இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ கைலாயநாதர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பார்வதி தேவி
திருமுறை : ஆறாம் திருமுறை 57 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்
பாடல் எண் : 01
பாட்டான நல்ல தொடையாய் போற்றி
பரிசை அறியாமை நின்றாய் போற்றி
சூட்டான திங்கள் முடியாய் போற்றி
தூமாலை மத்தம் அணிந்தாய் போற்றி
ஆட்டான தஞ்சும் அமர்ந்தாய் போற்றி
அடங்கார் புரமெரிய நக்காய் போற்றி
காட்டானை மெய்த்தோல் உரித்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
பொருளுரை:
மேம்பட்ட பாமாலை சூடியவனே! உன்தன்மை இன்னது என்று பிறரால் அறியப்படாதவனே! பிறையை முடியில் சூடியவனே! ஊமத்த மாலையை அணிந்தவனே! பஞ்ச கவ்விய அபிடேகத்தை விரும்புபவனே! பகைவருடைய முப்புரமும் எரியுமாறு நகைத்தவனே! யானையின் தோலை உரித்தவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.
பாடல் எண் : 02
அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி
ஆல நிழல்கீழ் அமர்ந்தாய் போற்றி
சதுரா சதுரக் குழையாய் போற்றி
சாம்பர் மெய் பூசும் தலைவா போற்றி
எதிரா உலகம் அமைப்பாய் போற்றி
என்றும் மீளா அருள் செய்வாய் போற்றி
கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
பொருளுரை:
வினைகள் நடுங்கச் செய்யாதபடி அவற்றை நீக்குபவனே! கல்லால மர நிழற்கீழ் அமர்ந்தவனே! திறமை உடையவனே! சிறந்த குழை என்னும் காதணியை அணிந்தவனே! சாம்பலை உடலில் பூசும் தலைவனே! தனக்கு ஒப்பில்லாத முத்தி உலகை அமைத்து அதனை அடையும் அடியவருக்கு என்றும் பிறப்பிற்குத் திரும்பி வாராத அருளைச் செய்பவனே! ஒளி வீசும் சூரியன் முதலிய ஒளிகளுக்குப் பற்றுக் கோடாக இருப்பவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.
பாடல் எண் : 03
செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி
செல்லாத செல்வம் உடையாய் போற்றி
ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி
ஆகாய வண்ணம் உடையாய் போற்றி
வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி
வேளாத வேள்வி உடையாய் போற்றி
கையார் தழலார் விடங்கா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
பொருளுரை:
செம்மை கருமை வெண்ணிறம் இவற்றை உடையவனே! நீங்காத செல்வம் உடையவனே! வியக்கத்தக்கவனே! பெரிய பொருள்களும் சிறிய பொருள்களும் ஆகியவனே! ஆகாயத்தின் தன்மை உடையவனே! தீயோருக்கு வெப்பமும் அடியார்க்குக் குளிர்ச்சியும் அண்மையுமாய் உள்ளவனே! ஓம்பாதே நிலைபெற்றிருக்கும் அருட்சக்தியை உடையவனே! அனல் ஏந்திய அழகனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.
பாடல் எண் : 04
ஆட்சி உலகை உடையாய் போற்றி
அடியார்க்கு அமுதெலாம் ஈவாய் போற்றி
சூட்சி சிறிதும் இலாதாய் போற்றி
சூழ்ந்த கடல் நஞ்சம் உண்டாய் போற்றி
மாட்சி பெரிதும் உடையாய் போற்றி
மன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி
காட்சி பெரிதும் அரியாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
பொருளுரை:
உலகை ஆள்பவனே! அடியார்களுக்கு இன்பம் அளிப்பவனே! சிறிதும் வஞ்சனை இல்லாதவனே! கடல் விடம் உண்டவனே! மேம்பட்ட மாண்புகளை உடையவனே! என் உள்ளத்துள் நிலைபெற்றிருப்பவனே! தம்முயற்சியால் யாரும் காண்டற்கு அரியவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.
பாடல் எண் : 05
முன்னியா நின்ற முதல்வா போற்றி
மூவாத மேனி உடையாய் போற்றி
என்னியா எந்தை பிரானே போற்றி
ஏழின் இசையே உகப்பாய் போற்றி
மன்னிய மங்கை மணாளா போற்றி
மந்திரமும் தந்திரமும் ஆனாய் போற்றி
கன்னியார் கங்கைத் தலைவா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
பொருளுரை:
தவக்கோலம் பூண்ட முதல்வனே! மூப்படையாத திருமேனியனே! எனக்குத் தாயும் தந்தையும் ஆயவனே! ஏழிசையை விரும்புபவனே! உன்னோடு கூடிய பார்வதியின் துணைவனே! மந்திரமும் அவற்றைச் செயற்படுத்தும் செயல்களும் ஆனவனே! என்றும் அழிவில்லாத கங்கைக்குத் தலைவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.
பாடல் எண் : 06
உரியா உலகினுக்கு எல்லாம் போற்றி
உணர்வென்னும் ஊர்வது உடையாய் போற்றி
எரியாய தெய்வச் சுடரே போற்றி
ஏசுமா முண்டி உடையாய் போற்றி
அரியாய் அமரர்கட்கு எல்லாம் போற்றி
அறிவே அடக்கம் உடையாய் போற்றி
கரியானுக்கு ஆழி அன்று ஈந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
பொருளுரை:
எல்லா உலகிற்கும் உரிமை உடையவனே! உன் கருத்தறிந்து செயற்படும் காளையை வாகனமாக உடையவனே! எரி போன்ற அருள் விளக்கே! பிறர் இகழுமாறு மண்டை யோட்டினை ஏந்தினவனே! தேவர்கள் அணுகுவதற்கு அரியவனே! அறிவு வடிவானவனே! நுண்ணியனே! ஒரு காலத்தில் திருமாலுக்குச் சக்கரம் ஈந்தவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கங்கள் பல.
பாடல் எண் : 07
எண்மேலும் எண்ணம் உடையாய் போற்றி
ஏறறிய ஏறும் குணத்தாய் போற்றி
பண்மேலே பாவித்து இருந்தாய் போற்றி
பண்ணொடு யாழ்வீணை பயின்றாய் போற்றி
விண்மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி
மேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றி
கண்மேலும் கண்ணொன்று உடையாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
பொருளுரை:
உயிர்களுடைய எண்ணங்களுக்கு மேற்பட்ட எண்ணங்களை உடையவனே! உயிர்களைக் கரையேற்றும் பொருட்டு மேம்பட்ட குணங்களை உடையவனே! பண்ணிடத்திலே விருப்பம் கொண்டு பண்ணோடு யாழினையும் வீணையையும் இசைக்கின்றவனே! வானத்தையும் கடந்து ஓங்கியிருப்பவனே! மேலோருக் கெல்லாம் மேலோனே! இரு கண்களுக்கு மேலே மூன்றாவதான நெற்றிக் கண்ணை உடையவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.
பாடல் எண் : 08
முடியார் சடையின் மதியாய் போற்றி
முழுநீறு சண்ணித்த மூர்த்தீ போற்றி
துடியார் இடையுமையாள் பங்கா போற்றி
சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி
அடியார் அடிமை அறிவாய் போற்றி
அமரர் பதியாள வைத்தாய் போற்றி
கடியார் புரமூன்றும் எய்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
பொருளுரை:
சடையில் பிறைசூடி, திருநீறு பூசிய மூர்த்தியே! உடுக்கை போன்ற இடையை உடைய பார்வதி பாகனே! தம் முயற்சியால் அறிய முற்படுபவர் காணமுடியாதபடி இருப்பவனே! அடியவர்களின் அடிமைத் தன்மையின் உண்மையை அறிபவனே! அவர்களைத் தேவருலகை ஆளவைப்பவனே! காவல் பொருந்திய மும்மதில்களையும் அழித்தவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.
பாடல் எண் : 09
போற்றிசைத்து உன்னடி பரவ நின்றாய் போற்றி
புண்ணியனே நண்ணல் அரியாய் போற்றி
ஏற்றிசைக்கும் வான்மேல் இருந்தாய் போற்றி
எண்ணாயிரம் நூறு பெயராய் போற்றி
நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி
நான்முகற்கும் மாற்கும் அரியாய் போற்றி
காற்றிசைக்கும் திசைக்கெல்லாம் வித்தே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
பொருளுரை:
அடியார்கள் வணக்கம் சொல்லித் திருவடிகளை வழிபடுமாறு இருப்பவனே! புண்ணியனே! முயற்சியால் அணுக அரியவனே! இடி ஒலிக்கும் வான்மேல் இருப்பவனே! எண்ணிறந்த பெயர்களை உடையவனே! நான்கு திசைகளுக்கும் ஒலி வழங்கும் தலைவனே! பிரமனுக்கும் திருமாலுக்கும் உள்ளவாறு உணர்தற்கு அரியவனே! காற்று இயங்கும் திசைகளுக்கெல்லாம் காரணனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.
குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram) இணையத்திற்கு...
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக