சனி, 28 மே, 2016

67 நேச நாயனார் புராணம்

"நேசனுக்கும் அடியேன்."

"சிவனடியார்களுக்கு உடை, கோவணம், கீள் முதலியன கொடுத்துக் காத்த சாலியர்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சோமேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ---

அவதாரத் தலம் : காம்பீலி

முக்தி தலம் : காம்பீலி

குருபூஜை நாள் : பங்குனி- ரோகிணி

"ஆங்கவர் மனத்தின் செய்கை அரன் அடிப்போதுக்கு ஆக்கி
ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்சு எழுத்துக்கு ஆக்கி
தாங்கு கைத்தொழிலின் செய்கை தம்பிரான் அடியார்க்காகப்
பாங்குடை உடையும் கீளும் பழுதில் கோவணமும் நெய்வார்."

பாடல் விளக்கம்:
அவர் தம் உள்ளத்தின் நினைவை சிவபெருமானின் திருவடி மலர்களுக்கு ஆக்கி, மேன்மேலும் ஓங்கிய வாக்கின் செயலை உயர்வுடைய ஐந்து எழுத்துக்கு ஆக்கி, மேற்கொண்ட கைத்தொழில் திறனையெல்லாம் தம் இறைவரின் அடியவர்களுக்காக ஆக்கி, நல்ல பான்மையுடைய கீள் உடையும், பழுது இல்லாத கோவணமும் ஆகிய இவற்றை நெய்துவருவாராகி.

நேச நாயனார் புராணம்



காம்பீலி என்னும் பழம்பெரும் பதியில், காளர் மரபில் நேச நாயனார் என்பவர் அவதரித்தார். நேச நாயனார் ஈசரிடத்தும் அவர்தம் நேசரிடத்தும் அளவிலாப் பாசமுடையவராய் வாழ்ந்து வந்தார். இவர் மனம் முக்காலமும் முக்கண்ணனின் மென்மலர்த் தாளினை நினைக்க - வாக்கு திருவைந்தெழுத்து மந்திரத்தைச் சொல்ல - காயம் திருசடைபிரானுக்குத் திருப்பணிகள் பல செய்தன. 

நேச நாயனார் நெய்தல் தொழிலைச் செய்து வந்தார். சிவனடியார்களுக்கு வேண்டிய ஆடைகளும் கீளும் கோவணமும் நெய்து வழங்கும் பணியைத் தட்டாது செய்து வந்தார். நேச நாயனார் சிவனடியார்களுக்காகவே வாழ்ந்தார். உயர்ந்த பேரின்பப் பெருவாழ்வு பெற்று பரமனின் மென்மலர்த்தாள் நீழலை அடைந்தார்.

"கற்றை வேணி முடியார் தம் கழல் சேர்வதற்குக் கலந்த வினை
செற்ற நேசர் கழல் வணங்கிச் சிறப்பால் முன்னைப் பிறப்பு உணர்ந்து
பெற்றம் உயர்த்தார்க்கு ஆலயங்கள் பெருக அமைத்து மண்ணாண்ட
கொற்ற வேந்தர் கோச்செங்கண் சோழர் பெருமை கூறுவாம்."

பாடல் விளக்கம்:
தொகுதியான சடையை முடியாக உடைய இறைவரின் திருவடிகளைச் சேர்வதற்கு ஏற்பத் தம்மைச் சார்ந்திருந்த வினைச் சார்புகளை அறுத்த நேச நாயனாரின் திருவடிகளை வணங்கித், தவச் சிறப்பால் தம் முன்னைப் பிறப்பையுணர்ந்து அவ்வுணர்ச்சியுடன் வந்து தோன்றி, விடைக் கொடியை உயர்த்திய இறைவற்குத் திருக்கோயில்கள் பலவற்றை எடுத்து, மண்ணுலகம் காவல் கொண்டு, வெற்றி பொருந்திய மன்னரான கோச்செங்கட்சோழரின் பெருமையை இனிச் சொல்லத் தொடங்குவாம்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக