வியாழன், 24 நவம்பர், 2016

போற்றி திருத்தாண்டகம் - திருக்கயிலாயம்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ கைலாயநாதர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பார்வதி தேவி

திருமுறை : ஆறாம் திருமுறை 56 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
பொறையுடைய பூமி நீர் ஆனாய் போற்றி
பூதப்படையாள் புனிதா போற்றி
நிறையுடைய நெஞ்சின் இடையாய் போற்றி
நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி
மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி
வானோர் வணங்கப்படுவாய் போற்றி
கறையுடைய கண்டம் உடையாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொருளுரை:
எதனையும் தாங்குதலை உடைய நிலமாகவும் நீராகவும் இருப்பவனே! பூதப்படையை ஆளும் தூயவனே! நல்வழியில் நிறுத்தப்படும் நெஞ்சில் இருப்பவனே! என் உள்ளத்தில் நீங்காது இருப்பவனே! மறைத்துச் சொல்லப்படும் பொருள்களை உடைய வேதத்தை விரித்து உரைத்தவனே! தேவர்களால் வணங்கப் படுபவனே! நீலகண்டனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.


பாடல் எண் : 02
முன்பாகி நின்ற முதலே போற்றி 
மூவாத மேனி முக்கண்ணா போற்றி
அன்பாகி நின்றார்க்கு அணியாய் போற்றி 
ஆறேறு சென்னிச் சடையாய் போற்றி
என்பாக எங்கும் அணிந்தாய் போற்றி 
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
கண்பாவி நின்ற கனலே போற்றி 
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொருளுரை:
எல்லாவற்றிற்கும் முன் உள்ள காரணப்பொருளே! மூப்படையாத உடலை உடைய முக்கண் பெருமானே! அன்பர்களுக்கு ஆபரணமே! கங்கைச் சடையனே! எலும்பாகிய அணிகலன்கள் உடையவனே! என் உள்ளத்தை நீங்காத தலைவனே! கண்ணில் பரவியுள்ள ஒளியே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.


பாடல் எண் : 03
மாலை எழுந்த மதியே போற்றி 
மன்னி என் சிந்தை இருந்தாய் போற்றி
மேலை வினைகள் அறுப்பாய் போற்றி 
மேலாடு திங்கள் முடியாய் போற்றி
ஆலைக் கரும்பின் தெளிவே போற்றி
அடியார்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
காலை முளைத்த கதிரே போற்றி 
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொருளுரை:
மாலை மதியமே! என் சிந்தையில் நிலைபெற்று இருப்பவனே! இனித்தோன்றும் என் வினைகளைப் போக்குபவனே! வானில் உலவும் பிறை முடியனே! ஆலையில் பிழியப்படும் கருப்பஞ் சாற்றின் தெளிவே! அடியார் அமுதமே! காலையில் தோன்றும் இளஞாயிறே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.


பாடல் எண் : 04
உடலின் வினைகள் அறுப்பாய் போற்றி 
ஒள்ளெரி வீசும் பிரானே போற்றி
படரும் சடைமேல் மதியாய் போற்றி 
பல்கணக் கூத்தப் பிரானே போற்றி
சுடரில் திகழ்கின்ற சோதீ போற்றி 
தோன்றி என் உள்ளத்து இருந்தாய் 
போற்றி கடலில் ஒளியாய முத்தே போற்றி 
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொருளுரை:
உடலில் நுகரப்படும் வினைகளை அறுப்பவனே! எரியை ஏந்தி ஆடும் பிரானே! பிறையை அணிந்த சடையனே! பல பூதங்களோடு கூத்தாடும் பெருமானே! விளக்குப் போல ஒளிவிடுகின்ற சோதியே! என் உள்ளத்தில் தோன்றியிருப்பவனே! கடலில் ஆழ்ந்திருக்கும் முத்துப் போன்றவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.


பாடல் எண் : 05
மைசேர்ந்த கண்டம் மிடற்றாய் போற்றி
மாலுக்கும் ஓராழி ஈந்தாய் போற்றி
பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி
போகாது என் உள்ளத்து இருந்தாய் போற்றி
மெய்சேரப் பால்வெண்ணீறு ஆடீ போற்றி
மிக்கார்கள் ஏத்தும் விளக்கே போற்றி
கைசேர அனலேந்தி ஆடீ போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொருளுரை:
நீலகண்டனே! திருமாலுக்குச் சக்கரம் ஈந்தவனே! ஐயம் திரிபுகள் உள்ள உள்ளங்களில் புகாதவனே! என் உள்ளத்தே நீங்காது இருப்பவனே! உடல் முழுதும் வெள்ளிய நீறு பூசியவனே! சான்றோர்கள் போற்றும் ஞானதீபமே! கையில் அனலை ஏந்திக் கூத்து நிகழ்த்துபவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.


பாடல் எண் : 06
ஆறேறு சென்னி முடியாய் போற்றி 
அடியார்கட்கு ஆரமுதாய் நின்றாய் போற்றி
நீறேறு மேனி உடையாய் போற்றி 
நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி
கூறேறு மங்கை மழுவா போற்றி 
கொள்ளுங் கிழமை ஏழானாய் போற்றி
காறேறு கண்டம் மிடற்றாய் போற்றி 
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொருளுரை:
கங்கைச் சடையனே! அடியார்களுக்கு ஆரமுதே! நீறு பூசிய மேனியனே! நீங்காது என் உள்ளத்து இருப்பவனே! கையில் கூரிய மழுப்படையை ஏந்தியவனே! ஏழு கிழமைகளாகவும் உள்ளவனே! நீலகண்டனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.


பாடல் எண் : 07
அண்டம் ஏழ் அன்று கடந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
பண்டை வினைகள் அறுப்பாய் போற்றி
பாரோர் விண் ஏத்தப்படுவாய் போற்றி
தொண்டர் பரவும் இடத்தாய் போற்றி 
தொழில் நோக்கி ஆளும் சுடரே போற்றி
கண்டம் கறுக்கவும் வல்லாய் போற்றி 
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொருளுரை:
ஏழுலகம் கடந்தவனே! ஆதிப்பழம் பொருளே! பழைய வினைகளை நீக்குபவனே! மன்னவரும் விண்ணவரும் போற்றும் மூர்த்தியே! அடியார்கள் போற்றும் திருத்தலங்களில் உறைபவனே! வழிபாட்டினை நோக்கி அடியவர்களை ஆளும் ஒளியே! நீலகண்டனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.


பாடல் எண் : 08
பெருகி அலைக்கின்ற ஆறே போற்றி 
பேரா நோய் பேர விடுப்பாய் போற்றி
உருகி நினைவார் தம் உள்ளாய் போற்றி
ஊனம் தவிர்க்கும் பிரானே போற்றி
அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி
ஆரும் இகழப் படாதாய் போற்றி
கருகிப் பொழிந்து ஓடும் நீரே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொருளுரை:
பெருகி அலைவீசும் ஆறு போல்பவனே! நீங்காத நோய்களை நீக்குபவனே! உருகி நினைப்பவர்களின் உள்ளத்தில் உள்ளவனே! குறைபாடுகளை நீக்கும் பெருமானே! அரிதில் கிட்டப் பெற்று ஒளிவீசும் பொன் போன்றவனே! ஒருவராலும் குறை கூறப் படாதவனே! கார்மேகமாகிப் பொழியும் மழையானவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.


பாடல் எண் : 09
செய்ய மலர் மேலான் கண்ணன் போற்றி 
தேடி உணராமை நின்றாய் போற்றி
பொய்யா நஞ்சுண்ட பொறையே போற்றி
பொருளாக என்னை ஆட்கொண்டாய் போற்றி
மெய்யாக ஆனஞ்சு உகந்தாய் போற்றி
மிக்கார்கள் ஏத்தும் குணத்தாய் போற்றி
கையானை மெய்த்தோல் உரித்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொருளுரை:
செந்தாமரை மலர்மேல் உள்ள பிரமனும் திருமாலும் தேடியும் காணமுடியாதவாறு நின்றவனே! விடத்தை உண்ட தவறாத அருள் வடிவே! என்னையும் ஒரு பொருளாக ஆண்டு கொண்டவனே! பஞ்சகவ்விய நீராட்டை விரும்புபவனே! சான்றோர்கள் புகழும் நற்குணனே! துதிக்கையை உடைய யானைத் தோலை உரித்தவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.


பாடல் எண் : 10
மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி 
மேலாடு புரம் மூன்றும் எய்தாய் போற்றி
சீலத்தான் தென்னிலங்கை மன்னன் போற்றி
சிலையெடுக்க வாய் அலற வைத்தாய் போற்றி
கோலத்தால் குறைவு இல்லான் தன்னை அன்று
கொடிதாகக் காய்ந்த குழகா போற்றி
காலத்தால் காலனையும் காய்ந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொருளுரை:
மேல் உலகில் தங்கும் வாய்ப்பளிக்கப்பட்ட தேவர்கள் தலைவனே! வானில் உலவிய மூன்று மதில்களையும் அம்பு எய்து அழித்தவனே! இராவணன் கயிலையைப் பெயர்க்க அவனை வாயால் அலற வைத்துப் பின் அவனை, உன்னை வழிபடும் பண்பினன் ஆக்கியவனே! அழகில் குறைவில்லாத மன்மதனை ஒருகாலத்தில் சாம்பலாகும்படி கோபித்தவனே! ஒருகாலத்தில் கூற்றுவனையும் வெகுண்டவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக