இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வன்மீகநாதர், ஸ்ரீ புற்றிடங்கொண்டார், ஸ்ரீ தியாகராஜர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அல்லியம் பூங்கோதை, ஸ்ரீ கமலாம்பிகை, ஸ்ரீ நீலோத்பலாம்பாள்
திருமுறை : ஆறாம் திருமுறை 32 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்
சுவாமிகள் பெருவேளூர், திருவிளமர் வணங்கித் திருவாரூரில் தொண்டர்கள் எதிர்கொள்ளத் திருவீதி வலம் வந்து தேவாசிரியனை வணங்கிப் புற்றிடங்கொண்டாரைக் கண்டு தொழுது பாடியருளிய திருப்பதிகம் இது
அப்பர் பிரான் திருவாரூர் வருகின்றார் என்பதை அறிந்துகொண்ட தொண்டர்கள், அந்த ஊர் எல்லையில் ஒன்றாகத் திரண்டு, சமண மதத்தின் மாயையைக் கடந்து, சிவபிரானின் அருளால் தான் பிணைத்துக் கட்டப்பட்டு இருந்த கல்லே மிதப்பாக மாற அதன் உதவியுடன் கரையேறிய அப்பர் பிரான் வந்தார் என்று கொண்டாடி அவரை வரவேற்றனர். மேலும் தங்களது வீடுகளையும், வீதிகளையும் அலங்கரித்து அப்பர் பிரானின் வருகை தங்களுக்கு மகிழ்ச்சி ஊட்டியதை தெரிவித்தனர், சிவபிரானின் நிறைந்த அருள் பெற்ற தொண்டர், தங்கள் ஊருக்கு வந்தார் என்று மிகவும் மகிழ்ந்தார்கள்.
பாடல் எண் : 01
கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி
கழலடைந்தார் செல்லும் கதியே போற்றி
அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி.
பொருளுரை:
உண்மையான மெய்ப்பொருளாக உன்னை உணர்ந்தவர்கள் உன்னை நினைத்து அதன் பயனாக வீடுபேறு நிலையினை அடைய உதவுபவனே, உனது திருவடிகளைச் சார்ந்தவர்கள் அடையும் முக்தி என்னும் நற்பேற்றினை அடையுமாறு செய்யும் பெருமானே, உன்னை அல்லாமல் வேறு அனைத்துப் பற்றுக்களையும் துறந்தவர்களுக்கு இனிக்கும் அமுதமே, எனது துயரங்களைத் தீர்த்து ஆட்கொண்ட ஆண்டவனே, வேறு எவரும் உனக்கு ஒப்பாக இல்லாதவனே, வானவர்கள் போற்றும் மருந்தே, பகைவர்களாகிய திரிபுரத்து அரக்கர்களின் நகரங்களை எரித்த சிவபிரானே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.
பாடல் எண் : 02
வங்கமலி கடல் நஞ்சம் உண்டாய் போற்றி
மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி
கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
கொல்புலித் தோலாடைக் குழகா போற்றி
அங்கணனே அமரர்கள் தம் இறைவா போற்றி
ஆலமரம் நீழல் அறம் சொன்னாய் போற்றி
செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி.
பொருளுரை:
அலைகள் நிறைந்த கடலிலிருந்து எழுந்த நஞ்சினை உண்டவனே, மத யானையின் ஈரப்பசுமை கெடாத தோலினைப் போர்த்தவனே, தேன் நிறைந்த கொன்றை மலர்களை மாலையாக அணிந்தவனே, கொல்லும் குணமுடைய புலித்தோலை ஆடையாக உடுத்த அழகனே, அழகிய நெற்றிக் கண்ணை உடையவனே, தேவர்களின் இறைவனே, ஆலமரத்தின் நிழலில் சனகாதி முனிவர்களுக்கு அறம் உரைத்தவனே, அழகிய பொன் குன்றினை ஒத்தவனே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.
பாடல் எண் : 03
மலையான் மடந்தை மணாளா போற்றி
மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
நிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி
நெற்றிமேல் ஒற்றைக் கண்ணுடையாய் போற்றி
இலையார்ந்த மூவிலை வேல் ஏந்தீ போற்றி
ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி
சிலையால் அன்றெயில் எரித்த சிவனே போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி.
பொருளுரை:
மலையரசனாகிய இமவானின் மகள் பார்வதியின் கணவனே, இளைய காளையினை வாகனமாக உடையவனே, எனது நெஞ்சத்தில் நிலையாக நிற்பவனே, நெற்றியில் ஒற்றைக் கண் உடையவனே, இலை வடிவாக அமைந்த முத்தலைச் சூலம் ஏந்தியவனே, ஏழு உலகங்களாகவும் ஏழு கடல்களாகவும் உள்ளவனே, மூன்று புரங்களையும் ஒரு வில்லால் எரித்த சிவபிரானே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.
பாடல் எண் : 04
பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
பூதப்படை உடையாய் போற்றி போற்றி
மன்னியசீர் மறை நான்கும் ஆனாய் போற்றி
மறியேந்து கையானே போற்றி போற்றி
உன்னுமவர்க்கு உண்மையனே போற்றி போற்றி
உலகுக்கு ஒருவனே போற்றி போற்றி
சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி.
பொருளுரை:
பொன் போல் ஒளிரும் திருமேனியை உடையவனே, பூத கணங்களைப் படையாகக் கொண்டவனே, சிறப்பாக நிலை பெற்ற நான்கு வேதங்களாய் இருப்பவனே, மான் கன்றினை கையில் ஏந்தியவனே, உன்னை நினைத்து தியானிப்பவர் மெய்ப்பொருளாக உன்னை உணரும் வண்ணம் செய்பவனே, உலகுக்கு ஒப்பற்ற ஒரே தலைவனே, தலையில் வெண்பிறையை சூடியவனே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.
பாடல் எண் : 05
நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி
வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி
வெண்மதியம் கண்ணி விகிர்தா போற்றி
துஞ்சிருள் ஆடல் உகந்தாய் போற்றி
தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி
செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி.
பொருளுரை:
நஞ்சு ஒடுக்கப்பட்ட கழுத்தினை உடையானே, தவத்தில் ஆழ்ந்து யோக வடிவாக விளங்குபவனே, தக்க யாகத்தில் பங்கேற்ற சூரியனின் பற்களை உடைத்தவனே, வெண் பிறையை, தலையில் மாலையாகச் சூடியவனே, ஊழிமுடிவில் உலகெங்கும் அடர்ந்த இருள் சூழ்ந்து இருக்கும் சமயத்தில் விருப்பமுடன் ஆடல் புரிபவனே, தூய திருநீற்றினை உடலில் பூசியவனே, சிவந்த சடையை உடையவனே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.
பாடல் எண் : 06
சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
அங்கமலத்து அயனோடு மாலும் காணா
அனல் உருவா நின்பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி.
பொருளுரை:
எல்லோர்க்கும் நலத்தினை அளிப்பவனே, அருவுருவ இலிங்க வடிவாக இருப்பவனே, படம் எடுக்கும் பாம்பினை அணியாக அணிந்தவனே, புண்ணியத்தின் வடிவாக உள்ளவனே, அழகிய தாமரை மலரில் உறையும் பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் காண முடியாதவாறு தழல் உருவாக எழுந்தவனே, உனது திருப்பாதங்களை போற்றுகின்றேன், தாமரை மலர் போன்று மென்மையான உனது திருப்பாதங்களைப் போற்றுகின்றேன். திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.
பாடல் எண் : 07
வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
குரை கழலால் கூற்று உதைத்த கோவே போற்றி
நம்புமவர்க்கு அரும்பொருளே போற்றி போற்றி
நால்வேதம் ஆறங்கம் ஆனாய் போற்றி
செம்பொனே மரகதமே மணியே போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி.
பொருளுரை:
நறுமணம் உடைய கொன்றை மலரை சடையில் அணிந்தவனே, வானில் உலவும் நிலவையும் ஒளி வீசும் பாம்பினையும் சடையில் வைத்தவனே, பூங்கொம்பு போன்று நுண்ணிய இடையை உடைய பார்வதி தேவியினைத் தனது உடலில் ஒரு பாகத்தில் வைத்தவனே, ஒலிக்கும் தன்மை வாய்ந்த கழல் அணிந்த காலினால் கூற்றுவனை உதைத்தவனே, உன்னை நம்பி வழிபடும் அடியார்களுக்கு மிகவும் எளிதாக கிட்டும் செல்வமே, நான்கு வேதங்களாகவும் அந்த வேதங்களின் ஆறு அங்கங்களாகவும் திகழ்பவனே, செம்பொன், மாணிக்கமணி மரகதம் முதலான அரிய பொருள் போன்றவனே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.
பாடல் எண் : 08
உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி
வள்ளலே போற்றி மணாளா போற்றி
வானவர்கோன் தோள் துணித்த மைந்தா போற்றி
வெள்ளை ஏறு ஏறும் விகிர்தா போற்றி
மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி.
தெள்ளு நீர்க்கங்கைச் சடையாய் போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி.
பொருளுரை:
உலகில் உள்ள அனைத்து உயிர்களோடும் உயிராக கலந்து இருப்பவனே, உன்னை விரும்பும் அடியார்கள் மனதிலிருந்து என்றும் நீங்காமல் இருப்பவனே, வள்ளலே, மணவாளனே, வானவர் கோனாகிய இந்திரனின் தோளை நெரித்த வல்லவனே, வெள்ளை இடபத்தை வாகனமாகக் கொண்ட விகிர்தனே, மேலோர்க்கும் மேலாக விளங்குபவனே, தெளிந்த கங்கை நீரினைத் தனது சடையில் ஏற்றவனே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.
பாடல் எண் : 09
பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி
திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி
சாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றி
சங்கொத்த நீற்று எம் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி.
பொருளுரை:
கொன்றை முதலிய பூக்கள் நிறைந்த சடைமுடியை உடைய தூயவனே, தேவர்கள் போற்றும் பரம்பொருளே, தெய்வத்தன்மை பொருந்திய தேவர்களுக்குத் தலைவனாய் விளங்குபவனே, திருமாலுக்குச் சக்கரம் அளித்து அருளியவனே, பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து என்னைக் காத்து நான் இனிப் பிறவாதவாறும் சாவாதவாறும் காத்தவனே, வெண்சங்கு நிறத்தினை ஒத்த திருநீற்றினை அணிந்த திறமையாளனே, இடபத்தினை சித்திரமாக உள்ள கொடியைக் கொண்டவனே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.
பாடல் எண் : 10
பிரமன் தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி
பெண்ணுருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி
கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி
காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி
அருமந்த தேவர்க்கு அரசே போற்றி
அன்று அரக்கன் ஐந்நான்கு தோளும் தாளும்
சிரம் நெரித்த சேவடியாய் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி.
பொருளுரை:
பிரமனின் ஐந்தாவது தலையை நீக்கிய பெரியோனே, உமையம்மைக்கு உடலில் இடம் கொடுத்ததால் பெண்ணுருவமும் ஆணுருவமும் கலந்து நிற்பவனே, நான்கு கரங்களையும் மூன்று கண்களையும் கொண்ட தோற்றத்தை உடையவனே, அன்பு கொண்டு உன்னைத் தொழும் அன்பர்களுக்கு மிகவும் எளியவனே, அமுதத்தை உட்கொண்ட தேவர்களுக்கு அரசனாக விளங்குபவனே, இராவணனது இருபது தோள்களையும், கால்களையும், பத்து தலைகளையும் தனது பாதத்தின் விரலால் நெரித்தவனே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.
குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram) இணையத்திற்கு...
நன்றி: திரு ஆதிரை மற்றும் என். வெங்கடேஸ்வரன்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||