சனி, 12 நவம்பர், 2016

அன்னபூரணி நாயகனுக்கு அன்னத்தால் அபிஷேகம்

சிவபெருமான் அபிஷேகப்பிரியர். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று நடைபெறும் அபிஷேக ஆராதனையில் மிகவும் போற்றப்படுவது ஐப்பசி பௌர்ணமியில் நடைபெறும் அன்னாபிஷேகமாகும். காரணம், சிவபெருமானே அன்னமாக மாறியிருக்கிறார் என்கிறது புராணம்.


உலகில் வாழும் உயிர்களின் ஜீவநாடி அன்னம். உலக வாழ்க்கைக்கு அச்சாணி. ஒருவேளை உணவில்லாவிட்டாலும் உடல் சோர்வடையும்; மூளை சரியாக வேலை செய்யாமல் தடுமாறும்.

"அன்னமே உண்மையான பிரம்ம சொரூபம்; விஷ்ணு சொரூபம்; சிவ சொரூபம். ஆகையால் அன்னமே உயர்வானது' என்று வேதம் சொல்கிறது.

"அன்னம் பிரஜாபிஸ்; சாக்ஷாத் அன்னம் விஷ்ணு சிவ" என்பது வேதவாக்கு. "அன்னம் தான் ஜீவன்" என்கிறது சாஸ்திரம்.

"தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்காமல் தான் மட்டும் யார் உண்கிறானோ, அவன் பாவ பிண்டத்தைத்தான் உண்கிறான்" என்கிறார் பகவான் கிருஷ்ணன்.

"அன்னம் அளி! அன்னம் அளி! ஓயாமல் அன்னம் அளி' என்கிறது பவிஷ்ய புராணம். "உலகில் வாழும் மானிடர்களுக்கு மட்டுமல்ல; இவ்வுலக வாழ்வை நீத்தவர்களுக்கும் பிண்டமாக அன்னம் அளிக்கப்படுகிறது" என்று வேதநூல்கள் கூறுகின்றன.

இதனையெல்லாம் நினைவு கூர்ந்துதான் துலா மாதமான ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று, சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

சிவலிங்கத்தில் காணப்படும் அன்னத்தின் ஒவ்வொரு பருக்கையும் சிவலிங்கத்தின் உருப்பெறும். அதாவது சிவரூபமாகும். இதனை தரிசிப்பவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அன்னத்திற்குப் பஞ்சமில்லை என்பது ஐதீகம்.

இந்த அன்னாபிஷேக நிகழ்ச்சியை ஐப்பசிப் பௌர்ணமியன்று அனைத்து சிவாலயங்களிலும் தரிசிக்கலாம். அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் புகழ்பெற்றுத் திகழ்கிறது.

கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் எழுந்தருளியுள்ள சிவலிங்கம், ஏறக்குறைய தஞ்சை பெரிய கோவிலைப்போல் பிரம்மாண்டமாகக் காட்சி  தரும். சிவாலயமூர்த்தி பதின்மூன்றரை அடி உயரத்திலும், அதன் ஆவுடையாரின் சுற்றளவு அறுபது அடியாகவும் ஒரே கல்லிலான திருவுருவமாக உள்ளது. 13 முழ ஆடை கொண்டே சிவலிங்கத்தை சுற்றமுடியும். அவரை எதிர்நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கும் பெரிய நந்தி கலைநுட்பம் கொண்டது.

சோழ மன்னன் விஜயாலயன் தஞ்சையைத் தலைநகரமாகக்கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். முதலாம் ராஜராஜசோழன் காலம் வரை தஞ்சை தலைநகரமாக விளங்கியது. ராஜராஜ சோழனின் மைந்தன் முதலாம் ராஜேந்திரன் காலத்தில் தான் கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக உருவாக்கப்பட்டது. இவனது ஆட்சி காலம் கி.பி. 1012- 1044.

ராஜேந்திர சோழன் வடக்கே கங்கை வரை தன் படை வீரர்களுடன் சென்று வெற்றி கொண்டதால் "கங்கைகொண்ட சோழன்" என்று சிறப்புப் பட்டம் பெற்றான். அதன் நினைவாக இம்மாநகரை நிறுவி, பெரிய அளவில் மிக அற்புதமாகக் கலைநுட்பத்துடன் "கங்கை கொண்டசோழீச்சரம்" என்ற பெயர் கொண்ட கோவிலைக் கட்டினான் என்பது வரலாறு. அதனையொட்டி விநாயகர் மற்றும் பெருமாள் கோவில்களையும் அரண்மனையையும் நிர்மாணித்தான்.

கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகரமாகக் கொண்டு சோழ வம்சத்தினர் முந்நூறு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்கள். அப்போது ஒவ்வொரு வருடமும் ஐப்பசி பௌர்ணமியில் நூறுமூட்டை அரிசியில் சமைத்த அன்னத்தைக் கொண்டு அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அதற்குப்பின் பாண்டிய மன்னர்கள் சோழ அரசர்களை போரில்வென்று, கோவில்களைத் தவிர அரண்மனை மற்றும் தோட்டங்களை அழித்தனர். இதனால் கோவில்களில் பூஜைகள் ஒழுங்காக நடைபெறவில்லை. காலம் கடந்தது. ஆட்சிகள் மாறின. நாடு சுதந்திரம் அடைந்தது. மக்கள் ஆட்சி மலர்ந்தது.

ஒருமுறை காஞ்சி மகாபெரியவர் யாத்திரையாக கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வந்தார். அப்போது, இந்தப் பிரம்மாண்டமான சரித்திரப் புகழ்பெற்ற கோவிலின் நிலைகண்டு வருந்தினார். கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெற ஆவன செய்தார். அத்துடன் ஐப்பசிப் பௌர்ணமியில் அன்னாபிஷேக நிகழ்ச்சிகள் மறுபடியும் நடைபெற வழிகள் செய்தார்.

இந்தக் கோவில் இறைவன் பிரகதீஸ்வரர்; இறைவி பிரஹந்நாயகி. மேலும், அனுக்கிர சண்டேஸ்வரர், கஜசம்ஹாரமூர்த்தி, நடனசபாபதி, ஞானசரஸ்வதி, மகிஷாசுரமர்த்தினி ஆகிய சிற்பங்கள் கலையம்சத்துடன் காட்சி தருகின்றன. கருவறையில் சந்திர காந்தக்கல் பதிக்கப்பட்டிருப்பதால் கோடை காலத்தில் குளுமையாகவும், குளிர்காலத்தில் மிதமான வெப்பத்துடனும் இருக்கும். கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் அருள்புரியும் நவகிரகங்களை வலம் வரமுடியாது. ஒரே கல்லில் சூரியன் முதலான ஒன்பது கிரகங்களை வடித்திருக்கிறார்கள்.

தற்போது ஐப்பசி மாதப் பௌர்ணமி போது 64 மூட்டை பச்சரிசியை சமைத்து, சிவலிங்கத்தின்மீது துணிசார்த்தி பதினாறு அர்ச்சகர்கள் அன்னாபிஷேகம் செய்வார்கள். பகல் 11.00 மணிக்குமேல் அன்னாபிஷேகம் ஆரம்பித்து மாலை 5.00 மணியளவில் மகாதீபாராதனை நடைபெறும். சுவாமியின்மீது விழும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு லிங்கம் என்பது ஐதீகம். இப்படி அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை ஐந்து சதவிகிதம் நீரில் வாழும் ஜீவராசிகளுக்கும், ஐந்து சதவிகிதம் பூமியின்கீழ் வாழும் ஜீவ ராசிகளுக்கும், ஐந்து சதவிகிதம் கால்நடைகளுக்கும், ஐந்து சதவிகிதம் பறவைகளுக்குமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. மீதமுள்ள அன்னம் சாம்பார் மற்றும் புளிரசம் கலந்து பிரசாதமாக பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது. (சில சிவாலயங்களில் காய்கறிகளுடன் அளிக்கப்படுகிறது.) கங்கைகொண்ட சோழபுரம் திருச்சியிலிருந்து 110 கிலோமீட்டர் தூரத்திலும், கும்பகோணத்திலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. 

சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் பிரியமானது என்பது பற்றி புராணம் கூறும் தகவலைக் காண்போம்.

ஒருமுறை தேவர்களுக்கு கடும் பசிப்பிணி வந்தபோது இறைவனே அன்னமாகிவிட்டார் என்றும், இந்த நிகழ்வு ஐப்பசி பௌர்ணமியில் நடந்தது என்றும் கூறப்படுகிறது. மேலும், தேவியானவள் பல்வேறு கட்டங்களில் அசுரர்களை வதம்செய்து தேவர்களையும் மானிடர்களையும் காப்பாற்றினாள். அசுர வதத்தால் தேவிக்கு பல தோஷங்கள் ஏற்பட்டன. இதனை நிவர்த்திக்க இறைவனிடம் வேண்டினாள். தேவியின் வேண்டுதலை ஏற்றார் இறைவன்.

தேவியால் வதம்செய்யப்பட்ட அசுரர்கள் அட்சயலோகம் என்னும் இடத்தில் பிண்டத்துக்காக அலைந்து அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களைச் சார்ந்தவர்கள், தேவியால் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் இறந்த அசுரர்களுக்காக நீத்தார் கடன் செய்ய முன்வரவில்லை. எனவே சிவபெருமானே அன்னமாக மாறி வதம்செய்யப்பட்ட அசுரர்களைத் திருப்திப்படுத்தினார். அதனால் தான் அன்னாபிஷேகத்தன்று அன்னத்துடன் அப்பம், வடை, புடலங்காய் முதலிய காய்கறிகளும் சில சிவாலயங்களில் படைக்கப்படுகின்றன.

சிவபெருமானுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகத்தால் நாட்டில் பசி, பஞ்சம், பட்டினி இராது. ஆகம விதிப்படி அன்னாபிஷேகம் செய்வித்தால் நாட்டில் காலாகாலத்தில் மழைபொழிந்து வளங்கள் பெருகும். பொதுவாக பௌர்ணமியன்று சந்திரன் பதினாறு கலைகளுடன் முழுமையாகப் பிரகாசிக்கிறான். அன்று சந்திரனது கலை, அமிர்தகலையாகும். அதுவும் ஐப்பசி பௌர்ணமி சிவபெருமானுக்கு உகந்த நாளாகக் கருதப்படுவதால், இந்நாள் சிறப்பிக்கப்படுகிறது.

சிவன் பிரம்மரூபி. அவரது மெய்யடியார்கள் பிரதிபிம்பரூபிகள். பிரம்மம் திருப்தியடைந்தால் பிரதிபிம்பமும் திருப்தியடையும். ஐப்பசி பௌர்ணமியில் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுவதை யாவரும் அறிவோம். ஆனால், தில்லையில் தினமும் காலை பதினோரு மணியளவில் ரத்னசபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. அந்த அன்னம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. எனவே தான் இத்திருத்தலத்தை அப்பர் பெருமான், "அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்" என்று போற்றியுள்ளார்.

குடமுருட்டி ஆற்றின் தென்கரையில், பாடல்பெற்ற திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் செந்தலை என்னும் திருத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு அன்னாபிஷேகத்தன்று முதலில் பகல் 11.00 மணிக்கு திருநீறு அபிஷேகமும், பிறகு மற்ற அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. மாலை ஐந்து மணிக்கு மேல் லிங்கத்திருமேனி முழுவதும் அன்னம் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்வார்கள். பூரண அலங்காரத்தில் விளங்கும் இறைவனுக்கு  ஷோடச உபசாரங்களும் சிறப்பு தீபாராதனையும் நடைபெறும். 

இரவு ஒன்பது மணியளவில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரரின் அன்னாபிஷேகத் திருமேனியின்மீது பூரண சந்திரனின் ஒளி படர்கிறது. தனக்கு சாப விமோசனமளித்து தன்னை ஜடாமுடியில் சூடிய சந்திரசேகரனை, தனது அமிர்தக் கலைகளால் தழுவி வழிபடுகிறான் சந்திரன். இந்த நிகழ்வு சில நிமிடங்கள் நடைபெறும். அப்போது திரளான பக்தர்கள் இறைவனை வழிபட்டுப் பேறுபெறுகிறார்கள். இவ்வாறு அன்னாபிஷேக சிவன்மீது முழுச் சந்திரனின் ஒளிபடர்வது இத்தலத்தில் மட்டும் தான் என்று சொல்லப்படுகிறது.

சிவாலயங்களில் மட்டுமல்ல; நன்மங்கலம் வைணவத் திருத்தலத்திலும் ஐப்பசி அன்னாபிஷேக வைபவம் நடைபெறுகிறது. இத்தலத்தில் வைகுந்தவாசியான பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராக நீலவண்ணப் பெருமாள் என்ற திருநாமத்துடன் சேவை சாதிக்கிறார். இத்தலம் சென்னை குரோம்பேட்டையிலிருந்து நெமிலிச்சேரி செல்லும் வழியில் உள்ளது. அன்னாபிஷேகத்தின்போது, பல வண்ணங்களில் அன்னம் பகவானுக்கு சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் அது பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அனனாபிஷேகத் திருக்கோலத்தில் பெருமாளை தரிசித்தால், வாழ்நாள் முழுவதும் சுவையான உணவு பசித்த வேளையில் தேடிவருமென்பது ஐதீகம்.

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் அன்னம் மூலமாக செயல்படுத்துபவன் ஈசன். எனவே, ஐப்பசிப் பௌர்ணமி நாளில் சிவாலயங்களில் நடை பெறும் அன்னாபிஷேக வைபவத்திற்கு தங்களால் இயன்ற பொருளுதவி அளித்து இறைத்தொண்டில் ஈடுபடலாம். வழிபாடுகள் முடிந்து தரப்படும் பிரசாதம் பெற்றால் வாழ்வில் என்றும் வசந்தம் வீசும்.

நன்றி : டி.ஆர். பரிமளரங்கன்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக