புதன், 30 நவம்பர், 2016

05 திருவாசகம் - திருச்சதகம் 07 காருணியத்து இரங்கல்

"காருணியத்து இரங்கல் என்பது இறைவன் கருணையைக் குறித்து இரங்குதலாம்."


பாடல் எண் : 01
தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான
விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பில்
ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை
நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி.

பொருளுரை:
கடவுளே! சங்கரனே! விருத்தனே! ஒப்பில்லாத தலைவனே! தேவர் தலைவனே! வணக்கம். இந்த உடம்போடு கூடி வாழும் வாழ்க்கையைச் சகித்திலேன். ஆதலால் இதனை ஒழித்து உன் திருவடியை அடைவிக்க வேண்டும்.


பாடல் எண் : 02
போற்றி ஓம் நமச்சிவாய புயங்கனே மயங்குகின்றேன்
போற்றி ஓம் நமச்சிவாய புகலிடம் பிறிது ஒன்று இல்லை
போற்றி ஓம் நமச்சிவாய புறமெனப் போக்கல் கண்டாய்
போற்றி ஓம் நமச்சிவாய சயசய போற்றி போற்றி.

பொருளுரை:
இறைவனே! போற்றி! போற்றி! இந்தப் பொய்யுலக வாசனையால் மயங்குகின்றேன். உன்னையன்றி எனக்கு வேறு புகலிடம் இல்லை. ஆதலால் என்னைக் கைவிடாமல் காத்தருளல் வேண்டும்.


பாடல் எண் : 03
போற்றி என் போலும் பொய்யர் தம்மை ஆட்கொள்ளும் வள்ளல்
போற்றி நின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி
போற்றி நின் கருணை வெள்ளப் புதுமதுப் புவனம் நீர்தீக்
காற்று இயமானன் வானம் இருசுடர்க் கடவுளானே.

பொருளுரை:
பொய்யுடலில் ஆசை வைத்துள்ள என் போன்றவர்களுக்கு அருள் புரிவதால், நீ, வள்ளல் ஆகின்றாய். உன் கருணைக்குப் புதிய தேன் ஒப்பானது. ஐம்பெரும் பூதங்கள், சூரியன் சந்திரன், உயிர் ஆகிய எட்டு மூர்த்திகளாய் நீ இருக்கின்றாய். இப்படி யெல்லாம், இருக்கிற உனக்கு மேலும் மேலும் வணக்கம் கூறுகிறேன்.


பாடல் எண் : 04
கடவுளே போற்றி என்னைக் கண்டு கொண்டருளு போற்றி
விடவுளே உருக்கி என்னை ஆண்டிட வேண்டும் போற்றி
உடலிது களைந்திட்டு ஒல்லை உம்பர் தந்தருளு போற்றி
சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி.

பொருளுரை:
நான் தகவிலன் என்பதை அறிந்து என்னை ஆட்கொள். என் உள்ளத்தை உருக்கி அதை இலகச் செய். உடலை ஒதுக்கிவிட்டு விரைவில் முத்தியடையும்படி செய். கங்காதரா! உன்னை நான் மீண்டும் வணங்குகிறேன். நான் தகாதவன் எனினும் நீ சங்கரன் ஆதலால் என்னை ஆட்கொண்டருள்க.


பாடல் எண் : 05
சங்கரா போற்றி மற்றோர் சரணிலேன் போற்றி கோலப்
பொங்கரா அல்குல் செவ்வாய் வெண்ணகைக் கரிய வாட்கண்
மங்கையோர் பங்க போற்றி மால்விடை ஊர்தி போற்றி
இங்கு இவ்வாழ்வு ஆற்றகில்லேன் எம்பிரான் இழித்திட்டேனே.

பொருளுரை:
சங்கரனே! மங்கை பங்கனே! மால்விடை யுடையானே! வேறோர் புகலிடம் இல்லேன். இந்தப் பொய் வாழ்வைச் சகிக்கிலேன் ஆதலால், என்னைக் கைவிடல் உனக்குத் தகுதியன்று.


பாடல் எண் : 06
இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி போற்றி
பழித்திலேன் உன்னை என்னை ஆளுடைப் பாதம் போற்றி
பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி
ஒழித்திடில் வாழ்வு போற்றி உம்பர் நாட்டு எம்பிரானே.

பொருளுரை:
எம்பிரானே! என்னை நானே தாழ்த்துவது அன்றி உன்னை நிந்தித்திலேன். சிறியவர் செய்த குற்றங்களைப் பெரியவர் பொறுத்தல் கடமையாதலால் என் குற்றங்களைப் பொறுத்து, இந்தப் பொய் வாழ்க்கையை ஒழித்தருளல் வேண்டும்.


பாடல் எண் : 07
எம்பிரான் போற்றி வானத்தவர் அவர் ஏறு போற்றி
கொம்பரார் மருங்குல் மங்கை கூற வெண்ணீற போற்றி
செம்பிரான் போற்றி தில்லைத் திருச்சிற்றம்பலவ போற்றி
உம்பராய் போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி.

பொருளுரை:
தேவர் பிரானே! உமாதேவி பாகனே! திருவெண்ணீறு உடையவனே! செவ்விய பெருமானே! திருச்சிற்றம்பலத்தை உடையவனே! முத்தி உலகை உடையவனே! என்னை அடிமையாக உடையவனே! என்னைக் காத்தருளல் வேண்டும்.


பாடல் எண் : 08
ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி வானோர்
குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி
வருக என்று என்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி
தருக நின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே.

பொருளுரை:
பலவாகத் தோன்றும் பொழுதும் நீ ஒருவன் தான் இருக்கிறாய். உயிர்கள் அனைத்துக்கும் நீ சிறந்த தந்தையாய் இருக்கிறாய். தேவர்களுக்கெல்லாம் நீ மூத்தவன். உயிர்கள் உள்ளத்தில் நீ நித்திய திருவுருவத்தில் இருக்கிறாய். உனக்கும் எனக்கும் உள்ள உறவை நீ உறுதிப்படுத்து. என்னை உன் மயம் ஆக்குக. எனது உயிர் போதத்தை அகற்றி விடு. உனது மகிமையை நினைந்து நான் உன்னையே போற்றுகிறேன்.


பாடல் எண் : 09
தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி
பேர்ந்தும் என் பொய்ம்மை ஆட்கொண்டு அருளிடும் பெருமை போற்றி
வார்ந்த நஞ்சு அயின்று வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல் போற்றி
ஆர்ந்த நின் பாதம் நாயேற்கு அருளிட வேண்டும் போற்றி.

பொருளுரை:
அன்பரிடத்தில் மிகுந்த அன்பு செய்பவனே! என் பொய்ம்மை ஒழியும் வண்ணம் என்னை ஆண்டருளினவனே! விடத்தை உண்டு தேவர்களுக்கு அமிர்தத்தைக் கொடுத்தவனே! உன் திருவடியை எனக்குத் தந்தருளல் வேண்டும்.


பாடல் எண் : 10
போற்றி இப்புவனம் நீர்தீக் காலொடு வானம் ஆனாய்
போற்றி எவ்வுயிர்க்கும் தோற்றம் ஆகி நீ தோற்றம் இல்லாய்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாய் ஈறு இன்மை ஆனாய்
போற்றி ஐம்புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கை யானே.

பொருளுரை:
பஞ்ச பூதங்களாக இருப்பவனே! எல்லா உயிர்களுக்கும் பிறப்பிடமாய் இருப்பவனே! பிறப்பு இல்லாதவனே! எல்லா உயிர்களுக்கும் இறுதியும் உனக்கு இறுதி இன்மையும் ஆனவனே! ஐம்புலன்களும் தொடரப்பெறாத மாயத்தை உடையவனே! என்னைக் காத்தருளல் வேண்டும்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக