ஆன்மீக கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீக கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

சகல வினைகளையும் போக்கும் பிரதோஷ வழிபாடு


01 ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அன்று தான் ஈசன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால் சனி மகாபிரதோஷம் என்று சொல்லப்படுகிறது. 

02 பிரதோஷ காலம் என்பது மாலை 4 மணியில் இருந்து 6.30 வரை என சொல்கிறார்கள். இந்த நேரத்தில் சிவாலயம் சென்று வலம் வந்து ஈசனைத் தரிசிக்க வேண்டும். வசதி உள்ளவர்கள் இறைவனுக்கும் நந்திக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தால் நல்லது.

03 பிரதோஷ தரிசனம் காணும் வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சனி மகாபிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப் பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

04 பிரதோஷ வேளையில் நந்தியம் பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்யலாம். 

05 பிரதோஷ நேரத்தில் மட்டும் சிவபெருமானை வலம் வரும் விதத்தை சோமசூக்தப் பிரதட்சணம் என்பர். சோமசூக்தம் என்றால் அபிஷேக நீர் விழும் கோமுகி தீர்த்தத் தொட்டியை குறிக்கிறது. இந்தத் தொட்டியை மையமாக வைத்து வலம் இடமான இடவலமாக மேற்கொள்ளப்பெறும் பிரதட்சண முறையே பிரதோஷப் பிரதட்சணம் எனப்படுகிறது.  

06 நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.

07 சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்; இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும்; அன்று  செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.

08 சனிப்பிரதோஷ நேரத்தில் எல்லா தேவர்களும் ஈசனின் நாட்டியத்தை காண ஆலயம் வருவார்கள் என்பது நம்பிக்கை. எனவே, ஆலயத்தில் உள்ள மற்ற சந்நிதிகள் திரையிடப்பட்டு இருக்கும். பிரதோஷ நேரத்தில் மற்ற ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகம்.

09 நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால் அன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பு தரும்.

10 சிவபெருமான் ஆலகால விஷம் உண்ட மயக்கத்தில் சக்தியின் மடியில் சயனிக்கும் கோலத்தில் இருக்கும் சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர் கோயிலில் சனிப்பிரதோஷ வழிபாடு செய்வது பொருத்தமானது. பஞ்செட்டி அருகே அமைந்துள்ள வாலீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு செய்வது இன்னமும் சிறப்பானது என்கிறார்கள். இங்கு உறையும் சிவன் ஆலகாலத்தை ஏற்று கருமையாக இருக்கிறார், அவருக்குப் பால் அபிஷேகம் செய்யும்போது பால் கருநீலமாக வழிவதை இங்கு காணலாம். 

11 பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது. 

12 மற்ற பிரதோஷ நேரத்தில் செய்யப்படும் தரிசனம், தானம், ஜெபதபங்கள் யாவுமே சனிப்பிரதோஷ நாளில் செய்யப்படும்போது பல மடங்கு பலன்களைத் தரும் என்பது புராணங்கள் தெரிவிக்கும் தகவல்.

13 பிரதோஷ நேரத்துக்குள் சிவனுக்கான அபிஷேக ஆராதனைகள், தரிசனம், புறப்பாடு என எல்லாவற்றையும் செய்துவிட வேண்டும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிவதால் அதன் பின்னர் செய்யும் வழிபாடுகள் அந்திபூஜை தான் என்பதால் அது பிரதோஷ வழிபாடு ஆகாது. 

14 பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருகப் பெருமானோடும் இணைந்த சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றத்தை காணலாம்.

15 சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும்.

16 அன்றைய நாள் முழுக்க உண்ணாமல் இருந்து சிவதரிசனம் முடித்தபிறகு உப்பு, காரம், புளிப்பு சேர்க்காமல் உண்பது வழக்கம். சாதாரண பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால், ஐந்து வருடத்துக்கு ஈசனை  வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்கிறார்கள்.

17 ஏகாதசியன்று ஆலகாலம் உண்ட ஈசன் துவாதசி முழுவதும் மயக்க நிலையில் இருந்தார். பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா வேளையில் எழுந்து, சூலத்தை சுழற்றி டமருகத்தை ஒலித்து சந்தியா நிருத்தம் எனும் நாட்டியம் ஆடினார். பிரளய தாண்டவம் எனப்படும் இந்த நாட்டியம் ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் எனும் ஐவகை தொழிலையும் ஊக்கப்படுத்தும் விதமாக ஈசனால் ஆடப்பட்டது என்கிறார்கள்.  நாளைய தினம் சனி மகாபிரதோஷம் வருகிறது. அன்பர்கள் ஆலயம் சென்று ஈசனை தரிசித்து அருள்பெற வேண்டுகிறோம்.

"ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!"

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 

செவ்வாய், 13 மார்ச், 2018

மாங்கல்ய பலம் தரும் சாவித்திரி விரதம்

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். (இவ்வாண்டு 14.03.2018 இரவு முதல் 15.03.2018 காலை வரை). இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கௌரி விரதம், சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள்.

சாவித்திரி தன் கணவனை எமதர்ம ராஜனிடமிருந்து மீட்டது இந்த நாளில் தான். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கழுத்தில் மங்கல நாண் நிலைக்கவும்; தங்களது கணவன் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்பதற் காகவும் சாவித்திரி அம்மனை வேண்டி இந்த விரதம் இருப்பார்கள். விரத பூஜையில் காமாட்சி அம்மனையும், கலசத்தையும் (கலச பூஜை) வழிபடுவார்கள்.


அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். "மாசிக்கயிறு பாசி படியும்" என்று, பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக்கொள்வது விசேஷமானதாகக் கருதப்படுகிறது.

சாவித்திரி விரதத்தின் சிறப்பை புராணம் விளக்குகிறது. நெடுநாட்கள் பிள்ளைப் பேறு இல்லாமலிருந்த அசுபதி மன்னன், மகப்பேறு வேண்டி தான - தர்மங்கள் செய்து வந்தான். அதன் பயனாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. சாமுத்திரிகா லட்சணங்கள் அனைத்தும் கொண்டிருந்த அக்குழந்தைக்கு சாவித்திரி என்று பெயரிட்டனர். அவளுக்கு எட்டு வயதாகும்போது அங்கு வந்த நாரதர், அவளது எதிர்காலத்தைப் பற்றி கூறிச் சென்றார். தாய் - தந்தையரை தெய்வமாக மதிக்கும் சத்யவான் என்பவனை அவள் மணந்து கொள்வாள் என்றும்; சத்யவான் 21 ஆண்டுகள் வரைதான் வாழ்வான் என்றும் கூறியிருந்தார்.

சாவித்திரி சத்யவானையே மணந்து, அவனது வாழ்நாள் அதிகரிக்க பல விரதங்களையும் நோன்புகளையும் அனுஷ்டித்தாள். சத்யவானும் சாவித்திரியும் வேற்று நாட்டு அரசனால் நாடு கடத்தப்பட்டு ஒரு கானகத்தில் வசித்து வந்தனர். நாரதர் கூறியிருந்தபடி சத்யவானின் இறுதிநாள் வந்தது. அன்று சாவித்திரி தடுத்தும் கேளாமல் அவன் விறகு சேகரிக்க காட்டுக்குப் புறப்பட்டான். சாவித்திரியும் உடன் சென்றாள். நண்பகல் வேளையில் சத்யவான் சாவித்திரியின் மடியில் தலைவைத்து படுத்திருந்தபோது, எமதர்ம ராஜன் அவன் உயிரைப் பறித்துச் சென்றான். சாவித்திரியின் கற்புத் திறத்தால் எமதர்மனின் உருவம் அவள் கண்களுக்குத் தெரிந்தது. அவள் தன் கணவனின் உடலைக் கீழே கிடத்தி விட்டு, எமனைப் பின்பற்றிச் சென்றாள்.

அவளது காலடி ஓசை கேட்டுத் திரும்பிய எமனின் பாதங்களில் விழுந்து சாவித்திரி வணங்கினாள். அவளை "தீர்க்க சுமங்கலி பவ" என்று எமன் வாழ்த்தினான். சாவித்திரி எமனை வேண்டி பல வரங்களைப் பெற்றாள். அதில் வம்சவிருத்தி அருளும்படி வேண்டிய வரம் எமனைத் திகைக்க வைத்தது. சாதுர்யமாக தன் கணவனின் உயிரை அவள் மீட்டதை அறிந்தான் எமன்.

சாவித்திரியின் பதிபக்தியை மெச்சிய எமன், "இதுவரை என்னை யாரும் பார்த்தது இல்லை. உன் கற்பின் மகிமையால் நீ வெற்றி பெற்று விட்டாய். நீ என்னிடம் கேட்டுப் பெற்ற வரங்கள் அனைத்தும் நிறைவேறும். உலகம் உள்ளளவும், உன்னை நினைத்து மாசியும் பங்குனியும் சேரும் சமயத்தில் விரதமிருப்பவர்களுக்கு உன் ஆசி கிட்டும். அவர்கள் மனமொத்த தம்பதிகளாக வாழ்வார்கள்'' என ஆசி கூறி அனுப்பினான்.


சாவித்திரி காட்டில் கணவனை விட்டுச் சென்ற இடத்திற்குத் திரும்பி வந்து, அவன் உடலைத் தன் மடியில் கிடத்தினாள். சிறிது நேரத்தில் தூக்கத்திலிருந்து விழிப்பதுபோல் சத்யவான் விழித்தெழுந்து, "உன்னைப் போன்ற பெண் ஒருத்தி என்னை மீட்டு வந்ததாகக் கனவு கண்டேன்'' என்று கூறினான். அவன் உயிரை எமன் எடுத்துச் சென்றதையும்; எமனுடன் போராடி அவன் உயிரையும், மேலும் பல வரங்களையும் பெற்று வந்த விவரத்தையும் சாவித்திரி கூறினாள்.

சாவித்திரியும் சத்யவானும் தங்கள் குடிலுக்குத் திரும்பி வந்தனர். சாவித்திரி எமனிடம் பெற்ற வரத்தின்படி சத்யவான் மீண்டும் தன் நாட்டைப் பெற்றான். அவனது பெற்றோர்கள் கண்பார்வை பெற்றனர். சாவித்திரி அனுஷ்டித்து வந்த நோன்பு அவளது காலம் வரை கௌரி நோன்பு எனக் கூறப்பட்டது. அதன் பின்னர் சாவித்திரி நோன்பு என்ற பெயர் பெற்றது. சாவித்திரி காட்டில் இருந்து இந்த நோன்பை மேற்கொண்டபோது அங்கு அவளுக்குக் கிடைத்த காராமணி, கார் அரிசி ஆகியவற்றைக் கொண்டு காரடை செய்து நிவேதனம் செய்தாள். அதனால் இந்த நோன்பு நோற்கும் பெண்கள் நிவேதனத்தில் காரடை வைத்து, "உருகாத வெண்ணெயும் ஓரடையும் நான் தருவேன்; ஒருக்காலும் என் கணவர் என்னைப் பிரியாதிருக்க வேண்டும்" என வேண்டி நோன்புக் கயிறு கட்டிக் கொள்வார்கள்.

திருமணமான பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க, கணவரை நோய் நொடியின்றி காக்க இந்த நோன்பு கவசமாக இருக்கிறது. இந்த நோன்பை நோற்பதன் பலனாக சாவித்திரி நூறு பிள்ளைகளுடன் சௌபாக்கியவதியாய் பல்லாண்டு காலம் வாழ்ந்தாள் என்பது புராணம். அவளது சரித்திரத்தை நோன்பு தினத்தில் படிப்பதால் சகல சௌபாக்கியங்களும் பெறலாம்.

நன்றி : கே சுவர்ணா

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 


குறிப்பு: தங்கள் வருகைக்கு நன்றி...! மேலும் இப்பக்கத்தில் உருவாகும் பதிவுகள் எங்களது திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும் குழும முயற்சியில் உருவானவை, இதனை பிரதி(Copy) எடுக்க அனுமதி கிடையாது.

புதன், 24 ஜனவரி, 2018

நோய் தீர்க்கும் ரதசப்தமி விரதம்

தை மாதத்தை மகர ராசிக்கான மாதம் என்பார்கள். இந்த மகர ராசியில் அமாவாசைக்குப் பிறகு வரும் ஏழாவது நாள் ரத சப்தமியாகும். அன்றுதான் சூரியன் உத்திராயணத்தில் பிரவேசிக்கும் தினமாகக் கருதப்படுகிறது. ரத சப்தமிக்கு மறுநாள் பீஷ்மாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.

அன்று சூரியனுடைய பல நாமங்களில் ஒன்றின் பொருளையாவது நன்கு உணர்ந்து ஜபித்து அவரை வழிபட்டால், சகல சௌபாக்கியங்கள் கிட்டுவதுடன் வாழ்வின் இறுதியில் சூரிய லோகத்தையும் அடையலாம். நாம் ஆண்டுதோறும் பற்பல விரதங்களைக் கடைப்பிடிக்கிறோம். அவற்றுள் ஒன்றுதான் ரதசப்தமி விரதம்.


ஒரு சக்கரம், ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தை ரதசப்தமியன்று விஷ்ணு சூரியனுக்கு அளித்தார். இதன் சாரதி அருணன். இவன் காசிப முனிவரின் மனைவி விரதையின் மகன். சூரிய ரதத்தின் ஏழு குதிரைகளை காயத்ரி, பிருகதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பங்கிதி என்றும், இவற்றையே தினமணி, கத்யை, லோக பந்து, சுரோத்தமை, தாமநிதி, பத்மினி, ஹரி என்ற பெயர்களாலும் அழைப்பர்.

ரதசப்தமியன்று காலை குளிக்கும்போது சூரியனுக்குப் பிடித்த எருக்கன் இலைகளை ஏழு அல்லது ஒன்பது எண்ணிக்கையில் எடுத்து அடுக்கி, அதன்மீது அட்சதை, எள் வைக்க வேண்டும். ஆணுக்கு அதனுடன் விபூதியும், பெண்ணுக்கு அதனுடன் மஞ்சள் பொடியும் வைக்க வேண்டும். இவ்விலை அடுக்கைத் தலைமீது வைத்து ஸ்நானம் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், மின்சாரம் எப்படி உலோகக் கம்பி வழியே பாய்கிறதோ, அப்படி சூரியனின் ஏழு வகைக் கதிர்கள் அன்று மட்டும் எருக்கன் இலை வழியே இழுக்கப்பட்டு விரைவில் நம் உடலில் பாய்ந்து, உடல் உபாதைகளையும் நோய்களையும் நீக்குகிறது என்றுதான் நம் முன்னோர்கள் இதைச் செய்தனர். நாமும் அதையே பின்பற்றி மேற்கூறிய பலனை அடையலாமே.

இப்படிக் குளித்தபின் வீட்டில் சூரியஒளி படும் சுத்தமான இடத்தில் செம்மண்ணால் மெழுகி சூரிய ரத கோலமிட்டு, அதில் சூரிய - சந்திரர்களை வரைய வேண்டும். பின் வண்ண மலர்களால் அலங்கரித்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்குமுன் கிண்ணங்களில் அரிசி, பருப்பு, வெல்லம் வைத்து, நைவேத்யத்திற்கு சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடையும் வைக்க வேண்டும். அதன்பின் முதலில் கணபதி பூஜை, பின் சூரிய நாராயண பூஜை செய்ய வேண்டும். சோடச உபசாரத்துடன் இப்பூஜையைச் செய்தால் சூரியன் சாந்தியடைந்து உலகிற்கு நன்மை செய்வதுடன், பூஜிப்பவர்களுக்கும் வளமும் நலமும் தந்து சிறப்பாக வாழ வைப்பான்.

சூரிய வழிபாடு ஆதிகாலம் முதல் உள்ளது. சூரிய வழிபாட்டிற்கு மந்திரம் தெரியாவிடில் பரவாயில்லை. எளிமையாக, "ஓம் நமோ ஆதித் யாய புத்திர் பலம் தேஹிமே சதா" என்று காலை சூரியனைப் பார்த்துக் கூறி, மூன்று முறை வணங்க வேண்டும்.

பீஷ்மாஷ்டமி: ரதசப்தமிக்கு மறுநாள் வருவது பீஷ்மாஷ்டமி. மகாபாரதம் படித்தவர்களுக்கு பீஷ்மரைப் பற்றி நன்கு தெரிந்திருக்கும். இவர் மகாபாரதப் போரில் அம்புகள் தைக்கப்பட்டபோதும் இறக்கவில்லை. விருப்பப்பட்டபோது உயிர் விடும் வரம் பெற்றவர். தட்சிணாயன காலத்தில் உயிர்விட விரும்பாததால், அர்ச்சுனனை அம்புப் படுக்கை தயார் செய்யச் சொல்லி அதில் கிடத்தப்பட்டார். அப்போது இவரால் உருவானதுதான் விஷ்ணு சகஸ்ரநாமம். கண்ணனின் விஸ்வரூப தரிசனம் கண்டார். பின் உத்தராயன புண்ணிய காலத்தில் (அப்போது உயிர் விட்டால்தான் புண்ணியம்) ரதசப்தமிக்கு மறுநாள் இவர் உடலிலிருந்து உயிர் பிரிந்தது. (அவரின் விருப்பம் போலவே).

பீஷ்மர் நித்ய பிரம்மச்சாரி. வாரிசுகள் இல்லை. எனவே ஆண்கள் இவருக்கு பீஷ்மாஷ்டமியன்று உரிய மந்திரங்கள் கூறி மூன்று முறை அர்க்யம் செய்தால், செய்பவர் சென்ற வருடம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் என்று புண்ணிய நூல்கள் கூறுகின்றன.

ஸ்ரீமகாவிஷ்ணுவைப் போல் சூரியனுக்கும் சங்கும், சக்கரமும் உண்டு. தீவிர வைஷ்ணவர்கள் நாராயணனே சூரியன் என்றும் சொல்லுவார்கள். மகாபாரதப் போரில் போர் ஆரம்பிக்கும் முன்னர் துரியோதனனுக்குக் குறித்துக் கொடுத்த நாளான அமாவாசை அன்று அவன் போரை ஆரம்பிக்கக் கூடாது என்பதற்காக ஒரு நாள் முன்பாகவே சூரிய, சந்திரரைச் சேர்ந்து இருக்கச் செய்த பெருமையும், ஜெயத்ரதனைக் கொல்வதற்காக, சூரியனை மறைத்த பெருமையும் கண்ணனுக்கு உண்டு. அதனாலோ என்னமோ நாராயணனைச் சூரியநாராயணன் என்று சொல்வாரும் உண்டு. நாராயணனுக்கே உரிய சங்கும், சக்கரமும் சூரியனுக்கும் உண்டு.

ஓசை வடிவான இந்தப்பூமியில், இந்தப் பூமியும், மற்ற கிரகங்களும் சூரியனை மையமாக வைத்தே சுழல்கின்றன. ஓசையை ஏற்படுத்தும் சங்கு அதனாலேயே சூரியன் கையில் உள்ளது. இந்தப் பூமி சுழல்வதை நினைவு படுத்தும் விதமாய்ச் சக்கரம் உள்ளது. தாமரை மலரில் அமர்ந்திருக்கும் சூரியன், சொல்வது என்னவென்றால் பகலில் விரியும் தாமரை, இரவில் எவ்வாறு ஒடுங்கி விடுகிறதோ, அப்படியே நம்முடைய பரந்த கல்வி, அனுபவ அறிவினால் உண்டாகும் ஞானத்தினால் கர்வம் ஏற்படாமல் இரவுத் தாமரையைப் போல் ஒடுங்கி இருக்க வேண்டும் என்பதே ஆகும்.

ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரியனின் பயணம் துவங்குகிறது. ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கும். சூரியனின் ரதம் வடக்கு நோக்கித் திரும்பி பூமிக்கு அருகே நெருங்க ஆரம்பிப்பதும் இன்றில் இருந்து தான். இன்று எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிப்பார்கள். அதுவும் தலை, கை, கால், புஜம் ஆகிய இடங்களில் ஆண்கள் விபூதியுடனும், பெண்கள் மஞ்சளுடனும் வைத்துக் கொண்டு குளிப்பார்கள். இதன் தாத்பரியம் என்னவென்றால், மகாபாரதப் போரில் வீழ்த்தப் பட்ட பீஷ்மபிதாமகர் நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்ற வரத்தினால் உத்தராயனத்தில் உயிர் விடவேண்டி அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். அப்போது அவர் தாகம் தீர்க்கவேண்டி அர்ஜுனன் கங்கையைப் பிரவாகம் எடுக்கச் செய்வதும் நிகழ்கிறது. என்றாலும் காலம் போய்க் கொண்டே இருக்கிறது. பீஷ்மர் உயிர் பிரியவில்லை. அனைவரும் வந்து, வந்து அவரைப் பார்த்துப் போய்க் கொண்டிருக்கின்றனர். 

பீஷ்மருக்கோ ஒரே ஆதங்கம், அப்போது அங்கே அவரைப் பார்க்க வந்தார் வேத வியாசர்.அவரிடம் பீஷ்மர், "நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?" என்று மனம் வருந்தினார். வியாசர், அவரிடம், "பீஷ்மா,ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்ததும், இருப்பதும் கூடப் பாவம் தான், அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்" என்று சொல்கின்றார். பீஷ்மருக்குப் புரிந்தது."பாஞ்சாலியைத் துச்சாதனன் துகில் உரிந்த போது, அப்பாவியான திரெளபதி, வேட்டையாடப் பட்ட மானைப் போல் தன்னைக் காப்பார் இல்லாமல், அந்தச் சபையைச் சுற்றிச் சுற்றி, யாரும் வரமாட்டார்களா? தன்னை இந்த இக்கட்டில் இருந்து விடுவிக்க மாட்டார்களா? என்று மலங்க மலங்கப் பார்த்தாள். அப்போது அந்த அபலையை நிர்க்கதியாகத் தவிக்க விட்ட பாவத்தை அல்லவோ இப்போது நான் அனுபவிக்கிறேன். இதற்கு என்ன பிராயச்சித்தம் குருவே?" என வேண்டினார்.

பீஷ்ம பிதாமகர். வியாசர் அதற்கு, "பீஷ்மா, நீ எப்போது உன் பாவத்தை உணர்ந்தாயோ அப்போதே அது அகன்று விட்டாலும், திரெளபதி, "கண்ணா, கேசவா, மாதவா, பரந்தாமா, ஜெகத் ரட்சகனே, என்னை ரட்சிக்க மாட்டாயா? என்று கதறிய போது அதைக் கேளாமல் வாளா இருந்த உன் செவிகள், பார்த்தும் பாராதது போல் இருந்த உன்னிரு கண்கள், தட்டிக் கேட்காத உன் வாய், உன்னிடம் இருந்த அசாத்திய தோள்வலிமையை சரியான நேரத்துக்கு உபயோகிக்காமல் இருந்த உன்னிரு தோள்கள், வாளை எடுக்காத உன்னிரு கைகள், இருக்கையில் இருந்து எழும்பாத உன் இரு கால்கள், இவற்றை யோசிக்காத உன் புத்தி இருக்குமிடமான உன் தலை ஆகியவைக்குத் தண்டனை கிடைத்தே தீர வேண்டும் என்பது விதி!" என்று சொல்கின்றார். அப்போது," என் இந்த அங்கங்களைப் பொசுக்கக் கூடிய வல்லமை படைத்தவர் அந்தச் சூரியனே, சாதாரண நெருப்புப் போதாது, எனக்குச் சூடு வைக்க, சூரிய சக்தியை எனக்குப் பிழிந்து தாருங்கள்," என்று துக்கத்தோடு பீஷ்மர் வேண்டினார்.

வியாசர் அதற்கு அவரிடம் எருக்க இலை ஒன்றைக் காட்டி, "பீஷ்மா, எருக்க இலை சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்க பத்ரம். அர்க்கம் என்றாலே சூரியன் என்றே பொருள், சூரியனின் சாரம் இதில் உள்ளது. சந்திரனைத் தலையில் சூடிக் கொண்ட எம்பெருமான், சூரியனாக உருவகம் ஆன எருக்க இலையையும் இதன் காரணமாகவே சூடிக் கொண்டிருக்கிறார். நீ ஒரு நைஷ்டிகப் பிரம்மச்சாரி, உன்னைப் போலவே கணேசனும் நைஷ்டிகப் பிரம்மச்சார், அவனுக்கும் எருக்க இலை உகந்தது. ஆகவே இந்த இலைகளால், உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கிறேன்" என்று பீஷ்மரின் அங்கங்களை எருக்க இலையால் அலங்கரித்தார். கொஞ்சம் கொஞ்சமாய் சாந்தி அடைந்து வந்த பீஷ்மர் தியானத்தில் மூழ்கி ஏகாதசி அன்று தன் உயிரை உடலில் இருந்து விடுவித்துக் கொள்கிறார். 

அவருக்குச் சிராத்தம் போன்றவைகள் செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து வருந்திய தருமரிடம், வியாசர், "வருந்தாதே, தருமா, ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரியும், துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை,. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள், என்றாலும் உன் வருத்தத்துக்காக, இனி இந்த பாரத தேசமே பீஷ்மனுக்காக நீர்க்கடன் அளிக்கும். ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவதோடு அல்லாமல், பீஷ்மனுக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் அவர்களுக்குக் கிடைக்கும்." என்று சொல்லி ஆறுதல் செய்கிறார்.

விரத முறை: ரதசப்தமி அன்று விரதம் இருப்பது மிகவும் சுலபமானது. சூரிய உதய சமயத்தில் (காலை 6.10) குளிர்ந்த நீரில் நீராடவேண்டும். வீட்டை சுத்தம் செய்து அன்று முழுவதும் எதுவும் உண்ணாமல் உபவாசம் இருக்க வேண்டும். வசதிப்படுபவர்கள் மவுன விரதமும் இருக்கலாம். பெரியவர்கள் தனி இடத்தில் அமர்ந்து ஆழ்ந்த தியானம் செய்யலாம். பணிக்கு செல்பவர்கள் உபவாசம் மட்டும் கடைபிடித்தால் போதுமானது.

ரதசப்தமி ஸ்நான‌ம்: 7 எருக்கு இலைகள், 7 இலந்தை இலைகள், அட்சதை, மஞ்சள் தூள் சேர்த்து உச்சந்தலையில் வைத்து நீராடவும். ம்ஞ்சள்தூள் பெண்கள் மட்டுமே பயன் படுத்தவேண்டும். பெற்றோர் இல்லாதவர்கள், எள், பச்சரிசி, சேர்க்கவேண்டும். இது ஆயிரம் சூரியகிரகத்துக்கு சமம்.

சூரிய பகவான் ஏழு உலகங்களுக்கும் ஒளி தரும் விளக்கு. தன் கதிர்களால் வெப்பத்தைத் தணிப்பவர். துன்பத்தைத் துடைப்பவர். ஆரணனின் கதிர்களால் அவரு உதயத்தை உலகம் அறிகிறது. உலகத்திற்கு முதலானவர். மிகவும் உயர்ந்தவர். அத்தகைய சூரிய பகவானை வணங்குகிறேன்.

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

திருவாதிரை தரிசன பாராயணம்

மார்கழி திருவாதிரையன்றும், ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நட்சத்திரங்களிலும் நடராஜப் பெருமானை வணங்குவதற்குரிய பிரார்த்தனை சித்சபேச தசகம் என்ற நூலில் இருந்து தரப்பட்டுள்ளது. பக்தியோடு இதை பாராயணம் செய்பவர்கள் எல்லாவித நன்மைகளையும், யோகபலனும் பெறுவார்கள்.


01. பிரகாசம் பொருந்திய சித்சபையின் தலைவரும், தில்லைவாசிகளாலும், வேதபண்டிதர்களாலும் வணங்கப்படும் திருப்பாதங்களைக் கொண்ட நடேசப்பெருமானை நான் துதிக்கிறேன்.

02. ஒரு பாதத்தை மேலே தூக்கி நின்று ஆடுபவரும், காலனைச் சம்ஹாரம் செய்த காலகாலனும், வணங்கும் அன்பர்களைக் காக்க சூலம் தாங்கி நிற்பவரும், மனக்கவலைகளைப் போக்கி அருள்செய்பவரும், கருணையே வடிவானவரும், கபாலம் ஏந்தி நிற்பவருமான சிதம்பரப் பெருமானைப் போற்றுகிறேன்.

03. நெற்றியில் ஒளிவீசும் கண்களைக் கொண்டவரும், வியாக்ரபாதர், பதஞ்சலி போன்ற மகரிஷிகளால் வில்வம் போன்ற பூஜாதிரவியங்களால் அர்ச்சிக்கப்படுபவரும், ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளைத் தோழனாகக் கொண்டவரும், புலித்தோலினைத் தன் ஆடையாக உடுத்தவரும், பவானியான சிவகாமி அன்னையைத் தன் மனைவியாகப் பெற்றவரும் ஆகிய சிற்றம்பல நடராஜப் பெருமானை வணங்கி மகிழ்கிறேன்.
                  
04. கண்ணிலிருந்து புறப்பட்ட தீக்கணையால் மன்மதனைத் தகனம் செய்தவரும், ஊன்றிய திருவடியில் அபஸ்மாரனை அழுத்தி நிற்பவரும், கழுத்தில் சர்ப்பங்களை மாலையாகப் அணிந்தவரும், வேதங்களின் சொரூபமாகத் திகழ்பவரும், ஆசையே இல்லாதவரும், ஒளிவீசும் ஜடாமுடியைத் தாங்கி நிற்பவருமான தில்லை நடராஜப்பெருமானுக்கு தலை வணங்குகிறேன்.

05. திருவாதிரை நன்னாளில் அபிஷேகம் காண்பவரும், அழகிய உருவம் கொண்டவரும், சந்தனம், திரவிய அபிஷேகத்தால் மனம் மகிழ்பவரும், மனக்கவலையைத் தீர்க்கும் மகாபிரதோஷ புண்ணிய வேளையில் பூஜிக்கப்படுபவரும், பிரம்மா, விஷ்ணு, நந்திகேசர், நாரதர், இந்திரன் மற்றும் தேவர்களுடன் நர்த்தனம் புரிபவருமான சபாபதியைப் போற்றுகிறேன்.

06. எந்த இறைவனை வணங்கினால் பரிசுத்தமான மனத்தைப் பெறுகிறோமோ, விபூதி, ருத்ராட்சம் அணிந்து எந்தப் பெருமானை வணங்கினால் பரிசுத்தம் அடைகிறோமோ, மாணிக்கவாசகர் போன்ற சிறந்த பக்தர்கள் எல்லாம் யாரைப் போற்றித் துதித்தார்களோ, அந்த தில்லை அம்பலவாணரை வழிபடுகிறேன்.
                
07. எந்தச் சன்னதியை முன்ஜென்மத்தில் செய்த புண்ணிய வினைகளால் தரிசிக்க இயலுமோ, எந்த இறைவனிடம் சர்க்கரைப் பொங்கல் போன்ற நிவேதனங்களை பரப்பி வழிபட்டால் கோரிய பலன் நிறைவேறுமோ, எந்த மூர்த்தியை துறவிகளும், ஞானிகளும் நித்தமும் தியானித்து மகிழ்கிறார்களோ அந்த சிற்றம்பலப் பெருமானை சேவிக்கிறேன்.

08. சிறந்த திருவாக்கினைக் கொண்டவரும், பக்தர்களின் பாவங்களை போக்கி அருள்பவரும், யாகங்களைக் காப்பவரும், வேதங்களை உபதேசித்தவரும், பர்வதராஜ குமாரியான உமையவளிடம் விளையாடி மகிழ்பவரும், சிதம்பர ரகசியமாகத் திகழ்பவருமான கனகசபாபதி பெருமானைச் சரணடைகிறேன்.

09. பூதங்களின் தலைவனான நடராஜ மூர்த்தியே! நீரே என் வாழ்வில் உண்டாகும் இன்னல்களைப் போக்கி அருள்செய்ய வேண்டும். சாதுக்களுக்கும், நல்லவர்களுக்கும் உண்டாகும் மனபயத்தை நீயே போக்கி துணை நிற்க வேண்டும். சபேசனே! உமது திருவடிகளை அடைக்கலம் புகுந்து நிற்கிறேன்.
                 
10. பிறவிப்பயனை அருள்செய்பவரும், மோட்சத்தை தந்தருள்பவரும், நம் வாழ்வில் இன்பங்களைச் சேர்ப்பவரும், தலையில் புண்ணிய மிக்க கங்கையினை தாங்கி நிற்பவருமான நடராஜப் பெருமானை போற்றுகின்றேன்.

மார்கழி மாத திருவாதிரை நாளில் தொடங்கி ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நாளில் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். அதிகாலையில் சிவாலயம் சென்று நடராஜரை தரிசனம் செய்ய வேண்டும். விரதநாளில் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் படிக்க வேண்டும். சுவாமிக்கு களி, தயிர்ச்சாதம், சுண்டல் நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

காமிகா ஏகாதசி (ஆவணி மாதம் கிருஷ்ண பட்சம்)

ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன.

சிராவண மாதம் கிருஷ்ண‌ பட்சத்தில்(தேய்பிறை) வரும் ஏகாதசி திதியை காமிகா ஏகாதசியாக கொண்டாடுவர். காமிகா ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம்.


மஹான்களைப் போன்று புண்ணியசீலரான யுதிஷ்டிர மஹாராஜா ஸ்ரீ கிருஷ்ணரிடம் "மேலான பரம்பொருளே! ஆஷாட மாத சுக்ல பட்சத்தில் வரும் புண்ணிய திதியான தேவசயனி ஏகாதசியைப் பற்றியும், அந்நாளில் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பதால் கிட்டும் ஒப்பற்ற பலன்களை பற்றியும் அறிந்து கொண்டேன். இப்பொழுது சிராவண மாதத்தின் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியைப்பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஆகையால் கோவிந்தா, என் மீது கருணை கொண்டு, அந்த ஏகாதசியின் பெருமைகளை விரிவாக சொல்லுங்கள். முதன்மையான தெய்வமே, வாசுதேவா! எனது பணிவான நமஸ்காரங்களை தங்களது திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்" என்று கூறினார்.

ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கு பதிலளிக்கையில் "தர்மத்தை எந்நிலையிலும் விடாது காக்கும் யுதிஷ்டிரா, ஒருவனது பாபங்களை எல்லாம் அழித்து சுப விளைவுகளை ஏற்படுத்தும் ஏகாதசி உபவாசத்தின் மகிமையை சொல்கிறேன். கவனமாக கேள்." என்று கூறிவிட்டு பின்வருமாறு கூறலாயினார்.

"ஒரு முறை நாரத ரிஷியும் பிரம்மாவிடம் இந்த ஏகாதசியின் மஹாத்மியத்தை பற்றி எடுத்துச்சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். நாரதர் தனது தந்தையான பிரம்மாவை நோக்கி, "தண்ணீரில் பிறக்கும் தாமரை மலரின் மீது, அரசன் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதை போல் காட்சி அளிப்பவரே, அனைத்து உயிர்களையும் படைக்கும் வல்லமை பெற்றவரே" மைந்தனான எனக்கு சிராவண மாதத்தின் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் பெயர் என்ன,  அப்புண்ணிய தினத்தன்று வழிபட வேண்டிய கடவுளைப் பற்றியும், கடைப்பிடிக்க வேண்டிய விரத வழிமுறைகளையும், விரதத்தை மேற்கொள்ளுவதால் கிட்டும் நற்பலன்களையும் விரிவாக எடுத்துச் சொல்லுங்கள் என்று வேண்டிக் கொண்டார்.

பிரம்மா அதற்கு பதிலளிக்கையில், என் அருமை மகனே, நாரதா! இவ்வுலகத்தின் நலனுக்காக நீ தெரிந்து கொள்ள விரும்பிய அனைத்தை பற்றியும் உனக்கு விரிவாக எடுத்துச் சொல்லுகிறேன். கவனமாக கேள். சிராவண மாதத்தில் வரும் கிருஷ்ண பட்ச ஏகாதசி காமிகா ஏகாதசி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. மிகவும் புண்ணியமானது. காமிகா ஏகாதசியின் மஹத்துவம் சொல்லில் அடங்காதது. இவ்ஏகாதசியின் மஹாத்மியத்தை வெறும் காதால் கேட்பவர்களே, அஸ்வமேதயாகம் நடத்திய பலனை பெறுவர் என்றால் இதன் பெருமையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகிய நான்கு திவ்ய ஆயுதங்களையும் தன் நான்கு திருக்கரங்களில் ஏந்தி கதாதாரன் என்னும் திருநாமத்தாலும், ஸ்ரீ தரன், ஸ்ரீ ஹரி, ஸ்ரீ விஷ்ணு, மாதவன், மதுசூதனன் என்னும் மற்ற திருநாமங்களாலும் போற்றப்படும் மஹாவிஷ்ணுவை வணங்குவோருக்கும், அவரது பாதாரவிந்தங்களே சரணாகதி என்று தியானிப்போருக்கும் நிச்சயமாக பெரும் நற்பலன்கள் கிட்டும். 

காமிகா ஏகாதசியன்று மஹாவிஷ்ணுவிற்கு செய்யப்படும் பூஜை, ஆராதனை ஆகியவை ஒருவருக்கு, புண்ணிய க்ஷேத்ரமான காசியின் கங்கையில் நீராடுதல், நைமிசாரண்ய வனத்தில் நீராடி வழிபடுதல் அல்லது புவியில் என்னை மூலவராக கொண்ட புஷ்கர திருத்தலத்தில் நீராடி வழிபடுதல் ஆகியவற்றினால் கிடைக்கக்கூடிய அருளாசிகளை விட பன்மடங்கு மேலான புண்ணியத்தையும், அருளையும் பெற்றுத் தரக்கூடியது.

பனி சூழ் இமாலயத்தில் அமைந்துள்ள கேதார்நாத் சென்று, பிரபு கேதாரநாதரின் தரிசனம் அல்லது சூரிய கிரகணத்தின் போது குருக்ஷேத்ரத்தில் புண்ணிய நீராடுதல் அல்லது பூமியைத் தானமாக அளிப்பதால் கிட்டும் புண்ணிய பலன், அல்லது பூஜைக்குரிய விஷ்ணு மூர்த்திகளாக கருதப்படும் சாளிக்கிரமங்களை தன்னகத்தே கொண்ட தெய்வீக நதியான கண்டகீ நதியில் நீராடுதல், அல்ல‌து சிம்மராசியில் குரு பகவான் கோட்சாரம் செய்யும் காலம், சோமவார பூர்ணிமா தினத்தன்று கோதாவரி நதியில் நீராடுதல், இவை அனைத்தையும் செய்வதால் கிட்டும் நற்பலனை விட சிராவண மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் காமிகா ஏகாதசி விரதத்தை அதற்குரிய வழிமுறைப்படி மேற்கொள்ளுவதுடன், அன்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை ஆராதனையுடன் வழிபடுவது மிக அதிக நற்பலன்களை அருளும்.

காமிகா ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பதால் கிடைக்கும் நற்பலனானது, பால் சுரக்கும் பசுவை கன்றுடனும், தீவனங்களுடனும் தானமாக அளிப்பதால் கிடைக்கும் நற்பலனுக்கு சமமானது. சுபமான காமிகா ஏகாதசி தினத்தன்று ஸ்ரீ தரன் என்னும் திருநாமத்தைக் கொண்ட மஹாவிஷ்ணுவை வணங்குபவரின் பக்தியை தேவர்களும், கந்தர்வர்களும், நாகர்களும், பந்நாகர்களும் மெச்சுவர்.

கடந்த பிறவியின் பாபங்களைக் கண்டு அஞ்சுபவரும், இப்பிறவியில் பாபங்களை விளைவிக்கும் ஆதாயகரமான வாழ்க்கையில் மூழ்கி இருப்பவரும், தங்களால் இயன்ற அளவிற்கு இந்த காமிகா ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து தம் பாபங்களிலிருந்து விடுதலை பெறலாம். காமிகா ஏகாதசி தினமானது அனைத்து தினங்களையும் விட மிகவும் பவித்ரமான நாளாகும். ஆகையால் அன்று விரதம் மேற்கொள்ளுதல் அனைத்து பாபங்களையும் அழிக்கும் சக்தி கொண்டதாக உள்ளது.

நாரதா! ஸ்ரீ ஹரியே இந்த ஏகாதசி தினத்தைப் பற்றி கூறும் போது "காமிகா ஏகாதசியன்று விரதத்துடன் உபவாசம் இருப்பதால் கிட்டும் புண்ணியம், பக்தி இலக்கியங்கள் அனைத்தையும் படிப்பதால் கிட்டும் புண்ணியத்தை விட பன்மடங்கு மேலானது" என்று அருளியுள்ளார். காமிகா ஏகாதசியன்று விரத வழிமுறைகளின் படி உபவாசம் இருந்து, இரவில் கண் விழித்து ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் மகிமையை விளக்கும் புராணங்களை பாராயணம் செய்பவர் யமதர்மராஜனின் கோபத்துக்கு ஒரு போதும் ஆளாக மாட்டார்.

பவித்ரமான காமிகா ஏகாதசி தினத்தன்று உபவாசத்துடன் விரதத்தை கடைப்பிடிப்பவர் தன் பிறப்பு இறப்பு என்னும் மாயசக்ரத்திலிருந்து விடுபட்டு மறுபிறப்பில்லா நிலையை அடைவர் என்பது நிச்சயம். கடந்த காலத்திலும், நிறைய தவசிகளும், யோகிகளும் இந்த காமிகா ஏகாதசி தினத்தன்று விரதம் மேற்கொண்டு மிக உயர்ந்த ஆன்மீக நிலையினை அடைந்துள்ளனர். ஆகவே, அவர்கள் காட்டிய நல்ல வழியை பின்பற்றி நாமும் அன்று உபவாசம் இருந்து விரதம் அனுஷ்டிப்பது மிக நல்லது.

அன்று ஸ்ரீ ஹரியை துளசி தளங்களுடன் (இலைகளால்) வணங்குவோர் த‌ம் பாபத்தின் விளைவுகளிலிருந்து விடுபடுவர். மேலும் எப்படி தாமரை இலையானது தண்ணீரில் இருந்தாலும் தண்ணீருடன் தொடர்பு இல்லாமல் இருக்கிறதோ, அதே போல் அவர்க‌ள் பாபங்கள் தீண்டாமல் வாழ்வார். ஸ்ரீ ஹரிக்கு அன்று பவித்ரமான ஒரு துளசி தளத்தை (இலையை) சமர்ப்பித்து பூஜிப்பவர் அடையும் புண்ணியமானது, ஒருவர் இருநூறு கிராம் தங்கம் மற்றும் எண்ணூறு கிராம் வெள்ளியை தானம் செய்வதால் அடையும் புண்ணியத்திற்கு சமமானது.

முத்து, பவளம், மாணிக்கம், புஷ்பராகம், வைரம், வைடூரியம், கோமேதகம் போன்ற விலை மதிப்பில்லாத கற்களினால் செய்யப்படும் பூஜையை விட, பவித்ரமான துளசி இலைகளால் செய்யப்படும் பூஜையானது பகவான் மஹாவிஷ்ணுவிற்கு மிகுந்த ப்ரீதியை அளிக்கிறது. புதிதாக தோன்றிய மலர்களுடன் (மஞ்சரி மொட்டுகள்) கூடிய துளசியை பகவான் கேசவனுக்கு சமர்ப்பிப்பவர் இப்பிறவி மட்டுமல்லாது, தன் முந்தைய  பிறவியின் பாபங்களும் நீங்கப் பெறுவர்.

மேலும், காமிகா ஏகாதசியன்று துளசி தேவியை தரிசனம் செய்பவர் தம் பாபங்கள் அழியப் பெறுவர். அன்று துளசி தேவி இருப்பிடமான துளசி செடியை தொட்டு வணங்குதல், பிரார்த்தனை செய்தல் ஆகியவை ஒருவருடைய நோய் நொடிகளிலிருந்து அவருக்கு நிவர்த்தி அளிக்கும். அன்று, துளசி செடிக்கு நீர் ஊற்றுபவர் எக்காலத்திலும் யமதர்ம ராஜனைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. அன்று துளசி செடியின் சிறிய நாற்றினை நடுபவர் அல்லது மாற்று நாற்று (பதியன்) செய்பவர், தம் வாழ்நாள் முடிவில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்தை அடைவர். தினமும் துளசி தேவியை பூஜித்து ஆராதித்தால் நமது பக்தியின் சேவையினால் மோட்சப் பிராப்தியை அடையலாம்.

துளசி தேவிக்கு தினம் அணையாமல் எரியும் நெய் விளக்கேற்றி பூஜிப்பவரின் புண்ணியக் கணக்கை யமதர்ம ராஜனின் சித்ர குப்தனாலும் கணக்கிட இயலாது. பவித்ரமான இந்த காமிகா ஏகாதசி தினமானது பகவானுக்கு மிகவும் பிரியமான நாளாகும். ஆகையால் அன்று முன்னோர்கள் அனைவரும் நெய் விளக்கேற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு ஸ்வர்க்கத்தை அடைந்து அமிர்தத்தை அருந்தும் பாக்கியம் பெற்றனர். அன்று எவரொருவர் நெய் அல்லது எள் எண்ணையினால் (நல்லெண்ணை) விளக்கேற்றி ஸ்ரீ கிருஷ்ணரை பூஜித்து ஆராதிக்கிறாரோ, அவர் தன் பாபங்களிலிருந்து விடுதலை பெற்று, முடிவில் சூரியனின் வாசஸ்தலமான சூரியமண்டலத்தை பத்து மில்லியன் விளக்குகளின் பிரகாசத்திற்கு சமமான பிரகாசமான உடலுடன் அடைவர்.

இந்த ஏகாதசியானது மிகவும் பவித்ரமானது மட்டுமல்லாமல் மிகவும் சக்தி பெற்ற நாளும் ஆகும். இந்நாளில் உபவாசம் இருக்க் இயலாதோர், இங்கு குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினாலே, தங்கள் முன்னோர்களுடன் ஸ்வர்க்கம் அடைவர், "இவ்வாறு பிரம்ம தேவர் கூறினார்". இதைக் கூறிய‌ ஸ்ரீ கிருஷ்ணர் யுதிஷ்டிரரிடம் "யுதிஷ்டிரா, மஹாராஜனே, பாவங்களை நீக்கி, எண்ணில்லாத பலன்களை வழங்கும் காமிகா ஏகாதசியின் பெருமைகளை, பிரஜாபதி பிரம்மா தனது புதல்வன் நாரதருக்கு உரைத்ததை அப்படியே நான் உனக்கு உரைத்துள்ளேன்..

இப்புனித காமிகா ஏகாதசி விரதமானது பிராமணனை கொன்றதால் உண்டான பாவம் (பிரம்மஹத்தி), கருவில் வளரும் குழந்தையை அழித்த பாவம் போன்ற கொடிய பாவங்களிலிருந்து நிவர்த்தி அளிக்கும் பேறு பெற்றது. இவ்விரதம் அதிக புண்ணியத்தை அளிக்க வல்லது. எனவே, இவ்விரதத்தைக் கடைபிடிப்போர் பக்தி யோகத்தில் சிறந்து விளங்குவர்.

அப்பாவிகளை கொல்வதால் உண்டாகும் பாவங்கள் அதாவது பிரம்மஹத்தி தோஷம், சிசு ஹத்தி தோஷம், பக்திமான் மற்றும் களங்கமில்லாத பெண்ணைக் கொன்ற பாவங்களின் விளைவுகளிலிருந்து காமிகா ஏகாதசியின் மஹாத்மியத்தை கேட்பதால் நிவர்த்தி பெறலாம். ஆனால் இதைக் கொண்டு ஒருவர் முதலில் கொலைப் பாதகம் புரிந்து விட்டு பின்னர் காமிகா ஏகாதசியின் மஹாத்மியத்தை கேட்பதால் நிவர்த்தி பெறலாம் என்று நினைக்கக் கூடாது. அது தவறானது. அறிந்தே கொலை பாதகம் போன்ற கொடிய பாவங்களைப் புரிவதற்கு எந்த் சாஸ்திரத்திலும் மன்னிப்பே கிடையாது என்பதை ஞாபகத்தில் இருத்தவும். என்றார்.

எவரொருவர் பவித்ரமான இந்த காமிகா ஏகாதசியின் பெருமையை விவரிக்கும் மஹாத்மியத்தை பக்தியுடனும், சிரத்தையுடனும, நம்பிக்கையுடனும் கேட்கிறாரோ, அவர் தன் பாபங்களிலிருந்து விடுபட்டு மஹாவிஷ்ணுவின் வாசஸ்தலமான விஷ்ணுலோகம் எனப்படும் வைகுந்தத்தை அடைவர். ப்ரம்ஹ வைவர்த்த புராணம், சிராவண மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி அதாவது காமிகா ஏகாதசி என்று அழைக்கப்படும் ஏகாதசியின் மஹிமையை விவரிக்கும் படலம் முடிவுற்றது.

நன்றி : Kshetra Yaatra

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||

|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||

ஆண்டு முழுவதும் வரும் ஒவ்வொரு ஏகாதசி விரதங்கள்

ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும், வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும்.


01 சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி, "காமதா ஏகாதசி" என்றும் தேய்பிறையில் வரும் ஏகாதசி "பாப மோகினி ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரு ஏகாதசியிலும் விரதம் இருப்பவர்களுக்கு, அவர்கள் விரும்பிய அனைத்து பேறுகளும் கிடைக்கப் பெறும்.

02 வைகாசி மாத வளர்பிறை தினத்தில் வரும் ஏகாதசி "மோகினி ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசி "வருதித் ஏகாதசி" என்றும் கூறப்படுகிறது. இந்த ஏகாதசி காலங்களில் விரதம் இருப்பவர்கள் அனைவரும், இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசனம் செய்து வந்ததற்கான பலனை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.
        
03 ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி "நிர்ஜலா ஏகாதசி" என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி "அபார ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசிகளில் தங்கள் விரதத்தை மேற்கொள்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.

04 ஆடி மாதத்து வளர்பிறை ஏகாதசி "சயனி ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசி "யோகினி ஏகாதசி" என்றும் பெயர் பெற்றுள்ளது. இந்த ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கியதற்கு நிகரான பலன்கள் கிடைக்கப்பெறும்.

05 ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியானது "புத்ரஜா ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசியானது "காமிகா ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி தினங்களில் விரதம் இருந்தால் மக்கட்பேறு கிடைக்கப்பெறுவார்கள்.
        
06 புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி "பத்மநாபா ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசி "அஜா ஏகாதசி" என்றும் பெயர் பெற்றது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை வளரும்.

07 ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி "பாபாங்குசா ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசி "இந்திரா ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசியில் விரதம் இருப்பதால், வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பிணி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.

08 கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி "பிரபோதின ஏகாதசி" எனப்படும். இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் இருபத்தியோரு தானம் செய்ததற்கான பலனும், தேய்பிறை ஏகாதசியான "ரமா ஏகாதசி" தினத்தில் இறைவனுக்கு பழங்களை கொண்டு நைவேத்தியம் செய்தால் மங்கள வாழ்வு கிடைக்கும்.
        
09 மார்கழி மாத ஏகாதசி "வைகுண்ட ஏகாதசி" என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இம்மாதம் மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு பெறுகிறது. இந்த மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி "உத்பத்தி ஏகாதசி" எனப்படுகிறது.

10 தை மாத வளர்பிறை ஏகாதசி "புத்ரதா ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசி "சுபலா ஏகாதசி" என்றும் பெயர் பெறும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம், ஒளிமயமான வாழ்வு அமையும்.

11 மாசி மாத வளர்பிறை ஏகாதசி "ஜெயா ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசி "ஷட்திலா ஏகாதசி" என்றும் அழைக்கப்படும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருப்பவர்கள், மூதாதையர்களின் முக்திக்கான வழியை பெறுவார்கள்.
        
12 பங்குனி மாத தேய்பிறை ஏகாதசி "விஜயா ஏகாதசி" எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கு முறையில் கலசத்தில் வைத்து மஹாவிஷ்ணுவை பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறுவீர். வளர்பிறை ஏகாதசி "ஆமல கிஏகாதசி" எனப்படும். இன்று விரதம் இருப்பவர்களுக்கு ஆயிரம் பசுதானம் செய்த பலன் கிடைக்கும்.

"ஆண்டில் கூடுதலாக வரும் ஏகாதசி "கமலா ஏகாதசி" எனப்படும். அன்று மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பு.

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||

|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

ஒருத்தி மகனாய்ப் பிறந்து... ஒருத்தி மகனாய் வளர்ந்த... உள்ளங்கவர் கள்வன்

ஆவணி மாதம், ரோகிணி நட்சத்திரம் கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில், இரவு 12.00 மணியளவில், மதுரா சிறைச்சாலையில், வசுதேவர் - தேவகி தம்பதியருக்கு எட்டாவது குழந்தையாக கண்ணன் அவதரித்தான். அவதாரம் என்ற வடமொழிச் சொல்லுக்கு கீழே இறங்கி வருதல் எனப் பொருள். இப்படி மகாவிஷ்ணு நீதியை நிலை நாட்டும் பொருட்டும், கம்சனை வதம் செய்யும் பொருட்டும் இப்பூவுலகில் அவதரித்தார்.


கண்ணன் அவதரித்த ஆவணி அஷ்டமி நன்னாளைத்தான் கோகுலாஷ்டமியாக இமயம் முதல் குமரி வரை அனைவரும் கொண்டாடுகின்றனர். கண்ணன் பிறந்தது மதுரா என்ற வடமதுரை; கண்ணன் வளர்ந்தது ஆயர்பாடியான கோகுலம். இவ்விரு தலங்களும் யமுனையின் எதிரெதிர் கரையில் அமைந்துள்ளன. ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஆனவன் கிருஷ்ணன்.

துவாபர யுகத்தில் இராமயண காலத்தில் உருவான ஊர் மதுரா. இங்கு யது வம்ச போஜகுலத்தில், உக்ரசேன மன்னனின் மகனாக கம்சன் பிறந்தான். இவன் தன் தந்தையையே சிறை வைத்து, அரசை தானே ஆண்டு வந்த கொடியவன். இவனுக்கு கம்சை, தேவகி என்ற இரு தங்கைகள். தேவகி மீது கம்சன் மிகுந்த பாசம் வைத்திருந்தான்.

வசுதேவருக்கு தேவகியை மணம் முடித்து இருவரையும் தன் தேரில் ஏற்றிக் கொண்டு தானே ஓட்டி வந்தான் கம்சன். அப்போது வானில் அசரீரி, "கம்சா! தேவகியின் எட்டாவது மகன் உன்னைக் கொல்வான்'' என்றது. ஆத்திரமடைந்த கம்சன் தேவகியைக் கொல்ல முயல, அவனை வசுதேவர் தடுத்தார். "கம்சா! தேவகியின் எட்டாவது மகன் தானே உன்னைக் கொல்வான்? நாங்கள் எங்களுக்குப் பிறக்கும் எல்லா குழந்தைகளையும் உன்னிடம் தந்துவிடுகிறோம் தேவகியை விட்டுவிடு'' என்று மன்றாடினார். அதை ஏற்றுக்கொண்ட கம்சன் இருவரையும் மதுரா சிறையில் அடைத்தான்.

வசுதேவர் - தேவகி தம்பதியருக்குப் பிறந்த குழந்தைகளை இரக்கமின்றிக் கொன்று தீர்த்தான் கம்சன். இவ்வாறு ஆறு குழந்தைகள் கொல்லப் பட்ட நிலையில், தேவகி ஏழாவது முறை கருவுற்றாள். கரு ஏழு மாதங்கள் வளர்ந்திருந்த நிலையில், அது மாயையின் உதவியால் கோகுலத்திலிருந்த வசுதேவரின் முதல் மனைவி ரோகிணியின் வயிற்றுக்கு மாற்றப்பட்டது. அந்தக் குழந்தையே பலராமன். (கரு கலைந்துவிட்டதாக கம்சனிடம் கூறிவிட்டனர்).

அடுத்து எட்டாவது முறையாக சூலுற்ற தேவகி, அஷ்டமி திதியில் நள்ளிரவு 12.00 மணிக்கு கண்ணனை ஈன்றெடுத்தாள். அந்த நேரத்தில் மாயையின் பிடியில் சிக்கி மதுராவிலிருந்த அனைவருமே உறங்கிக் கொண்டிருந்தனர். வசுதேவர், தேவகி, சந்திரன் ஆகிய மூவர் மட்டுமே விழித்திருந்தனர்.

மகாவிஷ்ணு உணர்த்தியபடி, வசுதேவர் குழந்தையை ஒரு கூடையில் வைத்துக்கொண்டு யமுனைக் கரைக்குச் சென்றார். அப்போது மழை பொழிய, ஆதிசேஷன் குடைபிடித்தபடி அவர்கள் பின் சென்றது. யமுனை நதி இரண்டாகப் பிளந்து வழிவிட, வசுதேவர் அக்கரையிலிருந்து ஆயர்பாடியான கோகுலம் சேர்ந்தார். அங்கே நந்தகோபரின் மனைவி யசோதையின் அருகே குழந்தையை வைத்துவிட்டு, யசோதைக்குப் பிறந்திருந்த பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு சிறைச்சாலை வந்து சேர்ந்தார்.

அப்பொழுது மாயை விலக, அனைவரும் கண் விழித்தனர். குழந்தையின் அழுகுரல் கேட்டு, செய்தி கம்சனுக்குத் தெரிவிக்கப்பட்டது. தன்னை அழிப்பதற்காகப் பிறந்திருக்கும் குழந்தை இதுதானே என்று ஆக்ரோஷமாகப் புறப்பட்டு வந்த கம்சன், பெண் குழந்தையென்றும் பாராமல் அதைக் கொல்ல முயல, அவன் பிடியிலிருந்து விலகி அந்தரத்தில் நின்று சிரித்த குழந்தை "கம்சா! உன்னைக் கொல்லப் பிறந்தவன் கோகுலத்தில் வளர்கிறான்'' என்று கூறி மறைந்துவிட்டது. அது காளி தேவி.


பெருங்கோபம் கொண்ட கம்சன் தன் அசுரப் படைகளை அழைத்து, எந்த வடிவிலாவது சென்று கண்ணனைக் கொன்றுவிடுமாறு கட்டளையிட்டான். வண்டிச் சக்கரமாக வந்த சகடாசுரன், கடத்த வந்த தீப்திகன், பாலூட்ட வந்த பூதகி, கொக்காக வந்த பகன், பாம்பாக வந்த ஆகா சுரன், கழுதையாக வந்த தேனுஜன், இடையர்களாக வந்த பிரம் பலன் - வியோமன், காளையாக வந்த அரிஷ்டன், குதிரையாக வந்த கேசி என பலரும் வஞ்சகமாக கண்ணனைக் கொல்ல வந்தனர். அத்தனை பேரையும் குழந்தைக் கண்ணன் விளையாட்டாகக் கொன்றான். காளிங்கனை மட்டும் அடக்கி மன்னித்துவிட்டான்.

கண்ணனுக்கு இப்படி பல இடையூறுகள் வருவதைக் கண்ட ஆயர்பாடியினர் ஐந்து வயதான கண்ணனை அழைத்துக்கொண்டு பசுக் கூட்டங்களுடன் பிருந்தாவனம் சென்று விட்டனர். எவ்வளவு முயன்றும் கண்ணனைக் கொல்ல முடியவில்லையே என்று ஆத்திரமுற்ற கம்சன், வேறொரு உபாயம் செய்தான். அதன்படி கண்ணனை தன் அரண்மனைக்கே வரவழைத்தான். அரண்மனை வாயிலில் ஒரு யானையிடம் இரும்பு உலக்கையைக் கொடுத்து, அதைக் கொண்டு கண்ணனைக் கொல்ல ஏற்பாடு செய்திருந்தான். ஆனால் பலராமனும் கண்ணனும் அந்த யானையையே கொன்று விட்டனர்.

பிறகு சானுகன், கூடன், சலன், முஷ்டிகன், தோகலன் என்னும் மல்யுத்த வீரர்கள் ஐவரை அனுப்பினான் கம்சன். அவர்களையும் கொன்றான் கண்ணன். இதைக் கண்டு பெருஞ்சினங்கொண்ட கம்சன் தன் படை வீரர்களை நோக்கி, "இந்த இரு பயல்களையும் உடனே கொல்லுங்கள். அத்துடன் சிறையிலுள்ள வசுதேவன், தேவகி, உக்கிரசேனன் என எல்லாரையும் கொல்லுங்கள்!'' என்று கர்ஜித்தான். அதைக்கேட்ட கண்ணன் சிம்மாசனத்திலிருந்த கம்சனை இழுத்து தரையில் கிடத்தி, அவன் மீது ஏறி அமர்ந்து, தன் கைகளால் கம்சனின் மார்பில் குத்தியே கொன்றான்.

அதன் பின்னர் கம்சனின் தந்தையும் கண்ணனின் தாத்தாவுமான உக்கிரசேனர் அரியணை ஏறினார். பலராமனுக்கும் கண்ணனுக்கும் உபநயனம் செய்வித்து, சாந்திபணி என்ற குருவிடம் குருகுலக் கல்விக்கு அனுப்பி வைத்தார் உக்கிரசேனர். அங்கு 64 கலைகளையும் கற்ற அவர்கள், குருவின் மகனை மீட்டு குரு காணிக்கையாகச் செலுத்திப் பெருமை கொண்டனர்.

பின்னர் பூமிபாரம் தீர்க்க பாரதப்போர், உலக மக்கள் நற்கதி பெற கீதோபதேசம் என பல அருஞ்செயல்கள் புரிந்த கண்ணன் துவாரகையில் அரசு புரிந்து வந்தார். இறுதியில் தன் அவதார காலம் முடிவுறும் தருணம் நெருங்கிவிட்டதை உணர்ந்து, ஒரு மரத்தடியில் சென்று கால் நீட்டிப் படுத்தார். அப்போது வேடன் ஒருவன் மறைந் திருந்து எய்த அம்பின் விஷ நுனி கண்ணனின் காலில் பாய்ந்தது; கண்ணன் உயிர் பிரிந்தது. வைகுண்டம் சேர்ந்தார் பரமாத்மா.

கண்ணன் மனைவிகள்: ருக்மணி, சத்யபாமா, காளிந்தி, ஜாம்பவதி, விக்ரந்தை, சத்யவதி, பத்தரை, லட்சுமணை என பட்டத்தரசிகள் எட்டு பேர். இவர்களன்றி பதினாயிரம் இளவரசிகள். ஒவ்வொருவருக்கும் பத்துப் பிள்ளைகள்.

கண்ணனின் பல பிள்ளைகளில் 18 பேர் கீர்த்தி பெற்றவர்கள். பிரத்யும்னன், அனிருத்ரன், தீப்திமான், பானு, ப்ருஹத்பானு, சாம்பன், விருகன், அருணன், புஷ்கரன், வேதபாஸு, ஸ்ருததேவன், சுனந்தனன், இந்திரபாஸு, விருமன், கவி, நிகரோதனன், சித்திரபானு, மது என்பவர்களே இவர்கள்.

கண்ணனின் காலம் கண்ணனின் பூலோக சஞ்சாரம் 125 வருடங்கள் என ஞானானந்த சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளார். கி.மு. 3102 பிப்ரவரி 18-ல் 125 வருடம், 7 மாதம், 6 நாட்கள், பிற்பகல் 2 மணி, 27 நிமிடம், 30 வினாடியில் கிருஷ்ணாவதாரம் முடிந்தது என்கிறார்.

நன்றி : ஆர்.இராமதாஸ்

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||

|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||

இன்பத்தை வழங்கும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி

"என் திருவடிகளைச் சரணடைந்த உன் பாவங்களை நீக்கி, மோக்ஷ கதி அடைய, நான் அருள்புரிகிறேன்!'' பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் கீதையில் இப்படிக் கூறினார். அந்தத் திருவடிகளுக்குத்தான் எத்தகைய மகிமை! கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் நிகழ்த்திய அற்புதங்கள் தான் எத்தனை?. 

தன் சகோதரி தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையால் தனக்கு அழிவு ஏற்படும் என்பதை அசரீரி வாக்கால் தெரிந்துகொண்ட கம்ஸன், தேவகியையும் அவள் கணவர் வசுதேவரையும் மதுராநகர் சிறையில் அடைத்தான். பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் சங்கல்பத்தால் தான் கிருஷ்ணாவதாரம் நிகழ்கிறது என்பதை அவன் அறியவில்லை. விஷ்ணுவே தேவகி - வசுதேவர் தம்பதியின் எட்டாவது குழந்தையாகப் பிறக்கிறார்.


பொதுவாக உலகில் பெற்றோர் தான் பிறந்த குழந்தை எதைச் சாப்பிட வேண்டும், எப்படி வளர வேண்டும் என்பதைத் தீர்மானிப்பார்கள். ஸ்ரீ கிருஷ்ணன் ஓர் அதிசயக் குழந்தை! பிறந்த உடனேயே, பெற்றோர் என்ன செய்யவேண்டும் என்று கட்டளை இடுகிறார். தன்னைச் சிறையிலிருந்து எடுத்துச்சென்று கோகுலத்தில் விட்டுவிட்டு, அங்கு யசோதை - நந்தகோபருக்குப் பிறந்த பெண் குழந்தையை எடுத்து வருமாறு கட்டளையிடுகிறார். அவரது மாயா சக்தியால் சிறைக்காவலர்கள் மயங்கி விழுந்தனர். பூட்டுகள் திறந்துகொண்டன. சிறைக் கதவுகள் தாமே திறந்து, வசுதேவர் கிருஷ்ணனுடன் வெளியேறியதும் தாமாகவே மூடிக்கொண்டன.

ஸ்ரீ கிருஷ்ணன் கூறியபடி, அவரை துணியில் சுற்றி, கூடை ஒன்றில் வைத்து, தலையில் சுமந்து கோகுலம் நோக்கிச் சென்றார் வசுதேவர். திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. வசுதேவர் யமுனை நதியைக் கடந்துதான் அக்கரையிலுள்ள கோகுலம் அடைய முடியும். அடைமழையால் யமுனையில் வெள்ளம் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது. எந்தத் தடையையும் கண்டு அஞ்சாமல் வசுதேவர் யமுனையில் காலெடுத்து வைத்தார். அப்போது ஐந்து தலை நாகம் ஒன்று படமெடுத்து, கூடைக்கு மேல் குடையாகி வசுதேவரைப் பின்தொடர்ந்தது. யமுனையாற்றில் வசுதேவர் நடக்க ஆரம்பித்ததும், ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயர ஆரம்பித்தது. "கட்டளையிட்ட கடவுள் காப்பாற்றுவான்" என்ற நம்பிக்கையில் வசுதேவர் ஆற்றைக் கடந்து கொண்டிருந்தார். திடீரென நீர்மட்டம் குறைய ஆரம்பித்தது. மழையின் வேகமும் குறைந்தது. யமுனை இரண்டாகப் பிரிந்து, வசுதேவர் நடந்துசெல்ல வழிவிட்டது.

அனைவருக்கும் தெரிந்த புராண வரலாறு தான் இது. இதில் பலருக்குத் தெரியாத கதை எது என்று இனி பார்ப்போம்... ஆவணி மாதத்தில் அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. பொதுவாக இந்த மாதத்தில், பாரதத்தின் வடக்குப் பகுதியில் பெருமழை பெய்யும் பருவநிலை கிடையாது. வசுதேவர் குழந்தைக் கிருஷ்ணனைச் சுமந்து சென்ற போது, ஏன் இந்த மழை பெய்ய வேண்டும்? யமுனையில் ஏன் வெள்ளம் வர வேண்டும்? வசுதேவருக்கு ஏன் இந்தச் சோதனை ஏற்பட வேண்டும்?

இதற்கெல்லாம் ஓர் அற்புதமான காரணம் இருந்தது. ரூபகோஸ்வாமி எழுதிய "பிருந்தாவன கீதை" எனும் நூலில் இதற்கான விளக்கங்களை அறிய முடிகிறது. ஒருமுறை, கந்தர்வன் ஒருவன், ஒரு முனிவரின் சாபத்தால் காளிங்கன் என்ற பெயருடைய ஐந்து தலை நாகமாக மாறினான். ஸ்ரீமகா விஷ்ணுவின் புனிதப் பாதங்கள் அவன் சிரசில் படும்போது அவன் சாபம் நீங்கும் என்று முனிவர் கூறியிருந்தார். பகவான் விஷ்ணுவின் அவதாரத்துக்காகக் காத்திருந்தான் காளிங்கன்.

பகவான் விஷ்ணுவின் மற்றொரு பக்தை யமுனை. இவள் சூரிய பகவானின் புத்திரி. கங்கா தேவியைப் போல விஷ்ணு பாதத்தைத் தொட்டுச் சரணடைய வேண்டுமெனக் கடும் தவம் புரிந்தாள். விஷ்ணு அவள் முன் தோன்றி, தனது கிருஷ்ணாவதார காலத்தில் அவள் விருப்பம் நிறைவேறுமென வாக்களித்தார். அன்று முதல், யமுனையாக ஓடிக்கொண்டிருக்கும் சூரிய புத்திரியும், கிருஷ்ணாவதாரம் எப்போது நிகழுமென எதிர்பார்த்துக் காத்திருந்தாள். யமுனையின் தவத்துக்குப் பலன் தரவே, ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்ததும் அதிசயமாக மழை பெய்து, யமுனையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

கூடையில் குழந்தை கிருஷ்ணனைச் சுமந்துகொண்டு வசுதேவர் யமுனைக் கரைக்கு வந்ததுமே, இரண்டு பக்தர்கள் அவர் திருவடி தங்கள் மீது படாதா என ஏங்கினர். ஒருவன் காளிங்கன் எனும் நாகம்; மற்றவள் யமுனை. ஆனால், காளிங்கன் சாபம் பெறுவதற்கு முன்பே தவத்தைத் தொடங்கிய யமுனைக்கே முதலில் அருள்தர நினைத்தார் பகவான். ஆற்றில் வசுதேவர் இறங்கி நடந்து செல்கையில், கூடையிலுள்ள கிருஷ்ணனின் பாதங்கள் மேல் நோக்கி உயர்ந்திருந்தால் காளிங்கன் சாப விமோசனம் பெற்றிருப்பான். ஆனால், கிருஷ்ணன் வேறுவிதமாக லீலை புரிந்தார்.

யமுனையில் இறங்கி நடந்த வசுதேவரின் வைராக்கியத்தை முதலில் தெரிந்துகொள்ள விரும்பினார். கடும் மழையாலும், வெள்ளத்தாலும் யமுனையில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருந்தது. இடுப்புவரை இருந்த வெள்ளநீர் கழுத்து வரை வந்தபோதும் கூட, கவலைப்படாமல் தன் கடமையைச் செய்து கொண்டிருந்த வசுதேவரின் சிரத்தா பக்தியை எண்ணி வியந்தார் ஸ்ரீ கிருஷ்ணன். நீர்மட்டம் வசுதேவரின் மூக்கைத் தொடும் நிலை வந்தபோது, கண்ணன் கருணை பொழிந்தார். தன் கால்களைக் கூடைக்கு வெளியே போட்டார். அவர் பாதங்கள் யமுனையைத் தொட்டன.

இதன் மூலம் யமுனையின் தவம் நிறைவேறியது. தனக்குக் கருணை புரிந்த கிருஷ்ணனின் சங்கல்பம் நிறைவேற யமுனை தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டாள். அதனாலேயே நீர்மட்டம் குறைந்தது. அவள் இரண்டாகப் பிரிந்து, வசுதேவர் செல்ல வழியமைத்துத் தந்தாள். காளிங்கன் ஏமாற்றம் அடைந்தாலும், நம்பிக்கையைக் கைவிடவில்லை. பிருந்தாவனத்தில் இருந்த பொய்கையில் வாழ ஆரம்பித்தான். அவன் விடும் மூச்சுக் காற்றாலும், கக்கும் விஷத்தாலும் மாசடைந்தது பொய்கை. அதனால், "காளிங்கன் பொய்கை" என அதை அழைத்து, அதன் அருகில் செல்லாமல் ஒதுங்கி இருந்தனர் மக்கள். ஆனால், ஸ்ரீ கிருஷ்ணன் காளிங்கனை மறக்கவில்லை. ஒருநாள் கோபாலர்களுடன் மாடு மேய்க்கச் சென்ற அவர், யார் தடுத்தும் கேளாமல் அந்தப் பொய்கையில் குதித்தார். காளிங்கன் தன் படத்தைத் தூக்கி, கிருஷ்ணனை தாங்கிக் கொண்டான். ஸ்ரீ கிருஷ்ணன் அதன் மீது நர்த்தனம் செய்தார். காளிங்கன் சாபம் நீங்கியது.


"எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்" என்று சொல்வார்கள். இது மனிதர்களுக்கு! ஆனால், இறைவன் மனித வடிவில் அவதாரம் செய்யும் போது, அவர் பாதங்களே பிரதானம். ராமாவதாரத்தில் கங்கைக்கரை வேடன் குஹன் ராமனின் திருவடிகளுக்குப் பூஜை செய்கின்றான். தனக்குத் தன் தாய் கைகேயி வாங்கித் தந்த நாட்டை வேண்டாமெனக் கூறி ராமன் திருவடிகளின் அம்சமான அவனது பாதுகைகளையே பதினான்கு வருடம் பூஜிக்கிறான் பரதன்.

அதுபோல, கிருஷ்ணாவதாரத்திலும் கிருஷ்ணனின் பாதங்களின் பெருமை பல இடங்களில் புகழப்படுகிறது. கிருஷ்ண ஜயந்தி அன்று வீடுகளில் கிருஷ்ணனின் பாதத்தை மாக்கோலமாகப் போட்டு, கிருஷ்ணனை வழிபடும் பழக்கம் தொன்றுதொட்டு நம் நாட்டில் இருந்துவருகிறது. இதுவும் பகவானின் பாத மகிமையைப் போற்றுவதற்காக அமைந்த ஒரு வழிபாட்டு முறைதான். இப்படி, இறைவன் திருவடியின் மகிமை எத்தனையோ புராண இதிகாசங்களில் கூறப்பட்டிருந்தாலும், திருவள்ளுவப் பெருமானின் கீழ்க்காணும் திருக்குறளில் உள்ள ஆழமான கருத்தை வேறெங்கும் காணமுடியாது.

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு."

"பற்றை" அதாவது, ஆசாபாசங்களை உதறுவதற்கு, பற்றேதும் இல்லாத பரம்பொருளான இறைவனின் திருப்பாதங்களைப் பிடித்துக் கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் அந்தப் பிடியை விட்டுவிடாதீர்கள் என்பது இதன் பொருள். நாமெல்லாம் துன்பம் வரும்போது இறைவனை வேண்டுவது வழக்கம். அந்தத் துன்பம் நீங்கிய பின், அதனை மறந்து விடுவதும் இயல்பு. இந்த முறையை மாற்றி, எப்போதும் இறைவனின் திருவடியையே பற்றி நம்பிக்கையோடு வாழுங்கள் என்பதே வள்ளுவர் காட்டும் வழி.

நன்றி : ஆர்.இராமதாஸ்

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||

|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||