திங்கள், 25 டிசம்பர், 2017

மார்கழி உற்சவம் 13

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை



பாடல் எண் : 13
பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்து ஆர்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய். 

பாடல் விளக்கம்‬:
கரிய நிற குவளை மலர்கள் குளத்தின் நடுவிலே உள்ளன. அருகில் சிவந்த நிறத்தில் தாமரை மலர்கள் முளைத்துக் கிடக்கின்றன. நீர் காக்கைகள் நீரில் மிதக்கின்றன. இந்தக் குளத்தில் தங்கள் அழுக்கை களைய மக்கள் வருகிறார்கள். அவர்கள் "நமசிவாய" என சொல்லி சப்தம் எழுப்புகிறார்கள். இந்தக் காரணங்களால், இந்தக் குளம் எங்கள் சிவனையும், பார்வதியையும் போல் தோற்றமளிக்கிறது. தாமரை மலர்கள் நிறைந்த இந்த தெய்வீக குளத்தில், நம் சங்கு வளையல்கள் சலசலக்க, கால் சிலம்புகள் கலகலவென ஒலியெழுப்ப, மார்புகள் விம்ம, பாய்ந்து நடுப்பகுதிக்கு சென்று நீராடுவோம்.

தத்துவ விளக்கம்:
ஒரு குளமானது தன்னைத் தேடி வந்தவர்களின் அழுக்குகளை நீக்கிக் களைவதுபோல, இறைவனும் தன்னை எண்ணி இறைஞ்சி நிற்பவரின் ஆணவ / பாவ அழுக்குக்களை நீக்குகிறான்.


ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை



பாசுரம் 13
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்.

பாசுர விளக்கம்:
பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், பிறன் மனை நாடிய ராவணனின் தலையைக் கொய்யவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடிய படியே, நம் தோழியர் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்றாகி விட்டது. கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து விட்டது. வியாழன் மறைந்து விட்டது. பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணே! விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும் உடல் நடுங்கும்படி, குளிர்ந்த நீரில் நீச்சலடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்? அந்தக் கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே! மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பல்லவா? எனவே, தூக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா.

"கள்ளம் தவிர்ந்து" என்கிறாள் ஆண்டாள். தூக்கம் ஒரு திருட்டுத்தனம். பொருளைத் திருடினால் மட்டும் திருட்டல்ல! நேரத்தை வீணடிப்பதும் ஒரு வகையில் திருட்டு தான்! அதிலும், பகவானை நினைக்காத ஒவ்வொரு நிமிடமும் நமக்கு நாமே செய்யும் திருட்டு தான். வயதான பிறகு திருப்பாவையைப் படிக்கலமே என நினைக்கக் கூடாது. அப்போது, வாய் உளற ஆரம்பிக்கும். சில நேரங்களில் பாட முடியாமலே போய்விடும். இந்தப் பாடல் வெளியாகும் பத்திரிகையைப் பிடிக்க முடியாமல் கைகள் நடுங்கும். அப்போது, பகவானை நினைத்து என்ன பயன்? இளமையிலேயே, பகவானின் திருநாமங்களைச் சொல்லி, அவனது திருக்கதையைப் படித்தால் செல்வங்கள் நம்மைத் தேடி வராதோ?.

கண்ணழகு மிகுந்தவன் கண்ணன். அவனைத் தாமரைக் கண்ணன் என்றும் கூறுவார்கள். கண்ணனையும் இராமனையும் சேர்த்துப் பாட இசைந்து, இப்பாடலில் "புள்ளின் வாய்க் கீண்டானை" என்று கண்ணனையும், "பொல்லாவரக்கனைக் கிள்ளிக் களைந்தானை" என்று இராமனையும் பாடினார்கள். கண்ணன் மாடுகளை மேய்த்துக் கொண்டு ஒரு நீர் நிலைக்குச் செல்லும்போது, கம்சனால் ஏவப்பட்ட ஓர் அசுரன் கொக்கு வடிவத்தில் இருந்துகொண்டு கண்ணனருகில் ஓடிவந்தான். கண்ணன் அந்தப் பகாசுரன் மீது பாய்ந்து அதன் அலகுகளை இரண்டாகப் பிளந்து அவனைக் கொன்ற நிகழ்ச்சியையும், ராமன் பொல்லாவரக்கனான ராவணனை எளிதில் அழித்த வீர சரித்திரத்தையும் பாடிக்கொண்டே எல்லாப் பெண்களும், ஒன்று சேரும் இடமாகிய பாவைக் களத்திற்குச் சென்றுவிட்டார்கள். வானத்தில் வியாழன் நட்சத்திரம் மறைந்து வெள்ளியும் தோன்றிவிட்டது. பறவைகளும் சிலம்புகின்றன. இத்தகைய நல்ல வேளையில் யமுனையாற்றில் குள்ளக்குளிர அமிழ்ந்து நீராடாமல் படுத்திருக்கிறாயே! இது ஒரு நன்னாள்! தனிமையில் கொள்ளும் இறையின்பமும் கள்ளம். இப்படிப்பட்ட கள்ளம் தவிர்த்து எங்களோடு சேர்ந்து கண்ணனை அனுபவிக்கலாம் எழுந்து வா! என்று அழைக்கிறார்கள் என்று இப்பாசுரம் கூறுகிறது.

குறிப்பு : இப்பாடலுக்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக