புதன், 30 நவம்பர், 2016

05 திருவாசகம் - திருச்சதகம் 09 ஆனந்த பரவசம்

 "பேரின்ப அனுபவத்தில் தன்னை மறந்திருத்தல் ஆனந்த பரவசமாகும்."


பாடல் எண் : 01
விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கு எனை வைத்தாய்
இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார்
அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் ஆரூர் எம்
பிச்சைத் தேவா என் நான் செய்கேன் பேசாயே.

பொருளுரை:
இறைவனே! பொய்க்கு வேறொரு இடம் இல்லை என்று என்னை இங்கு வைத்தாய். உன் மெய்யன்பர் யாவரும் உன் திருவடியை அடைந்தார்கள். நான் பிறவி அச்சமாகிய கடலில் மூழ்குதலன்றி வேறு என்ன செய்யக் கடவேன்?.


பாடல் எண் : 02
பேசப்பட்டேன் நின் அடியாரில் திருநீறே
பூசப்பட்டேன் பூதலரால் உன் அடியான் என்று
ஏசப்பட்டேன் இனிப்படுகின்றது அமையாதால்
ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேனே.

பொருளுரை:
உன் அடியாருள் ஒருவனாகச் சொல்லப்பட்டேன். திருவெண்ணீற்றால் பூசப்பட்டேன். இறைவனே! உன் அடியவன் என்று உலகத்தோரால் இகழப்பட்டேன். இவ்வளவும் போதாது என்று மேலும் உனக்கு ஆசைப்பட்டேன். அடிமைப்பட்டேன்.


பாடல் எண் : 03
அடியேன் அல்லேன் கொல்லோ தானெனை ஆட்கொண்டிலை கொல்லோ
அடியார் ஆனார் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார்
செடிசேர் உடலம் இது நீக்கமாட்டேன் எங்கள் சிவலோகா
கடியேன் உன்னைக் கண்ணாரக் காணுமாறு காணேனே.

பொருளுரை:
நான் உன் அடியனல்லேனோ? நீ என்னை ஆட்கொண்டது இல்லையோ? உன் அடியார் எல்லோரும் உன் திருவடியை அடையவும் நான் இந்த உடம்பை ஒழியாதிருக்கிறேன். கொடியேன் உன்னைக் காணும் வழி கண்டிலேன்.


பாடல் எண் : 04
காணுமாறு காணேன் உன்னை அந்நாள் கண்டேனும்
பாணே பேசி என் தன்னைப் படுத்தது என்ன பரஞ்சோதி
ஆணே பெண்ணே ஆரமுதே அத்தா செத்தே போயினேன்
ஏண் நாண் இல்லா நாயினேன் என்கொண்டு எழுகேன் எம்மானே.

பொருளுரை:
பரஞ்சோதியே! ஆணே! பெண்ணே! ஆர் அமுதே! அத்தா! எம்மானே! உன்னை அடையும் மார்க்கத்தை நான் கண்டிலேன். அன்று உன்னைக் கண்டபின் நான் வீண்பேச்சுப் பேசி ஒரு நலனையும் அடைந்திலேன். செத்துப்போன நிலையில் இப்போது இருக்கிறேன். என் கீழ்மையைக் குறித்து நான் வெட்கப்பட வில்லை. மேல்நிலை அடைவதற்கான ஆற்றல் என்னிடத்து இல்லை. நான் எப்படி உய்வேன்?.


பாடல் எண் : 05
மானேர் நோக்கி உமையாள் பங்கா மறை ஈறு அறியா மறையோனே
தேனே அமுதே சிந்தைக்கு அரியாய் சிறியேன் பிழை பொறுக்கும்
கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவமாநகர் குறுகப்
போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே.

பொருளுரை:
மான் விழி போன்ற விழிகளையுடைய உமாதேவியாரின் பாகா! வேத வேதாந்தத்துக்கு எட்டாத மறைபொருளே! தேனே! அமிர்தமே! மனத்துக்கு எட்டாதவனே! என் குற்றத்தை மன்னித்து அருளும் அரசே! என் குறைபாட்டை நான் பரிந்து உன்னிடம் முறையிட்டேன். அதாவது உன் அடியார்கள் உனக்கு உரியவர்கள் ஆயினர். நானோ பொய்யாகிய பிரபஞ்சத்துக்கு உரியனாய், நானும் பிரபஞ்சமும் உனக்கு வேறாக இருந்து வருகிறோம்.


பாடல் எண் : 06
புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய்யன்பு
பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான்
அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார்
சிறவே செய்து வழிவந்து சிவனே நின்தாள் சேர்ந்தாரே.

பொருளுரை:
ஆன்மாவாகிய நானும் உலகம் ஆகிய மாயையும் உனக்குப் புறம்பானோம். உன்பால் பத்தி பண்ணுவதற்கான உறுதியான தெய்வீகத் தன்மை என்னிடம் இல்லை. உன்னைத் தவிர வேறு எதையும் அறியாத பரிபக்குவ உயிர்கள் தங்கள் ஆன்ம போதத்தை அகற்றி உன்பால் இரண்டறக் கலந்தன. அதற்காக அவர்கள் பத்தி மார்க்கத்தைத் தீவிரமாகக் கையாண்டனர்.


பாடல் எண் : 07
தாராய் உடையாய் அடியேற்கு உன்தாள் இணை அன்பு
போரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான்
ஊர் ஆ மிலைக்க குருட்டு ஆ மிலைத்தாங்கு உன்தாள் இணை அன்புக்கு
ஆரா அடியேன் அயலே மயல் கொண்டு அழுகேனே.

பொருளுரை:
இறைவனே! அடியேன் உன் திருவடிக்கு அன்பு செய்யும்படிச் செய்தருள வேண்டும். அடியார் முத்தியுலகம் புக, யான் புறம் போந்தேன். ஊர்ப் பசுக்கள் மேய்தற்கு வரக் கூடவே குருட்டுப் பசுவும் வந்ததுபோல, அன்பர் உன் திருவடிகளுக்கு அன்பு செய்ய நானும் அன்பு செய்ய விரும்பி அழுகின்றேன்.


பாடல் எண் : 08
அழுகேன் நின்பால் அன்பாம் மனமாய் அழல் சேர்ந்த
மெழுகே அன்னார் மின்னார் பொன்னார் கழல் கண்டு
தொழுதே உன்னைத் தொடர்ந்தாரோடும் தொடராதே
பழுதே பிறந்தேன் என் கொண்டு உன்னைப் பணிகேனே.

பொருளுரை:
உன்னிடத்து மெய்யன்பு உடையவராய் ஒளி பொருந்திய பொன் போன்ற உன் திருவடிகளைக் கண்டு தீயில் இட்ட மெழுகை ஒத்தவராய் உன் அன்பர்கள் தொழுது உன்னைப் பின் பற்றினர். அவர்களைப் பின்பற்றாமல் நான் புன்மைக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறேன். எம்முறையைக் கையாண்டு நான் உன்னை வழுத்துவது என்று எனக்கு விளங்கவில்லை.


பாடல் எண் : 09
பணிவார் பிணி தீர்த்து அருளிப் பழைய அடியார்க்கு உன்
அணியார் பாதம் கொடுத்தி அதுவும் அரிது என்றால்
திணியார் மூங்கில் அனையேன் வினையைப் பொடி ஆக்கித்
தணியார் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய்தீர் மெய்யானே.

பொருளுரை:
இறைவனே! அடியவர்க்குப் பிறவிப் பிணியை நீக்கியருளி உன் திருவடியைத் தந்தருள்வது அருமையானால், மனக்கோட்டத்தை உடையவனாகிய என் வினைகளை நீறாக்கி உன் திருவடியை எனக்குத் தந்தருள்வது அருமையே. ஆயினும் எனக்கு உன்னை அன்றி வேறு புகலிடம் இல்லாமையால் என்னைத் திருத்தி ஆட்கொண்டு உன் திருவடியைத் தந்தருளல் வேண்டும்.


பாடல் எண் : 10
யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனை வந்து உறுமாறே.

பொருளுரை:
இறைவனே! நானும் என் மனம் முதலியனவும் பொய்ம்மையுடையவர்கள் ஆனோம். ஆனால் அழுதால் உன்னைப் பெறலாமோ? தேனே! அமுதே! கரும்பின் தெளிவே! நான் உன்னைப் பெறும் வழியை எனக்கு அறிவித்தல் வேண்டும்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக