சனி, 19 நவம்பர், 2016

பாவம் போக்கி நற்கதி அருளும் காசி விஸ்வநாதர்

காசி, வாரணாசி, பெனாரஸ் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் காசிக்கு முகங்களும் நிறைய உண்டு. அது வயதானவர்களுக்கு முக்தி அடையும் ஸ்தலமாகவும், யாத்ரிகர்களுக்கு புனித நகரமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆச்சரியங்கள் அளிக்கும் இடமாகவும் பல்வேறு முகங்களை கொண்டது.


மும்மூர்த்திகளில் தனிப்பெருங்கடவுளான சிவனை, லிங்க வடிவில் வழிபடும் முறை, ஏறத்தாழ சிந்துவெளி நாகரிக காலத்திலிருந்தே இந்துக்களிடையே இருந்துவருகிறது. சைவ மரபில் சிவன் தான் முழுமுதற்கடவுள். இதனை திருமூலர் திருமந்திரத்தில்,

"சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவளச் சடைமுடித் தாமரை யானே." 
- என்று கூறுகிறார்.

இந்தியாவில் பன்னிரு ஜோதிர் லிங்கத் திருத்தலங்கள் உள்ளன. ஜோதிர்லிங்கத் திருத்தலங்களில் முக்தி தரும் தலங்கள் ஏழு. அவற்றுள் முக்கியமான தலம் காசி விஸ்வநாதர் ஆலயம். 

வருணா, அசி ஆகிய இரு சிறு நதிகள் சங்கமிக்கும் இடம் தான் வாரணாசி. இந்த தலம் முக்தி அளிப்பவனின் (சிவன்) நிரந்தர வாசஸ்தலம். கங்கை நதி பாயும் காசியில் கோவில் கொண்டுள்ள விஸ்வ நாதரை வாழ்வில் ஒருமுறையாவது தரிசனம் செய்யும் பேறு பெற்றவர்கள் மனிதர்களில் உத்தமர் என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. 

"ஆரூரில் பிறந்தால் முக்த, தில்லையை தரிசிக்க முக்தி, அண்ணாமலையை நினைக்க முக்தி, காசியில் மரித்தால் முக்தி" என்பது சைவ மரபில் தொன்றுதொட்டு இருந்துவரும் ஐதீகம். காசியில் இறப்பவருக்கு மரணத்தறுவாயில் காசி விஸ்வநாதரே தாரக பிரம்மத்தை உபதேசித்து நற்கதி அடையச் செய்கிறார்.


புனித காசி மாநகரைப் பற்றி இராமாயணம், பகவத்கீதை ஆகியவற்றில் பல குறிப்புகள் உள்ளன. மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மதேவன், தேவர்களான இந்திரன், சூரியன், அக்னி ஆகியோர் தவம் செய்த இடம் இது. அதேபோன்று தவசீலர்களான வியாசர், ஆதிசங்கரர் ஆகியோர் வசித்த இடமும் இதுதான். இன்றைக்கும் எத்தனையோ சாதுக்கள், சந்நியாசிகள், சித்தர்கள் தொடர்ந்து இங்கு தவமிருந்து வருகிறார்கள். சமயக் குரவரான திருஞானசம்பந்தர் தமது தேவாரப் பாடலில் (02:39:07)

"மாட்டூர் மடப் பாச்சிலாச்சிரமம்
மயிண்டீச்சுரம் வாதவூர் வாரணாசி
காட்டூர் கடம்பூர் படம்பக்கம் கொட்டும்..." 
- என வாரணாசியைப் பாடியுள்ளார்.

அதேபோன்று அப்பர் தமது தேவாரப் பாடலில் (06:70:06)

"மண்ணிப் படிக்கரை வாழ்கொளிபுத்தூர்
வக்கரை மந்தாரம் வாரணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி
விளமர் விராடபுரம் வேட்களத்தும்
பெண்ணை அருள்துறை தண் பெண்ணாகடம்,
பிரம்பில் பெரும்புலியூர் பெரு வேளூரும்
கண்ணை களர்க் காறை கழிப்பாலையும்
கயிலாய நாதனையே காணலாமே..."  
- எனப் பாடியுள்ளார்.

புனித கங்கை நதிக்கரையில் 64 முக்கிய படித்துறைகள் (காட்) உள்ளன. ஒவ்வொரு படித்துறைக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது. காசி விஸ்வநாதர் ஆலயம் மிகப் பழமையான வரலாற்று சிறப்புபெற்ற ஆலயம். தற்போதுள்ள ஆலயம் 1780-ல் மகாராணி அஹில்யா பாய் ஹோல்காரால் (1725-1795) கட்டப்பட்டது. இதற்கு முன்பிருந்த ஆலயமும் அதைச் சார்ந்த இடங்களும் மொகலாயப் பேரரசால் சூறையாடப்பட்டன. 

மொகலாயப் பேரரசை ஆண்ட அக்பர் (1556-1605) இந்து - முஸ்லிம் என வேறுபாடின்றி மதச்சார்பற்ற ஆட்சியை நடத்தினார். இவரது காலத்தில் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அக்பரைத் தொடர்ந்து ஆண்ட ஜஹாங்கீர், ஷாஜஹான் ஆகிய மன்னர்களாலும் இந்துக்களுக்கும் - குறிப்பாக காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 1627-லிருந்து 1658 வரை மொகலாயப் பேரரசை ஆண்ட ஷாஜஹானின் மூத்த மகனான தாராஷீகோ பாரசீக மொழியிலும், வடமொழியான சமஸ்கிருதத்திலும் புலமைபெற்றவராக இருந்தார். 

இவர் உபநிஷத்துக்களையும், பகவத் கீதையையும் பாரசீகத்தில் மொழி பெயர்த்தார். ஆனால் இவரது சகோதரரான அவுரங்கசீபு (1658-1707) சமயத்துறையில் இந்துக்களிடம் தமது பகையையும், வெறுப்பையும் வெளிப்படுத்தினார். இந்துக்களின்  புனித ஆலயங்களை அழிப்பதை தனது பணியாகக் கருதினார். அழிக்கப்பட்ட ஆலய இடத்தில் மசூதியைக் கட்டினார். இதனால் இந்துக்கள் மனம் வெந்தனர். இந்தவகையில் 1669-ஆம் ஆண்டு காசி விஸ்வநாதர் ஆலயத்தை மொகலாயப் படைகளைக் கொண்டு சூறையாடி ஆலயத்தை தரைமட்டம் ஆக்கினார். ஆனால் காசி விஸ்வநாதரின் லிங்கம் மட்டும் எப்படியோ காப்பாற்றப்பட்டு வேறிடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டது.

இந்திய வரலாற்றை சற்று முன்னோக்கிப் பார்க்கும் போது, வட இந்தியாவில் ஹர்ஷரின் ஆட்சி முடிவுற்றபின், சிறிதும் பெரிதுமாக பல சிற்றரசர்கள் தோன்றினர். இதில் சில முஸ்லிம் சிற்றரசர்கள் ஆட்சியில் காசி விஸ்வநாதர் ஆலயம் சில சமயங்களில் தாக்குதலுக்கு உட்பட்டு, பின்னர் இந்து மன்னர்களின் ஆதரவால் சீர் செய்யப்பட்டது.

ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியில் கவர்னர் ஜெனரலாகப் பணிபுரிந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் (பதவிக் காலம் 1772-1785) மற்றும் அன்றைய கலெக்டராக இருந்த முகமது இப்ராஹிம் கான் ஆகியோர் விஸ்வநாதர் ஆலயத்தின் திருப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

சீக்கிய மன்னரான மகாராஜா ரன்ஜித் சிங் (1780-1839) என்பவர் ஆலயத்தின் இரண்டு கோபுரங்களுக்கும் தங்கத்தகடு வேயும் பணியைச் செய்தார். காசி விஸ்வநாதர் ஆலயத் திருப்பணியில் இந்துக்களைத் தவிர, முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர்கள் என மதவேறுபாடுன்றி அனைவரும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். 1983-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி முதல் இவ்வாலயம் உத்தரப்பிரதேச மாநில அரசாங்கத்தின்கீழ் கொண்டு வரப்பட்டது. தற்சமயம் "காசி விஸ்வநாத் மந்திர் டிரஸ்ட்" என்கிற 15 பேர்களை உறுப்பினராகக் கொண்ட அறக்கட்டளை இவ்வாலயத்தை சிறப்பாக நிர்வகித்து வருகிறது.

ஸ்ரீ ஆதிசங்கரரின் வழித்தோன்றலாக வரும் சிருங்கேரி மடத்தின் சங்கராச்சார்ய ஸ்வாமிகள் இந்த அறக்கட்டளையின் ஓர் நிரந்தர உறுப்பினர் ஆவார். இந்த அறக்கட்டளையில் உத்தரப்பிரதேச மாநில அரசால் நியமிக்கப்பட்ட அறங்காவலர்களில் (டிரஸ்டி) ஒருவரான பிரதிப்குமார் பஜாஜ் என்பவர் ஆலயத்தின் சிறப்புகளைப் பற்றி குறிப்பிடும்போது, 

"காசி விஸ்வநாதர் ஆலயம் மிகப் பழமை வாய்ந்த முக்தி தலம். இங்கு தினமும் வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக மத்திய, மாநில அரசுகள் பெருமளவில் நிதி ஒதுக்கி அடிப்படை வசதிகளைச் செய்து வருகின்றன. தற்சமயம் கங்கை நதிக்கரையை தூய்மை செய்யும் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது. காவல் துறை இந்த ஆலயத்திற்கு "இசட் பிரிவு" பாதுகாப்பு அளித்துவருவதால், உள்ளூர், வெளிநாட்டு பக்தர்கள் பயமின்றி வந்துசெல்கிறார்கள்'' எனப் பெருமையுடன் தெரிவித்தார்.

லிங்க வடிவில் இருக்கும் மூலவர் காசி விஸ்வநாதர் கருவறையின் நடுவே இல்லாமல் சற்றே ஒரு மூலையில் உள்ளார். குனிந்த நிலையிலுள்ள மூல லிங்கத்தைச் சுற்றி வெள்ளியில் நான்கு புறமும் தொட்டி வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. "அபிஷேகப் பிரியரான" காசி விஸ்வநாதருக்கு பக்தர்கள் தாங்கள் கொண்டுவரும் அபிஷேக நீர் (கங்கை நீர்), பால், தயிர், இளநீர் போன்றவற்றை தங்களின் கைப்பட அபிஷேகம் மற்றும் பூஜை செய்யலாம். 


தென்னாட்டில் இருப்பதுபோலன்றி, இந்த ஆலயத்தில் அனைவரும் லிங்கத்தைத் தொட்டு பூஜைசெய்து வணங்கலாம். இப்படி தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தொட்டு வணங்கும் போது தெரிந்தோ தெரியாமலோ தவறிழைத்திருந்தால், மூலவரின் சாந்நித்யம் குறையாமல் இருப்பதற்காக தினமும் இரவு 7.00 மணியளவில் கருவறையைத் தூய்மை செய்துவிட்டு, ஸப்தரிஷி பூஜை மற்றும் ஆரத்தியைச் செய்கிறார்கள்.

காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சற்று தொலைவில் காசி விசாலாட்சி ஆலயம் உள்ளது. இவ்வாலயத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தாரால் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று காசி விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அன்னபூரணி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு முன்பு ஸ்ரீ ஆதிசங்கரர் வருகை தந்தபோது, "அன்னபூர்ணா ஸ்துதியை இயற்றினார்"

ஆலயத்திற்கு தினமும் வருகை தரும் பக்தர்களுக்கு "காசி அன்னபூர்ணா அன்னஷேத்ர நிர்வாகம்" தினமும் மதியம், இரவு இரு வேளையும் வயிறார சுவையான அன்னதானம் செய்கிறார்கள். இது வெளியூர் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. காசியில் ஸ்ரீ கால பைரவர் ஆலயம் காசி விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஸ்ரீ ஆதிசங்கரர் இவ்வாலயத்திற்கு வருகை தந்தபோது "கால பைரவாஷ்டகம்" எனும் கால பைரவர் துதியை இயற்றினார்.


கங்கை நதிக்கரையில் தினமும் மாலை 7.00 மணியளவில் நடக்கும் "கங்கா ஹாரத்தி" எனும் கோலாகலமான கண்கவர் ஆரத்தி நிகழ்ச்சியைக் காண உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் அதிகளவு கூடுகிறார்கள். இனம், மொழி, ஏழை, பணக்காரன் என்கிற எந்தவித பேதமின்றி யாவரும் மூலவரைத் தொட்டு வணங்கும் செயலால், "இறைவனின் படைப்பில் அனைவரும் சமம்" என்கிற உயரிய தத்துவத்தை நமக்கு காசி விஸ்வநாதர் உணர்த்துகிறார்.

நமது வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ பாவங்களைச் செய்திருப்போம். அவற்றை எல்லாம் தீர்க்க புனித கங்கையில் நீராடி இதுவரை செய்த பாவங்களை அழித்துவிட்டு, இனி வாழும் நாட்களில் எந்தவித பாவங்களையும் செய்யாமலிருக்க காசி விஸ்வநாதர் அருள் புரியட்டும் என வேண்டிக்கொள்வோம்.

"கங்கா தரங்க ரமணீய ஜடாகலாபம்
கௌரீ நிரந்த விபூஷித வாமபாகம்
நாராயண ப்ரியமநங்க மகாபஹாரம்
வாரணாஸீபுர பதிம் பஜ விஸ்வநாதம்."

நன்றி : முனைவர் இரா. இராஜேஸ்வரன்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக