வெள்ளி, 25 நவம்பர், 2016

போற்றி திருத்தாண்டகம் - திருவதிகை

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ அதிகை வீரட்டேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ திரிபுரசுந்தரி

திருமுறை : ஆறாம் திருமுறை 05 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி 
எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
கொல்லார் மழுவாட் படையாய் போற்றி 
கொல்லும் கூற்று ஒன்றை உதைத்தாய் போற்றி
கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி 
கற்றார் இடும்பை களைவாய் போற்றி
வில்லால் வியன் அரணம் எய்தாய் போற்றி 
வீரட்டம் காதல் விமலா போற்றி.

பொருளுரை:
அனைத்துப் பொருட்களிலும் கலந்தும் அனைத்து உயிர்களுடன் இணைந்தும் நிற்கும் சிவபெருமானே போற்றி, சூரிய சந்திரர்கள் ஆகிய இரண்டு சுடர்களாக உள்ளவனே போற்றி, கொலைத் தொழிலைச் செய்யும் சக்தி வாய்ந்த மழுப்படையை உடையவனே போற்றி, உயிர்களை உடலிலிருந்து பிரிப்பதையே தொழிலாகக் கொண்ட கூற்றுவனை உதைத்தவனே போற்றி, ஐந்தெழுத்தினை கல்லாத மூடர்கள் காண்பதற்கு அரியவனாகத் திகழ்பவனே போற்றி, ஐந்தெழுத்தினை கற்று, அதனை எப்போதும் உச்சரிக்கும் அடியார்களின் துன்பங்களை களைபவனே போற்றி, அகன்று காணப்பட்ட மூன்று பறக்கும் கோட்டைகளையும் வில்லினைக் கொண்டு அழித்தவனே போற்றி. அதிகை வீரட்டத் திருக்கோயிலின் மீது காதல் கொண்டு அங்கே உறையும் பெருமானே, நான் உன்னை வணங்குகின்றேன், நீ தான் என்னை காப்பாற்றவேண்டும்.


பாடல் எண் : 02
பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி 
பல்லூழியாய படைத்தாய் போற்றி
ஓட்டகத்தே ஊணா உகந்தாய் போற்றி 
உள்குவார் உள்ளத்து உறைவாய் போற்றி
காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி 
கார்மேகம் அன்ன மிடற்றாய் போற்றி
ஆட்டுவதோர் நாகம் அசைத்தாய் போற்றி 
அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி.

பொருளுரை:
பாடுதலையும், கூத்து நிகழ்த்துதலையும் பண்புகளாக உடையவனே! பல ஊழிக்காலங்களையும் படைத்தவனே! மண்டையோட்டில் இரந்து பெறுவனவற்றையே உணவாக விரும்பி ஏற்றவனே! உன்னைத் தியானிப்பார் உள்ளத்தைத் தங்குமிடமாக உடையவனே! சுடுகாட்டில் கூத்தாடுதலை உகப்பவனே! கார்மேகம் போன்ற கறுத்த கழுத்தை உடையவனே! ஒதுங்கியிருந்து படமெடுத்து ஆடச்செய்ய வேண்டிய பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டிக் கொள்பவனே! அலைகள் வீசும் கெடில நதியை அடுத்த அதிகை வீரட்டானத்திலிருந்து உயிர்களை ஆள்பவனே! உன்னை வணங்குகிறேன்.


பாடல் எண் : 03
முல்லையங் கண்ணி முடியாய் போற்றி 
முழுநீறு பூசிய மூர்த்தீ போற்றி
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி 
ஏழ் நரம்பின் ஓசை படைத்தாய் போற்றி
சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி 
சென்று அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி   
தில்லைச் சிற்றம்பலம் மேயாய் போற்றி 
திருவீரட்டானத்து எம் செல்வா போற்றி.

பொருளுரை:
முல்லை மாலையினை முடியில் சூடியவனே போற்றி, உடல் முழுவதும் திருநீறு பூசியவனே போற்றி, எல்லையற்ற நற்பண்புகளை உடையவனே போற்றி, யாழ் எனப்படும் இசைக் கருவியில் எழும் ஏழு விதமான ஓசைகளை படைத்தவனே போற்றி, மயிர் நீக்கப்பட்டதும் உருண்டை வடிவத்தில் அமைந்ததும் ஆகிய பிரம கபாலத்தில் உணவு பெறுபவனே போற்றி, உன்னை வந்து வழிபடும் அடியார்களின் தீவினைகளைத் தீர்க்கும் தேவனே போற்றி, தில்லைச் சிற்றம்பலத்தில் உறைபவனே போற்றி. அதிகை வீரட்டானத் திருக்கோயிலில் உறையும் பெருமானே, நான் உன்னை வணங்குகின்றேன், நீ தான் என்னை காப்பாற்றவேண்டும்.


பாடல் எண் : 04
சாம்பர் அகலத்து அணிந்தாய் போற்றி 
தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி
கூம்பித் தொழுவார் தம் குற்றேவலைக்  
குறிக்கொண்டிருக்கும் குழகா போற்றி
பாம்பும் மதியும் புனலும் தம்மில் 
பகை தீர்த்து உடன் வைத்த பண்பா போற்றி
ஆம்பல் மலர் கொண்டு அணிந்தாய் போற்றி 
அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி.

பொருளுரை:
மார்பினில் திருநீறு அணிந்தவனே போற்றி, அடியார்கள் மேற்கொள்ளும் தவங்களுக்குத் துணையாக நின்று, தவங்களை முற்றுவித்த பின்னர், தவங்களுக்கு உரிய பலன்களை அளிப்பவனே போற்றி, மனம் ஒன்றித் தொழும் அடியார்கள் செய்யும் திருத்தொண்டுகளை கணக்கில் கொண்டு, அவர்களுக்கு அருள்புரியும் அழகனே போற்றி, பாம்பு, சந்திரன் மற்றும் தண்ணீர் ஆகிய மூன்றும் தங்களுக்குளே உள்ள பகை உணர்ச்சியை மறந்து ஒரே இடத்தில், உனது சடையில் இருக்கும் நிலை வைத்த பண்பனே போற்றி, ஆம்பல் பூக்களை அணிந்தவனே போற்றி. அலைகள் நிறைந்த கெடில நதிக்கரையில் உள்ள அதிகை நகரில் உறையும் பெருமானே, நான் உன்னை வணங்குகின்றேன், நீ தான் என்னை காப்பாற்றவேண்டும்.


பாடல் எண் : 05
நீறேறு நீல மிடற்றாய் போற்றி 
நிழல் திகழும் வெண்மழுவாள் வைத்தாய் போற்றி
கூறேறு உமையொருபால் கொண்டாய் போற்றி
கோளரவம் ஆட்டும் குழகா போற்றி
ஆறேறு சென்னி உடையாய் போற்றி 
அடியார்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
ஏறேற என்றும் உகப்பாய் போற்றி 
இருங்கெடில வீரட்டத்து எந்தாய் போற்றி.

பொருளுரை:
நீல நிறத்தில் காணப்படும் கழுத்தில் திருநீறு அணிந்தவனே போற்றி, ஒளி மிளிரும் வெண் மழுப் படையை ஏந்தியவனே போற்றி, உனது உடலில் ஒரு கூறாக பொருந்துமாறு உமை அம்மையை வைத்தவனே போற்றி, கொடிய விடம் கொண்ட பாம்புகளை ஆட்டுவிக்கும் குழகனே போற்றி, கங்கை ஆறு தங்கிய சடையனே போற்றி, அடியார்களுக்கு கிடைத்தற்கு அரிய அமுதமாகத் திகழ்பவனே போற்றி, காளையை வாகனமாக விரும்பி ஏற்பவனே போற்றி, பெரிய கெடில நதிக்கரையில் உள்ள அதிகை நகரில் உறையும் பெருமானே, நான் உன்னை வணங்குகின்றேன், நீ தான் என்னை காப்பாற்றவேண்டும்.


பாடல் எண் : 06
பாடுவார் பாடல் உகப்பாய் போற்றி 
பழையாற்றுப் பட்டீச்சுரத்தாய் போற்றி
வீடுவார் வீடருள வல்லாய் போற்றி 
வேழத்துரி வெருவப் போர்த்தாய் போற்றி
நாடுவார் நாடற்கு அரியாய் போற்றி 
நாகம் அரைக்கு அசைத்த நம்பா போற்றி
ஆடும் ஆனைந்தும் உகப்பாய் போற்றி 
அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி.

பொருளுரை:
உன்னை விரும்பிப்பாடும் அடியார்களின் பாடல்களை விரும்பி கேட்பவனே போற்றி, பழையாறு, பட்டீச்சுரம் ஆகிய தலங்களில் உறையும் இறைவனே போற்றி, உலகப் பொருட்களின் மீது வைத்துள்ள பற்றினை அறவே நீக்கிய அடியார்களுக்கு வீடுபேறு அருளும் பெருமானே போற்றி, உமையம்மை அஞ்சுமாறு மதயானையின் தோலை உரித்து, அந்த தோலினை போர்வையாக போர்த்தவனே போற்றி, தங்களது முயற்சியால் உன்னை அடையலாம் என்று எண்ணி உன்னை அடைய நினைப்பவர்கள் ஆராய்ந்து அறிவதற்கு அரியவனே போற்றி, பாம்பினை இடையில் சுற்றியவனே போற்றி, பசுவிலிருந்து கிடைக்கப்பெறும் ஐந்து பொருட்களின் (பால், தயிர், நெய், கோசலம் மற்றும் கோமியம்) அபிடேகத்தை மிகவும் விரும்புவனே போற்றி. அலைகள் நிறைந்த கெடில நதிக்கரையில் உள்ள அதிகை நகரில் உறையும் பெருமானே, நான் உன்னை வணங்குகின்றேன், நீ தான் என்னை காப்பாற்றவேண்டும்.


பாடல் எண் : 07
மண்துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி 
மால்கடலும் மால்விசும்பும் ஆனாய் போற்றி
விண்துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி 
வேழத்து உரி மூடும் விகிர்தா போற்றி
பண்துளங்கப் பாடல் பயின்றாய் போற்றி 
பார் முழுதும் ஆய பரமா போற்றி
கண்துளங்கக் காமனை முன் காய்ந்தாய் போற்றி 
கார்க்கெடிலம் கொண்ட கபாலி போற்றி.

பொருளுரை:
மண்ணுலகம் அசையுமாறு கூத்தாடுவதை மகிழ்பவனே போற்றி, பெரிய கடலாகவும் பரந்த ஆகாயமாகவும் இருப்பவனே போற்றி, விண்ணுலகம் நடுங்கும்படி பறந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் அழித்தவனே போற்றி, யானையின் பசுந்தோலை அச்சம் ஏதுமின்றி உடலில் போர்த்த விகிர்தனே போற்றி, பண்கள் பொருந்துமாறு பாடல்கள் பாடுபவனே போற்றி, உலகம் முழுதும் பரவி இருக்கும் பரமனே போற்றி, நெற்றிக் கண் அசைந்து திறந்த மாத்திரத்தில் காமனை எரித்தவனே போற்றி, நீரின் ஆழத்தால் கருமை நிறம் கொண்ட கெடில நதிக்கரையில் உள்ள அதிகை நகரில் உறையும் பெருமானே, நான் உன்னை வணங்குகின்றேன், நீ தான் என்னை காப்பாற்றவேண்டும்.


பாடல் எண் : 08
வெஞ்சினவெள் ஏறூர்தி உடையாய் போற்றி 
விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி
துஞ்சாப் பலிதேரும் தோன்றால் போற்றி 
தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி   
நஞ்சு ஒடுங்கும் கண்டத்து நாதா போற்றி 
நான்மறையோடு ஆறங்கம் ஆனாய் போற்றி
அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி 
அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி.

பொருளுரை:
மிகுந்த கோபத்தினை உடைய எருதினை வாகனமாக ஏற்றவனே போற்றி, விரிந்து கிடக்கும் சடையினில் கங்கை நதியைத் தாங்கியவனே போற்றி, என்றும் இடைவிடாது பலி ஏற்பவனே போற்றி. தங்களது கைகளால் உன்னைத் தொழும் அடியார்களின் துன்பங்களைத் துடைப்பவனே போற்றி, நஞ்சினை ஒடுக்கிய கழுத்தினை உடையவனே போற்றி, நான்மறைகளாகவும் மறைகளின் ஆறு அங்கங்களாகவும் திகழ்பவனே போற்றி, அழகிய சொற்களை உடைய உமையம்மையைத் தனது உடலில் ஒரு பாகமாக ஏற்றவனே போற்றி.  அலைகள் நிறைந்த கெடில நதிக்கரையில் உள்ள அதிகை நகரில் உறையும் பெருமானே, நான் உன்னை வணங்குகின்றேன், நீ தான் என்னை காப்பாற்றவேண்டும்.


பாடல் எண் : 09
சிந்தையாய் நின்ற சிவனே போற்றி 
சீபர்ப்பதம் சிந்தை செய்தாய் போற்றி
புந்தியாய் புண்டரீகத்து உள்ளாய் போற்றி 
புண்ணியனே போற்றி புனிதா போற்றி
சந்தியாய் நின்ற சதுரா போற்றி 
தத்துவனே போற்றி என் தாதாய் போற்றி
அந்தியாய் நின்ற அரனே போற்றி 
அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி.

பொருளுரை:
அடியார்களின் சிந்தனையுள் உறையும் சிவபெருமானே போற்றி, ஸ்ரீ சைலம் என்று அழைக்கப்படும் சீபர்ப்பதத்தை உறைவிடமாக கொண்ட சிவபெருமானே போற்றி, உயிர்களின் இதயத்தில் ஞான வடிவாக இருப்பவனே போற்றி, புண்ணியமே வடிவாக உள்ளவனே போற்றி, தூய்மையானவனே போற்றி, காலை நண்பகல் மற்றும் மாலை எனப்படும் மூன்று சந்தி காலங்களாக இருப்பவனே போற்றி, அளவில்லாத சாமர்த்தியம் வாய்த்தவனே போற்றி, உண்மையான மெய்ப்பொருளே போற்றி, எனது தந்தையே போற்றி, அனைத்துப் பொருட்களுக்கும் முடிவாக அமைந்த அரனே போற்றி, அலைகள் நிறைந்த கெடில நதிக்கரையில் உள்ள அதிகை நகரில் உறையும் பெருமானே, நான் உன்னை வணங்குகின்றேன், நீ தான் என்னை காப்பாற்றவேண்டும்.


பாடல் எண் : 10
முக்கணா போற்றி முதல்வா போற்றி 
முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி
தக்கணா போற்றி தருமா போற்றி 
தத்துவனே போற்றி என் தாதாய் போற்றி
தொக்கணா என்று இருவர் தோள் கை கூப்பத்
துளங்காது எரிசுடராய் நின்றாய் போற்றி
எக்கண்ணும் கண்ணிலேன் எந்தாய் போற்றி
எறிகெடில வீரட்டத்து ஈசா போற்றி.

பொருளுரை:
மூன்று கண்களை உடைய பெருமானே போற்றி, பல வகைகளிலும் அனைவர்க்கும் முதல்வனாகத் திகழ்பவனே போற்றி, முருகப் பெருமானை மகனாகப் பெற்று தேவர்களின் இடர் களைந்தவனே போற்றி, தென்திசைக் கடவுளே போற்றி, தருமத்தின் வடிவாக உள்ளவனே போற்றி, உண்மையான மெய்ப்பொருளே போற்றி, எனது தந்தையே போற்றி, பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் கூடி நின்று எமது அண்ணலே என்று உன்னை, தங்களது கைகளைத் தங்களது தலையின் மேல் உயர்த்தி துதிக்க, அசையாது நீண்ட ஒளிப் பிழம்பாக நின்ற இறைவனே போற்றி, எனது தலைவனே போற்றி, அலைகள் வீசும் கெடில நதிக்கரையில் அமைந்துள்ள அதிகை வீரட்டத்து இறைவனே போற்றி,  உன்னை அல்லால் வேறு பற்றுக்கோடு எதுவும் எனக்கில்லை, எனவே நீ தான் என்னை காக்க வேண்டும்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

நன்றி: திரு ஆதிரை மற்றும் என். வெங்கடேஸ்வரன்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக