சுந்தரமூர்த்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுந்தரமூர்த்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 ஜூன், 2017

பிழை தவிர்த்த இறைவன்

மக்கள் இறைவனை மலர்களாலும், பாடல்களாலும் அர்ச்சனை செய்து மகிழ்கின்றனர். மலர்கள் அன்றைக்கே மலர்ந்து அன்றைக்கே வாடிவிடும் தன்மையை உடையன. மலர்களால் செய்யப்படும் அர்ச்சனை ஒருநாள் மட்டுமே நிலைக்கிறது. ஆனால் இறைவனை வழிபடுவதற்காகப் பாடப் பெற்ற பாடல்களின் சொல் மலர்கள் என்றும் வாடாதவை. அவை மனித மனத்தையும், இறை மணத்தையும் இணைக்கும் திறமுடையன. சொல்மாலை புனைந்தேத்துவது மாலையைப் புனைந்தேத்துவதைவிடச் சிறந்ததாகும்.


சைவ சமயத்தில் இறைவனைப் போற்றும் பாடல்கள் திருமுறைகள் ஆகும். இத்திருமுறைகள் தினம் தினம் பாடி வரப்பெறுகின்ற அளவிற்கு மக்களிடத்தில் பெருமளவில் செல்வாக்கு பெற்றுள்ளன. திருமுறைகள் சொல்வளமும், பொருள் நலமும், நம்பிக்கை நயமும் கொண்டனவாகும். இதன் காரணமாகத் திருமுறைகள் மக்களையும் மகேசனையும் இணைக்கும் பாலங்கள் என்றால் அது மிகையில்லை.

பன்னிரு திருமுறைகளாகப் பகுக்கப் பெற்ற இத்திருமுறைகளில் ஏழாம் திருமுறை சுந்தரரால் பாடப்பெற்றதாகும். ஏழிசையாய், இசைப்பயனாய் இன்னமுதாய்ப் பாடிய தமிழ்த்திருமுறைள் சுந்தரரின் பாடல்களாகும். வாக்கிற்கு அருணகிரியார், கனிவிற்கு மாணிக்கவாசகர், தாக்கிற்குத் திருஞானசம்பந்தர், நோக்கிற்கு நக்கீரர், நயத்திற்குச் சுந்தரர், சொல்லுருதிக்குத் திருநாவுக்கரசர் என்ற வரிசை முறை தமிழகத்தில் வழங்கி வரும் வரிசை முறையாகும்.. நயத்திற்குச் சுந்தரர் என்ற நிலையில் சுந்தரரின் பாடல்கள் நற்றமிழ் நயத்திற்கு உரியனவாக விளங்குகின்றன.

"மந்திரம் ஒன்றறியேன் மனை வாழ்க்கை மகிழ்ந்து அடியேன்
சுந்தர வேடங்களினால் துரிசே செய்யும் தொண்டன்"

என்று தன் இயல்பினை தன் பாடிய பாடலில் எடுத்துரைத்துக் கொள்ளுகின்றார் சுந்தரர். சுந்தர வேடம் என்பதற்கு எப்போதும் அழகான வேடம் கொண்டிருப்பவர் என்று பொருள். துரிசே செய்தல் என்றால் அழகான வேடம் கொண்டாலும் தவறுகளே செய்யக் கூடிய இயல்பினைப் பெற்றவன் என்று பொருள். தொண்டன் என்பது தொண்டுகளைச் செய்து இறைவனிடத்தில் மிக நெருக்கமாக இருந்தவர் என்று பொருள். இவ்வகையில தொண்டனாகவும் தவறுகள் செய்பவராகவும், மனைவாழ்வில் மகிழ்ந்தவராகவும், மந்திரம் ஏதும் அறியதாவராகவும் விளங்கிய சுந்தரர் தன் இனிய பாடல்களால் இறைவனுக்குக் கட்டளை இட்டவர். இவரின் கட்டளைகளை ஏற்று இறைவன் தூதும் போனார். தங்கம் கொண்டுவந்தார். முதலை உண்ட பாலகனை எழுப்பி நின்றார். ஊடல் தீர்த்தார். இத்தனைச் செயல்களுக்கும் காரணம் சுந்தரர் இறைவனிடத்தில் கொண்டிருந்த அளிவலாத அன்பும், உரிமையுமே ஆகும். சுந்தரர் தான் தினம் காணும் இறைவனின் வடிவழகை எடுத்துரைக்கின்றார்.

"பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே."

என்ற இப்பாடலில் சுந்தரர் கண்ட இறைவனின் வடிவழகை பக்தர்களுக்குக் காட்டுகின்றார். இறைவன் பொன் போன்ற மேனியை உடையவன். அவன் தன் இடையில் புலித்தோலை உடுத்தியிருப்பவன். அவனது தலையில் முடிக்கற்றை சடைபோன்று விரிந்து நிற்கும். அது மின்னும் பல பொருள்களைத் தனக்குள் அடக்கியது. கொன்றை மாலையையும் அது தாங்கிக் கொண்டு நிற்கும். மன்னவன் எம் இறைவன். அவன் மாமணியாகவும் மழபாடி என்ற ஊரில் மாணிக்கமாகவும் நின்று கொண்டு இருக்கின்ற ஆண்டவனைத் தவிர வேறு யாரை நான் நினைக்கமுடியும் என்ற சுந்தரர் காட்டும வடிவழகில் இறையழகும் தமிழ் அழகும் கலந்து நிற்கும் காட்சியைக் கண்டு இன்புற முடிகின்றது.

இறைவனான சிவபெருமானுக்கும் சுந்தரருக்குமான முதல் சந்திப்பு சண்டையில் தான் தொடங்கியது. அந்தநாளில் நடைபெற்ற அந்த சண்டையை என்றைக்கும் மறவாமல் தன் நினைவுகளில் சுமந்த வண்ணம் பாடல் புனைகின்றார் சுந்தரர். தன்மையினால் அடியேனைத் தாம் ஆட்கொண்ட நாள் சபை முன் வன்மைகள் பேசிட வன்தொண்டன் என்பதோர் வாழ்வு தந்தார் புன்மைகள் பேசவும் பொன்னைத் தந்து என்னைப் போகம் புணர்ந்த நன்மையினார்க்கிடம் ஆவது திருநாவலூரே என்று திருநாவலூர் பற்றிப் பாடுகிறார் சுந்தரர். 

திருநாவலூர் சுந்தரரின் சொந்த ஊர் ஆகும். இவ்வூருக்கு வந்த சுந்தரர்  தன் வாழ்வு பற்றி மதிப்பீட்டைச் செய்து கொள்ளுகின்றார். தன்னுடைய பெருந்தன்மையினால் அடியவனான என்னை ஆட்கொண்ட பெருந்தகை சிவபெருமான். பொதுமக்கள் கூடி நின்ற சபையில் நான் அப்பெருந்தகையுடன் வன்மைகள் பேசினேன். அப்படிப்பேசினாலும் வன்தொண்டன் என்று என்னை அழைத்து அவர் அருகில் அணைத்துக் கொண்டார். தொடர்ந்து நான் பல முறை வேண்டுகோள்கள் வைத்தாலும் அவற்றையும் ஏற்றுக் கொண்டுத் தான் வேண்டுவன எல்லாவற்றையும் எனக்களித்தார். 

நான் பொன் வேண்டியபோது பொன் தந்தார். பெண் வேண்டியபோது பெண் தந்தார். இப்பெருமான் அமர்ந்த நல்லிடம் என் சொந்த ஊரான திருநாவலூர் ஆகும். இங்கு தன் சொந்த ஊரைச் சுந்தரர் பாராட்டினாலும், சொந்த ஊரில் உள்ளவர்களுக்குத் தன் இறை அனுவபத்தை வெளிப்படுத்தி நின்று தன்னை உறுதிப் படுத்திக்கொள்கிறார் சுந்தரர்.

மனிதப் பிறவி என்பது மகத்தான பிறவி என்றாலும் அப்பிறவிக்கு ஏதேனும் ஒரு கவலை எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றது. ஒரு கவலை தீர்ந்தால் மறுகவலை. மறுகவலை தீர்ந்தால் மற்றுமொரு கவலை என்று கவலைப்படுவதே மனித வாழ்க்கையாகிவிடுகின்றது. இத்தகைய வாழ்வில் ஒரே ஒரு துணை ஆண்டவன் தான். அந்த ஆண்டவனின் துணையின் பெருமையைச் சுந்தரர் உணர்ந்து பாடுகின்றார்.

"பெற்ற போழ்தும் பெறாத போழ்தும் பேணி உம் கழல் ஏத்துவார்க்கு
மற்றோர் பற்றிலர் என்று இரங்கி மதியுடையவர் செய்கை செய்வீர்
அற்ற போழ்தும் அலந்த போழ்தும் ஆபற்காலத்தடிகேள் உம்மை
ஒற்றி வைத்து இங்கு உண்ணலாமோ? ஓணகாந்தன் தளியுளீரே."

என்ற இப்பாடல் மனித வாழ்க்கையின் இயல்பினையும் இறைவனின் துணையையும் ஒருங்கு கூட்டி உரைக்கின்றது. அடியவர்கள் கடவுளிடத்தில் ஒன்றைப் பெற்றபோது அதற்காக மகிழ்வர். அதே நேரத்தில் தான் ஒன்றைக் கடவுளிடத்தில் கேட்டபோது கடவுள் தராத நிலையிலும் கவலை கொள்ளாது இறைவனைப் போற்றுவர். பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும் என்றும் துணையாக இருப்பவன் இறைவன். இறைவன் தன்னடியார்களுக்கு வேறொருவர் துணை செய்யமாட்டார் என்ற நிலை கருதி அனைவருக்கும் அவ்வப்போது உதவி வருகின்றான். இதற்குக் காரணம் அவன் மதியைத் தன் தலையில் வைத்திருப்பதுதான். 

மதி என்றால் இந்த இடத்தில் இருபொருள்பட கொள்ள வேண்டும். மதி என்பதற்கு முதல் பொருள் நிலவு என்பது. சிவபெருமான் தன் தலையில்; மதி என்ற பிறை நிலவினைச் சூடியுள்ளான். அப்பிறை நிலவு வேண்டியவர் வேண்டாதவர் பார்த்து ஒளி தருவதில்லை. அனைவருக்கும் ஒளி தருகின்றது. இரவில் அது ஒன்றே மக்களுக்குத் துணை. எனவே ஆண்டவனும் மதியைச் சூடிய காரணத்தால் அவ்வியல்பினைப் பெற்றவனாக விளங்குகின்றான்.

மதி என்றால் அறிவு என்று பொருள். மதியுடையவர் செய்கை செய்வீர் என்பதால் அழியாத அறிவுடைய எம்பிரான் சிவபெருமான் தனக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் பார்த்து அருள் செய்வதில்லை. அனைத்து உயிர்களுக்கு உதவும் பேரறிவினைப் பெற்றவன் அவன் என்பது மற்றொரு பொருளாகும். மக்கள் துணையற்றபோதும், அலைந்து திரிகின்றபோதும், ஆபத்தினால் வருத்தமுறும் போதும் என்ன செய்வார்கள். ஆண்டவனை முன் வைத்தே, அவனையே ஒப்பாக வைத்துத் தம் செயல்களைச் செய்வார்கள். இப்படி ஆண்டவனை ஒரு பொருளாக வைத்துத் தம் வாழ்வை நீட்டித்துக் கொள்ளும் மனிதப்போக்கு நல்லதுதானா? இருந்தாலும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளுகின்ற திருவோணகாந்தன்தளி என்ற இடத்தில் குடியிருக்கும் எம்பெருமானுக்கு இதுவெல்லாம் ஒரு விளையாட்டே ஆகும்.

திருவாரூர், திருவொற்றியூர் என்று தன் இருப்பிடத்தைத் தன் துணைகளுக்கு ஏற்ப மாற்றிக் கொண்டே இருந்த சுந்தரர் இம்மாறுதல்களால் பெற்ற இன்னல்கள் பற்பலவாகும். கண்கள் இழந்தார். துன்பம் மிகப் பட்டார். என்றாலும் இறைவன் இவருக்கு ஊன்றுகோல் தந்தான். கண்ணொளியை ஒவ்வொன்றாகத் தந்தான்.. எப்போதும் இறைவனையே தேடுகின்ற இயல்பினை உடையவர் சுந்தரர்.

"தேடுவன் தேடுவன் செம்மலர்ப் பாதங்;கள் நாள்தோறும்
நாடுவன் நாடுவண் நாபிக்கு மேலேயோர் நால்விரல்
மாடுவன் மாடுவன் வன்கை பிடித்து மகிழ்ந்துளே
ஆடுவன் ஆடுவன் ஆமாத்தூர் எம் அடிகளே."

திருவாமத்தூர் இறைவனை மனதில் நினைந்ததும் சுந்தரருக்கு மகிழ்ச்சி பெருக்கெடுக்கிறது. இதன் காரணமாக அவர் பாடல்களில் வரும் சொற்களுக்கும் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஒன்றுக்கு இரண்டாய் வந்து விழுகின்றன. நாள்தோறும் இறைவனின் மலர்ப்பாதங்களைத் தேடுகிறார். நாபிக்கு மேல் நால்விரல் என்ற அளவின் இடம் இதயம் ஆகும். அதாவது நாபி என்றால் உந்திச்சுழி - தொப்புள் என்று பெயர். இந்தத் தொப்புள் பகுதிக்கு நாலுவிரற்கடை மேலாக இருப்பது இதயம்.

இந்த இதயம் மனித உடலில் பாயும் இரத்தத்தைச் சுத்தம் செய்வது. மிக மென்மையானது. மேன்மையானது. இந்த இடப் பகுதியில் இறைவனை நாடி நாடி வைத்துக் கொள்கிறார் சுந்தரர். மாடுவேன் என்றால் பிணைத்துக் கொள்வேன் என்று பொருள். மாட்டுவேன் என்பதன் குறை இதுவாகும். இறைவனின் வன்கை பிடித்து மகிழ்ந்து அவனுடன் பிணைத்துக் கொள்வேன், பிணைத்துக் கொள்வேன். திருவாமாத்தூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனைக் கண்டு நான் ஆடுவேன் ஆடுவேன் என்று மகிழ்ந்து சொல் பெருக்கி ஆடுகிறார் சுந்தரர்.

சுந்தரர் திருவஞ்சைக்களத்தில் பாடி ஆடும் தோற்றம் கண்டு உலகத் தொண்டர்கள் மகிழ்கின்றார்கள்.

"தலைக்குத் தலை மாலை அணிந்தது என்னே 
சடைமேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே
அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்தது என்னே 
அதன் மேல் கதநாகம் கச்சு ஆர்த்தது என்னே
மலைக்கு(ந்) நிகர் ஒப்பன வன் திரைகள் 
வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு
அலைக்கும் கடலங்கரை மேல்மகோதை 
அணியா பொழில் அஞ்சைக்களத்து அப்பனே." 

என்ற இப்பாடல் சுந்தரரின் ஆட்டத்தை சொல் ஆட்டத்துடன் எடுத்துரைக்கின்றது. என்னே என்னே என்று முடியும் இப்பாடல் ஓசையொழுங்கும் பெற்றது. இறைவனை விளிக்கும் வண்ணமுமாக அமைவது. இத்தகைய நிலையில் இறைவனை ஆடியும் பாடியும் கண்டவர் சுந்தரர். இவரது பாடல் உயிர்சக்தி மிக்கது என்பதற்குப் பல சான்றுகள் உண்டு. அவிநாசி என்ற இடத்தில் முதலை உண்ணப்பட்ட ஒரு பாலகனை மீட்டெடுத்தது இவர் பாடலாகும்.

"உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்காடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே."

என்ற இப்பாடலில் இறைவனை முன்வைத்துக் காலனை உயிர்தரச் சொல்லுகின்றார் இதற்கு அடிபணிந்து ஆண்டவனும் காலனும் பிள்ளையைத் தருகின்றனர். சுந்தரரின் தமிழ் இழந்த பிள்ளையின் உயிரைத் தரும் சக்தி மிக்கது. இறையடியார்களை இணைக்கும் பக்தி மிக்கது. இவரின் திருத்தொண்டத்தொகையால் அறுபத்து மூன்று நாயன்மார்கள் இனம் காணப் பெற்றனர். 

ஒற்றை வரியில் இவர் அடியவரை விளித்தாலும் அவ்வரிக்குள் அவ்வடியவரின் தொண்டு முழுவதும் இடம் பெற்றுவிடச் செய்யும் தன்மை இவரின் தமிழுக்கு உண்டு. இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன், தாதை தாள் மழுவினால் எறிந்த அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கு அடியேன் என்ற பாடலடிகளில் அடியவரின் பெயரும் அவர் தொண்டும் வெளிப்பட்டிருக்கும் தன்மை எண்ணி எண்ணி வியக்கத்தக்கது. இறைவனிடத்தில் எது கேட்டாலும் கிடைக்கும் என்ற உறுதியைத் தன் பாடல்களைப் படிக்கும் அன்பர்களுக்கு ஏற்படுத்திச் சென்றுள்ளார் சுந்தரர்.

"பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் 
போகமும் திருவும் புணர்ப்பானைப் 
பின்னை என்பிழையைப் பொறுப்பானைப் 
பிழை எலாம் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்று அறிவு ஒண்ணா 
எம்மானை எளி வந்த பிரானை
அன்னம் வைகும் வயல் பழனத்து 
அணி ஆரூரானை மறக்கலும் ஆமே."

என்ற அவரின் பாடல் பிழை செய்தாலும் பொறுக்கும் எளிவந்த தன்மை பெற்றவன் இறைவன் என்று அறிமுகம் செய்கின்றது. பிழையற்ற வாழ்க்கை வாழ்பவர் யார். எல்லாரும் பிழைத்தே வாழ்கிறோம். இம்மை செய்பிழை, மறுமைப் பிழை, சென்ற பிழை என எல்லாப்பிழைகளையும் தவிர்க்கும் ஒரே புனிதன் இறைவன் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி மனித வாழ்வினை வளமாக்குவது சுந்தரரின் சுந்தரத்தமிழாகும்.

நன்றி Palaniappan M  


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

கண்ணுதலோன் கண் அளித்தான் - திருவாரூர்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ ஏகாம்பரநாதர், ஸ்ரீ தழுவக்குழைந்த நாதர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ ஏலவார்குழலி, ஸ்ரீ காமாட்சியம்மை

திருமுறை : ஏழாம் திருமுறை 095 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்

கண்களில்(வலக்கண்) உள்ள கோளாறு நீங்குவதற்கும் பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும் ஓதவேண்டிய திருப்பதிகம்.


சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரில் சங்கிலியாரை மணம் செய்து கொண்டபோது, திருவொற்றியூர் எல்லையைத் தாண்டுவதில்லை என்று தாம் செய்திருந்த சபதத்தை மறந்து எல்லையைக் கடந்தாராம். அவரது கண்ணொளி மறைந்தது. திருவொற்றியூரிலிருந்து கண் இரண்டும் இழந்து புறப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனார் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதரை "ஆலம் தான் உகந்து" பதிகத்தைப் பாடியபோது, அதில் காமாட்சி அம்மையாரைப் பாராட்டியிருந்ததால், ஈசனுக்கு இடப்பாகம் கொண்டிருந்த காமாட்சி அம்மையார் அருளால் அவருக்கு இடக்கண் பார்வை கிடைத்தது. பல தலங்களில் துதித்துவிட்டுத் திருவாரூரை அடைந்து திருமூலட்டானப் பெருமானை இறைஞ்சி "மீளா அடிமை உமக்கே" பதிகம் பாடியபோது வலக்கண் ஒளியையும் சுந்தரமூர்த்தி நாயனார் பெற்றதாக வரலாறு.

பாடல் எண் : 01
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே 
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் 
வாளாங்கு இருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானிரே, உம்மையன்றிப் பிறரை விரும்பாமலே, உமக்கே என்றும் மீளாத அடிமை செய்கின்ற ஆட்களாகி, அந்நிலையிலே பிறழாதிருக்கும் அடியார்கள், தங்கள் துன்பத்தை வெளியிட விரும்பாது, மூண்டெரியாது கனன்று கொண்டிருக்கின்ற தீயைப்போல, மனத்தினுள்ளே வெதும்பி, தங்கள் வாட்டத்தினை முகத்தாலே பிறர் அறிய நின்று. பின்னர் அத்துன்பம் ஒருகாலைக் கொருகால் மிகுதலால் தாங்க மாட்டாது, அதனை, உம்பால் வந்து வாய் திறந்து சொல்வார்களாயின், நீர் அதனைக் கேட்டும் கேளாததுபோல வாளாவிருப்பீர்; இஃதே நும் இயல்பாயின், நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 02
விற்றுக் கொள்வீர் ஒற்றி அல்லேன் விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை கொத்தை ஆக்கினீர்
எற்றுக்கு அடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் 
மற்றைக் கண் தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
அடிகளே, நீர் என்னைப் பிறருக்கு விற்கவும் உரிமையுடையீர், ஏனெனில், யான் உமக்கு ஒற்றிக் கலம் அல்லேன், உம்மை விரும்பி உமக்கு என்றும் ஆளாதற்றன்மையுட்பட்டேன், பின்னர் யான் குற்றம் ஒன்றும் செய்ததில்லை, இவ்வாறாகவும் என்னை நீர் குருடனாக்கிவிட்டீர், எதன் பொருட்டு என் கண்ணைப் பறித்துக் கொண்டீர்? அதனால் நீர்தாம் பழியுட்பட்டீர். எனக்குப் பழியொன்றில்லை, பன்முறை வேண்டியபின் ஒரு கண்ணைத் தந்தீர்; மற்றொரு கண்ணைத் தர உடன் படாவிடின் நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 03
அன்றில் முட்டாது அடையும் சோலை ஆரூர் அகத்தீரே
கன்று முட்டி உண்ணச் சுரந்த காலியவை போல 
என்றும் முட்டாப் பாடும் அடியார் தங்கண் காணாது 
குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
அன்றிற் பறவைகள் நாள்தோறும் தப்பாது வந்து சேர்கின்ற, சோலையையுடைய திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானிரே, கன்றுகள் முட்டி உண்ணத் தொடங்கிய பின்னே பால் சுரக்கின்ற பசுக்களிடத்தில் பாலை உண்ணும் அக்கன்றுகள் போல, நாள்தோறும் தப்பாது பாடியே உம்மிடத்துப் பயன் பெறுகின்ற அடியார்கள், பலநாள் பாடிய பின்னும் தங்கள் கண் காணப்பெறாது, குன்றின் மேல் முட்டிக் குழியினுள் வீழ்ந்து வருந்துவராயின், நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 04
துருத்தி உறைவீர் பழனம் பதியாச் சோற்றுத்துறை ஆள்வீர்
இருக்கை திருவாரூரே உடையீர் மனமே என வேண்டா
அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் 
வருத்தி வைத்து மறுமைப் பணித்தால் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
இருக்குமிடம் திருவாரூராகவே உடையவரே, நீர் இன்னும், "திருத்துருத்தி, திருப்பழனம்" என்பவைகளையும் ஊராகக் கொண்டு வாழ்வீர், திருச்சோற்றுத்துறையையும் ஆட்சி செய்வீர், ஆதலின் உமக்கு இடம் அடியவரது மனமே எனல் வேண்டா, அதனால் உம்பால் அன்பு மிக்க அடியார்கள், தங்கள் அல்லலை உம்மிடம் வந்து சொன்னால், நீர் அவர்களை இப்பிறப்பில் வருத்தியே வைத்து, மறுபிறப்பிற்றான் நன்மையைச் செய்வதாயின், நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 05
செந்தண் பவளம் திகழுஞ் சோலை இதுவோ திருவாரூர்
எந்தம் அடிகேள் இதுவே ஆமாறு உமக்கு ஆட்பட்டோர்க்குச்
சந்தம் பலவும் பாடும் அடியார் தங்கண் காணாது 
வந்து எம்பெருமான் முறையோ என்றால் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
எங்கள் தலைவரே, இது, செவ்விய தண்ணிய பவளம் போலும் இந்திரகோபங்கள் விளங்குகின்ற சோலையையுடைய திருவாரூர் தானோ? நன்கு காண இயலாமையால் இதனைத் தெளிகின்றிலேன், உமக்கு அடிமைப்பட்டோர்க்கு உண்டாகும் பயன், இது தானோ? இசை வண்ணங்கள் பலவும் அமைந்த பாடலால் உம்மைப் பாடுகின்ற அடியார்கள், தங்கள் கண் காணப்பெறாது, உம்பால் வந்து, "எம்பெருமானே முறையோ" என்று சொல்லி நிற்றல் ஒன்றே உளதாகுமானால், நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 06
தினைத்தாள் அன்ன செங்கால் நாரை சேரும் திருவாரூர்ப்
புனத்தார் கொன்றைப் பொன்போல் மாலைப் புரிபுன் சடையீரே
தனத்தால் இன்றி தாம்தாம் மெலிந்து தங்கண் காணாது 
மனத்தால் வாடி அடியார் இருந்தால் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
தினையது தாள்போலும் சிவந்த கால்களையுடைய நாரைகள் திரளுகின்ற திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற, முல்லை நிலத்தில் உள்ள கொன்றையினது மலரால் ஆகிய பொன்மாலை போலும் மாலையை அணிந்த, திரிக்கப்பட்ட புல்லிய சடையையுடையவரே, உம் அடியவர், தாம் பொருளில்லாமையால் இன்றி, தங்கள் கண் காணப்பெறாது வருந்தி, மனத்தினுள்ளே வாட்ட முற்றிருப்பதானால், நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 07
ஆயம் பேடை அடையும் சோலை ஆரூர் அகத்தீரே 
ஏயெம் பெருமான் இதுவே ஆமாறு உமக்கு ஆட்பட்டோர்க்கு
மாயம் காட்டிப் பிறவி காட்டி மறவா மனம் காட்டிக்
காயம் காட்டிக் கண்ணீர் கொண்டால் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
ஆண் பறவைக் கூட்டம், பெண்ப றவைக் கூட்டத்துடன் வந்து சேர்கின்ற சோலையையுடைய திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்றவரே, எங்களுக்குப் பொருந்திய பெருமானிரே, உமக்கு அடிமைப்பட்டோர்க்கு உண்டாகும் பயன் இதுதானோ? நீர் எனக்கு உம்மை மறவாத மனத்தைக் கொடுத்து, பின்பு ஒரு மாயத்தை உண்டாக்கி, அது காரணமாகப் பிறவியிற் செலுத்தி, உடம்பைக் கொடுத்து, இப்போது கண்ணைப் பறித்துக்கொண்டால், நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 08
கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க் கலந்த சொல்லாகி 
இழியாக் குலத்தில் பிறந்தோம் உம்மை இகழாது ஏத்துவோம்
பழிதான் ஆவது அறியீர் அடிகேள் பாடும் பத்தரோம்
வழிதான் காணாது அலமந்து இருந்தால் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
அடிகளே, யாங்கள் இழிவில்லாத உயர் குலத்திலே பிறந்தோம், அதற்கேற்ப உம்மை இகழ்தல் இன்றி, நீர், கழியும், கடலும், மரக்கலமும் நிலமுமாய்க் கலந்து நின்ற தன்மையைச் சொல்லும் சொற்களையுடையேமாய்த் துதிப்போம், அவ்வாறாகலின், எம்மை வருத்துதலால் உமக்குப் பழி உண்டாதலை நினையீர், அதனால், உம்மைப்பாடும் அடியேமாகிய யாங்கள், வழியைக் காண மாட்டாது அலைந்து வாழ்வதாயின், நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 09
பேயோடேனும் பிரிவு ஒன்று இன்னாது என்பர் பிறரெல்லாம்
காய் தான் வேண்டில் கனிதான் அன்றோ கருதிக் கொண்டக்கால்
நாய் தான் போல நடுவே திரிந்தும் உமக்கு ஆட்பட்டோர்க்கு 
வாய் தான் திறவீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானிரே, விரும்பப்பட்டது காயே எனினும், விரும்பிக் கைக் கொண்டால், அது கனியோடொப்பதேயன்றோ? அதனால் உம்மைத் தவிரப் பிறரெல்லாம், பேயோடு நட்புச் செய்யினும், பிரிவு என்பதொன்று துன்பந்தருவதே என்று சொல்லி, அதனைப் பிரிய ஒருப்படார், ஆனால், நீரோ, உமது திருவோலக்கத்தின் நடுவே நாய் போல முறையிட்டுத் திரிந்தாலும், உமக்கு ஆட்பட்டவர்கட்கு, வாய் திறந்து ஒருசொல் சொல்லமாட்டீர், இதுவே உமது நட்புத் தன்மையாயின், நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 10
செருந்தி செம்பொன் மலரும் சோலை இதுவோ திருவாரூர்
பொருந்தித் திருமூலட்டானம்மே இடமாக் கொண்டீரே
இருந்தும் நின்றும் கிடந்தும் உம்மை இகழாது ஏத்துவோம் 
வருந்தி வந்தும் உமக்கு ஒன்று உரைத்தால் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
திருமூலட்டானத்தையே பொருந்தி இடமாகக் கொண்டவரே, இது செருந்தி மரங்கள் தமது மலர்களாகிய செம்பொன்னை மலர்கின்ற திருவாரூர் தானோ? இருத்தல், நிற்றல், கிடத்தல் முதலிய எல்லா நிலைகளினும் உம்மை இகழாது துதிப்பேமாகிய யாம், உம்பால் வருத்தமுற்று வந்து, ஒரு குறையை வாய் விட்டுச் சொன்னாலும், நீர் வாய் திறவாதிருப்பிராயின், நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 11
காரூர் கண்டத்து எண்தோள் முக்கண் கலைகள் பலவாகி
ஆரூர்த் திருமூலட்டானத்தே அடிப்பேர் ஆரூரன்
பாரூர் அறிய என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் 
வாரூர் முலையாள் பாகம் கொண்டீர் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
பல நூல்களும் ஆகி, கருமை மிக்க கண்டத்தையும், எட்டுத் தோள்களையும், மூன்று கண்களையும் உடைய, திருவாரூர்த் திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்ற கச்சுப் பொருந்திய தனங்களையுடையவளாகிய உமாதேவியது பாகத்தைக் கொண்டவரே, இவ்வுலகில் உள்ள ஊரெல்லாம் அறிய, நீர், உமது திருவடிப் பெயரைப்பெற்ற நம்பியாரூரனாகிய எனது கண்ணைப் பறித்துக் கொண்டீர், அதனால் நீர் தாம் பழியுட்பட்டீர், இனி நீர் இனிது வாழ்ந்து போமின்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கண்ணுதலோன் கண் அளித்தான் - திருக்கச்சியேகம்பம்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ ஏகாம்பரநாதர், ஸ்ரீ தழுவக்குழைந்த நாதர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ ஏலவார்குழலி, ஸ்ரீ காமாட்சியம்மை

திருமுறை : ஏழாம் திருமுறை 061 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்

கண்களில்(இடக்கண்) உள்ள கோளாறு நீங்குவதற்கும் பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும் ஓதவேண்டிய திருப்பதிகம்.


வன்தொண்டராம் சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மகிழ மரத்தடியில் "உன்னைப் பிரியேன்" என்று சத்தியம் செய்து கொடுத்து திருமணம் செய்து கொண்டார். சிவபெருமானை சாட்சியாக வைத்து திருமணம் செய்து கொண்டு பின் திருவாரூர் செல்வதற்காக சங்கிலி நாச்சியாரைப் பிரிந்து திருவொற்றியூரில் இருந்து சத்தியத்தை மீறி புறப்பட்டதால் சுந்தரர் தனது இரு கண் பார்வையும் இழந்தார். அப்படி பார்வை இழந்த கண்களில் இடக்கண் பார்வையை சுந்தரர் காஞ்சீபுரம் தலத்தில் பதிகம் பாடி பெற்றார். பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "காணக் கண் அடியேன் பெற்றவாறே" என்று உள்ளம் உருகிப் பாடியுள்ளார். நல்ல தமிழ்ப் பாடலாகிய இக்கதிகத்திலுள்ள 10 பாடலகளையும் பாட வல்லவர் நன்னெறியால் பெறும் உலகத்தைத் திண்ணமாக அடைவர் என்றும் குறிப்பிடுகிறார்.

ஒருமுறை பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடிவிட்டார். இதன் காரணமாக எல்லா உலகங்களும் இருளில் மூழ்கின. உடனே சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து இருள் அகற்றினார். அம்பிகை விளையாட்டாக கண்களை மூடினாலும் அதனால் எல்லா ஜீவராசிகளுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்காக பூவுலகிற்குச் சென்று பிராயச்சித்தமாக தன்னை நோக்கி தவம் இயற்றுமாறு அம்பிகையைப் பணித்தார். அம்பிகையும் இந்த பூவுலகிற்கு வந்து புனித தலமான இந்த காஞ்சீபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கிப் பூஜித்து வந்தார். அம்பிகை பார்வதியின் தவப் பெருமையை உலகிற்கு உணர்த்த சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படி செய்தார். 

வெள்ளத்தில் மணல் லிங்கம் அடித்துச் செல்லாதபடி அம்பிகை லிங்கத்தை தழுவி கட்டிக்கொண்டார். அவ்வாறு உமையம்மை தழுவிய போது இறைவன் தன் திருமேனியில் அம்பிகையின் வளைத் தழும்பும் முலைச் சுவடும் ஏற்றுத் தழுவக் குழைந்தார். இவ்வாறு இறைவி இறைவனை வழிபட்ட இந்த வரலாறு திருக் குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்திலும், காஞ்சிப் புராணத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் இறைவனுக்குத் தழுவக் குழைந்த நாதர் என்றும் பெயர். இவ்வாறு அம்பிகை இறைவனைக் கட்டி தழுவிக் கொண்டதை சுந்தரர் தனது பதிகத்தில் (71வது பதிகம் - 10வது பாடல்) அழகாக குறிப்பிடுகிறார்.

பாடல் எண் : 01
ஆலந்தான் உகந்து அமுது செய்தானை 
ஆதியை அமரர் தொழுது ஏத்தும் 
சீலந்தான் பெரிதும் உடையானைச் 
சிந்திப்பார் அவர் சிந்தை உளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை 
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற 
கால காலனைக் கம்பன் எம்மானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பொருளுரை:
நஞ்சினைத் தான் விரும்பி உண்டு, அமுதத்தைத் தேவர்களுக்கு உரியதாக்கியவனும், யாவர்க்கும் முதல்வனும், தேவர்கள் வணங்கித் துதிக்கின்ற பெருமையை மிக உடையவனும், தன்னை நினைப்பவரது நினைவில் விளங்குபவனும், மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலையுடையவளாகிய "உமை" என்னும் நங்கை தான் எந்நாளும் துதித்து வழிபடுதலைப் பெற்றமைக்கு முதல்வனும், காலகாலனும் ஆகிய திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு வியப்பு!.


பாடல் எண் : 02
உற்றவர்க்கு உதவும் பெருமானை 
ஊர்வது ஒன்று உடையான் உம்பர் கோனைப்
பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னைப் 
பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை
அற்றமில் புகழாள் உமை நங்கை 
ஆதரித்து வழிபடப் பெற்ற 
கற்றை வார்சடைக் கம்பன் எம்மானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே

பொருளுரை:
தன்னைப் புகலிடமாக அடைந்தவர்க்கு நலம் செய்கின்ற பெருமானும், ஊர்தி எருதாகிய ஒன்றை உடையவனும், தேவர்கட்குத் தலைவனும், தன்னை விடாது பற்றினவர்க்கு, பெரிய பற்றுக் கோடாய் நிற்பவனும், தன்னை நினைப்பவரது மனத்தில் பரவி நின்று, அதனைத் தன் இடமாகக் கொண்டவனும் ஆகிய அழிவில்லாத புகழையுடையவளாகிய "உமை" என்னும் நங்கை விரும்பி வழிபடப் பெற்ற, கற்றையான நீண்ட சடையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு வியப்பு!.


பாடல் எண் : 03
திரியும் முப்புரம் தீப்பிழம்பாகச்
செங்கண் மால்விடைமேல் திகழ்வானைக் 
கரியின் ஈருரி போர்த்து உகந்தானைக் 
காமனைக் கனலா விழித்தானை
வரிகொள் வெள்வளையாள் உமை நங்கை 
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற 
பெரிய கம்பனை எங்கள் பிரானை 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பொருளுரை:
வானத்தில் திரிகின்ற முப்புரங்கள் தீப்பிழம்பாய் எரிந்தொழியுமாறு செய்து, அக்காலை சிவந்த கண்களையுடைய திருமாலாகிய விடையின்மேல் விளங்கியவனும், யானையின் உரித்த தோலை விரும்பிப் போர்த்தவனும், மன்மதனைத் தீயாய் எரியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்தவனும், வரிகளைக் கொண்ட வெள்ளிய வளைகளை அணிந்தவளாகிய "உமை" என்னும் நங்கை அணுகி நின்று, துதித்து வழிபடப் பெற்ற பெரியோனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள பெருமானைக் காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு வியப்பு!.


பாடல் எண் : 04
குண்டலம் திகழ் காதுடையானைக் 
கூற்று உதைத்த கொடுந்தொழிலானை
வண்டலம் பும்மலர்க் கொன்றையினானை 
வாளராமதி சேர் சடையானைக்
கெண்டையந் தடங்கண் உமை நங்கை 
கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற 
கண்டம் நஞ்சுடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பொருளுரை:
குண்டலம் விளங்குகின்ற காதினையுடையவனும், கூற்றுவனை உதைத்துக் கொன்ற கொடுமையான தொழிலை உடையவனும், வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனும், கொலைத் தொழிலையுடைய பாம்பு பிறையைச் சேர்ந்து வாழும் சடையை உடையவனும் ஆகிய, கெண்டைமீன் போலும் பெரிய கண்களையுடைய "உமை" என்னும் நங்கை அணுகி நின்று, துதித்து வழிபடப் பெற்ற, கண்டத்தில் நஞ்சினையுடைய திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு வியப்பு!.


பாடல் எண் : 05
வெல்லும் வெண்மழு ஒன்று உடையானை 
வேலை நஞ்சு உண்ட வித்தகன் தன்னை
அல்லல் தீர்த்து அருள்செய்ய வல்லானை 
அருமறை அவை அங்கம் வல்லானை
எல்லையில் புகழாள் உமை நங்கை 
என்று ஏத்தி வழிபடப் பெற்ற 
நல்ல கம்பனை எங்கள் பிரானை 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பொருளுரை:
யாவரையும் வெல்லும் தன்மையுடைய, வெள்ளிய மழு ஒன்றை உடையவனும், கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட சதுரப்பாடுடையவனும், அடியார்களுக்குத் துன்பங்களைப் போக்கி அருள்செய்ய வல்லவனும், அரிய வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் செய்ய வல்லவனும் ஆகிய, அளவற்ற புகழை உடையவளாகிய "உமை" என்னும் நங்கை எந்நாளும் துதித்து வழி படப்பெற்ற, நன்மையையுடைய திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு வியப்பு!.


பாடல் எண் : 06
திங்கள் தங்கிய சடை உடையானைத் 
தேவ தேவனைச் செழுங்கடல் வளரும் 
சங்க வெண்குழைக் காது உடையானைச் 
சாம வேதம் பெரிது உகப்பானை
மங்கை நங்கை மலைமகள் 
கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற 
கங்கையாளனைக் கம்பன் எம்மானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பொருளுரை:
பிறை தங்கியுள்ள சடையையுடையவனும், தேவர்க்குத் தேவனும், வளவிய கடலில் வளர்கின்ற சங்கினால் இயன்ற, வெள்ளிய குழையை அணிந்த காதினையுடையவனும், சாம வேதத்தை மிக விரும்புபவனும் ஆகிய, என்றும் மங்கைப் பருவம் உடைய நங்கையாகிய மலைமகள் தவத்தாற் கண்டு அணுகி, துதித்து வழிபடப்பெற்ற, கங்கையை அணிந்த, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு, வியப்பு!.


பாடல் எண் : 07
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை 
வேதம் தான் விரித்து ஓத வல்லானை 
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை 
நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை 
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற 
கண்ணு மூன்றுடைக் கம்பன் எம்மானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பொருளுரை:
தேவர்கள் தொழுது துதிக்க இருப்பவனும், வேதங்களை விரித்துச் செய்ய வல்லவனும், தன்னை அடைந்தவர்கட்கு எந்நாளும் நலத்தையே செய்பவனும், நாள்தோறும் நாம் விரும்புகின்ற தலைவனும் ஆகிய, எண்ணில்லாத பழையவான புகழை உடையவளாகிய "உமை" என்னும் நங்கை எந்நாளும் துதித்து வழிபடப் பெற்ற, கண்களும் மூன்று உடைய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு, அடியேன் கண் பெற்றவாறு, வியப்பு!.


பாடல் எண் : 08
சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள் 
சிந்தையில் திகழும் சிவன் தன்னைப்
பந்தித்த வினைப்பற்று அறுப்பானைப் 
பாலொடு ஆனஞ்சும் ஆட்டு உகந்தானை
அந்தமில் புகழாள் உமை நங்கை 
ஆதரித்து வழிபடப் பெற்ற 
கந்த வார்சடைக் கம்பன் எம்மானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பொருளுரை:
நாள்தோறும் தன்னையே சிந்தித்து, துயிலெழுங் காலத்துத் தன்னையே நினைத்து எழுவார்களது உள்ளத்தில் விளங்குகின்ற மங்கலப் பொருளானவனும், உயிர்களைப் பிணித்துள்ள வினைத் தொடக்கை அறுப்பவனும், பால் முதலிய ஆனஞ்சும் ஆடுதலை விரும்பியவனும் ஆகிய, முடிவில்லாத புகழையுடையவளாகிய "உமை" என்னும் நங்கை விரும்பி வழிபடப்பெற்ற, கொன்றை முதலிய பூக்களின் மணத்தையுடைய, நீண்ட சடையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு, வியப்பு!.


பாடல் எண் : 09
வரங்கள் பெற்று உழல் வாளரக்கர் தம் 
வாலிய புரமூன்று எரித்தானை
நிரம்பிய தக்கன் தன்பெரு வேள்வி 
நிரந்தரம் செய்த நிர்க்கண்டகனைப்
பரந்த தொல்புகழாள் உமை நங்கை 
பரவி ஏத்தி வழிபடப் பெற்ற 
கரங்கள் எட்டுடைக் கம்பன் எம்மானை 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பொருளுரை:
தவத்தின் பயனாகிய வரங்களைப் பெற்றமையால், வானத்தில் உலாவும் ஆற்றலைப் பெற்ற கொடிய அசுரர்களது வலிய அரண்கள் மூன்றினை எரித்தவனும், தேவர் எல்லாரும் நிரம்பிய தக்கனது பெருவேள்வியை அழித்த வன்கண்மையுடையவனும் ஆகிய பரவிய, பழைய புகழையுடையவளாகிய "உமை" என்னும் நங்கை முன்னிலையாகவும், படர்க்கையாகவும் துதித்து வழிபடப் பெற்ற, எட்டுக் கைகளையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு, வியப்பு!.


பாடல் எண் : 10
எள்கல் இன்றி இமையவர் கோனை 
ஈசனை வழிபாடு செய்வாள் போல் 
உள்ளத்து உள்கி உகந்து உமை நங்கை 
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளம் காட்டி வெருட்டிட அஞ்சி 
வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட 
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பொருளுரை:
தேவர் பெருமானாகிய சிவபெருமானை, அவனது ஒரு கூறாகிய உமாதேவி தானே தான் வழிபடவேண்டுவது இல்லை என்று இகழ்தல் செய்யாது வழிபட விரும்பி, ஏனை வழிபாடு செய்வாருள் ஒருத்தி போலவே நின்று, முன்னர் உள்ளத்துள்ளே நினைந்து செய்யும் வழிபாட்டினை முடித்து, பின்பு, புறத்தே வழிபடச் சென்று, அவ்வழிபாட்டில் தலைப்பட்டு நின்ற முறைமையைக் கண்டு, தான் அவ்விடத்துக் கம்பையாற்றின்கண் பெருவெள்ளத்தைத் தோற்றுவித்து வெருட்ட, வஞ்சிக்கொடி போல்பவளாகிய அவள் அஞ்சி ஓடித் தன்னைத் தழுவிக்கொள்ள, அதன்பின் அவள்முன் வெளிப்பட்டு நின்ற கள்வனாகிய, திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு, வியப்பு!.


பாடல் எண் : 11
பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானைப் 
பெரிய எம்பெருமான் என்று எப்போதும் 
கற்றவர் பரவப்படுவானைக் 
காணக் கண் அடியேன் பெற்றது என்று 
கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானைக் 
குளிர் பொழில் திருநாவல் ஆரூரன் 
நற்றமிழ்வை ஈரைந்தும் வல்லார் 
நன்நெறி உலகு எய்துவர் தாமே.

பொருளுரை:
குளிர்ந்த சோலைகளையுடைய திருநாவலூரனாகிய நம்பியாரூரன், ஆனேற்றை விரும்பி ஏற வல்லவனும், மெய்ந் நூல்களைக் கற்றவர்கள் "இவன் எம் பெரிய பெருமான்" என்று எப்போதும் மறவாது துதிக்கப்படுபவனும், யாவர்க்கும் தலைவனும், கூத்தாடுதலை உடையவனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன், கண் பெற்றவாறு வியப்பு என்று சொல்லிப் பாடிய நல்ல தமிழ்ப் பாடலாகிய இவை பத்தினையும் பாட வல்லவர். நன்னெறியாற் பெறும் உலகத்தைத் திண்ணமாக அடைவர்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

அற்புதம் நிகழ்த்திய அவிநாசியப்பர்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ அவிநாசியப்பர், ஸ்ரீ பெருங்கேடிலியப்பர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ கருணாம்பிகை, ஸ்ரீ பெருங்கருணை நாயகி

திருமுறை : ஏழாம் திருமுறை 092 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்

துன்பங்களை நாசம் செய்தருளும் பெருங்கேடிலியப்பராக அவிநாசியப்பர் என்னும் திருநாமத்தோடு ஐயனும், அரவணைத்துப் பாதுகாக்கும் பெருங்கருணை நாயகியாக கருணாம்பிகை என்னும் திருநாமத்தோடு அம்மையும் காட்சி கொடுக்கும் திருத்தலமான அவிநாசியில், பிள்ளையை இழந்து தவித்த பெற்றோரின் துயரத்தைப் போக்கி, அவர்களுக்குப் பிள்ளையை மீட்டுத் தந்த அற்புதத்தை நிகழ்த்திய பாடலும் இதுவேயாகும். 


"உன்னைப் போற்றிப் பேசுபவர்களுடைய போற்றுதல்களில் உறைபவனே, என்றும் உன்னை நினைப்பவர்களின் தலைமீது வசிப்பவனே, படமெடுத்தாடும் பாம்பை இடையில் அணிந்தவனே, முதலும் முடிவும் ஆனவனே, முல்லை நிலங்களும் சோலைகளும் சூழ்ந்த திருப்புக்கொளியூர் என்னும் திருத்தலத்தில் அவிநாசித் திருக்கோயிலில் அவிநாசியப்பராக எழுந்தருளியவனே, முதலையையும் யமனையும் குளக்கரையில் விழுங்கிய பிள்ளையைத் தரச் சொல்லு" என்று இரக்கமும் இறைஞ்சுதலும் சினமும் சீற்றமும் கலந்ததாக சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியருளிய திருப்பாட்டும் இது.

சுந்தரர் திருவாரூரிலிருந்து சேரநாட்டுக்குப் புறப்பட்டார். வழியில் கொங்கு நாட்டுத் தலங்களை தரிசித்துக் கொண்டே சென்றார். திருப்புக்கொளியூர் என்று அந்நாட்களில் அழைக்கப்பெற்ற அவிநாசியை அவர் அடைந்து ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பக்கம் இனிய மங்கலவொலி கேட்டது; மற்றொரு பக்கம் அழுகுரல் கேட்டது. இரண்டு ஒலிகளும் கலந்தொலிக்க, சுந்தரரும் அவை குறித்து விசாரித்தார். அந்த வீதியில் கங்காதரன் என்றொரு அந்தணர் வாழ்ந்து வந்தார். நெடுநாட்கள் பிள்ளையின்றிப் பின்னர் மகன் பிறக்க, அவனுக்கு அவிநாசி லிங்கம் என்றே பெயர் சூட்டி வளர்த்தனர். 

அந்த பாலகனுக்கு ஐந்து வயதாகையில் அதே வயதுக்குரிய எதிர்வீட்டுப் பிள்ளையோடு ஆற்றுப்பகுதிக்கு விளையாடச் சென்றான். சிறிது நேரத்துக்குப் பின், ஆற்று முதலை அவிநாசி லிங்கத்தைப் பிடித்து விழுங்கிவிட்டது. எதிர்வீட்டுச் சிறுவன் அழுது கொண்டே வர, பெரியவர்கள் ஓடிப்போய் ஆற்றுப் பகுதியில் தேட, கரையிலிருந்து பார்க்கும்போது முதலையின் சுவடு தெரியவில்லை. எங்கே அது பதுங்கியிருந்தது என்றும் புரியவில்லை. கங்காதரனும் அவர்தம் மனைவியும் ஆற்றில் இறங்க முற்பட்டபோது, மற்றவர்கள் தடுத்துவிட்டனர். 

நாட்கள் நகர்ந்து ஆண்டுகளும் ஓடிவிட்டன. இப்போது, மூன்றாண்டுகளுக்குப் பின்னர் எதிர் வீட்டுச் சிறுவனுக்கு உபநயனம். அந்த வீட்டில் மங்கல இசை முழங்குகிறது. தங்கள் பிள்ளையும் உயிருடன் இருந்திருந்தால் அவனுக்கும் பூணூல் கல்யாணம் செய்திருப்போமே என்கிற ஆற்றாமையில் கங்காதரன் வீட்டில் அழுகுரல். இரண்டும் கலந்து சுந்தரர் திருச்செவிகளில் ஒலித்தன. 

விஷயத்தை சுந்தரர் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே அவருடைய வருகையை அறிந்த கங்காதரனும் அவருடைய மனைவியும் அங்கு வந்தனர்; தம்பிரான் தோழரைத் தொழுதனர். ஊரார் அடையாளம் காட்ட, "உங்கள் பிள்ளையா ஆற்று முதலையால் அநியாயமாக விழுங்கப்பட்டவன்?’"என்று வினவினார். "இறைவன் விளையாட்டு! என்ன செய்வது?" என்று மனம் தேறி விடை தந்தனர் பெற்றோர். "அந்தப் பிள்ளையை மீட்காமல் அவிநாசியப்பரைத் தொழேன்" என்று உறுதிகொண்ட சுந்தரர், "வாருங்கள், அவன் விழுந்த இடத்தைக் காட்டுங்கள்" என்று அனைவரையும் அழைத்தார். 

பாலகர்கள் விளையாடிய இடத்தை அடைந்த சுந்தரர் இறைவனாரைத் தொழுது பாடத் தொடங்கினார். "நீரில் விளையாடிய பிள்ளையின் தவறென்ன?" என்கிற தொனியில் பாடியவர், பதிகத்தின் நான்காம் பாடலில், "கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே" என்று ஆணையிட்டார். 

சுந்தரர் ஆணையைச் சிவனார் மீறுவாரா? காலதேவனான யமனுக்கு எப்படி ஆணை போயிற்றோ தெரியாது. காலன் தனதுலகிலிருந்து அப்பிள்ளையை ஆற்று முதலையின் உடலுக்குள் புகுத்தினானாம். சுந்தரரும் பிறரும் நின்ற கரையின் பக்கம் சர்வ சாதுவாக ஒதுங்கிய முதலை பாலகனைத் தனது வாயிலிருந்து உமிழ்ந்தது. என்ன அதிசயம்! பிள்ளை உயிருடன் வந்தான் என்பது மட்டுமில்லை; இடைப்பட்ட ஆண்டுகளின் வளர்ச்சி குன்றாமல், பொலிந்த தோற்றத்தோடு வெளிப்பட்டான். 

பிள்ளை மீண்டும் கிடைத்ததால், புத்தொளி பெற்ற பெற்றோரையும், முதலை வாய் மீண்ட அப்பிள்ளையையும் அழைத்துக் கொண்டு, அவிநாசியப்பரைத் தரிசித்த சுந்தரர் அடுத்த நாள், அந்தப் பிள்ளைக்கும் உபநயனம் செய்து வைத்தார். 

இந்தப் பாடலில் சுந்தரர் வாக்கு அலாதியானது. முதலையை மட்டுமல்லாமல் காலனையும் சேர்த்துச் சொல்லி, இருவரையும் பிள்ளையைத் தரச் சொல்லு என்று சிவபெருமானுக்கு ஆணையிடுகிறார். முதலை தானே பிள்ளையை விழுங்கியது, யமனைக் கூறுவானேன் என்று வினவலாம். என்னதான் முதலை விழுங்கினாலும், உயிரைக் கொண்டுபோய் யமனிடம் தானே சேர்த்திருப்பான்! கிருஷ்ணாவதாரத்திலும் இப்படியொரு சம்பவம் உண்டு. சாந்தீபனியின் பிள்ளை கடலில் மாய்ந்துபோக, அவனை மீட்டுத் தரும்படி குருபத்தினி கிருஷ்ணரிடம் கேட்கிறாள். 

கடலுக்குள் கிடக்கும் பஞ்சஜனன் என்னும் சங்கு வடிவ அரக்கன் அப்பிள்ளையை விழுங்கினான் என்பதால் அவனிடம் கிருஷ்ணர் போரிட, அவனோ அப்பிள்ளையை யமலோகத்தில் விட்டு விட்டேன் என்று கூற, பின்னர் யமனிடம் சொல்லி அப்பிள்ளையை கிருஷ்ணர் வரவழைத்தார். இரண்டு முறை தனித்தனியாகப் போராடுவானேன் என்றெண்ணிய சுந்தரர், ஒற்றை வரியில் ஒட்டுமொத்தமாக ஆணையிட்டுவிட்டார் போலும்!! விழுங்கிய முதலை உடலைத் தர, யமன் உயிரைத் தர, சிவனாரன்றோ அருள்தர வேண்டும்? ஆகவே, ஆணை முதலைக்கும் யமனுக்கும் மாத்திரமில்லை; சிவனாருக்கும் சேர்த்துத்தான்!.

அடியாரின் அன்பு, எத்தகையவற்றையெல்லாம் சாதித்துக் கொடுக்கும் என்பதற்கான சான்று அவிநாசி திருத்தலம்! பழைய காலங்களில், இவ்வூருக்குப் புக்கொளியூர் நத்தம் என்றே பெயர். அவிநாசி என்பது ஆலயத்திற்கும் அதைச் சுற்றிய பகுதிகளுக்கும் வழங்கப்பட்ட பெயர். இப்போது ஆறு பாயவில்லையென்றாலும், சிறிய ஏரி காணப்படுகிறது. முதலை மடு என்றே பெயர். சுந்தரர் காலத்தில் இங்கே ஆறோடி, பின்னர் திசைமாறி, ஏரியாக மட்டுமே தங்கிவிட்டது. உயிர்களுக்கு உய்வு தருகிற தலமாதலால், தட்சிண காசி என்றும் பெயர். இரண்டு அம்பாள்கள் அருள்புரியும் இங்கு, தலமரமான பாதிரியின் அடியில் அம்பாள் தவமிருக்கிறாள். ஆகவே, பாதிரிமர அம்பாளைத் தரிசித்த பின்னரே சுவாமியைத் தரிசிப்பது இங்கு முறை. 

பாதிரி மரம் சித்திரைப் பெருவிழாவின்போது மட்டுமே பூக்கும் சுவாமிக்கு, தன்னுடைய மலர்களைக் காணிக்கையாக்குவதாக ஐதிகம். இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் கால பைரவர் வெகு விசேஷமானவர்; காசி பைரவரின் மூத்த சகோதரராகக் கருதப்படும் இவருக்கு வடைமாலை சாத்துவது வெகு சிறப்பு. எதிரிகள் தொல்லை நீங்கும். 

பங்குனி உத்திர விழாவின்போது, முதலையுண்ட பாலகனைச் சுந்தரர் மீட்கும் காட்சியும் அவனுக்கான உபநயன திருக்கல்யாணக் காட்சியும் நிகழ்த்தப் பெறுகின்றன. "காசியில் வாசி அவிநாசி" என்பார்கள். காசியில் வழிபட முடியவில்லையென்றால் அவிநாசியில் வழிபட்டால் போதும்; அங்கு கிட்டுவதில் பாதிக்குக் குறையாமல் இங்கு கிட்டும் என்பது பொருள். அவிநாசியப்பரை அணுகுவோம்; அகலா அருள் பெறுவோம்.

நன்றி : Hindu Spritual Articles


பாடல் எண் : 01
எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே
உற்றாய் என்று உன்னையே உள்குகின்றேன் உணர்ந்து உள்ளத்தால்
புற்றாட அரவா புக்கொளியூர் அவிநாசியே 
பற்றாக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே.

பொருளுரை:
புற்றின்கண் வாழ்கின்ற படமெடுத்து ஆடுகின்ற பாம்பை அணிந்தவனே, உயிர்களுக்கெல்லாம் தலைவனே, மேலான இடத்தில் உள்ளவனே, திருப்புக்கொளியூரில் உள்ள "அவினாசி" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, ஏழு பிறப்பிலும் எமக்குத் தலைவனாய் உள்ள உன்னையே எனக்கு உறவினன் என்று உணர்ந்து, மனத்தால் நினைக்கின்றேன்; உன்னையே எனக்குப் பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்வேன்; உன்னை எக்காரணத்தால் மறப்பேன்!.


பாடல் எண் : 02
வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாமணி நீ
ஒழிவது அழகோ சொல்லாய் அருளோங்கு சடையானே
பொழிலாரும் சோலைப் புக்கொளியூரில் குளத்திடை
இழியாக் குளித்த மாணி என்னைக் கிறி செய்ததே.

பொருளுரை:
அருள்மிக்க தவக்கோலத்தையுடையவனே! பெருமரப் பொழில்களையும், நிறைந்த இளமரக்காக்களையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள குளத்தின்கண் இறங்கிக் குளித்த அந்தணச் சிறுவன் செய்த குற்றம் யாது? உன்னை வணங்கச் செல்பவர்களுடன் வந்து உடன் சேர்ந்த அச்சிறுவன், உன் திருமுன்னே இறந்து போவது உனக்குப் பொருந்துவதோ? நீ சொல்லாய்.


பாடல் எண் : 03
எங்கேனும் போகினும் எம்பெருமானை நினைந்தக்கால்
கொங்கே புகினும் கூறைகொண்டு ஆறலைப்பார் இல்லை
பொங்காடு அரவா புக்கொளியூர் அவிநாசியே
எங்கோனே உனை வேண்டிக் கொள்வேன் பிறவாமையே.

பொருளுரை:
மிகுதியான ஆடுகின்ற பாம்பை அணிந்தவனே, திருப்புக்கொளியூரில் உள்ள "அவினாசி" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, எங்கள் தலைவனே, எம்பெருமானாகிய உன்னை நினைத்தால், கொங்கு நாட்டிலே புகுந்தாலும், மற்றும் எங்கேனும் சென்றாலும், என்னை ஆறலைத்துக் கூறையைப் பறித்துக்கொள்பவர் இலராவர்; ஆகவே, உன்னிடம் நான் பிறவாமை ஒன்றையே வேண்டிக் கொள்வேன்.


பாடல் எண் : 04
உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்காடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.

பொருளுரை:
உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே, உன்னை எஞ்ஞான்றும் மறவாது நினைக்க வல்லவரது தலைமேல் இருப்பவனே, அரையின்கண் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே, எல்லாப் பொருட்கும் முதலும் முடிவுமானவனே, சிறந்த முல்லை நிலத்தையும், சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள "அவினாசி" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, கூற்றுவனையும் முதலையையும், இக்குளக்கரைக்கண் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள்.


பாடல் எண் : 05
அரங்காவது எல்லாம் மாயிடு காடது அன்றியும் 
சரங்கோலை வாங்கி வரிசிலை நாணியில் சந்தித்துப் 
புரங்கோட எய்தாய் புக்கொளியூர் அவிநாசியே
குரங்காடு சோலைக் கோயில் கொண்ட குழைக்காதனே.

பொருளுரை:
திருப்புக்கொளியூரில் உள்ள, குரங்குகள் குதித்து ஆடுகின்ற சோலையையுடைய "அவினாசி" என்னும் திருக்கோயிலை இடமாகக்கொண்ட, குழையை அணிந்த காதினை உடையவனே, உனக்கு நடனமாடும் இடமாய் இருப்பது, எல்லாரும் அழிகின்ற முதுகாடு; அதுவன்றியும், நீ அம்பை எடுத்து வரிந்த வில்லில் உள்ள நாணியில் தொடுத்து மூன்று ஊர்கள் அழிய அழித்தாய்.


பாடல் எண் : 06
நாத்தானும் உனைப் பாடல் அன்று நவிலாது எனா 
சோத்தென்று தேவர் தொழநின்ற சுந்தரச் சோதியாய்
பூத்தாழ் சடையாய் புக்கொளியூர் அவிநாசியே 
கூத்தா உனக்கு நான் ஆட்பட்ட குற்றமும் குற்றமே.

பொருளுரை:
எங்கள் நாவும் உன்னைப் பாடுதலன்றி வேறொன்றைச் சொல்லாது என்றும், உனக்கு வணக்கம் என்றும் சொல்லித் தேவர்கள் வணங்க நிற்கின்ற அழகிய ஒளிவடிவாய் உள்ளவனே, பூவையணிந்த, நீண்ட சடையை உடையவனே, நடனம் ஆடுபவனே, திருப்புக்கொளியூரில் உள்ள "அவினாசி" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, நான் உனக்கு ஆளான தன்மையும் குற்றமோ?.


பாடல் எண் : 07
மந்தி கடுவனுக்கு உண்பழம் நாடி மலைப்புறம் 
சந்திகள் தோறும் சலபுட்பம் இட்டு வழிபடப்
புந்தி உறைவாய் புக்கொளியூர் அவிநாசியே
நந்தி உனைவேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே.

பொருளுரை:
பெண் குரங்கு, ஆண் குரங்குக்கு அது செல்லும் மலைப்புறங்களில் உண்ணத் தக்க பழங்கள் கிடைக்கவேண்டி "காலை, நண்பகல், மாலை" என்னும் காலங்கள் தோறும் நீரையும், பூவையும் இட்டு வழிபாடு செய்ய, அதன் மனத்திலும் புகுந்து இருப்பவனே, திருப்புக்கொளியூரில் உள்ள "அவினாசி" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற "நந்தி" என்னும் பெயரை உடையவனே, உன்னிடம் நான் நரகம் புகாதிருத்தலையே வேண்டிக் கொள்வேன்.


பாடல் எண் : 08
பேணாது ஒழிந்தேன் உன்னை அல்லால் பிற தேவரைக்
காணாது ஒழிந்தேன் காட்டுதியேல் இன்னம் காண்பன் நான் 
பூணாண் அரவா புக்கொளியூர் அவிநாசியே
காணாத கண்கள் காட்டவல்ல கறைக்கண்டனே.

பொருளுரை:
அணிகலமாகவும், வில் நாணாகவும் பாம்பைக் கொண்டுள்ளவனே, திருப்புக்கொளியூரில் உள்ள "அவினாசி" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன் உன்னையன்றிப் பிறதேவரை விரும்பாது நீங்கினேன்; அதனால் அவர்களைக் காணாதும் விட்டேன்; காணும் தன்மையற்ற என் கண்களைக் காணும்படி செய்யவல்ல, நஞ்சினையணிந்த கண்டத்தை உடையவனே, என் அறிவாகிய கண்ணையும் அங்ஙனம் அறியச் செய்வையாயின், உனது பெருமைகளை இன்னும் மிகுதியாக அறிந்து கொள்வேன்.


பாடல் எண் : 09
நள்ளாறு தெள்ளாறு அரத்துறைவாய் எங்கள் நம்பனே 
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய்
புள்ளேறு சோலைப் புக்கொளியூரில் குளத்திடை
உள்ளாடப் புக்க மாணி என்னைக் கிறி செய்ததே.

பொருளுரை:
திருநள்ளாறு, திருஅரத்துறைகளில் உள்ள நம்பனே, வெள்ளாடையை விரும்பாது, புலித்தோல் ஆடையை விரும்புபவனே, பறவைகள் தங்கும் சோலைகளையுடைய திருப்புக்கொளியூரில் உள்ள குளத்தில் உள்ளே முழுகப் புகுந்த அந்தணச் சிறுவன் செய்த மாயம் யாது?.


பாடல் எண் : 10
நீரேற ஏறுநிமிர் புன்சடை நின்மல மூர்த்தியைப்
போரேற தேறியைப் புக்கொளியூர் அவிநாசியைக்
காரேறு கண்டனைத் தொண்டன் ஆரூரன் கருதிய 
சீரேறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை துன்பமே.

பொருளுரை:
நீர் தங்குதலால் பருமை பெற்ற நீண்ட புல்லிய சடையை உடைய தூய பொருளானவனும், போர்செய்யும் எருதை ஏறுபவனும், கருமை பொருந்திய கண்டத்தை உடையவனும் ஆகிய திருப்புக்கொளியூரிலுள்ள "அவினாசி" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, அவனது தொண்டனாகிய நம்பியாரூரன் ஒரு பயன் கருதிப் பாடிய இப்புகழ்மிக்க பாடல்களைப் பாடவல்லவர்கட்குத் துன்பம் இல்லையாகும். "மகனை இழந்து நெடுநாள் வருந்தினோரது வருத்தத்தைப் போக்கிய இப்பாடல்களைப் பாடுவோர்க்கு, ஏனைத் துன்பங்கள் நீங்குதல் சொல்ல வேண்டுமோ என்பது திருவுள்ளம்."

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||