ஞாயிறு, 17 டிசம்பர், 2017

மார்கழி உற்சவம் 02

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை 



பாடல் எண் 02
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும் போது எப்போது இப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையும் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய். 

பாடல் விளக்கம்‬:
அருமையான அணிகலன்களை அணிந்த தோழியே! இராப்பகலாக எங்களுடன் அமர்ந்து பேசும் போது ஜோதி வடிவான நம் அண்ணாமலையார் மீது நான் கொண்ட பாசம் அளவிடற்கரியது என்று வீரம் பேசினாய். ஆனால், இப்போது நீராட அழைத்தால் வர மறுத்து மலர் பஞ்சணையில் அயர்ந்து உறங்குகிறாய், என்கிறார்கள் தோழிகள். உறங்குபவள் எழுந்து, தோழியரே! சீச்சி! இது என்ன பேச்சு! ஏதோ கண்ணயர்ந்து விட்டேன் என்பதற்காக இப்படியா கேலி பேசுவது? என்றாள். அவளுக்கு பதிலளித்த தோழியர், கண்களை கூசச்செய்யும் பிரகாசமான திருவடிகளைக் கொண்ட சிவபெருமானை வழிபட தேவர்களே முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் முடியவில்லை. நமக்கோ, நம் வீட்டு முன்பே தரிசனம் தர வந்து கொண்டிருக்கிறான். அவன் சிவலோகத்தில் வாழ்பவன், திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் நடனம் புரிபவன். நம்மைத் தேடி வருபவன் மீது நாம் எவ்வளவு தூரம் பாசம் வைக்க வேண்டும், நீயே புரிந்து கொள்வாயாக, என்றனர்.

தத்துவ விளக்கம்:
ஒளியான இறைவனை அடைவதே இலக்கு என்று சில சமயம் சொன்ன மனம், திரும்பவும் சோம்பலுக்கு ஆட்பட்டு, மாயையில் அமிழ்ந்து விடுகிறது. அதனைத் திரும்பவும் இறைவனை நோக்கித் திருப்ப வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார், மாணிக்கவாசகர்.


ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை 



பாசுரம் 02
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

பாசுர விளக்கம்:
திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக,  பாவை நோன்புக்கு செய்ய வேண்டி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக் கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக் கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.

ஒரு செயலில் வெற்றி பெற கட்டுப்பாடு மிகவும் அவசியம். வாயைக் கட்டிப்போட்டால் மனம் கட்டுப்படும். மனம் கட்டுப்பட்டால் கடவுள் கண்ணுக்குத் தெரிவான். அதனால் தான் பாவை நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை தவிர்த்து உடலைக் காப்பதுடன், தீயசொற்கள், தீயசெயல்களைத் தவிர்த்து மனதை சுத்தமாக்குவதையும் கடமையாக்குகிறாள் ஆண்டாள். இந்தப் பாடல் 107 வது திருப்பதியான திருப்பாற்கடல் குறித்து பாடப்படுகிறது.

எல்லாச் செல்வங்களையும் தன்னிடத்தில் வைத்துக்கொண்டிருப்பதால் வையம் என்ற சொல் பூமியைக் குறிக்கிறது. எனினும் பூமியின் ஒரு பகுதியில் உள்ள திருஆயர்பாடியையே உணர்த்துகின்றது. கண்ணன் பிறந்த திருவாயர்பாடியில் வாழும் காலத்தில் அவ்விடத்தில் அவனோடு சேர்ந்து வாழும் பெரும்பேறு பெற்றவர்களே! மழைக்காக நாம் செய்யும் நோன்பினை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைக் கூறுகிறேன் கவனத்துடன் கேளுங்கள்.

அடியார்களுக்கு அருள்வதற்காகவே நாராயணன் பாற்கடலில் அரவணைமேல் பள்ளிகொண்டு யோக நித்திரை செய்கின்றான். அப்படிப்பட்ட பரமனைப் பாடிக்கொண்டே இருக்க வேண்டும். விடியற்காலையில் நீராட வேண்டும். திருஆயர்பாடியில் நெய்யும் பாலும் நிறைந்திருந்தாலும் நாம் உண்ணக்கூடாது. மை என்பது மங்களகரமான பொருளாக இருந்தாலும் அதைக் கண்களில் இட்டு அலங்காரம் செய்துகொள்வதையும், தலையில் மலர்களை வைத்துக் கொள்வதையும் விரதகாலம் முடியும் வரை தவிர்க்க வேண்டும். பெரியோர்கள் இப்படிப்பட்ட காலங்களில் எந்தெந்தச் செயல்களைச் செய்யாமல் விட்டார்களோ, அந்தச் செயல்களை நாமும் செய்யாதிருக்க வேண்டும்.

ஒருவர்மேல் ஒருவர் கோள் சொல்வது தீமை பயக்குமாததால், அத்தகைய தீக்குறளைச் சொல்லக்கூடாது. யாசகர்களுக்கு "இல்லை" என்று சொல்லாமல் பொன்னும் பொருளும் வாரி வழங்க வேண்டும். உணவு இடவேண்டும்; பிச்சை இட வேண்டும்; அவ்வாறு கொடுக்கும் இடத்தையும் காட்ட வேண்டும். இவை எல்லாம் நீங்கள் நன்மைபெறும் வழிகள். இவற்றைச் செய்யும் போது மனமுவந்து செய்ய வேண்டும் என்கிறாள் ஆண்டாள். நல்ல அறிவுரைகளைக் கேட்டு நடப்பது நமக்கும் நல்லது; பிறர்க்கும் நல்லது.

குறிப்பு : பாடலுக்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக