நலம் தரும் பதிகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நலம் தரும் பதிகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 மார்ச், 2018

ஸ்ரீ சிவ அஷ்டோத்திர சதநாமாவளி

சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் "நமஹ" என்றும் தமிழில் "போற்றி" என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது. நாம ஆவளி என்பதற்கு பெயர்களின் வரிசை என்று பொருளாகும். சிவபெருமானின் நூற்றியெட்டு பெயர்களை வரிசைப்படுத்தி பூசையின் பொழுது அர்ச்சனை செய்ய ஏதுவாக இத்தொகுப்பு படைக்கப்பட்டது.


இத்தொகுப்பானது சிவபெருமான் அஷ்டோத்திர சத நாமாவளி என்றும், சிவ அஷ்டோத்திர சத நாமாவளி என்றும் அறியப்படுகிறது.

               01. ஓம் சிவாய நமஹ
               02. ஓம் மஹேச்வராய நமஹ
               03. ஓம் சம்பவே நமஹ
               04. ஓம் பினாகிநே நமஹ
               05. ஓம் சசிசேகராய நமஹ

               06. ஓம் வாம தேவாய நமஹ
               07. ஓம் விரூபாக்ஷாய நமஹ
               08. ஓம் கபர்தினே நமஹ
               09. ஓம் நீலலோஹிதாய நமஹ
               10. ஓம் சங்கராய நமஹ

               11. ஓம் சூலபாணயே நமஹ
               12. ஓம் கட்வாங்கிநே நமஹ
               13. ஓம் விஷ்ணுவல்லபாய நமஹ
               14. ஓம் சிபி விஷ்டாய நமஹ
               15. ஓம் அம்பிகா நாதாய நமஹ

               16. ஓம் ஸ்ரீ கண்டாய நமஹ
               17. ஓம் பக்த வத்ஸலாய நமஹ
               18. ஓம் பவாய நமஹ
               19. ஓம் சர்வாய நமஹ
               20. ஓம் திரிலோகேசாய நமஹ

               21. ஓம் சிதிகண்டாய நமஹ
               22. ஓம் சிவாப்ரியாய நமஹ
               23. ஓம் உக்ராய நமஹ
               24. ஓம் கபாலிநே நமஹ
               25. ஓம் காமாரயே நமஹ

               26. ஓம் அந்தகாஸுர ஸூதநாய நமஹ
               27. ஓம் கங்காதராய நமஹ
               28. ஓம் லலாடாக்ஷாய நமஹ
               29. ஓம் காலகாளாய நமஹ
               30. ஓம் க்ருபாநிதயே நமஹ

               31. ஓம் பீமாய நமஹ
               32. ஓம் பரசுஹஸ்தாய நமஹ
               33. ஓம் ம்ருகபாணயே நமஹ
               34. ஓம் ஜடாதராய நமஹ
               35. ஓம் கைலாஸவாஸிநே நமஹ

               36. ஓம் கவசிநே நமஹ
               37. ஓம் கடோராய நமஹ
               38. ஓம் திரிபுராந்தகாய நமஹ
               39. ஓம் வ்ருஷாங்காய நமஹ
               40. ஓம் வ்ருஷபாரூடாய நமஹ

               41. ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய நமஹ
               42. ஓம் ஸாமப்ரியாய நமஹ
               43. ஓம் ஸ்வரமயாய நமஹ
               44. ஓம் த்ரயீமூர்த்தயே நமஹ
               45. ஓம் அநீச்வராய நமஹ

               46. ஓம் ஸர்வஜ்ஞாய நமஹ
               47. ஓம் பரமாத்மநே நமஹ
               48. ஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய நமஹ
               49. ஓம் ஹவிஷே நமஹ
               50. ஓம் யக்ஞ மயாய நமஹ

               51. ஓம் ஸோமாய நமஹ
               52. ஓம் பஞ்வக்த்ராய நமஹ
               53. ஓம் ஸதாசிவாய நமஹ
               54. ஓம் விச்வேச்வராய நமஹ
               55. ஓம் வீரபத்ராய நமஹ

               56. ஓம் கணநாதாய நமஹ
               57. ஓம் ப்ரஜாபதயே நமஹ
               58. ஓம் ஹிரண்ய ரேதஸே நமஹ
               59. ஓம் துர்தர்ஷாய நமஹ
               60. ஓம் கிரீசாய நமஹ

               61. ஓம் கிரிசாய நமஹ
               62. ஓம் அநகாய நமஹ
               63. ஓம் புஜங்கபூஷணாய நமஹ
               64. ஓம் பர்க்காய நமஹ
               65. ஓம் கிரிதன்வநே நமஹ

               66. ஓம் கிரிப்ரியாய நமஹ
               67. ஓம் க்ருத்தி வாஸஸே நமஹ
               68. ஓம் புராராதயே நமஹ
               69. ஓம் மகவதே நமஹ
               70. ஓம் ப்ரமதாதிபாய நமஹ

               71. ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நமஹ
               72. ஓம் ஸூக்ஷ்மதனவே நமஹ
               73. ஓம் ஜகத்வ் யாபினே நமஹ
               74. ஓம் ஜகத் குரவே நமஹ
               75. ஓம் வ்யோமகேசாய நமஹ

               76. ஓம் மஹா ஸேந ஜநகயா நமஹ
               77. ஓம் சாருவிக்ரமாய நமஹ
               78. ஓம் ருத்ராய நமஹ
               79. ஓம் பூதபூதயே நமஹ
               80. ஓம் ஸ்தாணவே நமஹ

               81. ஓம் அஹிர் புதன்யாய நமஹ
               82. ஓம் திகம்பராய நமஹ
               83. ஓம் அஷ்டமூர்த்தயே நமஹ
               84. ஓம் அநேகாத்மநே நமஹ
               85. ஓம் ஸாத்விகாய நமஹ

               86. ஓம் சுத்த விக்ரஹாய நமஹ
               87. ஓம் சாச்வதாய நமஹ
               88. ஓம் கண்டபரசவே நமஹ
               89. ஓம் அஜாய நமஹ
               90. ஓம் பாசவிமோசகாய நமஹ

               91. ஓம் ம்ருடாய நமஹ
               92. ஓம் பசுபதயே நமஹ
               93. ஓம் தேவாய நமஹ
               94. ஓம் மஹாதேவாய நமஹ
               95. ஓம் அவ்யயாயே நமஹ

               96. ஓம் ஹரயே நமஹ
               97. ஓம் பூஷதந்தபிதே நமஹ
               98. ஓம் அவ்யக்ராய நமஹ
               99. ஓம் பகதேத்ரபிதே நமஹ
               100. ஓம் தக்ஷாத்வரஹராய நமஹ

               101. ஓம் ஹராய நமஹ
               102. ஓம் அவ்யக்தாய நமஹ
               103. ஓம் ஹஸஸ்ராக்ஷாய நமஹ
               104. ஓம் ஸஹஸ்ரபதே நமஹ
               105. ஓம் அபவர்க்கப்ரதாய நமஹ

               106. ஓம் அனந்தாய நமஹ
               107. ஓம் தாரகாய நமஹ
               108. ஓம் பரமேச்வராய நமஹ


"நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி"


தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில்

ஸ்ரீ லிங்காஷ்டகத்தினை பிரதோஷ வேளைகளில் செபித்து சிவ தரிசனம் கண்டால் சிவபெருமானின் அருளும், நந்தியின் அருளும் ஒருங்கே உண்டாகும்.


நான்முகன் திருமால் பூசைசெய் லிங்கம்
தூயசொல் புகழ்பெரும் பேரெழில் லிங்கம்
பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

காமனை எரித்த பேரருள் லிங்கம்
ராவணன் கர்வம் அடக்கிய லிங்கம்
வழிவழி முனிவர்கள் வழிபடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

திவ்யமனம் பல கமழ்கின்ற லிங்கம்
சித்தம் தெளிவிக்கும் சித்தர்கள் லிங்கம்
தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

படம் எடுத்தாடும் பாம்பணி லிங்கம்
கனகமின் நவமணிகள் ஒளித்திடும் லிங்கம்
தட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் பொலிந்திடும் லிங்கம்
பங்கய மலர்களை சூடிடும் லிங்கம்
வந்ததோர் பாவத்தை போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

அமர கணங்கள் போற்றிடும் லிங்கம்
அன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம்
கதிரவன் கோடி சுடர்மிகு லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சிற்றிதழ் மலரினை சூட்டிடும் லிங்கம்
எல்லா பிறப்பிற்கும் காரண லிங்கம்
அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சுரரவர் குருவிடம் தொழுதிடும் லிங்கம்
நிரந்தரம் வானத்து மலர்நிறை லிங்கம்
அனைத்திற்கும் மேன்படு பரம்பொருள் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சிவ சன்னிதானத்தில் இதனை உரைப்பார்
சிவ பதம் எய்தியே சிவனோடு இருப்பர்.

"ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!".


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

நந்திகேஸ்வரர் துதி

நந்திகேஸ்வரர் துதியினை பிரதோஷ வேளைகளில் செபித்து சிவ தரிசனம் கண்டால் நந்தியின் அருளும், சிவபெருமானின் அருளும் ஒருங்கே உண்டாகும்.


சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி
சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி
கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி
கயிலையிலே நடம் புரியும் கனிந்த நந்தி...! 

பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி
பார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி
நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி
நாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி...! 

செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி
சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி
மங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி
மனிதர்களின் துயர் போக்க வந்த நந்தி...! 

அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி
அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி
வரும் காலம் நலமாக வைக்கும் நந்தி
வணங்குகிறோம் எமைக் காக்க வருக நந்தி...! 

பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி
பேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்தி
வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி
வறுமையினை எந்நாளும் அகற்றும் நந்தி...! 

கெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்தி
கீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி
வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி
விதியினைத்தான் மாற்றிட விளையும் நந்தி...! 

வேந்தன் நகர் நெய்யினிலே குளிக்கும் நந்தி
வியக்க வைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி
சேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்தி
செவிசாய்த்து அருள் கொடுக்கும் செல்வ நந்தி...! 

கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி
குடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி
பொன்பொருளை வழங்கிடவே வந்த நந்தி
புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி...! 

"ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!".


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

சனி, 3 டிசம்பர், 2016

நலம் தரும் திருப்பதிகம் 11 திருப்பாச்சிலாச்சிராமம்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மாற்றுரைவரதீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பாலாம்பிகை, ஸ்ரீ பாலசுந்தரி

திருமுறை : முதலாம் திருமுறை 044 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூர்ச்சைநோய் (நரம்புத் தளர்ச்சி), போதைப்பொருள் அடிமை முதலிய கொடிய நோய்களிலிருந்து மீள ஓதவேண்டிய திருப்பதிகம்.


திருஞானசம்பந்தப் பெருமான் பல தலங்களையும் தரிசித்தபடி, மழநாட்டைச் சேர்ந்த திருப்பாச்சிலாச்சிராமம் எனும் தலத்திற்கு வந்து சேர்ந்தார். அந்நாட்டு மன்னன் கொல்லி மழவனுடைய மகள் "முயலகன்" என்னும் நோயால் பீடிக்கப்பட்டிருந்தாள். சம்பந்தப் பெருமானை வரவேற்ற மன்னன், தனது மகளின் நோயைத் தீர்க்கும்படி வேண்டிக்கொண்டான். அதன்படி சம்பந்தப் பெருமான் இத்திருப்பதிகத்தைப் பாடி, மன்னனின் மகளைப் பீடித்திருந்த நோயைக் குணமாக்கினார். இத்திருப்பதிகத்தை 48 நாட்கள் தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால், மேற்கண்ட நோய்கள் குணமாகும் என்பது திண்ணம்.

பாடல் எண் : 01
துணி வளர் திங்கள் துளங்கி விளங்கச் சுடர்ச்சடை சுற்றி முடித்துப்
பணி வளர் கொள்கையர் பாரிடஞ்சூழ ஆரிடமும் பலி தேர்வர்
அணி வளர் கோலமெலாம் செய்து பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே.

பொருளுரை:
முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?.


பாடல் எண் : 02
கலை புனை மானுரி தோலுடை ஆடை கனல் சுடரால் இவர் கண்கள்
தலை அணி சென்னியர் தாரணி மார்பர் தம்மடிகள் இவர் என்ன
அலை புனல் பூம்பொழில் சூழ்ந்தமர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
இலை புனை வேலரோ ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே.

பொருளுரை:
மான்தோலை இடையில் ஆடையாகப் புனைந்து, கனல், ஞாயிறு, திங்கள் ஆகியன கண்களாக விளங்கத் தலையோடு அணிந்த முடியினராய், மாலை அணிந்த மார்பினராய், உயிர்கட்குத் தலைவரிவர் என்று சொல்லத் தக்கவராய், நீர்வளம் நிரம்பிய பொழில்கள் சூழ்ந்த பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற இலை வடிவமான வேலை ஏந்திய இறைவர், இம்மழவன் மகளை வாடுமாறு இடர் செய்தல் இவர் பெருமைக்குப் பொருந்துவதாமோ?.


பாடல் எண் : 03
வெஞ்சுடர் ஆடுவர் துஞ்சிருள் மாலை வேண்டுவர் பூண்பது வெண்ணூல்
நஞ்சடை கண்டர் நெஞ்சிடமாக நண்ணுவர் நம்மை நயந்து
மஞ்சடை மாளிகை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச் சிதை செய்வதோ இவர் சீரே.

பொருளுரை:
உலகமெல்லாம் அழிந்தொழியும் ஊழிக்காலத்து இருளில் கொடிய தீயில் நடனம் ஆடுபவரும், தலைமாலை முதலியவற்றை விரும்புபவரும், வெண்ணூல் பூண்பவரும், நஞ்சுடைய கண்டத்தவரும், அன்போடு தம்மை நினைத்த நம்மை விரும்பி நம் நெஞ்சை இடமாகக் கொண்டு எழுந்தருள்பவரும், மேகங்கள் தோயும் மாளிகைகள் சூழ்ந்த திருப்பாச்சிலாச்சிராமத்து எழுந்தருளிய செந்தீவண்ணரும் ஆகிய சிவபெருமான் பைந்தொடி அணிந்த மழவன் மகளாகிய இப்பெண்ணை வருத்துவது இவர் புகழுக்குப் பொருந்துவதோ?.


பாடல் எண் : 04
கன மலர்க்கொன்றை அலங்கல் இலங்க கனல் தரு தூமதிக்கண்ணி
புன மலர்மாலை அணிந்து அழகாய புனிதர் கொலாம் இவரென்ன
அனமலி வண்பொழில் சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மனமலி மைந்தரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே.

பொருளுரை:
கார்காலத்தில் மலரும் கொன்றை மலரால் இயன்ற மாலை திருமேனியில் விளங்க, பிரிந்தவர்க்குக் கனலைத் தரும் தூய பிறைமதியைக் கண்ணியாகச் சூடி, வனங்களில் மலர்ந்த மலர்களால் ஆகிய மாலையைச் சூடி, அழகிய புனிதர் என்று சொல்லும்படி எழிலார்ந்த வண்பொழில்கள் சூழ்ந்த திருப்பாச்சிலாச்சிராமத்து அடியவருக்கு, மனநிறைவு தருபவராய் உறையும் சிவபெருமான், இம்மங்கையை வாடும்படி செய்து மயக்குறுத்துவது மாண்பாகுமோ?.


பாடல் எண் : 05
மாந்தர் தம் பால் நறுநெய் மகிழ்ந்து ஆடி வளர்சடை மேல் புனல் வைத்து
மோந்தை முழா குழல் தாளம் ஒர் வீணை முதிர ஓர் வாய் மூரி பாடி
ஆந்தை விழிச்சிறு தத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
சாந்தணி மார்பரோ தையலை வாடச் சதுர் செய்வதோ இவர் சார்வே.

பொருளுரை:
மண்ணுலகில் அடியவர்கள் ஆட்டும் பால் நறுநெய் ஆகியவற்றை விரும்பியாடி, வளர்ந்த சடைமுடிமேல் கங்கையைச் சூடி, மொந்தை, முழா, குழல், தாளம், வீணை ஆகியன முழங்க வாய்மூரி பாடி ஆந்தை போன்ற விழிகளையுடைய சிறு பூதங்கள் சூழ்ந்தவராய்த் திருப்பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற சந்தனக் கலவையை அணிந்த மார்பினையுடைய சிவபிரான் இத்தையலை வாடும்படி செய்து இப்பெண்ணிடம் தம் சதுரப்பாட்டைக் காட்டல் ஏற்புடையதோ?.


பாடல் எண் : 06
நீறுமெய்பூசி நிறைசடைதாழ நெற்றிக்கண்ணால் உற்றுநோக்கி
ஆறது சூடி ஆடரவு ஆட்டி ஐவிரல் கோவண ஆடை
பால்தரு மேனியர் தத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
ஏறது ஏறியர் ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே.

பொருளுரை:
திருநீற்றை உடல் முழுதும் பூசியவராய், நிறைந்த சடைகள் தாழ்ந்து விளங்க, தமது நெற்றி விழியால் மறக்கருணை காட்டிப் பாவம் போக்கி, கங்கையைத் தலையில் அணிந்து, ஆடுகின்ற பாம்பைக் கையில் எடுத்து விளையாடிக் கொண்டு, ஐவிரல் அளவுள்ள கோவண ஆடை அணிந்து, பால் போன்ற வெள்ளிய மேனியராய், பூதகணங்கள் தம்மைச் சூழ்ந்தவராய்த் திருபாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற விடை ஊர்தியராகிய சிவபிரான் இப்பெண்ணை வாடுமாறு செய்து இவளுக்கு இடர் செய்வது பெருமை தருவது ஒன்றா?.


பாடல் எண் : 07
பொங்கிள நாகமொர் ஏகவடத்தோடு ஆமை வெண்ணூல் புனை கொன்றை
கொங்கிள மாலை புனைந்து அழகாய குழகர்கொலாம் இவரென்ன
அங்கிள மங்கையோர் பங்கினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
சங்கொளி வண்ணரோ தாழ்குழல் வாடச் சதிர் செய்வதோ இவர் சார்வே.

பொருளுரை:
சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன் நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?.


பாடல் எண் : 08
ஏ வலத்தால் விசயற்கு அருள்செய்து இராவணன் தன்னை ஈடு அழித்து
மூவரிலும் முதலாய் நடுவாய மூர்த்தியை அன்றி மொழியாள்
யாவர்களும் பரவும் எழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
தேவர்கள் தேவரோ சேயிழை வாடச் சிதைசெய்வதோ இவர் சேர்வே.

பொருளுரை:
அம்பின் வலிமையால் விசயனோடு போரிட்டு வென்று அவனுக்குப் பாசுபதாஸ்திரம் வழங்கி, அருள் செய்தவரும் இராவணன் பெருவீரன் என்ற புகழை அழித்தவரும், மும்மூர்த்திகளுக்கும் தலைவராய் அவர்கட்கு நடுவே நின்று படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலைப் புரிபவராய் எல்லோராலும் துதிக்கப் பெறும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறையும் மகாதேவராய சிவபிரான் திருப்பெயரையன்றி வேறு வார்த்தைகள் பேசுவதறியாத இப்பெண்ணை வாடச் சிதைவு செய்தல் இவருடைய தொடர்புக்கு அழகிய செயல் ஆகுமோ?.


பாடல் எண் : 09
மேலது நான்முகன் எய்தியது இல்லை கீழது சேவடி தன்னை
நீலது வண்ணனும் எய்தியது இல்லை என இவர் நின்றதும் அல்லால்
ஆலது மாமதி தோய் பொழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
பாலது வண்ணரோ பைந்தொடி வாடப் பழி செய்வதோ இவர் பண்பே.

பொருளுரை:
மேலே உள்ள திருமுடியை நான்முகன் தேடிக் கண்டான் இல்லை: கீழே உள்ள திருவடியை நீல நிறத்தை உடைய திருமால் தேடி அடைந்ததுமில்லை என்று உலகம் புகழுமாறு ஓங்கி அழலுருவாய் நின்றவரும், பெரிய முழுமதியை ஆலமரங்கள் சென்று தோயும் பொழில்கள் சூழ்ந்த திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் பால் வண்ணருமாகிய சிவபிரான் இப்பைந்தொடியாள் வாடுமாறு வஞ்சித்தல் இவர் பண்புக்கு ஏற்ற செயல் ஆகுமோ?.


பாடல் எண் : 10
நாணொடு கூடிய சாயினரேனும் நகுவர் அவர் இருபோதும்
ஊணொடு கூடிய உட்கும் தகையார் உரைகள் அவைகொள வேண்டா
ஆணொடு பெண் வடிவு ஆயினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
பூணெடு மார்பரோ பூங்கொடி வாடப் புனை செய்வதோ இவர் பொற்பே.

பொருளுரை:
நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?.


பாடல் எண் : 11
அகமலி அன்பொடு தொண்டர் வணங்க ஆச்சிராமத்து உறைகின்ற
புகைமலி மாலை புனைந்து அழகாய புனிதர் கொலாம் இவரென்ன
நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
தகைமலி தண்தமிழ் கொண்டு இவையேத்தச் சாரகிலா வினை தானே.

பொருளுரை:
உள்ளம் நிறைந்த அன்போடு தொண்டர்கள் வழிபட ஆச்சிராமம் என்னும் ஊரில் உறைகின்றவரும், அன்பர் காட்டும் நறுமணப்புகை நிறைந்த மாலைகளைச் சூடியவரும், அழகும் தூய்மையும் உடையவருமான சிவபெருமானை, மலர்ந்த தண் பொழில்கள் சூழ்ந்த சீகாழிப்பதியில் தோன்றிய நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய, நோய் தீர்க்கும் மேன்மை மிக்கதும், உள்ளத்தைக் குளிர்விப்பதுமான இத்தமிழ் மாலையால், ஏத்திப் பரவி வழிபடுவோரை வினைகள் சாரா.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

சனி, 19 நவம்பர், 2016

நலம் தரும் திருப்பதிகம் 10 நின்றத் திருத்தாண்டகம்

திருமுறை : ஆறாம் திருமுறை 094 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

"இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் போது பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம்."

இந்த பதிகத்தில் இறைவன் சிவபெருமான், உலகத்தில் உள்ள உயிருள்ள பொருள், உயிரில்லாத பொருள் அனைத்திலும் கலந்து நிற்கும் நிலை சொல்லப்படுவதால் நின்றத் திருத்தாண்டகம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களும் நின்றவாறே என்று முடிகின்றன.


இருநிலனாய்த் தீயாகி என்று தொடங்கி எல்லா இடங்களிலும், எல்லாப் பொருட்களிலும் சிவபெருமானே நிறைந்து நிற்கின்றான் என்பதை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். அவ்வாறே ஸ்ரீ ருத்ரத்திலும் உயிருள்ள பொருள்களையும் உயிரற்றப் பொருள்களையும் ஒவ்வொன்றாய் எடுத்துக் கூறி அங்கே நிறைந்து நிற்கும் சிவபெருமானை வழிபடுதல் அவசியம் என்று சொல்லப் பட்டுள்ளது. எங்கும் சிவமயமாய், எவற்றையும் சிவமாய் காணுதலே மெய்யுணர்வு உடையவர்களுக்கு பொருத்தமான செயலாகும். 

சிவபிரான் பணித்தபடி வடஇந்தியாவில் எங்கோ இருந்த ஒரு குளத்தில் மூழ்கிய அப்பர் பிரான் திருவையாற்றுக் குளத்தில் எழுந்து, திருக்கோயிலுக்குச் செல்லும் வழியில் அனைத்து உயிர்களிலும் சிவபிரானையும் பார்வதி தேவியையும் தான் கண்ட அனுபவத்தை, கண்டேன் கண்டறியாதன கண்டேன் என்று மாதர்பிறைக் கண்ணியானை என்று தொடங்கும் பதிகத்தில் கூறுவது, அப்பர் பிரான் மெய்யுணர்வு கொண்டவராகத் திகழ்ந்ததை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.

மேற்கூறிய காரணத்தால் இந்த பதிகம் வடமொழி வேதங்களில் உள்ள ஸ்ரீ ருத்ர மந்திரத்திற்கு சமமாக கருதப்படுகின்றது. இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் போது பல அன்பர்களால் கூறப்படும் பதிகம் ஆகும். சிவபிரானின் விசுவரூபத்தையும், அளப்பரிய ஆற்றலையும், அவனது அருட் சிறப்புகளையும் குறிப்பிடும் பதிகம்

பாடல் எண் : 01
இருநிலனாய்த் தீயாகி நீருமாகி
இயமானனாய் எறியும் காற்றும் ஆகி
அருநிலைய திங்களாய் ஞாயிறாகி
ஆகாசமாய் அட்டமூர்த்தியாகிப்
பெருநலமும் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறருருவும் தம்முருவும் தாமேயாகி
நெருநலையாய் இன்றாகி நாளையாகி
நிமிர்புன் சடையடிகள் நின்றவாறே.

பொருளுரை:
பெரிய பூமியாகியும், நீராகியும், தீயாகியும், எறியும் காற்றாகியும், ஆகாயமாகியும், ஞாயிறாகியும், அழிவில்லாத நிலையையுடைய திங்களாகியும், இயமானனாகியும் இங்ஙனம் அட்ட மூர்த்தியாகியும், பெருமையுடையதாகிய நன்மையும், சிறுமை உடையதாகிய குற்றமும், பெண்ணும், ஆணும் ஏனைய தேவருடைய வடிவங்களும் அருவம், உருவம், அருவுருவம் என்னும் தம் மூவகைத் திருமேனிகளும் தாமே ஆகியும், நேற்று ஆகியும், இன்று ஆகியும், நாளை ஆகியும் நீண்ட செஞ்சடையுடைய எம்பெருமான் நின்றவாறு வியக்கத் தக்கதாகும்.


பாடல் எண் : 02
மண்ணாகி விண்ணாகி மலையுமாகி 
வயிரமுமாய் மாணிக்கம் தானேயாகிக்
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியுமாகிக்
கலையாகிக் கலைஞானம் தானேயாகிப்     
பெண்ணாகிப் பெண்ணுக்கோர் ஆணுமாகிப்
பிரளயத்துக்கு அப்பாலோர் அண்டமாகி
எண்ணாகி எண்ணுக்கோர் எழுத்துமாகி 
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்றவாறே.

பொருளுரை:
மண் ஆகவும், விண் ஆகவும், மலையாகவும், வயிரமாகவும், மாணிக்கமாகவும் விளங்கும் சிவபிரான், கண்ணாகவும் கண்ணுக்கு மிகவும் அவசியமான கண்மணியாகவும் விளங்குகின்றான். நூலாக இருப்பவனும் அந்த நூல்கள் மூலம் உணரப்படும் அறிவாக இருப்பவனும் அவனே. கலையாக விளங்கும் பெருமான் கலைஞானமாகவும் விளங்குகின்றான். பெண்ணாகவும், அந்த பெண்ணுக்குத் துணையான பொருத்தமான ஆணாகவும், ஊழிக்காலத்தைத் தாண்டி நிற்கும் சுத்தமாயா தத்துவமாகவும் விளங்குகின்றான். அந்த இறைவன, நமது உள்ளத்தின் எண்ணங்களாகவும், அந்த எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒப்பற்ற எழுத்துக்களாகவும், நிற்கும் சுடராகவும் விளங்கும் தன்மை மிகவும் வியக்கத்தக்கதாகும்.


பாடல் எண் : 03
கல்லாகிக் களறாகிக் கானுமாகிக் 
காவிரியாய்க் கால் ஆறாய்க் கழியுமாகிக்
புல்லாகிப் புதலாகிப் பூடுமாகிப் 
புரமாகிப் புரமூன்றும் கெடுத்தானாகிச்
சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளுமாகிச்
சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழலாகி
நெல்லாகி நிலனாகி நீருமாகி 
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்றவாறே.

பொருளுரை:
மலையாகியும் களர் நிலமாகியும் காடாகியும், ஆறாகியும், வாய்க்காலாகிய வழியாகியும், கடற்கரைக்கழியாகியும், புல்லாகியும், புதராகியும், பூடு ஆகியும், நகர் ஆகியும், புரம் மூன்றிற்கும் அழிவாகியும் சொல்லாகியும், சொல்லிற்குப் பொருந்திய பொருள் ஆகியும், போக்கு வரவு ஆகியும், அப்போக்குவரவுக்கு வேண்டிய இடம் ஆகியும் நிலனாகியும், நீராகியும், நெல்லாகியும், நெடிய ஒளிப் பிழம்பாகியும் எம்பெருமான் நெடுகப்பரவி நின்றவாறு வியக்கத் தக்கதாகும்.


பாடல் எண் : 04
காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க்
கனவாகி நனவாகிக் கங்குலாகிக்
கூற்றாகிக் கூற்றுதைத்த கொல் களிறுமாகிக்
குரைகடலாய் குரைகடற்கோர் கோமானுமாய்
நீற்றானாய் நீறேற்ற மேனியாகி 
நீள்விசும்பாய் நீள்விசும்பின் உச்சியாகி
ஏற்றானாய் ஏறு ஊர்ந்த செல்வனாகி 
எழும்சுடராய் எம்மடிகள் நின்றவாறே.

பொருளுரை:
காற்றாகவும், மழை பொழியும் கார்மேகமாகவும், இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என்று மூன்று காலங்களாகவும், கனவாகவும், நனவாகவும், இரவாகவும், நாளின் மற்றோர் பகுதியான பகலாகவும், ஒலிக்கும் கடலாகவும், அந்த கடலுக்குத் தலைவனான வருணனாகவும், திருநீறு அணிந்த மேனியனாகவும், சடையில் கங்கையை ஏற்றவனாகவும், நீண்ட ஆகாயமாகவும், அந்த ஆகாயத்திற்கு உச்சியாகவும், இடபத்தின் மேல் ஏறிச் சென்று எங்கும் திரியும் வல்லமை படைத்தவனாகவும் சிவபிரான் இருக்கின்றான். அவன் உயிர்கள் பால் கருணை கொண்டு அவை உய்யும் பொருட்டு ஐந்தொழில்களையும் தானே விருப்பமுடன் ஏற்றுக்கொண்டுள்ளான். இவ்வாறு அவன் இருக்கும் நிலை மிகவும் போற்றத்தக்கது.  இவ்வாறு பரந்து எங்கும் வியாபித்து இருக்கும் சிவபிரான், கொலைவெறி கொண்ட யானை போன்று வலிமை படைத்தவனாய், கூற்றுவனை உதைத்து, தனது அடியான் மார்க்கண்டேயனைக் காப்பாற்றிய கருணை உள்ளம் கொண்டவன் ஆவான்.


பாடல் எண் : 05
தீயாகி நீராகித் திண்மையாகித் 
திசையாகி அத்திசைக்கோர் தெய்வமாகித்
தாயாகித் தந்தையுமாய்ச் சார்வுமாகித் 
தாரைகையும் ஞாயிறும் தண்மதியுமாகிக்
காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற 
இரதங்கள் நுகர்வானும் தானேயாகி        
நீயாகி நானாகி நேர்மையாகி 
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்றவாறே.

பொருளுரை:
தீயின் வெம்மையாகவும், நீரின் தண்மையாகவும், நிலத்தின் வலிமையாகவும், காற்றின் அசையும் தன்மையாகவும், ஆகாயத்தின் கலக்கும் தன்மையாகவும் இருப்பவன் சிவபிரான். எட்டுத் திசைகளாகவும், அந்த திசைகளின் நாயகர்களாகவும், உயிர்களுக்கெல்லாம் தாயாகவும், தந்தையாகவும், உயிர்கள் பற்றுக் கொள்ளும் பற்றுக்கோடாகவும், வானில் திரியும் விண்மீன்களாகவும், சூரியனாகவும், குளிர்ச்சி பொருந்திய சந்திரனாகவும். செடி கொடி மரங்களில் காணப்படும் காயாகவும், பழமாகவும், பழத்தின் சுவையாகவும், அந்த சுவையை நுகரும் உயிர்களாகவும், நீ, நான், அவன் எனப்படும் மூன்று நிலைகளாகவும் (தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று நிலைகள்), நுண்ணிய பொருளாகவும், நீண்ட ஒளிப்பிழம்பாகவும், எங்கும் பரவி, அனைத்திலும் வியாபித்து இருக்கும் பெருமானின் நிலை மிகவும் வியக்கத்தக்கது.


பாடல் எண் : 06
அங்கமாய் ஆதியாய் வேதமாகி 
அருமறையோடு ஐம்பூதம் தானே ஆகிப்
பங்கமாய்ப் பல சொல்லும் தானே ஆகிப் 
பால் மதியோடு ஆதியாய்ப் பான்மையாகிக்
கங்கையாய்க் காவிரியாய்க் கன்னியாகிக் 
கடலாகி மலையாகிக் கழியுமாகி
எங்குமாய் ஏறூர்ந்த செல்வனாகி 
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்றவாறே.

பொருளுரை:
உலகின் புராதனமான நூல் என கருதப்படும் வேதங்களாகவும், அவைகளின் பொருளாகவும், அந்த வேதங்களின் ஆறு அங்கங்களாகவும், திகழும் சிவபெருமான் அந்த வேதங்களில் உள்ள மந்திரங்களாகவும் விளங்குகின்றான். புகழ்சொற்களாக இருக்கும் அந்த இறைவன் இகழ்ச்சொற்களாகவும் இருக்கின்றான்; வெண்ணிறம் கொண்ட சந்திரனாகவும், ஆதியாகவும், வினைகளாகவும் உள்ள இறைவன், கங்கை, காவிரி, கன்னி குமரித்துறை முதலான தீர்த்தங்களின் தேவதைகளாகவும் விளங்குகின்றான்; கடல்களாகவும், மலைகளாகவும், கழிகளாகவும் எங்கும் நிறைந்திருக்கும் அந்த இறைவன், எருதினை வாகனமாகக் கொண்டு, தோன்றி விளங்கும் சுடராக இருக்கும் தன்மை மிகவும் வியக்கத்தக்கது.


பாடல் எண் : 07
மாதா பிதாவாகி மக்களாகி 
மறிகடலும் மால் விசும்பும் தானேயாகிக்
கோதா விரியாய்க் குமரியாகிக் 
கொல்புலித் தோலாடைக் குழகனாகிப்
போதாய மலர்கொண்டு போற்றி நின்று 
புனைவார் பிறப்பறுக்கும் புனிதனாகி    
யாதானும் என நினைந்தார்க்கு எளிதே ஆகி
அழல் வண்ண வண்ணர் தாம் நின்றவாறே.

பொருளுரை:
உலகத்தில் உள்ள உயிர்களுக்கெல்லாம் தாயாகவும் தந்தையாகவும் விளங்கும் சிவபிரான் அவர்களது மக்களாகவும் விளங்குகின்றான்; அவனே இடைவிடாது ஒலிக்கும் அலைகள் நிறைந்த கடல்களாகவும், மயக்கம் அளிக்கும் அளவு விரிந்த பரப்புடைய ஆகாயமாகவும், கோதாவிரி, குமரி முதலிய தீர்த்தங்களாகவும், கொலைத் தன்மை உடைய புலியினது தோலை ஆடையாக உடைய அழகனாகவும் உள்ளான். .அத்தகைய இறைவன், மலர்ந்த பூக்களைக் கொண்டு வழிபடும் அடியார்களுக்கு, அவரது பிறவிப்பிணியை நீக்கும் புனிதனாகவும், தனது வாழ்வில் எத்தகைய இடர்ப்பாடுகள் நேரிடினும், மனம் கலங்காமல், தன்னையே நினைக்கும் அடியார்களுக்கு மிகவும் எளியவனாகவும் விளங்குகின்றான், நெருப்பினைப் போல நிறம் உடைய அவனது திறமை மிகவும் வியக்கத்தக்கது.


பாடல் எண் : 08
ஆவாகி ஆவினில் ஐந்துமாகி 
அறிவாகி அழலாகி அவியுமாகி
நாவாகி நாவுக்கோர் உரையுமாகி 
நாதனாய் வேதத்தின் உள்ளோனாகி
பூவாகிப் பூவுக்கோர் நாற்றமாகிப் 
புக்குளால் வாசமாய் நின்றானாகித்
தேவாதி தேவர் முதலுமாகிச் 
செழுஞ்சுடராய் சென்றடிகள் நின்றவாறே.

பொருளுரை:
பசுவும், பசுவினிடத்தில் தோன்றும் ஐந்து பொருட்களாகவும் (பால், தயிர், நெய், கோசலம், கோமியம்), வேள்வித் தீயாகவும், வேள்விகளைச் செய்வதற்குரிய அறிவாகவும், அந்த வேள்வியினில் இடப்படும் பொருட்களாகவும், வேள்விக்கான மந்திரங்களைச் சொல்லும் நாவாகவும், அவ்வாறு சொல்லப்படும் மந்திரங்களாகவும், அந்த மந்திரங்களின் பொருளாகவும், வேள்வியில் பயன்படுத்தப்படும் பூக்களாகவும், அந்த பூக்களின் வாசனையாகவும், வாசனையாக பூக்களுடன் ஒன்றியிருக்கும் நிலையாகவும், வேள்விகளால் தொழப்படும் தேவர்களுக்கெல்லாம் தலைவனாகவும் செழுஞ்சுடராய் எம்பெருமான் எங்கும் பரவி இருக்கும் தன்மை மிகவும் வியக்கத்தக்கது.


பாடல் எண் : 09
நீராகி நீளகலம் தானேயாகி 
நிழலாகி நீள்விசும்பின் உச்சியாகிப்
பேராகிப் பேருக்கோர் பெருமையாகிப் 
பெருமதில்கள் மூன்றினையும் எய்தானாகி      
ஆரேனும் தன்னடைந்தார் தம்மை எல்லாம்
ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார் தாம்
பாராகிப் பண்ணாகிப் பாடலாகிப் 
பரஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்றவாறே.

பொருளுரை:
பெரிய மதில்கள் மூன்றினையும் ஒரே அம்பினை எய்தி அழித்த சிவபெருமான், தன்னை அடைந்த அடியார்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் ஆட்கொள்ள வல்லவன். அத்தகைய ஈசன், நீரின் சுவையாகவும், மிகவும் நீண்டும் பரந்த ஒளி வடிவாகவும், பரந்த ஆகாயத்தினும் மேலானவனாகவும், ஒப்பிலாத புகழை உடையவனாய், அந்தப் புகழுக்கு மிகவும் பொருத்தமானவனாய் விளங்குகின்றான். உலகத்தினைப் போன்று பொறுமை உடைய சிவபெருமான், பாடலாகவும், பாடலின் இனிமையான இசையாகவும், அனைத்திற்கும் மேலான ஒளியாகவும் விளங்கி நிற்கும் செயல் மிகவும் வியக்கத் தக்கதாகும்.


பாடல் எண் : 10
மாலாகி நான்முகனாய் மாபூதமாய் 
மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வுமாகிப்    
பாலாகி எண்திசைக்கும் எல்லையாகிப் 
பரப்பாகிப் பரலோகம் தானேயாகிப்
பூலோக புவலோக சுவலோகமாய்ப் 
பூதங்களாய்ப் புராணன் தானேயாகி
ஏலாதன எல்லாம் ஏல்விப்பானாய் 
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்றவாறே.

பொருளுரை:
திருமாலாகவும், பிரமனாகவும் அவர்களுடனே இருந்து அவர்கள் செய்யும் தொழிலுக்குத் துணையாக இருப்பவன் சிவபெருமான்; அவன் பஞ்சபூதங்கள், ஞானேந்திரியங்கள், கன்மேந்திரியங்கள் மற்றும் ஐந்து தன்மாத்திரைகள் ஆக இருந்து, உயிர்கள் மெய்ப்பொருளை அறியும் முயற்சியில் உயிர்களுக்கு உதவி செய்கின்றான்; அவன் அனைத்துப் பொருள்களிலும் பெரியதாய் விரிந்து காணப்படுபவன்; அனைத்துப் பொருட்களிலும் நுண்ணியதாக உள்ளவன். அவனே அனைத்துப் பொருட்களின் மகிழ்ச்சியாக காணப்படுகின்றான். எட்டுத் திசைகளையும் தாண்டி, அந்த திசைகளுக்கு எல்லையாக உள்ளவன்; உலகின் பரந்த பரப்பாக விளங்கும் அவன் பரலோகமாகவும், பூலோகம், புவலோகம், சுவலோகம், ஜனலோகம், தவலோகம், மகலோகம், சத்யலோகம் ஆகிய உலகங்களாகவும் அவைகளில் உட்பட்ட அண்டங்களாகவும் விளங்குகின்றான். அவன் தான் அனைவருக்கும் முன்னவன். உலகில் உள்ள சடப்பொருட்கள் அனைத்தும் தாமாக இயங்க முடியாதவை. அத்தகைய சடப்பொருட்களையும் இயங்கச் செய்யும் சிவபெருமான், எழுகின்ற ஒளிச்சுடராக என்றும் விளங்குவது அதிசயத்தக்க செயலாகும்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்

நன்றி: என். வெங்கடேஸ்வரன்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||