திருவானைக்காவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவானைக்காவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 டிசம்பர், 2018

திருவானைக்கா திருமுறை திருப்பதிகம் 02

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ நீர்த்தீரள்நாதர், ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அகிலாண்டநாயகி, ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி

திருமுறை : மூன்றாம் திருமுறை 053 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
வானைக்காவல் வெண்மதி மல்கு புல்கு வார்சடை
தேனைக்காவில் இன்மொழித் தேவி பாகம் ஆயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க்கு ஏதும் ஏதம் இல்லையே.

பொருளுரை:
வானிலுள்ள இருளைப் போக்கும் வெண்மதியைச் சடையில் தாங்கி, தேன் போன்ற இனிய மொழி பேசும் உமாதேவியைத் தன்திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு, திருஆனைக்காவில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைச் சரணாக வாழ்பவர்கட்குத் தம்மைத் தாமே காத்துக் கொள்ள முடியாமல் பிறதுணை வேண்டும்படி நேரும் பெரிய அபாயம் எதுவும் இல்லை. 


பாடல் எண் : 02
சேறுபட்ட தண்வயல் சென்று சென்று சேணுலா
ஆறுபட்ட நுண் துறை ஆனைக்காவில் அண்ணலார்
நீறுபட்ட மேனியார் நிகரில் பாதம் ஏத்துவார்
வேறுபட்ட சிந்தையார் விண்ணில் எண்ண வல்லரே. 

பொருளுரை:
சேறுடைய குளிர்ச்சி பொருந்திய வயல் வளம் பெருகுமாறு, நெடுந்தொலைவு சென்று ஓடிவரும் காவிரி ஆற்றின் துறையில் விளங்கும் திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலாகிய சிவபெருமான், திருவெண்ணீறு பூசிய திருமேனியுடையவர். ஒப்பற்ற அப்பெருமானின் திருவடிகளைப் போற்றுபவர்கள், சிந்தை முதலிய பசுகரணங்கள், பதி கரணங்களாக மாறியவர்களாய், முத்தியின்பம் பெறுவதற்குரிய சிவஞானம் கைகூடப் பெற்றவர்கள் ஆவர்.


பாடல் எண் : 03
தாரமாய மாதராள் தான் ஒர்பாகம் ஆயினான்
ஈரமாய புன்சடை ஏற்ற திங்கள் சூடினான்
ஆரமாய மார்புடை ஆனைக்காவில் அண்ணலை
வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே.

பொருளுரை:
தாரமாகிய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர் சிவபெருமான். கங்கையைத் தாங்கிய சடை முடியில் சந்திரனையும் சூடியவர். சோழ அரசனின் வேண்டுகோளுக்கிணங்க, அவனது தொலைந்த இரத்தின மாலையைத் திருமஞ்சன நீரோடு தம் திருமார்பில் ஏற்றவர். திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலான சிவபெருமானை அன்புடன் வணங்குவார்களின் தீவினைகள் யாவும் நீங்கும். 


பாடல் எண் : 04
விண்ணில் நண்ணு புல்கிய வீரமாய மால்விடை
சுண்ண வெண்ணீறு ஆடினான் சூலம் ஏந்து கையினான்
அண்ணல் கண்ணொர் மூன்றினான் ஆனைக்காவு கைதொழ
எண்ணும் வண்ணம் வல்லவர்க்கு ஏதம் ஒன்றும் இல்லையே.

பொருளுரை:
வானில் நண்ணிச்சென்று முப்புரம் எரித்தபோது திருமால் இடபமாகத் தாங்கினான். இறைவன் திருவெண்ணீறு அணிந்தவன். சூலமேந்திய கையினன். மூன்று கண்களையுடைய மூர்த்தியான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவானைக்காவைக் கைதொழ எண்ணும் அன்பர்கட்குத் தீமை எதுவும் இல்லை.


பாடல் எண் : 05
வெய்ய பாவம் கைவிட வேண்டுவீர்கள் ஆண்டசீர்
மைகொள் கண்டன் வெய்ய தீ மாலையாடு காதலான்
கொய்ய விண்ட நாண்மலர்க் கொன்றை துன்று சென்னியெம்
ஐயன் மேய பொய்கைசூழ் ஆனைக்காவு சேர்மினே.

பொருளுரை:
கொடிய பாவமானது விலக வேண்டும் என்று விரும்புகிற அன்பர்களே! தேவர்களைக் காத்து அருள்புரிந்த நஞ்சுண்ட இருண்ட கண்டத்தினனும், வெப்ப மிகுந்த நெருப்பினை ஏந்தி ஆடுகின்ற அன்புடையவனும், அன்றலர்ந்த கொன்றை மலரைக் கொய்து தலையிலணிந்தவனுமான எம் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பொய்கை சூழ்ந்த திருவானைக்கா என்னும் திருத்தலத்தை அடைந்து வழிபடுவீர்களாக.


பாடல் எண் : 06
நாணும் ஓர்வு சார்வும் முன் நகையும் உட்கும் நன்மையும்
பேணுறாத செல்வமும் பேச நின்ற பெற்றியான்
ஆணும் பெண்ணும் ஆகிய ஆனைக்காவில் அண்ணலார்
காணும் கண்ணு மூன்று உடைக் கறைகொள் மிடறன் அல்லனே.

பொருளுரை:
அஞ்ஞானத்தால் ஈசனை அறியாத பிறர் நாணத்தக்க நாணமும், பதியை ஓர்ந்து அறிதலும், அறிந்தபின் சார்ந்திருத்தலும், சார்தலினால் மகிழ்ச்சியும், மனத்தை அடக்கி உள்கித் தியானம் செய்தலுமாகிய நன்மையும் உடையவர்களாய், எவற்றையும் பொருட்படுத்தாத வீரியமும் கொண்ட அடியவர்கள் கொண்டாடிப் பேசத்தக்க தன்மையை உடைய, சிவபெருமான் ஆணும், பெண்ணும் சேர்ந்ததாகிய அர்த்தநாரித் திருக்கோலத்தில் திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலாய் மூன்று கண்களையுடையவராய் விளங்குபவர் அல்லரோ?.


பாடல் எண் : 07
கூரும் மாலை நண்பகல் கூடி வல்ல தொண்டர்கள்
பேரும் ஊரும் செல்வமும் பேச நின்ற பெற்றியான்
பாரும் விண்ணும் கைதொழ பாயும் கங்கை செஞ்சடை
ஆரம் நீரொடு ஏந்தினான் ஆனைக்காவு சேர்மினே.

பொருளுரை:
காலை, மாலை, நண்பகல் முக்காலங்களிலும் இறைவனுக்குத் தொண்டு செய்யும் அடியார்கள் ஒன்று கூடி, இறைவனின் திருநாம மகிமைகளையும் திருத்தலங்களின் சிறப்புக்களையும், அவன் அருட்செயல்களையும் போற்றிப் பேச விளங்கும் தன்மையன் சிவபெருமான். பூவுலகத்தோரும், விண்ணுலகத்தோரும் கைதொழுது வணங்கக் கங்கையைச் செஞ்சடையில் தாங்கியுள்ள சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவானைக்கா என்னும் திருத்தலத்தை அடைந்து வழிபடுவீர்களாக.


பாடல் எண் : 08
பொன்ன மல்கு தாமரைப் போது தாது வண்டினம்
அன்னம் மல்கு தண்துறை ஆனைக்காவில் அண்ணலைப்
பன்ன வல்ல நான்மறை பாடவல்ல தன்மையோர்
முன்ன வல்லர் மொய்கழல் துன்ன வல்லர் விண்ணையே.

பொருளுரை:
இலக்குமி வீற்றிருந்தருளும் தாமரை மலரில் வண்டினம் ரீங்காரம் செய்யவும், அன்னப் பறவைகள் வைகும் குளிர்ந்த நீர்நிலைகளின் துறைகலை உடைய திருஆனைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலான சிவபெருமானை நான்கு வேதங்களிலுமுள்ள பாடல்களைப் பாடி, அவன் திருவடிகளைப் போற்றி வணங்குபவர்கள் இப்பூவுலகின்கண் குறைவற்ற செல்வராய்த் திகழ்வதோடு மறுமையில் விண்ணுலகை ஆள்வர்.


பாடல் எண் : 09
ஊனொடு உண்டல் நன்றென ஊனொடு உண்டல் தீதென
ஆன தொண்டர் அன்பினால் பேச நின்ற தன்மையான்
வானொடு ஒன்று சூடினான் வாய்மையாக மன்னி நின்று
ஆனொடு அஞ்சும் ஆடினான் ஆனைக்காவு சேர்மினே.

பொருளுரை:
ஊன் உணவு இறைவனுக்குப் படைத்தல் நன்று என்று சுவை மிகுந்த இறைச்சியைப் படைத்த கண்ணப்ப நாயனாரின் அன்பிற்கும், ஊன் உணவு இறைவனுக்குப் படைத்தல் அபசாரம் அது தீது என மருண்ட சிவகோசரியார் அன்பிற்கும் கட்டுண்ட தன்மையினனும், பிறைச்சந்திரனைச் சடையில் சூடி, சத்தியப் பொருளாக என்றும் நிலைத்து நின்று, பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்காட்டப் படுகின்றவனுமாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவானைக்கா என்னும் திருத்தலத்தைச் சார்ந்து அவனை வழிபட்டு உய்யுங்கள்.


பாடல் எண் : 10
கையில் உண்ணும் கையரும் கடுக்கள் தின் கழுக்களும்
மெய்யைப் போர்க்கும் பொய்யரும் வேதநெறியை அறிகிலார்
தையல் பாகம் ஆயினான் தழலது உருவத்தான் எங்கள்
ஐயன் மேய பொய்கைசூழ் ஆனைக்காவு சேர்மினே.

பொருளுரை:
கையில் உணவு வாங்கி உண்ணும் சமணரும், கடுக்காய்களைத் தின்னும் புத்தர்களும், மெய்ப்பொருளாம் இறைவனை உணராது பொய்ப்பொருளாம் உலகியலைப் பற்றிப் பேசுபவர்களாய் வேதநெறியை அறியாதவர்கள். எனவே அவர்களைச் சாராது, உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவரும், நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியை உடையவருமான எங்கள் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பொய்கை சூழ்ந்த திருவானைக்கா என்னும் திருத்தலத்தை அடைந்து அவரை வழிபட்டு உய்யுங்கள்.


பாடல் எண் : 11
ஊழி ஊழி வையகத்து உயிர்கள் தோற்று வானொடும்
ஆழியானும் காண்கிலா ஆனைக்காவில் அண்ணலை
காழி ஞானசம்பந்தன் கருதிச் சொன்ன பத்திவை
வாழியாகக் கற்பவர் வல்வினைகள் மாயுமே.

பொருளுரை:
ஊழிக்காலந்தோறும் உயிர்களுக்குத் தனு, கரண, புவன, போகங்களைப் படைக்கின்ற பிரமனும், திருமாலும் இறைவனின் முடியையும், அடியையும் தேடிச்சென்றும் காண்பதற்கு அரிய திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலான சிவபெருமானைச் சீகாழிப்பதியில் அவதரித்த ஞானசம்பந்தன் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை மண்ணில் நல்ல வண்ணம் வாழக் கற்று ஓதவல்லவர்களின் கொடிய வினையாவும் மாய்ந்தழியும்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

வியாழன், 6 டிசம்பர், 2018

திருவானைக்கா திருமுறை திருப்பதிகம் 01

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ நீர்த்தீரள்நாதர், ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அகிலாண்டநாயகி, ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி

திருமுறை : இரண்டாம் திருமுறை 023 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். சிவலிங்கம் கூரையில்லாமல் வெய்யில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது.

யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் மற்றும் பூவும் கொண்டு வந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. 

இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வ ஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.

திருவானைக்கா பஞ்சபூத ஸ்தலங்களில் அப்பு ஸ்தலம். மூலஸ்தான லிங்கம் இருக்குமிடம் தரைபட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் அலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது. அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது. தனி சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலாண்டேஸ்வரி காட்சி தருகிறாள். மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் அப்புலிங்கமாக காட்சி தருகிறார்.

திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம். அகிலாண்டேஸ்வரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். இந்தக் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பார்கள். அம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததாகவும் பக்தர்கள் வழிபாடு செய்ய மிகவும் அச்சமுற்றதாகவும் இருக்க ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு கூறுகிறது. அன்னையின் உக்ரத்தை தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

உஷத் காலத்தில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். மேலும் இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.

பதிக வரலாறு : திருச்சிராப்பள்ளியினின்றும் புறப்பட்டுத் திருவானைக்காவை அடைந்த பெருமானார், அங்கு வெண்ணாவல் மேவிய மெய்ப்பொருளை வணங்கி, யானை வழிபட்டதையும் கோச்செங்கட்சோழ நாயனார் செய்த அடிமையையும் அமைத்துப் பாடிய பண்ணுறு செந்தமிழ் மாலை இது.

பாடல் எண் : 01
மழையார் மிடறா மழுவாள் உடையாய்
உழையார் கரவா உமையாள் கணவா
விழவாரும் வெண் நாவலின் மேவிய எம் 
அழகா எனும் ஆயிழையாள் அவளே.

பொருளுரை:
நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகலன் பூண்ட என் மகள், "மேகம் போன்ற கரிய மிடற்றினனே, மழுவாகிய படைக்கலனை உடையவனே, மான் ஏந்திய கரத்தினனே, உமையாள் கணவனே, விழாக்கள் பல நிகழும் வெண்ணாவல் ஈச்சுரம் என்னும் திருவானைக்காவில் மேவிய எம் அழகனே! அருள்புரி", என்று உன்னையே நினைந்து கூறுகின்றாள்.


பாடல் எண் : 02
கொலையார் கரியின் உரி மூடியனே
மலையார் சிலையா வளைவித்தவனே
விலையால் எனையாளும் வெண்நாவல் உளாய்
நிலையா அருளாய் எனும் நேரிழையே.

பொருளுரை:
அவயவங்கட்கு ஏற்ற அணிகலன்கள் பூண்ட என் மகள், "கொல்ல வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்தவனே, மலையை வில்லாக வளைத்தவனே, தன்னைத்தந்து என்னைக் கொள்ளும் விலையால் என்னை அடிமையாக ஆளும் வெண்ணாவல் என்னும் தலத்தில் விளங்குபவனே! நிலையாக என்னை ஆண்டருள்" எனக் கூறுகின்றாள்.


பாடல் எண் : 03
காலால் உயிர் காலனை வீடுசெய்தாய்
பாலோடு நெய் ஆடிய பால்வணனே 
வேலாடு கையாய் எம் வெண்நாவல் உளாய்
ஆலார் நிழலாய் எனும் ஆயிழையே.

பொருளுரை:
என் ஆயிழையாள், "காலால் காலன் உயிரைப் போக்கியவனே, பால், நெய் முதலியவற்றை ஆடும் பால்வண்ணனே, வேல் ஏந்திய கையனே, வெண்ணாவலின் கீழ் விளங்குபவனே கல்லால மரநிழலின் கீழ் வீற்றிருந்து அறம் அருளியவனே!" என்று பலவாறு கூறுகின்றாள். அருள்புரி.


பாடல் எண் : 04
சுறவக் கொடி கொண்டவன் நீறு அதுவாய் 
உற நெற்றி விழித்த எம் உத்தமனே
விறல் மிக்க கரிக்கு அருள் செய்தவனே
அறம் மிக்கது எனும் ஆயிழையே.

பொருளுரை:
என் ஆயிழையாள், "மீன் கொடியை உடைய மன் மதன் எரிந்து நீறாகுமாறு நுதல் விழியைத் திறந்த எங்கள் உத்தமனே, வலிமைமிக்க யானைக்கு அருள் செய்தவனே, நீ அருள் செயாதிருப்பதைக் கண்டு அறம் தவறுடையது" என்று கூறுவாள்.


பாடல் எண் : 05
செங்கண் பெயர் கொண்டவன் செம்பியர்கோன் 
அங்கட் கருணை பெரிதாயவனே
வெங்கண் விடையாய் எம் வெண்நாவல் உளாய்
அங்கத்து அயர்வு ஆயினள் ஆயிழையே.

பொருளுரை:
ஆராய்ந்து எடுத்த அணிகலன்களைப் பூண்ட என் மகள், "செங்கண்ணான் எனப் பெயர் பூண்ட சோழ மன்னனுக்கு அழகிய கண்களால் கருணை பெரிதாகப் புரிந்தருளியவனே, கொடிய கண்களை உடைய விடையூர்தியை உடையவனே, எமது வெண்ணாவல் என்னும் பெயரிய திருஆனைக்காக் கோயிலில் உறைபவனே!" என்று பலவாறு நைந்து கூறி உடல் சோர்வுற்றாள்.


பாடல் எண் : 06
குன்றே அமர்வாய் கொலையார் புலியின் 
தன் தோலுடையாய் சடையாய் பிறையாய்
வென்றாய் புரம் மூன்றை வெண்நாவலுளே
நின்றாய் அருளாய் எனும் நேரிழையே.

பொருளுரை:
தன் உடல் உறுப்பிற்கு ஏற்ற அணிகலன்களைப் பூண்ட என் மகள், "கயிலைமலையில் வீற்றிருப்பவனே, கொல்லும் தொழில் வல்ல புலியினது தோலை உடுத்தவனே, சடைமுடியினனே, பிறை சூடியவனே, முப்புரங்களை அழித்து அவற்றின் தலைவர்களை வென்றவனே, வெண்ணாவல் என்னும் தலத்துள் எழுந்தருளியவனே! அருளாய்!" என்று அரற்றுகின்றாள்.


இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.


பாடல் எண் : 08
மலை அன்று எடுத்த அரக்கன் முடிதோள்
தொலைய விரல் ஊன்றிய தூ மழுவா
விலையால் எனையாளும் வெண்நாவல் உளாய்
அலசாமல் நல்காய் எனும் ஆயிழையே.

பொருளுரை:
ஆராய்ந்து பூண்ட அணிகலன்களை உடைய என் மகள், "கயிலை மலையை அன்று எடுத்த இராவணனின் முடி, தோள் ஆகியன அழியுமாறு கால் விரலை ஊன்றிய தூய மழுவாளனே! என்னைக் கொண்டு தன்னைத்தரும் விலையால் என்னை ஆண்டருளும் வெண்ணாவல் தலத்தில் வீற்றிருப்பவனே! என்னை அலைக்காமல் அருள்புரிவாய்" என்று கூறுகிறாள்.


பாடல் எண் : 09
திருவார் தரு நாரணன் நான்முகனும்
மருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய் 
விரையாரும் வெண்நாவலுள் மேவிய எம் 
அரவா எனும் ஆயிழையாள் அவளே.

பொருளுரை:
ஆராய்ந்தெடுத்த அணிகளைப் பூண்ட என் மகள், "திருமகள் மார்பிடை மருவிய திருமாலும், நான்முகனும் அடிமுடி காண மருவி வெருவுமாறு அழலுருவாய் நிமிர்ந்தவனே, மணம் கமழும் வெண்ணாவலுள் மேவிய எம் அரவாபரணனே!" என்று கூறுகின்றாள்.


பாடல் எண் : 10
புத்தர் பலரோடு அமண் பொய்த்தவர்கள்
ஒத்த உரை சொலிவை ஓரகிலார்
மெய்த் தேவர் வணங்கும் வெண்நாவல் உளாய்
அத்தா அருளாய் எனும் ஆயிழையே.

பொருளுரை:
ஆராய்ந்து பூண்ட அணிகலன்களை உடைய என் மகள் "புத்தர்கள் பலரோடு, பொய்யான தவத்தைப் புரியும் சமணர்கள், தமக்குள் ஒத்த உரைகளைக்கூறி உன்னை அறியாதவராயினர். உண்மைத் தேவர்கள் வந்து வணங்கும் வெண்ணாவலுள் வீற்றிருக்கும் இறைவனே, அத்தனே, அருளாய்" என்று கூறுவாள்.


பாடல் எண் : 11
வெண்நாவல் அமர்ந்து உறை வேதியனை
கண்ணார் கமழ் காழியர் தம் தலைவன்
பண்ணோடு இவை பாடிய பத்தும் வல்லார் 
விண்ணோர் அவர் ஏத்த விரும்புவரே.

பொருளுரை:
வெண்ணாவலின் கீழ் அமர்ந்துறையும் வேதங்களை அருளிய இறைவனை, கண்களில் நிலைத்து நிற்பதும் மணம் கமழ்வதுமான சீகாழிப்பதிக்குத் தலைவனாகிய ஞானசம்பந்தன், பண்ணோடு பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லார் விண்ணோர்களால் ஏத்தி விரும்பப்படுபவர் ஆவர்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||