ஞாயிறு, 17 டிசம்பர், 2017

மார்கழி உற்சவம் 05

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை



பாடல் எண் : 05
மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்     
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்     
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டு அருளிக் கோதாட்டும்      
சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்      
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 

பாடல் விளக்கம்‬:
நறுமணத் திரவியம் பூசிய கூந்தலையும், பாலும் தேனும் ஊறும் இனிய உதடுகளைக் கொண்டவளுமான பெண்ணே! திருமால் வராகமாகவும், பிரம்மா அன்னமாகவும் உருவெடுத்துச் சென்றும் அவரது உச்சியையும், பாதங்களையும் காண முடியாத பெருமையை உடைய மலை வடிவானவர் நம் அண்ணாமலையார். ஆனால் அவரை நாம் அறிவோம் என நீ சாதாரணமாகப் பேசுகிறாய். நம்மால் மட்டுமல்ல... இவ்வுலகில் உள்ள மற்றவர்களாலும், அவ்வுலகிலுள்ள தேவர்களாலுமே அவனை புரிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவனை உணர்ச்சிப்பெருக்குடன் "சிவ சிவ" என்று ஓலமிட்டு அழைக்கிறோம். நீயோ, இதை உணராமல் உறக்கத்தில் இருக்கிறாய். முதலில் கதவைத் திற என்று தோழியை எழுப்புகிறார்கள் திருவண்ணாமலைப் பெண்கள்.

தத்துவ விளக்கம்:
ஆணவ மலத்தில் கட்டுண்ட மனம், இறைவனைப் பற்றி சிறிதளவு நினைக்கும்பொதே, தான் முழுதும் உணர்ந்து விட்டதாக நம்மை ஏமாற்றும். இந்த மாயையில் சிக்கிக் கொள்ளாமல், முழுமையான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், அவன் ஆட்கொள்வதற்காக, நம்மை மேலும் மேலும் தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறார் மாணிக்கவாசகர்.


ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை



பாசுரம் : 05
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

பாசுர விளக்கம்:
வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர் குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.

உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும் என்பது ஒரு தாய்க்கு பிள்ளை செய்ய வேண்டிய கடமை. தேவகி தாய்க்கு கண்ணனை பெற்றதால் பெருமை. "ஈங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்" என்று அவள் பெருமைப்படுகிறாள். குழந்தைகள், பெற்றவர்களுக்கு நல்ல பெயர் வாங்கித் தரவேண்டும் என்பது இதன் உட்கருத்து.

குறிப்பு : பாடலுக்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக