வியாழன், 24 நவம்பர், 2016

போற்றி திருத்தாண்டகம் - திருக்கயிலாயம்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ கைலாயநாதர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பார்வதி தேவி

திருமுறை : ஆறாம் திருமுறை 55 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத்து ஒலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொருளுரை:
விண்ணாகவும், விண்ணிலிருந்து வேறான மற்ற நான்கு பூதங்களாகவும் நிற்பவனே, நான் வேறு எந்த தெய்வத்தையும் நாடாமல் இருக்குமாறு என்னை ஆட்கொண்டவனே, புறக்கண்ணுக்குப் புலப்படாமல் ஒளிந்து உள்ளத்தினுள்ளே இன்ப ஊற்றாகி எல்லை இல்லாத இன்பம் அளிப்பவனே, இடையறாத சொற்கள் வாயிலாக ஒலியாக ஒலிப்பவனே,   ஆறு அங்கங்கள், நால் வேதங்கள், மற்றும் ஐம்பூதங்களில் அவைகளின் சக்தியாக அமர்ந்து இருப்பவனே, காற்றாகி எங்கும் கலந்து இருப்பவனே, கயிலை மலையில் உறையும் இறையவனே, உன்னை போற்றி, போற்றி என்று பலமுறை போற்றி வணங்குகின்றேன்.


பாடல் எண் : 02
பிச்சாடல் பேயோடு உகந்தாய் போற்றி 
பிறவி அறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி 
மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாகம் அசைத்தாய் போற்றி 
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொருளுரை:
பேய்களோடு நடனம் ஆடுவதை உகந்தவனே, பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து உயிர்களுக்கு விடுதலை அளிக்கும் வல்லமை படைத்தவனே, உயிர்களை அவற்றின் வினைத் தொகுதிகளுக்கு ஏற்ப பல வகையான உடல்களில் வைத்து, அந்த உயிர்கள் வினைகளைத் தீர்த்துக் கொள்வதைக் கண்டு மகிழ்பவனே, விருப்பமுடன் எனது சிந்தையில் புகுந்தவனே, மெய்ப்பொருளான உன்னை விடுத்து பொய்யான பொருளைச் சார்ந்து இருந்த முப்புரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்தவனே, எனது சிந்தையினில் புகுந்த பின்னர் அங்கிருந்து நீங்காது இருப்பவனே, இடுப்பினில் கச்சு போன்று நாகத்தை அணிந்தவனே, கயிலை மலையில் உறையும் இறையவனே, உன்னை போற்றி, போற்றி என்று பலமுறை போற்றி வணங்குகின்றேன்.


பாடல் எண் : 03
மருவார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி 
மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி 
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி 
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி 
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொருளுரை:
சிவநெறியில் பொருந்தாமல் வேறு நெறியைச் சார்ந்திருந்து, உலகத்தவரை வருத்திய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் ஒரே அம்பால் எரித்தவனே, மிகவும் விருப்பத்துடன் எனது சிந்தனையில் புகுந்தவனே, பிரமனின் உருக் கொண்டு என்னை படைத்தவனே, உடலின் உள்ளே இருக்கும் உயிரினை எவரும் காணாத வண்ணம் ஒளித்தவனே, பக்குவம் அடைந்த உயிர்களுக்கு உயர்ந்த முக்திச் செல்வத்தை அளித்து, என்றும் தீராத இன்பம் அளிக்கும் திறமை படைத்தவனே, உலகத்தார் அனைவராலும் வணங்கப் படுபவனே, நீரினை உட்கொண்ட மேகமாக நின்று மழை பொழிந்து உலகுக்கு நன்மை விளைவிப்பவனே, கயிலை மலையில் உறையும் இறையவனே, உன்னை போற்றி, போற்றி என்று பலமுறை போற்றி வணங்குகின்றேன்.


பாடல் எண் : 04
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி 
வந்து எந்தன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி 
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி 
தேவர்க்கும் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ ஆடல் உகந்தாய் போற்றி 
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொருளுரை:
விண்ணில் வாழும் தேவர்கள் போற்றும் மருந்தே, எனது சிந்தையில் வந்து புகுந்த இறைவரே, உயிர்களின் ஊனமாகிய மலங்களை நீக்கும் கருணை உள்ளம் கொண்டவரே, திருமாலும் பிரமனும் உன்னைத் தேடித் திரிந்து உன்னைக் காணாமல் தவித்த போது  அவர்கள் முன்னே விண் முட்டும் அளவுக்கு தீப்பிழம்பாக உயர்ந்தவனே, வடிகட்டப்பட்ட தேனைப் போல் தெளிவாக உள்ளவனே, தேவர்களுக்கு எல்லாம் தேவனாகத் திகழ்பவனே, சுடுகாட்டுத் தீயில் கூத்து ஆடுவதை விரும்பவனே, கயிலை மலையில் உறையும் இறையவனே, உன்னை போற்றி, போற்றி என்று பலமுறை போற்றி வணங்குகின்றேன்.


பாடல் எண் : 05
ஊராகி நின்ற உலகே போற்றி 
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி எங்கும் பரந்தாய் போற்றி 
பெயராது என் சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவியான நிழலே போற்றி 
நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி 
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொருளுரை:
பல தலங்களில் உறைந்து உலகெங்கும் பரவி இருப்பவனே, பிரமனும் திருமாலும் உமது  அடி முடி காண முயன்ற போது உயர்ந்த அழலாய் நிமிர்ந்தவனே, மிகுந்த புகழ் உடையவனாய் உலகெங்கும் பரந்து இருப்பவனே, எனது சிந்தையில் புகுந்த பின்னர் அங்கிருந்து பெயர்ந்து வெளியே செல்லாது அங்கேயே நிலையாக இருப்பவனே, நீரினைத் தழுவி வரும் காற்று போலவும் நிழலைப் போலவும் குளிர்ச்சியாக உள்ளவனே, தனக்கு ஒப்பாக எவரும் இல்லாத நிலை கொண்ட ஒப்பற்றவனே, மழை பொழியும் கருத்த மேகம் போன்று அனைவர்க்கும் அருள் மழை பொழியும் அருட்கடலே, கயிலை மலையில் உறையும் இறையவனே, உன்னை போற்றி, போற்றி என்று பலமுறை போற்றி வணங்குகின்றேன்.


பாடல் எண் : 06
சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி 
தேவர் அறியாத தேவே போற்றி
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்ந்தாய் போற்றி 
போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி 
பற்றி உலகை விடாதாய் போற்றி
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி 
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொருளுரை:
பல சிறிய தெய்வங்களாகிய தேவர்களாகவும், அனைத்துத் தேவர்களின் திறனும் வல்லமையும் ஒருங்கே திரண்டது போன்ற பெரிய தேவனாகவும் இருப்பவனே, தேவர்கள் அறிய முடியாத தேவனே, புல் போன்ற எளிய உயிர்கள் உட்பட அனைத்து உயிர்களுக்கும் உணவு மற்றும் உறைவிடம் அமைத்துக் கொடுத்து, அனைத்து உயிர்களும் வாழ வகை வகுப்பவனே, எனது சிந்தையுள் புகுந்த பின்னர் வெளியே செல்லாது அங்கேயே தங்கி இருப்பவனே, எல்லா உயிர்களிலும் நிறைந்து உலகம் முழுதும் பரந்து நிற்பவனே, உலகத்தையும், உலகத்தில் உள்ள உயிர்களையும், உலகில் உள்ள பொருட்களையும் பற்றி அனைத்தையும் விடாமல் காப்பவனே, கல்லினுள் காணப்படும் நுண்மையான உயிர்களையும் காப்பவனே, கயிலை மலையில் உறையும் இறையவனே, உன்னை போற்றி, போற்றி என்று பலமுறை போற்றி வணங்குகின்றேன்.


பாடல் எண் : 07
பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி 
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி 
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி 
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி 
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொருளுரை:
பண்ணாகவும், பண்ணிலிருந்து பிறக்கும் இசையாகவும் நிற்பவனே, உன்னை உள்ளத்தில் தியானிப்பவர்களின் பாவத்தை அறுப்பவனே, எண்ணாகவும், எழுத்தாகவும், எழுத்துக்கள் அடங்கிய சொற்களாகவும் உள்ளவனே, எனது சிந்தையில் நீங்காது இருப்பவனே, விண்ணாகவும், மண்ணாகவும், தீயாகவும், மற்றும் உள்ள நீராகவும், காற்றாகவும் இருப்பவனே, மேலோர்களுக்கேல்லாம் மேலான தலைவனே, கண்ணின் மணியாகத் திகழ்பவனே, கயிலை மலையில் உறையும் இறையவனே, உன்னை போற்றி, போற்றி என்று பலமுறை போற்றி வணங்குகின்றேன்.


பாடல் எண் : 08
இமையாது உயிராய் இருந்தாய் போற்றி 
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமை பாகம் ஆகத்து அணைத்தாய் போற்றி 
ஊழி ஏழான ஒருவா போற்றி
அமையா வருநஞ்சம் ஆர்ந்தாய் போற்றி 
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி 
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொருளுரை:
மற்றவர்கள் போல் அல்லாமல் கண்கள் இமைக்காமலும், மூச்சு இழுப்பதும் விடாமாலும் இருப்பவனே, எனது உள்ளத்திலிருந்து நீங்காமல் இருப்பவனே, உமை அம்மையை தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்து இருப்பவனே, ஊழிக் காலத்திற்கு பின்னர் தோன்றும் ஏழு உலகங்களாக இருப்பவனே, உடலுக்குப் பொருந்தாத நஞ்சினை அருந்தியும் உயிருடன் இருப்பவனே, அனைவருக்கும் மூத்தவனாய் முழுமுதல் கடவுளாகத் திகழ்பவனே, பொறுமையாக செயல்படும் ஞான ஒளியே, கயிலை மலையில் உறையும் இறையவனே, உன்னை போற்றி, போற்றி என்று பலமுறை போற்றி வணங்குகின்றேன்.


பாடல் எண் : 09
மூவாய் பிறவாய் இறவாய் போற்றி 
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர் தொழும் தேவே போற்றி 
சென்றேறி எங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக்கு எல்லாம் போற்றி 
அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி 
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொருளுரை:
அனைவருக்கும் மூத்தவனே, பிறத்தல் மற்றும் இறத்தல் இன்றி எல்லாப் பொருட்களுக்கும் முற்பட்டு இயற்கையாகவே தோன்றி விளங்குபவனே, தேவர்களின் தலைவர்களும் தொழும் தேவனே, எங்கும் செல்லாமலே உலகெங்கும் பரவி இருப்பவனே, வருந்தும் அடியேனுக்கு எல்லாமாய் இருப்பவனே, பொன் திரண்டு காணப்படுவது போல் காட்சி தரும் கயிலை மலையை உடையவனே, பல துன்பங்கள் வருத்தும் என்னைக் காப்பாயாக, கயிலை மலையில் உறையும் இறையவனே, உன்னை போற்றி, போற்றி என்று பலமுறை போற்றி வணங்குகின்றேன்.


பாடல் எண் : 10
நெடிய விசும்பொடு கண்ணே போற்றி 
நீள அகலம் உடையாய் போற்றி
அடியும் முடியும் இகலிப் போற்றி 
அங்கு ஒன்று அறியாமை நின்றாய் போற்றி
கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி 
கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி 
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொருளுரை:
பெரிய பரப்பினை உடைய ஆகாயத்திற்கு இருப்பிடமாய் அமைந்தவனே; எல்லாப் பொருட்களின் நீளத்தையும் அகலத்தையும் கடந்தவனே, தங்களுக்குள் யார் பெரியவன் என்பதில் மாறுபட்டு, தங்களது திறமையை நிரூபிக்கும் வண்ணம் அடியையும் முடியையும் காண்போம் என்று முயற்சி செய்த திருமால் மற்றும் பிரமன் இருவரும் அடிமுடி காண முடியாதபடி உயர்ந்த அழலாய் நின்ற பெருமானே; சிவ வழிபாடு செய்யும் சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைக் கவர வந்த வல்லமை படைத்த இயமனை உதைத்து, சிறுவனை காத்தவனே; எனது சிந்தையினை கோயிலாகக் கொண்டு அங்கே உறையும் பெருமானே; வலிமையான இடியாகவும் மின்னலாகவும் தோன்றி பின்னர் மழையாகப் பொழிந்து உலகினுக்கு அருள் புரிபவனே; கயிலை மலையில் உறையும் இறையவனே; உன்னை போற்றி, போற்றி என்று பலமுறை போற்றி வணங்குகின்றேன்.


பாடல் எண் : 11
உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி 
ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி 
இறை விரலால் வைத்து உகந்த ஈசா போற்றி
பண்ணார் இசையின் சொல் கேட்டாய் போற்றி
பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணாய் உலகுக்கு நின்றாய் போற்றி 
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொருளுரை:
மற்றவர்கள் போல் உண்ணுதல் உறங்குதல் ஆகிய செய்கைகளை நீத்தவனே, நீயே வேதத்தின் பொருளாகத் திகழ்வதால் ஓதாமலே வேதங்களை உணர்ந்தவனே; உனது பெருமையை நினைத்துப் பார்க்காமலும், தான் செய்யும் செயலின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமலும், கயிலை மலையினை பேர்த்தேடுக்கத் துணிந்த அரக்கனை மிகவும் சிறிய நேரம் உனது கால் விரலால் மலையை அழுத்துவதன் மூலம் உண்மை நிலையை அவனுக்கு உணர வைத்தவனே; பின்னர் அந்த அரக்கன் உன்னைப் போற்றி புகழ்ந்து பண்ணுடன் கூடிய சாமகானம் பாடியபோது அதனைக் கேட்டு மகிழ்ந்தவனே; வெகு காலத்திற்கு முன்னமே எனது சிந்தையில் புகுந்த இறைவனே, உலகுக்கு கண் போன்று அந்த உலகம் செயல்படக் காரணமாகத் திகழ்பவனே, கயிலை மலையில் உறையும் இறையவனே, உன்னை போற்றி, போற்றி என்று பலமுறை போற்றி வணங்குகின்றேன்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

நன்றி: திரு ஆதிரை மற்றும் என். வெங்கடேஸ்வரன்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக