சனி, 30 டிசம்பர், 2017

மார்கழி உற்சவம் 17

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை



பாடல் எண் : 17
செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம் நம்பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்து அருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோம் எங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய். 

பாடல் விளக்கம்‬:
தேன் சிந்தும் மலர்களைச் சூடிய கருங்கூந்தலை உடைய பெண்களே! செந்தாமரைக் கண்ணனான நாராயணன், பிரம்மா, பிற தேவர்கள் யாரும் தராத இன்பத்தை அள்ளி வழங்க நம் தலைவனாகிய சிவபெருமான், இதோ! வீடுகள் தோறும் எழுந்தருளுகிறான். அவனது தாமரை போன்ற திருவடிகளால் நம்மை ஆட்கொள்ள சேவகன் போல் இறங்கி வருகிறான். அழகிய கண்களை உடையவனும், அடியவர்களுக்கு அமுதமானவனும், நமது தலைவனுமான அந்தச் சிவனை வணங்கி நலம் பல பெறும் பொருட்டு, தாமரை மலர்கள் மிதக்கும் இந்த பொய்கையில் பாய்ந்து நீராடி அவன் தரிசனம் காண தயாராவோம்.

தத்துவ விளக்கம்:
அடியவரின் தூய்மையான அன்புக்கு ஆட்பட்டு, மிகவும் எளிமையான சேவகன் போல், அவர்களின் வீடு தோறும் வந்து, தேவர்களுக்கெல்லாம் கிடைக்கப்பெறாத இன்பத்தைத் தனது அடியவர்களுக்குத் தருகின்ற கருணை உள்ளவன் இறைவன் என்கிறார் மாணிக்கவாசகர்.


ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை



பாசுரம் 17
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்.

பாசுர விளக்கம்:
ஆடைகளையும், குளிர்ந்த நீரையும், உணவும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபரே! தாங்கள் எழுந்தருள வேண்டும். கொடிபோன்ற இடைகளையுடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே! மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே! நீ எழ வேண்டும். விண்ணையே கிழித்து உன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே! நீ கண் விழிக்க வேண்டும். செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத் திருமகனான பலராமனே! நீயும், உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு தரிசனம் தர வேண்டும்.

திருப்பாவையில் வாமன அவதாரத்தைச் சிறப்பாக பாடுகிறாள் ஆண்டாள். மூன்று பாசுரங்களில் இந்த அவதாரத்தை அவள் சிறப்பித்திருக்கிறாள். "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி என்று மூன்றாவது பாடலிலும், இந்தப் பாடலிலும், 24-வது பாடலில் அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி என்றும் சொல்கிறாள். அசுரனாயினும் நல்லவனான மகாபலி, தேவர்களை அடக்கி கர்வம் கொண்டிருந்தான். இந்த கர்வம் அடங்கினால் இறைவனை அடைவது உறுதி என்பதாலேயே நாராயணன் வாமனனாக வந்து அவனை ஆட்கொண்டார். திருப்பாவை பாடுபவர்கள் "தான் என்ற கர்வத்தை அடக்க வேண்டும்" என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

நந்தகோபரின் மாளிகை நான்கு அறைகளாக அமைந்திருக்கிறது. அதில் முதற் கட்டில் படுத்திருக்கும் நந்தகோபரை, உடை, தண்ணீர், உணவு ஆகியவற்றை எல்லோருக்கும் வாரி வழங்கும் வள்ளலே! எழுந்திரு! என்று எழுப்பினர். அடுத்த அறைக்குச் சென்று, பெண்கள் குலத்துக்கே கொழுந்து போன்றவளே! குலவிளக்கே! எங்கள் தலைவியே எழுந்திரு! என்று யசோதையை எழுப்பினர். ஒரு சமயம் வாமன அவதாரம் எடுத்து, மகாபலி சக்கரவர்த்தியிடம் சென்று, மூவடி மண்கேட்டு, பெரிய உருவங்கொண்டு மூன்று அடிகளால் எல்லா உலகங்களையும் திருவடியால் அளந்துகொண்ட தேவாதி தேவனே! உறங்காதே எழுந்திரு என்று எழுப்பி, அடுத்த அறைக்குச் சென்றனர். செம்பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழல் அணிந்த செல்வனே! பலராமனே! நீயும் உன் தம்பியான கண்ணனும் உறங்காதே எழுந்திருங்கள் என்கின்றனர். இந்தப் பாசுரம் ஸ்ரீ நந்தகோபர், யசோதை, கண்ணன், பலராமன் ஆகிய நால்வரையும், எழுப்புவதாகும். 

முதல் இரண்டடிகள் நந்தகோபரைச் சொல்வதாக இருந்தாலும் ஆசார்யரைக் குறிக்கிறது. மூன்றாவது நான்காவது அடிகள் யசோதையைக் குறித்தாலும், "மந்த்ரோ மாதா" என்றபடி ஆசார்யன் உபதேசிக்கும் அஷ்டாக்ஷர திருமந்திரத்தைக் குறிப்பிடுகிறது. ஐந்து, ஆறாவது அடிகள் மந்திரத்துக்கு உள்ளீடான பகவானைக் குறிக்கிறது. ஏழு, எட்டு அடிகள் பகவானுக்குத் தொண்டு செய்யும் அடியார்களைக் குறிக்கிறது என்பதாகக் கூறுவர்.

குறிப்பு : இப்பாடலுக்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக