுபவித்தவர்கள் கண்ட உண்மை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து, நேர்த்தியாக விரதம் இருந்து பக்தர்கள் ஞானகுருவாக ஐயப்பனை நினைத்து உருகி தங்களது சரண கோஷத்தினால் பரவச நிலையினை அடைகின்றனர். இத்துணை பெருமை வாய்ந்த இந்த கார்த்திகை மாதத்தில் நம் இல்லங்களில் மட்டுமின்றி அருகிலுள்ள ஆலயத்திலும் விளக்கேற்றி வழிபடுவோம். கவலைகள் மறப்போம். 

நன்றி : திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக